Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பாரதத்தை வழிநடத்தும் தலைவர்!


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: இந்திய விடுதலைப் போராட்டத்தின் தன்னிகரில்லாத் தலைவர்

இந்தியா அதிகாரபூர்வமாக 1947-இல் பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நிறுவினார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு. நேதாஜி போஸின் தலைமையில் அமைந்த அந்த அரசு, சில நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றதுடன், இந்திய தேசிய ராணுவம் என்ற படையினையும் கொண்டிருந்தது.

அடையாளங்கள் மற்றும் தியாகம்

பாயும் புலியுடனான மூவர்ணக் கொடியும், "ஜெய் ஹிந்த்" என்கிற கோஷமும் நேதாஜி சுபாஷ் போஸின் இடைக்கால அரசின் அடையாளங்களாக மாறின. அவர் சுதந்திர இந்தியாவை நேரில் பார்க்காவிட்டாலும், அவரது தியாகம் சுதந்திர இந்தியாவின் சுவாசத்துடன் கலந்துவிட்டது. இந்திய வரலாற்றை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அகற்றிவிட்டு எழுத முடியாது. காந்திஜியை "மகாத்மா" என்றும், ஜவாஹர்லால் நேருவை "பண்டிட்ஜி" என்றும் மக்கள் அழைத்த வேளையில், சுபாஷ் சந்திரபோஸை மட்டுமே அவர்கள் "நேதாஜி" (தலைவர்) என்று அழைத்தனர்; அங்கீகரித்தனர்.

வாழ்க்கைப் பயணம் மற்றும் கொள்கைகள்

1897 ஜனவரி 23-ஆம் தேதி இன்றைய ஒடிஸா மாநிலம் கட்டக்கில் பிரபலமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் நேதாஜி போஸ். நேரு குடும்பத்துக்கு இணையான செல்வமும் செல்வாக்கும் இவரது குடும்பத்துக்கும் இருந்தது. இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐசிஎஸ்) தேர்ச்சி பெற பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவர் என்பது அவரது திறமைக்குச் சான்று.

சுபாஷ் போஸின் வழிகாட்டிகள் சந்தேகமே இல்லாமல் ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும்தான். விவேகானந்தர் மறைந்தபோது போஸின் வயது நான்குதான். "சுவாமிஜி இருந்திருந்தால் அவர்தான் எனது குருவாக வழிகாட்டியிருப்பார்" என்று கூறிய நேதாஜி, அவரை நவீன இந்திய தேசியத்தின் ஆன்மிக குரு என்று குறிப்பிட்டார்.

துறவியின் மனநிலையுடன் செயலாற்றிய வீரரான சுபாஷ் சந்திரபோஸ், 24 வயதில் இந்திய குடிமைப் பணியைத் துறந்தார். 35 வயதில் தனது மூதாதையர் வாழ்ந்த இல்லத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 42 வயதில், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியை சற்றும் தயங்காமல் ராஜிநாமா செய்தார். இந்திய விடுதலைக்காகத் தனது உயிரையே துறக்கத் தயாரான வீர வரலாறு இவருடையது.

காந்தியடிகளுடனான உறவு

காந்தியடிகளுக்கும் நேதாஜி போஸுக்குமான உறவு புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. சுபாஷ் போஸின் போராட்டப் பாதையை காந்திஜி ஏற்கவில்லை, அண்ணலின் மிதவாதப் போக்கை போஸும் ஏற்கவில்லை. இருப்பினும், அவர்களுக்குள் ஒரு பரஸ்பர அன்பும் மரியாதையும் இருந்தது. 1944 ஜூலை 6-ஆம் தேதி ஆஸாத் ஹிந்த் அரசை அமைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தனது போரைத் தொடங்குவதற்கு முன், சிங்கப்பூரிலிருந்து வானொலியில் உரையாற்றிய சுபாஷ் போஸ்தான், முதல்முறையாக மகாத்மா காந்தியை "தேசப் பிதா" என்று அழைத்தார் என்பது பலருக்கும் தெரியாது. மேலும், தனது இந்திய தேசிய ராணுவத்தில் ஒரு படைப் பிரிவுக்கு "காந்தி பிரிகேட்" என்று பெயரிட்டார். காந்திஜியும் அவரை "தேசப்பற்றாளர்களின் இளவரசன்" என்றும், "தேசப்பற்றாளர்களில் முதன்மையானவர்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நேருவா, நேதாஜியா என்ற கேள்விக்கு, காந்தியின் தராசு நேருவின் பக்கம் சாய்ந்தது ஏன் என்பதற்கு இந்தியா இன்றும் விடை தேடுகிறது.

முத்துராமலிங்கத் தேவருடனான பிணைப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குமான உறவை அகற்றிவிட்டு இருவரின் வரலாற்றையும் எழுத முடியாது. 1927-இல் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த நேதாஜி, வழக்குரைஞர் ஸ்ரீநிவாச ஐயங்கார் வீட்டில் தங்கியிருந்தார். ஐயங்காரைச் சந்திக்க வந்த முத்துராமலிங்க தேவரை, சுபாஷ் சந்திர போஸுக்குத் துணையாக இருக்கப் பணித்தார் ஐயங்கார். அந்த முதல் சந்திப்பு, அவர்களுக்குள் ஜன்மாந்திரப் பிணைப்பை ஏற்படுத்தியது. பார்த்த மாத்திரத்தில் நேதாஜியின் ஆளுமைக்குள் ஈர்க்கப்பட்ட முத்துராமலிங்கம், குரு-சிஷ்யன் அல்லது தலைவர்-தொண்டர் என்று இனம் பிரிக்க முடியாத பிணைப்பை வளர்த்துக் கொண்டார்.

நேதாஜிக்கு மிக நெருக்கமானவராக முத்துராமலிங்க தேவர் இருந்தார். இந்திய தேசிய ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் ஆதரவு திரட்டுவதில் முக்கியப் பங்காற்றிய அவர், "நேதாஜி" என்ற பெயரில் வார இதழும் நடத்தினார். தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்திய தேசிய ராணுவத்தில் இணையுமாறு வலியுறுத்தினார்.

தமிழர்களின் அளப்பரிய ஆதரவு

தென்கிழக்கு ஆசியாவில் தமிழ் பேசிய இந்தியர்கள் மூலமாக இந்திய தேசிய ராணுவம் அளப்பரிய ஆற்றலைப் பெற்றது. 1943-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் படாங் மைதானத்தில் உரையாற்றியபோது, விடுதலைப் போராட்டத்தில் இணையுமாறு இந்தியப் பெண்களுக்கு நேதாஜி அழைப்பு விடுத்தார். தேச விடுதலையுடன் தங்களின் சொந்த விடுதலையையும் அவர்கள் பெறவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அவரின் அழைப்பு மலாயாவில் இருந்த இந்திய தமிழ்ப் பெண்களைத் தட்டியெழுப்பியது. இந்தியாவையே பார்த்திராத அந்தப் பெண்களில் சுமார் 1,000 பேர், இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் சேர்ந்தனர். இந்தப் படையில் ஜானகி தேவர், அஞ்சலை பொன்னுசாமி, ராசம்மா பூபாலன் போன்றோர் இடம்பெற்று, மலேசிய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றனர்.

நேதாஜி உரையாற்றிய பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது 14 வயதே ஆன ஜானகி தேவர், நிதி திரட்டும் நடவடிக்கையின்போது தனது வைரத்தோடை நன்கொடையாக அளித்தார். இதேபோல 16 வயதில் இணைந்த சரஸ்வதி ராஜாமணி, ராணுவத்தின் உளவுப் பிரிவில் தனித்தன்மையுடன் பணியாற்றினார்.

சமத்துவப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தில் ஆண்களுக்கு அளித்த போர்ப் பயிற்சிகள், பெண் சுதந்திரப் போராளிகளுக்கும் அளிக்கப்பட்டன. ஜாதி அடிப்படையிலான பிரிவுகளை நிராகரித்த நேதாஜி, அனைத்து வீரர், வீராங்கனைகள் ஒன்றாகச் சாப்பிட்டு வாழ உத்தரவிட்டார். பர்மா தமிழரான ஆர். மாதவன் பிள்ளை போன்ற பல வீரர்கள் ராணுவத்தில் முக்கியப் பங்காற்றினர். பிரதமர் நரேந்திர மோடி 2024-ஆம் ஆண்டு பராக்ரம தினக் கொண்டாட்டத்தில் இவரைப் பாராட்டிக் கௌரவித்தார்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூரைச் சேர்ந்த பெயர் தெரியாத வீரர்களும், தொழிலாளர்களும் மலாயா, பர்மா மற்றும் சிங்கப்பூரில் நேதாஜியின் அழைப்புக்கு செவிசாய்த்தனர். தமிழர்களின் அபரிமிதமான ஆதரவால் நெகிழ்ந்த நேதாஜி, "நான் மீண்டும் பிறந்தால் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

வளர்ச்சித் திட்டங்களுக்கான தொலைநோக்கு

1938 ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் போஸ், சுதந்திர இந்தியா பின்னாளில் முன்னெடுத்த பல வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரை எழுதியவர் என்பதை நாம் மறந்துவிட்டோம். சமுதாய சீரமைப்பின் மீதுதான் சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க முடியும் என்று முன்மொழிந்தது காந்திஜியோ, பாபா சாஹேப் அம்பேத்கரோ, பண்டித நேருவோ அல்ல; நேதாஜியின் 1938 ஹரிபுரா காங்கிரஸ் தலைமை உரையைப் படித்தால் இந்த உண்மை தெரியும்.

அவர் தலைவர் ஆனபோது, பண்டித நேருவின் தலைமையில் "திட்டக் குழு" என்று அமைத்து வருங்கால சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்க யோசித்தார். "சமூக நீதி இல்லாமல் சமநீதி இல்லை. சமநீதி இல்லாமல் சுதந்திரம் இல்லை" என்கிற அவரது கருத்தின் மீதுதான் பின்னாளில் உருவான இந்தியாவின் அரசியல் சாசனம் கட்டமைக்கப்பட்டது.

முறையான அங்கீகாரம்

நேதாஜியின் வீரமும் புகழும் மக்கள் உணர்வில் நிலைபெற்றிருந்தாலும், அவரது பெருமைக்கு முறையான அங்கீகாரம் வெகுகாலத்துக்குப் பிறகே கிடைத்தது. 1992-இல்தான் நரசிம்ம ராவ் அரசால் அவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் விஜய் சௌக் அருகே தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இன்று நேதாஜியின் 130-ஆவது பிறந்த நாளில், வீரம், தியாகம், உறுதியான நாட்டுப் பற்று நிறைந்த தன்னிகரில்லாத் தலைவரின் வாழ்க்கையை நாம் நினைவுகூர்கிறோம். அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த உயரிய தலைவராக மட்டுமின்றி, தியாகத்தின் சுடராகவும் இருந்தவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement