Monday, 21 January 2019

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது சேவியர் வீ ட்டை விட்டு வெளியே கிளம்பும் போது ஒரு தடவைக்கு நாலு தடவை பூட்டை இழுத்துப்பார்த்து, கதவைத் தள்ளிப்பார்த்து எல்லாம் பத்திரமாய் இருக்கிறது என திருப்தியடைந்து கிளம்புகிறோம். வீடு பத்திரமாய் இருக்கலாம், ஆனால் வெளியே கிளம்பும் நாம் பத்திரமாய் இருக்கிறோமா? என்றால் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் தொழில்நுட்பம் என்னும் மூன்றாவது கண் நம்மை கண்காணித்து கொண்டே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்போன் பயன்படுத்துவது நமது வசதிக்கான ஒன்றாகவே இருந்தது. ஆனால் இன்று செல்போன் பயன்படுத்துவது நிறுவனங்களின் வளர்ச்சிக்காக என மாறிப் போய்விட்டது. நாம் எங்கே செல்கிறோம்? என்ன செய்கிறோம்? எதை செய்யாமல் விடுகிறோம்? என்பதையும் செல்போன் டிஜிட்டல் தகவல்களாக எங்கெங்கோ அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஒரு நேரலை கிரிக்கெட் வர்ணனையைப் போல நம்மைப் பற்றிய தகவல்கள் சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் தான் நிறுவனங்களின் பணம் காய்க்கும் மரம். இவரிடம் என்ன விற்கலாம்? என்ன பேசலாம்? இவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? என்பதையெல்லாம் இந்த தகவல்களைக் கொண்டு தான் கணிக்கிறார்கள். அதற்காக இருப்பவை தான் பிக்டேட்டா அனாலிடிக்ஸ், அதற்கான அல்காரிதங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம். பொதுவாக நிறுவனங்கள் இவற்றையெல்லாம் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்காகவும், விற்பனை வளர்ச்சிக்காகவும் தான் பயன்படுத்துகின் றன. ஆனால் இந்த தகவல் திருடப்பட்டால் நமது உடைமைகளுக்கோ, உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? எனும் அச்சம் வெகு நியாயமானது. செல்போன்களே நமக்கு பெரும்பாலான பரிவர்த்தனைகளை நிறைவேற்றித் தருகின்றன. பே.டி.எம் ஆகவோ, வங்கிக் கணக்குகளாகவோ, கூகிள் பே ஆகவோ ஏதோ ஒரு வடிவத்தில் நமது தகவல்களெல்லாம் ஸ்மார்ட்போன் வழியாகத் தான் பயணமாகின்றன. இந்தத் தகவல்களை நாம் பயன்படுத்தும் செயலிகளோ(ஆப்), இணைய சேவை வழங்கும் நிறுவனங்களோ, செல்போன் நிறுவனங்களோ திருடிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மால்வேர்கள், வாட்ஸ்-அப் மெசேஜ்களாகவோ, மின்னஞ்சல் இணைப்புகள் மூலமாகவோ செல்போனின் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கின்றன. நம்பிக்கையில்லாத இணைப்புகளை (லிங்க்களை) ஒரே ஒருமுறை கிளிக் செய்து விட்டால் கூட நமது விவரங்கள் தொலைந்து போக வாய்ப்பு உண்டு. இலவச வைபை அல்லது பொது இடங்களில் கிடைக்கின்ற கட்டண வைபைக்கள் பாதுகாப்பற்றவை. செல்போனை அத்தகைய வைபையில் இணைத்தால் போனில் இருக்கும் மொத்த தகவலையும் பறிகொடுக்க நேரிடலாம். செல்போனில் இருப்பிடத்தை (லொக்கேஷன்) அறிய பயன்படுத்தும் செயலி நாம் எங்கே இருக்கிறோம்? என்பதை துல்லியமாக பதிவு செய்கிறது. லொக்கேஷனை ஆப் பண்ணினால் என்ன பிரச்சினை? என நினைப்பீர்கள். அது தான் இல்லை. இப்போது நமது இருப்பிடத்தை அதற்கான செயலி மட்டுமே கண்டுபிடிப்பதில்லை. ஆஸிலரோ மீட்டர், பாரோ மீட்டர், மேக்னடோமீட்டர் உட்பட பல சென்சார்களும் செல்போனின் இருப்பிடத்தைத் துல்லியமாய் கண்டு சொல்கின்றன. அதே போல பதிவிறக்கம் செய்யும் செயலிகள்(ஆப்) மிகப்பெரிய ஆபத்தின் திறவுகோலாய் இருக்க வாய்ப்பு உண்டு. செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அது கேட்கின்ற அனுமதிகளுக்கெல்லாம் ‘ஓகே’ கொடுத்து விடுகிறோம். நமது தொடர்புகள் (காண்டாட்க்) கேமரா போன்றவற்றை இயக்கும் அனுமதியை நாமாகவே கொடுத்து விடுகிறோம். அது போலியான அல்லது பாதுகாப்பற்ற செயலியாக ஆக இருக்கும் பட்சத்தில் தகவல்கள் மிக மிக எளிதாக திருடப்பட்டு விடுகின்றன. இப்போது சில புதிய திடுக்கிட வைக்கும் தனிமனித சுதந்திர மீறல்கள் வந்திருக்கின்றன. அதில் ஒன்று கேமரா ஹேக்கிங். செல்போனில் உள்ள கேமராவையோ, கணினியில் உள்ள வெப்கேமையோ தொலைவிலிருந்தே இயக்குவது. கேமரா இயங்கிக் கொண்டிருப்பது, நமக்குத் தெரியாது. செல்போன் கேமரா காட்டுகின்ற விஷயங்களையெல்லாம் தொலைவிலுள்ள சேமிப்பு தளங்களில் சேமிக்கப்படும். அது எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம். இன்னொன்று செல்போனில் உள்ள மைக்ரோபோன் மூலமாக நேர்கிறது. நமது உரையாடல்கள் நமக்குத் தெரியாமலேயே காதுகொடுத்துக் கேட்கப்பட்டு இன்னொரு இடத்துக்கு அனுப்பப்படும் ஆபத்து அது. போனில் பேசுவது மட்டுமல்லாமல், போனை ஆன் பண்ணாமல் பேசுவதைக் கூட ரகசியமாய் ஒட்டுக்கேட்கும் ஆபத்தும் இதில் உண்டு. கூகிள் ஹோம், அலெக்ஸா, சிரி போன்றவையெல்லாம் எப்போதுமே நமது உரையாடல்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பது நினைவில் இருக்கட்டும். ஏற்கனவே ஒருவர் இன்னொருவரிடம் பேசுவதை பதிவு (ரெக்கார்ட்) செய்யும் வசதிகள் இருக்கின்றன. செல்போன் நிறுவனங்களோ, செயலிகளோ, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களோ நினைத்தால் யாருடைய பேச்சை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். அதே போல நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள் (சாட்), மின்னஞ்சல்கள் எல்லாமே தொழில்நுட்பத்தின் கண்களால் வாசிக்கப்பட்ட பின்பு தான் அடுத்த நபருக்குச் சென்று சேர்கிறது. நமது புகைப்படத்தை வைத்து அது எங்கே? எப்போது? எடுக்கப்பட்டது போன்ற தகவல்களையெல்லாம் தொழில்நுட்பம் எளிதில் கறந்து விடுகிறது. நவீன செல்போன்களில் நமது கை அசைவையும், கண் அசைவையும் கண்காணிக்கும் சென்சார்கள் இருக்கின்றன. எந்த மாடியில் இருக்கிறோம் என்பதைக் கூட பாரோ மீட்டர் எனும் சென்சார் அனுப்பும் செய்தியால் அறிய முடியும். சென்சார்களுக்கென செயலி தனி அனுமதி கேட்பதில்லை. எனவே எந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலும் இந்த சென்சார்கள் அதனுடன் இணைந்து கொள்ளும். செல்போனில் டைப் செய்யும் விஷயங்களைத் திருடவும், பாஸ்வேர்ட் போன்றவற்றை கண்டறியவும் கூட மென்பொருட்கள் உள்ளன. வெறுமனே மொபைலில் டைப் செய்து விட்டு டெலீட் செய்தால் கூட, எதையெல்லாம் டைப் செய்தோம் எதையெல்லாம் டெலீட் செய்தோம் என்பதையும் தொழில்நுட்பம் குறித்து வைத்துக் கொள்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடன் கூடவே இருந்து உங்களைப் பற்றிய அத்தனைத் தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கின்றன ஸ்மார்ட்போன்களும், அதனுடன் இணைந்த நவீன தொழில்நுட்பங்களும். இந்த சூழலில் பாதுகாப்பாய் இருப்பது எப்படி? என்ற கேள்வி கட்டாயம் எழ வேண்டும். செல்போன்களை அங்கும், இங்கும் வைத்துச் செல்லாதீர்கள். பாதுகாப்பாய் வைத்திருங்கள். அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள். புளூடூத், வைபை போன்றவற்றை தேவையற்ற நேரங்களில் ஆப் செய்தே வைத்திருங்கள். மிக மிக அவசியமான செயலிகள் மட்டும் உங்களிடம் இருக்கட்டும். அதுவும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலிருந்து மட்டும் தரவிறக்கம் செய்யுங்கள். சந்தேகத்துக்கு இடமான எந்த ஒரு இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்யாதீர்கள். செல்போனுக்கு கடினமான பாஸ்வேர்ட் போட்டு மூடி வையுங்கள். செயலிகளை பயன்படுத்தியபின் அதில் இருந்து முறையாக வெளியேறு(எக்ஸிட்) செய்யுங்கள். பொது வைபைகளில் இணைய வேண்டிய கட்டாயமான சூழல் வந்தாலும் பண பரிவர்த்தனைகள் நடத்தாதீர்கள். ஆட்டோ லாகின் வசதியை ஆன் செய்யாதீர்கள். என்கிரிப்ஷன் வசதி இருக்கின்ற செல்போனில் அதைப் பயன்படுத்துங்கள். செல்போனில் ஓஎஸ் அப்டேட்களை உடனுக்குடன் நிறுவுங்கள். ஒரு நல்ல வைரஸ் தடுப்பு செயலியை(ஆன் டி வைரஸ் ஆப்) பயன்படுத்துங்கள். தொலைவில் இருந்தே செல்போனில் உள்ளவற்றை அழிக்கும் ‘ரிமோட் வைப்’ ஆப்ஷனைப் பயன்படுத்துங்கள். பழைய செல்போனை முடிந்தமட்டும் விற்காமல் இருங்கள், அப்படி விற்கவேண்டிய சூழல் வந்தாலும் மெமரி கார்டு, சிம்கார்டு, இண்டர்னல் மெமரி அனைத்தையும் பார்மேட் செய்யுங்கள். இன்றைய உலகில் செல்போன், தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் அதை பயன்படுத்தும் முறைகளில்தான் நமது பாதுகாப்பு அடங்கி இருக்கிறது. எனவே செல்போன்களை, புதிய தொழில்நுட்பங்களை மிகவும் கவனமாக கையாளுங்கள். இதுபோன்ற தொல்லைகளில் இருந்து விடுபடுங்கள்.

No comments:

Popular Posts