Friday 21 December 2018

முதியோரை அரவணைக்கும் எந்திர குழந்தைகள்

முதியோரை அரவணைக்கும் எந்திர குழந்தைகள் சு.பாலக்குமார், எழுத்தாளர் மனிதன் தனது வாழ்க்கையில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என்ற பாதையை கடந்து போகிறான். அதில் முதுமை மிகவும் பசுமையானது. வாழ்வில் சந்தித்த சுகமான அனுபவங்களையும், துன்ப நினைவுகளையும் அசைபோடும் பருவம். எதையும் சீர்தூக்கி பார்த்து, நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் பருவம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் முதுமை என்பது சுகமாக இல்லாமல், பலராலும் சுமையாகவே பார்க்கப்படுகிறது. இவர்களால் என்ன பயன்? வேண்டாத சுமைதானே, என்ற எண்ணம் வீட்டில் உள்ளவர்களின் மனதில் பதிந்து விட்டது. பெரும்பாலான இடங்களில் முதியவர்கள் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதனால்தான் முதியோர் இல்லங்களும், காப்பகங்களும் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. முதுமை வந்தவுடன் உடல் தளர்வடைந்து விடுவதால், உடல்ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஞாபக மறதி, கண்பார்வைக் குறைபாடு, காது கேளாமை, நடையில் தடுமாற்றம், மயக்கமடைந்து கீழே விழுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அவர்களை தொற்றிக் கொள்கின்றன. அதிலும் சிலர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களின் பிடியில் சிக்கி விடுகின்றனர். இதனால் மருத்துவரை நாட வேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகிறது. தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பொதுவாக சாதாரணமாகவே முதியவருக்கு பிறரின் துணை தேவைப்படும். நோய்வாய்ப்படும்போது மற்றவர்களின் துணை மிகவும் அவசியமாகிறது. முதியவர்கள் பலர் தனது மனைவி உயிருடன் இருக்கும்போது நன்றாக கவனிக்கப்படுகிறார். மனைவி இறந்தவுடன் பிள்ளைகளோ, மற்றவர்களோ அவர்களை ஏறெடுத்து கூட பார்க்காமல் விட்டு விடுகின்றனர். அப்படியானால் முதியவர்களின் கதி என்ன? அவர்களை யார் கவனிப்பார்கள்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் இன்றைய உலகில் மனிதர்களோடு ஒன்றிவிட்ட ரோபோக்கள் என்பதுதான். ரோபோவால் முதியவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்? என்று கேட்டால் முடியாது என நம்மால் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்று பல நாடுகளில் மனிதர்களுக்கு அதுவும் முதியவர்களுக்கு நண்பனாக, உறவினராக, அன்புக்குரியவராக உதவி புரிவது ரோபோக்கள்தான். முதலில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது தொழிற்சாலைகளில் வேலை பார்க்கத்தான் அதனை பயன்படுத்தினார்கள். இன்றோ பல நாடுகளில் உள்ள வீடுகளிலும் குடும்பத்தினர்களின் ஒரு அங்கமாகவே ரோபோக்கள் மாறி விட்டது. இதெல்லாம் சரி, ரோபோக்களால் முதியவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? பணியின் அடிப்படையில் ரோபோக்களை 3 வகையாகப் பிரிக்கலாம். முதலாவது பொருட்களைத் தேடிக்கொண்டு வருபவை. இரண்டாவது தகவல் தொடர்புக்கு உதவுபவை. மூன்றாவது மனிதனுக்கு உணர்வுப்பூர்வமாக உதவுபவை. முதலாம் வகை ரோபோக்கள், சமையல் அறையில் இருந்து உணவு மற்றும் குடிநீரை எடுத்துக்கொண்டு முதியவர்களுக்கு தருகின்றன. இதுதவிர இரவு நேரங்களில் மின்சார சுவிட்சுகளை அணைப்பது, முதியவர்களை குளிக்க வைப்பது, உடை உடுத்துவது, அவர்கள் எழுந்து நிற்க துணை புரிவது, சமைத்து கொடுப்பது, மருந்துகளை எடுத்துத் தருவது, துணிமணிகளைத் துவைப்பது என முதியவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் திறம்பட செய்கிறது. இரண்டாம் வகை ரோபோக்கள் சேவை புரிவதோடு, தகவல் தொடர்புக்கும் பயன்படுகின்றன. வீடியோ அழைப்புகள் மூலம் முதியவர்களின் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களுடன் அவர்கள் தொடர்புகொள்ள உதவி புரிகின்றன. அறையின் வெப்பநிலையை உணர்ந்து அதனை மாற்றி அமைக்கின்றன. எப்போது மருந்து சாப்பிட வேண்டும்? எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்? என்பதையெல்லாம் முதியவர்களுக்கு அவை நினைவுப்படுத்துகின்றன. நோய்வாய்பட்ட முதியவர்கள் தங்கள் கையில் மணிக்கட்டில் ஒரு கடிகாரம் போன்ற உறையை மாட்டிக்கொண்டால், அது அவர்களுடைய இதயத்துடிப்பு, உடல் வெப்பம், ரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து அறையில் உள்ள கேமரா மற்றும் தொழில்நுட்ப சாதனம் மூலமாக மருத்துவமனைக்குத் தகவல் கிடைத்து விடும். இதன்பின்பு நோயுற்ற முதியவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதனால் அவசர காலங்களில் இந்த கையுறையை ரோபோக்கள் முதியவர்களின் கைகளில் பொருத்தி விடுகின்றன. மூன்றாம் வகை ரோபோக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவும், அதனை வெளிப்படுத்தும் வகையிலான திறனுடனும் அமைக்கப்படுகின்றன. நாம் வாழ்த்துத் தெரிவித்தால் ரோபோவும் மறுவாழ்த்து தெரிவிக்கும். முதியவர்களின் மகிழ்ச்சியையும், சோகத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதியவர்களுடன் உரையாடக்கூடிய வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருவதால் அவர்கள் தனிமையை உணர மாட்டார்கள். முதியவர்களுக்கு ஊசி மருந்துகளைச் செலுத்துவது, நகங்களை வெட்டுவது போன்ற பணிகளைச் செய்யும்படி ரோபோக்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் மனிதர்களுக்கு ரோபோக்கள் உதவி சாத்தியமா? என்ற கேள்வி எழலாம். நமது நாட்டில் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூட உணவகம் ஒன்றில் ரோபோக்கள் உணவு பரிமாறும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அவை நமது நாட்டில், நம் குடும்பத்தில் ஒருவராக பங்கேற்பதற்கு நீண்ட காலம் ஆகாது. 2035-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டில் மூன்றில் ஒருவர் 65 வயதைத் தாண்டிய முதியவராக இருப்பர் என்பதால் அந்த நாடு ரோபோக்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க நாட்டில் 2060-ல் ஆறில் ஒருவர் முதியவராக இருப்பார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2026-ம் ஆண்டில் 17 கோடி முதியவர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. முதியவர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்கள் தயாரிப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதனால் வருங்காலத்தில் ரோபோக்கள் நம்முடன் ஒருவராக நடமாடும் காலம் வெகு தொலைவில் இல்லை. என்னதான் ரோபோக்கள் முதியவர்களுக்கு உதவிபுரிந்தாலும், அவர்களுடைய மகனோ, மகளோ, உறவினர்களோ உதவி செய்வது போல் ஆகிவிடுமா? என்று எண்ணத்தோன்றும். எந்திர மனம் கொண்ட மனிதர்கள் முதியவர்களை தனியாக தவிக்க விட்டு விடுகின்றனர். அவர்களை ஒப்பிடும்போது மனித மனங்களை கொண்ட எந்திரங்கள்(ரோபோக்கள்) வயோதிகர்களை அவர்களை விட நன்றாக கவனித்துக்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

No comments:

Popular Posts