Monday, 31 December 2018

புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்!

புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்! முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ். காவல்துறை கூடுதல் இயக்குனர். டி சம்பர் 31 நள்ளிரவு ஒரு ஆண்டு நமது வயதுடன் சேர்ந்து விடுகிறது. ஒரு வயது அதிகமாகி விட்டது என்ற கவலை ஏற்பட்டாலும், இன்றைய நாள் நாம் உயிரோடு இருக்கும் மீதி காலத்தின் மிக இளமையான நாள். புத்தாண்டின் முதல் நாளன்று புது சபதங்கள் எடுப்பதும், அதன்படி சில நாட்கள் மட்டும் நடந்துகொள்வதும் வாடிக்கையானது. அதுபோல இந்த ஆண்டு முடியும் தருவாயில், வருகிற புத்தாண்டில் புதிதாக என்ன செய்யலாம்? எந்தெந்த பழக்கங்களை கைவிடலாம்? என்ற சிந்தனையில் இருக்கிறோம். புத்தாண்டு தினத்தில் செய்ய நினைத்தவற்றை தவறாமல் செய்து முடிக்க வேண்டும். இப்படியாக 365 நாட்களும் கடைபிடித்தால் அவை பழக்கம் ஆகிவிடும். அதுவே நற்குணமும் ஆகிவிடும். அதுவே வாழ்க்கையும் ஆகிவிடும். செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை என்றாலும் கூட காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுங்கள். மிகக்கடினம் என்று நீங்கள் நினைத்த ஒரு செயலை காலை 5 மணி முதல் மாலை 7 மணிக்குள் செய்து முடியுங்கள். மாணவர்களே, பிடிக்காத ஒரு பாடத்தை ஒரு முறையாவது வாசியுங்கள். ஒன்றும் புரியவில்லை என்றாலும் வாசித்துவிடுங்கள். தினமும் காலையில் செய்தித்தாள் படியுங்கள். மாணவர் என்றால், ஒரு ஆங்கில பத்திரிகையையும் படியுங்கள். தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளுங்கள். செய்திகளை படித்து உணர்ந்து சிந்தியுங்கள், சிரியுங்கள், அழுங்கள், கோபப்படுங்கள். எடுத்துக்காட்டாக ஊழல் புரிபவர்கள் மீதும், மக்களை ஏமாற்றுபவர்கள் மீதும் சினம் கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது ஓடுங்கள் அல்லது சைக்கிள் ஓட்டுங்கள். வரும் ஆண்டில் ஒரு மாரத்தான் ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள். இது உங்கள் ஆளுமையை முற்றிலுமாக மாற்றும். டாக்டரிடம் சென்று உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏதேனும் பெரிய நோய் இருப்பது தெரிந்து விடுமோ என்ற கவலையை விடுங்கள். ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் எந்த நோயையும் குணப்படுத்தலாம். அலட்சியமாக இருந்து நோய் முற்றினால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது. நம்மிடம் என்ன திறமை இருக்கிறது? என்ன குறைபாடு இருக்கிறது? என்பதை சுயபரிசோதனை செய்து பாருங்கள். பாட முடியும் என்றால் பாடகராகவும், பேச முடியும் என்றால் பேச்சாளராகவும், எழுத முடியும் என்றால் எழுத்தாளராகவும் பயிற்சி எடுங்கள். இல்லாத திறமைகளை எண்ணி வருந்தாதீர்கள். அதை விட்டு விடுங்கள். ஒரு இளைஞன் பல துறைகளில் சாதனை படைக்க வேண்டும். எனவே உடல்நலம், மனநலம், கல்வி, பணி, வருமானம், மனித உறவு, எதிர்கால நம்பிக்கை, வாழ்நாள் சாதனை என்று எட்டு துறையிலும் இலக்கை நிர்ணயியுங்கள், புத்தாண்டில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் எழுதுங்கள். சிகரெட், மதுபோதை பழக்கத்தை உடனே விட்டு விடுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக விடுகிறேன் என்று சமாதானம் செய்து கொள்ளக்கூடாது. கைப்பேசியை அடிக்கடி திறந்து பார்ப்பதை முற்றிலும் நிறுத்த முடியவில்லை என்றால் பெருமளவு குறைத்து கொள்ளுங்கள். நம்மிடம் பேசுபவர்களிடம் அன்பாக பேசவும், நம்மை பார்க்க வருபவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். கோபப்படுவது, எரிச்சல் அடைவது, மனச்சோர்வடைவது, மற்றவர்களை இழிவுபடுத்துவது போன்ற பழக்கங்களை கைவிடுங்கள். தன்னார்வ தொண்டு செய்ய முற்படுங்கள், அதனால் சிலருக்கு உதவ முடியும். வேலையில் மும்முரமாக இருப்பவர்கள் வீட்டில் இன்னும் அதிக நேரத்தை செலவு செய்யலாம். வீட்டை நாமாக சுத்தம் செய்யலாம். தேவையற்ற பொருட்களை வெளியேற்றி விடலாம். புத்தகங்களை அடுக்கி வைக்கலாம். ஒவ்வொரு பொருளையும் அதற்கான இடத்தில் கொண்டு போய் வைக்கலாம். சமையல் கற்றுக்கொள்ளலாம். பிற்காலத்தில் நமக்கான உணவை நாமே தயாரித்து கொள்ள அது உதவும். இதுவரை போகாத ஒரு ஊருக்கு இந்த புத்தாண்டில் சென்று வாருங்கள். ஓரளவுக்கு பொருளாதார வசதி உண்டு என்றால் ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காக், நார்வே, ஸ்வீடன் போன்ற ஒரு வளர்ந்த நாட்டிற்கு சென்று வாருங்கள். இதனால் உங்கள் உலகம் விரிவடையும். ரோல்மாடல் என்றும், புனிதமானவர் என்றும், ஞானி என்றும், யோகி என்றும் யாரும் இங்கு இல்லை. எல்லோருமே உங்களை போன்ற மனிதர்கள்தான். எனவே வரும் ஆண்டு எவர் காலிலும் போய் விழாதீர்கள். எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவமும், தன்மானமும் உள்ள மனிதனாக தலை நிமிர்ந்து நில்லுங்கள். நீங்கள் உங்களுக்காக வாழ்வது மட்டுமின்றி சமூகத்திற்காகவும், பிறரின் நலனுக்காகவும் வாழ முற்படுங்கள். நேர்மையாக வாழ ஆர்வம் காட்டுங்கள். லஞ்சம் வாங்காதீர்கள். உடல் தூய்மை, வீட்டில் தூய்மை, தெருவில் தூய்மை என்று தூய்மையை கடைபிடியுங்கள். நாம் அனைவரும் தூய்மையானால் நாடே தூய்மையாகும். நீங்கள் செய்யும் பணியை உலக தரத்துடன் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலையின் தரத்தை உயர்த்த உங்களால் மட்டுமே முடியும். ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை போதும். இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் இருக்கின்றன. இன்னும் அதிக குழந்தைகளை பராமரிக்க தேவையான பொருளாதார வளம் இந்த நாட்டில் நிச்சயமாக இல்லை. ஓரளவுக்கு பொருளாதார வசதி வந்த பிறகு ஒரு ஏழை குழந்தையையாவது படிக்க வையுங்கள். வரும் ஆண்டில் புதியதாய் பிறந்து வாருங்கள். இந்த புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் நல்வாழ்க்கையை கொண்டு வரட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அமைச்சர் பதவியை ஏற்க மறுத்த லட்சிய நடிகர்

தமிழ் திரை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சிம்மகுரலோன் சிவாஜி கணேசன் ஆகியோர் தங்களது நடிப்பால் மக்களிடம் புகழ்பெற்றவர்கள். இத்தகைய சாதனை மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நடிகராக இருந்து பெயர் பெற்றவர் எனது அப்பா லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். திரையுலகில் தமிழ் பேசி நடித்து பெருமை பேசிய நடிகர்கள் இருந்தாலும், என் அப்பா பேசிய தமிழை பார்த்து தமிழே பெருமைப்பட்டு கொண்டது என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம் அந்த அளவுக்கு தெளிவான உச்சரிப்பும் அதற்கு துணையாக இருந்த இயற்கையாக அமைந்த அவரது வெண்கல குரலும்தான். இயல், இசை, நாடகம் என்று எடுத்துக் கொண்டால் அத்தனையிலும் தேர்ச்சி பெற்றவர் என் தந்தை. அந்த காலத்தில் காலையில் படப்பிடிப்புக்கு சென்றால் ஆறு மணி வரை படப்பிடிப்பில் இருப்பார். மாலையில் மேடை நாடகத்தில் நடிப்பார். இரவு கட்சி கூட்டத்தில் பேசுவார். மங்கல நிகழ்ச்சி என்றாலும், கொள்கைக்கு ஆதரவாக மறியல் போராட்டம் என்றாலும் முதலில் செல்பவர் அவராகத்தான் இருப்பார். வீட்டில் அவரை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கும். அவருடைய பிள்ளைகளான எங்களை தம்பிகள் என்றுதான் அழைப்பார். அன்போடுதான் நடத்துவார். ஏதாவது தவறுகள் செய்து தாயார் எங்களை கண்டித்தால் அவருக்கு பிடிக்காது. கடுமையாக நடந்து கொள்வதால் இந்த சிறிய வயதில் அவர்களுக்கு புரியாது என்று சொல்லி எங்களை உட்காரவைத்து நல்லது எது? கெட்டது எது? என்று பொறுமையுடன் விளக்குவார். அறிஞர் அண்ணா மீது பற்றும், மரியாதையும் வைத்திருந்தார் என் தந்தையார். எனது மூத்த சகோதரருக்கு இளங்கோவன் என பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா தான். அப்பா முதன்முதலாக அறிஞர் அண்ணாவை சந்தித்ததே ஒரு ருசிகரமான சம்பவம்தான். அண்ணா தனது ‘சந்திரோதயம்’ நாடகம் நடத்துவதற்காக திருச்சிக்கு வந்திருந்தார். அப்போது நாடக அரங்கில் அவரது குழுவினருக்கு ஒப்பனை செய்யும் பணி ஒரு சில டிகே.எஸ் நாடகக்குழு நடிகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது வாழ்நாளில் எப்படியாவது அண்ணாவை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவலில் இருந்த என் தந்தையார் ஒப்பனை குழுவோடு அரங்கத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் தனக்கு ஒப்பனை செய்யும்படி சொல்ல, வேண்டா, வெறுப்புடன் அவரை உட்கார சொல்லி தன் கவனத்தையெல்லாம் அண்ணாவை தேடுவதிலேயே வைத்து கொண்டு உட்காந்திருப்பவருக்கு அறைகுறையாக சாயங்களை பூசிக்கொண்டிருந்தாராம் அப்பா. இவரை நம்பி உட்கார்ந்திருந்த அந்த நபரோ, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, “ஏன் தம்பி அப்படி யாரை தேடுகிறாய்?” என்று வினவ அறிஞர் அண்ணா என அப்பா சொல்ல, “நீ தேடும் அறிஞர் அண்ணா நான்தான்” என்றாராம் சிரித்துக்கொண்டே. அன்று மேடையில் காகபட்டராக நடித்த அண்ணாவை, அன்றே தன் பொதுவாழ்வு தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார் என் தந்தை. அதேபோல எம்.ஜி.ஆர். ‘பாரத்’ பட்டம் பெற்றபோது அவரை பாராட்டுவதற்கு அவரது ராமாவரம் தோட்டத்திற்கு எங்களையும் அழைத்து சென்றார். அப்பா, முக்கிய விஷயங்கள் பேசிய பிறகு என் தம்பி செல்வராஜை, (அப்போது அவனுக்கு எட்டு வயது) பார்த்து “என்ன படிக்கிற?” என்று மக்கள் திலகம் கேட்டார். “நான் உங்கள மாதிரி நடிப்பேன்” என்று துடுக்காக என் தம்பி பதில் சொல்ல அவர் ஆச்சரியப்பட்டு “எங்கே நடித்து காட்டு பார்ப்போம்” என்றார். தம்பி சிறிது கூட கூச்சப்படாமல் அப்போது பிரபலமாக இருந்த “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...” என்ற முழுப்பாடலை பாடி அவர் போலவே நடித்து காட்டியபோது, “என்னை போலவே நடிக்கிறாயே” என்று கூறி அசந்து போய் விட்டாராம். அடுத்த நாள் சத்யா ஸ்டுடியோவில் நடக்கவிருந்த பாரத் பாராட்டு விழாவுக்கு இவனை மேடைக்கு அழைத்து வாருங்கள். இவனுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்றார். அடுத்த நாள் சொன்னது போலவே என் தம்பியை மேடைக்கு அழைத்து, பேனா ஒன்றை பரிசாக கொடுத்து, “நன்றாக படித்து பட்டம் பெற்ற பிறகே நடிக்க வர வேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டார். இன்னும் அந்த பேனாவை என் தம்பி புரட்சிதலைவர் நினைவாக பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளார். இப்படி தனது சொந்த இளைய சகோதரர் போலவே அப்பாவை நேசித்தார் புரட்சி தலைவர். நாங்கள் அவரை ‘பெரியப்பா’ என்றுதான் அன்போடு அழைப்போம். அறிஞர் அண்ணாவுக்குப்பின் அப்பாவை அரசியலில் அன்பாக ஆதரவு கரம் நீட்டி அரவணைத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அப்பா வெற்றி பெற்றார். அப்போது எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று முதல்வராக பதவி ஏற்க போகிறார். அந்த நேரம் நடந்த ஒரு சம்பவம் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. புரட்சி தலைவர் பதவி ஏற்புக்கு முதல்நாள் அப்பாவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. உடனடியாக அப்பா, எம்.ஜி.ஆரால் கோட்டைக்கு அழைக்கப்படுகிறார். கோட்டைக்கு அப்பாவுடன் நானும், என் அண்ணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரகுமாரோடு சென்றேன். எம்.ஜி.ஆர். அறைக்கு சென்றவுடன் அவர் அப்பாவை பார்த்து, “ராஜு நீங்களும் ஒரு அமைச்சராக இருக்க வேண்டும். இது என் விருப்பம்” என்றார். அப்பா உடனே, “அமைச்சர் பொறுப்பெல்லாம் வேணாம் அண்ணே” என்றார். “தம்பி நீங்கள் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஓட்டுப்போட்ட தொகுதி மக்கள் கேட்பார்களே” என்றார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து விடாப்பிடியாக “எந்த அமைச்சரின் துறையாக இருந்தாலும் கேளுங்கள். வேண்டாம் என்று சொல்லக்கூடாது” என்றார். அதற்கு அப்பா வேடிக்கையாக “அப்படியானால் முதல்-அமைச்சராக இருக்கிறேன்” என்றார். இதைக்கேட்டதும் புரட்சி தலைவர் உரக்க சிரித்து விட்டார். “பதவி வேண்டாம் என மறுப்பதற்கு, இப்படி ஒரு பதிலா?” என்று கூற அங்கிருந்த எல்லோரும் சிரித்து விட்டனர். பிறகு அப்பாவுக்கு மாநில சிறுசேமிப்பு துணைத்தலைவர் பதவி அளித்து, அமைச்சருக்கு உண்டான அனைத்து தகுதிகளும் கொடுத்து, தன் அறைக்கு அருகிலேயே இவருக்கும் அலுவலக அறை ஒதுக்கி அழகு பார்த்தார் புரட்சி தலைவர். அப்பா நடிகர் சங்க தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு நலிந்த நாடக கலைஞர்களுக்கு பல திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியவர். அதேபோல மிகுந்த மனித நேயம் மிக்கவர். யார் என்ன உதவி கேட்டு வந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வார். அப்பா மறைவதற்கு சில தினங்கள் முன்னால், எங்களிடம் கைப்பட தனித்தனியாக கடிதம் எழுதி கொடுத்தார். அதில் அவர் பிறந்து வளர்ந்த ஊரான சேடப்பட்டியில் சொந்தமாக மணிமண்டபமும், இலவச மருத்துவமனையும் அமைக்க வேண்டும், அது தான் பிறந்த ஊர்மக்களுக்கு பயன்பட வேண்டும் என எழுதி இருந்தார். தற்போது அவரின் விருப்பதிற்கு இணங்க அந்த பணியை மேற்கொண்டிருக்கிறோம். விரைவில் அவரது ஆசையை நிறைவேற்றுவோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 30 December 2018

தியாகச்சுடர் தியாகி விசுவநாததாஸ்

தியாகச்சுடர் தியாகி விசுவநாததாஸ் விசுவநாததாஸ் குமரிஅனந்தன் நா ளை(டிசம்பர் 31-ந்தேதி) தியாகி விசுவநாததாஸ் நினைவு தினம். வீர தீர பராக்கிரம ராஜாதிராஜ் மார்த்தாண்டன் கானவேலன், இலங்கை, சிங்கப்பூர் பினாங், போன்ற இடங்களிலே சென்று வெற்றிக்கொடி நாட்டிய வீர கலைஞர் விசுவநாததாஸ் நாடகம், ஒரே ஒரு முறை தான் காணத் தவறாதீர்கள். இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு கிடையாது தரை நாலணா. பெண்களுக்கு தனி இடம் உண்டு. இவ்வாறுதான் அன்றெல்லாம் விளம்பரம் போடுவார்கள். இதிலே விசுவநாததாஸ் வேலன், வேடன் விருத்தனாக வருவார். வள்ளி திருமணம் நாடகம். தினைப்புனத்திலே வள்ளி கதிர்களை கொத்த வருகின்ற கிளிகளையும்,குருவிகளையும் விரட்டிக்கொண்டு இருக்கிறாள். கிழவன் விருத்தனாக இப்போது முருகனே வந்து பாடுகிறான். ஆலோலங்கடி சோ, வெள்ளை வெள்ளை கொக்குகளா வெகு நாளா இங்கிருந்து கொள்ளையடித்தீங்களா சொந்த நாட்டுக்கு ஓடிப்போங்கள் கொக்குகளா என்று முருகனாக வந்தவர் பாடியவுடனேயே கூடியிருப்பவர்களெல்லாம் குதூகலத்துடன் விண்ணைப் பிளக்கின்ற அளவுக்கு கையொலி எழுப்புகிறார்கள். அதோடு நிற்கிறாரா அவர்? “கொக்கு பறக்குதடி பாப்பா! - நீயும் கோபமின்றி கூப்பிடடி பாப்பா! வர்த்தகம் செய்ய வந்த கொக்கு - இது வர்த்தகம் செய்ய வந்த கொக்கு - நமது வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு! அக்கறை சீமை விட்டு வந்து கொள்ளை அடித்துக்கொழுக்குதடி பாப்பா! அக்கரை சீமை விட்டு வந்து கொள்ளை அடித்துக் கொழுக்குதடி பாப்பா! - என்று கொக்கு விரட்டுகின்ற சாக்கிலே , வெள்ளைக் கொக்குகளாக இருக்கிற வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டிவிட வேண்டுமென்று பாடுகிற பாட்டைக் கேட்டால், நம் நாடி நரம்புகளிலெல்லாம் தேசபக்தி ஓடித் தெறிக்கின்ற அளவுக்குப் பாடி முடிப்பார் விசுவநாததாஸ். அவரைப்பொறுத்தவரையிலே நாடகம் என்பது புராண காவியமாக இருந்தாலும் சரி, சரித்திர நாடகமாக இருந்தாலும் சரி, அதிலே தேசியம் வந்து நிச்சயமாக அமர்ந்துகொள்ளும். அவர் பிறந்தது 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி, சுப்பிரமணியனுக்கும், ஞானாம்பாளுக்கும் ஞானியார் தெருவிலே சிவகாசியிலே பிறந்தார். மருத்துவ குலத்திலே பிறந்தவர். தூத்துக்குடியிலே ஒரு கூட்டம். காந்தி மகானுடைய கூட்டம். பளபள வென்ற உடையுடன் மேடையிலே பாடுகிறார். “காந்தியோ பரம ஏழை சந்நியாசி?” - என்று பாடுகிறார். காந்தியினுடைய பக்கத்திலே இருக்கின்ற சுத்தானந்த பாரதியார் காந்திக்கு அதனை மொழி பெயர்த்துச் சொல்கிறார். சிரிக்கிறார் காந்தி. எழுந்து அவரைப் பக்கத்திலே அழைக் கிறார். விசுவநாததாசை அப்படியே கட்டிப்பிடித்துக்கொள்கிறார்.” தேசத்திற்காகத் தொண்டு செய்த காரணத்தினால் செல்வமெல்லாம் குறைந்துகொண்டே போயிற்று. அவருடைய வீடு - பெரிய அரண்மனை போன்ற வீடு - 1940 -ம் ஆண்டு 2500 ரூபாய்க்கு ஏலத்திற்குப் போக வேண்டியதாயிற்று. அந்த நேரத்திலே கூட எத்தனையோ பேர் சொன்னார்கள். “நீங்கள் தேசபக்திப் பாடல்கள் பாடுவதை விட்டு விடுங்கள். விடுதலைக்குப் பாடுபடுவதை விட்டு விடுங்கள்” என்று சொல்கிற நேரத்தில், “அது மட்டும் முடியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நேரம் அவர் ஒரு சிறையில். அவருடைய மகன் ஒரு சிறையில் அவருடைய மருமகனும் ஒரு சிறையில். மகனுக்கு அப்போதுதான் திருமணம் ஆகியிருந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் தூதுவர்கள் அவரிடம் போய் சொன்னார்கள்”. இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறார்கள். இளமனைவி வீட்டில் ஏக்கத்தோடு, நீயும் ஏக்கத்தோடு சிறையிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழி உண்டு. மன்னிப்பு எழுதிக்கொடுத்துவிடு” என்று சொன்ன நேரத்தில் விசுவநாதாஸ் சொன்னார். “மகனே! நீ மன்னிப்பு எழுதிக் கொடுப்பதைவிட சிறையிலே செத்துவிடலாம் என்று! அவரும் மன்னிப்பு எழுதிக்கொடுக்கவில்லை. 1940 -ம் ஆண்டு சென்னையிலே மூன்று நாடகங்கள் என்று அவரை அழைத்தபோது, அந்த மூன்று நாடகங்களில் நடித்தால், தன்னுடைய வீட்டைக் கூட திருப்பிவிடலாம் என்று நினைத்து அவர் வந்தார். வருகிற நேரத்திலே டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு ஒற்றைவாடைக்கொட்டகையிலே மயில் வாகனத்திலே முருகனாக வந்து “மாயா உலகே..’ என்று அவர் பாட ஆரம்பித்தார். கடல் மடை திறந்தது என சங்கீத கானம் வெளியே வந்தது. வந்த கானம் தொடரவில்லை . நெஞ்சைப்பிடித்தார். தலை சாய்ந்தது. கூட்டத்தில் இருந்த ஒரு டாக்டர் அவர் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “மாரடைப்பு , உயிர் போய் விட்டது என்று சொன்னார். கூட்டமே அழுதது. கதறியது. மறுநாள் 1941 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி மாலை 3 மணிக்கு அதே மயில் வாகனத்திலே அவரை ஏற்றி சிலம்பு செல்வர் ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அப்படியே தங்க சாலை வழியாக மூலக்கொத்தளத்திலே சென்று அந்தப்புனிதனுடைய உடலை எரியூட்டினார்கள். நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட அந்தக் கலைஞனுக்கு- தலைவனுக்கு அடமானத்திலிருக்கும் அவன் வீட்டை மீட்டுக் கொடுக்க வில்லையே. நினைவுச்சின்னம் ஆக்கவில்லையே என்று கண்ணீர் மல்கப் பேசினேன். எழுதினேன். சைக்கிள் பயணம் உண்ணா நோன்பு மேற்கொண்டேன். தமிழக அரசு அடைமானத்திலிருந்த வீட்டை மீட்டு 55 லட்சம் ரூபாயில் நினைவகமாக மாற்றி விசுவநாததாசின் மார்பளவுச்சிலையும் அமைத்துள்ளது. வீரம் மிக்க விசுவநாததாஸ் இந்த நாடு இருக்கும்வரை நம் நெஞ்சங்களிலே வாழ்வார்.!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஞானதீபம் ரமண மகரிஷி...!

ஞானதீபம் ரமண மகரிஷி...! கவிஞர் ச. இலக்குமிபதி, வேலூர் இன்று (டிசம்பர் 30-ந் தேதி) ரமண மகரிஷி பிறந்தநாள் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை வணங்க நினைக்கும்போது, நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அண்ணாமலையும் கார்த்திகை தீபமுமே ஆகும்! அதற்கு அடுத்து சட்டென்று நினைவுக்கு வருவது ரமண தீபம்! விருது நகருக்கு அருகில், திருச்சுழியில், வெங்கடராமனாக பிறந்து, திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியாக உயர்ந்த ஞானதீபம். மகான் ரமணரின் ஞாபகமே நம்மை ஒளிப்படுத்தி வழிப்படுத்தும். 1879-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 30-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு திருச்சுழிசுந்தரமய்யர், அழகம்மைக்கும் மகனாக திருச்சுழியில் அவதரித்தார். அவரது இயற்பெயர் வெங்கடராமன். ஆரம்பக்கல்வியினை திருச்சுழியிலும் பின்பு திண்டுக்கல் மற்றும் மதுரை என அவரது பள்ளி வாழ்க்கை தொடர்ந்தது. அவரது 12-வது வயதில் தந்தை மறைந்தார். வெங்கடராமனாய் இருந்து மதுரையில் வசித்தகாலத்தில் அவரது இல்லத்திற்கு வருகைதந்த ஒரு உறவினரிடம் எங்கிருந்து வரேள்? என்று கேட்க அவரோ, அருணாசலத்திலிருந்து என்று பதில் அளித்தார். அன்று முதல் வெங்கடராமன் உள்ள முழுவதும் அருணாசலம் ஆட்சி செய்யஆரம்பித்தது. சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் மிகப் பெரிய தாக்கத்தை இவர் நெஞ்சுக்குள் விதைத்தது. வெங்கடராமன் உள்ளத்திலிருந்து தொடர்ந்து எழுந்த அருணாசலம் என்கிற குரல் மதுரையை விட்டு அருணாசலத்தைக் காண புறப்படும்படி வெங்கடராமனை உற்சாகப்படுத்தியது. மதுரை வீட்டிலிருந்து மூன்று அணாவுடன் திருவண்ணாமலை போக வேண்டும் என்று புறப்பட்டு, திண்டிவனம் வரை டிக்கெட் எடுத்து ஏறி விட்டார். திருவண்ணாமலை எங்கே இருக்கிறது எப்படி போகவேண்டும் என்பதை அறியாமலேயே அருணாசலம் ஆணையிட புறப்பட்டு விட்ட வெங்கடராமன், ரெயிலில் உடன் பயணித்தவர் அறிவுரையினை கேட்டு விழுப்புரத்தில் இறங்கி, மாம்பழப்பட்டு, அறையணிநல்லூர் என அலைந்து, இறுதியில் 1896-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி விடியற்காலை திருவண்ணாமலையில் கால் பதித்தார். திருவண்ணாமலை என்கிற அந்த புனிதபூமியில் அண்ணாமலையானை அகம் கரைய கண்டு தரிசித்து விட்டு வெளியே வருகிறார் வெங்கடராமனாகிய ரமணன்!. கவுபீன கோவணத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் தன்னை மறந்து அமர்ந்துவிட்டார். அதற்குப்பிறகு இலுப்பைமரம், பாதாள லிங்கம், கோபுரம், குருமூர்த்தம், மாந்தோப்பு, குகை, பவழக்குன்று, விருப்பாட்சி குகை, ஸ்காந்தசிரமம் என பல்வேறு இடங்களில் ரமணரின் இருப்பிடம் மாறி, மாறி அமைகிறது. ரமணமகரிஷியின் புகழ் ஒளிநாளும் நாடெங்கும் வீசஆரம்பிக்கிறது! உலகின் பல்வேறு நாட்டு பக்தர்கள் ரமணரை தரிசித்து அவரிடம் பல்வேறு ஆன்மிக புதையல்களை கண்டு எடுத்து கவலை மறக்கிறார்கள். ஒருமுறை ரமண ஆசிரமத்தின் வளர்ச்சியின் ஆரம்பத்தில், திருட வந்த திருடர்கள் பகவானையும் தடியால் தாக்கி இருக்கிறார்கள். எனக்கு நல்லபூஜை கிடைத்தது என்று பகவான் சிரித்தபடி நண்பர்களிடம் கூறி இருக்கிறார். ஞானஅனுபவம் வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டு பால் பிரண்டன், மகானைக் கேட்டபோது நான் யார்? முதலில் நான் யார் என்று தெரிந்து கொண்டால் உண்மை தெரிந்துவிடும். நமக்குள்ளே பார்வையை திருப்பினால் எல்லா வினாக்களுக்கும் விடைகள் கிடைத்து விடும் என்று பதில் அளித்திருக்கிறார் பகவான் ரமணர்! ஒருமுறை அவர் உடல் மீது நாகப்பாம்பு ஏறிச்சென்றிருக்கிறது “எப்படி இருந்தது” அருகில் இருந்தவர்கள் கேட்டதற்கு குளிர்ச்சியாக மிருதுவாக என்று பதில் அளித்தாராம் ரமணர்! ரமணரிடம் ஒருபசு (லட்சுமி) பக்தியுடன் நெருங்கி வாழ்ந்திருந்ததை அனைவரும் அறிவார்கள். அந்த பசு மறைந்தபோது, லட்சுமி என்கிற அந்த பசுவின் முகத்தை, ஒரு குழந்தையைப் போல இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு, “லட்சுமி” என்றும் இவளால்தான் ஆசிரமம் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்தது என்றாராம் அருகில் இருந்தவர்களிடம்! எத்தனை பெரிய மகா ஞானி அவர் அருளால் நிரம்பிய ஆண்டவனின் அற்புதத் தூதர் அவர்! ஒரு முறை ஒரு குருவியின் முட்டை உடைந்த போது அதை ஓர் ஈரத்துணியில் அந்த முட்டையின் விரிசலைசுற்றி குருவி கூட்டிலேயே வைத்திருக்கிறார். ஏழு நாட்களுக்குப்பிறகு “விரிசல் சேர்ந்து விட்டது அம்மா குருவி இப்போ சந்தோஷப்படும்,” என்று குதூகலித்தாராம் அந்த அறிவுச் சூரியன்!. விருப்பாட்சி குகைக்கு எதிரில் ஒரு பாறை மீது காலையில் எந்த வெயில் மழைகாற்று இடி என்றாலும் தவறாமல் 1/2 மணி நேரம் அமர்ந்திருப்பாராம்! ஒரு வயதான பக்தை, சாமி எனக்கு வயதாகிவிட்டது மலை மேலே ஏறிவந்து உங்களை தரிசிக்க முடியாதே, என்று கேட்டதற்காகவே பகவான் ரமணர் மலைக்கு அடிவாரத்தில் இருந்த அந்த பக்தைக்கு காட்சி தரவே தவறாமல் மலைமேல் இருந்த அந்த பாறையில் அமர்ந்திருந்தாராம். “ரமண சத்குரு ராயனே” என்கிற கீதம் காற்றில் கலந்து திருவண்ணாமலை அருள் மலைமீது இன்றும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. சந்குரு ஸ்ரீரமணமகரிஷி மிகச் சிறந்த ஞானக்கவிஞர், தமிழ், வடமொழி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கவித்துவம் வாய்ந்த தவயோகி. நான் யார்? என்பது அவர் நம்மை சிந்திக்கவைத்திருக்கும் வாசகம் ஊர் சுற்றும் உள்ளம் அடங்கிடவிடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக்காட்டு அருணாசலா என்று பாடிய அந்த மகான் 1950-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி இரவு 8.47 மணிக்கு மகாசமாதி அடைந்து விட்டார். ரமணரின் பாடலைப்பாடி நாமும் நம்மை ஐம்புலக்கள்வரின் தீமைகளிலிருந்து காத்துக் கொள்வோம்!.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 29 December 2018

21. எதிரிகளும் எதிர்ப்பும்

எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். வாழ்க்கை ஒரு பரிசு என்றால் பெற்றுக்கொள்வோம். சவால் என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். புதிர் என்றால் கண்டுபிடிப்போம். கேள்வி என்றால் விடை காண்போம். விளையாட்டு என்றால் விளையாடிப் பார்ப்போம். போராட்டம் என்றால் நடத்திப் பார்ப்போம். வாய்ப்பு என்றால் பயன்படுத்துவோம். அது ஒரு போர் என்றால் தீரத்தோடு களமாடிப் பார்ப்போம். எப்படி எடுத்துக்கொண்டாலும், இங்கே எதையும் போராடித்தான் பெற வேண்டும். இந்தப் போரில் நாம் விரும்புவதை வேறு சிலரும் விரும்பக்கூடும். எனவே போட்டி வந்துவிடுகிறது. நண்பன்கூட, போட்டி என்று வருகிறபோது எதிரி ஆகிவிடுகிறான். செல்வமும் பதவியும் வந்ததும் ஏராளமான எதிரிகளும் தோன்றிவிடுகிறார்கள். எதிர்பாராத நிகழ்வுகள் எதிரிகளால் நேரும். அப்போதெல்லாம் ஒரு போர்வீரனுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு நடத்தை என்ன தெரியுமா? போர்மேகக் கூட்டங்கள் சூழும்போது, போர்க்களத்தை விட்டு ஓடிவிடுவதுதான். அப்படி ஓடுபவர்களுக்கு போர்க்களத்தில் இடமில்லை. அங்கேயே நிலைத்து நின்று போர் புரிபவனுக்கு மட்டும்தான் வெற்றி, தோல்வி. தன்னையும், அதேவேளையில் எதிரியையும் நன்கு அறிந்தவனுக்கு எல்லா சண்டைகளிலும் வெற்றிதான் என்கிறார், சன் சூ என்ற சீனப் போர் வரலாற்று ஆசிரியர். நீங்கள் வளரும்போது எதிரிகள் உங்களைப் பற்றி பொய்ப் பிரசாரம் செய்வார்கள். உங்களிடமே நட்புடன் பேசி தகவல்களைச் சேகரித்து அதை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். உங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்து உங்களை ஒழித்துக்கட்ட சதித்திட்டம் தீட்டுவார்கள். இவை அனைத்தும் உங்களுக்குத் தெரியாமலே நடந்து முடியும். இந்தச் சதித்திட்டத்தை கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும், மூக்கால் நுகரவும், கை களால் உணரவும் ஆற்றல்மிக்க போர்வீரனாக நீங்கள் விளங்க வேண்டும். நயவஞ்சகர்களைப் பார்த்துப் புன்னகை புரியும் ஆற்றலை வளர்க்க வேண்டும். ‘முடியாது’ என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டால் இந்தச் சண்டை மைதானம் கூட மகிழ்ச்சியான விளையாட்டு மைதானமாக மாறிவிடும். முன்னேறும் நம்மை எதிரிகள் பின்னோக்கித் தள்ளிவிட்டால், தொடர்ந்து முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அம்பு பின்னோக்கித் தள்ளப்படும்போதுதான் அதிக விசையாற்றல் பெறுகிறது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். உண்மையான வீரன் எதிரியைப் பார்த்து மகிழ்வான். அவன் எதிரிகள் தோற்றாலும் அவர்களுக்காக இரங்குவான். ஒருவேளை வாழ்க்கைப் போராட்டத்தில் எதிரிகளின் கை ஓங்கி நிற்கும் வேளையிலும் உடைந்துவிடாமல் நிமிர்ந்து நிற்பவனே உண்மையான போர்வீரன். உங்களை அழிக்க பொய் என்ற ஆயுதத்தை எதிரிகள் பயன்படுத்தக்கூடும். வீண்பழி விழும் நேரத்தில் கலவரமடையாமல் இருப்பது தனிப்பெரும் ஆற்றல். மிகவும் இருட்டான நேரத்தில்தான் நாம் உற்றுப் பார்க்க வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு சூழ்நிலையையும் தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும். எதிரிகள் உருவாகிவிட்டார்களே என்று கவலைப்படக் கூடாது. அவர்கள் உருவானது நல்லதுதான். அந்த அளவுக்கு ஏதோ ஒன்றை உருப்படியாகச் செய்துள்ளோம் என்று உணர்ந்து மகிழ வேண்டும். மலிவான எதிரி உங்கள் பணத்தை அபகரிப்பான். ஆனால் மோசமான எதிரிக்குத் தேவை, உங்கள் மனது. உங்கள் மனநிலை, உங்களது குணம், உங்களது நம்பிக்கை, மனநிம்மதி ஆகியவற்றைக் குலைப்பதுதான் அவன் நோக்கமாக இருக்கும். எனவே சூழ்நிலை ஞானம் மிகவும் பெரியது. நமக்கு மேலும், கீழும், முன்னும் பின்னும், நம்மைச் சுற்றியும் எதிரிகள் இருக்கிறார்கள் என்றால் ஒரே நேரத்தில் எல்லோரையும் எதிர்த்துப் போர் புரிவது ஆபத்தானது. அது போன்ற நேரங்களில் காத்திருக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு மேலே இருப்பவருடன் சுமுக நிலை இல்லை என்றால் எச்சரிக்கையாய் இருங்கள். அவருக்குப் பிடிக்காத செயல்களைச் செய்யாதீர்கள், அவரின் புகழ் குலையும்படி நடந்துகொள்ளாதீர்கள். போரில் வென்றுவிடலாம் என்பதற்கான காரணங்கள் இருந்தாலும், அந்தப் போரில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே போருக்குப் புறப்பட வேண்டும். சண்டை மைதானத்தில் தன்னம்பிக்கைதான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும். உங்கள் மீது குறைகள் கூறும், அவதூறு பேசும், வெறுப்புக் கொள்ளும் எதிரிகளை அப்படியே விட்டுவிடுங்கள். அந்தக் கீழ்த்தரமான வேலையில் அவர்களே அவர்களை அழித்துக்கொள்வார்கள். அதேவேளையில், உங்கள் பயணத்தைத் தொடருங்கள். உங்களது வெற்றியால் எதிரி வீழட்டும். உங்கள் அனைத்து வெற்றிகளையும் அவர்கள் பார்த்துக் கலக்கம் அடைய நெடுநாள் வாழட்டும் என்று அவர்களை வாழ்த்துங்கள். பொறாமை என்பது எதிரிகளின் இயற்கையான குணமாக இருக்கும். இது மோசமான குணமும் கூட. உங்களுக்கு ஒருவர் மீது பொறாமை ஏற்பட்டால் நீங்களும் அவரது எதிரி ஆகிவிடுவீர்கள். மனதில் பொறாமையை வளர்ப்பவன் நல்லவன் இல்லை. அவன் பேராபத்தைச் சந்திக்க நேரிடும். எட்டி உதைக்கும் எதிரிகளைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கட்டி அணைக்கும் போலி நண்பர்களிடம் உஷாராக இருங்கள். போலி நண்பன் பத்து எதிரிகளுக்குச் சமமானவன். இவனுக்கு உங்களின் அந்தரங்கம் தெரியும். எங்கு அடித்தால் உங்களுக்கு எப்படி வலிக்கும் என்பதும் தெரியும். சரியான நேரத்தில் உங்களுக்கு எதிரியாக மாறி, ஒரு வில்லனாக சிரிப்பான் அவன். எதிரிகளின் கடுஞ்சொற்களைவிட நண்பர்களின் மவுனம்தான் என்னை வாட்டுகிறது என்றார், மார்ட்டின் லூதர் கிங். உங்கள் அந்தரங்க தனிப்பட்ட விஷயங்களை, நெருங்கிப் பழகுகிறார்கள் என்று யாருடனும் பகிராதீர்கள். அது உங்கள் வீட்டுச் சாவியை திருடனிடம் தருவதைப் போன்றது. உங்களது மின்னஞ்சல் கடவுச்சொல் போன்றவற்றை யாரிடமும் கூறாதீர்கள். நண்பர்களை மட்டும் கவனமாகத் தேர்வு செய்யுங்கள். எதிரிகள் தாங்களாகவே உருவாகிவிடுவார்கள். எதிரிகளை வெறுக்கத் தேவையில்லை. அவர்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒருவேளை நமது விரும்பத்தகாத நடத்தையை வெளிப்படுத்துபவர்களாக இருக்கலாம். நம்மை நாமே திருத்திக்கொள்ள அது வாய்ப்பாக அமையும். எனது எதிரிகளை நண்பர்களாக்கி அதன் மூலம் அவர்களை அழித்துவிடுவேன் என்றார் ஆபிரகாம் லிங்கன். நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது போர்வீரனுக்கும் பொருந்தும். இளமைக் காலத்தில், பெற்றோர் கண்டிக்கும்போது ஓடிவிடலாம் என்று நாம் நினைக்கும் இடம் நாம் வாழும் வீடுதான். ஆனால் பிரச்சினைகள் எழும்போதும், வாழ்க்கை கலவர பூமியாகும்போதும் நாம் திரும்பி வர நினைக்கும் இடமும் வீடுதான். வீடுதான் உங்கள் பாதுகாப்புக் கோட்டை. அதற்குள் எதிரிகள் எளிதில் நுழைய முடியாது. இளையோராகிய நீங்கள், தந்தை, தாய், சகோதரர், கணவன், மனைவி என்று உங்கள் வீட்டுக் கோட்டையை உறுதியாக கட்டி எழுப்பிவிடுங்கள். அங்கு வந்து எதிரிகள் உங்களைத் தாக்குவது சாத்தியமாகாது. பொய் பேசுதல், வெட்டிப்பேச்சு, ஒத்திப்போடுதல், சோம்பேறித் தனம், நேர்மையின்மை, கோபப் படுதல், வெறுப்பு, பொறாமை போன்ற பண்புகளால் நாமே நமக்கு மோசமான ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறோம். எனவே, வெளியே காணும் எதிரிகளை ஒழிப்பதற்கு முன்னர் நமக்குள்ளேயே இருக்கும் எதிரிகளோடு போர் புரிவது முக்கியமாக இருக்கிறது. உள்ளே உள்ள எதிரிகளை வெளியேற்றிய பிறகு, வெளியே இருக்கும் எதிரிகளை எதிர்கொள்வது கடினமாக இருக்காது. சில வேளைகளில் நமது சிந்தனையால் நம் போர் முயற்சி முடங்கிப் போகிறது. இன்றைய துயரம் நிரந்தரமானது என்று எண்ணிவிட்டால் அது மேலும் கடுமையாகிறது. நம் எல்லை இதுதான் என்று நினைத்துவிட்டால் அதுவே எல்லையாகி விடுகிறது. அதற்கு மேல் போக முடிவதில்லை. இதிலிருந்து நம்மால் மீள முடியாது என்று கருதிவிட்டால் மீள முடியாமலே போய்விடுகிறது. நம்மைக் கட்டிப்போடும் நமது எண்ணங் களிடம் இருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். இந்த எதிர்மறையான எண்ணங்கள் கூட நம் எதிரிகள்தான்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இதயம் கவர்ந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்...!

இதயம் கவர்ந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்...! நம்மாழ்வார் தங்க.சண்முகசுந்தரம்,மாநில தலைவர், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாய பிரிவு. நா ளை (டிசம்பர் 30-ந் தேதி) இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு என்ற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி விவசாய குடும்பத்தில் கோவிந்தசாமி-அரங்கநாயகி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் நம்மாழ்வார். தன்னுடைய இயற்கை அறிவை பயன்படுத்தி விவசாயிகள் மட்டும் இன்றி அனைத்து துறையினரையும் தன் பக்கம் ஈர்க்க செய்த நிகழ்வுகள் நெகிழச்செய்தன. ஆண்டுதோறும் செயற்கைகோள் வரை படத்தில் வறண்ட பூமியாக பல மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் மாறாது என கைவிடப்பட்ட நிலத்தை குறுகிய காலத்தில் வளமாக்கி சாதனை படைத்தது நம்மாழ்வாரின் சாதனை மைல்கல்லே என்று சொன்னால் மிகையாகாது. கரூர் மாவட்டம் கடவூர் கிராமத்தில் வானகம் என்ற இயற்கை வேளாண்மை பண்ணையை தேர்ந்தெடுத்து அதில் இயற்கை முறையில் வேளாண்மை பணி செய்யும் அளவிற்கு 3 வருடங்களில் தயார்படுத்தியது அனைத்து விஞ்ஞானிகளின் பார்வையையும் இவரது பக்கம் திரும்ப வைத்தது. இயற்கை வேளாண் தொழில்நுட்பத்தை அவர் உலகிற்கு உணரவைத்தார். தஞ்சை தரணியில் பிறந்த நம்மாழ்வார் எடுத்த உடன் வேளாண் விஞ்ஞானியாக மாறிவிடவில்லை. தஞ்சையில் இருந்து சென்று தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்தபோது தான் ரசாயன பயன்பாடு முறைகளை கண்டு வெகுண்டெழுந்து தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு வேளாண்மையில் பூச்சி மருந்துக்கு எதிராக பொதுமக்களிடையே தனது பிரசாரத்தை தொடங்கினார், நம்மாழ்வார். தமிழகத்துக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் துடிப்புடன் தன்னுடைய பணிகளை தொடங்கிய அவர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். இயற்கை வேளாண்மையை குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எளிமையான முறையில் கொண்டு சென்று இன்று அனைத்து இடங்களிலும் இயற்கையாக விளைந்த பல வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் குறிப்பாக மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா உள்ளிட்ட பல்வேறு ரகங்களை மீட்டெடுத்து இயற்கை விவசாயத்தில் பெரும் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தார். அது மட்டுமின்றி 2004-ம் ஆண்டு சுனாமியால் நாகை மாவட்டத்தில் உப்பாக மாறிய கடுமையான நிலம் உரிய மண் வளத்தை இழந்த நிலையில் 6 மாதங்களுக்குள் மீண்டும் புத்துயிர் பெறச்செய்து சாதித்து காண்பித்தார். ரசாயன வேளாண்மைக்கு எதிரான பிரசாரத்தை, படித்த இளைஞர்களை தன்னுடைய எளிமையான பயிற்சி முறைகளால் காந்தம் போல் கவர்ந்து இழுத்து அவர் மறைவுக்கு பிறகும் அவர் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி வருவது கண்கூடு. வேம்புக்கான காப்புரிமையை வெற்றிகரமாக ஜெனீவா நீதிமன்றம் வரை சென்று போராடி நீதிமன்றத்தில் இயற்கை வேளாண் மீது கொண்ட காதலின் காரணமாக நுட்பமான முறையில் வாதாடி பெருமை சேர்த்தார். இயற்கை வேளாண்மை, இயற்கை வாழ்வியல் நீர் மேலாண்மை என்று பயணித்த இவரது வாழ்வில் திருப்புமுனையாக இயற்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு எதிராக போராட்ட களத்தில் ஈடுபட வைத்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் அழைப்பே அரசின் சூழ்ச்சிகளுக்கு எதிராக போராடும் போராட்ட களம் காண வைத்தது. இந்த போராட்டம் மூலம் மண் மீட்பு போராளி எனவும் அடையாளம் காணப்பட்ட இவர் பட்டுக்கோட்டையை அடுத்த அத்தி வெட்டி அருகே உள்ள பிச்சினிக்காட்டில் 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி இயற்கை அன்னையின் மடிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூரில் அவருக்கு மணிமண்டபம் கட்டி அவரது திருவுருவ சிலையை நிறுவி அதன் அருகிலேயே அவருடைய வேளாண் அறிவை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் அமைத்து அதற்கு நம்மாழ்வார் பெயரை சூட்டி கவுரவப்படுத்த வேண்டும். மேலும் நம்மாழ்வாரின் கருத்துக்களை பின்பற்றும் வகையில் அவருடைய நினைவு தினமான டிசம்பர் 30-ந் தேதியை தமிழக அரசு உழவன் உரிமை தினமாக அறிவிக்க வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எச்.ஐ.வி. ரத்தம்: தாயின் வயிற்றில் பாயும் நஞ்சா?

எச்.ஐ.வி. ரத்தம்: தாயின் வயிற்றில் பாயும் நஞ்சா? டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன், முன்னாள் துணை இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம். சா த்தூரைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நபரின் ரத்தத்தைச் செலுத்தியதால் அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எச்.ஐ.வி. என்ற வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டிலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் 1986-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்தம் செய்யப்படாத ஊசி, பாதுகாப்பற்ற உடலுறவு, கவனிக்கப்படாத கருவுற்ற தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தை ஆகிய நான்கு வழிகளில் எச்.ஐ.வி. தொற்று பரவும். பொதுவாக ரத்தம் கொடுக்க தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் எடுக்கப்படும் அனைத்து ரத்ததான பைகளை மற்றவர்களுக்கு ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமான பரிசோதனை செய்யப்பட வேண்டும். பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தில் பாதிப்பு இல்லை என்று அச்சிடப்பட்ட சான்றிதழ் ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்துவதால் விளையக்கூடிய தொற்றை உடனடியாக தடுக்க முடியும். சாத்தூர் பெண்ணுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வு ரத்த வங்கி ஊழியர்களின் கவனக் குறைவே காரணமாக இருக்க வேண்டும். ரத்ததானம் அளித்த அந்த இளம் நபர் சமீபத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆட்பட்டு, ரத்தக்கூறு மாற்று கண்டுபிடிக்கக்கூடிய கால அவகாசத்திற்கு முன்னரே தனது உறவினருக்காக ரத்ததானம் அளித்திருக்கக்கூடும். பாதுகாப்பற்ற உடல் உறவினால் சிறுதுளியில் வரக்கூடிய எய்ட்ஸ் தொற்றை எலிசா முறையில் கண்டுபிடிக்க மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை ஆகலாம். 250 மில்லி லிட்டர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, ரத்தத்தை பெறும் மற்றவருக்கு ஒருசில நாட்களிலேயே எச்.ஐ.வி. முதல் நிலையான குறுகிய கால ரத்தக்கூறு மாற்று நிலை ஏற்படக்கூடும். சாத்தூர் பெண்ணுக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே அவர் கடுமையான காய்ச்சலுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காய்ச்சல் எச்.ஐ.வி.யின் அறிகுறி. பரிசோதனையின் போது எச்.ஐ.வி. தொற்று இந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனமான உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்தம்தான் பாலாக சுரக்கிறது. எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும். அந்த பெண்ணுக்கு நிச்சயமாக தொற்றுக்கு பின் தர வேண்டிய தடுப்புபடி எச்.ஐ.வி. கூட்டு மருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக இது நான்கு வாரங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஆபத்தான நிகழ்வுக்கு பின் மூன்று நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பெண்ணுக்கு மற்ற எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பிரவச காலம் வரை நீடிக்கப்பட வேண்டும். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று முழுவதுமாக தடுக்கப்படுவது சாத்தியமாகும். அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு நிவரம்பின் சிரப் அளிப்பதன் மூலம் எஞ்சிய வாய்ப்பும் முற்றிலுமாக தடுக்கப்படும். என்றாலும் தொடர்ந்து தாய்பாலின் மூலம் எச்.ஐ.வி. தொற்று வரும் வாய்ப்பு 10 சதவீதம் இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு தாய்க்கு வைரஸ் எண்ணிக்கை செய்யப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். தாயும், குழந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். எச்.ஐ.வி. நோய் தொடக்க காலத்தில் மருந்து எதுவும் இல்லாததால் கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது. தற்போது ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்று எச்.ஐ.வி.யையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி. தொற்றுக் கிருமிகள் பாதிக்கப்பட்டவர்கள் முறையான கூட்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியும் மன உளைச்சலுடன் இருக்கும் சாத்தூர் பெண்ணுக்கு நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ஆலோசனைகளை கூற வேண்டும். எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த மருந்து இருக்கிறது என்று அவரை நம்பும்படி செய்ய வேண்டும். இன்று கிராம மக்களும், படித்தவர்களும், அறியாமையால் ரத்த சோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றுங்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. மருத்துவர்கள் ரத்த சோகையை நீக்க தேவையான சத்துணவு உணவுகளையும், மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிலர் ரத்தம் ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. தேவையான போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, சாலை விபத்து, அதிக உதிரப் போக்கு, அணுக்கள் குறைபாடு உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான அளவு ரத்தத்தை முன்கூட்டியே முறையாக பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துவார்கள். பெண்கள் கருவுற்றவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த சோதனை மறுக்காமல் முறையாக செய்துகொள்ள வேண்டும். ரத்த சோதனையின் போது இரும்பு சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா என்று ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதனால் ரத்தம் ஏற்றப்படுவது குறைவாகவே உள்ளது. இன்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மருத்துவ உதவிகளையும் மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். சாத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும் நிகழ்வு. இது மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாடமாக அமைந்து, மற்றொரு இதுமாதிரியான நிகழ்வு நடக்காதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் தங்களுக்கு ஒரு பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். சிறந்த உயிர் காப்பு மருந்தாக திகழும் ரத்தமேற்றுதல் பக்க விளைவுகள் கொண்ட ஒரு அபாயகரமான மருந்தாகவும் நிகழக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. இதில் மனித தவறுகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதை ரத்த வங்கிகளில் பணிபுரியும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ரத்த வங்கியில் தானம் செய்ய வரும் உன்னத கொடையாளி நுழையும் தருணத்தில் இருந்து, ரத்தப்பை வெளியே செல்லும் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகள் அனைவராலும், அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிறர் நலனுக்காக தன் நலனை பேணி காக்கும் தன்னார்வ ரத்த கொடையாளிகள் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும். ரத்தம் ஏற்றுவது கடைசி ஆயுதமாக அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டும். மாற்று வழிகளை முதலில் செய்ய வேண்டும். அவசியமாக தேவைப்படும் போது, முழு ரத்தம் கேட்காது அந்தந்த ரத்த கூறுகளை மட்டும் கேட்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது ஒரு மருத்துவ உதவியாளர் அருகில் இருக்க வேண்டும். ரத்த வங்கி ஒழுங்கு முறைகள் எழுத்திலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்படுவதே இம்மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 28 December 2018

தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடம் இல்லையா?

தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடம் இல்லையா? மு.முத்துமீனா, எழுத்தாளர் உ லகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழின் வழிவந்த தமிழின மக்கள் என்று அனைவரும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான மொழிகளில் முதுமொழி தமிழ் என முழக்கமிடவும் நாம் தவறுவதில்லை. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று மார்தட்டிக் கொள்வதிலும் ஐயமில்லை. இவை யாவும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரல் என்று ஒப்புக் கொண்டாலும், சற்று ஆழத்தில் சென்று சில நடப்புகளைக் கண்டறிவது மிக அவசியமான ஒன்றாகும். பொதுவாக ஒரு மனிதனுக்கு தமிழுணர்வு எவ்வாறு ஏற்படுகிறது? சிறுவயதில் பாடத்தில் படிக்கும் திருக்குறளும் நன்னெறியும் போதித்த நற்சிந்தனைகளினாலும், செந்தமிழ் கவிதைகளின் உணர்வுபூர்வ கருத்துகளினாலும், கற்பனைமிகு கதைகளினாலும், பாரம்பரியமிக்க காவியங்களினாலும், ஆழ்மனதில் தாய்மொழியான தமிழ் மீது பற்று உருவாகிறது. இன்றைய காலகட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் மட்டுமே தமிழைப் பாடத்தின் வழியே கற்க முடியும். அதன் பிறகு பெரும்பாலும் கல்லூரியில் அனைத்து ஆங்கில மொழிக் கல்வியே. தாய்மொழி ஆகி விட்ட காரணத்தினால் பேசிக்கொள்ள மட்டுமே மாணவர்களிடத்தில் பயன்படும் மொழியாக ஒரு கட்டத்தில் மாறிவிடுகிறது. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தமிழ் செய்தித்தாள்களைக் கூட பெரும்பாலானோர் படிப்பதில்லை. ஆங்கில செய்தித் தாள்களை தான் வாசிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சில வருடங்களாக ஆங்கில நாவல்களை படிக்கும் வழக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. நெடுந்தூர ரெயில் பயணங்களிலும் பஸ் பயணங்களிலும் தங்கள் கையில் கட்டாயம் ஒரு ஆங்கில நாவலை அதிகப்படியான இளைஞர்களிடத்தில் காணமுடியும். வரவர புத்தகத்தை எடுத்து வராமல் போனிலேயே இது போன்ற நாவல்களைப் படித்து வருகிறார்கள். ஆங்கில புத்தகங்களை படித்தால் தான் நாகரிகம் எனக் கருதி நம் தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். ஆங்கிலம் உலக மொழியே. படிப்பதற்கு, வேலை செய்வதற்கு இன்றியமையாத ஒன்றே. அதற்காக நம் சுயமானத்தன்மையை இழந்து, தமிழை மறந்து அந்த மொழியை கற்க வேண்டும் என்பது தவறான ஒன்று. ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற நோக்கம் தவறில்லை. அதற்கு நாம் முயற்சி என்ற பெயரில், நம் தமிழ் மொழியை ஒதுக்கி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது பிரபலமாக இருக்கும் ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை விட நூற்றுக்கணக்கான அருமையான நாவல்களை நம் தமிழ் எழுத்தாளர்கள் அளித்துள்ளனர். ஆனால் இவற்றை படிக்க யாரும் முன்வரவில்லை. இதுவே தமிழ் படைப்புகளையும் எழுத்தாளர்களையும் பற்றி கேட்டால் ஒரு நான்கு பேரை விரல்விட்டு இவர்கள் கூறினாலே ஆச்சரியம். 700 பக்கங்கள் கொண்ட ஆங்கில புத்தகத்தை ஒரே இரவில் படித்து முடிக்கும் நம் தமிழ் இளைஞர்களால் 70 பக்கம் கொண்ட தமிழ் நூலுக்கு ஒரு மணி நேரம்கூட ஒதுக்க விருப்பமில்லை. இவ்வாறு நாட்கள் செல்லத் தொடங்குமெனில், புதிய படைப்பை உருவாக்க இளம் எழுத்தாளர்கள் யாரும் முன்வர மாட்டார்கள். இதன் விளைவு தமிழ் மொழியின் மீதுள்ள பற்று என்பது அறவே இல்லாமல் அழிந்துவிடும். குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களில் வடமொழி எழுத்துகள் கலக்காமல் அனேகம்பேர் பெயர் சூட்டுவதில்லை. அழகிய தமிழில் தனித்துவமான இனிய பெயர்கள் இருப்பினும், சுத்தமான தமிழ்ப் பெயர்களை வைக்க முன்வருவதில்லை. மேலும் ஆங்கில பாடல்களையும், கேட்பதில் உள்ள ஆர்வமே தனி, நம் இளைஞர்களிடத்தில். அர்த்தம் புரியவில்லை என்றாலும் இந்தி பாடல்களையும், வாயில் நுழையவே இல்லை என்றாலும் ஆங்கில பாடல்களையும் கேட்டால்தான் இவர்களுக்கு பெருமை. இதனால் தமிழுக்கு ஏற்படும் நிலைமை என்ன? என்று பார்க்கப்போனால் இன்றைய இளம் தலைமுறை நாளை முதுமை தலைமுறைக்குச் செல்லும்போது இன்று போல் தமிழின் பெருமையைப் பேச யாரும் இருக்கமாட்டார்கள். எங்கோ ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் அவர்கள் பேச்சு எடுபடாமல் போய்விடும். இன்று 50 பேர் கொண்ட வகுப்பறையில் 5 பேர் பிரெஞ்சு மொழியையும், 5 பேர் இந்தி மொழியையும் மீதமுள்ள 40 பேர் தமிழையும் முதல் மொழியாக தேர்ந்தெடுத்துப் பயின்றுவரும் விகிதமானது, அடுத்த தலைமுறையில் அப்படியே தலைகீழாக மாறிவிடும். பெயரளவில் மட்டுமே தமிழர்கள் என்றும், தமிழ்நாடு என்றும் பேசிக்கொள்வதில் உண்டாகாது தமிழ் உணர்வு. அன்றாட வாழ்க்கையில் மொழியோடு சேர்ந்து நாமும் பயணித்தல் அவசியம். இக்காலத்தில் தமிழை வளர்க்க முடிகிறதோ இல்லையோ, நிராகரிக்க எளிதில் முடிகிறது. மகாகவி பாரதியும், பாரதிதாசனும் கண்ட கனவில் நூற்றில் பத்து சதவீதமாவது இன்றைய இளைஞர்கள் பின்பற்றுதல் மிகவும் தேவையான ஒன்றாகும். பிறமொழிகளின் ஆதிக்கத்தினால் அழிந்து போன நூற்றுக்கணக்கான மொழிகளில் தமிழ் மொழியும் சேர்ந்துவிடும் அபாயம் தெளிவாக உள்ளது. அதற்காக புறநானூற்றையும், தொல்காப்பியத்தையும் இளைஞர்கள் படிக்க வேண்டும் என்பதில்லை. பொழுதுபோக்கிற்காக ஆங்கில நாவலைப் படிக்கும் நேரத்தை தமிழ் நூல்களுக்கும் அளித்தால் போதுமானது. மனதில் தோன்றும் கருத்துகளை அவ்வப்போது ஒரு டைரியில் தமிழில் எழுதப் பழக வேண்டும். உரை செய்தி அனுப்பும் போது தமிழ் வாசகத்தை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யாமல் கீபோர்டை தமிழுக்கு மாற்றி தமிழில் மெசேஜ் அனுப்புதல் நல்லது. இந்தக் கருத்துகள் யாவும் பின்பற்றுவதற்கு மிகவும் எளிதானவை. இவையாவும் செய்வதால் வேலையிலோ வெளியிலோ தன்மான இழுக்கு எதுவும் வரப்போவதில்லை. பிற மொழிகளின் ஆதிக்கம் எப்படி அணு அணுவாக நுழைந்ததோ, அதேபோல் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து அவற்றின் ஆதிக்கத்தைத் தகர்த்து, தமிழையும், தமிழ்ப் பாரம்பரியத்தையும் காத்திட வேண்டும். தமிழ் மொழியை காக்க முழக்கங்கள் தேவையில்லை. சில பழக்கங்களும், வழக்கங்களுமே தேவையானது. பார் போற்றும் தமிழ் என்பதில் பெருமை இல்லை. ஊர் மக்களாகிய நாம் போற்றிப் பின்பற்றுவதே பெருமை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜி.எஸ்.டி. : செய்திருப்பதும், செய்ய வேண்டியதும்...!

ஜி.எஸ்.டி. : செய்திருப்பதும், செய்ய வேண்டியதும்...! டாக்டர் சோம வள்ளியப்பன் ஜி .எஸ்.டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து இந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் 18 மாதங்கள் முடிகின்றன. ஒரே பொருளுக்கு நாடு முழுவதும் வெவ்வேறு விலைகள் இருந்தன. அதற்கு காரணம், ஒரு மாநிலத்தில் உற்பத்தி ஆகும் பொருள் வெவ்வேறு மாநிலங்களில் விற்பனையாகும் போது, வேறுபட்ட வெவ்வேறு மாநில வரிகளையும் சேர்த்து விற்பனை செய்யப்பட்டது தான். மேலும், தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறவர்கள் கணக்கு காட்டவேண்டிய முறைகள், நிறைவு செய்து அனுப்பவேண்டிய படிவங்கள் ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டதால் நாடு முழுவதும் விற்பனையாகும் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிரமங்கள் இருந்தன. இந்த பிரச்சினைகள் தவிர, ஒரே பொருள் மீது மத்திய அரசு, மாநில அரசுகள், ஊராட்சிகள் என்று பல்வேறு ஆட்சியாளர்களும் பல்வேறு வரிகளை விதித்தார்கள். பொருட்கள் மாநிலம் விட்டு மாநிலம் போகையில், சுங்கச் சாவடிகளில் சோதனை, கட்டணங்கள், தாமதங்கள் ஆகியவையும் தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு சிரமம் கொடுத்துக்கொண்டிருந்தன. இவற்றால் சோதனைகள், வழக்குகள். மேல் முறையீடுகள் என்று பல்வேறு பிரச்சினைகள் வியாபாரம் தொழில் செய்வோருக்கு இருந்தன. மறைமுக வரிகளைப் பொறுத்தவரை, நாடு விடுதலை ஆனதில் இருந்து இப்படித்தான் என்றிருந்த நிலையைப்பற்றி வருத்தங்களும் கோபங்களும் இருந்தாலும் கடந்த ஆண்டின் முதல் பாதி வரை அவற்றில் மாற்றம் வரவில்லை. பின்னர் ஒருவழியாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி, 2017 ஜூலை மாதம் 1-ந் தேதி முதல், அதுவரை நடப்பில் இருந்த கலால் வரி, சேவை வரி, ஆக்ட்ராய், எண்டர்டெயிண்ட்மெண்ட் வரி போன்ற 17 வகையான வரிகளுக்கு மாற்றாக, ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டது. 80 லட்சம் வணிகர்கள், 29 மாநில அரசுகள், 3 யூனியன் பிரதேசங்கள், வியாபாரிகள், வர்த்தக கூட்டமைப்புகள் போன்ற தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் புரிந்து கொள்ளவேண்டும், ஒத்துழைக்கவேண்டும், புதிய நடைமுறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும், என்ற பல்வேறு மிகக்கடுமையான கட்டங்களை எல்லாம் தாண்டி, இந்தியாவில் புதிய மறைமுக வரியாக நிலை பெற்று விட்டது ஜி.எஸ்.டி. ஜி.எஸ்.டி. நடைமுறைபடுத்துவதற்கு முன்பு, ஆண்டுக்கு ஒரு முறை, பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிடும் ஆண்டு வரவு செலவு கணக்கின் போதும், மாநில அரசுகள் வெளியிடும் அவர்களது வரவு செலவு கணக்கின் போதும் தான் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் மாற்றியமைக்கப்படும். அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து சில பொருட்களின் விலைகள் கூடும். வேறு சிலவற்றின் விலைகள் குறையும். ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின்பு, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல், ஆண்டின் இடையிலும், ஆண்டில் ஒரு முறைக்கு மேற்பட்டும் கூட மறைமுக வரிகள் கூடவோ, குறையவோ செய்ய வழி வகைகள் செய்தாயிற்று. அப்படி மாறுதல் செய்யும் அதிகாரம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்திற்குப் பின் மத்திய நிதி மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்களிடம் இருந்து, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. 29 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி மந்திரி இருப்பார். தற்சமயம் தலைவராக இருப்பவர் அருண் ஜெட்லி. அத்தனை மாநில அரசுகளையும் மத்திய அரசு இந்த கவுன்சில் கூட்டத்தில் கலந்தாலோசனை செய்து, கவுன்சிலின் ஒப்புதலோடு தான் எந்த முடிவும் எடுக்க முடியும். ஆகவே, இந்த வரி மாற்றங்களின் பெருமையையோ, வசவையோ எல்லா அரசுகளும் சேர்ந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது நிலை. மொத்த பொருட்களையும் சேவைகளையும் 5 பிரிவுகளாக பிரித்து, அதில் சிலவற்றுக்கு வரி ஏதும் இல்லை என்றும் (0), மற்றவற்றுக்கு 5 சதவீதம், 12சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்ற நாலு விகிதங்களில் வரி விதித்தார்கள். அது ஆரம்பம்தான். அதன்பின் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து, உயர் வரி வளையத்திலிருந்து (சிலாப்) சிலவற்றை குறைந்த வரி வளையங்களுக்குள் தொடர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கிறது ஜி.எஸ்.டி.கவுன்சில். ஜி.எஸ்.டி.கவுன்சிலில் விவாதங்களுக்கு பின் எடுக்கப்படும் முடிவுகள், நாடு முழுவதற்குமான ஜி.எஸ்.டி. மாற்றங்களாக, வழிமுறைகளாக அறிவிக்கப்படுகின்றன. அப்படி நடந்த ஒரு கூட்டம்தான், 22.12.18 அன்று நடைபெற்ற, ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31 வது கூட்டம். 22 டிசம்பர் அன்று நடந்த ஜி.எஸ்.டி.கவுன்சிலின் 31-வது கூட்டத்தில், மொத்தம் 17 பொருட்கள் மற்றும் 6 சேவைகளுக்கு வரி குறைப்பு செய்திருக்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். எதற்கும் வரியை உயர்த்தவில்லை. இந்த மாற்றங்கள் மூலம் மொத்தம் ரூ 5,500 கோடிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த முதல் ஆண்டில் வசூலான மாதாந்திர சராசரி மொத்த வரித் தொகை 89 ஆயிரத்து 700 கோடி. இரண்டாம் நிதி ஆண்டான 2018-19 இதுவரை சராசரியாக மாதம் 97 ஆயிரத்து 100 கோடி வசூலாகிறது. ஆனால் எல்லா மாநிலங்களுக்கும் முன்பிருந்த அளவு வரி வருவாய் இல்லை. அவற்றுக்கு தனியே ஜி.எஸ்.டி. செஸ் லிருந்து இழப்பீடு போய்க்கொண்டிருக்கிறது. இதை ஆராயவும், சரி செய்ய பரிந்துரைகள் செய்யவும் ஏழு மத்திய மந்திரிகள் கொண்ட குழு ஒன்று அமைத்திட இந்த கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோது 228 ‘பொருட்களும் சேவைகளும்’ அதிகபட்சமான, 28 சதவீதம் என்ற வரி வளையத்தில் இருந்தன. டிசம்பர் 2018 வரை 34 பொருட்கள் இருந்தன. இனி அது 28 பொருட்களுக்கு மட்டுமே. அந்த 28-ல் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சிமெண்டும் இருக்கிறது. மேலும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ‘டிஷ்வாஷர்ஸ்’, ‘ஏர்கண்டிஷனர்கள்’ உள்ளிட்டவையும் இருக்கின்றன. ‘ஏற்கனவே சிமெண்ட் தவிர பல்வேறு கட்டுமான பொருட்களின் மீதான வரியை, 28 சதவீதத்தில் இருந்து 18 அல்லது 12சதவீதம்ஆக குறைத்தாகிவிட்டது. சிமெண்டையும் 28-ல் இருந்து 18-க்கு கொண்டுவரும் திட்டம் இருக்கிறது’ என்கிறார் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி. அப்படிச் செய்தால் மேலும் 13ஆயிரம் கோடி ரூபாய் வரிவருவாய் குறையும். ஆனாலும் செய்யப்படும் என்கிறார் அருண்ஜெட்லி. கட்டுமானப்பணிகள் கூடினால் வேலைவாய்ப்பு உயரும் என்பதால் இதைச் செய்யத்தான் வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 December 2018

பருவநிலை மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும்...!

பருவநிலை மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும்...! முனைவர் மா. திருநீலகண்டன், காரைக்குடி இ ன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய தொழில் துறையினால் சுற்றுச்சூழல் மாசுபாடு உருவாகின்றது என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வேளாண்துறை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்பு அடைகிறது, அதே வேளையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் துறையின் பங்கு மிக அவசியமாகும். மக்களின் தேவை மற்றும் பயன்பாடு கருதியே தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த நவீன உலகில் மின்சாரம் கார் மற்றும் மோட்டார் போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆகவே நாம் மின்சாரம் மற்றும் மோட்டார் உற்பத்திச் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என கருதி அதன் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. ஏனென்றால் நவீன உலகில் மக்களின் தேவை மின்சாரம் மற்றும் போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நவீன பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி எந்த ஒரு நாடு அந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கேற்ப வளங்களை ஒதுக்கீடு செய்கிறதோ அங்குதான் பொருளாதார நலன் உருவாகும் என நம்புகின்றன. மக்களின் பொருட்களின் தேவை மற்றும் பயன்பாடு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளினாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தி மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டினை பூர்த்திசெய்வதற்கு மட்டுமே. ஆகவே நாட்டு மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தொழிசாலைகள் தங்கள் உற்பத்தியினை நிறுத்த முடியும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது மனிதனின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள் மட்டுமே. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை உண்டாக்கும் பொருட்களின் மீது அதிக வரி விதிப்பதன் மூலமாக நாம் அதன் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது என்பதனை நவம்பர் 2018-ல் பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக நடைபெற்ற போராட்டங்கள் அறிவுறுத்துகின்றன. நாம் அதிக வரி விதித்தாலும் மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தொழிற்சாலை உற்பத்தியினைக் குறைத்துச் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் அல்லது தொழில்நுட்பத்தின் வாயிலாக மாற்று தேவையினை உருவாக்குவதன் மூலம் சரிசெய்ய முடியும். பருவநிலை மாற்றத்தினால் இயற்கை மற்றும் கனிம வளங்கள் பாதிப்பு ஏற்பட்டு அது வேளாண் மற்றும் தொழிற்துறையில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் பேரிடர் காலங்களில் மின்சாரம், உற்பத்தி காரணிகள் அடிப்படைக் கட்டமைப்பு போன்றவை அழிந்து மூலதன சிதைவு ஏற்படுகிறது. மேலும் அக்காலக் கட்டத்தில் மக்களின் சேமிப்பு முழுவதும் செலவுகளாகவும் அத்தகைய செலவுகள் அனைத்தும் மறு கட்டமைப்புகளுக்கு அவசியப்படுகிறது. இதனால் பெரும் மூலதனத்தை மக்களும், அரசாங்கமும் இழக்க நேரிடுகிறது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் லாபம் குறைந்து, விலைவாசி உயர்ந்து, பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது. ஆகவே பேரிடர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு திட்ட அறிக்கையில் அதிக தொகை ஒதுக்கீடு செய்வது அவசியமான ஒன்றாகும். வேளாண்துறையில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் வேளாண் உற்பத்தி பாதிப்பு விவசாயத் தற்கொலை போன்றவை நிகழ்கின்றன. பருவ நிலை மாற்றத்தினால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து கடல் நீமட்டம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாகும். அதி நவீன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றினால் மண் தன்மை மக்கி போவதும், சிறுகுறு விவசாயிகள் வேளாண் தொழிலை மட்டும் செய்வதால் அதிக கடன் மற்றும் நஷ்டம் உருவாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆகவே பருவநிலை மாற்றத்தினால் வேளாண் துறை பாதிப்பினை சமாளிக்க நதிநீர் இணைப்பு, வட்டியில்லா அரசு அமைப்புகளின் கடன், இடுபொருட்களுக்கு முழு அளவு மானியம், சந்தை உருவாக்கம், உயர் ரக விதைகள் மற்றும் நவீன தொழில் நுட்பம் கிடைக்குமாறு செய்வது மிக அவசியமான ஒன்றாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய சேதுபதி அரசர்

விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய சேதுபதி அரசர் பாஸ்கர சேதுபதி பேராசிரியர்.க.சுபத்திரா வீ ரத்துறவி விவேகானந்தர் அமெரிக்க நாட்டுக்குச் சென்று உலகச் சமய மாநாட்டில் பங்கேற்று சொற்பொழிவாற்றி உலகத்தின் ஏனைய பகுதியினருக்கு நம் தத்துவச் செழுமையை உணர்த்தினார். இதற்கு வழி வகுத்தவர் அக்காலத்தில் ராமநாதபுரம் அரசராக இருந்த பாஸ்கரசேதுபதி ஆவார். அவர் தமக்கு வந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் தம்மை விட விவேகானந்தர் சென்று உரையாற்றினால் நாட்டுக்கும், உலகுக்கும் பயன் விளையும் எனக் கருதினார். விவேகானந்தருக்கும், பாஸ்கர சேதுபதிக்கும் பொதுவான நண்பர் நீதியரசர் சுப்பிரமணிய ஐயர் சேதுபதியின் வேண்டுகோளை விவேகானந்தருக்கு தெரிவித்தார். விவேகானந்தர் முதலில் தயங்கினாலும் பின்னர் ஏற்றுக்கொண்டார். சேதுபதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். விவேகானந்தரின் அமெரிக்கப் பயணத்திற்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் பாஸ்கர சேதுபதியே ஏற்றார். 1893-ம் ஆண்டு விவேகானந்தர் கன்னியாகுமரியில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவிற்கு பயணமானார். விவேகானந்தரின் எழுச்சி மிக்க தோற்றம் மட்டுமல்ல, அவருடைய சிந்தனையைத் தூண்டும் பேச்சும் ஆங்கிலேய மக்களைக் கவர்ந்தது. நான்காண்டுகளுக்குப் பின் 1897-ல் பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் வந்து இறங்கியபோது மன்னர் பாஸ்கரசேதுபதி விவேகானந்தரின் பாதங்களைத் தரையில் பட விடாமல், தன் தலையில் வைத்து இறங்குமாறு கேட்டுக்கொண்டாராம். அத்துடன் விவேகானந்தரை பீரங்கிகள் முழங்க ஒரு மன்னரை வரவேற்பது போல் வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதி, முத்தாள் நாச்சியார் தம்பதியின் மகன் பாஸ்கர சேதுபதி. 1868-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி பிறந்தார். பாஸ்கர சேதுபதி பிறந்த ஐந்தே ஆண்டுகளில் அவரது தந்தை இறந்து விட்டார். அவரை வளர்க்கும் பொறுப்பை ஆங்கில அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அவரைச் சென்னைக்குக் கொண்டுவந்து எழும்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்துக் கல்வி புகட்டியது. பாஸ்கர சேதுபதி ஆங்கிலம், தமிழ் மொழிகளோடு இசை, விளையாட்டு என்று தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். இவர் சென்னைக் கிறிஸ்தவ கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார். சேதுபதிகளிலேயே முதலில் ஆங்கிலப் புலமை பெற்றவர் இவரே. மேலும் தகுந்த புலவர்களிடம் தமிழ் பயின்றதால் தமிழிலும் பெரும்புலமை பெற்றார். 1888-ம் ஆண்டு எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்தபின் ராமநாதபுரம் சென்று தமது இருபத்தொன்றாவது வயதில் சமஸ்தானப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அக்காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் இரண்டாயிரத்து நூற்று எழுபது கிராமங்களையும், அவற்றில் இருந்து சுமார் எட்டு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்டுள்ளதாக விளங்கியது. அவர் தமது ஆட்சியில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முயன்றார். மதுரையிலும், சென்னையிலும் உள்ள துரைத்தனத்தாரின் உயர் அலுவலர்களை அணுகி பல கண்மாய்களைப் பழுதுபார்ப்பதற்கும் ஆவன செய்தார். பாஸ்கரசேதுபதி ஆங்கில மொழியில் பெற்றிருந்த புலமையும், பேச்சாற்றலும் யாவரிடமும் அன்பாகக் கலந்து உரையாடும் தேர்ச்சியும், கவர்னர், கலெக்டர் முதலிய அதிகாரிகளிடம் பல பொதுநலத்திட்டங்களுக்கு இசைவும், உதவியும் பெற வழிவகுத்தது. அவரிடம் ஏனைய ஜமீன்தார்களும், சமஸ்தானாதிபதிகளும், கனிவும் மதிப்பும் கொண்டு பழகி வந்தனர். அன்றைய ஆங்கில அரசு அவருக்கு ‘மகாராஜா’ என்ற சிறப்பு விருதை வழங்கி கவுரவித்தது. அவரும் உண்மையான ‘மகாராஜா’வாகவே வாழ வேண்டும் என விழைந்தார் என்பதை அவரது அறக்கொடைகளும், அரிய செயல்களும் நமக்கு புலப்படுத்துகின்றன. அவர் சமஸ்தானம் தமிழுக்கு அரியணை வழங்கியது. தமிழ்ப்புலவர்களைப் பண்டைய காலத்து மன்னர்களைப் போல் பொன்னும் பொருளும் கொடுத்துப் போற்றினார். இசைவாணர்களையும் ஏனைய கலைஞர்களையும் பாராட்டிப் பரிசளித்தார். 1893-ம் ஆண்டுப் பொங்கல் விழாவின்போது இவர் எழுதிய நாட்குறிப்பில் தமது வாழ்வில் 33 சாதனைகளாவது செய்து முடிக்கவேண்டும் என்று எழுதியுள்ளார். 1901-ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் இவர் முயற்சியால் தொடங்கப்பட்டது. பாண்டித்துரைத் தேவர் இதன் தலைவராகப் பொறுப்பு வகித்தார். பல சிறப்பு வாய்ந்த புலவர்களின் அறிவுப்பாசறையாகத் தமிழ்ச்சங்கம் விளங்கியது. இன்றும் விளங்கி வரு கிறது. மைசூர் சமஸ்தான வித்வான் வீணை சேஷண்ணாவை வரவழைத்து அவரது வீணைக் கச்சேரியை அனைவரும் கேட்க ஏற்பாடு செய்தார். கச்சேரி முடிவில் பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் வழங்கி அவரைப் பாராட்டினார். தமிழ்நாட்டில் அப்போது இருந்த கல்லூரிகளில் தமிழில் முதல் மதிப்பெண் வாங்குவோருக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்க ஓர் அறக்கட்டளை நிறுவினார். அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கிய தமிழ்ப்புலவர் இரா.ராகவையங்காரை முத்துப்பல்லக்கில் ஏற்றி மரியாதை செய்தார். கடையேழு வள்ளல்களைப் போன்று கொடைச் சிறப்புக் கொண்டு புகழ்பெற்றார். கோவில்களுக்கும் மிகுந்த தான தருமங்களை வாரி வழங்கினார். திருவாவடுதுறை மடத்துக்கு இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கினார். அதனைக் கேள்விப்பட்ட சிருங்கேரி மடத்தலைவர் “உங்கள் அரண்மனையை எனக்குத் தானமாகக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டாராம். உடனடியாக அவ்வாறே கொடுத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார் பாஸ்கரசேதுபதி. அதனை ஏற்றுக்கொள்ளாமல் சிருங்கேரி மடத்தலைவர் திருப்பிக் கொடுத்துவிட முயன்றார். ஆனால் பாஸ்கரசேதுபதி கொடுத்த பொருளைத் திரும்பி வாங்கிக் கொள்ளல் தமிழ்ப்பண்பு அல்ல என மறுத்துவிட்டாராம். மிகவும் மனம் வருந்திய சிருங்கேரி மடத்தலைவர் அரண்மனையைத் திரும்ப மன்னரின் மகன் முத்துராமலிங்க சேதுபதிக்கே தானமாகத் தந்துவிட்டார். இன்றைக்குப் பெரிதும் வலியுறுத்தப்படும் சமயநல்லிணக்கம் பாஸ்கர சேதுபதியால் அன்றே சிறப்பாகப் பின்பற்றப்பட்டது. கிறிஸ்தவத் திருமுறையாகிய விவிலியத்தில் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி இரண்டு மணிநேரம் இவர் ஆற்றிய சொற்பொழிவு அன்று எல்லோராலும் வியப்புடன் பாராட்டப்பட்டது. பல்வேறு ஆலயங்களுக்கு விலையுயர்ந்த நகைகளை வழங்கியுள்ளார். தமது அரண்மனை ஊழியர் நாகூர் பள்ளிவாசல் சென்றுவர விரும்புகிறார் என்பதையும் அவருக்குப் பொருளுதவி தேவை என்பதையும் அறிந்து அவர் குடும்பத்துடன் நாகூர் சென்றுவர உதவியுள்ளார். சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு உயர்நிலைப்பள்ளிக் கட்டிடம் கட்ட உதவி செய்துள்ளார். ராமநாதபுரத்தில் ஆதிதிராவிட குழந்தைகளுக்கு விடுதி அமைக்க நன்கொடை வழங்கியுள்ளார். மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனைக்கும் பொருளுதவி செய்துள்ளார். விவேகானந்தர் “கலியுகத்து ராஜரிஷி” என்று பாஸ்கரசேதுபதிக்குப் பட்டமளித்தார். தம் அன்பிற்கும், மதிப்பிற்கும் பாத்திரமான விவேகானந்தர் இறந்தபோது மன்னர் பாஸ்கரசேதுபதி மிகவும் மனம் உடைந்து போனார். பாஸ்கரசேதுபதிக்கு முதுகில் “ராஜபிளவை” என்னும் கட்டி வந்து தொல்லை கொடுத்தது. 1903-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி தமது முப்பத்தைந்தாவது வயதிலேயே இறந்துவிட்டார். பாஸ்கர சேதுபதியை கவுரவிக்கும் விதத்தில் மத்திய அரசு அவருக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது. விவேகானந்தர் புகழ்வரலாறும், மதுரை தமிழ்ச்சங்கத்தின் மாண்பும் பாஸ்கரசேதுபதி நினைவை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ்மொழிக்குத் தொண்டாற்றித் தமிழ்வளர்ச்சியை மேலோங்கச் செய்வதே மதுரை தமிழ்ச்சங்கம் கண்ட அந்தப் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். இன்று (டிசம்பர் 27-ந் தேதி) பாஸ்கர சேதுபதி நினைவுதினம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 December 2018

“பிளாஸ்டிக்” தடை சாத்தியமா?

“பிளாஸ்டிக்” தடை சாத்தியமா? தொளசம்பட்டி குமார், நூலகர். பி ளாஸ்டிக் மனிதனின் நிழல் போல் ஆகிவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு அதிரடியாக ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் அங்காடிகளுக்கு சென்றாலும், கிராமப்புறத்தில் சந்தைகளுக்கு சென்றாலும் சரி துணிப்பைகளும், மூங்கில் கூடைகளும் எடுத்துச் சென்ற காலம் போய் இப்போது “கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு பாலிதீன் கவரில் வாங்கி வரலாம்” என்ற மக்கள் மன நிலைமை ஆகிவிட்டது! காரணம் நவநாகரிகம் என்ற மாயை. மஞ்சள்பை வைத்திருப்பவர்களை கிராமத்தார் என முத்திரை குத்தியதின் விளைவு இந்த பிளாஸ்டிக் வளர்ச்சி அசுரனாகிவிட்டது. ஒரு பொருள் கண்டுபிடிக்கும் போதே அதன் எதிர்கால ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்திருந்தால் முளையிலே கிள்ளியிருக்கலாம். இப்போது மரத்தையே வெட்டவேண்டியுள்ளது. பிளாஸ்டிக் கிரேக்க மொழியில் பிளாஸ்டிக்கோஸ் என்பதாகும். இது பெட்ரோலியம் வகையை சார்ந்தது. கடலில் கடல் தீவுகளை பார்த்திருப்போம். ஆனால் இப்போது கடலில் பிளாஸ்டிக் கழிவு தீவுகளை பார்க்க முடிகிறது. தொண்ணூறு சதவீதம் கடலை ஆக்கிரமித்திருப்பது பிளாஸ்டிக் கழிவுகளே. இப்படியே போனால் மனிதனுக்கு நாற்பது சதவீதம் ஆக்சிஜனை கொடுக்கும் கடலே காணாமல் போய்விடும். பிளாஸ்டிக் தடை சாத்தியமா! என்ற நவீன மூடநம்பிக்கை தோன்றலாம், அதற்காக அப்படியே விடலாமா வருங்கால மண்ணும் மனித சமூகமும் என்னாவது? ஒரு தடவை பிளாஸ்டிக் பையை மண்ணிற்குள் போட்டால் அது நூறாண்டு பாவத்திற்கு சமம். ஆம்! அது மக்குவதற்கு நூறாண்டுகள் ஆகும். இந்த கேரிபேக்குகள் மண்ணிற்கு சென்றால் விவசாயம் பாதிக்கிறது. அதுமட்டுமா? நிலத்தடி நீர் பாதிக்கிறது. சரி எரிக்கலாம் என எரித்தால் அதனால் தோன்றும் வாயுக்கள் காற்றை பாதித்து காற்றால் வானமும் சுவாசித்து பருவமழைக்கும் பாதிப்பு. இந்த ஐம்பூதங்களின் அபாய குரல் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் நாம் பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவு குரல் கொடுத்தாக வேண்டும். தமிழகத்தில் மட்டும் இருபத்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த எண்ணிக்கை பிரமிப்பாக உள்ளது. இவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து மாற்று பொருட்களை தயாரிக்க முன்வர வேண்டும். வணிகநோக்கத்துடன் இல்லாமல் மனித நேயத்துடன் வணிகம் செய்வதே கட்டாய கடமை. நம் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை சில ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதையே முன்னுதாரணமாக வைத்து மக்கள் செயல் புரட்சி ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு மற்றும் அதிகாரிகளே முயன்றால் போதாது, மக்களும் இயக்கமாக மாற வேண்டும். மனிதன் இயற்கையை மறந்தான் நிம்மதியை தொலைத்தான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்புகூட உணவகங்களிலும், விழாக்களிலும் வாழை இலைகளில் தான் உணவு பரிமாறப்பட்டன. ஆனால் இன்று தட்டுகளின் மீது பாலிதீன் கவர்களில் சூடாக பரிமாறப்படுகின்றன. இதைவிட கொடுமை என்னவென்றால் சென்னை போன்ற பெரு நகரங்களில் தங்கும் விடுதிகள் உணவகங்களில் நம் பாரம்பரிய இட்லி சமைப்பதற்கு துணிக்கு பதிலாக பாலிதீன் கவரில் சமைப்பதுதான் வேதனை. ஒவ்வொரு முறையும் பிளாஸ்டிக் குவலையில் சூடான பாணத்தை அருந்தும்போதும் அது பல சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமம் என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. எங்கும் எப்போதும் ரெடிமேடாக பிளாஸ்டிக்கை பழகிய நாம் அடுத்து என்ன செய்வது என திகைக்க தேவையில்லை. அந்த மாற்று தான் பயோ பிளாஸ்டிக் இது மரவள்ளி, மக்காச்சோளம், சோயா இவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவைகள் நீரிலும், நிலத்திலும் கரையக்கூடியது. அது மட்டுமல்ல இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுமட்டும் மாற்றல்ல. துணிப்பைகள், பாக்குமட்டை, சணல் போன்ற பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் அவசர விழிப்புணர்வு தேவை. “குடி குடியை கெடுக்கும், பிளாஸ்டிக் பூமியை கெடுக்கும்” மக்கள் மனசு வைக்காமல் எதுவும் சாத்தியமாகாது. சட்டத்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புணர்வு இருந்தால்தான் இந்த பிளாஸ்டிக் தடை வெற்றிபெறும். ஏற்கனவே 2002-ம் ஆண்டு தமிழகத்தில் முன்னோடி திட்டமாக பிளாஸ்டிக் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. தற்போது முழுமையாக முடியாவிட்டாலும் மறுசுழற்சி முறையும் சிறிதுகாலம் அமல்படுத்தலாம். பயன்பாட்டை குறைப்பதற்கு தயாராக வேண்டும் தண்ணீரை விலைக்கு வாங்கியது போய் தற்போது சில பெருநகரங்களில் காற்றும் வாங்கப்படுகிறது. நிலைமை இப்படியே போனால் சூரிய ஒளியையும் விலைக்கு வாங்கவேண்டி வரலாம். இனியும் பிளாஸ்டிக்கை நாம் பயன்படுத்தினால் “பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கொலைகாரர்களே” இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை மறந்தால் இயற்கை பொங்கியெழும்!.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கி ஊழியர் போராட்டம் ஏன்?

வங்கி ஊழியர் போராட்டம் ஏன்? சி.எச்.வெங்கடாசலம் பொதுச்செயலாளர், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம். வ ங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இந்த வேலை நிறுத்தம் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வங்கி துறையை பாதுகாக்க முக்கிய கோரிக்கைளை முன்வைத்து நடத்தப்படும் வேலை நிறுத்தம் ஆகும். வங்கிகளில் மத்திய அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் அரசின் மூலதனத்தை குறைப்பது, வங்கிகளை இணைத்து பெரும் முதலாளிகள் வங்கிகளை தொடங்க உரிமம் வழங்குவது, வங்கிகளின் குறிக்கோள் லாபம் மட்டுமே என்று மாற்றுவது போன்ற கொள்கைகளை அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவில் வங்கிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. குறிப்பாக வங்கிகள் தேசியமயம் செய்த பிறகு வங்கி சேவைகள் மக்களை பெரிதும் சென்று அடைந்துள்ளன. 8 ஆயிரம் கிளைகளோடு செயல்பட்ட வங்கிகள் இன்று 88 ஆயிரம் கிளைகளாக வளர்ந்திருக்கின்றன. இதன் விளைவாக வங்கிகள் சேவை சாதாரண பொதுமக்களை சென்று அடைந்துள்ளது. 1969-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்று ரூ.118 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. அதேபோன்று விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு திட்டங்கள் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தொழில் வளர்ச்சி போன்ற அனைத்து பொருளாதார தேவைகளுக்கும் கடன் அளிக்கும் முன்னேற்றமும் ஏற்பட்டு உள்ளது. 60 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வங்கி கிளை என்ற நிலைமை மாறி தற்போது 12 ஆயிரம் மக்கள் தொகைக்கு சராசரியாக ஒரு கிளை என்ற அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு வங்கி சேவை சென்றடைய வங்கித்துறையை மேலும் விரிவுபடுத்தும் அவசியம் உள்ளது. இதன் காரணமாகவே மோடி அரசு ஜன்தான் போஜனா போன்ற திட்டங்களை அறிவித்து உள்ளது. இன்றைக்கும் 20 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு இல்லாத நிலைமை உள்ளது. 40 ஆயிரம் கிராமங்களில் மட்டுமே வங்கி கிளைகள் உள்ளன. அதாவது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்றும் வங்கிகள் சென்று அடையவில்லை. எனவே மேலும் ஆயிரக்கணக்கில் வங்கி கிளைகளை தொடங்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பின்னணியில் மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 5 பெரிய வங்கிகளாக மாற்றுவது அரசின் திட்டமாகும். இதன் தொடக்கமாக கடந்த ஆண்டு அரசுக்கு சொந்தமான 6 வங்கிகள் மூடப்பட்டு ஸ்டேட் வங்கியோடு இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் மேலும் 3 வங்கிகளை அதாவது பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளை இணைத்து ஒரு புதிய வங்கியை தொடங்கும் முடிவை அறிவித்து உள்ளது. இந்த முடிவை எதிர்த்து இந்த வேலை நிறுத்தும் நடத்தப்படுகிறது. வங்கிகள் இணைப்பின் காரணமாக கிளைகள் மூடப்படும் நிலை ஏற்படும். உதாரணமாக சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஸ்டேட் வங்கியில் இணைப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 21-ந் தேதி நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் மத்திய துணை நிதியமைச்சர் சிவ பிரபாத் சுக்லா ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பிறகு ஒரு ஆண்டில் 6 ஆயிரத்து 950 கிளைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளார். இதே நிலைதான் மற்ற வங்கி இணைப்புக்கு பிறகும் ஏற்படும். இந்த 3 வங்கிகளை இணைத்தால் 9 ஆயிரம் கிளைகள் அடங்கிய பெரும் வங்கியாக மாற்றப்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால் இந்த வங்கியிலும் ஆயிரக்கணக்கான கிளைகள் மூடும் ஆபத்து ஏற்படும். எனவே வங்கி இணைப்பை தவிர்க்க வேண்டும். அமெரிக்காவில் 32 கோடி மக்களே உள்ளனர். இந்தியாவில் 135 கோடி மக்கள் தொகை உள்ளது. ஆனால் நம் நாட்டில் உள்ள வங்கி கிளைகளை விட கூடுதலாக அமெரிக்காவில் வங்கி கிளைகள் உள்ளன. இதுபோன்று பல நாடுகளில் மக்கள் தேவைக்கேற்ப வங்கி சேவை அதிகரித்துள்ளன. பெரிய வங்கி என்று சொன்னாலே அது சிறந்த வங்கி அல்லது தரமான வங்கி என்று கூற முடியாது. பல நாடுகளில் பெரிய வங்கிகள் மூடப்பட்டுள்ள பின்னணியில் நமது நாட்டில் இந்த கொள்கையை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது. எனவே அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவில் வங்கிகள் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வங்கிகளாகவே செயல்பட வேண்டும். இந்த வங்கிகளை இணைப்பதால் வங்கிகள் பெரு வங்கிகளாக மாற்றப்பட்டால் இப்பெரும் வங்கிகள் பெரும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உதவும் நிலைமை ஏற்படும். இந்தியாவில் இன்றுள்ள 21 வங்கிகளை ஒன்றாக இணைத்தாலும் அதன் மொத்த மூலதனம் 20 ஆயிரம் கோடி அளவிலேயே இருக்கும். ஆனால் உலகத்தில் உள்ள பெரும் வங்கிகளில் மூலதனம் ரூ.4 லட்சம் கோடி என்று அதிகமாக உள்ளது. எனவே வங்கிகளை இணைப்பதன் மூலமாக உலகத்தில் உள்ள பெரும் வங்கிகளோடு போட்டி போட நமது வங்கிகளால் இயலாது. இப்போட்டியை இந்திய வங்கிகள் வெல்ல முடியாது என்று தெரிந்தும் இந்த முடிவை அரசு மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் கடந்த ஆண்டு மேற்கொண்ட ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பிறகு கிளைகள் மூடப்பட்டதன் விளைவாக ஊழியர்கள் உபரியாக்கப்பட்டு விட்டனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரி 80 ஆயிரம் புதிய ஊழியர்கள் ஸ்டேட் வங்கியில் நியமிக்கப்பட்டு வந்தனர். இணைப்புக்கு பிறகு இந்த நிலை மாறி இந்த ஆண்டு 5 ஆயிரம் புதிய நியமனங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. எனவே வங்கி இணைப்பு வேலைவாய்ப்புகளையும் குறைத்து உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக உள்ள நம் நாட்டில் வேலைவாய்ப்பை பாதிக்கும் வங்கி இணைப்பை அரசு கைவிட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கூடுதலாக வங்கி கிளைகளை தொடங்க வேண்டியது தேவையாகும். வங்கிகளில் உள்ள வாராக்கடன்களை குறைக்கவே இந்த இணைப்பு திட்டம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ல், ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் கோடியாக இருந்த வாராக்கடன் தொகை மார்ச் 31, 2018-ல், ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே வங்கி இணைப்பு மூலமாக வாராக்கடன் தொகை குறையும் என்ற வாதமும் தவறு. 20 ஆண்டுகளுக்கு முன்பாக 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் இன்று 13 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. இதில் பெரும் முதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததே காரணமாக உள்ளது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வாராக்கடனை வசூலிப்பதேஅவசர தேவையாக உள்ள பின்னனியில் வங்கிகளை இணைக்கும் வாராக்கடனை வசூலிக்கும் திட்டங்களை முடக்குவது வங்கித்துறைக்கு பாதகமானது. இந்தியாவுக்கு தேவை அனைத்து தரப்பு மக்களும் வங்கி சேவை சென்று அடைய வேண்டும். அனைத்து மக்களுக்கும் தேவையான வங்கி கடன் பெரும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை சென்றடையும் வகையில் கூடுதலாக கிளைகளை தொடங்க வேண்டும். இந்த கொள்கைகளை விடுத்து வங்கிகளை இணைக்கும் திட்டத்தில் மத்திய அரசு இயங்குவாதல் அது நாட்டு மக்கள் கவனத்துக்கும், நாடாளுமன்ற கவனத்துக்கும் கொண்டு வரவே இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்குகின்றனர். இதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 December 2018

பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?

படுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் நிறப் புகை பெரும் கருமேகமாகி நாட்டின் மேல் பரவுகிறது. மக்கள் வெடித்தழுகிறார்கள். பேரதிர்ச்சி, தாங்கொணா துயரம், கட்டுக்கடங்கா வலி. எல்லோர் மத்தியிலும் இரண்டு கேள்விகள். ‘‘ஐயோ... இது உண்மைதானா?’’, ‘‘கொலையாளி யார்?’’ பிரிவினைக் கலவரங்களின் ரத்தச்சகதிக்கு நடுவே ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசுக்கு இரண்டாவது கேள்வி எவ்வளவு பெரிய ஆபத்தைச் சுமந்திருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இரண்டாவது கேள்விக்கான பதிலுடன் இணைத்தே முதல் கேள்விக்கான பதிலையும் சொல்கிறார் பிரதமர் நேரு. அதே நேரத்தில், நாடு முழுக்க கலவரங்களைத் தடுக்கும் விதமாகச் செல்வாக்குள்ள தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பிராமணிய எதிர்ப்புக்குப் பேர்போன தமிழ்நாட்டில் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணர் என்ற தகவல் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குமோ என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்திலுள்ள சன்னாநல்லூரில் திராவிடர் கழகக் கூட்டம். வழக்கம்போல பிராமணியத்தை வெளுத்து வாங்கும் ஒரு இளம் பேச்சாளர் காந்தி படுகொலைச் சம்பவத்தை நோக்கி நகர்கிறார். கோட்ஸே ஒரு பிராமணர் என்பதைச் சொல்லும் அவர், தமிழ் பிராமணர்களின் ஆதிக்கத்தோடு கோட்ஸேவின் மேலாதிக்கக் குணத்தைப் பொருத்த முற்படுகிறார். மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார் தன் கையிலுள்ள தடியைத் தட்டுகிறார். பெரியார் இப்படி தடியைத் தட்டினால், அது ஒரு சமிக்ஞை. அதற்கான அர்த்தம் திராவிடக் கழகத்தினருக்குத் தெரியும்: இந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது, முடித்துக்கொள்! இளைஞர் பேச்சை முடித்துக்கொள்கிறார். கூட்டம் முடிகிறது. இளைஞரின் முகம் வாடியிருக்கிறது. பிராமணியம், வைதீகத்தின் அபாயத்தை மக்களிடம் உணர்த்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம், அதை ஏன் பெரியார் தடுக்கிறார் என்பது இளைஞரின் முறைப்பாடு. பெரியார் சொல்கிறார், “நமக்கு பார்ப்பனியத்தோடதான் சண்டை. தனிப்பட்ட பார்ப்பனர்களோட இல்லை. அப்புறம், நாடு இப்போ இருக்கிற சூழல்ல இப்படிப் பேசலாமா? மக்கள் ஏற்கெனவே கொந்தளிப்புல இருக்கிறப்போ அதைத் தூண்டிவிடுற மாதிரி பேசுறது கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்துறதா நம்ம நோக்கம்?” என்னிடம் நிறைய இளைஞர்கள் கேட்பதுண்டு. “ஒரு காந்தியர் எப்படி பெரியாரை ஏற்க முடியும்? காந்தியைக் கடுமையாக விமர்சித்தவர் பெரியார். காந்தியும் பெரியாரும் எந்தப் புள்ளியில் சந்திக்க முடியும்?” இன்னும் ஒருபடி மேலேபோய் “பெரியாரைப் போன்ற இனவெறியரை எப்படி ஒரு காந்தியர் தூக்கிப்பிடிக்க முடியும்?” என்று கேட்பவர்களும் உண்டு. இரண்டு பதில்களைச் சொல்வேன். “இருவருமே சமத்துவத்துக்காகப் போராடியவர்கள். பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்று. இருவருமே வெளிப்படுத்தல் முறைமையில் ஒரு நாட்டுப்புறத்தன்மையைக் கொண்டவர்கள். இருவரையுமே நவீனப் பார்வையில் வார்த்தைகள் வழி கொண்டு மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பெரியார் இன்னும் கூடுதல் சிக்கலானவர்.” பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதியவர், பல நூறு கூட்டங்களைப் பேசியவர் காந்தி. ஏன் ‘‘என்னுடைய வாழ்க்கையே நான் விட்டுச்செல்லும் செய்தி’’ என்று அவர் சொன்னார்? ஏன் தன்னுடைய எழுத்துகளையோ, உரைகளையோ தன்னுடைய செய்தி என்று அவர் குறிப்பிடவில்லை? எல்லோரையும் நேசிப்பது, எல்லாத் தரப்புகளையும் புரிந்துகொள்வது, மனிதர்களை அவர்களுடைய வார்த்தைகளைத் தாண்டி அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் வழியாகப் புரிந்துகொள்ள முற்படுவதே சரியான வழி என்பதே காந்தியைக் கற்பவர்கள் கற்கும் அடிப்படைப் பாடம். ஒரு சந்தர்ப்பத்தில், “அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது” என்று பாதுகாப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ளச் சொல்லிக்கூடப் பேசியிருக்கிறார் பெரியார். இந்த வார்த்தைகளின் வழி மட்டும் பார்க்கும் ஒருவரால், காலமெல்லாம் பெரியார் நடத்திய இயக்கமும் வாழ்க்கையும் எப்படி வன்முறைக்கு நேரெதிராக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? நக்ஸல்பாரி இயக்கத் தாக்கத்தின் தொடர்ச்சியாக, தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கலாமா என்ற குரல் அமைப்புக்குள் வந்தபோது, “வன்முறை நோக்கம் கடுகளவு மனதில் இருந்தாலும், அவர்கள் எவருக்கும் கழகத்தில் இடம் இல்லை” என்று அப்படிப் பேசியவர்களை உடனே ஏறக்கட்டியவர் பெரியார். மரபைக் கடுமையாகச் சாடியவர் பெரியார். ஆனால், பெரியார் மொழியைப் புரிந்துகொள்ள சித்தர் மரபுதான் நமக்கு நெருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிராமணியத்தையும் பிராமணர்களையும் பெரியார் எப்படிப் பகுத்தார் என்பதற்கும், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது, கருத்து முரண்பாட்டைத் தனிமனிதர்களிடத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது எப்படி என்பதற்கும் காந்தி படுகொலை நடந்த சமயத்தில் பெரியார் முன்னெடுத்த செயல்பாடுகளை ஒரு உதாரணமாகச் சொல்ல முடியும். காந்தி இறந்தவுடனேயே பெரியாரிடமிருந்து வந்த அறிக்கையிலேயே ‘இங்கு எந்த வன்செயலும் நடந்துவிடக் கூடாது’ என்கிற அக்கறையும் பதற்றமும் வெளிப்படலாயிற்று. 1948 ஜனவரி 31 ‘விடுதலை’ ஏடு சொல்கிறது, “காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறியிருக்கும். மதமும் வைதீகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து... இப்பெரியாரின் பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் - மதயியல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.” அடுத்து, 7.2.1948 ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதுகிறார், ‘காந்தியாரின் இடத்தை நிறைவுசெய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல், மத வேறுபாடுகளைக் கடந்து சகோதர பாவத்துடன் நடந்துகொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டு திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்.’ இதனூடாகவே சென்னை மாகாணத்தின் அன்றைய ஆட்சியாளரான ஓமந்தூராருடனான கலந்தாலோசனையின்படி, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார். தொடர்ந்து, 22.2.1948 நாளைய ‘விடுதலை’யில் விரிவாகவே இந்த விஷயத்தை அணுகுகிறார். “பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது. நான் கூறுகிறேன்: சுட்டது பார்ப்பான் அல்ல, சுட்டது கைத்துப்பாக்கி. அதற்காகப் பார்ப்பான் மீது கோபித்துக்கொள்வதாயிருந்தால், அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின் மீது நாம் கோபித்துக்கொண்டாக வேண்டும்; அதை முதலில் துண்டு துண்டாய் உடைத்துத் தூள்தூளாக்க வேண்டும். காந்தியாரைச் சுட்டுக்கொல்ல உதவியாயிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பான் மீதும் நாம் கோபித்துக்கொள்ள முடியும்; பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு, அவனுக்கு ஆதரவாய் இருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்க வேண்டும். அவனும் அந்தத் துப்பாக்கிபோல், அவர்களுக்கு ஒரு கருவியாக அமைந்துவிட்டான். மதத்தின் பேரால் உள்ள மூடநம்பிக்கைக் கருத்துகளும் சாதியின் பேரால் உள்ள ஆசார அனுஷ்டானங்களும் மற்றும் கடவுள் சாஸ்திரம் இவைகள் பேரால் உள்ள அறியாமையுந்தான் இம்மாதிரிக் காரியத்தைச் செய்யும்படி அவனைச் செய்துவிட்டன. இனியேனும் இப்படிப்பட்ட காரியம் நடவாமல் இருக்க வேண்டும். அவனைத் தூக்கில் போட்டுவிடுவதாலோ அல்லது அவன் சேர்ந்திருந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிடுவதாலோ அல்லது அவனுக்கு ஆதரவாயிருந்த அத்தனை பேரையும் அழித்துவிடுவதாலோ இப்படிப்பட்ட காரியம் நின்றுவிடாது. இவை வெறும் தற்காலிக சாந்தியாகத்தான் இருக்க முடியும். இது ஒருபோதும் நிரந்தரமான சாந்தியாகிவிடாது. இப்படிப்பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமாயிருந்ததோ அதை அழித்து ஒழிக்க வேண்டும். ஒரு சமுதாயத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒரு சாதியையோ அப்படியே அழித்துவிடுவதால் இக்கொடுமை மறைந்துபோகாது… காந்தியாரைக் கொன்றது ஒரு பார்ப்பான் என்று கூறப்படுகிறது. சித்தானந்தரைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று கருதப்படுகிறது. இந்தப் பார்ப்பானோ அல்ல, முஸ்லிமோ தனியாகத் தோன்றி இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவிட்டதாக நாம் கூறிவிட முடியாது. இம்மாதிரிச் சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன என்பதற்குச் சரித்திர ஆதாரங்களே இன்றும் இருந்துவருகின்றன. மதுரை மாநகரில் 8,000 சமணர்கள் சைவத்தை எதிர்த்ததற்காகக் கழுவேற்றப்பட்டார்கள். அவர்களைக் கழுவேற்றியவன் பார்ப்பான் அல்லன். முஸ்லிமும் அல்லன். பின் யார்? அன்றைய மதக் கருத்துப்படி அரசன் அவர்களைக் கழுவேற்ற ஆணையிட்டான். ஆகவே, அவனல்லன் கழுவேற்றியது; அவன் தழுவியிருந்த மதம்தான் அவர்களைக் கழுவேற்றும்படி அவனைத் தூண்டியது. நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால், மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும்... திராவிடர் கழகம் கலகத்திற்கோ கொள்ளைக்கோ பலாத்காரத்திற்கோ இருந்துவரவில்லை. அதுவும் திராவிடர் கழகம் எனது கைக்கு வந்தது முதற்கொண்டு, அதில் நான் சேர்ந்து தொண்டாற்றிவந்த நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் அதை எந்தவிதமான பலாத்காரத்திற்கோ பழிவாங்குவதற்கோ உபயோகப்படுத்தியவன் அல்லன். அத்தகைய செயலுக்கு அனுமதி கொடுத்தவனுமல்லன். திராவிடர் கழகத்தில் பலாத்காரத்திற்கு இடமில்லை. பலாத்கார உணர்ச்சி வேண்டுமென்று கருதிய சிலரையும்கூட திராவிடர் கழகத்தைவிட்டு நீக்கித் தண்டித்திருக்கிறோம். பலாத்காரத்திற்கு மட்டுமல்ல, நடத்தைக் குறைவுக்காகவும், ஒழுக்கக் குறைவுக்காகவும்கூடப் பலரைக் கழகத்தைவிட்டு வெளியேற்றியிருக்கிறோம். கழகத்தின் தலைவன் என்கிற முறையில் அதை மக்களின் அன்பிற்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமான ஸ்தாபனமாக்கக் கவலையோடு நான் அதை நடத்திவருகிறேன்... எங்கள் கழகம் யாரையும் விரோதிகள் என்று நினைப்பதில்லை. காரணம், இன்று நமக்கு எதிர்ப்பாயுள்ளவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்பதை நாங்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறோம்!” அடுத்து, 11.03.1948 நாளைய ‘விடுதலை’ ஏட்டில் எழுதுகிறார், “காந்தியார் மறைவுக்கு நான் துக்கப்பட்டது, பெரும்பாலானோருக்கு முதலைக் கண்ணீராகவே தோன்றியது. தோன்றினால் தோன்றட்டும். அவர் மறைவுக்கு இனிப்பு வழங்கிய மாபாதகக் கூட்டத்திற்கு வேண்டுமானால் அவர் செத்ததைப் பற்றிக் கவலை இல்லை; மகிழ்ச்சிகூட அடைந்தது. ஆனால், அவர் துர்மரணமடைந்த சேதியைக் கேட்டதும் எனக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. தலைவலி வந்துவிட்டது. என்ன செய்கிறேன் என்பதுகூடப் புரியாமல் நெடுநேரம் 15 சதுரமுள்ள அறையில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தேன். காரணம் என்னவென்றால், அவரிடம் அந்தரங்கத்தில் எனக்கு இருந்த பற்றுதல், அவர் கொள்கைகளில், உழைப்பில் இருந்த நலன்கள்; அப்படிப்பட்டவருக்கு இதுதானா கூலி என்ற மனவேதனை ஆகியவைகளே. அவருடைய முறையில் வேண்டுமானால் அபிப்ராய பேதம் பலமாக இருந்தது உண்டு. ஆனால், அவரது முக்கியக் கொள்கையில் அதாவது சத்தியம், அஹிம்சை, அன்பு ஆகியவைகளில் அபிப்ராய பேதம் இல்லையே!” இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்றும், ‘காந்தி சகாப்தம்’ என்ற பெயரில் நமக்கென ஒரு ஆண்டு முறையை உருவாக்க வேண்டும் என்றும் கோரியவர் பெரியார். காந்தி சிலைகளைத் தெருவில் போட்டு உடைக்க வேண்டும் என்று பேசியவரும் பெரியார். பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? சிக்கல்தான். பல்வேறு தருணங்களில் பிராமணர்களுடனான உறவையும் பிணக்கையும் பற்றிப் பெரியார் பேசியிருக்கிறார் என்றாலும், ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய உரையையும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையையும் இங்கே குறிப்பிடலாம். 1953-ல் ஒரு நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய பிராமணர்கள் சிலர் இதை ஆட்சேபிக்கின்றனர். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அவர் பேசியது 8.1.1953 ‘விடுதலை’யில் வெளியாகியிருக்கிறது. “யாரோ சில பிராமணர்கள், ‘பெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறிவருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்’ என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்கவழக்கங்களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை. நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றமடைந்துவிட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில், நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு. காலம் எப்போதுமே ஒன்றுபோல இருக்க முடியாது. நம் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமை சாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்துவருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின்சந்ததிகளும், பிராமணர்களின் பின்சந்ததிகளும் இந்தப்படியே நடந்துகொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரணமானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளங்கியிருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்தமானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இருதரப்பினரும் கவனிக்க வேண்டியது.” அடுத்து, 1962 ‘விடுதலை’யில் பெரியார் கையொப்பமிட்ட அறிக்கை ‘பார்ப்பனத் தோழர்களுக்கு!’ என்ற தலைப்பிட்ட அறிக்கை: ‘‘பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும்கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையைவிட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்!” பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பெரியாரின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருதரப்புமே அவருடைய வார்த்தைகளைத் தாண்டி அவருக்குள் நுழைய வேண்டும். பெரியாரின் வலியை உணர்தல் வழியாகவே அது சாத்தியம். காந்தி - பெரியார் இருவரையும் இணைக்கும் புள்ளி சுயவதை. தான் கனவு கண்ட சமத்துவ சமூகத்தில் எல்லாத் தரப்புகளையும் உள்ளடக்குவதையும், அதற்கான வழிமுறையாக வன்முறையை வெளித்தள்ளிய மாற்றுத்தரப்புடனான தொடர் உரையாடலையும் தார்மிக நெறியாக்கியவர் காந்தி. பெரியாரின் தார்மிகமும் அதுவென்றே நினைக்கிறேன்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நகைச்சுவையின் இலக்கணம் சார்லி சாப்ளின்

நகைச்சுவையின் இலக்கணம் சார்லி சாப்ளின் சார்லி சாப்ளின் கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர். இ ன்று(டிசம்பர் 25-ந் தேதி) ஆலிவுட் நடிகர் சார்லி சாப்ளின் நினைவு தினம். இவ்வுலக வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மக்களை சிரிக்க வைத்தவர் என்கிற சிறப்பு கொண்டவரும் நகைச்சுவைக்கு இலக்கணம் வகுத்தவருமான சார்லி சாப்ளின் 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி லண்டன் மாநகரத்தில் வால்ஒர்த் என்கிற பகுதியில் பிறந்தார். ஜெர்மனி நாட்டு கொடுங்கோல் அதிபர் ஹிட்லர் பிறந்ததற்கு நான்கு நாட்களுக்கு முன்பு பிறந்தவர். பிற்காலத்தில் ஹிட்லரை கிண்டலடித்து ‘தி கிரேட்டிக்டேட்டர்’ (பெரும் சர்வாதிகாரி) என்கிற திரைப்படத்தில் நடித்தார். ஹிட்லர் போன்றே இவரும் மீசை வைத்திருந்தார். சாப்ளினின் பெற்றோர் இருவருமே நாடகம், இசை போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். ஒருமுறை, இசை நிகழ்ச்சி யொன்றில் அம்மா பாடிக் கொண்டிருந்தபோது தொண்டைக்கட்டி, குரல் கம்மிய போது ஐந்தே வயதான சார்லி சாப்ளின் மேடைக்கு அழைக்கப்பட்டு அம்மாவிற்குபதிலாக பாட வைக்கப்பட்டார். தனது 12-வது வயதில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்ற மேடையில் அரங்கேறினார், சிறிய வயதிலேயே மக்கள் முன்பு தோன்றி தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக, கலைத்துறையில் தீவிர ஈடுபாடு உண்டானது. ஆங்கிலத் திரைப்படங்களின் தலைநகரம் எனப்படும் ஹாலிவுட் திரைப்பட நகரில் சார்லி சாப்ளின் தன் வாழ்க்கையை தொடங்குகிறார். 1914-ல் வெளியான ‘கிட்ஆட்டோரேஸஸ் இன்வெனிஸ்’ திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களை விட தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள ட்ராம்ப் என்கிற பையனாக, இறுக்கமான கோட்டும், நீண்ட ஷூவும், கையில் தடியும், தலையில் தொப்பியும், சிறியஅளவில் கனமான மீசை, வித்தியாசமான நடை என அறிமுகமானார். இந்த ட்ராம்ப் பாத்திரம் அனைவரது பாராட்டு பெற்றமையால் 1915-ல் அதே ஒப்பனை, பாவனைகளுடன் ‘திடிராம்ப்’ என்கிற படத்தை தானே தயாரித்து இயக்கினார். இந்த ட்ராம்ப் கதாபாத்திரத்தினையே பிற்காலத்தில் அவர் நடித்த படங்களில் பயன்படுத்தினார். திகிட், கோல்ட்ரஷ், சிட்டிலைட்ஸ், மாடர்ன்டைம்ஸ், திகிரேட்டி க்டேட்டர் என்று பல வெற்றிப்படங்களில் நடித்து நகைச்சுவை மன்னனாகத் திகழ்ந்தார். நகைச்சுவையில் எல்லா பரிணாமங்களையும் தொட்டு சிறந்து விளங்கினார். அவரது படங்களின் சிறப்பு, நகைச்சுவையும் மனிதநேயமும் இழைகளாக பின்னப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் கதை அமைப்பு. உதாரணமாக, ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில், தொழிற்புரட்சியின் விளைவாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் கேடுகளை சித்தரிப்பார். உற்பத்தியை அதிகரிக்க, முதலாளிகள் தொழிலாளிகளை எந்திரங்கள் போல கருதுவதும், தொழிலாளிகள் சாண் வயிற்றுக்காக எவ்வாறெல்லாம் போராட வேண்டியுள்ளது என்பதை வயிறு குலுங்க நகைச்சுவையுடன் கூறும் படைப்பு. இன்றைய கணினி காலத்திலும் இரவும் பகலும் அயராது உழைப்பவர்களுக்கு அப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொருந்துவது வேதனை. எல்லோரையும் சிரிக்க வைத்த அவரது வாழ்க்கை சோகங்கள் நிரம்பியது. ‘நான் மழையில் நனைந்துக் கொண்டே இருக்க விரும்புகிறேன். அப்போது தான் நான் அழுவது மற்றவர்களுக்கு தெரியாது’ என்று வேதனையோடு குறிப்பிட்டவர். இவருக்கு பன்னிரெண்டு வயது ஆகும் போதே தந்தை மதுப்பழக்கத்தினால் இறந்து போகிறார். தாய் மனநோயால் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார். சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கையும் சோபிக்கவில்லை. சார்லி சாப்ளின் போல வேடமணிந்து நடிக்கவேண்டும் என உலகில் பல முன்னணி நடிகர்கள்ஆசைப்பட்டு நடித்துள்ளனர். இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத சிறப்பு. இந்தியில் ராஜ்கபூர், சஞ்சீவ்குமார், தமிழ் நடிகர்கள் கமல், ஸ்ரீதேவி போன்றவர்கள் அவரைப் போன்று ஒப்பனை செய்து நடித்துள்ளனர். ஒருமுறை லண்டன் மாநகரில் மாறுவேடப் போட்டி நடை பெற்றது. சார்லி சாப்ளின் போல வரவேண்டும். வேடிக்கைக்காக சார்லி சாப்ளினும் கலந்துக் கொண்டார். ஆனால், முதல்பரிசு அவருக்கு கிடைக்கவில்லை. மூன்றாவது பரிசுதான் கிடைத்தது. எந்த அளவிற்கு மக்களை அவர் ஈர்த்து இருக்கிறார், என்பதற்கு இது உதாரணமாகும். அவரது படங்கள், ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக, பழமை வாதங்களை தகர்க்கும் வகையில் அமைந்ததற்காக வலதுசாரியினர் எதிர்த்தனர். 1952-ல் இங்கிலாந்து நாட்டுக்கு விடுமுறைக்கு சென்று விட்டு திரும்பும் போது அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், மனம் வெதும்பிய சார்லி சாப்ளின் சுவிட்சர்லாந்து நாட்டில் பண்ணை வீடொன்று கட்டி குடியேறினார். 1972-ல் ஆஸ்கர் கவுரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதற்காக இருபது ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்றார். விருது வாங்கும் போது அங்கு கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று அவருக்கு தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேலாக கையொலி எழுப்பி, அவரை உணர்ச்சி பிழம்பாக்கினர். அவரது கண்கள் குளமாகின. ஆஸ்டெராய்டு (உடுக்கோள்) ஒன்றிக்கு சார்லி சாப்ளின் பெயர் வைக்கப்பட்டது. திரைப்படத் துறையில் முதன் முதலாக அமெரிக்க நாட்டு அதிபரை விட அதிக அளவில் சம்பளம் பெற்றவர் சார்லி. மவுன படங்கள் வெளியான காலத்திலும் சரி, பிறகு பேசும் படங்கள் வந்த காலத்திலும் தலைச் சிறந்த நடிகராக திகழ்ந்த சிறப்பு சார்லி சாப்ளினுக்கு உண்டு. நாம் அதிக அளவில் சிந்திக்கிறோம், ஆனால், மிக குறைத்த அளவே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். எந்திரங்களை விட நமக்குஅதிகம் தேவை மனிதநேயமே. அறிவுத்திறனை விட இரக்கமும் கனிவும் தேவை. இவைகள் இல்லாத வாழ்க்கை வன்முறைகள் நிரம்பி நம்மை ஒட்டு மொத்தமாக அழித்து விடும். என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவரது திரைப்படங்களும் இதையே வெளிப்படுத்தின. 1977 டிசம்பர் 25-ந் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் வாட் என்கிற ஊரில் தனது 88-வது வயதில் காலமானார். நகைச்சுவையை உலகுக்கு அளித்த சார்லி சாப்ளின் இறந்த பிறகும் நகைச்சுவை தொடர்ந்தது. புதைக்கப்பட்ட அவரது உடலை ஒருவன் தோண்டி யெடுத்து இன்றைய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு மிரட்டி பணம் கேட்டான். போலீஸ் அவனை கண்டறிந்து கைது செய்து உடலையும் மீட்டனர். இம்முறை யாரும் தோண்டி எடுத்து விடக்கூடாது என்று மிக அதிக ஆழத்தில் அவர் புதைக்கப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்டாலும், திரைப்படங்கள் வாயிலாக என்றும் நம்முடன் உலா வருவார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீரமங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்சியார் நினைவுதினம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிவகங்கை சமஸ்தானத்தை வீரமங்கை வேலு நாச்சியார் ஆட்சி செய்தார் அவரது கணவர் முத்து வடுகநாத தேவரை கொன்று சிவகங்கை சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக, பெண்ணரசி ஒருவர் ஆயுதம் ஏந்தி போராடி இழந்த தன் ராஜ்ஜியத்தை மீட்டு, அதன் அரியணையில் அமர்ந்தவர் இவரே. பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த மாதர்குல மாது. இளவயதிலேயே போர்க்கலைகள் பல கற்று, பல மொழிகள் அறிந்து பேரழகியாகவும் திகழ்ந்து போர்படை தளபதியாக போரை வழிநடத்தி தானும் முன்னின்று போரிட்டு இந்திய சுதந்திர போரில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து தன் ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த வீரப்பெண்மணி. அவர் மறையும் வரை அவரிடமிருந்து ஆங்கிலேயர்களால் அந்த சமஸ்தானத்தை கைப்பற்ற முடியவில்லை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. ராமநாதபுரத்தை ஆண்ட சேது மன்னர் அரசகுலத்து, அரசர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகள் இளவரசி வேலு நாச்சியாருக்கும் முத்துவடுகநாத பெரியவுடையார் தேவருக்கும் 1746-ல் திருமணம் நடந்தது. இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள முக்குளம் கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்கைபழனியின் மகன்களான மருது சகோதரர்கள் இருவரும் நல்ல உடல் வலிமையும், அஞ்சாநெஞ்சமும் கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் சிவகங்கை பேர்ப்படையில் வீரர்களாக போர் புரிந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தியதால் மன்னர் முத்து வடுகநாதர் இவ்விருவரையும் தன் போர்ப்படையில் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். அரண்மனையில் இவ்விருவருக்கும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. இவர்கள் இருவரும் வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தனர். பெரிய மருது பல அரிய போர் பயிற்சிகளையும் வேலு நாச்சியாருக்கு கற்றுக் கொடுத்தார். திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பின் ராணி வேலு நாச்சியாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வெள்ளாச்சி நாச்சியார் எனப் பெயர் சூட்டினர் மொகலாய ஆட்சியை வீழ்த்தி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியபோது சிவகங்கை ராஜ்ஜியத்திடம் வரிவசூலிக்கும் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாப்பிடம் வழங்கியிருந்தனர். ஆனால் மன்னர் முத்துவடுகநாதனார் உனக்கு நான் ஏன் வரிகட்ட வேண்டும் என கேட்டு வரிகட்ட மறுத்து வந்தார். கோபம் கொண்ட ஆங்கிலப்படை தன்னுடன் நவாப்பின் படையையும் சேர்த்துக் கொண்டு காளையார் கோயிலில் தங்கியிருந்த, முத்துவடுக நாதர் மீது வஞ்சகமாக குண்டு வீசி கொன்று சிவகங்கை ராஜ்ஜியத்தை கைப்பற்றிக் கொண்டது. தன் கணவர் இறந்ததை அறிந்த வேலுநாச்சியார், இழந்த ராஜ்ஜியத்தை மீட்க உறுதி பூண்டார். ராணி வேலு நாச்சியார் தன் கைக்குழந்தை வெள்ளாச்சியுடன் கொல்லங்குடியில் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளாச்சி நாச்சியாரும், மருது சகோதரர்களின் பாதுகாப்பில் அங்கிருந்து விருப்பாட்சி பாளையத்திற்குத் தப்பிச் சென்றனர். விஜயநகரபேரரசின் ஆதரவோடு இருந்த அப்பாளையக்காரர் கோபால் நாயக்கர் இவர்கள் அனைவருக்கும் போதுமான வசதி செய்து கொடுத்தார். ராஜ்ஜிய பிரதானி தாண்டவராயப் பிள்ளையும் உடனிருந்தார். எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்கள் உதவியுடன் பிடித்து வைத்திருந்த சிவகங்கை, ராமநாதபுரம் ராஜ்ஜியங்களை மீட்டு தனது ஆட்சியை நிறுவ வேலுநாச்சியார் திட்டமிட்டார். அப்போது மைசூர் மன்னர் ஹைதர் அலி திண்டுக்கல்லில் தங்கியிருந்ததால் அவரின் உதவியை நாடினார். அது சம்பந்தமாக ராணியின் அறிவுரைபடி பிரதானி தாண்டவராயன் பிள்ளை விரிவான கடிதம் ஒன்றை ஹைதர் அலிக்கு எழுதினார். அதில் தங்களுக்கு ஐயாயிரம் குதிரைபடை வீரர்களையும், ஐயாயிரம் போர்ப்படை வீரர்களையும் அனுப்பி வைத்தால் உங்கள் படை உதவியுடன் இழந்த எங்கள் இரு ராஜ்ஜியங்களை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு விடுவோம் என குறிப்பிட்டிருந்தார். ஹைதர் அலியின் பதிலுக்காக காத்திருந்த போது திடீரென வயது முதுமையின் காரணமாக பிரதானி தாண்டவராயன்பிள்ளை மறைந்தார். கவலை அடைந்த வேலுநாச்சியார் மனம் தளராது மருது சகோதரர்களின் பாதுகாப்போடு மைசூர் மன்னர் ஹைதர் அலியை ஆண் வேடத்தில் குதிரையில் சென்று சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை ரத்தின சுருக்கமாக உருதுமொழியில் எழுத்து மூலமாக நேரில் அளித்தார். அப்போது மருது சகோதரர்களும் உடனிருந்தனர். ஹைதர் அலி உங்கள் அரசியார் எங்கே? என்று நாச்சியாரிடமே கேட்டபோது, தன் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை எடுத்துவிட்டு நான் தான் அரசி என்று உருதுமொழியில் கூறினார். சில நிமிடம் இருவரும் உருதுமொழியிலேயே கலந்துரையாடினர். இந்துப் பெண் ஒருவர் இவ்வளவு அழகாக உருது பேசியதை கண்டு நெகிழ்ந்து போன ஹைதர்அலி நாச்சியார் மீது பரிவு கொண்டு அவர் கேட்ட படைகளை அனுப்பி வைத்தார். ஆற்காட்டு நவாப்பிற்கும், மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கும் ஏற்கனவே பகைமை இருந்து வந்ததால் இது சாத்தியமாயிற்று. மகிழ்ச்சி அடைந்த வேலு நாச்சியார் “சிவகங்கைப்பிரிவு”, “திருப்பத்தூர் பிரிவு”, “காளையார்கோவில் பிரிவு” என தன் படைகளை பிரித்தார். சிவகங்கைப்பிரிவு தனது தலைமையிலும், திருப்பத்தூருக்கு நள்ளியம்பலம் தலைமையிலும், காளையார்கோவிலுக்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படை பிரிக்கப்பட்டு நவாப்படையையும், ஆங்கிலேயர்களின் படையையும் 1780-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5-ம் நாள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. சிவகங்கைப் பிரிவிற்கு தான் தலைமை ஏற்றதால், தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி வேலுநாச்சியார் போரிட்டார். ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. ஆயுதமின்றி திணறிப்போன ஆங்கிலேயப் படை விரட்டி அடிக்கப்பட்டது. அந்தப்போரில் மருது சகோதரர்களின் தீரமிக்கப் போர் வேலு நாச்சியாரின் தேசப்பற்றுள்ள தலைமைப்பண்பும் வெற்றியைத் தேடித்தந்தன. ராமநாதபுரம் இளவரசியாக பிறந்து, சிவகங்கையின் ராணி ஆகி, கணவனை இழந்து, கைக் குழந்தையுடன் போராடி தன் ராஜ்ஜியத்தை மீட்டு சிவகங்கை அரசியாக 1780-ம் ஆண்டில் முடிசூட்டிக் கொண்டார். 66-வது வயதில் 1796, டிசம்பர் மாதம் 25-ந் தேதி காலமானார். இந்திய சுதந்திர போர் வரலாற்றில் முதல் பெண் சுதந்திரப் போராட்ட தியாகி வீரமங்கை வேலு நாச்சியார் ஆவார். அவருடைய வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts