Wednesday, 12 February 2020

அரிசி கொடுத்து அக்கா உறவா?

அரிசி கொடுத்து அக்கா உறவா? By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா  |   ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க கேரள முதல்வர் விரைவில் சென்னை வருகை, அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்' என்ற தலைப்புடனும் ஒரு புகைப்படத்துடனும் வெளியான செய்தியைப் பார்த்தவுடன் வியப்பு மேலிட்டது. கேரள முதல்வரின் திடீர் மனமாற்றத்துக்கு என்னதான் காரணம் இருக்கும் என்கிற நியாயமான யோசனை மேலிட்டது.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் மக்கள் அதை உண்மையென்று நம்பிவிடுவார்கள் என்ற கோயபல்ஸின் தத்துவத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பல்லவியை முதலில் பாட ஆரம்பித்தது கேரள அரசு. கேரள அரசியல்வாதிகளின் மத, ஜாதி, அரசியல் பேதம் எல்லாம் மாயமாயின. அணைப் பாதுகாப்பை எங்களிடம் தாருங்கள்' என்றது கேரளம். தலையாட்டியது தமிழகம். மீன் வளர்ப்பு உரிமையைத் தாருங்கள்' என்றது கேரளம். வெள்ளந்தியாக சம்மதித்தது தமிழகம். அணை உடையும் என்று செய்த பிரசாரங்களின் உச்சமாக டேம்'  என்ற படம் எடுத்து அணை உடைவது போலவும், மக்கள் மாள்வது போலவும் மக்களை மூளைச் சலவை செய்து அவர்களைப் பயத்தின் உச்சிக்குத் தள்ளினர்.

அணையை உடைக்கக் கிளம்பிய அவர்களைத் தடுத்தது உச்ச நீதிமன்ற ஆணை. உச்ச நீதிமன்ற ஆணையை வேறு வழியில்லாமல் மதித்தது மத்திய காங்கிரஸ் அரசு. ஆனால், உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்த நினைக்கும் கேரள கம்யூனிஸ்டுகள், தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் தராமல் வஞ்சிக்கின்றனர். தங்கத் தாரகையின் கடைக்கண் பார்வைக்காகக் காத்துக் கிடந்த பா.ஜ.க. அரசு, அணையின் உயரத்தைக் கூட்ட உத்தரவிட்டது. ஆனாலும், தமிழக ஆட்சியா அல்லது கேரள ஆட்சியா என்ற அரசியல் பகடை ஆட்டத்தில் அணையின் முழு உயரமும் இன்னமும் எட்டப்படாமல் வைகையின் கடைமடைப் பாசனங்கள் வறண்டு கிடக்கின்றன. 

இந்தப் பின்னணியில்தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் தண்ணீர் பிரச்னையை விவாதிக்கத் தமிழகம் வருவதாகச் செய்தி வெளியானது. ஏதோ இப்போதாவது கேரள அரசுக்கு நல்ல புத்தி வந்து, தமிழகத்துடன் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையையும், ஏனைய நதிநீர்ப் பிரச்னைகளையும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முடிவெடுத்திருக்கிறதே என்று எண்ணி மகிழ்ந்தாலும், எல்லாமே வெறும் மாயத் தோற்றம் என்று இப்போது தெரிகிறது. நதிநீர்த் தலைப்புக்கு விரோதமாக அமைச்சர் கருப்பணன் உண்மையை உடைத்தார். கன்னியாகுமரியில் ரூ.15 கோடியில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு மாதத்துக்குள் சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது' என்றார் அவர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வரும்போது கண்ணகி கோயிலுக்கு நல்ல வழித்தடத்தைப் பெற்று அதைச் சுற்றுலாத் தலமாக மாற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது' என்றும் அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார். ஆனால், கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தன் பங்குக்கு, கேரளத்துக்கு தமிழக அரசு பல உதவிகளைச் செய்து வருகிறது. இரு மாநிலத்துக்கும் இடையேயும் சகோதர உறவு நிலவுகிறது. கீழடி ஆய்வைப் போன்று மிகவும் தொன்மை வாய்ந்த இடமாக உள்ள முசிறி அருகே உள்ள பட்டினம் என்ற ஊரில் நடக்கும் வரலாற்று ஆய்வைச் சொல்லி, தமிழகத்தின் பலவீனமான பண்டைய பெருமை என்ற பலாப்பழத்தை உரித்துக் கீழடிக்கும் முசிறிக்கும் தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பு வேண்டும் எனத் திருவாய் மலர்ந்தார்.

அதே சமயம் நாசுக்காக, கேரளத்திலுள்ள கண்ணகி கோயில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கோயில் வழிப்பாதையில் பல பிரச்னைகள் உள்ளதால் ஆலோசனை மேற்கொண்டோம் என்றவர், அனுமதி குறித்துப் பேசாமல் தமிழர்களின் விருப்பத்தை முளையிலேயே கிள்ளிவிட்டார். கண்ணகி கோயில் பாதையில் செண்பகவல்லி சுவர் கட்ட 40 ஆண்டுகளாக மறுத்து வரும் கேரளம், கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகை கட்ட ஒரு மாதத்தில் அனுமதி வேண்டுமென வேண்டி நிற்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்னை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், 1980-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே செண்பகவல்லி தடுப்புச்  சுவர் பிரச்னை அனுமார் வாலாக நீண்டு கொண்டே இருக்கிறது. ராயகிரிக்கு மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் செண்பகவல்லி ஆற்றுக்கு திருவிதாங்கூர் மன்னர் ஒரு தடுப்புச் சுவர் கட்டி மலையில் வீணாகும் மழை நீரையும் செண்பகவல்லி நதியின் தண்ணீரையும் சிவகிரி, சங்கரன்கோவில் தாலுகாக்கள் பயன்பெறத் திருப்பி விட்டார். இந்தத் தண்ணீர், மலையின் கீழ்ப்புறத்தில் இருப்பதால் கேரளத்துக்கு ஒரு சொட்டுக்கூட பலன் தராது.1952-ஆம் ஆண்டு வெள்ளத்தில் இந்த தடுப்புச் சுவர் சிதிலமடைய சங்கரன்கோவில், கோவில்பட்டி கரிசல் காடுகள் தண்ணீரில்லாமல் துயருற்றன. 1960-ஆம் ஆண்டு காமராஜரின் அரசு அந்தச் சுவரை ரூ.3.25 லட்சத்தில் மீண்டும் கட்டியது. இதற்கான கல்வெட்டும் அங்கே இருக்கிறது. சுமார் 1,450 மீட்டர் பயணித்து இந்தத் தண்ணீர் தமிழகம் வந்தது. 1972-ஆம் ஆண்டு இந்தச் சுவரில் 930 அடி தொலைவு தமிழகத்துக்குத் தண்ணீர் தர விரும்பாத விஷமிகளால் உடைக்கப்பட்டது.

சுவரைக் கட்ட வேண்டுமென்று தமிழக அரசு வலியுறுத்தியபோது, பணம் தாருங்கள் நாங்களே கட்டுகிறோம்' என்று கேரள அரசு வலை விரித்தது. தமிழக அரசின் அரசாணை 234 நாள்: 26.02.1985-இன்படி சுவர் கட்ட ரூ.10.3 லட்சம் தேவையென ஒப்புக்கொண்டு ரூ.5.15 லட்சத்தை  கேரளத்துக்கு முன்பணமாக அனுப்பியது.தமிழக அரசு அனுப்பும் தொகையை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி திருப்பி அனுப்புகிறது கேரளம். இந்தத் தண்ணீர் வந்தால் சுமார் 25,000 ஏக்கர் நஞ்சை நில பாசன விவசாயம் உறுதி செய்யப்படும். உபரித் தண்ணீர் சிவகிரி தொடங்கி சங்கரன்கோவில் தாலுகா, சாத்தூர், இருக்கன்குடி அணைக்கட்டு பகுதி வரை நீர் அமுதாகச் செல்லும்.  இந்த இடம்  கேரளத்திலிருந்தாலும் தமிழகத்திலிருந்து விரைவில் சென்று சுவர் கட்டலாம்.

ஆனால், வைக்கப்போரில் படுத்த நாய் வைக்கோலைத் தானும் சாப்பிடாமல் அதைச் சாப்பிடும் மாட்டையும் விரட்டுவதுபோல, தனக்குச் சிறிதும் உபயோகமில்லாத தண்ணீரைத் தமிழகத்துக்குத் தர கேரள அரசு மறுக்கிறது.1986-ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக இந்தக் கட்டுரையாளர் இருந்தபோது, சிவகிரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அன்றைய கேரள ஆளுநர் பா. ராமச்சந்திரனைச் சந்தித்து சுவர் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் முதல்வரை நோக்கிக் கை காட்டினார். மிகப் பெரிய காத்திருப்புக் கூட்டம் இருந்தபோதும்கூட, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் வந்திருக்கிறார்' என்று கூறியவுடன், உள்ளே வருமாறு அழைத்தார் முதல்வர் கருணாகரன். விஷயத்தைக் கேட்ட பிறகு, அவருடைய மனமும், முகமும் மாறி விட்டது. நீர்வளத் துறைச் செயலாளரைப் பார்க்குமாறு என்னை (கட்டுரையாளர்) மடை மாற்றினார். நான் போவதற்குள் தகவலை அறிந்துகொண்ட அந்தச் செயலாளர் நீண்ட காத்திருப்புக்குப் பின்னரும் என்னைச் சந்திக்கவில்லை.

அந்தத் தண்ணீருக்காக தமிழகம் இன்றும்கூட காத்திருக்கிறது. 40 ஆண்டுகளாகியும் அந்தச் சுவர் கட்டப்படவில்லை. அதாவது, 40 ஆண்டுகளுக்கு மேல் 1 மீட்டர் உயரம், 1,450 மீட்டர் நீளம், ரூ.10 லட்சம் செலவில் கட்ட வேண்டிய ஒரு சுவரைக் கட்ட அனுமதி அளிக்காத கேரள அரசு, அதனால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயத் தோழர்கள் வேலையில்லாமலும் லட்சக்கணக்கான மக்கள் விளைச்சல் இல்லாமலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளாத கேரள அரசு, கன்னியாகுமரிக்கு வரும் பயணிகளின் பணத்தில் கண் வைத்து விருந்தினர் மாளிகை கட்டத் தமிழக அரசிடம் இப்போது கை கட்டி நிற்கிறது.

சுவரைக் கட்ட வைகோவும், வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும், ஆமாத்தூர் ராஜேந்திரனும் விடுத்த தொடர் குரலுக்கு இதுவரை விடை இல்லை. தமிழக காவிரி தொழில்நுட்பக் குழுமம், பன்மாநில நதிநீர்ப் பிரிவு துறை 28.11.2018-இல் அனுப்பிய பதிலில், செண்பகவல்லி அணை (இதை அணை என்று கூறுவது தவறு, இது செண்பகவல்லி தடுப்புச்சுவர் மட்டுமே) எளிதில் செல்ல முடியாத கேரளத்தின் வனப் பகுதியான பெரியாறு புலிகள் சரணாலயத்தின் பகுதியில் அமைந்திருப்பதால், இந்த அணையை குடிமராமத்து முறையில் பழுது நீக்கம் செய்ய அனுமதிக்க முடியாது' என கேரள அரசு தெரிவித்து வருகிறது.

அப்படியானால், 500 மீட்டர் கடற்பகுதி பாதுகாப்பு நிலத்துக்குள் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என விதி  இருக்கும்போது  கேரள அரசு எவ்வாறு கன்னியாகுமரி கடல் அருகே கட்டடம் கட்ட முடியும்? முல்லைப் பெரியாறு அணையை உடைத்து அந்தத் தண்ணீரை கீழ்மட்டத்தில் தான் கட்டியுள்ள அணைக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் கேரள அரசு செயல்பட்டு வருகிறது.அரிசி கொடுத்து அக்கா உறவு எதற்கு' என்ற பழமொழி தென்காசி வட்டாரத்தில் பிரபலம். சகோதர உறவு என்று சொல்லிக் கொண்டு கண்ணகி கோயிலுக்குப் பாதையையும் சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிக்கு வழக்கமான தண்ணீரையும் தர மறுக்கும் கேரளத்துக்கு,  கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகை கட்ட நாம் அனுமதி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

1,450 மீட்டர் நீளத்தில் ஒரு தடுப்புச்சுவர் கட்டுவதால் புலிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அந்தச் சுவர் இருந்தால் சிறிய புலிக்குட்டிகள் மலைச் சரிவில் தவறி விழுந்து மாய்ந்து போகும் விபத்து தடுக்கப்படலாம். ஆனால், கடற்கரையில் கட்டடம் கட்டுவதால் கன்னியாகுமரி ஊருக்குள் வரும் கடற்காற்று தடுக்கப்படும் என்பது உறுதி.

கண்ணகி கோயிலுக்குப் பாதையும் செண்பகவல்லி தடுப்புச் சுவரையும் கட்ட அனுமதியும் தர மறுத்து, விருந்தினர் மாளிகை கட்ட நினைக்கும் கேரள அரசுக்கு விதியை மீறிக் கட்டடம் கட்ட அனுமதி தர வேண்டுமா என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழனும் உரத்த குரலில் எழுப்ப வேண்டும். காளைகளுக்காகப் போராடிய தமிழ்க் காளைகள், கண்ணகிக்காகவும் கண்ணீரில் மிதக்கும் கரிசல் விவசாயிகளுக்காகவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.


கட்டுரையாளர்:
மூத்த வழக்குரைஞர்

No comments:

Popular Posts