Friday, 29 November 2019

பக்குவப்படுத்தும் பயணங்கள்

பக்குவப்படுத்தும் பயணங்கள்

பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், தனியார் கல்லூரி, திருநெல்வேலி.

ந ம் இதயத்தின் ரணங்களை ஆற்றும் இயற்கை மருந்துகள் பயணங்கள். பயணங்கள் மகிழ்வலையின் கீற்றுக்கண்கள், மெல்லுணர்வின் ஊற்றுப் பண்புகள். கொதிக்கும் மனதை மயிலிறகால் வருடி ஆறுதல் தரப் பயணங்களால் மட்டுமே முடிகிறது. விரிந்த சிறகுகளை மனிதர்களுக்குத் தரும் வல்லமை பயணங்களுக்கு உண்டு. நகர்வின் தேவையைப் புரியவைத்து வாழ்வின் வலிமையைப் பயணங்கள் உணர்த்துகின்றன. பயணப்பொழுதுகளில் நாம் பாரம் மறந்த பறவைகளாகிறோம், சோகம் மறந்த குழந்தைகளாகிறோம். பண்டம் சுட்டு தான் சாப்பிடாமல் தன் பேரனுக்கும் பேத்திக்கும் ருசிக்கத் தருகிற பாட்டிகளைப் போல் இயற்கை தன்னைப் பிழிந்து தன்னை நோக்கி வருகிறவர்களுக்குப் பயணப் பொழுதுகளில் தருகிறது. பதற்றப் பொழுதுகளிலிருந்து பயணப்பொழுதுகள் விடுதலை தருகின்றன.

வேளாவேளை உணவைக் கூட மறக்கடித்துப் பட்டாம்பூச்சிகளாக பயணப்பொழுதுகள் மாற்றுகின்றன. அருந்தி முடித்த பின் அப்பால் எறிகிற வெற்று இளநீர்க்காய்களைப் போல், நம் மனதில் அப்பிய கவலைகளைக் காலிசெய்து தூர எறியப் பயணங்களே துணைபுரிகின்றன. நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்து மாய்ந்து மாய்ந்து வேலைபார்க்கும் கடினஉழைப்பாளிகளையும் பயணங்கள் பஞ்சுபோல் மாற்றி ஆகாயப்பரப்பில் அப்படியே பறக்கவைக்கின்றன.

பயணக் காலைகள் பதற்றம் இல்லாதவைகள், பயண மதியங்கள் பசிமறந்தவைகள், பயண இரவுகள் நிம்மதி நிரம்பியவைகள். மொத்தத்தில் பயணநாட்கள் நம்மை பலப்படுத்தும் நாட்கள். கடற்கரைச் சாலையில் வாகனத்தில் பயணிக்கும்போது சில்லென்று நம் முகத்தில் வீசியறைந்து செல்லும் உப்புக்காற்று, மலைகளைச் சுற்றிச்சுழன்று கீழிருந்து மேலாய் பயணிக்கும்போது நம் அடிவயிற்றிலிருந்து கிளம்பும் இனம்புரியாத உணர்வு, கண்களைக் குளுமையாக்கும் ஓங்கி உயர்ந்த பச்சைப் பசியமரங்கள், செடிகொடிகள், மலர்க்கூட்டங்கள், அந்தந்த இடங்களுக்குச் செல்லும் போது நாம் உண்ணும் அந்தந்த நிலம் சார்ந்த உணவுவகைகள், அந்தந்த மண்சார்ந்து பயணிக்கும்போது நாம் அனுபவிக்கும் அந்தந்த மண்சார்ந்த தட்பவெப்பம், அந்தந்த இடங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் நிழற்படங்கள் யாவும் நம்மை புதியமனிதர்களாய் மறுபடியும் மறுபடியும் பிறக்கவைக்கின்றன. ஆண்டுக்கு இருமுறையாவது சுற்றுலா செல்வோருக்கு இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், இருக்கும் இடத்தைவிட்டு நகர்ந்து இயற்கையின் மடியில் அமர்ந்து வருபவர்களுக்கு மனஅழுத்தம் வருவதேயில்லை என்றும் மேலைநாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயணம் பல்வேறு மொழிகளையும், பல்வேறு பண்பாடுகளையும், பல்வேறு உணவுப் பழக்கங்களையும் மதிக்கக் கற்றுத்தருகிறது. வேறுபாடுகளையும் கூறுபாடுகளையும் இணைத்துத் தைக்கும் பண்பாட்டு ஊசியாகப் பயணம் அமைகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று, எல்லா ஊரும் என் ஊரே எல்லா மக்களும் என் சொந்தம் என்று உரக்கச் சொல்லும் உன்னத உணர்வைப் பயணங்கள் நமக்குத் தருகின்றன. பயணிக்கும் பொழுதுகளில் நம் மூளை உற்சாகமாகிப் புதிய சிந்தனைகளை நமக்குள் விதைத்து நம்மைப் புதிய மனிதர்களாக்குகின்றன. மற்றவர்களை மதிக்கக் கற்றுத் தந்து பயணங்கள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. அதனால்தான் திரைகடல் ஓடித் திரவியம் தேடினார்கள் தமிழர்கள். பொருளைத் தேடுவதோடு அருளையும் தேடி தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை உலகம் முழுக்கப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

காசியில் வசிப்பவர்களுக்கு ராமேஸ்வரம் புனிதத் தலமாகவும், ராமேஸ்வரத்தில் வசிப்பவர்கள் காசிக்குச் செல்லுதல் புனிதம் என்றும் நம் முன்னோர் வகுத்தார்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடல்கடந்து இறை இல்லம் அமைந்துள்ள மெக்கா மாநகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலம் பயணம் மேற்கொள்கிறார்கள். நின்றுகொண்டே இருப்பதைவிடச் சென்றுகொண்டே இருப்பது சாலச்சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். பயணிக்கும் பொழுதுகளில் நமக்கும் நம் குடும்பத்தினருக்குமான அன்பு பெருகுகிறது, பயணம் முடித்து வீடு திரும்பும்போது நம் குடும்பத்தினருக்காக நாம் வாங்கிவரும் பொருட்கள் அவர்கள் மீதான நம் அக்கறையை அவர்களுக்குக் காட்டுகிறது. பயணப்பொழுதுகளில் நம்மோடு பயணிக்கும் சகமனிதர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும், தேவையான உயர்பண்புகளைப் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.

பயணப் பொழுதுகளில் இறுக்கமான மனிதர்கள் நெருக்கமான மனிதர்களாகின்றனர். மண்ணைப் பிசைந்து உருட்டிவைத்ததைப் போல் மாமலைகள், அதில் நட்டுவைத்த நெட்டை நெடுமரங்கள், நீள்வெள்ளிச் சேலைகளாய் நீண்டுதொடரும் நீள்நதிகள், தொடர்மழை, அடர்பனிக்காடு, கொட்டும் அருவி, நீள்பரப்பில் நீண்டுவிரியும் நீலக்கடல்பரப்பு, வானுயர் மரங்கள், தேன்நிகர் மொழிகள், கருப்புப் பாம்பாய் நம் வாகனத்தின் முன் நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள், அன்பைச் சிந்தும் அற்புதமான மனிதர்கள் என்று எங்கெங்கு காணினும் பயண அழகுகள். சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணம், இந்தியப் பண்பாட்டினை உலகுக்கு உணர்த்தியது. மகாத்மா காந்திஜி மேற்கொண்ட தென்னாப்பிரிக்கப் பயணம் அவரை இந்திய சுதந்திரப் போரின் தளபதியாக்கியது. அன்னை தெரசாவின் கல்கத்தா பயணம் அவரை உலகின் அன்னையாக்கியது.

சீனப் பயணியான யுவான்சுவாங் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் இந்தியாவின் புகழையும் தொன்மைச் சிறப்பையும் உலகுக்கு அழுத்தமாய் உணர்த்தியது. இத்தாலி நாட்டுப் பெருங்கடல் மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம் அமெரிக்காவை உலகின் முன் கண்விரியக் காட்டியது. போர்சுக்கல் நாட்டுக் கடற்பயணி மேற்கொண்ட கடற்பயணம் இந்தியாவுக்கான கடல்வழியை உலகுக்குக் காட்டியது. கடலோடிகளிடமிருந்தும் நாடோடிகளிடமிருந்தும் தேசாந்திரிகளிடமிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பயணிக்கிறவர்கள் பல பண்பாடுகளைப் படித்தறிந்தவர்களாகத் தானிருப்பார்கள். வாழ்வை நீட்டிக்கும் வலிமை சுற்றுலாவுக்கு உண்டு. பொருளைச் சேமித்தால் அவை கொள்ளை போகலாம். நினைவுகளைச் சேமிக்க வேண்டுமானால் அது பயணித்தால் மட்டுமே முடியும்.

தாமிரபரணியில் தொடங்கி ஆந்திரத்தின் வயற்காடுகள்மீது தொடர்வண்டியில் பயணித்து, நாக்பூர் மண்குவளையில் தேநீர் அருந்தி, தாஜ்மகாலை நிறைமதியொளியில் கண்டுரசித்து, சண்டிகர் சென்று சிம்லாவின் மலைக் காடுகளைத் தரிசித்து குங்குமப்பூ உண்டு, மனாலியின் பனிமலைகளில் பனிச்சருக்காட வைத்து பாரததேசமென்று தோள் கொட்டவைத்து தேசிய ஒருமைப்பாட்டினை போற்றுவோம்.

No comments:

Popular Posts