Tuesday 22 January 2019

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன்?

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன்? அ.மாயவன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ-ஜியோ. த ற்போது தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஜாக்டோ-ஜியோ பதாகையின் கீழ் தங்களது நியாயமான 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (22-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குகின்றனர். 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களையவேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும். 2003-2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கவேண்டும். அரசு ஆணை எண் 56-ல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்ப்புக் குழுவினை ஏற்று செய்யவேண்டும். மேலும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசு ஆணை எண்கள் மற்றும் 100, 101 ஆகியவற்றை ரத்து செய்யவேண்டும். 5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடுவதை உடனே கைவிடவேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்யவேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும். கடந்த 56 ஆண்டுகளாக தமிழக ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வந்த ஓய்வூதியத்தை அரசு 1-4-2003-ல் இருந்து ரத்து செய்ததை திரும்ப வழங்க வேண்டும். இது புதிய கோரிக்கை அல்ல. பறிக்கப்பட்ட எங்களுடைய ஜீவாதார, வாழ்வாதார உரிமையை திரும்ப வழங்கவேண்டும் என்றுதான் அரசை வலியுறுத்துகிறோம். ஆரம்பத்தில் ஓய்வூதியம் கவர்னர்களுக்கும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும் வழங்கப்படவில்லை. இப்போது ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்கப்படாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் காலம் காலமாக ஓய்வூதியம் பெற்று வந்தவர்களுக்கு இப்போது ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. இந்த அநீதியை அகற்றக்கோரிதான் எங்கள் போராட்டம் நடக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பறிக்கப்பட்ட ஓய்வூதியத்தை திரும்ப வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார். ஆட்சிக்கு வந்தபிறகு சட்டசபையில் விதி 110-ன் கீழ் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை திரும்ப வழங்குவோம் என்று உறுதி அளித்தார். அதற்கான ஒரு வல்லுனர் குழுவையும் நியமித்தார். ஆனால் அவரது வாக்குறுதியை இன்றைய அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை. இதுவரை ஏராளமான கோரிக்கை மனுக்கள் அளித்துப் பார்த்தும் பலன் இல்லை. 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (22-ந் தேதி) தமிழகத்தில் 14 லட்சம் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்களது போராட்டம் நியாயமான போராட்டம். மாணவர்களின் கல்வி நலன்கள் இதனால் பாதிக்கப்படாது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இப்போது ‘ரிவிஷன்’ மட்டும்தான் நடத்தி வருகிறோம். போராட்டத்துக்கு நாங்கள் காரணம் அல்ல. தமிழக அரசின் மெத்தனப்போக்கும், அலட்சியப்போக்குமே காரணம். எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் வற்புறுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மீது அரசு எவ்வித அடக்கு முறைகளை ஏவிவிட்டாலும், பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஊதியத்தை பிடித்தம் செய்தும், எந்த விதத்திலும் எங்கள் போராட்டத்துக்கு தடை விதித்தாலும் அவை அனைத்தையும் முறியடித்து வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம். இதில் இருந்து பின்வாங்கமாட்டோம். 1985-ம் ஆண்டு ஜாக்டோ போராடியபோது 10 ஆயிரம் ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊதியத்தை பிடித்தம் செய்தனர். 1998-ல் போராடியபோது ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊதியத்தை பிடித்தம் செய்தனர். 2003-ல் நடந்த போராட்டத்தில் டெக்ஸ்மா சட்டத்தை ஏவிவிட்டு வேலை நிறுத்தம் செய்த 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர் - அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். இவற்றை எல்லாம் முறியடித்து கோரிக்கைகளை வென்றெடுத்த மாபெரும் இயக்கம்தான் ஜாக்டோ-ஜியோ இயக்கம். பிறகு வந்த ஆட்சியாளர்கள் மூலம் இழந்த ஊதியத்தை பெற்றோம். பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வைத்தோம். இதுதான் ஜாக்டோ-ஜியோ வரலாறு. அந்த வரலாற்றை மீண்டும் படைக்க வேலை நிறுத்த போராட்ட களம் நோக்கி புறப்படுவோம்.

No comments:

Popular Posts