Friday, 29 November 2019

கலைவாணரின் கொடை உள்ளம்

கலைவாணரின் கொடை உள்ளம்

சுப்பு ஆறுமுகம், வில்லிசை கலைஞர்,

இ ன்று (நவம்பர் 29-ந்தேதி) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்.

திரைப்படத்தில் நகைச்சுவை என்பதற்கு சார்லி சாப்ளினுக்கு பிறகு ஒரு பெரிய சிகர உச்சியைத் தொட்டவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் திரைப்பட புகழுக்குப்பின் அவரது மனம் பாண்டியநாட்டு கலையான வில்லிசையை வளர்க்க வேண்டும் என்று விரும்பியது.

அந்த சமயத்தில் தான் அவர் என்னை (சுப்புஆறுமுகம்) சந்தித்தார். அப்போது எனக்கு 16 வயது. நான் நெல்லை-பாளையங்கோட்டை பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். நம்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலம். பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்க என்.எஸ்.கிருஷ்ணன் வந்து இருந்தார். அப்போது நடந்த கலைநிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு பாடினேன். அதில் ஒரு பாட்டு.

‘காந்திபேரை சொன்னவுடன்

கம்பெடுத்து வந்தவங்க

கண்முன்னாலே அதே கம்பில்

காந்தி கொடி கட்டினாங்க’

என்று வரும் அதை நான் பாடி முடித்ததும் பலத்த கைத்தட்டல். கலைவாணரும் அதை மிகவும் விரும்பி ரசித்தார். பின்னர் என்னை பாராட்டி, நான் பாடிய பாட்டுக்கு விளக்கம் கேட்டார். அப்போது அவரிடம் “ஐயா, எங்க திருநெல்வேலியில் இரண்டு விதமான மக்கள் இருந்தாங்க. ஒன்று சுதந்திரம் கிடைக்கும்னு சொன்னவங்க... இன்னொரு தரப்பினர் சுதந்திரம் கிடைக்காதுன்னு சொன்னவங்க...”

இவங்க சுதந்திரத்துக்கு முதல்நாள் காந்திஜிக்கு ஜே என்று சொன்னா... தடி எடுத்துட்டு வருவாங்க... ஆனா சுதந்திரம் கிடைச்சவுடனே அந்த தடியை கொடியாக மாத்திட்டாங்க...

முதல்நாள் வரையிலும்...தடி

மறுநாள்... கொடி

இந்த பக்கம் வந்து வாழ்த்த ஆரம்பிச்சிட்டாங்க அதனால் தான் அதே ‘கம்பில்’ன்னு போட்டேன் என்று கூறினேன். இதைக்கேட்டதும் கலைவாணர் என்னை கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார்.

கடைசியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கலைவாணரிடம், உங்களுக்கு என்ன பரிசு தரவேண்டும் என்று கேட்க, எனக்கு சிறுவன் ஆறுமுகத்தையே வில்லுப்பாட்டு எழுத பரிசாக தாருங்கள் என்று கேட்க, பள்ளித் தலைமை ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். அதன் பின்னர் எனது தாயாரை சந்திக்க என்.எஸ்.கிருஷ்ணன் எங்கள் வீட்டுக்கு வந்தார். அந்த ஊரே ஒன்று கூடிவிட்டது. எங்கள் வீட்டுக்கு வந்த அவரை என் அம்மா வரவேற்று, உபசரித்து விருந்து அளித்தார். அதன்பிறகு கலைவாணர் என் அம்மாவிடம், உங்கள் பிள்ளையை என்கூட மெட்ராசுக்கு பாட்டு எழுத கூட்டிட்டுப்போறேன் ஆசீர்வாதம் பன்னி அனுப்புங்க என்றார்.

அம்மா யோசனை செய்தபடியே ’கிருஷ்ணா மெட்ராஸ் எங்கிருக்கு? மதுரைக்கும் வடக்கேயா’? என்று தயக்கத்துடன் கேட்டார். அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் அம்மா நான் திருநெல்வேலிக்கும் தெற்கே இருந்துல்லே போயிருக்கேன் ஒன்றும் பயப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதல் கூறினார். பின்னர் எனக்கு அம்மா திருநீறு பூசினார். என்.எஸ்.கிருஷ்ணாவுக்கும் திருநீறு பூசி விட்டார். பின்னர் என்.எஸ்.கிருஷ்ணன் என்னை அழைத்துக்கொண்டு காரில் சென்னை கிளம்பினார். நீண்ட நேரமாகியும் கலைவாணர் விபூதியை அழிக்கவில்லை. அவரிடம் நான் மெதுவாக அண்ணே நீங்கள் நடிக்கும் நாடகத்தில்கூட விபூதி வைக்க மாட்டீங்களே! அம்மா பூசிய விபூதி அப்படியே இருக்கே... என்று கேட்டேன். அதற்கு அவர் சுப்பு! கண்காணாத தெய்வத்துக்காக.. கண்கண்ட தெய்வம் தாய் மனது வேதனைப்பட வைக்கக்கூடாது என்று கூறியதோடு மட்டுமின்றி அந்த விபூதி தானாக அழியும் வரை அதை அழிக்கவில்லை. அந்த பெருந்தன்மைக்கு பகுத்தறிவு பக்தி என்று பெயர் வைக்கலாம் என்று எனக்கு தோன்றியது.

கலைவாணர் பாசறையில் பல கலைஞர்கள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் எதாவது பரிசுப் பொருளை கொடுத்துக்கொண்டே இருப்பார். நான் அவரிடம் எதுவுமே கேட்டதில்லை. ஒருநாள் நான் கலைவாணரிடம் சென்று தயக்கத்துடன் அவருக்கு கொழும்பில் பரிசாக கொடுத்த காந்திஜி சிலையை கொடுக்கும்படி கேட்டேன் அப்போது கலைவாணர் என்ன சொன்னார் தெரியுமா?

சுப்புஆறுமுகம்! நீ ஒண்ணுமே கேட்காதவன். கேக்கறே.... இந்தா வச்சுக்கோ... என்ற மகிழ்ச்சியோடு காந்தி சிலையை என்னிடம் கொடுத்தார். கொஞ்சநேரம் கழித்து, “ஏய்... சுப்புஆறுமுகம்.. மேலும் அது இங்க இருக்கிறதை விட உன் வீட்டிலே இருக்கிறது தான் நல்லது... உத்தமம். என்று கூறினார். நான் அதை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன். இன்றும் என்வீட்டில் அந்த காந்தி சிலையை கலைவாணரின் நினைவாய் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.

கலைவாணர் எப்போதாவது படப்பிடிப்புக்காகவோ, கச்சேரிக்காகவோ தனது குழுவினருடன் குற்றாலத்துக்கு செல்வது வழக்கம். அப்போது நடந்த ஒரு சம்பவம். அங்கு ஒரு பாட்டி கலைவாணர் எப்போது குற்றாலம் சென்றாலும் அவரை சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு செல்வார். கலைவாணரும் அந்தப்பாட்டிக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுப்பார். கடைசி காலத்தில் அவருக்கு உடம்பும் சரியில்லை. வசதி வாய்ப்புகளும் இல்லை. அந்ததடவை அவர் குற்றாலம் சென்றபோது அவரை அந்தபாட்டி சந்தித்து கிருஷ்ணா என்று மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டே பக்கத்தில் சென்றார். அவரைப்பார்த்த கலைவாணர் ஜிப்பாவில் கையைவிட்டுதேடி பார்த்த போது ரூ.5மட்டுமே கிடைத்தது ஒருகாலத்தில்பாட்டிக்கு ரூ.500 கொடுத்தார் பின்னர் ரூ.300 கொடுத்தார். அப்புறம்கடைசியாக சந்தித்த போது ரூ.10 கொடுத்தார். தற்போது 5ரூபாயை எடுத்து இந்தா வச்சுக்கப்பாட்டி என்று கொடுத்துவிட்டு கண்ணீர்விட்டு அழுதார். உடனே அந்த மூதாட்டி ஏன் கிருஷ்ணா அழுதே? நீதான் எனக்கு நல்லாதானே கொடுத்தே என்று கேட்ட போது கலைவாணர் சொன்ன வார்த்தை இதுவரை யாரும் சொல்லாதது.

ஒண்ணுமில்லைபாட்டி. அதெல்லாம் உனக்கெதுக்கு.... என்கவலை என்னோட இருக்கட்டும் என்றார். இல்லப்பா, சொல்லப்பா என்ற பாட்டி வற்புறுத்தி கேட்டதும் அவர் சொன்னார். உனக்கு தெரிந்து எத்தனை வருடமாக இங்கே வருகிறேன். வசதியாக இருந்தபோது, நிறைய கொடுத்தேன். போனமுறை ரூ.10 கொடுத்தேன். இப்ப தேடி தேடி பார்த்து 5 ரூபாய் கொடுத்தேன் எனக்கு ஒரே ஒரு எண்ணம் தான். அடுத்த முறை நான் குற்றாலம் வந்து, நீயும் என்னிடம் வந்து கேட்கும் போது உனக்கு கொடுக்கிறதுக்கு எதுவும் இல்லையே பாட்டி என்று நான் சொல்வதற்குள் என்னை கடவுள் மேலே கூப்பிட்டுக்கொள்ளனும் என்றார். இதைக்கேட்டு நெகிழ்ந்துபோன அந்த மூதாட்டி கலைவாணரை கட்டிப்பிடித்து அழுதார். ஒரு இரக்கம், இதேமாதிரி ஒரு கருணை, கொடுக்கும் கொடை குணம் எப்பேர்பட்ட வரம். இதுகலைவாணி கலைவாணருக்கு தந்த மிகப்பெரிய வரம்.

கலைவாணர் கருணைக்கு இன்னொரு சான்று படப்பிடிப்புக்கு சென்ற சமயத்தில் ஒரு கலைக்கூத்தாடி நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்த இடத்துக்கு கலைவாணரும், அவரது குழுவினரும் சென்றனர். கலைவாணர் போனவுடன் ஏகபோக வரவேற்பு. கலைக்கூத்தாடி உற்சாகமாக வரவேற்றார். பின்னர் ஒவ்வொரு வித்தையாக காட்டினார். அதை பார்த்து கலைவாணர் பலத்த கரகோஷம் கொடுத்து ரசித்தார். முக்கியமான வித்தையை காட்ட வேண்டும் என்று நினைத்த கலைக்கூத்தாடி ஒரு குழந்தையை படுக்க வைத்து அதன் கழுத்தில் வாழைக்காயை வைத்து வெட்ட முயற்சித்தார். இதைப்பார்த்த கலைவாணர், வயிற்றுப்பிழைப்புக்காக ஒரு குழந்தையின் கழுத்தில் வாழைக் காயை வைத்து வெட்ட வேண்டுமா? என்று மனம் தாங்காமல் நேராக சென்று அந்த கலைக்கூத்தாடியின் கையைப்பிடித்து, ‘ஏய் உன் வித்தை நன்றாக இருந்தது. ஆனால் இனிமேல் இந்த வித்தையை மட்டும் எங்கும் செய்யாதே என்று கூறி உனக்கு பெரிய பரிசு தருகிறேன் என்றுகூறி பெரியதொகையை கொடுத்து வித்தை ரொம்ப நல்லா இருக்கு எல்லா வித்தையும் காட்டு இந்த வித்தையை மட்டும் எங்கும் செய்யாதே ஏம்பா எப்பவாவது குழுந்தை கழுத்தில் வெட்டினா என்னாகும் பிள்ளை பாவம் இல்லையா? இனிமே அந்த வித்தையை மட்டும் எங்கும் செய்யாதே என்று கூறிவிட்டு சென்றதும் ஏகபோக கரகோஷம். அந்த கலைக்கூத்தாடிக்கு மகிழ்ச்சி, கலைவாணரின் கருணையை நினைத்து கண்ணீர் விட்டார். காலம் உள்ளவரை கலைவாணர் புகழ் நிலைத்து இருக்கும்.

No comments:

Popular Posts