Sunday 30 December 2018

ஞானதீபம் ரமண மகரிஷி...!

ஞானதீபம் ரமண மகரிஷி...! கவிஞர் ச. இலக்குமிபதி, வேலூர் இன்று (டிசம்பர் 30-ந் தேதி) ரமண மகரிஷி பிறந்தநாள் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை வணங்க நினைக்கும்போது, நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அண்ணாமலையும் கார்த்திகை தீபமுமே ஆகும்! அதற்கு அடுத்து சட்டென்று நினைவுக்கு வருவது ரமண தீபம்! விருது நகருக்கு அருகில், திருச்சுழியில், வெங்கடராமனாக பிறந்து, திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியாக உயர்ந்த ஞானதீபம். மகான் ரமணரின் ஞாபகமே நம்மை ஒளிப்படுத்தி வழிப்படுத்தும். 1879-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 30-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு திருச்சுழிசுந்தரமய்யர், அழகம்மைக்கும் மகனாக திருச்சுழியில் அவதரித்தார். அவரது இயற்பெயர் வெங்கடராமன். ஆரம்பக்கல்வியினை திருச்சுழியிலும் பின்பு திண்டுக்கல் மற்றும் மதுரை என அவரது பள்ளி வாழ்க்கை தொடர்ந்தது. அவரது 12-வது வயதில் தந்தை மறைந்தார். வெங்கடராமனாய் இருந்து மதுரையில் வசித்தகாலத்தில் அவரது இல்லத்திற்கு வருகைதந்த ஒரு உறவினரிடம் எங்கிருந்து வரேள்? என்று கேட்க அவரோ, அருணாசலத்திலிருந்து என்று பதில் அளித்தார். அன்று முதல் வெங்கடராமன் உள்ள முழுவதும் அருணாசலம் ஆட்சி செய்யஆரம்பித்தது. சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் மிகப் பெரிய தாக்கத்தை இவர் நெஞ்சுக்குள் விதைத்தது. வெங்கடராமன் உள்ளத்திலிருந்து தொடர்ந்து எழுந்த அருணாசலம் என்கிற குரல் மதுரையை விட்டு அருணாசலத்தைக் காண புறப்படும்படி வெங்கடராமனை உற்சாகப்படுத்தியது. மதுரை வீட்டிலிருந்து மூன்று அணாவுடன் திருவண்ணாமலை போக வேண்டும் என்று புறப்பட்டு, திண்டிவனம் வரை டிக்கெட் எடுத்து ஏறி விட்டார். திருவண்ணாமலை எங்கே இருக்கிறது எப்படி போகவேண்டும் என்பதை அறியாமலேயே அருணாசலம் ஆணையிட புறப்பட்டு விட்ட வெங்கடராமன், ரெயிலில் உடன் பயணித்தவர் அறிவுரையினை கேட்டு விழுப்புரத்தில் இறங்கி, மாம்பழப்பட்டு, அறையணிநல்லூர் என அலைந்து, இறுதியில் 1896-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி விடியற்காலை திருவண்ணாமலையில் கால் பதித்தார். திருவண்ணாமலை என்கிற அந்த புனிதபூமியில் அண்ணாமலையானை அகம் கரைய கண்டு தரிசித்து விட்டு வெளியே வருகிறார் வெங்கடராமனாகிய ரமணன்!. கவுபீன கோவணத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் தன்னை மறந்து அமர்ந்துவிட்டார். அதற்குப்பிறகு இலுப்பைமரம், பாதாள லிங்கம், கோபுரம், குருமூர்த்தம், மாந்தோப்பு, குகை, பவழக்குன்று, விருப்பாட்சி குகை, ஸ்காந்தசிரமம் என பல்வேறு இடங்களில் ரமணரின் இருப்பிடம் மாறி, மாறி அமைகிறது. ரமணமகரிஷியின் புகழ் ஒளிநாளும் நாடெங்கும் வீசஆரம்பிக்கிறது! உலகின் பல்வேறு நாட்டு பக்தர்கள் ரமணரை தரிசித்து அவரிடம் பல்வேறு ஆன்மிக புதையல்களை கண்டு எடுத்து கவலை மறக்கிறார்கள். ஒருமுறை ரமண ஆசிரமத்தின் வளர்ச்சியின் ஆரம்பத்தில், திருட வந்த திருடர்கள் பகவானையும் தடியால் தாக்கி இருக்கிறார்கள். எனக்கு நல்லபூஜை கிடைத்தது என்று பகவான் சிரித்தபடி நண்பர்களிடம் கூறி இருக்கிறார். ஞானஅனுபவம் வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டு பால் பிரண்டன், மகானைக் கேட்டபோது நான் யார்? முதலில் நான் யார் என்று தெரிந்து கொண்டால் உண்மை தெரிந்துவிடும். நமக்குள்ளே பார்வையை திருப்பினால் எல்லா வினாக்களுக்கும் விடைகள் கிடைத்து விடும் என்று பதில் அளித்திருக்கிறார் பகவான் ரமணர்! ஒருமுறை அவர் உடல் மீது நாகப்பாம்பு ஏறிச்சென்றிருக்கிறது “எப்படி இருந்தது” அருகில் இருந்தவர்கள் கேட்டதற்கு குளிர்ச்சியாக மிருதுவாக என்று பதில் அளித்தாராம் ரமணர்! ரமணரிடம் ஒருபசு (லட்சுமி) பக்தியுடன் நெருங்கி வாழ்ந்திருந்ததை அனைவரும் அறிவார்கள். அந்த பசு மறைந்தபோது, லட்சுமி என்கிற அந்த பசுவின் முகத்தை, ஒரு குழந்தையைப் போல இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு, “லட்சுமி” என்றும் இவளால்தான் ஆசிரமம் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்தது என்றாராம் அருகில் இருந்தவர்களிடம்! எத்தனை பெரிய மகா ஞானி அவர் அருளால் நிரம்பிய ஆண்டவனின் அற்புதத் தூதர் அவர்! ஒரு முறை ஒரு குருவியின் முட்டை உடைந்த போது அதை ஓர் ஈரத்துணியில் அந்த முட்டையின் விரிசலைசுற்றி குருவி கூட்டிலேயே வைத்திருக்கிறார். ஏழு நாட்களுக்குப்பிறகு “விரிசல் சேர்ந்து விட்டது அம்மா குருவி இப்போ சந்தோஷப்படும்,” என்று குதூகலித்தாராம் அந்த அறிவுச் சூரியன்!. விருப்பாட்சி குகைக்கு எதிரில் ஒரு பாறை மீது காலையில் எந்த வெயில் மழைகாற்று இடி என்றாலும் தவறாமல் 1/2 மணி நேரம் அமர்ந்திருப்பாராம்! ஒரு வயதான பக்தை, சாமி எனக்கு வயதாகிவிட்டது மலை மேலே ஏறிவந்து உங்களை தரிசிக்க முடியாதே, என்று கேட்டதற்காகவே பகவான் ரமணர் மலைக்கு அடிவாரத்தில் இருந்த அந்த பக்தைக்கு காட்சி தரவே தவறாமல் மலைமேல் இருந்த அந்த பாறையில் அமர்ந்திருந்தாராம். “ரமண சத்குரு ராயனே” என்கிற கீதம் காற்றில் கலந்து திருவண்ணாமலை அருள் மலைமீது இன்றும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. சந்குரு ஸ்ரீரமணமகரிஷி மிகச் சிறந்த ஞானக்கவிஞர், தமிழ், வடமொழி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கவித்துவம் வாய்ந்த தவயோகி. நான் யார்? என்பது அவர் நம்மை சிந்திக்கவைத்திருக்கும் வாசகம் ஊர் சுற்றும் உள்ளம் அடங்கிடவிடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக்காட்டு அருணாசலா என்று பாடிய அந்த மகான் 1950-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி இரவு 8.47 மணிக்கு மகாசமாதி அடைந்து விட்டார். ரமணரின் பாடலைப்பாடி நாமும் நம்மை ஐம்புலக்கள்வரின் தீமைகளிலிருந்து காத்துக் கொள்வோம்!.

No comments:

Popular Posts