Saturday 30 November 2019

உயிரியல் சித்தர் ஜெகதீஷ் சந்திர போஸ்

உயிரியல் சித்தர் ஜெகதீஷ் சந்திர போஸ்

ஜெகதீஷ் சந்திர போஸ்

நா.சு.சிதம்பரம், இயற்பியல் ஆசிரியர் (ஓய்வு) (அறிவியல் விழிப்புணர்வு பணிக்குத் தேசிய விருது பெற்றவர்).

இ ன்று (நவம்பர் 30-ந் தேதி) அறிவியலறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்தநாள்.

வானொலியைக் கண்டுபிடித்த அறிஞர் ‘மார்க்கோனி’க்கு முன்னால் அந்தக் கண்டுபிடிப்புக்கான அடிப்படை முறையை உருவாக்கியவர் இந்திய அறிவியலறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ். இவர் மட்டும் தன்னுடைய கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை அன்றே பெற்றிருந்தால் வானொலியைக் கண்டுபிடித்த பெருமை இந்தியருக்கே சேர்ந்திருக்கும்.

ஜெகதீஷ் சந்திரபோஸ் 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி பழைய வங்காள மாநிலத்தில், விக்ரம்புரி மாவட்டத்தில் உள்ள ராரிக்கல் என்ற கிராமத்தில் (தற்போது வங்காள தேசத்தில் உள்ளது) பகவான் சந்திரர் என்பவருக்கும், அபலா போஸ் என்ற அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பகவான் சந்திரர் துணை நீதிபதியாகப் பணியாற்றியவர். ஏழைகள் படிக்கும் வங்காளப் பள்ளியில் உயர்குடும்பத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சேர்ந்து படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள புனித சவேரியர் கல்லூரியிலும் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்று கலையில் பட்டமும், பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டமும் பெற்றார். தாயகம் திரும்பியபின், ரிப்பன் பிரபுவின் பரிந்துரை காரணமாக கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியரானார். ஆங்கிலப் பேராசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும்போது இந்தியப் பேராசிரியர்களின் சம்பளம் மூன்றில் இரண்டு பங்காக இருந்தது. இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஜெகதீஷ் மூன்றாண்டுகள் ஊதியம் வாங்காமல் பணியாற்றினார். இவருடைய திறமையையும், உழைப்பையும் கண்டுணர்ந்த கல்லூரி முதல்வர் மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து முழுச்சம்பளத்தையும் இவருக்கு வழங்கினார். பணியாற்றிய காலங்களில் இவர் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார். அதற்கான ஆய்வுக் கருவிகளைப் பெறுவதில் இந்தியன் என்ற முறையில் இவர் பல சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது. எனவே, இவரே தனக்குத் தேவையான கருவிகளைச் சொந்தமாக உருவாக்கிக் கொண்டார். குறுகிய மின்னலைகளைப் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இவருடைய கட்டுரையை இங்கிலாந்தில் உள்ள ராயல் கழகம் வெளியிட்டது. வங்காள அரசு இவருடைய ஆய்வுகளுக்கு உதவி புரிய முன் வந்தது. 1896-ல் லண்டன் பல்கலைக் கழகம் இவருக்கு முனைவர் பட்டம் அளித்தது.

வங்காள ஆளுநரின் தலைமையில், பல அறிவியலறிஞர்கள் முன்னிலையில் போஸ் தன்னுடைய ஆய்வுகளைச் செய்து காட்டினார். வேறொரு அறையிலிருந்து மின்னலையினால் மணியை ஒலிக்கச் செய்தார். தன்னுடைய மேசையில் இருந்த கருவியின் குமிழை இவர் அழுத்திய போது அந்த மணியின் ஒலி தெளிவாகக் கேட்டது. குமிழை அழுத்தியதை நிறுத்தியதும் மணியோசை நின்றுவிட்டது. அது போலவே ஓர் அறையில் மேசை மீது இருந்த பொருளை வேறொரு அறையில் இவருடைய கருவியின் மூலம் கீழே விழும்படிச் செய்தார். இரு அறைகளுக்கும் எந்தவிதக் கம்பித் தொடர்பும் இல்லாமல் இவற்றைச் செய்து காட்டினார். கம்பியில்லாத் தந்தி, வானொலி முதலியன தோன்றுவதற்கு இவருடைய இந்த முறைகள்தான் அடிப்படையாக அமைந்தன. இவர் கண்டுபிடித்த இந்த முறையின் அடிப்படையில்தான் பிறகு மார்க்கோனி வானொலியைக் கண்டுபிடித்தார். எனவே, வானொலித் தத்துவத்தை முதலில் உலகிற்கு வழங்கியவர் நம் நாட்டறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ்.

குமிழிகளை உருவாக்கப் பயன்படும் பொருள்களைப் பற்றி ஆய்வு செய்தபோது, சில பொருள்களில் மின்காந்த அலைகள் பட்டால் தொடுகை மின்தடை குறைந்தது. வேறு சில பொருள்களில் அதிகரித்தது. இதை ‘மின்தொடு உணர்வு’ என்று இவர் குறிப்பிட்டார். இப்பொருள்களில் மின்காந்த அலைகளைத் தொடர்ந்து பாய்ச்சிக் கொண்டிருந்தால் மின் தொடு உணர்வு பழைய அளவிற்கு மீண்டது, இது போன்ற விளைவுகளை உயிரித் திசுக்களிலும் காண முடிவதை போஸ் கண்டறிந்தார்.

செலினியம் என்ற தனிமத்தில் ஒளி படும்போது அதன் மின்கடத்து திறனில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதே ஆய்வை ஐரோப்பாவில் ஷெல்போர்டு பிட்வெல் என்பவரும் செய்து கொண்டிருந்தார். செலினியத்தில் ஏற்படும் ஒளி மின் விளைவுகளையும் அரைக்கடத்திகளின் மின் திருத்திப் பண்புகளையும் பற்றிய கண்டுபிடிப்புகளில் இவர்கள் இருவருக்கும் சம பங்கு உண்டு.

வெவ்வேறு தூண்டல்களின் காரணமாகப் பொருள்களில் வெவ்வேறு விளைவுகள் ஏற்படுவதை விளக்க மூலக்கூறு தகைவுதிரிபுக் கொள்கை ஒன்றை போஸ் வெளியிட்டார். இரு கண் பார்வையில் ஏற்படுகின்ற மாற்றங்களை விளக்குவதிலும் இவர் வெற்றி பெற்றார். ஒளியின் நிறப்பிரிகை நிகழ்வில் ஏழு ஒளிக்கதிர்களுக்கு மேலும், அவற்றைக் கண்ணால் காண முடியாத மின் காந்த அலைகள் உண்டு என்பதை உணர்த்துவதற்காகக் கருவி ஒன்றை அமைத்தார். அது ‘செயற்கைக் கண்’ என்று கூறப்பட்டது.

அடுத்து உயிரற்ற பொருள்கள், தாவரங்களைப் பற்றியும் ஆராய்ந்தார். தாவரங்களுக்கு உணர்வுகள் உண்டு; அவற்றில் தூண்டல்களை ஏற்படுத்துகின்ற பதில் விளைவுகளைப் பற்றிப் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி ராயல் கழகத்திற்கு அனுப்பினார். அது பற்றி நேரிலும் சென்று பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஆனால் அங்கு கூடிய அறிஞர்கள் குழு அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. தாவரங்களின் பதில் விளைவுகளை உருப்பெருக்கிக் காட்டக்கூடிய கருவிகளை ஒளி நெம்புகோல் முறையைப் பயன்படுத்தி உருவாக்கினார். ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் நிகழ்கின்ற விளைவுகளைக் கூடப் பதிவு செய்யும் ‘ஒத்ததிர்வுப் பதிவி’, 1914-ல் இலைத் துளிர்களின் அலைவுகளைப் பதிவு செய்யும் ‘அதிர்வுப் பதிவி’, 1917-ல் தாவரங்களின் நீளவளர்ச்சியை அளவிட உதவும் கூட்டு நெம்புகோல் கிரெஸ்கோகிராப் என்ற கருவிகளை உருவாக்கித் தன்னுடைய ஆய்வுகளின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினார். இவருடைய ஆய்வுக்கட்டுரைகளை ராயல் கழகமும் தாவர இயல் கழகமும் வெளியிட்டன. செடிகள் அடிபட்டால் அழுகின்றன. மயக்க மருந்தைச் செலுத்தினால் மயங்குகின்றன, உறங்குகின்றன, விழிக்கின்றன என்று தாவரங்களுக்கும் அனைத்து உணர்வுகளும் உண்டு என்பதைத் தெளிவாக விளக்கினார். ‘தொட்டால் சிணுங்கி’ என்ற செடி மனித நாக்கின் உணர்வை விடப் பத்து மடங்கு அதிக உணர்வுடையது என்பதைக் கண்டறிந்து அறிவித்தார்.

1915-ல் இவர் ஓய்வு பெற்றபோது இந்திய அரசு இவருக்குச் ‘சர்’ பட்டம் அளித்துச் சிறப்பித்ததுடன் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்த ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடையும் வழங்கியது. இவர் ஐந்து லட்சம் ரூபாயைக் கொண்டு சிறந்த ஆய்வு நிலையம் ஒன்றை உருவாக்கினார். 1917-ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இவருக்கு ‘நைட்’ என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தார்.

1920-ல் ராயல் கழக உறுப்பினரானார். அதே ஆண்டில் தாவர வளர்ச்சி வீதத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட சமநிலையாக்கிக் கருவியையும், தாவரங்களின் மின் செயல்களை அளவிட நுண் மின்வாய்களைப் பொருத்தும் உத்தியையும், 1922-ல் ஒளிச்சேர்க்கை வீதத்தை அளவிட ஒரு கருவியையும், 1927-ல் வெப்பம், குளிர், நச்சு அல்லது தூண்டிகளின் விளைவாகத் தாவரங்களின் விட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை அளவிட உதவும் ‘விட்டச் சுருக்கம்’ என்ற கருவியையும் உருவாக்கினார். இக்கருவிகள் அனைத்தும் உராய்வின்றித் தடையற்ற இயக்கத்தில் செயல்படுமாறு செய்ததுதான் இவருடைய மாபெரும் சாதனை.

வங்காள மொழிக் கட்டுரைகளில் இவருடைய மொழிநடை இலக்கிய வளம் பெற்றதாக அமைந்திருந்தன. அறிவியலறிஞர்களில் ஒரு கவிஞர். நாடகமேதை பெர்னார்ட் ஷா இவருக்குத் தனது நூல்களை “மிகச் சிறந்த உயிர்நூற் புலவருக்கு” என்று எழுதிப் பரிசாக அனுப்பி வைத்தார். இந்தியாவின் பெருமைக்கு வளம் சேர்த்த இயற்பியல், உயிரியல் துறைகளில் சிறந்து விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் 1937-ம் ஆண்டு அவர் பிறந்த அதே நவம்பர் மாதத்தில் 23-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

No comments:

Popular Posts