Thursday, 13 February 2020

தேவை அறுவை சிகிச்சை!

தேவை அறுவை சிகிச்சை! By எஸ். புஷ்பவனம்  |   ஜனவரி 20-ஆம் தேதி நடந்த  நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழு கூட்டத்தில் 2030-ஆம் ஆண்டு வரை அனுமதித்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.50 லட்சம் கோடி தேவைப்படும் என்றும், அத்திட்டங்களை நிறைவேற்ற  பல பத்தாண்டுகள் ஆகும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலதன நிதியாக 2019-20-இல் ரூ.1.6 லட்சம் கோடியையும், 2020-21-இல் ரூ.1.4 லட்சம் கோடியையும்  மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.ரயில்வேயின் இயக்க விகிதம் 98.4 சதவீதமாக இருக்கிறது. ரூ.100 சம்பாதிக்க ரூ.98.40 செலவழிக்கிறார்கள். இது திறமையின்மையின் உச்சம். ரயில்வே இயக்கத்தினால் எந்த நிதியும் திரட்ட முடியாது. ரயில்வே சுய சார்பு வணிக முறை, பொதுத் துறை சேவையாக மாற ஆழமான, பரவலான அறுவை சிகிச்சை அவசியம்.

முதலாவதாக, வாரிய உறுப்பினர்களாக நிதி நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மேலாண்மை வல்லுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். உலகிலேயே எந்த நிறுவனத்திலும்  இல்லாதவாறு இந்திய ரயில்வே வாரிய உறுப்பினர்கள் அனைவருமே ரயில்வே ஊழியர்கள்தான். இது பரவியிருக்கும் சுயநலத்தின் ஊற்றுக்கண். அதே போலவே "ரயில்வே சேஃப்டி கமிஷனில்' வெளி நிபுணர்களை அமர்த்த வேண்டும். தற்போது அதில் அனைவருமே ரயில்வே அதிகாரிகள்.

இரண்டாவதாக, கவனிக்கப்பட வேண்டியது, ஊழியர்களின் எண்ணிக்கை. அமெரிக்க ரயில்வே நம் நாட்டைவிட அதிக நீளமுடையது. சேவை என்று எடுத்துக்கொண்டாலும், எல்லா நிலையிலும் நம்மைவிடத் திறமையானது. ஆனால், வேலை செய்பவர்கள் மொத்தமே ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர்தான். இது நம்முடைய ஊழியர் பலத்தில் 18.5%தான்.

நவீன மயமாக்கம், கணினி மயமாக்கம், மின் மயமாக்கம், பயணிகளே பயணச் சீட்டை அச்சடித்துக் கொள்வது முதலானவை வந்த பிறகும்கூட, 10 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறையில் எவ்வளவு பேர் வேலை பார்த்தார்களோ, கிட்டத்தட்ட அதே அளவு தற்போதும் வேலை பார்க்கிறார்கள். 2000-01-இல் 15,49,385 பேர், 2009-10-இல் 13,37,533 பேர், 2019-இல் 13,50,000 க்கு மேல். அனுமதிக்கப்பட்ட பதவிகள் 15,06,598. இதைத் தவிர தற்கால ஊழியர்கள் 2 லட்சம் பேர். செலவினத்தில் 50%-க்கும் மேல் ஊழியர் சம்பளம். அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 1 லட்சம் வீதம் தேவையற்ற ஊழியர்களை பணி நீக்கம், கட்டாய ஓய்வு, விருப்ப ஓய்வு மூலம் குறைத்தால் மட்டுமே, ரயில்வே துறை வளர்ச்சி காண முடியும்.

விவேக் தேப்ராய் கமிட்டியின்படி 9 மண்டலங்களை (2010) 16 மண்டலங்களாக (தற்போது 18) ஆக்கியதினால் திறன் 1%கூட அதிகரிக்கவில்லை. அதிகாரிகளின் சொகுசு கூடியது. அத்தனை புதிய பொது துணை / உதவி வணிக இயக்க, இன்னும் பல மேலாளர்கள், அதிகாரிகள், உதவியாளர்கள் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. பல நூறு கோடிக்கணக்கில் வரிப் பணம் விரயமாகிறது. இவற்றை மறுபடியும் 9 மண்டலங்களாகச் சீரமைக்க வேண்டும்.

 2013-14-இல் ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழு தனது பரிந்துரையின் மேல் எடுத்த நடவடிக்கை அறிக்கையில் ("எஸ்சிஆர் 188 ஆஃப் 2013-14') இதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதத்துக்கும் குறைவாக ரயில்வே துறை செலவு செய்துள்ளது எனக் கூறுகிறது. ஒருபுறம், தேவையில்லா செலவினங்கள்; இன்னொருபுறம், பாதுகாப்புக்காகச் செலவிட வேண்டிய ஒதுக்கீட்டைக்கூட செலவு செய்யாமல் இருப்பது. எந்த அளவுக்குத் திறமையாக ரயில்வே நிர்வாகம் செயல்படுகிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

ஜனவரி 21-ஆம் தேதி செய்தியின்படி, ரயில்வே பாதுகாப்புத் துறை, படிவம் நிரப்பாமல் கணினியில் பயணச் சீட்டு அடித்து வரும் கும்பலைப் பிடித்திருக்கிறது. ஊழியர் ஒத்துழைப்பில்லாமல் இது சாத்தியமாகாது. மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆண்டுதோறும் ரயில்வே துறை மீதுதான் அதிக புகார்கள் வருவதாகக் கூறுகிறது. ஊழல் புரையோடியிருக்கிறது. போர்டு உறுப்பினரான அமைச்சரின் மருமகனுக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தது (மே 2013) பரபரப்பான தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் வெளிவந்தது. ஆனால், இதில் யாரும் சிறைக்குப் போகவில்லை என்பதுதான் வேடிக்கை. நடவடிக்கை முடக்கப்பட்டுவிட்டது.

முன்பு பள்ளியில்லா இடங்களுக்கு ரயில் சென்றது. அதனால், அந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ரயில்வே பள்ளிகள் தேவைப்பட்டன. இப்போது ரயில்வே பள்ளிகளுக்கு என்ன தேவை இருக்கிறது? யாருக்காக இவை நடத்தப்பட வேண்டும்? சுமார் 220 ஹெக்டேரில் உள்ள 80 பள்ளிகள், சுமார் 800 ஹெக்டேரில் உள்ள 250 மருத்துவமனைகள், 2,755.36 ஹெக்டேரில் உள்ள 5,57,174 குடியிருப்புகள் ஆகியவற்றை விற்றால் குறைந்தபட்சம் சுமார் ரூ.1.3 லட்சம் கோடி கிடைக்கும். இந்தப் புள்ளிவிவரங்கள் ரயில்வே ஊழியர் சங்கங்களைக் கோபப்படுத்தும் என்பது நிச்சயம். அதே நேரத்தில், வரி செலுத்துவோரின் பார்வையில், இதெல்லாம் அநாவசியம். ரயில்வே ஊழியர்களுக்கென்று இதுபோன்ற சிறப்புச் சலுகை. இது வழங்க அவர்கள் காவல் துறையினரோ, ராணுவத்தினரோ அல்லவே...

ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு இல்லாத பயணச் சீட்டுகள் கணினிமயமாக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது ஆதார் காண்பித்தால் போதும். ஆனால், 2018-ஆம் ஆண்டு வரை 14 டிக்கெட் அச்சடிக்கும் அச்சகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவை இப்போது ஐந்தாகக் குறைக்கப்பட்டுவிட்டன. இவையும்கூட, ஊழியர்களை அகற்ற முடியாது என்பதால் இயங்குகின்றன. ரயில்வேயின் கட்டண வருவாயும், நமது வரி வருவாயும் அதற்காகச் செலவிடப்படுகின்றன.பைகுலா அச்சகத்தில் இன்றைக்கும் 350 பேர் "வேலை' செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சுயநலம் மிக்கவர்களை மீறித்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

அனைத்து இலவச பயணச் சலுகை அனுமதியையும் (பாஸ்) ரத்து செய்ய வேண்டும். பயணச் சீட்டு பரிசோதகர்கள் சக ஊழியர்களின் பாஸ்களை பல சமயங்களில் பஞ்ச் செய்வதில்லை.  பயணச் சலுகை அனுமதி (பாஸ்) காரணமாக 30 சதவீத வருவாயை ரயில்வே துறை இழக்க நேரிடுகிறது என  ஓர் ஆய்வு சொல்கிறது. இதர பொதுத் துறை ஊழியர்களைப் போலவே, ரயில்வே ஊழியர்களும் ஆண்டுக்கு ஒரு முறை பயணச் சீட்டு வாங்கி பயணம் செய்து பணத்தைத் திரும்பப் பெறும் விதியை அறிமுகப்படுத்த வேண்டும்."சலூன்கள்' எனப்படும் சொகுசுப் பெட்டி, 2 படுக்கை அறை மற்றும் பல அறைகள் கொண்டது. இளநிலை அதிகாரிகள் முதல் வாரியத் தலைவர் வரை அதிகாரிகள் பயணிக்கவும், தங்கவும் பயன்படுத்துகின்றனர். இது சொகுசாக வாழ்ந்த ஆங்கிலேயர் காலத்து நடைமுறை. இன்றும் அது தொடர்கிறது. தற்போதுள்ள 250 "சலூன்கள்' ஒவ்வொன்றையும் 36 பெர்த்துகள் கொண்ட முதல் ஏஸி வகுப்புப் பெட்டியாக மாற்றினால் ஆண்டு வருவாய் ரூ.2,000 கோடிக்கு மேல் வரும். அதிகாரிகள் விமானத்தில் பயணிக்கலாம்.

விவேக் தேப்ராய் கமிட்டி பரிந்துரைத்தது போல சலுகைகளை அந்தந்த அமைச்சகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக உடல் ஊனமுற்றவர் சலுகையை சமூக நல அமைச்சகமும், மாணவர் சலுகையை மனித வள மேம்பாட்டு அமைச்சகமும், ராணுவத்தினால் ஏற்படும் செலவுகளை ராணுவ அமைச்சகமும் ஏற்க வேண்டும்.ஷேக்ஸ்பியர் தனது நாடகமான ஹாம்லெட்டில் கூறியிருப்பதுபோல, கடைசியில் எல்லோரும் கொலை செய்யப்படும் வரை தாமதப்படுத்துவது அல்லது ஆழ்ந்த பரவலான அறுவை சிகிச்சை மூலம் ரயில்வே துறையைக் காப்பாற்றுவது என்ற இரண்டில் ஒன்றை ரயில்வே துறை, நிதி அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மக்கள் வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

ரயில்வேயின் பிரச்னைக்குத் தீர்வு தனியார்மயமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஊழியர்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படாமல் ரயில்வேயின் நலனை முன்னிலைப்படுத்தி இயங்கும் ரயில்வே தொழிற்சங்கங்களும், அதிகாரிகளின், ஆட்சியாளர்களின் நலனை மட்டுமே கருதாமல், கட்டணம் செலுத்திப் பயணிக்கும் மக்களின் வரிப் பணத்தையும் கருத்தில் கொண்டு இயங்கும் அரசும் ஒற்றைக் கோட்டில் இணைந்து செயல்பட்டால், ரயில்வே துறை தடம் புரளாமல் இயங்கும். இல்லையென்றால்...


கட்டுரையாளர்:செயலர், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்.

No comments:

Popular Posts