Thursday, 13 February 2020

வானொலி, தெவிட்டாத தேனொலி

வானொலி, தெவிட்டாத தேனொலி  | முனைவர் சேயோன் | முன்னாள் இயக்குனர், சென்னை வானொலி. இன்று(பிப்ரவரி13-ந்தேதி) உலக வானொலி தினம். வானொலி தேனொலியாய் நம் அன்றாட வாழ்வில் என்றும் நீக்கமற நீடித்திருக்கும் மின்னணு ஊடகம்! வானொலியை ஆகாய அசரீரி என்றே சொல்லலாம். அதனால்தான் வானொலியை இரண்டாவது இறைவன் என வர்ணித்துள்ளார் அமெரிக்க நாட்டின் மக்கள் தெரிவிப்பியல் வல்லுனர் டோனி சுட்சுவர்ட்சு.

நீண்ட நேரம் பார்த்தால் கண் வலிக்கும்! பேசினால் வாய் வலிக்கும்! முகர்ந்தால் மூக்கு வலிக்கும்! நடந்தால் கால் வலிக்கும்! எழுதினால் கை வலிக்கும்! ஆனால் எவ்வளவு நேரம் கேட்டாலும், காது வலிக்காது! ஏனெனில் அது வலிமையுடையது. மனிதனின் இரண்டு காதுகளும் இரு வேறு திசைகளை நோக்கி இறைவன் படைத்திருப்பதன் நோக்கமே நல்ல செய்திகளையும், தகவல்களையும், அருளுரைகளையும், இனிய பாடல்களையும், எளிய உரையாடல்களையும் உள்வாங்கி மூளைக் கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்! மனித மூளை மிகுந்த திறன் மிக்க ஒரு சூப்பர் கம்ப்யூட்டர், அறிவியல் அறிஞர்கள் உருவாக்கிய அனைத்து மின்னணுக் கணினிகளைக் காட்டிலும் திறன்மிகக் கொண்டது. எனவேதான் வேண்டும் பொழுதெல்லாம், நம் நினைவில் தோன்றி நம்மை எழுதவும், பேசவும் நம் உள்ளக் கருத்தைத் தெள்ளத் தெளிவாக உரைக்கவும் தகவல்களைத் தரவல்லது. அத்தகைய திறன்மிகு மூளைக் கணினிக்குத் தேவையான தகவல்களை வழங்க வல்ல ஐம்புலன்களில் இன்றியமையாதது காது! காது வழிக் கருத்துகளைக் கேட்கும் வகையில் வழங்க வல்லதுதான் ஊடகங்களின் மணிமுடியாகத் திகழும் வானொலி!

எண்ணற்ற மக்களின் தனிமையைப் போக்கும் உற்ற நண்பனாக, அறிவுரை அருளும் ஆசானாக, மகிழ்வூட்டும் பல்வகை நிகழ்ச்சிகளைக் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் கலைஞனாக, பன்னாட்டுச் செய்திகளையும், தகவல்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்கும் தெரிவிப்பியல் வல்லுனராக, பல்பொருள்களின் தரத்தையும், திறத்தையும் அறியும் வகையில் எளிய நடையில், இனிய முறையில் எடுத்துச் சொல்லும் பன்முகப் பரிமாணம் மிக்க பல்கலை வித்தகனாக விளங்குவதுதான் வானொலி! அறிவுக்களஞ்சியமாகவும், அறிவியல் களஞ்சியமாகவும் திகழ்வது வானொலி!

ஊடகங்களின் தாயாக, மணிமகுடமாகத் திகழ்வது வானொலி! மின்னணு ஊடகங்களில் மிகவும் எளிய விலையில் பெறுவதற்கு ஏற்றது. அரிய கருத்துகளைப் பாமரரும் புரியும் வகையில் வழங்க வல்லது. வேறு எந்த ஊடகங்களாலும் நுழைய முடியாத குக்கிராமங்களிலும் காற்றுப் போல் நுழைய வல்ல ஊடகம் தான் வானொலி! வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு, சுனாமி, புயல் முதலான இயற்கைச் சீற்றங்களினால் மக்கள் அவதிப்படும்போது அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்வது வானொலி.

வானொலியின் இன்றியமையாத நோக்கமே மக்களின் மனமகிழ்ச்சிக்கும், உடல் நலத்திற்கும், உள்ள வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், புத்தெழுச்சிக்கும் பல்வகை நிகழ்ச்சிகளைப் பாங்குடன் வழங்க வேண்டும் என்பதுதான். அதேபோல் ஒரு தேசத்தின் குரலாக, நாட்டின் குரலாகச் செயல்படும் ஒப்பற்ற ஊடகமே வானொலி! அதன் இன்றியமையை உணர்ந்துதான், பிரதமர் மோடி அரசு ஊடகமாய் ஒளிரும் அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரலாய் ஒலி உலா வருவதைப் பலரும் கேட்டிருக்கலாம். வானொலியின் இன்றியமையாச் செயல்பாடுகள் ஐந்து:

1. மகிழ்வூட்டல், 2. அறிவூட்டல், 3. அறிவுறுத்தல், 4. தெரிவித்தல், 5. விலையாக்கல். வானொலியின் இன்றியமையா இலக்குகள் நான்கு:

1. செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவது, 2. ஆதாரபூர்வமான தகவல்களை, கருத்துகளை அறிவிப்பது, 3. விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையானவற்றைத் தருவது, 4. நம்பகத் தன்மை மிக்க செய்திகளை, தகவல்களை ஒலிபரப்புவது வானொலி வழங்கும் நிகழ்ச்சிகள் கேட்பவர்களை நேயர்கள் என அழைப்பது வழக்கம். நேயர் என்னும் சொல்லை நம் பக்தி இலக்கியங்கள் பல இடங்களில் பாங்குடன் பகிர்ந்துள்ளன. நேயம் என்றால் அன்பு என்று பொருள். அன்புள்ளம் கொண்டவர்கள் தானே எதனையும் விரும்பிக் கேட்பர். எனவே வானொலிக் கலைஞர்கள் அனைவரும் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது, வணக்கம் நேயர்களே என விளிப்பார்கள் சொல்வார்கள்.

வானொலி கேட்கும் நேயர்களை இரு வகையாகக் கூறலாம். பொது நேயர், சிறப்பு நேயர். குறிப்பாகச் சிறப்பு நேயர் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், குடும்ப நலம், குழந்தைகள், மகளிர், இளைஞர், முதியோர் முதலானோரைச் சொல்லலாம். அகில இந்திய வானொலி மேற்சொன்ன அனைத்துச் சிறப்பு நேயர்களுக்கும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இதன் நோக்கமே அவரவர்களுக்குத் தகுந்த நிகழ்ச்சிகளை அவர்களின் திறன் மேம்பாட்டிற்கும், வாழ்வியல் பயன்களுக்கும் என அந்தத் துறை வல்லுனர்களால் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். வானொலி நெல், வானொலி வாழை முதலானவை மக்கள் மத்தியில் பரவலாகி இருப்பதற்குக் காரணமே வானொலி வழங்கும் விவசாயிகள் நிகழ்ச்சிதான். அதேபோல் இன்றைக்கு நாட்டின் பல்வேறு துறைகளின் நம்பிக்கை நட்சத்திரங்களாய் ஒளிர்பவர்களில் பலர் வானொலியின் குழந்தை, இளைஞர், மகளிர் போன்ற நிகழ்ச்சிகளின் தாக்கம் என்றால் அது மிகையன்று.

ஆம், இன்று இதனை நாம் ஏன் நினைக்கிறோம். இன்று உலக வானொலி நாள்! இதனை ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனம் 1946-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதியை உலக வானொலி நாளாகக் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. காரணம் அன்றுதான் ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனத்தில் முதல் வானொலி அலை வரிசை தொடங்கப்பட்டது. இன்றைக்கு வானொலியின் மிகப்பெரிய வளர்ச்சி பண்பலை ஒலிபரப்புத் தான். அதன்வழி நிறைய இளைஞர்கள் ஒலிப்பரப்புக் கலைஞர்களாக ஒளிர்கிறார்கள். தொலைபேசி மூலம் பல நேயர்களுடன் உரையாடி திரை இசைப் பாடல்களையும் தொடர்ந்து வழங்குகிறார்கள். எனவே வானொலி காதில் ஒலிக்கும் தெவிட்டாத் தேனொலி மட்டுமின்று, நம் வாழ்வில் என்றும் நின்றொளிரும் இரண்டாவது இறைவன் எனில் மிகையன்றே!

No comments:

Popular Posts