Sunday, 21 October 2018

சாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை

இறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலும் பல சிலைகளும் அண்ணாந்து பார்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே இருக்கின்றன. உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு இருக்கும் சிலைகளில் அமெரிக்காவில் நியூயார்க் கடலில் அமைக்கப்பட்டு இருக்கும் சுதந்திரதேவி சிலை தனிச் சிறப்பு பெற்றது ஆகும். இந்த சிலையின் உயரம் (93 மீட்டர்) 305 அடி. நியூயார்க் துறைமுகத்தில் இருந்து கப்பலில் சென்று, அந்தச் சிலை இருக்கும் இடத்தை அடையலாம். அந்தச் சிலையின் மற்றொரு சிறப்பு, சிலைக்கு உள்ளே நாம் சென்று அதன் உச்சியை அடையலாம். அந்த சிலையின் முள் கிரீடம் இருக்கும் இடம் வரை சென்று அங்கு இருந்தபடி நியூயார்க் நகரின் அழகைப் பார்க்க முடியும். இதனால் இந்தச் சிலை சுற்றுலாவாசிகளை மிகவும் கவருகிறது. சுதந்திர தேவி சிலையின் தாக்கத்தால், அதுபோன்ற சிலைகளை அமைக்கும் திட்டம் உலகின் பல பாகங்களிலும் உருக்கொண்டது. அதன் விளைவாக சீனாவில் ஸ்பிரிங் டெம்பிள் என்ற இடத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் உயரம் 419 அடி. இப்போதைக்கு உலகின் மிக உயரமான சிலை இதுதான். அந்த சாதனையை முறியடிக்க, இந்தியாவில் அதைவிட மிக உயரமான சிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த சிலைதான் சர்தார் வல்லபாய் படேல் சிலை. இந்திய சுதந்திர போராட்டத்திலும், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு அதன் வளர்ச்சியிலும் அதிக பங்காற்றி இரும்பு மனிதர் என்று புகழப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் பற்றி இப்போதைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. சர்தார் வல்லபாய் படேல், 1875 அக்டோபர் 31-ந் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகரம் அருகே ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி படிப்பு முடிந்ததும், 1910-ல் லண்டன் சென்று சட்டம் பயின்றார். மூன்றாண்டுகள் கழித்து ஆமதாபாத் திரும்பினார். 1917-ல் ஆமதாபாத் நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924 முதல் 4 ஆண்டுகள் நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1918-ல் விளைச்சல் இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலவரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, போராட்டம் நடத்தினார். அதனால் காந்தியின் கவனத்தைக் கவர்ந்தார். 1928-ல் நிலவரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தினார். “பர்தோலி சத்தியாக்கிரகம்” என்று அழைக்கப்பட்ட இந்த போராட்டத்தின் மூலம், படேலின் புகழ் நாடு முழுவதும் பரவியது. அது முதல் மகாத்மா காந்தியும், மற்றவர்களும் படேலை “சர்தார்” என்று அழைக்கத் தொடங்கினர். சுதந்திரத்துக்காக காந்தி நடத்திய போராட்டங்களில் எல்லாம் படேல் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். 1931-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், நேரு மந்திரிசபையில் துணைப் பிரதமரானார். முக்கியமான உள்துறை இலாகா அவரிடம் இருந்தது. இந்தியாவில் 562 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சில சமஸ்தான அரசர்கள் பாகிஸ்தானுடன் சேரத் திட்டமிட்டனர். சிலர் சுதந்திரப் பிரகடனம் வெளியிட முயன்றனர். படேல் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து, சுதேச சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்தியாவுடன் இணைத்தார். அதன் மூலம் “இரும்பு மனிதர்” என்ற அழியாப் புகழைப் பெற்றார். படேல் 1950 டிசம்பர் 15-ந் தேதி காலமானார். 1991-ல் “பாரத ரத்னா” விருதை படேலுக்கு ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் வழங்கினார். படேலின் பேரன் விபின் தாயாபாய் படேல், ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்றார். இவ்வளவு புகழ்பெற்ற வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டு அருகே மிக உயரமான சிலை அமைப்பது என்று 2010-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு மூல காரணமாக இருந்தவர், அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி. வல்லபாய் படேலுக்கு உலகின் மிகப்பெரிய அளவில் சிலை அமைப்பது என்று திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் 2013 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தச் சிலை அமைப்பதற்கான செலவு ரூ.3,001 கோடியாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டது. இந்த வேலைக்கு உலக அளவில் டெண்டர் கோரப்பட்டது. லார்சன் அண்டு டூப்ரோ கம்பெனியினர் ரூ.2,989 கோடியில் சிலையை அமைத்து பராமரித்து தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அந்தப் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை அமைப்பதற்கான பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டாலும், இதில் இந்திய- குறிப்பாக குஜராத் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நரேந்திர மோடி விரும்பினார். இதற்காக ‘சர்தார் வல்லபாய் படேல் ராஷ்டிரீய எக்தா டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு தேவையான இரும்பு, பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாகப் பெற வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்தியாவில் 70 லட்சம் விவசாயிகளிடம், “நீங்கள் பயன்படுத்திவிட்டு தேவை இல்லை என்று வீசி எறிந்த விவசாய இரும்புக் கருவிகளை வல்லபாய் சிலை அமைக்கும் திட்டத்திற்கு நன்கொடையாகத் தாருங்கள்” என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தங்களிடம் உள்ள பழைய இரும்பு கருவிகளைக் கொண்டுவந்து குவித்தார்கள். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் இரும்பு கிடைத்தது. வல்லபாய் படேல் சிலை மற்றும் அதனைச் சுற்றிலும் அமைக்கப்படும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு இந்த இரும்புதான் பயன்படுத்தப்பட்டது. மகத்தான இந்தத் திட்டம் பலராலும் போற்றப்பட்டது என்றாலும், அது பல எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. நர்மதை ஆற்றின் குறுக்கே அணைகட்டும் போதே பிரச்சினை உருவானது. நீண்டநாட்களாக நடைபெற்ற போராட்டங்களைச் சமாளித்த பிறகே அந்த அணை கட்டிமுடிக்கப்பட்டது. பின்னர் அங்கே சிலை அமைப்பதற்கும், அதற்காக தங்களது 927 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மீண்டும் போராட்டங்களை நடத்தினார்கள். ஒருவழியாக அவர்களைச் சமாதானம் செய்த பிறகு சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. வல்லபாய் படேல் சிலை அமைக்கும் பணிக்கு குஜராத் அரசு நிதி ஒதுக்கீடு செய்தபோது யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், 2014-2015 பட்ஜெட்டின் போது இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்தபோது பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். சிலை அமைக்கும் பணியின் ஒரு பகுதி சீனாவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்தியாவில் தயாரிப்போம் என்று கோஷமிடும் நரேந்திர மோடி, சிலையை சீனாவில் தயாரிப்பது ஏன்” என்று அவர் கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த முழக்கமும் அமுங்கிப் போனதைத் தொடர்ந்து, இப்போது சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கும் பணி நிறைவு பெற்று இருக்கிறது. இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என போற்றப்பட இருக்கும் இந்தச் சிலையின் திறப்பு விழா வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது. அன்றுதான் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்-அமைச்சர் உள்பட அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. சிலையின் உயரம் போலவே, இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு இருக்கிறார்.
சிலையின் சிறப்புகள்
1. குஜராத் மாநிலம் வதோதரா அருகே, சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.2 கிலோ மீட்டர் தூரத்தில், 12 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் செயற்கையாக அமைக்கப்பட்ட ‘சாது பெட்’ என்ற தீவில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
2. ‘ஸ்டாச்சு ஆப் யூனிடி’ - அதாவது ஒற்றுமை சிலை என்று பெயரிடப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் 190 அடி. கால் பகுதியில் இருந்து தலை வரை உள்ள சிலையின் உயரம் மட்டும் 597 அடி.
3. சிலை தயாரிப்புக்கு 70 ஆயிரம் டன் சிமெண்ட், 18,500 டன் இரும்பு, 1,700 டன் பித்தளை பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. சிலையின் உள்பகுதி லிப்ட் செல்லக்கூடிய வகையில் காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி, பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5. இந்த பித்தளைத் தகடுகள் மட்டும் சீனாவில் தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டுவந்து பொருத்தப்பட்டன.
6. சிலை கட்டுமானப் பணியில் 4 ஆயிரம் ஊழியர்களும், 300 என்ஜினீயர்களும் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் பலர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
7. சிலை அமைந்துள்ள சாது பெட் தீவுக்குச் செல்வதற்காக கெவடியா என்ற நகரில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை போடப்பட்டு இருக்கிறது. 5 கிலோ மீட்டர் தூரம் படகுப் பயணம் செய்தும் சிலை இருக்கும் இடத்தை அடையலாம்.
 8. சிலையின் உள்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் உள்ளன. இந்த லிப்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் தலா 40 பேர் செல்லலாம்.
 9. சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் உள்ளது. அங்கே ஒரே சமயத்தில் 200 பேர் வரை நின்று, அங்கு இருந்தபடி இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
 10. சிலையின் அடித்தளம் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அங்கே 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஓட்டல் உள்ளது. மற்றும் கண்காட்சி அரங்கம், நினைவுப் பூங்கா, மியூசியம், உணவுக் கூடங்கள் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. 
11. நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் பேர் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குச் சிலையை சுற்றிக் காண்பிக்க 100 வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
12. 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றையும், 6.5 ரிக்டர் அளவிலான பூமி அதிர்ச்சியையும் தாங்கும் வகையில் சிலை உறுதியாக செய்யப்பட்டுள்ளது.
 13. 31-ந் தேதி திறப்புவிழா நடைபெறுகிறது என்ற போதிலும் நவம்பர் 1-ந் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
 14. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் இல்லத்தை அங்கே அமைக்கலாம் என்று குஜராத் அரசு அழைப்புவிடுத்து இருக்கிறது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts