Follow by Email

Thursday, 27 December 2018

விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய சேதுபதி அரசர்

விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய சேதுபதி அரசர் பாஸ்கர சேதுபதி பேராசிரியர்.க.சுபத்திரா வீ ரத்துறவி விவேகானந்தர் அமெரிக்க நாட்டுக்குச் சென்று உலகச் சமய மாநாட்டில் பங்கேற்று சொற்பொழிவாற்றி உலகத்தின் ஏனைய பகுதியினருக்கு நம் தத்துவச் செழுமையை உணர்த்தினார். இதற்கு வழி வகுத்தவர் அக்காலத்தில் ராமநாதபுரம் அரசராக இருந்த பாஸ்கரசேதுபதி ஆவார். அவர் தமக்கு வந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் தம்மை விட விவேகானந்தர் சென்று உரையாற்றினால் நாட்டுக்கும், உலகுக்கும் பயன் விளையும் எனக் கருதினார். விவேகானந்தருக்கும், பாஸ்கர சேதுபதிக்கும் பொதுவான நண்பர் நீதியரசர் சுப்பிரமணிய ஐயர் சேதுபதியின் வேண்டுகோளை விவேகானந்தருக்கு தெரிவித்தார். விவேகானந்தர் முதலில் தயங்கினாலும் பின்னர் ஏற்றுக்கொண்டார். சேதுபதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். விவேகானந்தரின் அமெரிக்கப் பயணத்திற்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் பாஸ்கர சேதுபதியே ஏற்றார். 1893-ம் ஆண்டு விவேகானந்தர் கன்னியாகுமரியில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவிற்கு பயணமானார். விவேகானந்தரின் எழுச்சி மிக்க தோற்றம் மட்டுமல்ல, அவருடைய சிந்தனையைத் தூண்டும் பேச்சும் ஆங்கிலேய மக்களைக் கவர்ந்தது. நான்காண்டுகளுக்குப் பின் 1897-ல் பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் வந்து இறங்கியபோது மன்னர் பாஸ்கரசேதுபதி விவேகானந்தரின் பாதங்களைத் தரையில் பட விடாமல், தன் தலையில் வைத்து இறங்குமாறு கேட்டுக்கொண்டாராம். அத்துடன் விவேகானந்தரை பீரங்கிகள் முழங்க ஒரு மன்னரை வரவேற்பது போல் வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதி, முத்தாள் நாச்சியார் தம்பதியின் மகன் பாஸ்கர சேதுபதி. 1868-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி பிறந்தார். பாஸ்கர சேதுபதி பிறந்த ஐந்தே ஆண்டுகளில் அவரது தந்தை இறந்து விட்டார். அவரை வளர்க்கும் பொறுப்பை ஆங்கில அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அவரைச் சென்னைக்குக் கொண்டுவந்து எழும்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்துக் கல்வி புகட்டியது. பாஸ்கர சேதுபதி ஆங்கிலம், தமிழ் மொழிகளோடு இசை, விளையாட்டு என்று தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். இவர் சென்னைக் கிறிஸ்தவ கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார். சேதுபதிகளிலேயே முதலில் ஆங்கிலப் புலமை பெற்றவர் இவரே. மேலும் தகுந்த புலவர்களிடம் தமிழ் பயின்றதால் தமிழிலும் பெரும்புலமை பெற்றார். 1888-ம் ஆண்டு எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்தபின் ராமநாதபுரம் சென்று தமது இருபத்தொன்றாவது வயதில் சமஸ்தானப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அக்காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் இரண்டாயிரத்து நூற்று எழுபது கிராமங்களையும், அவற்றில் இருந்து சுமார் எட்டு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்டுள்ளதாக விளங்கியது. அவர் தமது ஆட்சியில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முயன்றார். மதுரையிலும், சென்னையிலும் உள்ள துரைத்தனத்தாரின் உயர் அலுவலர்களை அணுகி பல கண்மாய்களைப் பழுதுபார்ப்பதற்கும் ஆவன செய்தார். பாஸ்கரசேதுபதி ஆங்கில மொழியில் பெற்றிருந்த புலமையும், பேச்சாற்றலும் யாவரிடமும் அன்பாகக் கலந்து உரையாடும் தேர்ச்சியும், கவர்னர், கலெக்டர் முதலிய அதிகாரிகளிடம் பல பொதுநலத்திட்டங்களுக்கு இசைவும், உதவியும் பெற வழிவகுத்தது. அவரிடம் ஏனைய ஜமீன்தார்களும், சமஸ்தானாதிபதிகளும், கனிவும் மதிப்பும் கொண்டு பழகி வந்தனர். அன்றைய ஆங்கில அரசு அவருக்கு ‘மகாராஜா’ என்ற சிறப்பு விருதை வழங்கி கவுரவித்தது. அவரும் உண்மையான ‘மகாராஜா’வாகவே வாழ வேண்டும் என விழைந்தார் என்பதை அவரது அறக்கொடைகளும், அரிய செயல்களும் நமக்கு புலப்படுத்துகின்றன. அவர் சமஸ்தானம் தமிழுக்கு அரியணை வழங்கியது. தமிழ்ப்புலவர்களைப் பண்டைய காலத்து மன்னர்களைப் போல் பொன்னும் பொருளும் கொடுத்துப் போற்றினார். இசைவாணர்களையும் ஏனைய கலைஞர்களையும் பாராட்டிப் பரிசளித்தார். 1893-ம் ஆண்டுப் பொங்கல் விழாவின்போது இவர் எழுதிய நாட்குறிப்பில் தமது வாழ்வில் 33 சாதனைகளாவது செய்து முடிக்கவேண்டும் என்று எழுதியுள்ளார். 1901-ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் இவர் முயற்சியால் தொடங்கப்பட்டது. பாண்டித்துரைத் தேவர் இதன் தலைவராகப் பொறுப்பு வகித்தார். பல சிறப்பு வாய்ந்த புலவர்களின் அறிவுப்பாசறையாகத் தமிழ்ச்சங்கம் விளங்கியது. இன்றும் விளங்கி வரு கிறது. மைசூர் சமஸ்தான வித்வான் வீணை சேஷண்ணாவை வரவழைத்து அவரது வீணைக் கச்சேரியை அனைவரும் கேட்க ஏற்பாடு செய்தார். கச்சேரி முடிவில் பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் வழங்கி அவரைப் பாராட்டினார். தமிழ்நாட்டில் அப்போது இருந்த கல்லூரிகளில் தமிழில் முதல் மதிப்பெண் வாங்குவோருக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்க ஓர் அறக்கட்டளை நிறுவினார். அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கிய தமிழ்ப்புலவர் இரா.ராகவையங்காரை முத்துப்பல்லக்கில் ஏற்றி மரியாதை செய்தார். கடையேழு வள்ளல்களைப் போன்று கொடைச் சிறப்புக் கொண்டு புகழ்பெற்றார். கோவில்களுக்கும் மிகுந்த தான தருமங்களை வாரி வழங்கினார். திருவாவடுதுறை மடத்துக்கு இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கினார். அதனைக் கேள்விப்பட்ட சிருங்கேரி மடத்தலைவர் “உங்கள் அரண்மனையை எனக்குத் தானமாகக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டாராம். உடனடியாக அவ்வாறே கொடுத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார் பாஸ்கரசேதுபதி. அதனை ஏற்றுக்கொள்ளாமல் சிருங்கேரி மடத்தலைவர் திருப்பிக் கொடுத்துவிட முயன்றார். ஆனால் பாஸ்கரசேதுபதி கொடுத்த பொருளைத் திரும்பி வாங்கிக் கொள்ளல் தமிழ்ப்பண்பு அல்ல என மறுத்துவிட்டாராம். மிகவும் மனம் வருந்திய சிருங்கேரி மடத்தலைவர் அரண்மனையைத் திரும்ப மன்னரின் மகன் முத்துராமலிங்க சேதுபதிக்கே தானமாகத் தந்துவிட்டார். இன்றைக்குப் பெரிதும் வலியுறுத்தப்படும் சமயநல்லிணக்கம் பாஸ்கர சேதுபதியால் அன்றே சிறப்பாகப் பின்பற்றப்பட்டது. கிறிஸ்தவத் திருமுறையாகிய விவிலியத்தில் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி இரண்டு மணிநேரம் இவர் ஆற்றிய சொற்பொழிவு அன்று எல்லோராலும் வியப்புடன் பாராட்டப்பட்டது. பல்வேறு ஆலயங்களுக்கு விலையுயர்ந்த நகைகளை வழங்கியுள்ளார். தமது அரண்மனை ஊழியர் நாகூர் பள்ளிவாசல் சென்றுவர விரும்புகிறார் என்பதையும் அவருக்குப் பொருளுதவி தேவை என்பதையும் அறிந்து அவர் குடும்பத்துடன் நாகூர் சென்றுவர உதவியுள்ளார். சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு உயர்நிலைப்பள்ளிக் கட்டிடம் கட்ட உதவி செய்துள்ளார். ராமநாதபுரத்தில் ஆதிதிராவிட குழந்தைகளுக்கு விடுதி அமைக்க நன்கொடை வழங்கியுள்ளார். மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனைக்கும் பொருளுதவி செய்துள்ளார். விவேகானந்தர் “கலியுகத்து ராஜரிஷி” என்று பாஸ்கரசேதுபதிக்குப் பட்டமளித்தார். தம் அன்பிற்கும், மதிப்பிற்கும் பாத்திரமான விவேகானந்தர் இறந்தபோது மன்னர் பாஸ்கரசேதுபதி மிகவும் மனம் உடைந்து போனார். பாஸ்கரசேதுபதிக்கு முதுகில் “ராஜபிளவை” என்னும் கட்டி வந்து தொல்லை கொடுத்தது. 1903-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி தமது முப்பத்தைந்தாவது வயதிலேயே இறந்துவிட்டார். பாஸ்கர சேதுபதியை கவுரவிக்கும் விதத்தில் மத்திய அரசு அவருக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது. விவேகானந்தர் புகழ்வரலாறும், மதுரை தமிழ்ச்சங்கத்தின் மாண்பும் பாஸ்கரசேதுபதி நினைவை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ்மொழிக்குத் தொண்டாற்றித் தமிழ்வளர்ச்சியை மேலோங்கச் செய்வதே மதுரை தமிழ்ச்சங்கம் கண்ட அந்தப் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். இன்று (டிசம்பர் 27-ந் தேதி) பாஸ்கர சேதுபதி நினைவுதினம்.

No comments:

Popular Posts