Friday 21 December 2018

மகத்துவம் மிக்க வாழை இலை குளியல்

மகத்துவம் மிக்க வாழை இலை குளியல் தி.தட்சிணாமூர்த்தி, மூலிகை உடலியக்க மருத்துவர், தஞ்சை இன்றைய சூழ்நிலையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நாகரிகம் என்ற பேரில் இயற்கைக்கு மாறாக ஒருபுறம் பல்வேறு செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இருந்தாலும் மறுபுறம் இயற்கை சார்ந்த விவசாயம், பாரம்பரிய உணவு முறைகள், பாரம்பரிய வைத்திய முறைகள் என நமது முன்னோர்கள் சொல்லி தந்த பல்வேறு பழக்க, வழக்கங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் வாழை இலை குளியல். அது என்ன வாழை குளியல் என்கிறீர்களா? நமது சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த இந்த வாழை இலை குளியல் தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. வாழை மரம், மக்களை வாழ வைக்கும் மரம் என்று கூறுவது உண்டு. வாழை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களுமே மனிதர்களுக்கு மிகுந்த பயன் அளித்து வருகிறது. வாழை கிழங்கு செயலிழந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்கும். சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு, நீர்குத்தல், விட்டு விட்டு வரும் சிறுநீர், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் தாரையில் ஏற்படும் சதை அடைப்பு, சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் இரண்டு கால் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. வாழை தண்டு, வாழைப்பூவில் செய்யப்படும் பல்வேறு பாரம்பரிய உணவுகள் நம்மோடு இணைந்து வருகிறது. வாழை இலையில் சாப்பிடுவது என்பது ஒரு தனி சுவையாக இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு சாப்பிடுவர்களுக்கு முகம் பிரகாசமாக இருக்கும் என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் வாழை சருகுகள், வாழை இலை நார் ஆகியவை பூ கட்ட உதவுகிறது. சரி...இனிமேல் வாழை இலைக் குளியலின் மருத்துவத்தையும், மகத்துவத்தையும் பார்ப்போம் இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் இந்த வாழை இலைக் குளியலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். உடல் முழுவதும் நீளமான 2 வாழை இலைகளை கீழே நீளவாக்கில் போட்டு அதன்மேலே வாழை இலை குளியல் செய்ய உள்ள நபரை படுக்க வைக்க வேண்டும். பின்னர் அவர் உடல் மேல் மேலும் மூன்று நீளமான வாழை இலைகளை வைத்து உடல் முழுவதும் மூன்று முதல் நான்கு இடங்களில் இறுக்கம் இல்லாமல் கட்டிவிட வேண்டும். மூக்கு மற்றும் கண் பகுதியில் சிறிது துவாரம் விட வேண்டும். இதுபோல உள்ள நிலையில் இளம் வெயில் நேரத்தில் 45 நிமிடம் இருக்க வேண்டும். அவ்வப்போது வாழை இலை குளியலில் ஈடுபட்டவரிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக அவிழ்த்துவிட வேண்டும். தொந்தரவு இல்லை என்றால் குறித்த நேரம் வரை வைத்திருக்கலாம். சரியாக வைத்து அவிழ்த்து பார்க்கும்போது உடலில் இருக்கும் கெட்ட நீர்களை அதிக அளவில் வெளியேற்றிவிடும். இதுபோல தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த வாழை இலை குளியலை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம். மேலும் இந்த வாழை இலை குளியலோடு புற்றுமண் குளியல், மூலிகை தைல குளியல், மூலிகை வெந்நீர் குளியல், மூலிகை பற்று போன்ற பலவகையான சிகிச்சையை சேர்த்தும் செய்யலாம். வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைவியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய்களை விரட்டி அடிக்கலாம். மேலும், காளஞ்சகபடை(அவசியம் தொடர்ந்து போட வேண்டும்), முழங்காலுக்கு கீழே ஏற்படும் கால் நரம்புவலி, உடல் சோர்வு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச மண்டலம் நன்கு செயல்பட்டு மூச்சு நன்கு இழுத்துவிட உதவுவது போன்ற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் வாழை இழை குளியல் அமைகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியையும், புதுப்பொலிவையும் தரும். உடலில் உள்ளுறுப்புகளுக்கும், வெளிஉறுப்புகளுக்கும் மகத்துவம் தரும் ஒரு இயற்கை மருத்துவம் இது ஆகும். வாழை இலை குளியல் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை:- வாழை இலை குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகள் சாப்பிட்டிருக்கலாம். எளிமையான கதர் துணி அணிந்திருந்தால் நல்லது. நெற்றி பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத்துணியை கட்டியிருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் குடித்து இருக்க வேண்டும். அவரின் உறவினர்கள் ஒருவர் உடன் இருப்பது நல்லது. வாழை இலை குளியல் முடிந்து இலைகளை அவிழ்த்த பிறகு அந்த இலைகளை கால்நடைகள் சாப்பிடாத வகையில் ஒதுக்குபுறமாக போட்டுவிட வேண்டும். உடலில் உப்புநீர் மேலே படிந்திருக்கும் சூழல் இருப்பதால் சற்று நேரம் கழித்து ஒரு சிறு குளியலை போட்டுக் கொள்ளலாம். என்ன வாழை இலை குளியலுக்கு நீங்க ரெடியாகிட்டீங்களா?.

No comments:

Popular Posts