Friday 25 January 2019

மது இல்லா தமிழகம் மலருமா?

மது இல்லா தமிழகம் மலருமா? கோ டியில் புரளும் செல்வந்தனையும், அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் தெருக்கோடியில் தவிக்கும் பரம ஏழையையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது மதுபானம். இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் தலைவிதியையே மதுபானம் மாற்றி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. சந்தோஷத்தை கொண்டாடும் உற்சாக பானமாகவும், துக்கத்தை மறக்க செய்யும் மாமருந்தாகவும் மதுபானத்தை கருதும் அவலநிலையில் இளைஞர்கள் உள்ளனர். பணம் செய்யாததை மதுபானம் செய்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. உதாரணமாக ரூ.500 கொடுத்து செய்யக்கூடிய வேலையை, ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்தால் செய்து முடிக்கும் மனநிலை குடிமகன்களுக்கு வந்துவிட்டது. மது பிரியர்கள் என்பதை காட்டிலும், மது அடிமைகளாக பலர் உள்ளனர். ஒரு நாள் கூட தங்களால் மதுபானம் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு இளைஞர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர். ‘எப்போது மதுபானம் கிடைக்கும்? என்று மதுக்கடை வாசலில் காத்திருந்து வாங்கி செல்வோர் இருக்கின்றனர். இவர்கள் ‘டாஸ்மாக் ஓப்பனர்’ என்று அழைக்கப்படுகின்றனர். மது அடிமை பட்டியலில் இடம் பிடிப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால், ஆணுக்கு நிகராக சில பெண்களும் மதுபோதையில் மிதக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் 70 சதவீதம் பேர் மதுபானம் குடிக்கின்றனர். இதேநிலை நீடித்தால் மது குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணும் நிலை வந்து விடும். முன்பெல்லாம் பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது, மாப்பிள்ளை குடிக்கக்கூடாது என்று பெற்றோர் நினைத்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. குடிக்காத மாப்பிள்ளை கிடைப்பது அரிதாகி விட்டது. இதனால் விசேஷம் மற்றும் திருவிழா காலத்தில் மட்டும் மதுபானம் குடிப்பவர் என்று தெரிந்தும் கூட பெண்ணை மணம் முடித்து வைக்கின்றனர். மதுபானம் தன்னை அழிப்பது மட்டுமின்றி, தன்னை சார்ந்தவர்களையும் நடை பிணமாக்கி விடுகிறது. ஒருவர் மதுவுக்கு அடிமையாகி விட்டால், ஒட்டுமொத்த குடும்பமே நடுவீதிக்கு வந்து விடுகிறது. அவமானத்தால் கூனி குறுகி போய் விடுகின்றனர். தினமும் மரண வேதனையை அனுபவிக்கின்றனர். மதுப்பழக்கத்தினால் கணவனை இழந்து விதவைகளாகவும், தந்தையை இழந்து அனாதைகளான குழந்தைகளும் பலர் உள்ளனர். உடலையும், உள்ளத்தையும் பாதிக்கக்கூடியது மதுபானம். உடலில் நச்சுப்பொருட்களை வெளியேற்றும் கல்லீரலை மதுபானம் செயலிழக்க செய்து விடுகிறது. நரம்பு மண்டலம், சிறுமூளையின் செயல்பாட்டை முடக்கி விடுகிறது. உடல், உள்ளம், குடும்பம், சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் மதுபானத்தை விட்டு மீள முடியாமல் பலர் தவித்து கொண்டிருக்கின்றனர். மது பிரியர்களை கூட மாற்றி விடலாம். ஆனால் மது அடிமைகளை கரை சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. திருந்தாத குடிமகன்களால் ஒவ்வொரு நாளும் அவர்களது குடும்பத்தினர் திண்டாடி கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கொண்டாடிய போகி, பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள 5,140 டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது. கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது வருமானமா? அவமானமா? என்று தெரியவில்லை. சாதனையா? வேதனையா? என்று திக்கு தெரியாமல் தமிழகம் திணறி கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் மதுவோடு மல்லுக்கட்டும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுவார்கள். மதுபானம் குடிக்காத இளைஞர்களை பார்ப்பது அரிதாகி விடும். சமுதாயத்தின் அனைத்து தீமைகளுக்கும் வேரான மதுபானத்தை, அறுத்து எறிய வேண்டியது அவசியமாகி விட்டது. இது, ஒரே நாளில் சாத்தியமில்லை. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக மதுபிரியர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க முடியும். முதலில், ஒரு தாலுகாவுக்கு 3 அல்லது 4 கடைகள் என நிர்ணயம் செய்து, அதனை மூட வேண்டும். இதேபோல் தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான, நோய் நொடியில்லாத, குற்றமற்ற ஒரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்க முடியும். மது இல்லாத தமிழகம் மலர்ந்தால், அதன் மணம் உலகம் முழுவதும் பரவும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம் வளமானதாக மாறும். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். -தாமிரன்.

No comments:

Popular Posts