Tuesday, 25 December 2018

நகைச்சுவையின் இலக்கணம் சார்லி சாப்ளின்

நகைச்சுவையின் இலக்கணம் சார்லி சாப்ளின் சார்லி சாப்ளின் கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர். இ ன்று(டிசம்பர் 25-ந் தேதி) ஆலிவுட் நடிகர் சார்லி சாப்ளின் நினைவு தினம். இவ்வுலக வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மக்களை சிரிக்க வைத்தவர் என்கிற சிறப்பு கொண்டவரும் நகைச்சுவைக்கு இலக்கணம் வகுத்தவருமான சார்லி சாப்ளின் 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி லண்டன் மாநகரத்தில் வால்ஒர்த் என்கிற பகுதியில் பிறந்தார். ஜெர்மனி நாட்டு கொடுங்கோல் அதிபர் ஹிட்லர் பிறந்ததற்கு நான்கு நாட்களுக்கு முன்பு பிறந்தவர். பிற்காலத்தில் ஹிட்லரை கிண்டலடித்து ‘தி கிரேட்டிக்டேட்டர்’ (பெரும் சர்வாதிகாரி) என்கிற திரைப்படத்தில் நடித்தார். ஹிட்லர் போன்றே இவரும் மீசை வைத்திருந்தார். சாப்ளினின் பெற்றோர் இருவருமே நாடகம், இசை போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். ஒருமுறை, இசை நிகழ்ச்சி யொன்றில் அம்மா பாடிக் கொண்டிருந்தபோது தொண்டைக்கட்டி, குரல் கம்மிய போது ஐந்தே வயதான சார்லி சாப்ளின் மேடைக்கு அழைக்கப்பட்டு அம்மாவிற்குபதிலாக பாட வைக்கப்பட்டார். தனது 12-வது வயதில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்ற மேடையில் அரங்கேறினார், சிறிய வயதிலேயே மக்கள் முன்பு தோன்றி தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக, கலைத்துறையில் தீவிர ஈடுபாடு உண்டானது. ஆங்கிலத் திரைப்படங்களின் தலைநகரம் எனப்படும் ஹாலிவுட் திரைப்பட நகரில் சார்லி சாப்ளின் தன் வாழ்க்கையை தொடங்குகிறார். 1914-ல் வெளியான ‘கிட்ஆட்டோரேஸஸ் இன்வெனிஸ்’ திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களை விட தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள ட்ராம்ப் என்கிற பையனாக, இறுக்கமான கோட்டும், நீண்ட ஷூவும், கையில் தடியும், தலையில் தொப்பியும், சிறியஅளவில் கனமான மீசை, வித்தியாசமான நடை என அறிமுகமானார். இந்த ட்ராம்ப் பாத்திரம் அனைவரது பாராட்டு பெற்றமையால் 1915-ல் அதே ஒப்பனை, பாவனைகளுடன் ‘திடிராம்ப்’ என்கிற படத்தை தானே தயாரித்து இயக்கினார். இந்த ட்ராம்ப் கதாபாத்திரத்தினையே பிற்காலத்தில் அவர் நடித்த படங்களில் பயன்படுத்தினார். திகிட், கோல்ட்ரஷ், சிட்டிலைட்ஸ், மாடர்ன்டைம்ஸ், திகிரேட்டி க்டேட்டர் என்று பல வெற்றிப்படங்களில் நடித்து நகைச்சுவை மன்னனாகத் திகழ்ந்தார். நகைச்சுவையில் எல்லா பரிணாமங்களையும் தொட்டு சிறந்து விளங்கினார். அவரது படங்களின் சிறப்பு, நகைச்சுவையும் மனிதநேயமும் இழைகளாக பின்னப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் கதை அமைப்பு. உதாரணமாக, ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில், தொழிற்புரட்சியின் விளைவாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் கேடுகளை சித்தரிப்பார். உற்பத்தியை அதிகரிக்க, முதலாளிகள் தொழிலாளிகளை எந்திரங்கள் போல கருதுவதும், தொழிலாளிகள் சாண் வயிற்றுக்காக எவ்வாறெல்லாம் போராட வேண்டியுள்ளது என்பதை வயிறு குலுங்க நகைச்சுவையுடன் கூறும் படைப்பு. இன்றைய கணினி காலத்திலும் இரவும் பகலும் அயராது உழைப்பவர்களுக்கு அப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொருந்துவது வேதனை. எல்லோரையும் சிரிக்க வைத்த அவரது வாழ்க்கை சோகங்கள் நிரம்பியது. ‘நான் மழையில் நனைந்துக் கொண்டே இருக்க விரும்புகிறேன். அப்போது தான் நான் அழுவது மற்றவர்களுக்கு தெரியாது’ என்று வேதனையோடு குறிப்பிட்டவர். இவருக்கு பன்னிரெண்டு வயது ஆகும் போதே தந்தை மதுப்பழக்கத்தினால் இறந்து போகிறார். தாய் மனநோயால் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார். சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கையும் சோபிக்கவில்லை. சார்லி சாப்ளின் போல வேடமணிந்து நடிக்கவேண்டும் என உலகில் பல முன்னணி நடிகர்கள்ஆசைப்பட்டு நடித்துள்ளனர். இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத சிறப்பு. இந்தியில் ராஜ்கபூர், சஞ்சீவ்குமார், தமிழ் நடிகர்கள் கமல், ஸ்ரீதேவி போன்றவர்கள் அவரைப் போன்று ஒப்பனை செய்து நடித்துள்ளனர். ஒருமுறை லண்டன் மாநகரில் மாறுவேடப் போட்டி நடை பெற்றது. சார்லி சாப்ளின் போல வரவேண்டும். வேடிக்கைக்காக சார்லி சாப்ளினும் கலந்துக் கொண்டார். ஆனால், முதல்பரிசு அவருக்கு கிடைக்கவில்லை. மூன்றாவது பரிசுதான் கிடைத்தது. எந்த அளவிற்கு மக்களை அவர் ஈர்த்து இருக்கிறார், என்பதற்கு இது உதாரணமாகும். அவரது படங்கள், ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக, பழமை வாதங்களை தகர்க்கும் வகையில் அமைந்ததற்காக வலதுசாரியினர் எதிர்த்தனர். 1952-ல் இங்கிலாந்து நாட்டுக்கு விடுமுறைக்கு சென்று விட்டு திரும்பும் போது அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், மனம் வெதும்பிய சார்லி சாப்ளின் சுவிட்சர்லாந்து நாட்டில் பண்ணை வீடொன்று கட்டி குடியேறினார். 1972-ல் ஆஸ்கர் கவுரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதற்காக இருபது ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்றார். விருது வாங்கும் போது அங்கு கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று அவருக்கு தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேலாக கையொலி எழுப்பி, அவரை உணர்ச்சி பிழம்பாக்கினர். அவரது கண்கள் குளமாகின. ஆஸ்டெராய்டு (உடுக்கோள்) ஒன்றிக்கு சார்லி சாப்ளின் பெயர் வைக்கப்பட்டது. திரைப்படத் துறையில் முதன் முதலாக அமெரிக்க நாட்டு அதிபரை விட அதிக அளவில் சம்பளம் பெற்றவர் சார்லி. மவுன படங்கள் வெளியான காலத்திலும் சரி, பிறகு பேசும் படங்கள் வந்த காலத்திலும் தலைச் சிறந்த நடிகராக திகழ்ந்த சிறப்பு சார்லி சாப்ளினுக்கு உண்டு. நாம் அதிக அளவில் சிந்திக்கிறோம், ஆனால், மிக குறைத்த அளவே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். எந்திரங்களை விட நமக்குஅதிகம் தேவை மனிதநேயமே. அறிவுத்திறனை விட இரக்கமும் கனிவும் தேவை. இவைகள் இல்லாத வாழ்க்கை வன்முறைகள் நிரம்பி நம்மை ஒட்டு மொத்தமாக அழித்து விடும். என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவரது திரைப்படங்களும் இதையே வெளிப்படுத்தின. 1977 டிசம்பர் 25-ந் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் வாட் என்கிற ஊரில் தனது 88-வது வயதில் காலமானார். நகைச்சுவையை உலகுக்கு அளித்த சார்லி சாப்ளின் இறந்த பிறகும் நகைச்சுவை தொடர்ந்தது. புதைக்கப்பட்ட அவரது உடலை ஒருவன் தோண்டி யெடுத்து இன்றைய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு மிரட்டி பணம் கேட்டான். போலீஸ் அவனை கண்டறிந்து கைது செய்து உடலையும் மீட்டனர். இம்முறை யாரும் தோண்டி எடுத்து விடக்கூடாது என்று மிக அதிக ஆழத்தில் அவர் புதைக்கப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்டாலும், திரைப்படங்கள் வாயிலாக என்றும் நம்முடன் உலா வருவார்.

No comments:

Popular Posts