Friday 25 January 2019

ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்.

ஓட்டுரிமையை விற்காதீர்...! நீடாமங்கலம் கோபாலசாமி, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர். இ ன்று (ஜனவரி 25-ந் தேதி) தேசிய வாக்காளர் தினம். நம் நாடு 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. மக்களால் மக்களுக்காகவே ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க தீர்மானித்து அதற்கான அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு நாடானது. மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க அதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. தேர்தலை முன்னின்று நடத்துவதற்காக அரசியல் சாசனத்தின் பிரிவுகளின் மூலம் அந்த பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. அந்த தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி பொறுப்பு ஏற்றது. அந்த நாளை வாக்காளர் தினமாக 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. இதில் படிப்பறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. இருந்தபோதிலும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரையும் ஒன்றாகக் கருதி படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் ஓட்டளிக்கும் உரிமையை அளிக்க தீர்மானித்த அன்றைய நம் தலைவர்களை பாராட்டியே ஆகவேண்டும். பல மேலை நாடுகளில் இந்த உரிமை நீண்ட காலம் படித்தவர்களுக்கும், நிலச்சுவான்தார்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற முறையை முதன் முதலாய் அமல் செய்த நாடாளுமன்றங்களின் தாய் என்று புகழ் பெற்ற இங்கிலாந்திலேயே பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னரே 1920-ல்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இந்த புரட்சிகரமான செயலை மேலை நாடுகள் வரவேற்கவில்லை என்பது மட்டுமல்லாமல், இதனால் நாடே சின்னாபின்னமாகி சிதறிப்போகும் என்று எச்சரித்தபோதிலும் நம் தலைவர்கள் உறுதிமாறவில்லை. படிப்பறிவில்லாவிட்டாலும் நாட்டுக்கு நன்மை, தீமை எவை என்று உணரும் பகுத்தறிவு நம் மக்களிடையே இருக்கிறது என்ற நம்பிக்கையின் பேரில் எல்லோருக்கும் ஓட்டுரிமை என்ற சித்தாந்தத்தை நம் தலைவர்கள் அமல்படுத்தினர். இதுவரை நம் நாடு 16 முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களையும், மாகாணங்களுக்காக சற்றேறக்குறைய 400 தேர்தல்களையும் சந்தித்து இருக்கிறது. சில குறைகள் இருப்பினும் மக்கள் தங்கள் கடமையை சரிவர ஆற்றியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். 1984-ம் ஆண்டு முதல் 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் ஓட்டுரிமை பெற தகுதி உள்ளவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை. ஓட்டுரிமை பெறத் தகுதி பெற்றாலும் அதை பயன்படுத்த, அதற்குரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அந்த சட்டப்படி வாக்காளர் பட்டியலில் எவருடைய பெயர் சேர்க்கப்பட்டதோ, அவர்களே வாக்குரிமையை பயன்படுத்த தகுதி உள்ளவர் ஆவர். வாக்காளர் பட்டியலைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இருந்தபோதிலும் குடிமக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட செயல்பட வேண்டும். பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்கும், இடம் பெயர்ந்தால் புதிய இடத்தில் மறு பதிவு செய்வதற்கும் வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் வரையிலான 4 மாதங்களில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் செய்யப்படுகின்றன. வருடத்தில் எந்த சமயத்திலும் பட்டியலில் பெயர் சேர்க்கும் வகையில் விண்ணப்பிக்கலாம். இருந்தபோதிலும் செப்டம்பர் - டிசம்பர் மாதங்களில்தான் இந்தப்பணிகள் முழுமையாகச் செய்யப்படுகின்றன. இந்தச் சமயத்தில் முதலில் வெளியிடப்படும் வரைவுப் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா? என்று வாக்காளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே வாக்குப்பதிவு தினத்தில் வாக்களிக்க உரிமை இருக்கிறது என்று நினைப்பது தவறு. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க இயலும் என்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெயர் சேர்க்கவோ அல்லது இடம் மாறி இருந்தால் அதன்படி மாறுதல் செய்யும் விண்ணப்பம் செய்யவேண்டும். ஆணையத்தின் இணைய தளம் மூலமாகவும், ஆணையம் உருவாக்கி இருக்கும் எஸ்.சி.எஸ்.டி. என்ற செயலியின் மூலமாகவும் பெயர் இருப்பதை உறுதி செய்யவும். இல்லை என்றால் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த ஆண்டு வாக்காளர் தினத்தை இளைய சமுதாய வாக்காளர் தினமாக ஆணையம் அறிவித்து இருக்கிறது. ஆற்றல் கொண்ட கைப்பேசிகளை உபயோகிக்கும் இளைய சமுதாயத்தினர் தங்கள் விவரங்களை சரிபார்ப்பதோடு மட்டும் அல்லாமல் உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களின் விவரங்களையும் சரிபார்த்து கொடுத்து ஒரு நல்ல குடிமகனாக உங்களால் இயன்ற உதவி செய்யலாம். உங்கள் கடமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதோடு மட்டும் முடிந்துவிடாது. முக்கியமான கடமையில் அது ஒரு முதல்படி மட்டுமே ஆகும். வாக்களிப்பதை ஒரு ஜனநாயக கடமையைக் கருதி உங்கள் தொகுதியில் என்று வாக்களிப்பு நடைபெறுகிறதோ அன்று தவறாமல் உங்கள் வாக்கை அளிப்பதோடு, மற்றவர்களையும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்யத் தூண்டவேண்டும். சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள் பங்களிப்பு உன்னதமானது என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணரவேண்டும். 5 ஆண்டுக்கொருமுறை உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதை பயன்படுத்தவில்லை என்றால் மக்களின் பிரதிநிதியாகச் சரியான நபரை தேர்ந்தெடுக்காமல் போகக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்கும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதே என்பதை உணரவேண்டும். வேட்பாளரின் தகுதி விவரங்களை அவர்கள் வெளியிடவேண்டும் என்ற கட்டாயம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அமல் செய்யப்படுகிறது. அந்த விவரங்களை அறிந்துகொண்டு குற்றப்பின்னணி இல்லாதவராகவும், நேர்மையானவராகவும் உள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால் நாடு நலம் பெறும். அந்தக் கடமையைச் செய்யத் தவறினால் நாட்டின் முன்னேற்றத்தை தடை செய்ய நாமும் உடந்தை ஆகிறோம் என்ற சமூகச் சிந்தனையோடு எல்லா வாக்காளர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக நகர்ப்புறங்களில் வசிப்போர் ஓட்டுச்சாவடிக்கு செல்வதில் உற்சாகம் காட்டுவதில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த வாய்ப்பை உதறிவிட்டவர்களுக்கு, ஆட்சியில் தவறுகள் நடந்தால் அதைச் சுட்டிக்காட்ட உரிமை இல்லை என்றே கருத வேண்டியது வரும். தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் பரவி வருகிறது. இதனால் தமிழனுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டு இருக்கிறது. இதில் இருந்து தமிழகம் மீளவேண்டும். அதற்கு வாக்காளர்கள் விழிப்புணர்வும், தன்மான உணர்ச்சியுமே கைகொடுக்கும். அரசியல் கட்சி வேட்பாளர் யாரும் தங்கள் கையில் இருந்து பணத்தை கொடுப்பது இல்லை. அவர்கள் மக்கள் பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் திருப்பி கொடுக்கிறார்கள். அதாவது 100 ரூபாயில் ஒரு ரூபாய்தான் கொடுக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் கொடுப்பது 20 காசுக்குதான் சமம். அந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு நமது சந்ததியினரையும், எதிர்காலத்தையும் அடமானம் வைத்து விடுகிறோம். இதுகுறித்து விழிப்புணர்ச்சியுடன் இருந்து பணம் வாங்கமாட்டோம் என்று சபதம் ஏற்கவேண்டும். நாட்டின் எதிர்காலம் நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று இந்த வாக்காளர் தினத்தில் உறுதிமொழி ஏற்போம்...!

No comments:

Popular Posts