Thursday, 13 February 2020

எம்.ஜி.ஆரைக் கவர்ந்த கவிஞர் மருதகாசி

எம்.ஜி.ஆரைக் கவர்ந்த கவிஞர் மருதகாசி | கவிஞர் முத்துலிங்கம்,| முன்னாள் அரசவைக் கவிஞர். இன்று (பிப்ரவரி 13-ந் தேதி) கவிஞர் மருதகாசியின் 100-வது பிறந்தநாள். திரையுலகில் குறிப்பிடத்தக்க பத்துக் கவிஞர்களில் மருதகாசி மிக மிக குறிப்பிடத்தக்கவர். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் மருதகாசி என்றால் மிகையல்ல. எழுதுகின்ற பாடலுக்குப் பொருள் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் கவிஞர்களில் எழுதுகின்ற பாடலிலும் பொருள் இருக்க வேண்டும் என்று எண்ணிய கவிஞர் இவர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த டி.ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி நடித்த மாயாவதி என்ற படத்திற்குத்தான் ஜி.ராமநாதன் இசையில் முதன்முதல் பாடல் எழுதி திரைப்படப் பாடலாசிரியராக மருதகாசி அறிமுகம் ஆனார்.

1949-ல் வெளிவந்த மாயாவதி படத்திலிருந்து 1983-ல் வெளிவந்த “தூங்காத கண்ணின்று ஒன்று” என்ற படம் வரை மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் மருதகாசி. கே.வி. மகாதேவன் இசையில் தூங்காத கண்ணின்று ஒன்று இந்த படத்தில் மருதகாசியுடன் நானும் பாடல் எழுதி இருக்கிறேன். மந்திரி குமாரி படத்தில் இவர் எழுதிய “வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை” என்ற பாடல். “உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சல் ஆடுதே” என்ற பாடல் இவையிரண்டும் நம் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள்.

வாராய் நீ வாராய் என்ற பாடலில் மாதுரிதேவியை எஸ்.ஏ.நடராஜன் கொல்லப்போகிறார் என்பதை மறைமுகமான வார்த்தைகளில் மருதகாசி எழுதியிருப்பார். “புலியெனைத் தொடர்ந்து புதுமான் நீயே வாராய்” என்று அந்தப் பாட்டு முடியும். இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் இந்த பாடலின் அருமை புரியும்.

அதைப்போல “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலில் “உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே“ என்று மாதுரிதேவி பாட, “இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே” என்று எஸ்.ஏ.நடராஜன் பாடுவார். “குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ”என்று அந்தப் பெண்பாட “உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே” என்று இவர் முடிப்பார். இந்தப் பாடலின் கற்பனை வளத்தை அன்று பாராட்டாதவர்களே இல்லை.

எம்.ஜி.ஆர். நடித்த “நினைத்ததை முடிப்பவன்” என்ற படத்தில் பாடல் எழுத முதன்முதல் எம்.ஜி.ஆர் அழைத்துவரச் சொன்னார் என்று டைரக்டர் நீலகண்டன், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்த ஒரு நண்பரை என்னிடம் அனுப்பியிருந்தார். அப்போது எனக்கு அம்மை போட்டிருந்ததால் என்னால் போக முடியவில்லை. அதனால் பிரபலமான இரண்டு கவிஞர்களை வைத்து எழுதினார்கள். எம்.ஜி.ஆருக்கு அவர்கள் எழுதியது பிடிக்கவில்லை. உடனே மருதகாசியை அழைத்து எழுதச் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். மருதகாசி எழுதியது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தப் பாடல்தான் “கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும்” என்ற பாடல். எம்.ஜி.ஆர் விரும்பிய கவிஞர்களில் மருதகாசியும் ஒருவர் என்பதை எம்.ஜி.ஆர். சில நேரம் பாடல்கள் பற்றி எங்களிடம் பேசும்போது அறிந்திருக்கிறோம்.

மருதகாசி திரையுலகில் நுழைந்த காலத்தில்தான் கண்ணதாசனும் நுழைந்தார். விரைவாக மெட்டுக்குப் பாட்டெழுதக் கூடியவர் அந்தக் காலத்தில் மருதகாசி என்பதால் பல படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதக் கூடிய வாய்ப்பு மருதகாசிக்குக் கிடைத்தது.

கண்ணதாசன் கதைவசனம் எழுதிய படங்களில் “மன்னாதி மன்னன்” என்ற படமும் ஒன்று. அதில் நாட்டியப் பேரொளி பத்மினி ஆடுகிற காட்சிக்கு கண்ணதாசன் எழுதிய பாடல் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான எம்.நடேசனுக்கும் மனநிறைவைத் தரவில்லை. அதனால் கண்ணதாசன் அனுமதியோடும், எம்.ஜி.ஆரின் அனுமதியோடும் மருதகாசியை அழைத்துப் பாடல் எழுத வைத்தார். அப்படி மருதகாசி எழுதிய பாடல்தான் “ஆடாத மனமும் உண்டோ”என்ற பாடல். அதே படத்தில் “ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக” என்ற பாடலையும் மருதகாசிதான் எழுதினார். மருதகாசி கொடிகட்டிப் பறந்த காலம் அது.

வாலி எழுதிய சில பாடல்களைக் கண்ணதாசன் எழுதியது என்று தவறாகச் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதைப்போல், மருதகாசி எழுதிய பாடல்களைக் கண்ணதாசன் எழுதியது என்றும், கல்யாணசுந்தரம் எழுதியது என்றும் சிலர் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பட்டுக்கோட்டையின் முதல் பாடல் தொகுதியில் மருதகாசியின் சில பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இயற்கை, சமூகம், தத்துவம், காதல், தாலாட்டு, பக்தி என்று எதைப்பற்றி எழுதினாலும், அதில் தனி முத்திரை பதித்தவர் மருதகாசி. மங்கையர்திலகம் படத்தில் “நீலவண்ண கண்ணாவாடா நீ ஒரு முத்தம் தாடா” என்ற மருதகாசியின் பாடலை யாராவது மறக்க முடியுமா? “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்று உத்தமபுத்திரன் படத்தில் இவர் எழுதிய பாடல் இன்னும் நம் நெஞ்சில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.

ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை (பிள்ளைக்கனியமுது). கடவுள் என்னும் முதலாளி (விவசாயி). வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே(மல்லிகா). காவியமா? நெஞ்சில் ஓவியமா? (பாவைவிளக்கு). சத்தியமே லட்சியமாய் கொள்ளடா(நீலமலைத்திருடன்). மனுஷனை மனுஷன் சாப்பிடுராண்டா தம்பிப் பயலே(தாய்க்குப்பின்தாரம்). மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏறுபூட்டி(மக்களைப்பெற்ற மகராசி). எடுத்துக் காட்டுக்கு ஒன்றிரண்டைச் சொல்கிறேனே தவிர சொல்வதற்கு நிறைய இருக்கின்றன.

எம்.ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் என்ற படத்தில் வாலியின் பாடல் இடம் பெறக்காரணமே மருதகாசிதான். எம்.ஜி.ஆர். படங்களில் வாலிக்கு அதுதான் முதல் படம். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற படத்தை மருதகாசி தயாரித்தார். அதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டை அடமானமாக வைத்தார். படம் தோல்வி. அதனால் அந்த வீடு ஏலத்திற்கு வந்தது. போனால் போகட்டும் என்று கவலைப்படாமல் ஊருக்குப் போய்விட்டார். விவரம் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் வீடு ஏலத்திற்குப் போகாமல் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டு பத்திரத்தை வைத்துக் கொண்டார்.

மருதகாசி மீண்டும் சென்னைக்கு வந்ததும் அவரை அழைத்து, படம் எடுக்கிற வேலை உங்களுக்கு ஏன்? என்றுசொல்லி வீட்டு பத்திரத்தை மருதகாசியிடம் கொடுத்து, இதற்காக நீங்கள் எனக்குப் பணம் கொடுக்கவேண்டியதில்லை, பாடல் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றுசொல்லியிருக்கிறார்.

அதற்கு மருதகாசி, “அண்ணே, இந்தப் படத்தின் மூலம் பல பாடங்கள் கற்றுக்கொண்டேன். நம்பியவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதனால் வீடு போனால் போகட்டும் என்றுதான் ஊருக்குச் சென்று விட்டேன். நீங்களும் மக்களுக்குப் பாடல் மூலம் படிப்பினை சொல்வீர்கள், இந்தப் படத்தில் நான் பெற்ற படிப்பினைக்காக இந்த வீடு தங்களிடமே தங்களுடையதாக இருக்கட்டும் என்றுகொடுத்த பத்திரத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். எம்.ஜி.ஆரைப் போன்றவர்களையும், மருதகாசி போன்ற பெருந்தன்மையுள்ள கவிஞர்களையும் இன்று பார்க்க முடியுமா?

No comments:

Popular Posts