Wednesday, 30 January 2019

மனித இமயம் மகாத்மா

மனித இமயம் மகாத்மா கவிஞர் ரவிபாரதி இ ன்று (30-ந்தேதி) தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாள். சூரியனே எங்களைத்தான் கேட்டு எழும், விழும் என மார்தட்டிக் கொண்டிருந்த ஆங்கிலேய பேரரசை நம் புனித மண்ணை விட்டு ஓடச்செய்த மவுன பீரங்கி மகாத்மா. அதிசயமே பார்த்து அதிசயிக்கும் ஒரு மனிதர் இவர்தான். வாக்கு, செயல், சிந்தனை மூன்றிலும் உண்மையோடும் ஒழுக்கத்தோடும் வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகர். இந்திய சுதந்திர போராட்ட வேள்வி தீயில் குதித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வந்தவர். அன்பின் வழியிலும், அகிம்சை நெறியிலும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை வீண் போகவில்லை. துப்பாக்கிகளை தூள்தூளாக்கி, அணுகுண்டுகளை அழித்து, விமானங்களை வீழ்த்துவதற்கு இந்த இரண்டுமே அவருக்கு போதுமானதாக இருந்தது. கூடவே அவர் கைக்கொண்ட உண்மையும், சத்தியமும் உறுதுணையாய் இருந்தது. மக்களின் உரிமைகளுக்காக தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை எதிர்த்து போராடியபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், பெற்ற காயங்கள், கற்ற பாடங்கள் காந்தியின் உள்ளத்தை செம்மைப்படுத்தியது. தென் ஆப்பிரிக்க அரசை எதிர்த்து போராடியதால் அந்நாட்டு மக்கள் காந்தியை எதிரியாக கருதவில்லை. 1899-ல் நடந்த ‘போவர்’ யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர்களை தோளிலே தாங்கி தனது தொண்டர் படையோடு சென்று அவர்களை மருத்துவமனையில் சேர்த்த உத்தமர்தான் காந்தி. தென்ஆப்பிரிக்க ஜோகன்னஸ்பர்க்கில் மக்களை தாக்கிய ‘பிளேக்’ என்னும் கொள்ளை நோயை விரட்ட வைத்திய சாலையை அமைத்து அந்த நாட்டு அரசாங்கத்தின் பாரட்டை பெற்ற மனிதநேயர். தென் ஆப்பிரிக்காவில் பலமுறை சிறை சென்றபோதெல்லாம் காந்தியை கடுமையாக தாக்கி காயப்படுத்தியவர் ‘ஸ்மட்ஸ்’ என்னும் காவல் துறை அதிகாரி. காந்தி, விடுதலையாகி வெளியே வந்தபோது அந்த அதிகாரிக்கு சிறைச்சாலையில் தான் தயாரித்த காலணியை மகிழ்வுடன் பரிசாக கொடுத்தார். இதுபற்றி ‘ஸ்மட்ஸ்’ பின்னாளில் தனது நாட்குறிப்பில் ‘இந்த காலணியை அணிவதற்கு நான் தகுதியற்றவன். எனவே பூஜை அறையில் வைத்து பூஜிக்கிறேன் என உருக்கமாக எழுதி இருந்தார். உலக வரலாற்றில் அடிமைப்பட்டு கிடந்த பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் வித்தியாசமானது இந்திய விடுதலைப் போராட்டம். மகாத்மாவின் தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம் அகிம்சை, சத்யா கிரகம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணா நோன்பு போன்ற மென்மையான, உண்மையான அணுகு முறைகளே மேலோங்கி நின்றன. விடுதலை அடைந்து இந்திய நாடே இன்ப நிகழ்வுகளில் திளைத்து கொண்டிருந்தபோது, தன்னால் தான் விடுதலை கிடைத்தது என்ற ஒரு பெருமையும் இன்றி கொல்கத்தா அருகே நடைபெற்ற கலவரத்தை தடுத்து நிறுத்துவதற்காக நடைபயணம் சென்று கொண்டிருந்தவர்தான் இந்த வித்தியாசமான மாமனிதர். ‘அரசாங்கத்திற்கு எதிராக பேசி மக்களை போராட தூண்டுவது தவறு என்று தெரியும். இருந்தாலும் அதை செய்வது எனது கடமையென உணர்கிறேன். எனவே நீதிபதி அவர்களே எனக்கு நீங்கள் அதிகபட்ச தண்டனை தர வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் உரைத்தார். குற்றவாளி கூண்டில் நிற்பவர்கள் குறைந்தபட்ச தண்டனைக்கு தானே கோரிக்கை வைப்பார்கள். அதற்கு மாறாக காந்தியடிகளின் அதிசய கோரிக்கையை கேட்டு நீதிபதி ப்ரூம் பீல்ட் ஒரு நிமிடம் அதிர்ந்தே போனார். மதியை மயக்குகிற மதுவை எதிர்த்து கடுமையாக போராடினார் காந்தி. “மதுவிலக்கு என்பதை மனதளவிலும் ஏற்றுக்கொண்டு உண்மையாக, மக்களுக்கு செய்யும் நன்மையாக அதை செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை. பலவந்தப்படுத்தி ஒரு மனிதனை பரிசுத்தமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு மட்டும் அதிகாரம் கொடுத்தால் நஷ்ட ஈடு கொடுக்காமல் அனைத்து மதுக்கடைகளையும் ஒரே நாளில் இழுத்து மூடிவிடுவேன்” என்று முழங்கினார். நாலுமுழ வேட்டி துண்டோடு மிக மிக எளிமையாக லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடுக்கு சென்ற காந்தியடிகளை பார்த்து இந்த அரை நிர்வாண பக்கிரி யார்? என கிண்டல் செய்தார் அந்தாட்டு பிரதமர் சர்ச்சில். அந்த மாநாட்டுக்கு பிறகு இதுபற்றி நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ‘ எனது ஆடையெல்லாம் சேர்த்து உங்கள் பிரதமர் உடுத்தியிருக்கிறாரே’ என நகைச்சுவை தொனியில் பதிலடி கொடுத்தார். தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து காந்தியின் பிஞ்சு உள்ளத்திலேயே முளைத்திருந்தது. காந்தி குழந்தை பருவத்தில் இருந்தபோது வீட்டில் வேலைபார்த்த ஒருவர், காந்தியின் தாயாரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். வெளித்திண்ணையில் டம்ளரை வைத்து நீரை ஊற்றி குடிக்க சொன்னார் காந்தியின் தாயார். பிறகு தண்ணீரை குடித்ததும் வேலைக்காரர் டம்ளரை கொடுத்தபோது, காந்தியின் தாயார் டம்ளரை கழுவி கொண்டு சென்றார். இது காந்திக்கு உறுத்தியது. அம்மா, வேலைக்காரரும் நம்மை போலத்தான். அவரை ஏன் இப்படி நடத்த வேண்டும்? என கண்டித்தார். தான் செய்த சத்தியத்தை ஒருபோதும் மீறாதவர் மகாத்மா. புலால் உண்ண மாட்டேன் என தாய்க்கு சத்தியம் செய்து இங்கிலாந்துக்கு சென்றார். அந்த சத்தியத்திலிருந்து சிறிதளவு கூட விலகவில்லை. பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாயே? என்று நண்பர்கள் ஏளனம் செய்தபோதும் அதனை மீறாத உறுதி கொண்டவர். தேசத்தந்தை காந்தியடிகள் நேர்மை, உண்மை, எளிமை, தூய்மை பற்றி பக்கம், பக்கமாக எழுதிக்கொண்டே செல்லலாம். நம் நாட்டை புனிதப் படுத்திய மகாத்மாவை உலக நாடுகளும் தலையில் வைத்து கொண்டாடுகின்றன. இந்த மனித கடவுளை முதலில் கேலி பேசிய சர்ச்சிலே ‘அடிமை இந்தியாவில் பத்திரமாக நாங்கள் பாதுகாத்த மகான் காந்தி ஒரு இந்தியரால் சுடப்பட்டு இறந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என வேதனையுடன் குறிப்பிட்டார். நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக பாடுபட்ட இந்த உத்தமரை நினைவுகூர்ந்தால் மட்டும் போதாது. அவர் காட்டிய நல்பாதையில் பயணிக்க முயற்சிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 29 January 2019

ஆரோக்கியத்துக்கு பகையாகும் வாகன புகை

ஆரோக்கியத்துக்கு பகையாகும் வாகன புகை பி. தயாளன், பெரம்பலூர். ந வீன 21-ம் நூற்றாண்டில் உலகத்தை மிகவும் அச்சுறுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது சுற்றுச் சூழல் பாதிப்பு தான். சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட காற்று மாசினை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. நமது நாட்டிலும் டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்கள் காற்று மாசினை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதை கண்டு வருகிறோம். மனிதர்களின் எண்ணிக்கையை முறியடிக்கும் வகையில் வேகமாக பெருகி வரும் வாகனங்கள்தான் காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வளர்ச்சிக்காக காற்றைப் பெருமளவு மாசுபடுத்துகிறோம். இந்திய தேசத்தில் 2018-ம் ஆண்டின் கணக்கின்படி சுமார் 18 கோடி வாகனங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை சுமார் 1½ கோடியை தொட்டுள்ளது. இதில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாக னங்களும், கனரக வாகனங்களும் அடங்கும். காற்று மாசு பொதுவாக புகை, தூசு, துகள், சாம்பல், நச்சுவாயு போன்றவைகளால் ஏற்படுகிறது. வாகனங்கள் உபயோகப்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றாலும் நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை எரியூட்டும்போதும் காற்று மாசடைகிறது. வாகனப்புகையினால் ஏற்படும் மாசு இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்து உள்ளது. இதிலிருந்து காரீயம், கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், சல்பர்டைஆக்சைடு மற்றும் துகள்கள் வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிப்படைகிறது. இந்தியாவில் உள்ள வாகனங்களில் 75 சதவீதம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள். இதில் இரண்டு சக்கர வாகனங்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் 25 சதவீதம். இதிலும் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்களில் இரண்டு ஸ்ட்ரோக் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்கா போன்ற நாடுகளையும் ஒப்பிடும்பொழுது, நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் இங்குதான் வாகனங்களினால் ஏற்படும் புகை மாசுபாடு அதிகமாக உள்ளதாக கூறும் புள்ளி விவரங்கள் நம்மை வேதனைப் படுத்துகின்றன. புகை மாசின் 70 சதவீதம் வாகனத்தின் எக்சாஸ்ட் குழாய் மூலம் தான் வெளியாகிறது. டீசல் மூலம் இயக்கப்படும் கனரக வாகனங்களில் இருந்து அதிகமாக நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் துகள்கள் வெளியாகிறது. மேலும், இலகுரக வாகனங்களில் பயன்படுத்தும் பெட்ரோலினால் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோ கார்பன் வெளியிடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சுலபமாக மாசுபடுவதுடன் உயிரினங்கள் மற்றும் நமக்கு இலவசமாக நோய்களை வாரி வழங்குகின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்டைஆக்சைடு, பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாசுகள் பூமியின் மேலுள்ள வளிமண்டலத்தில் ஓர் திரைபோல் படிந்துவிடுகின்றன. இதனால், பூமியின் மேல்பட்டுத் திரும்பும் சூரியனின் அகச்சிவப்புக் கதிர்களைத் திரைபோல் படிந்துள்ள மாசுத்திட்டுகள் தடுத்து விடுகின்றன. அவை மீண்டும் பூமிக்கே திரும்புவதால் பூமியினுடைய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெப்பம் கூடுவதால், துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன. வாகனப்புகையினால் ஏற்படும் பாதிப்புகளை நாம் குறைவாக எண்ணி விட முடியாது. அதிக அளவிலான நைட்ரஜன் டை ஆக்சைடினால் மார்புச்சளி, மூச்சுத் திணறல், பல் ஈறு வீக்கம், நுரையீரல் புற்றுநோய், கண் எரிச்சல் உண்டாகின்றன. கார்பன் மோனாக்சைடின் அளவு 300 பி.பி.எம். அளவைத் தாண்டும்போது தலைவலி, வாந்தி, ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவு குறைதல் உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்துகின்றன. கார்பன் மோனாக்சைடின் அளவு 1,000 பி.பி.எம். தாண்டும்போது சில நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிடலாம். ஹைட்ரோ கார்பன் அதிக அளவு வெளியிடப்படுவதால் மூச்சுக்குழாய் அடைப்பு, இருமல், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், புற்றுநோய் மற்றும் உடல்சோர்வுகள் வந்து சேருகின்றன. காரீயம் நம் உடலில் அதிக அளவில் சேரும்போது நினைவாற்றல் குறைகிறது. சிந்தனையில் மாற்றம், சிறுநீரகத்தில் பழுது, அமைதியின்மை மற்றும் நுரையீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இது மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இந்த நச்சுகள் காற்றில் அதிகமாக கலப்பதால் தாவர இலைகளின் வளர்ச்சி குன்றுகிறது. இலை சுருளுதல், காய்கள் முற்றாமலேயே பழுத்துவிடுதல் போன்ற அபாயம் நேரிடுகின்றன. வாகனப்புகையிலிருந்து வெளியேறும் துகள்கள் மண்ணில் படிவதால், அந்த நிலங்கள், பயிர்கள் மற்றும் செடிகள் வளர்வதற்குத் தகுதியற்றுப் போகின்றன. மேலும், தாவர இலைகளின் மீது துகள்கள் படிவதால் உணவு உற்பத்தி அதிக அளவு குறைந்து போகிறது. இப்படி பல்வேறு பாதிப்புகளை தரும் வாகனப்புகை மாசுக்கு தீர்வுதான் என்ன? வாகனங்களுக்குத் தூய்மையான, தரமான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். காரீயம் கலக்காத எரிபொருளை பயன்படுத்தினால் மிகவும் நன்மையே. சாலைகளை மேம்படுத்தி முறையாகப் பராமரித்தாலும் மாசுக்களை கட்டுப்படுத்த முடியும். நச்சுப்புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம். கார்கள், மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தலாம். மிகவும் பழமையான வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற பொறுப்பு வேண்டும். வெளிநாட்டில் மாசினை குறைப்பதற்காகசைக்கிள்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். நாமும் பக்கத்து இடங்களுக்கு செல்வதற்காவது சைக்கிளுக்கு மாறலாம். பெரும்பாலான வெளிநாட்டினர் பேட்டரி வாகனங்கள், எலக்ட்ரானிக் வாகங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். எனவே புகை மாசுவை கட்டுப்படுத்துவோம். தேசத்தை காப்போம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உறவு இன்றி அமையாது உலகு

உறவு இன்றி அமையாது உலகு சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. ந ம் வாழ்வின் வசந்த நிமிடங்கள் இனிய உறவுகளால் உருவாக்கப்படுகிறது. ஒன்றின் விழுது, அடுத்தடுத்து வேராய் தரை நோக்கிக் கால்பரப்பிப் பாரத்தைத் தாங்குவதால் குடும்பமும் ஒருவகையில் கால மரம்தான். பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, தம்பி, தங்கை, மகன், மகள் என உறவுகளால் இணைத்து ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியின் சன்னிதிகளாகக் காலம் கட்டமைத்திருக்கிறது. திருக்கடையூர் போனால் மூத்தோரின் எண்பதுக்கு எண்பது கல்யாணக் காட்சிகளைக் காணமுடிகிறது. அறுபது ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து பேரன் பேத்திகள் எடுத்து, அவர்களுக்கு முன்னால் பாட்டிக்குத் தாலிகட்டும் பொழுதில் எண்பது வயதுப் பெரியவரின், பெரிய மனிஷியின் முகத்தில்தான் எவ்வளவு வெட்கம் கலந்த பெருமிதம். அரை நூற்றாண்டு இல்லறத்தில் எத்தனை சிகரங்களை, எத்தனை சறுக்கல்களை அவர்கள் சந்தித்திருப்பார்கள். ஆனாலும் அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டு இதோ இந்த நிமிடம் வரை அவர்களை அன்போடு வைத்திருப்பது அவர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் உறவுகள்தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உறவுகளின் இனிய பக்கங்களில் உன்னதமாகப் பதிவு செய்யப்பட வேண்டியவர்களை நாம் வேரோடு பிடுங்கிக்கொண்டிருக்கிறோம். சில நிமிட சினத்தால் சின்னாபின்னமாகிப்போன உறவுகள் எத்தனை? நம் இனிய இருப்பை வெறுப்பால் ஏன் நிரப்பவேண்டும்? புரிதல்களில் சரிதல்கள் ஏற்பட்டு கண்ணாடிபோல் கண்எதிரே நொறுங்கிப் போவதைப் பார்க்கிறோமே. வீட்டில் மனம் விட்டுப் பேசும் பேச்சு சுருங்கிவிட்டது, கைக்கொரு செல்போனோடு மாயத்திரையில் மயங்கி ஆளுக்கொருபக்கம் தலைகுனிந்தபடி தனித்தனியே சிரித்துக்கொண்டிருக்கிறோம். நேரில் சந்தித்து அரட்டை அடித்துச் சிரித்த உறவுகள் இன்று வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். முகநூலில், பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று ஊருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டுக் குடும்பங்களின் சிதைவு குடும்ப உறவுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பின்பற்ற வேண்டிய முன்மாதிரி உறவுகள் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. பிடிவாதங்களும் சந்தேகங்களும் கணவன்-மனைவி உறவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி அவர்களை நீதிமன்றங்களில் கொண்டு நிறுத்திக்கொண்டிருகின்றன. சொந்த கிராமத்திற்குச் சென்று உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து குலதெய்வ வழிபாடுகள் நடத்திய காலங்கள் பழங்கனவாய் அப்பால் போய்க்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுடன் ஒன்றாக உறவினர் இல்லத்திருமணத்திற்குச் செல்லும் வழக்கம் குறைந்துவிட்டது. அன்பான இதயங்களால் நிரப்பவேண்டிய இல்லங்களைப் பொருட்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். வரவுக்கு ஏற்ப செலவு செய்யக் குழந்தைகளைப் பழக்கும் இடம் இல்லம்தான். விட்டுக்கொடுத்தலையும் பொறுமையையும் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதையும் சகமனிதர்களை வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வதையும் குடும்பம்தான் கற்றுத்தருகிறது. குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும்தான் நாம் இவ்வளவு பாடுபடுகிறோம், ஆனால் அவர்களுடன் நிம்மதியாக இருக்கமுடியவில்லை எனும் போது எதற்காக இப்படி ஓடியாடி உழைக்கிறோம் என்று நம்மை நாமே கேட்கத் தோன்றுகிறது. நம் வாழ்வின் முதல்பகுதி பொருளைத் தேடி ஓடுவதிலும் இரண்டாம் பகுதி அவற்றைக் காப்பற்றுவதிலுமே கழிகிறது. பொதுவாழ்வில் சாதனை படைத்த மனிதர்கள்கூடக் குடும்பவாழ்வில் மனஅழுத்தம் தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வதைக் காண்கிறோம். இன்றைய காலகட்டத்தில் காதலை விட கள்ளக்காதல் மேன்மையானது, புனிதம்மிக்கது என்ற மோசமான செயல்பாடுகளை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயின் பிடியில் சிக்கி பலர் தங்கள் குடும்ப உறவுகளை தொலைத்து வருகின்றனர். இந்த மோசமான காதலுக்காக பெற்ற மகனை உயிரோடு எரித்தல், கணவனை கொள்ளுதல், மனைவியை கொள்ளுதல் என்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதை காண்கிறோம். இந்த கொடூர எண்ணங்களுக்கு எல்லாம் விதை போடுவது உறவுகளை விட்டு மெல்ல, மெல்ல பிரிந்து வருவதுதான். கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ மனம் விட்டு பேசினால் இத்தகைய மோசமான செயல்களை நோக்கி எண்ணம் ஓடவே செய்யாதே. இந்த வாழ்வில் எல்லாம், வாழப் பொருள்தேட ஓடியோடி ஒருவினாடியில் மூச்சு இறைக்க நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் தூக்கிவளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள், வாழ்வின் பொருளை இழந்து நிற்கிறோம். அப்போது நாம் விலக்கிவைத்த உறவுகள் நம்மைவிட்டு வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனுபவங்களைக் கற்பிக்கும் செய்முறைக்கூடம். கற்றுக்கொள்வதற்கும் வாழ்விலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் நம் உறவுகளிடம் நிறைய உண்டு. நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 28 January 2019

கலிலியோ 10

கணிதவியலாளர், பொறியாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி என பன்முகப் பரிமாணம் கொண்ட கலிலியோ கலிலி (Galileo Galilei) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து : * இத்தாலியின் பைசா நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே எதையும் மிக நுணுக்கமாக கவனிக்கும் திறன் கொண்டிருந்தார். * ‘ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதாக பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்கள். பின்னர் இவர் தன் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண்களின் பற்களையும், சில ஆண்களின் பற்களையும் எண்ணிப் பார்த்தார். ‘அரிஸ்டாட்டில் சொன்னது தவறு, இருவருக்குமே 32 பற்கள்தான்’ என்று தெளிவுபடுத்தினாராம். * அப்பாவின் ஆசைப்படி, மருத்துவம் படிக்க பைசா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உண்மையில், இவருக்கு கணிதம், இயந்திரவியல், இசை, ஓவியத்தில்தான் ஆர்வம். கல்லூரியில் பயின்றுகொண்டே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ‘பெண்டுலம்’ விதியைக் கண்டறிந்தார். தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ் கருவியைக் கண்டறிந்தார். அதைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதினார். அறிவியலாளர்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார். * மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு கணிதம் பயின்றார். பின்னர், அதே ஊரில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, ‘பாடுவா’ என்ற ஊரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றினார். * அண்டவெளியில் காணும் பொருட்கள், சந்திரனின் பரப்பில் காணும் மலைகள், வியாழன் கிரகத்தைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம், சூரியனில் காணப்படும் புள்ளிகள் ஆகியவற்றை தான் கண்டறிந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ஆராய்ந்தார். * கோள்களைப் பற்றிய பல கோட்பாடுகளை இந்த ஆராய்ச்சிகள் தகர்த்தன. இவரது கருத்துகள் வானியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தின. இந்த அனுபவங்களைத் திரட்டி ‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகத்தை எழுதி மேலும் பிரபலமானார். வெப்பமானியை உருவாக்கினார். * பொருட்கள் இயக்கவியலில் புதிய கோட்பாட்டை நிரூபித்தார். தொடர்ச்சியாக பல நூல்கள் எழுதினார். அவை உலகப் புகழ் பெற்றன. * சூரியனும் மற்ற கோள்களும் பூமியைச் சுற்றுவதாகவே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டது. பூமி உள்ளிட்ட கோள்கள்தான் சூரியனைச் சுற்றுகின்றன என்று கலிலியோ, கோபர்நிகஸ், ஜோகன்னஸ் கெப்ளர் ஆகியோரின் ஆய்வுகள்தான் முதன்முறையாக கூறின. * இவரது கண்டுபிடிப்புகள் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி இவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவரது கருத்துகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. நீண்டகாலம் இவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், கல்லால் அடித்து, தீவைத்துக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. * நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை, அறிவியலின் தந்தை என்றெல்லாம் போற்றப்படும் கலிலியோ 78 வயதில் மறைந்தார். கலிலியோ இறந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை தண்டித்தது தவறு என்று 1992-ல் போப் மன்னிப்பு கோரினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெள்ளையர்களை துரத்திய பஞ்சாப் சிங்கம்

வெள்ளையர்களை துரத்திய பஞ்சாப் சிங்கம் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர் இன்று(28-ந் தேதி) லாலா லஜபதிராயின் பிறந்த தினம். நமது தேசத்தின் வரலாற்றை புரட்டி பார்த்தால் நாடு சுதந்திர காற்றை சுவாசிக்க போராடிய எண்ணற்ற தியாக தலைவர்களின் கண்ணீர் கதைகளை வேதனையுடன் எடுத்துக்கூறும். அந்த வகையில் வெள்ளையர்களின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற முக்கிய பங்காற்றியவர் லாலா லஜபதிராய். வக்கீல் பணியை உதறிவிட்டு விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் லாலா லஜபதிராய். சமூக, சமய பண்பாட்டு மலர்ச்சிக்காவும் பாடுபட்டார். மக்களால் ‘பஞ்சாப் சிங்கம்’ என கம்பீரமாக அழைக்கப்பட்டவர். பஞ்சாபில் பிறந்த ராய், லாகூர் அரசுக் கல்லூரியில் சட்டம் பயின்ற பிறகு வழக்கறிஞராக பணியாற்றினார். 1888-ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1905-ல் ஹர்சன் பிரபுவால் கொண்டு வரப்பட்ட வங்கப்பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியது. சுரேந்தர் நாத் பானர்ஜி, அரவிந்த கோஷ் ஆகியோருடன் இணைந்து சுதேசி இயக்கத்திற்காக தீவிரமாக போராடியவர். ஆங்கிலேய அரசின் அடக்குறைகளை கடுமையாக எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என முழங்கினார். ஆங்கிலேய அரசு இவரை கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்ததால் 6 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டார். காந்தி வருகைக்கு முன்பே இந்திய விடுதலை போராட்டத்தில் மூன்று முப்பெரும் தலைவர்கள் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். அவர்களை லால், பால், பால் என்பார்கள். அவர்கள் முறையே, லாலா லஜபதிராய், லோக் மானிய பாலகங்காதர் திலக், விபின் சந்திரபால் ஆவர். முதல் உலகப் போர் நடந்த போது அமெரிக்காவில் இருந்த அவர் ‘இந்திய ஹோம் ரூல் லீக் நியூயார்க்’ என்ற அமைப்பை துவக்கி அங்குள்ள இந்தியர்களின் ஆதரவை திரட்டினார். அமெரிக்க செனட் அவையில் 32 பக்க அறிக்கையை தாக்கல் செய்து ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் சந்திக்கும் அவலங்களை விவாதத்திற்கு உட்படுத்தினார். 1919-ம் வருடம் பஞ்சாப் படுகொலைக்குப் பின் இந்தியர்களின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். மேற்கு வங்கத்தில் அவர் விடுத்த போராட்ட கர்ஜனை ஆங்கில அரசை அதிர வைத்தது. அது இந்தியாவினுள் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1921-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பஞ்சாப்பில் திறமையாக நடத்தினார். அதற்காக 18 மாதம் சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் ‘செளரி, செளரா’ சம்பவம் காரணமாக காந்தி போராட்டத்தை கைவிட்டது அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தொடங்கிய சுயராஜ்ய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பூர்ண சுதந்திர தீர்மானத்தை முதன் முதலில் முன்மொழிந்த பெருமைக்குரியவர் லாலா லஜபதி ராய்தான். ராய் இந்து மதக் கோட்பாடுகளை தீவிரமாக நேசித்து வந்தார். ஆரிய சமாஜத்திலும் உறுப்பினராக இருந்தார். இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான இந்து மகா சபாவிலும் ராய் உறுப்பினராகி தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஒரே மொழிதான் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் எனக்கூறியதுடன் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டார். அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்திற்கான சைமன் குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது நாடு முழுவதும் ஆவேச அலையை எழுப்பியது. அக்டோபர் 30, 1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவிற்கு எதிராக அமைதியான முறையில் லாகூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு ஜேம்ஸ் யு.ஸ்காட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார். தடியடி என்ற பெயரில் ராயின் இடது மார்பில் பலமாக தாக்கினார்கள். ஆனால் தடியடியினால் கீழே விழுந்தபோதிலும் துளியும் அச்சம் கொள்ளாத லாலா லஜபதிராய் தொடர்ந்து கர்ஜித்தார். “என் மீது விழுந்த அடிகள் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்” என்றார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கேயே நவம்பர் 17, 1928 தனது மூச்சை நிறுத்திக் கொண்டார். இவரது மரணத்தால் இந்தியா கொதித்தெழுந்தது. ஆங்கிலேயர்களின் நாடாளுமன்றம் வரை இந்த மரணம் விவாதப் பொருளானது. மாவீரர் பகத்சிங் நண்பர்கள் குழு இதை சவாலாக ஏற்றது. தடியடி நடத்த உத்தரவிட்ட ஜேம்ஸ் யு.ஸ்காட்டிற்கு குறி வைத்தனர். ஆனால் தவறுதலாக சான்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திர போராட்ட வீரர் என்பதையும் தாண்டி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் லாலா லஜபதிராய். பல நூல்களை படைத்துள்ளார். இவர் எழுதிய ‘யங் இந்தியா’ என்ற நூலை வெளியிடும் முன்னே இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இவர் எழுதிய ‘அன்ஹேப்பி’ இந்தியா என்ற நூல் ஆங்கிலேயர் ஆட்சியில் துன்புறும் இந்தியர்களின் நிலையை தெளிவாக எடுத்துக்காட்டியது. சட்டமேதையாக, சமயப்பற்றாளராக, சிறந்த எழுத்தாளராக, அரசியல் தலைவராக, தியாகியாக என எல்லா துறைகளிலும் முத்திரை பதித்தவர். பஞ்சாப், இமாசல பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பெரு நகரங்களில் பல பிரதான சாலைகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகளுக்கு இந்த தியாகச் செம்மலின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீரகாவியம் படைத்த மாபெரும் தலைவர் லாலா லஜபதிராயை என்றென்றும் நினைவு கூறுவோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மனிதனுக்கு, இயற்கை அன்னையின் எச்சரிக்கை

மனிதனுக்கு, இயற்கை அன்னையின் எச்சரிக்கை. துரைபாபு, வனக்கல்லூரி மாணவர், மேட்டுப்பாளையம். மனிதர்கள் நிம்மதியாக உயிர்வாழ இயற்கை அன்னை எண்ணற்ற வளங்களை அள்ளிக்கொடுத்துள்ளது. ஆனால் இன்றைக்கு எளிதில் கைக்கு கிடைக்கும் தொழில்நுட்பங்கள் மனிதனை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறதோ இல்லையோ, இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்பதே உண்மை. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், ஏன் நம்மையும் வாழ வைத்து கொண்டிருக்கும் புவியின் சொர்க்கங்களாகிய மரங்கள் தங்களது இறுதி அத்தியாயத்தை எழுதி கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் சாலை விரிவாக்கத்திற்காக, மேம்பாலங்கள் கட்டுவதற்காக, வானளாவிய கட்டிடங்கள் கட்டுவதற்காக வனங்களை அழித்து அதன் அழுகையை மகிழ்ச்சியாக ரசித்து கொண்டிருக்கிறோம் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல். அந்நிய மோகத்தினால் வெளிநாட்டு குடிநீர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறோம். காடுகளை, மரங்களை அழித்து வருவதன் மூலம் அதனை சார்ந்து வாழக்கூடிய சின்னஞ்சிறு பறவைகளும், விலங்குகளும் மெல்ல மெல்ல மரணத்தை தழுவி வருகின்றன. இவ்வாறு நாம் இயற்கை அன்னைக்கு செய்யும் கொடுமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையை தொடர்ந்து நாசமாக்கி வருவதற்கான தண்டனையை கூடிய விரைவில் அனுபவிக்க போகிறோம். ஆனால் ஒன்றுமறியாத எதிர்கால சந்ததியினரும் இதை அனுபவிக்க போகிறார்கள் என்பதுதான் பரிதாபம். இதற்கான எச்சரிக்கை மணி ஏற்கனவே அடிக்க தொடங்கி விட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. அங்கு நிலவிய கடும் வறட்சியை தேசிய பேரிடராக அறிவித்தது அந்நாட்டு அரசு. அரசாங்கத்திற்கு தெரியாமல் புதிய ஆழ்துளை கிணறுகளோ, ஏற்கனவே உள்ள பழைய ஆழ்துளை கிணறுகளையோ பயன்படுத்தக்கூடாது. அங்குள்ள விவசாயிகள் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள்தான் அனுமதி என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தண்ணீரையும், வளங்களையும் வரன்முறையின்றி பயன்படுத்தியதன் விளைவுதான். அங்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வருணபகவான் கருணை காட்டி உள்ளார் என்றால் நிலைமையை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள். இதே நிலை நம் நாட்டிற்கோ, ஊருக்கோ வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. தோராயமாக இன்னும் 50 ஆண்டுகளில் இந்த உலகம் மரங்கள், பறவைகள், விலங்குகள் இன்றி வெறிச்சோடி காணப்படும். ஏன் தண்ணீர் கிடைக்காமல் நாம் இறந்த பிறகும் நமது உடல்களை உணவாக உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் கூட இருக்காது என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படியே இயற்கையை தொடர்ந்து வஞ்சித்து வந்தால் நம் நாட்டிலும் வருங்காலத்தில் குடிப்பதற்கு நீர் இருக்காது. தண்ணீருக்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் துயரங்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். முற்றிலுமாக மரங்களை அழித்துவிட்டால் சுவாசிக்க காற்று எங்கிருந்து கிடைக்கும்? இதனால் பள்ளி குழந்தைகள் புத்தக பைகளை சுமப்பது போல் ஒவ்வொருவரும் முதுகின் பின்னால் சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கிச் செல்ல நேரிடும் 18 வயது உடைய ஆண், பெண் இருபாலருமே 70 வயது முதியவரைப் போல தோற்றமளிக்கும் அபாயமும் காணப்படும். நம்முடைய மூளைச்செல்கள் பலவீனம் அடைந்து முற்றிலுமாக சிந்திக்கும் திறனை இழந்து நிற்போம். மரங்கள் இல்லாததால் புவியின் வெப்பநிலை பன்மடங்கு அதிகரித்து காணப்படும். உடல் உஷ்ணத்தால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மலட்டு தன்மை ஏற்படும் சோகத்திற்கும் வாய்ப்பு உள்ளது. இயற்கையை தண்டிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பல்வேறு நோய்கள் நமது உடலில் அணி அணியாக குடியேறி விடும். இதனால் மனிதனின் சராசரி வாழ்நாள் 40 வருடமாக குறைந்து விடும். இயற்கைக்கு நாம் செய்து கொண்டிருக்கும் துரோகத்தால் விவசாய பயிர்கள் விளைய வேண்டிய இடம் எல்லாம் நஞ்சாக மாறி விடும். உண்பதற்கு உணவு இருக்காததால் உணவினை மாத்திரை வடிவத்தில் உட்கொள்ள வேண்டியது வரும். இவையெல்லாம் மனிதர்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. இயற்கை அன்னைக்கு தொடர்ந்து பாவம் செய்து வந்தால் இதை அனுபவிக்க வேண்டியது வரும் என்ற எச்சரிக்கைதான். வளர்ச்சி என்பது இன்றைய சமுதாயத்திற்கு தேவைதான். ஆனால் வளர்ச்சியையே மேற்கோள் காட்டி வனங்களையும், ஆறுகளையும் அழித்து நாம் மகிழ்ச்சியாக வாழப்போகிறோமா, இல்லையே. எனவே நாமும் வாழுவோம். இயற்கை அன்னையையும் வாழ விடுவோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 26 January 2019

53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்  பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்

கல்வித் துறையில் 53 வகையான ஆவணங் களை பராமரிக்கவேண்டி இருப்பதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் திணறுகின் றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை இயக்ககத்தின்கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப் பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர் பணிப் பதிவேடு, சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு, கற்றல் விளைவுகள் பதிவேடு, பாடத்திட்டம், மெல்ல கற்போர் பதிவேடு, கணிதக் கருவிப்பெட்டி பயன்பாட்டுப் பதிவேடு, புத்தகப் பூங்கொத்து பயன்பாட்டுப் பதிவேடு, வாசிப்புத்திறன் பதிவேடு, எளிய அறிவியல் சோதனைப் பதிவேடு, பள்ளி கட்டமைப்புப் பதிவேடு, மாணவர்கள் சுய வருகைப் பதிவேடு, காலநிலை அட்டவணை, ஆரோக்கிய சக்கரம், எழுத்துப் பயிற்சி நோட்டு, வரைபட நோட்டு,கட்டுரை நோட்டு, தொலைக்காட்சி ஒளிபரப்பு பதிவேடு, திட்டப் பதிவேடு, அறிவியல் ரெக்கார்டு நோட்டு உட்பட 53 வகை ஆவணங்களை தலைமையாசிரியர் தயாரித்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்கு பெரும்பாலும் இடைநிலை ஆசிரியர்களே உதவுகின்றனர். இதுதவிர கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) மாணவர், ஆசிரியர் விவரம், தேர்வு விவரம், நலத் திட்டங்கள், பொதுத் தேர்வு மையங்கள் விவரம் உட்பட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரிப்பதால் மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: கல்விமுறையில் பாடத்திட்டம் மாற்றம் உட்பட சீர்திருத்தங்கள் செய்த பின்னர், ஆசிரியர்கள் கற்பித்தலைவிட 53 வகை யான ஆவணங்களை தயார்செய்து பரா மரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். இதுதவிர மக்கள் தொகை கணக் கெடுப்பு, இலவசப் பொருட்கள் எடுத்து வருதல், எமிஸ் இணையதள பதிவேற்றம், சத்துணவு பராமரிப்பு, பள்ளி விவரங்கள் மேம்பாடு, விளையாட்டு போட்டிகள், விழாக் களுக்கு மாணவர்களை தயார்செய்வது, கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றல், கல்வி உதவித்தொகை தேர்வுகளுக்கு தயார் செய் தல், க்யூ ஆர் கோடு பயன்பாடு என இதரப் பணிகளையும் கவனித்து ஆவணங்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இத்தனை பணிகளையும் முடிக்கவே நேரம் போதாமையால் திணறுகிறோம். இதில் 25 ஆவணங்களை மாணவர்கள் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும். இன்றைக்கு ஆவணங்களை எப்படி முடிக்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் ஓடுவதால், கவனச் சிதறலில் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்த முடியவில்லை. மாநிலத்தில் 70 சதவீத ஆரம்பப் பள்ளிகளில் ஈராசிரியர்களே உள்ளனர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 2 பேர்தான் 1 முதல் 5 வரையான வகுப்புகளையும் கவனிக்க வேண்டும். மொத்தமுள்ள 23 பாடங்களையும் நடத்த வேண்டும். இதில்ஆவணங்களையும் தயாரிப்பது பெரும் சவாலாக உள்ளதால் வாரத்தில் 2 நாட்கள் பாடம் நடத்துவதே பெரிய விஷயமாகிவிட்டது. இதற்கிடையே கல்வி அதிகாரிகள் திடீர் சோதனை என்ற பெயரில் அவ்வப்போது வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளை யும் செய்ய வேண்டியுள்ளது. கற்பித்தல் பணியைவிட ஆவணங்களை தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். அவர்களுக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிப்பு என்ற புள்ளி விவரம் இருந்தால் போதும். இத்தகைய பணிச்சுமையால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யும் அரசு ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்ய வழிசெய்ய வேண்டும். பள்ளிக்கல்வித் துறை செயலராக உதயசந்திரன் இருந்தபோது ஆசிரியர்களை ஆவணங்கள் தயாரிப்பு பணியில் இருந்து முழுவதுமாக விடுவிக்க முயற்சிகள் எடுத்தார். அதேபோல், ஆசிரியர்களுக்கான ஆவணங்கள் பராமரிப்பு பணிகளை அரசு குறைக்க வேண்டும். கல்வி மாவட்டம் வாரியாக தகவல் மையம் அல்லது சிறப்பு தகவல் பிரிவு தொடங்கலாம். ஆவணங்களை தயார் செய்ய பள்ளிகள் வாரியாக தனி ஊழியர்களை நியமிக்கலாம். இல்லையெனில் இதர ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி பணிகளை செய்ய உத்தரவிடலாம். அதற்கு மாறாக இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகும் அபாயமுள்ளது. இவ்வாறு ராபர்ட் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சாதகமா? பாதகமா?

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சாதகமா? பாதகமா? ப டிப்படியாக உயர்ந்து வருகிறது தமிழக கல்வித்துறை. தனியார் வசம் இருந்த கிண்டர்கார்டன் எனப்படும் மழலையர் பள்ளிக்கூடங்களை சொந்தமாக்கி சாத்தியமாக்கி இருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. தனியார் பள்ளிகள் வசம் இருந்த தூண்டில் இந்த கே.ஜி. வகுப்புகள். 5 வயது நிறைவடைந்த பின்னர்தான் அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என்ற நிலை இருந்ததால், 3 வயதில் இருந்தே சமாளிக்க முடியாத குழந்தைகளை கே.ஜி. வகுப்புகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எல்லா வீடுகளையும் எட்டிப்பார்க்க, அந்த நுழைவு வாயில் தனியார் பள்ளிகளின் முக்கிய வாயிலாகவே உள்ளது. ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி மையங்கள் சமூக நலத்துறை மூலம் இயங்கி வந்தாலும், அதில் தனியார் ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான கல்வி வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் அதில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்கள் விரும்பவில்லை என்பதே உண்மையாக இருந்தது. ஆனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்ககோட்டையன் எடுத்த பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையை புது எழுச்சி கொள்ள வைத்தது. அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று, அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக மாற்றுவது. இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கடந்த விஜயதசமி நாள் வெளிக்காட்டியது. மாதிரி பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட எல்கே.ஜி. வகுப்புகளை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து, அடுத்த ஆண்டு சேர்க்கைக்காக முன்பதிவு செய்து வரும் வேளையில், அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கூடங்களுடன் இணைந்து இருக்கும் அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளிகளாக மாற்றி, வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. கடந்த 21-ந்தேதி வகுப்புகள் தொடங்கிய அன்று மாணவர் சேர்க்கை பரவலாக நன்றாகவே இருந்தது என்கிறது அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள். பெற்றோர் பலரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்து மழலையர் வகுப்புகள் செயல்பாடுகள் குறித்து கேட்டு செல் கிறார்கள். இனி இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும்... ஆனால், ஆசிரியர்கள் மத்தியில் இன்னொரு வடிவில் பிரச்சினை எழும்பி உள்ளது. தொடக்கத்தில் அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, சமூக நலத்துறை மூலம் பணியில் சேர்ந்து தற்போது அங்கன்வாடி அமைப்பாளர்களாக இருக்கும் பணியாளர்கள் தங்களுக்கு ஆசிரியை பணி வர வாய்ப்பு உள்ளது என்று கருதினார்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்களாக தேர்வு பெற்றிருப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஆசிரியை பயிற்சி முடித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே கல்வித்தகுதி அடிப்படையில் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், மழலையர் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் என்ற முடிவு, அவர்களுக்கு மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. மழலையர் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் தற்போது ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 30 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளது. இந்த விகிதாச்சாரத்தின் படி உபரியாக இருக்கும் ஆசிரியைகளை மழலையர் பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு செய்து, பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் அவர்களுக்கு ஊதிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு பாடம் எடுக்க செல்வதன் மூலம் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை வந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த வாரமே பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியும் யாரும் உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் 21-ந்தேதி மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பது சாதகமா? பாதகமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை அளிக்கிறது. ஆனால், அங்கன்வாடி மையங்கள் மூலம் உணவு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு 14 வகையான இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு இந்த இலவசங்கள் கிடைக்குமா? என்பது பெற்றோரின் கேள்வி. பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் சென்றுவிட்டால், அங்குள்ள அங்கன்வாடி மையங்களில் எங்களுக்கு என்ன வேலை? நாங்கள் என்ன செய்வது? என்பது அங்கன்வாடி மைய பணியாளர்களின் கேள்வி. மழலையர் பள்ளிகளுக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்?. அவர்களை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியுமா? அவர்களை வேறு வகுப்புகள் எடுக்க பயன்படுத்த முடியுமா? என்பது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் கேள்வி. இதுவரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தந்து விட்டு, உபரி என்கிற காரணத்தால் மழலையர் பள்ளிகளுக்கு செல்பவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விடுமுறை எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளை கவனிப்பார்களா?. இனி வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மீண்டும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையான பள்ளிக்கூடங்களில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவார்களா?. அங்கன்வாடி மையங்கள் சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால், மழலையர் பள்ளிகளில் பணிக்கு சேரும் ஆசிரியைகளும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு சென்று விட வேண்டுமா? என்ற கேள்வி ஆசிரியர்களுக்கு. ஒன்றிய வாரியாக, பள்ளிக்கூடங்கள் வாரியாக இளையோராக இருக்கும் ஆசிரியர்களுக்கு அடுத்து அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்போது நமக்கும் இதே நிலைதானா? என்ற கேள்வி. இப்படி கேள்விகளால் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஒருதரப்பு இருக்கிறது. எனவே தற்போது மழலையர் பள்ளிக் கூடங்கள் வெற்றிகரமாக இயங்க, அரசின் சார்பில் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு என்று புதிதாக ஆசிரியைகளை தேர்வு செய்து பணியில் நியமித்து குழந்தைகளுக்கு சிறப்பான அடித்தளத்தை உருவாக்க வேண்டும். -முடிவேல் மரியா

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசியல் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கரின் அறிவுரை!

அரசியல் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கரின் அறிவுரை! ஆர்.நல்லகண்ணு, (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) இ ன்று (ஜனவரி 26-ந்தேதி) இந்திய குடியரசு தினம். 70-ம் ஆண்டு குடியரசு தினத்தில் அடியெடுத்து வைக்கிறோம். குடியரசுச்சட்டம் தான் 130 கோடி மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு போராட்டங்கள், கிளர்ச்சிகள், அடக்குமுறைகள் உலகப்போர் விளைவுகள் ஆகிய பின்னணியில் 1947 ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நாடு சுதந்திரமடைந்தது. நாடு பிரிக்கப்பட்டதும் 1947 ஆகஸ்டு 20-ல் இந்திய அரசியல் அடிப்படை சாசனத்தை உருவாக்க எழுவர் குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல அறிஞர்கள் இருந்தபோதும், அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராக அம்பேத்கரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சட்ட நுணுக்கத்தையும் தெரிந்தவர், கடையிலும் கடைகோடி மக்களின் உணர்வுகளையும் நன்கு உணர்ந்தவர் என்று காந்தியும், நேருவும் கருதினர். இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் 1948 நவம்பர் 4-ல் அரசியல் அமைப்பு சாசன மசோதாவை அரசியல் நிர்ணய சபையில் முன் மொழிந்தார். 2475 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு விரிவான விவாதங்கள் நடந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அரசியல் நிர்ணய சபையில் சட்ட நகல் ஏற்றுக்கொண்ட பிறகு 1949 நவம்பர் மாதம் 25-ந்தேதி அன்று டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய தொகுப்புரை இன்றைய இந்திய சூழ்நிலைக்கும் பொறுத்தமாக உள்ளது. “இந்தியா 1950 ஜனவரி 26-ம் நாள் முதல் குடியரசு நாடாகிறது. நாட்டின் சுதந்திரத்துக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ? நாடு தனது சுதந்திரத்தைப் பேணிக் காத்துக் கொள்ளுமா? அல்லது மீண்டும் இழந்து விடுமா? இதுவே என் மனதில் குடி கொண்டிருக்கும் முதல் சிந்தனையாகும். “என் மனதில் தோன்றும் இரண்டாவது சிந்தனை ஜனவரி 26-லிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்காக ஆட்சி நடத்தும் மக்கள் ஆட்சி ஒரு ஜனநாயகக் குடியரசாகத் திகழும். ஐனநாயகக் குடியரசுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.” இந்திய அரசியலில் பக்தி அல்லது வீரவணக்கம் Hero workship ஈடு இணையற்ற முறையில் பெருமளவு அரசியலில் பங்கு வகிக்கிறது. அரசியலில் தனி நபர் வழிபாடு இந்தியாவைப் போன்று உலகில் எந்த பகுதியிலும் இல்லை. “இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மேலாக நாட்டைக் கருதப் போகிறார்களா அல்லது நாட்டை விட மத நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா? இது எனக்குத் தெரியாது. கட்சிகள், நாட்டை விட தங்கள் மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தால் நமது சுதந்திரத்தை இழப்பது என்பது நிச்சயம். இந்த விளைவுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டுமென்றார். “மூன்றாவதாக வெறும் அரசியல் ஜனநாயகத்தோடு திருப்தி அடைந்துவிடக் கூடாது”. அரசியல் ஜனநாயகத்துடன் மனநிறைவு அடைந்து விடக்கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். சமூக ஜனநாயக அடிப்படையின்றி அரசியல் ஜனநாயகம் நீண்டு நிலைத்திருக்க முடியாது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை வாழ்க்கையின் கோட்பாடுகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறை அது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை கொண்ட இந்த மும்மையின் தனிப் பகுதிகளாக அவைகளை பிரிக்க முடியாது. இந்த மூன்றும் ஒன்றாக இணைந்துள்ளன. அதாவது ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகும். சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. அதேபோன்று சமத்துவத்திலிருந்து சுதந்திரத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து சகோதரத்துவத்தைப் பிரிக்க முடியாது. “நான்காவதாக நாம் அனைவரும் ஒரு தேசம் (Nat-i-o-n-al) என்ற நம்பிக்கையெனும் மாயையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். பல்லாயிரம் சாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் வாழும் இடம் எப்படி ஒரே தேசமாக இருக்க முடியும்?” இந்தியாவில் ஜாதிகள் உள்ளது. தேசிய இனச் சிந்தனைக்கு எதிரானது ஜாதிகள். முதலில் சமூக வாழ்வில் அவை பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஜாதிக்கும் ஜாதிக்கும் இடையே வெறுப்பையும், பொறாமையையும் உருவாக்குவதால் அவை தேசிய இனக் கொள்கைக்கு விரோதமாக இருக்கின்றன. உண்மையிலேயே நாம் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டுமென்றால் இந்த தடைக் கற்களையெல்லாம் கடந்து வர வேண்டும். ஒரு தேசிய இனம் உருவானால்தான் சகோதரத்துவம் உண்மையானதாக இருக்க முடியும். சகோதரத்துவம் இல்லாத சமத்துவமும் சுதந்திரமும் ஒரு வண்ணப் பூச்சியின் வலுவை விட அதிகமாக இருக்க முடியாது”. சமுதாய ரீதியாகவும், மனோ நிலையிலும் ஒரே தேசம் என்ற சொல்லுக்குரியவர்களாக ஆகவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரத்தில் நாம் உணர்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஒரு தேசமாக வளர்வதற்கு அவசியத்தை உணர வேண்டும்; அந்த இலட்சியத்தை நனவாக்குவதற்கான வழி வகைளைச் சிரத்தையோடு சிந்திக்க வேண்டும்”. 5.மக்களுடைய ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, மக்களால் நடைபெறும் ஆட்சி என்ற கோட்பாடை புனிதமாக வைத்திருக்கும் நாம் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க விரும்பினால், நமது பாதையில் நிரம்பிக் கிடைக்கும் தீய சக்திகளை இனம் காண்பதில் துடிப்புடன் இருப்போம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். மக்களாலான அரசை விட மக்களுக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுக்கத் தூண்டும் முன்முயற்சியில் சோர்ந்து விடமாட்டோம் என்று உறுதி செய்வோம். டாக்டர் அம்பேத்கரின் மனதை உறுத்திக் கொண்டிருந்த கருத்துகளை ஒளிவு மறைவின்றி அரசியல் நிர்ணய சபையில் தெரிவித்திருக்கிறார். தேசிய இனப் பிரச்சினையை விட, சாதிப் பிளவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் அவரைப் பெரிதும் பாதித்தவை. இன்றும் மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து, புழுதி கிளம்பிவிடப்படுவதைப் பார்க்கிறோம். இடஒதுக்கீட்டு கொள்கையில் அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள சமூகத்தில் பின்தங்கிய, கல்வியில் பின்தங்கிய என்பதை புறந்தள்ளி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கென 10 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இடஒதுக்கீட்டு கொள்கைக்கான அடிப்படையையே மாற்றி நாளடைவில் இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். இந்த குடியரசு தினத்தில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறோம். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை நசுக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக மாற்று கருத்து கூறினால் தேச துரோகிகள் என்று அரசால் தாக்கப்படுகிறார்கள். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், புலனாய்வு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள சட்ட பாதுகாப்பையும் தன்னாட்சி அதிகாரத்தையும் மத்திய அரசிடம் பறிகொடுக்கும் அவலத்தை பார்க்கிறோம். அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டதற்கு மாறாக அறிவியல் மாநாடுகளில் மூட நம்பிக்கையும், அறிவியலுக்கு புறம்பான கருத்துகளும் பரப்பப்படுகிறது. மதத்தின் பெயரில் இன்று ஆட்சியும், அரசியலையும் தொடர்ந்து முன்னெடுக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்க, நம் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் செலுமைபடுத்த நாம் அனை வரும் இணைந்து செயலாற்றுவோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 25 January 2019

மது இல்லா தமிழகம் மலருமா?

மது இல்லா தமிழகம் மலருமா? கோ டியில் புரளும் செல்வந்தனையும், அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் தெருக்கோடியில் தவிக்கும் பரம ஏழையையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது மதுபானம். இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் தலைவிதியையே மதுபானம் மாற்றி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. சந்தோஷத்தை கொண்டாடும் உற்சாக பானமாகவும், துக்கத்தை மறக்க செய்யும் மாமருந்தாகவும் மதுபானத்தை கருதும் அவலநிலையில் இளைஞர்கள் உள்ளனர். பணம் செய்யாததை மதுபானம் செய்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. உதாரணமாக ரூ.500 கொடுத்து செய்யக்கூடிய வேலையை, ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்தால் செய்து முடிக்கும் மனநிலை குடிமகன்களுக்கு வந்துவிட்டது. மது பிரியர்கள் என்பதை காட்டிலும், மது அடிமைகளாக பலர் உள்ளனர். ஒரு நாள் கூட தங்களால் மதுபானம் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு இளைஞர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர். ‘எப்போது மதுபானம் கிடைக்கும்? என்று மதுக்கடை வாசலில் காத்திருந்து வாங்கி செல்வோர் இருக்கின்றனர். இவர்கள் ‘டாஸ்மாக் ஓப்பனர்’ என்று அழைக்கப்படுகின்றனர். மது அடிமை பட்டியலில் இடம் பிடிப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால், ஆணுக்கு நிகராக சில பெண்களும் மதுபோதையில் மிதக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் 70 சதவீதம் பேர் மதுபானம் குடிக்கின்றனர். இதேநிலை நீடித்தால் மது குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணும் நிலை வந்து விடும். முன்பெல்லாம் பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது, மாப்பிள்ளை குடிக்கக்கூடாது என்று பெற்றோர் நினைத்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. குடிக்காத மாப்பிள்ளை கிடைப்பது அரிதாகி விட்டது. இதனால் விசேஷம் மற்றும் திருவிழா காலத்தில் மட்டும் மதுபானம் குடிப்பவர் என்று தெரிந்தும் கூட பெண்ணை மணம் முடித்து வைக்கின்றனர். மதுபானம் தன்னை அழிப்பது மட்டுமின்றி, தன்னை சார்ந்தவர்களையும் நடை பிணமாக்கி விடுகிறது. ஒருவர் மதுவுக்கு அடிமையாகி விட்டால், ஒட்டுமொத்த குடும்பமே நடுவீதிக்கு வந்து விடுகிறது. அவமானத்தால் கூனி குறுகி போய் விடுகின்றனர். தினமும் மரண வேதனையை அனுபவிக்கின்றனர். மதுப்பழக்கத்தினால் கணவனை இழந்து விதவைகளாகவும், தந்தையை இழந்து அனாதைகளான குழந்தைகளும் பலர் உள்ளனர். உடலையும், உள்ளத்தையும் பாதிக்கக்கூடியது மதுபானம். உடலில் நச்சுப்பொருட்களை வெளியேற்றும் கல்லீரலை மதுபானம் செயலிழக்க செய்து விடுகிறது. நரம்பு மண்டலம், சிறுமூளையின் செயல்பாட்டை முடக்கி விடுகிறது. உடல், உள்ளம், குடும்பம், சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் மதுபானத்தை விட்டு மீள முடியாமல் பலர் தவித்து கொண்டிருக்கின்றனர். மது பிரியர்களை கூட மாற்றி விடலாம். ஆனால் மது அடிமைகளை கரை சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. திருந்தாத குடிமகன்களால் ஒவ்வொரு நாளும் அவர்களது குடும்பத்தினர் திண்டாடி கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கொண்டாடிய போகி, பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள 5,140 டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது. கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது வருமானமா? அவமானமா? என்று தெரியவில்லை. சாதனையா? வேதனையா? என்று திக்கு தெரியாமல் தமிழகம் திணறி கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் மதுவோடு மல்லுக்கட்டும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுவார்கள். மதுபானம் குடிக்காத இளைஞர்களை பார்ப்பது அரிதாகி விடும். சமுதாயத்தின் அனைத்து தீமைகளுக்கும் வேரான மதுபானத்தை, அறுத்து எறிய வேண்டியது அவசியமாகி விட்டது. இது, ஒரே நாளில் சாத்தியமில்லை. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக மதுபிரியர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க முடியும். முதலில், ஒரு தாலுகாவுக்கு 3 அல்லது 4 கடைகள் என நிர்ணயம் செய்து, அதனை மூட வேண்டும். இதேபோல் தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான, நோய் நொடியில்லாத, குற்றமற்ற ஒரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்க முடியும். மது இல்லாத தமிழகம் மலர்ந்தால், அதன் மணம் உலகம் முழுவதும் பரவும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம் வளமானதாக மாறும். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். -தாமிரன்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்.

ஓட்டுரிமையை விற்காதீர்...! நீடாமங்கலம் கோபாலசாமி, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர். இ ன்று (ஜனவரி 25-ந் தேதி) தேசிய வாக்காளர் தினம். நம் நாடு 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. மக்களால் மக்களுக்காகவே ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க தீர்மானித்து அதற்கான அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு நாடானது. மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க அதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. தேர்தலை முன்னின்று நடத்துவதற்காக அரசியல் சாசனத்தின் பிரிவுகளின் மூலம் அந்த பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. அந்த தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி பொறுப்பு ஏற்றது. அந்த நாளை வாக்காளர் தினமாக 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. இதில் படிப்பறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. இருந்தபோதிலும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரையும் ஒன்றாகக் கருதி படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் ஓட்டளிக்கும் உரிமையை அளிக்க தீர்மானித்த அன்றைய நம் தலைவர்களை பாராட்டியே ஆகவேண்டும். பல மேலை நாடுகளில் இந்த உரிமை நீண்ட காலம் படித்தவர்களுக்கும், நிலச்சுவான்தார்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற முறையை முதன் முதலாய் அமல் செய்த நாடாளுமன்றங்களின் தாய் என்று புகழ் பெற்ற இங்கிலாந்திலேயே பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னரே 1920-ல்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இந்த புரட்சிகரமான செயலை மேலை நாடுகள் வரவேற்கவில்லை என்பது மட்டுமல்லாமல், இதனால் நாடே சின்னாபின்னமாகி சிதறிப்போகும் என்று எச்சரித்தபோதிலும் நம் தலைவர்கள் உறுதிமாறவில்லை. படிப்பறிவில்லாவிட்டாலும் நாட்டுக்கு நன்மை, தீமை எவை என்று உணரும் பகுத்தறிவு நம் மக்களிடையே இருக்கிறது என்ற நம்பிக்கையின் பேரில் எல்லோருக்கும் ஓட்டுரிமை என்ற சித்தாந்தத்தை நம் தலைவர்கள் அமல்படுத்தினர். இதுவரை நம் நாடு 16 முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களையும், மாகாணங்களுக்காக சற்றேறக்குறைய 400 தேர்தல்களையும் சந்தித்து இருக்கிறது. சில குறைகள் இருப்பினும் மக்கள் தங்கள் கடமையை சரிவர ஆற்றியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். 1984-ம் ஆண்டு முதல் 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் ஓட்டுரிமை பெற தகுதி உள்ளவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை. ஓட்டுரிமை பெறத் தகுதி பெற்றாலும் அதை பயன்படுத்த, அதற்குரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அந்த சட்டப்படி வாக்காளர் பட்டியலில் எவருடைய பெயர் சேர்க்கப்பட்டதோ, அவர்களே வாக்குரிமையை பயன்படுத்த தகுதி உள்ளவர் ஆவர். வாக்காளர் பட்டியலைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இருந்தபோதிலும் குடிமக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட செயல்பட வேண்டும். பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்கும், இடம் பெயர்ந்தால் புதிய இடத்தில் மறு பதிவு செய்வதற்கும் வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் வரையிலான 4 மாதங்களில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் செய்யப்படுகின்றன. வருடத்தில் எந்த சமயத்திலும் பட்டியலில் பெயர் சேர்க்கும் வகையில் விண்ணப்பிக்கலாம். இருந்தபோதிலும் செப்டம்பர் - டிசம்பர் மாதங்களில்தான் இந்தப்பணிகள் முழுமையாகச் செய்யப்படுகின்றன. இந்தச் சமயத்தில் முதலில் வெளியிடப்படும் வரைவுப் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா? என்று வாக்காளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே வாக்குப்பதிவு தினத்தில் வாக்களிக்க உரிமை இருக்கிறது என்று நினைப்பது தவறு. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க இயலும் என்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெயர் சேர்க்கவோ அல்லது இடம் மாறி இருந்தால் அதன்படி மாறுதல் செய்யும் விண்ணப்பம் செய்யவேண்டும். ஆணையத்தின் இணைய தளம் மூலமாகவும், ஆணையம் உருவாக்கி இருக்கும் எஸ்.சி.எஸ்.டி. என்ற செயலியின் மூலமாகவும் பெயர் இருப்பதை உறுதி செய்யவும். இல்லை என்றால் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த ஆண்டு வாக்காளர் தினத்தை இளைய சமுதாய வாக்காளர் தினமாக ஆணையம் அறிவித்து இருக்கிறது. ஆற்றல் கொண்ட கைப்பேசிகளை உபயோகிக்கும் இளைய சமுதாயத்தினர் தங்கள் விவரங்களை சரிபார்ப்பதோடு மட்டும் அல்லாமல் உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களின் விவரங்களையும் சரிபார்த்து கொடுத்து ஒரு நல்ல குடிமகனாக உங்களால் இயன்ற உதவி செய்யலாம். உங்கள் கடமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதோடு மட்டும் முடிந்துவிடாது. முக்கியமான கடமையில் அது ஒரு முதல்படி மட்டுமே ஆகும். வாக்களிப்பதை ஒரு ஜனநாயக கடமையைக் கருதி உங்கள் தொகுதியில் என்று வாக்களிப்பு நடைபெறுகிறதோ அன்று தவறாமல் உங்கள் வாக்கை அளிப்பதோடு, மற்றவர்களையும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்யத் தூண்டவேண்டும். சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள் பங்களிப்பு உன்னதமானது என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணரவேண்டும். 5 ஆண்டுக்கொருமுறை உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதை பயன்படுத்தவில்லை என்றால் மக்களின் பிரதிநிதியாகச் சரியான நபரை தேர்ந்தெடுக்காமல் போகக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்கும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதே என்பதை உணரவேண்டும். வேட்பாளரின் தகுதி விவரங்களை அவர்கள் வெளியிடவேண்டும் என்ற கட்டாயம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அமல் செய்யப்படுகிறது. அந்த விவரங்களை அறிந்துகொண்டு குற்றப்பின்னணி இல்லாதவராகவும், நேர்மையானவராகவும் உள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால் நாடு நலம் பெறும். அந்தக் கடமையைச் செய்யத் தவறினால் நாட்டின் முன்னேற்றத்தை தடை செய்ய நாமும் உடந்தை ஆகிறோம் என்ற சமூகச் சிந்தனையோடு எல்லா வாக்காளர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக நகர்ப்புறங்களில் வசிப்போர் ஓட்டுச்சாவடிக்கு செல்வதில் உற்சாகம் காட்டுவதில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த வாய்ப்பை உதறிவிட்டவர்களுக்கு, ஆட்சியில் தவறுகள் நடந்தால் அதைச் சுட்டிக்காட்ட உரிமை இல்லை என்றே கருத வேண்டியது வரும். தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் பரவி வருகிறது. இதனால் தமிழனுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டு இருக்கிறது. இதில் இருந்து தமிழகம் மீளவேண்டும். அதற்கு வாக்காளர்கள் விழிப்புணர்வும், தன்மான உணர்ச்சியுமே கைகொடுக்கும். அரசியல் கட்சி வேட்பாளர் யாரும் தங்கள் கையில் இருந்து பணத்தை கொடுப்பது இல்லை. அவர்கள் மக்கள் பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் திருப்பி கொடுக்கிறார்கள். அதாவது 100 ரூபாயில் ஒரு ரூபாய்தான் கொடுக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் கொடுப்பது 20 காசுக்குதான் சமம். அந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு நமது சந்ததியினரையும், எதிர்காலத்தையும் அடமானம் வைத்து விடுகிறோம். இதுகுறித்து விழிப்புணர்ச்சியுடன் இருந்து பணம் வாங்கமாட்டோம் என்று சபதம் ஏற்கவேண்டும். நாட்டின் எதிர்காலம் நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று இந்த வாக்காளர் தினத்தில் உறுதிமொழி ஏற்போம்...!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 January 2019

சண்டையிடுவதோ சேவல்...! ஆவலோ சூதாட்டத்தில்...!

சண்டையிடுவதோ சேவல்...! ஆவலோ சூதாட்டத்தில்...! த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்சண்டை என்றும் இது அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் புகார் நகரத்து மக்கள் கண்டு களித்த விளையாட்டுகளில் சேவல் சண்டையும் ஒன்றாகும். இந்த போட்டியில் வெற்றி பெறும் சேவலுக்கு ஊர்கூடி வரவேற்பு கொடுத்த நிகழ்வுகள் ஏராளம். கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த இணையற்ற மாவீரர்கள் பொன்னர்-சங்கர் வரலாற்றிலும் சேவல் சண்டை முக்கிய நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காளி மன்னன் தரப்பில் கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான சேவல்களை பொன்னர்-சங்கரின் 2 சேவல்கள் வீழ்த்தி வெற்றி வாகை சூடியதாக குறிப்பு உண்டு. பிற நாட்டோடு போர் தொடுக்கச் செல்லும் மன்னர்கள் பலரும் தங்களின் படைவீரர்களுடன் சண்டை சேவல்களையும் கொண்டு சென்றுள்ளனர். இடைவிடாத போர் பயிற்சியால் மூர்க்க குணம் கொண்டு இருக்கும் வீரர்கள், தங்களுக்குள் சண்டை போட்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது சேவல் சண்டை நடத்தியதாகவும், அந்த சண்டையே வீரர்களின் கோபத்தின் வடிகாலாக இருந்ததாகவும் வரலாற்றின் வழியே அறிய முடிகிறது. அத்துடன், கரூர் மாவட்டம் பூலாம்வலசு சேவல் சண்டைக்கு ஆங்கிலேயர்கள் செம்புப் பட்டயம் கொடுத்த வரலாறும் உண்டு. சேவல் சண்டையை பொறுத்த வரை கத்திக்கட்டு, வெப்போர் என்ற இரு வகையான போட்டிகள் உண்டு. கத்திக்கட்டு என்பது சேவலின் கால்களில் கூர்மையான கத்தியை கட்டிவிட்டு சண்டையிட வைப்பது. வெப்போர் என்பது வெற்றுக்கால் போர் என்றும் அழைக்கப்படுகிறது. இது, சேவலின் கால் விரல்களில் உள்ள முட்களையே ஆயுதமாக கொண்டு சண்டையிடுவது. சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் சேவல் சண்டைக்கு பிரசித்தி பெற்றது. தமிழகத்தை போன்று ஆந்திராவும் சேவல் சண்டைக்கு பிரசித்தி பெற்றது. விஜயவாடா பகுதிகளில் பிரமாண்ட அளவில் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. சண்டை சேவல்கள் வளர்ப்பவர்கள் அதை ஒரு உயிரினமாக மட்டும் பார்ப்பது இல்லை. தங்களின் கவுரவமாகவும், உணர்வோடும், உயிரோடும் கலந்த பந்தமாகவும் பார்க்கின்றனர். மதுரையில் நடக்கும் சேவல் சண்டையை கதைக் களமாக வைத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் இதை விரிவாக காட்டி இருந்தது. சண்டைக்கு சேவலை தேர்வு செய்வது, ஊட்டமளிப்பது, சண்டைக்கு பழக்குவது, சண்டைக்கு பின்னர் ஏற்படும் காயங்களை ஆற்றி குணப்படுத்துவது என சேவல் சண்டை பிரியர்கள் ஆண்டின் பெரும்பாலான நாட்களை சேவலோடு கழிப்பதே வாடிக்கை. இதை ஒருவிதமான போதை என்றே கூறலாம். சண்டை சேவல் வளர்ப்பில் நாட்டம் கொண்டவர்களை அதில் இருந்து விடுவிப்பது கடினம். மன்னர்களில் தொடங்கி, ஜமீன்தார்கள், பண்ணையார்கள், செல்வந்தர்கள், பாமரர்கள் என அனைத்து தரப்பிலும் சேவல் சண்டையை வெறித்தனமாக நேசிப்பவர்களாக உள்ளனர். நீண்ட நெடுங்காலமாக பரிசுப் பொருட்கள், பண முடிப்பு, கவுரவம் என்று இருந்த சேவல் சண்டையில் சூதாட்டம் கலந்தது. இதன் விளைவு சேவல் சண்டை நடக்கும் இடங்களில் மனிதர்களிடையே கைகலப்பு, அடி-தடி என தொடங்கி கொலை சம்பவங்கள் வரை சென்றுவிட்டது. இதனால், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தமிழ்நாடு போலீஸ் துறை தடை விதித்தது. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டை நடத்தவும் தடை உள்ளது. இருப்பினும், தமிழக, ஆந்திர மாநிலங்களில் தடையை மீறி சேவல் சண்டை நடந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடத்துவது போல், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சங்கராந்தி விழாவையொட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சேவல் சண்டையை முன்வைத்து சூதாட்டத்தில் ரூ.1,000 கோடி வரை பணம் கைமாறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த ஆண்டு விஜயவாடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த சேவல் சண்டையில் ரூ.900 கோடியில் இருந்து ரூ.1,200 கோடி வரை பணம் கைமாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூதாட்டம் நீங்கலாக போட்டிகளுக்கு சில ஆயிரங்களில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டியுள்ளனர். இதுதொடர்பாக விஜயவாடா போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் நூற்றுக் கணக்கான சேவல்கள், அவற்றின் கால்களில் கட்டுவதற்கு பயன் படுத்திய கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர். பலரை கைது செய்துள்ளனர். விஜயவாடா நிகழ்வுகள் விழிகளை விரிய வைத்தது போல், தமிழகத்திலும் அனுமதியின்றி ஆங்காங்கே சூதாட்டத்துடன் கூடிய சேவல் சண்டை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆந்திரா அளவுக்கு கோடிகளாய் அள்ளிக் கொடுக்காவிட்டாலும், இங்கு லட்சங்கள் புரள்கிறது. தென்னந்தோப்பு, மாந்தோப்புகள் என ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் தேர்வு செய்து, போலீசாரின் கண்களில் சிக்காத வகையில் சேவல் சண்டை நடத்துகின்றனர். இதில் பொழுதுபோக்கு மற்றும் சேவலுக்கான பயிற்சிக்காக சண்டை நடத்துபவர்கள் சில நூறு ரூபாய்களில் தொடங்கி, சில ஆயிரம் வரை பந்தய தொகையை நிர்ணயிக்கின்றனர். சில இடங்களில் சில லட்சம் ரூபாய் வரை நிர்ணயித்து பந்தயம் நடத்தப்படுகிறது. தடை விதிக்காத காலங்களில் சேவல் சண்டை என்பது பிரமாண்ட திருவிழா போன்று இருந்தது. போட்டி நடத்தும் கிராம, நகர்ப்புற விழாக்குழுவினர் அழைப்பிதழ் அச்சடித்து ஊர், ஊராய் கொடுப்பதும், ஊரெல்லாம் தோரணம் கட்டி, ஒலி பெருக்கிகளை நாலாபுறமும் ஒலிக்க விடுவதும் என விழாக்கோலமாய் இருந்தது. தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிப்படையான கொண்டாட்டங்கள் இன்றி, சூதாட்டத்தோடு மறைமுகமாய் நடத்தப்பட்டு வருகிறது. சேவல் சண்டை நடத்தலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்தாலும் பழங்காலத்தில் இருந்தே தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கும் இந்த விளையாட்டை முற்றிலும் விட்டுவிட முடியாது தான். அதே நேரத்தில் வன்முறை, சூதாட்டத்துக்கும் இது காரணமாகி விடக்கூடாது. மூவேந்தர்களில் சேரனுக்கு வில் கொடி, சோழனுக்கு புலிகொடி, பாண்டியனுக்கு மீன் கொடி என்ற அடையாளம் இருந்தது. மூவேந்தர்களையும் உள்ளடக்கி, தமிழ்க் கடவுள் முருகனின் கொடியாக சேவல் கொடி அலங்கரிக்கிறது. ஜல்லிக்கட்டு போல் சேவல் சண்டையும் தமிழர்களின் பண்பாட்டோடு தொடர்புடையது. சூதாட்டத்துக்கு இடம் அளிக்காமல், கட்டுப்பாடுகள், உரிய பாதுகாப்புடன் அனுமதி அளித்தால் எங்கோ மறைவில் சட்டவிரோதமாய் நடத்தி, சண்டையிடுவதை தவிர்க்கலாம். பாரம்பரிய விளையாட்டையும் பாதுகாக்கலாம். - கதிர்மாயா

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொட்டில் தேவதைகளை கொண்டாடுவோம்...!

தொட்டில் தேவதைகளை கொண்டாடுவோம்...! வே.வனிதா, டி.ஐ.ஜி, வேலூர் சரகம். இ ன்று (ஜனவரி 24-ந் தேதி) தேசிய பெண் குழந்தைகள் தினம். மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி. ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களைத் தாயாக, சகோதரியாக, அதற்கும் ஒருபடி மேலே போய்த் தெய்வமாகப் பார்க்கப் பண்படுத்தப்பட்ட சமூகம் நம்முடையது. ஆனால் இன்று பெண் குழந்தை என்றாலே முகம் சுழிக்கும் நிலை.கருவிலேயே பெண் குழந்தை என்று தெரிய வந்தால் அந்த பச்சிளம் கருவை கலைக்கும் படு பாதக சம்பவங்களும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இந்த இழி நிலையை மாற்ற வேண்டும் என்று சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டு வந்தாலும் மூடத்தனமும், மூர்க்க குணமும் மாறியதாக தெரியவில்லை. எங்கே தடம் புரண்டோம்? எதனால் தடம் புரண்டோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய நேரம் இது.தமிழ்நாட்டில், மூட நம்பிக்கைகளைக் களைந்த தந்தை பெரியார் போட்ட பாதையில் பீடுநடைபோடுகிற பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் (ஆண்கள் 86.81 சதவீதம்) 73.86 சதவீதமெனில் ஏனைய மாநிலங்களைப்பற்றிக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்தான் எத்தனை? குழந்தை திருமண தடைச்சட்டம், சிறப்பு திருமண சட்டம், மண கொடை அல்லது வரதட்சணை தடைச்சட்டம், இந்திய விவாகரத்து சட்டம்-மகப்பேறு நன்மைகள் சட்டம், கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான தடுப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டம், மகளிர் தம்மை இழிவுபடுத்தி காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், தேசிய பெண்கள் ஆணைய சட்டம், சமமான பணி ஊதிய சட்டம்-இத்தனை சட்டங்களுக்குமான தேவை இருப்பதே பெண் குழந்தைகளின் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது இல்லையா? பெண் இன்றளவும் மண்ணோடும் பொன்னோடும் சேர்ந்த போகப் பொருளாகப் பார்க்கப்படுகிறாள் எனில் நம் சமூகம் கல்வியறிவு பெற்றதனால் பயன் என்ன? ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகையில் ஆணுக்கான முக்கியத்துவம் இன்றும் அதே அளவுதான் உள்ளது. தரமான கல்வி உள்பட எவ்வளவுதான் பெண்கள் படித்து முன்னேறினாலும் கூட மிக எளிதாக அவளது வளர்ச்சியைக் கொச்சைப்படுத்த முடிகிற சமூகம் இன்னும் தேவையா? என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். பாரதி சொல்வான், “கற்பு நெறியென்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்” என்று. ஒழுக்க நெறிஎன்பது ஆண்,பெண் இருபாலருக்கும் முக்கியம். பெண்ணைத் தெய்வமாக்க வேண்டியதில்லை. சக மனுஷியாகப் பார்க்கும் பார்வையை ஆண்கள் பெற வேண்டும். குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் கூட நடை பெறுவதைச் சட்டம் போட்டே தடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் மனதில் வர வேண்டும். பெண் மீதான பாலியல் வன் கொடுமைகள் கட்டவிழ்க்கப்படுவதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உதவுவதைவிட பெண்ணை நுகர்வுப் பண்டமாக மாற்றுவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவது வேதனையான உண்மை. எதற்காக இத்தினம் 2008 ஜனவரி 24-ல் இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா? பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவதற்கு. அப்படியென்றால் இதுவரை அப்படி இல்லையா? என்று கேட்டால் “இல்லை” என்பதே பதிலாக இருக்கும். இது வருந்தத்தக்க உண்மை. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்கள் இளைப்பில்லை என்று அனைத்து துறையிலும் கொடிகட்டி பறக்கின்றனர். பெண் குழந்தைகள் உறவுகளின் மூல உற்று. இல்லறத் தேரின் அச்சாணி. தொட்டில் தேவதைகள். அவர்களை போற்றி கொண்டாடவேண்டும். பெண் நுகர்வுப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட்டால் அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைக் கருத்தில் கொண்டு அவளைத் தோழியாக, மனைவியாகத், தாயாக, சுருங்கச் சொல்வதெனில் சக மனுஷியாக பார்க்கக் கற்றுக்கொள்வோம். கற்றுக் கொடுப்போம். பெண் ஓர் ஆணிடம் வேண்டுவது வேறெதையும் அல்ல. மரியாதையை மட்டுமே.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 23 January 2019

என்ன ஆனது பள்ளி மாணவர் பயண சலுகை?

என்ன ஆனது பள்ளி மாணவர் பயண சலுகை? அ.சவுந்தரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (சி.பி.எம்.) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பயண அட்டையை வழங்காமல் 8 மாதங்களாக போக்குவரத்துக் கழக நிர்வாகம் போக்கு காட்டி வருகிறது. இது தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கும், முறையீடுகளுக்கும் ஏதாவது சாக்குப் போக்குகள் கூறி வந்த நிர்வாகம் இறுதியில் சீருடை அணிந்து வந்தால் டிக்கெட் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு கூறிவிட்டதாக தெரிவித்தது. நிர்வாகத்தின் அக்கறையற்ற அசட்டைப் போக்கு கண்டனத்திற்கு உரியதாகும். 1989-ம் ஆண்டு இந்த மாணவர் இலவச பயணச் சலுகைகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான உதவித் திட்டங்களில் இது மிகவும் முக்கியமான திட்டம். குறிப்பாக கிராமத்து ஏழை எளிய மாணவர்களின் பள்ளிக் கல்வி வளர்ச்சியில் ஒரு முறிப்பை உண்டாக்கிய திட்டம் இது. இதற்கான செலவைக் கல்வித்துறை ஏற்க வேண்டுமே தவிர, போக்குவரத்துக் கழகங்கள் அல்ல. இருந்தாலும் போக்குவரத்துக் கழகங்கள் சற்று உபரி வருமானம் ஈட்டியவரை இந்தக் கட்டண இழப்பை ஏற்றுக்கொண்டன. போக்குவரத்துக் கழகங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்த இலவச பயண திட்டத்திற்கான இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அரசு இப்போதும் அந்த இழப்பை முழுமையாக ஈடுகட்ட முன்வரவில்லை. அதாவது இந்த மாணவர் இலவச பயண வசதியை தொடருவதில் அரசிற்கும் ஒரு அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே உள்ள பல திட்டங்களை நிறுத்த முடியாத நிர்ப்பந்தத்தில் அவற்றை வெட்டுவது, சுருக்குவது, குறைப்பது, தாமதப்படுத்துவது போன்ற பல உத்திகள் கையாளப்படுகின்றன. பொது வினியோக முறை, குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ஐ.சி.டி.எஸ்), சத்துணவு போன்றவற்றோடு மாணவர் இலவச பயண வசதியும் குறி வைக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள் “சிக்கன சீர்திருத்தங்கள்” என்ற நோக்கில் தற்போது மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகள் பயணிகளை கடுமையாக பாதித்து வருகிறது. பஸ் கட்டண உயர்விற்குப் பிறகு படிப்படியாக பல வழித்தடங்களில் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 22 ஆயிரம் அரசுப் பஸ்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 கோடி பேர் பயணம் செய்தனர். இப்போது இது 1 கோடியே 75 லட்சமாக குறைந்து விட்டது. ஒவ்வொரு நாளும் 25 லட்சம் பயணிகள் மாநிலம் முழுவதும் பயணத்தை குறைத்துக் கொண்டனர் அல்லது பயண ஏற்பாட்டை மாற்றிக் கொண்டனர். அரசு இதிலும் உரிய கவலை கொண்டதாகக் தெரியவில்லை. இதனோடு சேர்த்துத்தான் மாணவர் இலவச பயண அட்டை பிரச்சினையைப் பார்க்க வேண்டியுள்ளது. சென்னையில் ஓடிக்கொண்டிருந்த கல்லூரி சிறப்பு பஸ், மகளிர் சிறப்பு பஸ் நடைகள் குறைக்கப்பட்டு விட்டன. இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இலவச மாணவர் பயண அட்டையை ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கிவிடுவார்கள். பஸ் கட்டண உயர்விற்குப் பிறகு இந்த ஆண்டு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்குவது, அனைத்துப் பஸ் டிக்கெட் வழங்குவது, மாணவர் இலவச பயண அட்டை வழங்குவது மூன்றையுமே போக்குவரத்துக் கழகங்கள் நிறுத்தின. இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதில் சின்னச் சின்ன மாறுதல்கள் அரைகுறை மனதோடு செய்யப்பட்டன. அப்படியும் கூட மாணவர் இலவச பயண அட்டை வழங்குவதை கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நிறைவேற்றவில்லை. 2018-19 கல்வியாண்டு முடியப் போகிறது. இப்போது தான் சில கழகங்களில் இலவச பயண அட்டை வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிகாரிகள் நடத்துனர்களுக்கு மனம் போனபடி மாணவர் இலவச பயணம் குறித்த உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கும் நடத்துனர்களுக்கும் சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. சீருடை அணியாத மாணவர்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையைக் காட்டி பயணம் செய்கின்றனர். கல்லூரி மாணவர் விஷயங்களில் இது மோதல்களாகவும் வெடிக்கிறது. சென்றவாரம் பழைய மாமல்லபுரம் சாலை, பெரும்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இலவச பயண விஷயத்தில் மோதல் ஏற்பட்டு வேலை நிறுத்தமாக உருவெடுத்தது. ‘சமுதாய போக்கோடு, லாப நஷ்ட கணக்குப் பார்க்காமல் போக்குவரத்துக் கழகங்களை நடத்துகிறோம் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறினார்’. இது பேச்சளவில்தான் என்பதை நடக்கும் செயல்கள் காட்டுகின்றன. சிக்கனம் என்பது பயணிகளின் வசதியைக் குறைப்பதன் மூலமோ, மாணவர்களின் இலவச பயண வசதியை நெருக்குவதன் மூலமோ நடக்கக்கூடாது. ஊழலை, முறைகேடுகளை, விரயச் செலவுகளை ஒழிக்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசு ஈடுகட்ட வேண்டும். சிக்கனம் என்ற பேரில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடுகிற கல்வித்துறையின் திட்டமும் ஏற்கத்தக்கதல்ல. தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கவே இது பயன்படும். ஏழை, எளியோர் மற்றும் கிராமத்து நலிந்தோருக்கான கல்வித் தேவையில் விளையாடுவது தமிழகத்தின் வளர்ச்சியை பின்னுக்கு இழுப்பதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும். இந்தப் பின்புலத்தில், மாணவர் இலவச பயண வசதியை மறைமுகமாக நடைமுறையில் பறிக்கும் திட்டமிட்ட முயற்சியாகவே பயண அட்டை வழங்குவதில் செய்யும் தாமதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி...!

உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி...! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இன்று (ஜனவரி 23-ந் தேதி) சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். உலகம் போற்றும் உன்னத போராளியான நேதாஜி 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஜானகிநாத் போசுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, பிறந்தார். லண்டனுக்கு சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திரபோசுக்கு வெறுப்புகளை அதிகரித்தது. இதனால் லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். நேதாஜிக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் சந்திப்பு பின்பு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942-ம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகளும் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர்.தாசை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவும் செய்தார். சி.ஆர்.தாஸ் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று ‘சுயாட்சி கட்சியை’ தொடங்கியதோடு மட்டுமல்லாமல் ‘சுயராஜ்ஜியா’ என்ற பத்திரிகையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்புகளையும் ஒப்படைத்தார். 1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நேதாஜி. ரவீந்திரநாத் தாகூர் அவரை அழைத்து பாராட்டு விழா நடத்தியதோடு, நேதாஜி என்ற பட்டத்தையும் வழங்கினார். காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகினார். அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் எனக்கூறி 1940-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு நேதாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த கால கட்டம் அது. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம் எனக் கருதிய நேதாஜி, மாறுவேடம் அணிந்து சிறையில் இருந்து தப்பித்து, பெஷாவர் வழியாக காபூலை அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே ஜெர்மன் தலைநகர் பெர்லினில், ஹிட்லரை சந்தித்து இந்திய சுதந்திரத்தைப்பற்றி அவரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார். ‘சுதந்திர இந்தியா மையம்’ என்ற அமைப்பை தொடங்கிய நேதாஜி, சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல் இந்திய விடுதலை போராட்டத்தை மையப்படுத்தியும், உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒலிபரப்பினார். 1943-ம் ஆண்டுசுதந்திர இந்திய அரசாங்கத்தை சிங்கப்பூரில் அமைத்தார்.பிரதமர் பதவியையும் பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார்.பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். தேசிய அரசாங்கம் புதிய நாணயங்களை வெளியிட்டது. நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன.இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம் ஜான்சி ராணிப்படை என்ற பெயரில் இயங்கியது .இதில் 1,200 பெண்கள் இருந்தனர். இதையடுத்து பர்மாவில் இருந்துகொண்டு இந்திய தேசிய ராணுவ படைமூலம் ஆங்கிலேயரை எதிர்த்தார். இந்தியாவை நிரந்தரமாக அடிமைப்படுத்தி கட்டிக்காக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை, ‘ஜெய்ஹிந்த்’ என்று உரையாற்றினார். 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என்று ஜப்பானிய வானொலி அறிவித்தது. இது இந்திய மக்களை நிலைகுலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவரது மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது. ‘எனக்கு ரத்தம் கொடுங்கள் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்’ எனக் கூறிய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாரத நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, ராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்தியாவில் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துப்பார்த்த அவர் அதில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் அவரது வீரம் என்றும் நினைவு கூரத்தக்கது. - ச.நிசார் அகமது, பெங்களூரு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 22 January 2019

தடம்மாறி போனதா தன்னம்பிக்கை?

தடம்மாறி போனதா தன்னம்பிக்கை? மு.பாலகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர், கொம்மடிக்கோட்டை. “த ன்னம்பிக்கையுடன் சிலரது வரலாறே உலகச் சரித்திரம் ஆகும். ஒரு மனிதனோ, நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனேயே அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. தன்னம்பிக்கை என்பது வாழ்வின் ஒரு அங்கமாகும்” “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்று கூறுவார் திருவள்ளுவர். அதாவது கொக்கைப் போல வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வரும் போது மிக வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். நம் அவ்வைப்பாட்டி “மடக்குத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்கிறார். வாய்ப்புக்காக காத்திருப்பது உணவுக்காக காத்திருக்கும் கொக்கு, மீனைக் கண்டதும் எப்படி வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறதோ அதேபோல் ஒவ்வொருவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து. அவ்வையார் கூறுவது போல் நாம் வாடி இருக்க வேண்டாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். வாடி இருப்பதற்கு நாம் கொக்கு அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேணடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம். ஆபிரகாம் லிங்கன் காணாத தோல்வியா? தாமஸ் ஆல்வா எடிசன் பார்க்காத தோல்வியா? அவ்வளவு ஏன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப் படைத்தாரே தங்க மாரியப்பன் அவர் எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வெற்றிபெற்றார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இன்று சாதனையாளராகியிருக்கிறார் என்றால் அவருடைய விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் தான். இன்று அந்த தன்னம்பிக்கை எங்கே போயிற்று?. “உன்னை நீ பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமையுடையவனாகவே ஆகிவிடுவாய்”. சமீபத்திய நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது தன்னம்பிக்கைகள் தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறதோ? என நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு ஒரு அறையில் நான்கு நண்பர்கள். ஒருவனைத்தேடி ஒருவர் காலை நேரத்தில் வருகிறார். அவர் வரும் நேரத்தில் அந்த ஒருவன் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிடுகிறான். இப்படியே பத்து பதினைந்து நாட்கள் செல்கிறது. ஒரு நாள் அவன் மட்டும் மிகவும் சந்தோஷமா இருக்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கிறான். அன்று இரவு அறைக்குத் திரும்பவில்லை. இவர்களும் எங்கேயாவது சென்றிருப்பான் வந்துவிடுவான் என்று நினைத்தார்கள். அடுத்த நாள் ஒரு போலீஸ்காரர் வந்து மூவரையும் அழைத்துச் செல்கிறார். தேடப்பட்ட அந்த நண்பன் தற்கொலை செய்து இறந்து கிடந்தான். பிரேதப் பரிசோதனை முடிந்து அவனை ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர் அவனுடைய அம்மா சொல்கிறார். ஏம்பா நீங்களாவது அவனிடம் பேசியிருக்கலாமே என்று? அப்போதுதான் மூவருக்கும் தெரிகிறது வீடு கட்டுவதற்காக வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தரமுடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று. இன்னொரு நிகழ்வு நம்மைப் பேரதிர்ச்சி செய்திருக்கிறது. சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரின் தற்கொலை. பல ஆயிரம் பேருடைய வாழ்வில் தன்னம்பிக்கை ஒளியேற்றிய சங்கர் தன் வாழ்வை தற்கொலையாக்கியிருக்கிறார். கல்லூரியில் ராகிங் செய்த பெண்ணையே பதினொரு ஆண்டுகள் காதலித்து, அவளின் உதவியால் 4 வருடங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோல்வியைத் தழுவி அதில் கிடைத்த பாடங்களையும் அனுபவங்களையும் கொண்டு ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்தி பல அதிகாரிகளை உருவாக்கிய ஒரு தன்னம்பிக்கைச் சரித்திரம். தன்னம்பிக்கையின்றி தற்கொலை செய்திருக்கிறது என்றால் எதற்காக?. இதோ அடுத்த தற்கொலை. முதுகுவலிக்கு தற்கொலை. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ? அதுவும் ஆசிரியர். அரசுப்பள்ளி ஆசிரியர். தன் முதுகுவலி தீரவில்லை என்று குடும்பத்திற்கு விஷம் வைத்து தானும் தற்கொலை செய்திருக்கிறார். என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு. அழகான மனைவி. அருமையான இரண்டு குழந்தைகள். அன்பான அம்மா இவர்கள் தான் என் உயிர் அவர்களை எப்படி விட்டுவிட்டு போவது என்று கொன்றிருக்கிறார். அவர்கள் அனுமதியோடு நடந்ததா இல்லை. இவர் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கிறாரா என்பது இனிதான் தெரியும். இங்கேதான் உலகம் எப்படி இருக்கும்? என்றுகூட தெரியாமல் எச்.ஐ.வி பரப்பிவிட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தையும் அந்த அம்மாவும் இந்த உலகில் தானே வாழப்போகிறார்கள். தினம் தினம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைப் பாருங்கள். எத்தனை எத்தனை வியாதி. எவ்வளவு துன்பங்கள். கைகள் இழந்த, கால்கள் இழந்த, பார்வையற்ற, மனநலம் குன்றிய இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள். முதுகுவலிக்காக நடந்த தற்கொலை என்றால் இதைவிடக் கேவலம் வேறோன்றுமில்லை. ஆசிரியரே நீங்கள் தன்னம்பிக்கை இழந்து விட்டு தற்கொலை செய்து கொண்டீர்கள். உங்களை நம்பி வந்த பெண்ணையும் உங்கள் குழந்தையும் உங்களைப் படைத்த அம்மாவையும் ஏன் கொன்றீர்கள்? இது தான் அவர்கள் மேல் வைத்த பாசமா? உண்மையில் இவ்வுலகில் நீங்கள் வாழத் தகுதியில்லாதவர் தான். இந்த மூன்று நிகழ்வுகளும் நம்மை யோசிக்க வைத்திருக்கின்றன. மூன்று நண்பர்களும் அந்த ஒருவனிடம் என்ன பிரச்சினை என்று பேசியிருந்தால் சிக்கல் தீர்ந்திருக்கும். 75 ஆயிரம் ரூபாய் என்பது இந்தக்காலத்தில் பெரிய தொகை இல்லை. மூவரும் ஏற்பாடு செய்திருக்கலாம் இல்லை கடன் வாங்கியவரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கலாம். பேசியிருந்தால் நண்பனைக் கட்டாயம் இழந்திருக்க மாட்டமார்கள். ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நண்பர்களிடமும் வீட்டுப் பெரியவர்களிடமும் பேசியிருந்தால் சிக்கல் அவிழ்ந்திருக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லாமல் உள்ள குடும்பம் ஏது? ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கி விடுகிறதே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில். இருவரும் மனம் விட்டுப் பேசியிருந்தால் கண்டிப்பாக சங்கர் சாகாமல் இருந்திருப்பார். மூன்றாவதாக முதுகுவலிக்கு தற்கொலை செய்த ஆசிரியர். இவரின் தன்னம்பிக்கை தளர்ந்து போக யார் காரணம்? நோயா? நோயின் கொடூரமா? மருத்துவர்களா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா? என்ன பிரச்சினை என்றாலும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை கோழைகளின் ஆயுதம். முட்டாள்கள் தேர்ந்தெடுக்கும் பாதை கோமாளிகள் செய்யும் கோமாளித்தனம். அறிவிலிகள் செய்யும் அலப்பறை. தயவுசெய்து தற்கொலை செய்து கொள்ளா(ல்லா)தீர்கள். தற்கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இருக்கும் நீங்கள் வாழ்ந்துதான் பாருங்களேன். வாழ்க்கை வசமாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன்?

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன்? அ.மாயவன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ-ஜியோ. த ற்போது தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஜாக்டோ-ஜியோ பதாகையின் கீழ் தங்களது நியாயமான 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (22-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குகின்றனர். 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களையவேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும். 2003-2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கவேண்டும். அரசு ஆணை எண் 56-ல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்ப்புக் குழுவினை ஏற்று செய்யவேண்டும். மேலும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசு ஆணை எண்கள் மற்றும் 100, 101 ஆகியவற்றை ரத்து செய்யவேண்டும். 5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடுவதை உடனே கைவிடவேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்யவேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும். கடந்த 56 ஆண்டுகளாக தமிழக ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வந்த ஓய்வூதியத்தை அரசு 1-4-2003-ல் இருந்து ரத்து செய்ததை திரும்ப வழங்க வேண்டும். இது புதிய கோரிக்கை அல்ல. பறிக்கப்பட்ட எங்களுடைய ஜீவாதார, வாழ்வாதார உரிமையை திரும்ப வழங்கவேண்டும் என்றுதான் அரசை வலியுறுத்துகிறோம். ஆரம்பத்தில் ஓய்வூதியம் கவர்னர்களுக்கும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும் வழங்கப்படவில்லை. இப்போது ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்கப்படாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் காலம் காலமாக ஓய்வூதியம் பெற்று வந்தவர்களுக்கு இப்போது ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. இந்த அநீதியை அகற்றக்கோரிதான் எங்கள் போராட்டம் நடக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பறிக்கப்பட்ட ஓய்வூதியத்தை திரும்ப வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார். ஆட்சிக்கு வந்தபிறகு சட்டசபையில் விதி 110-ன் கீழ் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை திரும்ப வழங்குவோம் என்று உறுதி அளித்தார். அதற்கான ஒரு வல்லுனர் குழுவையும் நியமித்தார். ஆனால் அவரது வாக்குறுதியை இன்றைய அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை. இதுவரை ஏராளமான கோரிக்கை மனுக்கள் அளித்துப் பார்த்தும் பலன் இல்லை. 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (22-ந் தேதி) தமிழகத்தில் 14 லட்சம் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்களது போராட்டம் நியாயமான போராட்டம். மாணவர்களின் கல்வி நலன்கள் இதனால் பாதிக்கப்படாது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இப்போது ‘ரிவிஷன்’ மட்டும்தான் நடத்தி வருகிறோம். போராட்டத்துக்கு நாங்கள் காரணம் அல்ல. தமிழக அரசின் மெத்தனப்போக்கும், அலட்சியப்போக்குமே காரணம். எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் வற்புறுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மீது அரசு எவ்வித அடக்கு முறைகளை ஏவிவிட்டாலும், பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஊதியத்தை பிடித்தம் செய்தும், எந்த விதத்திலும் எங்கள் போராட்டத்துக்கு தடை விதித்தாலும் அவை அனைத்தையும் முறியடித்து வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம். இதில் இருந்து பின்வாங்கமாட்டோம். 1985-ம் ஆண்டு ஜாக்டோ போராடியபோது 10 ஆயிரம் ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊதியத்தை பிடித்தம் செய்தனர். 1998-ல் போராடியபோது ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊதியத்தை பிடித்தம் செய்தனர். 2003-ல் நடந்த போராட்டத்தில் டெக்ஸ்மா சட்டத்தை ஏவிவிட்டு வேலை நிறுத்தம் செய்த 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர் - அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். இவற்றை எல்லாம் முறியடித்து கோரிக்கைகளை வென்றெடுத்த மாபெரும் இயக்கம்தான் ஜாக்டோ-ஜியோ இயக்கம். பிறகு வந்த ஆட்சியாளர்கள் மூலம் இழந்த ஊதியத்தை பெற்றோம். பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வைத்தோம். இதுதான் ஜாக்டோ-ஜியோ வரலாறு. அந்த வரலாற்றை மீண்டும் படைக்க வேலை நிறுத்த போராட்ட களம் நோக்கி புறப்படுவோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 21 January 2019

தைப்பூச ஜோதி தரிசனம்.

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ வடலூர் சத்திய ஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம். க.ரமேஷ். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு ராமையா, சின்னம்மை தம்பதியருக்கு பிறந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள். வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும், சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற 2 சகோதரிகளும் இருந்தனர். ஆன்மிக தேடலில் தன்னை கரைத்துக் கொண்ட வள்ளலாருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் தனது சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்து, மனைவியையும் ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார். சிறுவயதில் இருந்தே இறை வனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக்கணக்கான அருட்பாடல் களை அருளியுள்ளார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி னேன் என்று கூறிய அவர் நமக்காக அருளிய பாடல்கள் திருவருட்பா என்று போற்றப்படுகின்றன. ஜீவகாருண்ய நெறிகளையும், வாழ்வியல் தத்துவங்களையும் மக்களுக்கு போதித்தார் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள் ளார் என்பதை உலகுக்கு எடுத் துரைக்கும் வகையில் 1867-ல் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். நமது ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்திய ஞான சபையும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற் சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் 5 படிகளையும் காணலாம். அவற்றை கடந்து உள்ளே சென்றால் சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்கு பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களைக் கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த திரைகளை விலக்கி, கண் ணாடியில் தெரியும் தீபத்தை தரி சிப்பதே ஜோதி தரிசனம் எனப் படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை 1872-ல் தைப்பூச தினத்தில் சத்திய ஞான சபையில் வள்ளலார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூச தினத்தில் மட்டுமே 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் 6 திரைகள் மட்டுமே விலக்கப்படும். 7 வண்ண திரைகளின் தத்துவம் கருப்புத்திரை - மாயையை விலக்கும் (அசுத்த மாயாசக்தி), நீலத்திரை - உயர்ந்த நோக்கத் துக்கு ஏற்படும் தடையை விலக் கும் (சுத்த மாயாசக்தி), பச்சைத் திரை - உயிர்களிடம் அன்பு, கரு ணையை உண்டாக்கும் (கிரியா சக்தி), சிவப்புத்திரை - உணர்வு களை சீராக்கும் (பராசக்தி), பொன் னிறத்திரை - ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும் (இச்சாசக்தி), வெள்ளைத்திரை - ஞானசக்தி, 6 வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும் (ஆதிசக்தி). நமது பவுதிக உடலில் இருக் கும் உயிரை ஆன்மா என்று அழைக் கிறோம். நமது உடல் அணுக்களால் ஆனது. இது மிகவும் பிரகாசம் உடையது. கால்பங்கு பொன் நிற மும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் கொண்டது. இந்த ஆன்மா பிரகாசத்தை மாயா சக்திகளான 7 திரைகள் மறைக்கின்றன. அந்த திரைகளை நீக்கினால் நாம் முழுமையான ஞானம் பெற முடியும். இந்த தத்துவத்தைத்தான் ஞானசபையில் 7 திரைகளை நீக்கிய பிறகு ஜோதியை தரிசிக்கும் நிகழ்ச்சி உணர்த்துகிறது. மேலும், ஏழை எளிய மக்கள் பசியை போக்க சத்திய ஞான சபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார். இந்த தர்ம சாலையில் அடுப்பு அணையாமல் அன்று முதல் இன்று வரை 3 வேலையும் அன்னதானம் வழங்கப்பட்டு வரு கிறது. ‘‘கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்; புலால் உண்ணக் கூடாது; எந்த உயிரையும் கொல்லக் கூடாது; சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது; இறந்தவர்களை எரிக்கக் கூடாது; சமாதி வைத்தல் வேண்டும்; எதிலும் பொது நோக்கம் வேண்டும்; பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; சிறு தெய்வ வழிபாடு, அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது; உயிர்களை துன்புறுத்தக்கூடாது; மதவெறி கூடாது’’ ஆகியவை வள்ளலாரின் கொள்கைகளாகும். நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எவ்வாறு அழியாத தேகத்தை பெற்று நித்ய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியை கண்டறிந்தார் வள்ளலார். தாம் கண்டு அடைந்த வழியை நாம் எல்லோரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இப்படி வாழ்ந்த வள்ளலார் வடலூர் அருகில் உள்ள மேட்டுக் குப்பத்தில் சித்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழாவாக வெகு விமரி சையாக கொண்டாடப்படுகிறது. இதன்படி வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச தினத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. ஜோதி காட்டப்படும் நேரங்கள் இன்று (ஜன.21) தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (ஜன.22) காலை 5.30 மணி 7 திரைகள் விலக்கி ஜோதி காட்டப்படும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது. உயிர்களிடம் அன்பு செய்; பசி போக்கு; தயவு காட்டு; மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் சிந்தனைகளும், கண்ணோட்டமும் பரவினால் மனித மனங்களும், அதனால் உலகும் செழுமையடையும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீடித்த வாழ்வுக்கு நீராகாரம்

நீடித்த வாழ்வுக்கு நீராகாரம் இ ன்றைய எந்திர யுகத்தில் மனிதனுக்கு உதவி புரியும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப, நோய்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. புற்றீசல்போல் பெருகி வரும் நோய்களை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகள் கண்டுபிடித்தபோதிலும் மனிதனின் ஆயுள் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தோம் என்றால் 80 அல்லது 90 வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. 90 வயது முதியவர் கூட இளமை துடிப்புடன் சுறுசுறுப்புடன் இயங்கினார். ஆனால் இன்றோ ஒருவர் 65 வயதை நெருங்கி விட்டாலே, ஏன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை உள்ளது. எங்கும், எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் கைக்கு வந்துவிட்டபோதிலும், எந்த ஒரு நோய்களையும் தீர்க்கும் வகையில் மருத்துவ உலகம் வளர்ந்த போதிலும் மனிதனின் ஆயுட்காலம் ஏன் குறைந்து வருகிறது? தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் மட்டுமே மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயித்து விட முடியாது. அந்த காலத்தில் இதுபோன்ற மருத்துவ வசதிகளும், தொழில்நுட்பமுமா இருந்தது? ஆனால் அப்போது நமது முன்னோர்கள் 90 வயது வரை திடகாத்திரத்துடன் வாழ்ந்தார்களே? அது எப்படி? இந்த கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் உள்ளது? என கேட்டால் அது உணவுதான். ஏனெனில் நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவுதான் அவர்களை நீண்ட காலம் வாழ வைத்தது. எல்லாமே ஆரோக்கியம் மிகுந்த, உடலுக்கு சத்துகளை புகுத்தக்கூடிய உணவுகள். இப்போது கிராமங்களில் திடகாத்திரமாக வாழும் 90 வயது முதியவர்களிடம், உங்களது ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று கேளுங்கள். நாங்கள் சாப்பிட்ட உணவுதான் என்ற பதில் கிடைக்கும். முதியவர்களின் ஆயுளில் பங்கெடுத்த ஒரு உணவு என்றால் அது நீராகாரம்தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் என்னும் நிசித்தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சி, குளிர்ச்சி தரும் ஒரு அமிர்தமாகும். முதல் நாள் இரவில் சமைத்த சாதத்தை ஒரு பிடி குவளையில் போட்டு வேண்டிய அளவு தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் காலையில் அதனால் உருவான பழைய சோற்றுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் அதனால் கிடைக்கும் சுவையே தனி. ருசித்து பார்த்தவர்கள்தான் இதனை உணர முடியும். நீராகாரத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12 போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. பழைய சாதத்தை சாப்பிடுவதால், நீராகாரத்தை அருந்துவதால் கைகால், இடுப்பு, மூட்டு வலிகள் போன்ற வாத நோய்கள் நம்மை நெருங்குவதற்கே அஞ்சும். மேலும், அஜீரணம், வாந்தி, பித்த மயக்கம், வாயில் ருசி தெரியாமை, பசி எடுக்காமை, மயக்கம் போன்ற நோய்களிடம் இருந்தும் விலகி இருக்க முடியும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது. இதுமட்டுமின்றி நுங்கு, பதநீர், கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற பாரம்பரிய உணவுகளையும் இன்று நாகரிகம் என்ற பெயரில் பெரும்பாலானோர் தொடுவதே இல்லை. இத்தகைய நன்மைகள் நிறைந்த மகத்துவம் மிகுந்த இந்த உணவை பெரும்பாலும் நாம் மறந்து விட்டோம் என்பதுதான் வேதனை. தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்த இந்த உணவுக்கு வேட்டு வைத்தது வெள்ளையர்கள் என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இன்று நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட தேநீரை கட்டாயப்படுத்தி நம்மிடையே திணித்தது ஆங்கிலேயர்கள்தான். உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக கூறி ஒரு நாளில் கணக்கில்லாமல் தேநீரை அருந்துகிறோம். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேநீருக்கு மேல் குடிக்கும்போது பசி எடுப்பதே தெரியாமல் போகிறது. தேநீர் குடிப்பதால் அதிக உடல் எடை, சொத்தை பற்களில் ஏற்படும் தொந்தரவுகள் என சில தொந்தரவுகள் குறையும் என கூறப்பட்டாலும், வாயுத்தொல்லைகள், பித்த மயக்கம், இதயக்கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்புகள், தூக்க கெடுதல் போன்றவை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தேநீரில் பால் சேர்த்தும், சேர்க்காமலும் குடிக்கின்றனர். இதில் எது சரியான முறை என்கிற ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. தேநீர் மட்டுமில்லாது இன்றைய தலைமுறையினர் கைக்கு கிடைக்கும் பலவித பானங்களையும் அது எந்தவித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் அருந்தி வருகின்றனர். அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நினைத்தவுடன் எளிதில் கிடைக்கும் துரித உணவுகளும், குளிர்பானங்களும் உடலுக்கு எவ்வித நன்மையும் கொண்டு வரப்போவதில்லை. எனவே நமக்கு அதிக செலவு ஏற்படுத்தாமல், உடலுக்கு வலுவூட்டக்கூடிய பாரம்பரிய உணவுகளின் பக்கம் மீண்டும் திரும்புவோம். - செந்தமிழ்க்கூத்தன், மரபு வழி சித்த மருத்துவர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது சேவியர் வீ ட்டை விட்டு வெளியே கிளம்பும் போது ஒரு தடவைக்கு நாலு தடவை பூட்டை இழுத்துப்பார்த்து, கதவைத் தள்ளிப்பார்த்து எல்லாம் பத்திரமாய் இருக்கிறது என திருப்தியடைந்து கிளம்புகிறோம். வீடு பத்திரமாய் இருக்கலாம், ஆனால் வெளியே கிளம்பும் நாம் பத்திரமாய் இருக்கிறோமா? என்றால் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் தொழில்நுட்பம் என்னும் மூன்றாவது கண் நம்மை கண்காணித்து கொண்டே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்போன் பயன்படுத்துவது நமது வசதிக்கான ஒன்றாகவே இருந்தது. ஆனால் இன்று செல்போன் பயன்படுத்துவது நிறுவனங்களின் வளர்ச்சிக்காக என மாறிப் போய்விட்டது. நாம் எங்கே செல்கிறோம்? என்ன செய்கிறோம்? எதை செய்யாமல் விடுகிறோம்? என்பதையும் செல்போன் டிஜிட்டல் தகவல்களாக எங்கெங்கோ அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஒரு நேரலை கிரிக்கெட் வர்ணனையைப் போல நம்மைப் பற்றிய தகவல்கள் சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் தான் நிறுவனங்களின் பணம் காய்க்கும் மரம். இவரிடம் என்ன விற்கலாம்? என்ன பேசலாம்? இவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? என்பதையெல்லாம் இந்த தகவல்களைக் கொண்டு தான் கணிக்கிறார்கள். அதற்காக இருப்பவை தான் பிக்டேட்டா அனாலிடிக்ஸ், அதற்கான அல்காரிதங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம். பொதுவாக நிறுவனங்கள் இவற்றையெல்லாம் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்காகவும், விற்பனை வளர்ச்சிக்காகவும் தான் பயன்படுத்துகின் றன. ஆனால் இந்த தகவல் திருடப்பட்டால் நமது உடைமைகளுக்கோ, உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? எனும் அச்சம் வெகு நியாயமானது. செல்போன்களே நமக்கு பெரும்பாலான பரிவர்த்தனைகளை நிறைவேற்றித் தருகின்றன. பே.டி.எம் ஆகவோ, வங்கிக் கணக்குகளாகவோ, கூகிள் பே ஆகவோ ஏதோ ஒரு வடிவத்தில் நமது தகவல்களெல்லாம் ஸ்மார்ட்போன் வழியாகத் தான் பயணமாகின்றன. இந்தத் தகவல்களை நாம் பயன்படுத்தும் செயலிகளோ(ஆப்), இணைய சேவை வழங்கும் நிறுவனங்களோ, செல்போன் நிறுவனங்களோ திருடிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மால்வேர்கள், வாட்ஸ்-அப் மெசேஜ்களாகவோ, மின்னஞ்சல் இணைப்புகள் மூலமாகவோ செல்போனின் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கின்றன. நம்பிக்கையில்லாத இணைப்புகளை (லிங்க்களை) ஒரே ஒருமுறை கிளிக் செய்து விட்டால் கூட நமது விவரங்கள் தொலைந்து போக வாய்ப்பு உண்டு. இலவச வைபை அல்லது பொது இடங்களில் கிடைக்கின்ற கட்டண வைபைக்கள் பாதுகாப்பற்றவை. செல்போனை அத்தகைய வைபையில் இணைத்தால் போனில் இருக்கும் மொத்த தகவலையும் பறிகொடுக்க நேரிடலாம். செல்போனில் இருப்பிடத்தை (லொக்கேஷன்) அறிய பயன்படுத்தும் செயலி நாம் எங்கே இருக்கிறோம்? என்பதை துல்லியமாக பதிவு செய்கிறது. லொக்கேஷனை ஆப் பண்ணினால் என்ன பிரச்சினை? என நினைப்பீர்கள். அது தான் இல்லை. இப்போது நமது இருப்பிடத்தை அதற்கான செயலி மட்டுமே கண்டுபிடிப்பதில்லை. ஆஸிலரோ மீட்டர், பாரோ மீட்டர், மேக்னடோமீட்டர் உட்பட பல சென்சார்களும் செல்போனின் இருப்பிடத்தைத் துல்லியமாய் கண்டு சொல்கின்றன. அதே போல பதிவிறக்கம் செய்யும் செயலிகள்(ஆப்) மிகப்பெரிய ஆபத்தின் திறவுகோலாய் இருக்க வாய்ப்பு உண்டு. செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அது கேட்கின்ற அனுமதிகளுக்கெல்லாம் ‘ஓகே’ கொடுத்து விடுகிறோம். நமது தொடர்புகள் (காண்டாட்க்) கேமரா போன்றவற்றை இயக்கும் அனுமதியை நாமாகவே கொடுத்து விடுகிறோம். அது போலியான அல்லது பாதுகாப்பற்ற செயலியாக ஆக இருக்கும் பட்சத்தில் தகவல்கள் மிக மிக எளிதாக திருடப்பட்டு விடுகின்றன. இப்போது சில புதிய திடுக்கிட வைக்கும் தனிமனித சுதந்திர மீறல்கள் வந்திருக்கின்றன. அதில் ஒன்று கேமரா ஹேக்கிங். செல்போனில் உள்ள கேமராவையோ, கணினியில் உள்ள வெப்கேமையோ தொலைவிலிருந்தே இயக்குவது. கேமரா இயங்கிக் கொண்டிருப்பது, நமக்குத் தெரியாது. செல்போன் கேமரா காட்டுகின்ற விஷயங்களையெல்லாம் தொலைவிலுள்ள சேமிப்பு தளங்களில் சேமிக்கப்படும். அது எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம். இன்னொன்று செல்போனில் உள்ள மைக்ரோபோன் மூலமாக நேர்கிறது. நமது உரையாடல்கள் நமக்குத் தெரியாமலேயே காதுகொடுத்துக் கேட்கப்பட்டு இன்னொரு இடத்துக்கு அனுப்பப்படும் ஆபத்து அது. போனில் பேசுவது மட்டுமல்லாமல், போனை ஆன் பண்ணாமல் பேசுவதைக் கூட ரகசியமாய் ஒட்டுக்கேட்கும் ஆபத்தும் இதில் உண்டு. கூகிள் ஹோம், அலெக்ஸா, சிரி போன்றவையெல்லாம் எப்போதுமே நமது உரையாடல்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பது நினைவில் இருக்கட்டும். ஏற்கனவே ஒருவர் இன்னொருவரிடம் பேசுவதை பதிவு (ரெக்கார்ட்) செய்யும் வசதிகள் இருக்கின்றன. செல்போன் நிறுவனங்களோ, செயலிகளோ, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களோ நினைத்தால் யாருடைய பேச்சை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். அதே போல நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள் (சாட்), மின்னஞ்சல்கள் எல்லாமே தொழில்நுட்பத்தின் கண்களால் வாசிக்கப்பட்ட பின்பு தான் அடுத்த நபருக்குச் சென்று சேர்கிறது. நமது புகைப்படத்தை வைத்து அது எங்கே? எப்போது? எடுக்கப்பட்டது போன்ற தகவல்களையெல்லாம் தொழில்நுட்பம் எளிதில் கறந்து விடுகிறது. நவீன செல்போன்களில் நமது கை அசைவையும், கண் அசைவையும் கண்காணிக்கும் சென்சார்கள் இருக்கின்றன. எந்த மாடியில் இருக்கிறோம் என்பதைக் கூட பாரோ மீட்டர் எனும் சென்சார் அனுப்பும் செய்தியால் அறிய முடியும். சென்சார்களுக்கென செயலி தனி அனுமதி கேட்பதில்லை. எனவே எந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலும் இந்த சென்சார்கள் அதனுடன் இணைந்து கொள்ளும். செல்போனில் டைப் செய்யும் விஷயங்களைத் திருடவும், பாஸ்வேர்ட் போன்றவற்றை கண்டறியவும் கூட மென்பொருட்கள் உள்ளன. வெறுமனே மொபைலில் டைப் செய்து விட்டு டெலீட் செய்தால் கூட, எதையெல்லாம் டைப் செய்தோம் எதையெல்லாம் டெலீட் செய்தோம் என்பதையும் தொழில்நுட்பம் குறித்து வைத்துக் கொள்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடன் கூடவே இருந்து உங்களைப் பற்றிய அத்தனைத் தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கின்றன ஸ்மார்ட்போன்களும், அதனுடன் இணைந்த நவீன தொழில்நுட்பங்களும். இந்த சூழலில் பாதுகாப்பாய் இருப்பது எப்படி? என்ற கேள்வி கட்டாயம் எழ வேண்டும். செல்போன்களை அங்கும், இங்கும் வைத்துச் செல்லாதீர்கள். பாதுகாப்பாய் வைத்திருங்கள். அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள். புளூடூத், வைபை போன்றவற்றை தேவையற்ற நேரங்களில் ஆப் செய்தே வைத்திருங்கள். மிக மிக அவசியமான செயலிகள் மட்டும் உங்களிடம் இருக்கட்டும். அதுவும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலிருந்து மட்டும் தரவிறக்கம் செய்யுங்கள். சந்தேகத்துக்கு இடமான எந்த ஒரு இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்யாதீர்கள். செல்போனுக்கு கடினமான பாஸ்வேர்ட் போட்டு மூடி வையுங்கள். செயலிகளை பயன்படுத்தியபின் அதில் இருந்து முறையாக வெளியேறு(எக்ஸிட்) செய்யுங்கள். பொது வைபைகளில் இணைய வேண்டிய கட்டாயமான சூழல் வந்தாலும் பண பரிவர்த்தனைகள் நடத்தாதீர்கள். ஆட்டோ லாகின் வசதியை ஆன் செய்யாதீர்கள். என்கிரிப்ஷன் வசதி இருக்கின்ற செல்போனில் அதைப் பயன்படுத்துங்கள். செல்போனில் ஓஎஸ் அப்டேட்களை உடனுக்குடன் நிறுவுங்கள். ஒரு நல்ல வைரஸ் தடுப்பு செயலியை(ஆன் டி வைரஸ் ஆப்) பயன்படுத்துங்கள். தொலைவில் இருந்தே செல்போனில் உள்ளவற்றை அழிக்கும் ‘ரிமோட் வைப்’ ஆப்ஷனைப் பயன்படுத்துங்கள். பழைய செல்போனை முடிந்தமட்டும் விற்காமல் இருங்கள், அப்படி விற்கவேண்டிய சூழல் வந்தாலும் மெமரி கார்டு, சிம்கார்டு, இண்டர்னல் மெமரி அனைத்தையும் பார்மேட் செய்யுங்கள். இன்றைய உலகில் செல்போன், தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் அதை பயன்படுத்தும் முறைகளில்தான் நமது பாதுகாப்பு அடங்கி இருக்கிறது. எனவே செல்போன்களை, புதிய தொழில்நுட்பங்களை மிகவும் கவனமாக கையாளுங்கள். இதுபோன்ற தொல்லைகளில் இருந்து விடுபடுங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts