Tuesday, 22 January 2019

தடம்மாறி போனதா தன்னம்பிக்கை?

தடம்மாறி போனதா தன்னம்பிக்கை? மு.பாலகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர், கொம்மடிக்கோட்டை. “த ன்னம்பிக்கையுடன் சிலரது வரலாறே உலகச் சரித்திரம் ஆகும். ஒரு மனிதனோ, நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனேயே அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. தன்னம்பிக்கை என்பது வாழ்வின் ஒரு அங்கமாகும்” “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்று கூறுவார் திருவள்ளுவர். அதாவது கொக்கைப் போல வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வரும் போது மிக வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். நம் அவ்வைப்பாட்டி “மடக்குத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்கிறார். வாய்ப்புக்காக காத்திருப்பது உணவுக்காக காத்திருக்கும் கொக்கு, மீனைக் கண்டதும் எப்படி வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறதோ அதேபோல் ஒவ்வொருவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து. அவ்வையார் கூறுவது போல் நாம் வாடி இருக்க வேண்டாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். வாடி இருப்பதற்கு நாம் கொக்கு அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேணடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம். ஆபிரகாம் லிங்கன் காணாத தோல்வியா? தாமஸ் ஆல்வா எடிசன் பார்க்காத தோல்வியா? அவ்வளவு ஏன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப் படைத்தாரே தங்க மாரியப்பன் அவர் எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வெற்றிபெற்றார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இன்று சாதனையாளராகியிருக்கிறார் என்றால் அவருடைய விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் தான். இன்று அந்த தன்னம்பிக்கை எங்கே போயிற்று?. “உன்னை நீ பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமையுடையவனாகவே ஆகிவிடுவாய்”. சமீபத்திய நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது தன்னம்பிக்கைகள் தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறதோ? என நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு ஒரு அறையில் நான்கு நண்பர்கள். ஒருவனைத்தேடி ஒருவர் காலை நேரத்தில் வருகிறார். அவர் வரும் நேரத்தில் அந்த ஒருவன் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிடுகிறான். இப்படியே பத்து பதினைந்து நாட்கள் செல்கிறது. ஒரு நாள் அவன் மட்டும் மிகவும் சந்தோஷமா இருக்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கிறான். அன்று இரவு அறைக்குத் திரும்பவில்லை. இவர்களும் எங்கேயாவது சென்றிருப்பான் வந்துவிடுவான் என்று நினைத்தார்கள். அடுத்த நாள் ஒரு போலீஸ்காரர் வந்து மூவரையும் அழைத்துச் செல்கிறார். தேடப்பட்ட அந்த நண்பன் தற்கொலை செய்து இறந்து கிடந்தான். பிரேதப் பரிசோதனை முடிந்து அவனை ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர் அவனுடைய அம்மா சொல்கிறார். ஏம்பா நீங்களாவது அவனிடம் பேசியிருக்கலாமே என்று? அப்போதுதான் மூவருக்கும் தெரிகிறது வீடு கட்டுவதற்காக வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தரமுடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று. இன்னொரு நிகழ்வு நம்மைப் பேரதிர்ச்சி செய்திருக்கிறது. சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரின் தற்கொலை. பல ஆயிரம் பேருடைய வாழ்வில் தன்னம்பிக்கை ஒளியேற்றிய சங்கர் தன் வாழ்வை தற்கொலையாக்கியிருக்கிறார். கல்லூரியில் ராகிங் செய்த பெண்ணையே பதினொரு ஆண்டுகள் காதலித்து, அவளின் உதவியால் 4 வருடங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோல்வியைத் தழுவி அதில் கிடைத்த பாடங்களையும் அனுபவங்களையும் கொண்டு ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்தி பல அதிகாரிகளை உருவாக்கிய ஒரு தன்னம்பிக்கைச் சரித்திரம். தன்னம்பிக்கையின்றி தற்கொலை செய்திருக்கிறது என்றால் எதற்காக?. இதோ அடுத்த தற்கொலை. முதுகுவலிக்கு தற்கொலை. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ? அதுவும் ஆசிரியர். அரசுப்பள்ளி ஆசிரியர். தன் முதுகுவலி தீரவில்லை என்று குடும்பத்திற்கு விஷம் வைத்து தானும் தற்கொலை செய்திருக்கிறார். என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு. அழகான மனைவி. அருமையான இரண்டு குழந்தைகள். அன்பான அம்மா இவர்கள் தான் என் உயிர் அவர்களை எப்படி விட்டுவிட்டு போவது என்று கொன்றிருக்கிறார். அவர்கள் அனுமதியோடு நடந்ததா இல்லை. இவர் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கிறாரா என்பது இனிதான் தெரியும். இங்கேதான் உலகம் எப்படி இருக்கும்? என்றுகூட தெரியாமல் எச்.ஐ.வி பரப்பிவிட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தையும் அந்த அம்மாவும் இந்த உலகில் தானே வாழப்போகிறார்கள். தினம் தினம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைப் பாருங்கள். எத்தனை எத்தனை வியாதி. எவ்வளவு துன்பங்கள். கைகள் இழந்த, கால்கள் இழந்த, பார்வையற்ற, மனநலம் குன்றிய இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள். முதுகுவலிக்காக நடந்த தற்கொலை என்றால் இதைவிடக் கேவலம் வேறோன்றுமில்லை. ஆசிரியரே நீங்கள் தன்னம்பிக்கை இழந்து விட்டு தற்கொலை செய்து கொண்டீர்கள். உங்களை நம்பி வந்த பெண்ணையும் உங்கள் குழந்தையும் உங்களைப் படைத்த அம்மாவையும் ஏன் கொன்றீர்கள்? இது தான் அவர்கள் மேல் வைத்த பாசமா? உண்மையில் இவ்வுலகில் நீங்கள் வாழத் தகுதியில்லாதவர் தான். இந்த மூன்று நிகழ்வுகளும் நம்மை யோசிக்க வைத்திருக்கின்றன. மூன்று நண்பர்களும் அந்த ஒருவனிடம் என்ன பிரச்சினை என்று பேசியிருந்தால் சிக்கல் தீர்ந்திருக்கும். 75 ஆயிரம் ரூபாய் என்பது இந்தக்காலத்தில் பெரிய தொகை இல்லை. மூவரும் ஏற்பாடு செய்திருக்கலாம் இல்லை கடன் வாங்கியவரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கலாம். பேசியிருந்தால் நண்பனைக் கட்டாயம் இழந்திருக்க மாட்டமார்கள். ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நண்பர்களிடமும் வீட்டுப் பெரியவர்களிடமும் பேசியிருந்தால் சிக்கல் அவிழ்ந்திருக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லாமல் உள்ள குடும்பம் ஏது? ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கி விடுகிறதே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில். இருவரும் மனம் விட்டுப் பேசியிருந்தால் கண்டிப்பாக சங்கர் சாகாமல் இருந்திருப்பார். மூன்றாவதாக முதுகுவலிக்கு தற்கொலை செய்த ஆசிரியர். இவரின் தன்னம்பிக்கை தளர்ந்து போக யார் காரணம்? நோயா? நோயின் கொடூரமா? மருத்துவர்களா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா? என்ன பிரச்சினை என்றாலும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை கோழைகளின் ஆயுதம். முட்டாள்கள் தேர்ந்தெடுக்கும் பாதை கோமாளிகள் செய்யும் கோமாளித்தனம். அறிவிலிகள் செய்யும் அலப்பறை. தயவுசெய்து தற்கொலை செய்து கொள்ளா(ல்லா)தீர்கள். தற்கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இருக்கும் நீங்கள் வாழ்ந்துதான் பாருங்களேன். வாழ்க்கை வசமாகும்.

No comments:

Popular Posts