Thursday 20 December 2018

மக்கள் மனநலமும் அரசின் பொறுப்பே...!

மக்கள் மனநலமும் அரசின் பொறுப்பே...! முதுமுனைவர்.குணா.தர்மராஜா மன நலத்துறை என்பது இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. மன நலமில்லாதவர்களை சூனியக்காரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சமூகத்தை விட்டு தள்ளிவைத்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மனநலம் என்பது உடல் நலத்தைப் போன்றதுதான், எப்படி உடலுக்கு காய்ச்சல் மற்றும் பல வியாதிகள் வருகிறதோ அதைப்போலவே மனதிற்கும் வியாதிகள் வரும். அதற்கு சரியான வழிமுறைகளை கையாண்டு, மன நல மருத்துவரைப் பார்ப்பதன் மூலமோ, அவர்கள் தரும் மருந்துகளை சாப்பிடுவதன் மூலமோ அந்த வியாதிகளைக் கட்டுக்குள் வைக்கலாம். அதுபோக எப்படி ஆரோக்கியமான உடல் ஓர் அடிப்படை உரிமையோ, அதுபோலவே ஆரோக்கியமான மனமும் அடிப்படை உரிமை என்று நமது உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. மனநல பாதுகாப்புச் சட்டம் 2017 கொண்டுவரப்பட்டதும் இந்த விழிப்புணர்வின் காரணமாகத்தான். அதுவும் இந்தியா போன்ற பாதிக்கும் மேல் மத்தியதர வர்க்கக் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் மனநலமின்மை பெருகி இருப்பதை நாம் காணலாம். இச்சூழலில் தான் வீட்டுநில ஏக்க நோய் என்று ஒரு புதிய சொல்லாடல் மன நல மருத்துவத் துறையில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்தச் சொல்லாடல் மக்களுக்கும், நிலத்திற்கும் இருக்கும் உறவையும், அந்த உறவு அற்றுப் போகும் போது ஏற்படும் மன நோய்களையும் பற்றி பேசுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். அங்கு அவர்களுக்கும் அவர்களின் விவசாய நிலங்களுக்கும் ஓர் புனிதமான நெருக்கமான உறவு நிலவுகிறது. நிலம் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறது. நிலத்தையோ, வீட்டையோ விற்கும் போதோ, இழக்கும்போதோ அவர் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போல வருந்துகிறார். அது அவரை இந்த நில ஏக்க நோய்க்குள் தள்ளுகிறது. இந்த நோய்க்குள் வீழ்ந்தவர் இழந்த அல்லது இழக்கப்போகும் நிலத்தை பற்றி ஏங்கி ஏங்கி மனதில் குமுறி புழுங்குகிறார். இதுபோன்ற மனப் புழுக்கம் கடுமையான மனச் சிதைவை ஏற்படுத்தும், ஏன் மரணத்திற்க்கு கூட வழிவகுக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். வெறும் ஆற்றுப்படுத்துதல் இவர்களை இந்த நில ஏக்க நோயிலிருந்து குணப்படுத்தி விடாது. மாறாக மீண்டும் அவர்கள் அவர்களின் நிலங்களுக்கு திரும்பிச் செல்வதே அவர்களை எந்த விபரீத முடிவையும் எடுக்காமல் பாதுகாக்கும் என்றும் சொல்கிறார்கள் அவர்கள். இந்தியாவில் பல்வேறு திட்டங் களுக்கு நிலங்களை கையகப்படுத்தும் போது சமூக பொருளாதார பாதிப்பு, சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு போன்ற ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அது எத்தனை கோடி முதலீட்டைக் கொண்ட திட்டமாக இருந்தாலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்பது சட்டம். வளர்ச்சித் திட்டங்கள் முக்கியம் என்றாலும் அது சமூக பொருளாதார, சூழலியலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றால் அந்தத் திட்டங்கள் கைவிடப் பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுகள் கட்டாயம் என்று சட்டம் உள்ளது. அதே நேரத்தில் மக்களின் மன நலம் இந்த திட்டங்களால் பாதிக்கப் படுமா என்பது பற்றி கண்டறிய இந்தியாவில் எந்த ஆய்வுகளோ அதற்கான சட்டங்களோ இல்லை. இந்தியாவில் சுமார் 44 சதவீத மக்கள் பல்வேறு மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் கூறும் நிலையில் இந்த நில ஏக்க நோய் பற்றிய விரிவான கலந்துரையாடலை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மனம் என்பது அடிப்படை உரிமை என்று உலக சுகாதார நிறுவனமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ள வேலையில் அரசு தனது திட்டங்களுக்கு நிலம் எடுக்கும்போது பாதிக்கப் படும் மக்களின் மனநிலை பாதிக்கப்படுமா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதுவும் பெண்களும், குழந்தைகளும் அவர்களின் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதனால் கடுமையான உளவியல் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்று மனித உரிமை சபை கூறியிருக்கும் நிலையில் மனநிலை பாதிப்பு பற்றிய ஆய்வு கட்டாயமாக்கப்படவேண்டும். அரசின் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட போகிறதென்றால் சமூக பொருளாதார, சூழலியல் ஆய்வுகளைப் போல மனநல ஆய்வுகளும் நடத்தப்படவேண்டும். அதற்கான சட்டத்தை அரசு உடனடியாக கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அத்திட்டம் மக்களின் மனநலத்தை பாதிக்கும் என்றால் அத்திட்டம், அது எட்டு வழிச்சாலையோ, ஸ்டெர்லைட்டோ, ஹைட்ரோ கார்பனோ எதுவாக இருந்தாலும் கைவிடப்படவேண்டும். ஏனெனில் ஒரு நல்லரசு என்பது ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் மனநலத்தைக் கொண்ட குடிமக்களாலேயே கட்டியமைக்கப்பட முடியும்.

No comments:

Popular Posts