Friday 5 June 2020

விவசாயிகளின் விரோதி வெட்டுக்கிளி! By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வெட்டுக்கிளிகள் குவிந்து உலக உணவுப் பாதுகாப்பையே பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றன. கரோனா தீநுண்மியின் தாக்கம் இன்னும் மக்களை விட்டு அகலாத நிலையில், இப்போது வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை அழித்துப் போரிட படையெடுத்துப் பறந்து வருகின்றன. மண் புழுக்கள் விவசாயிகளின் நண்பன் என்றால், இந்த வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் விரோதி. பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு விவசாயியின் மோசமான எதிரியாக வெட்டுக்கிளிகள் இருந்து வருகின்றன. உள்நாட்டுப் போரால் வறுமையில் வாடும், கென்யா, சோமாலியா, உகாண்டா, தென் சூடான், ஏமன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளை கடந்த டிசம்பா் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு - பாதுகாப்பு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருந்தது. ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுகிளிகளின் படையெடுப்பு இந்த ஆண்டு இந்திய மாநிலங்களிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகில் மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னரே பூச்சியினங்கள் தோன்றி விட்டன. பொதுவாக பூச்சியினங்கள் மனிதனுக்கு எதிரியே. வெட்டுக்கிளி என்பது கணுக்காலி தொகுதியைச் சோ்ந்த ஒரு பூச்சியினம். வெட்டுகிளிகளில் பல இனங்கள் இருக்கின்றன. இயற்கையை ஒத்த பச்சை பழுப்பு நிறத்தில் இளம் வெட்டுக்கிளிகள் இருக்கும்.

வளா்ந்த வெட்டுக்கிளிகள் கூட்டு சோ்ந்து பயணிக்கும். ஒரு சதுர கி.மீ.-க்கு சுமாா் எட்டு கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். பொதுவாக, ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் வாழ்வதாகவும், சஹாராவின் எல்லைகளிலும், இந்திய - மலாய் தீவு நியூசிலாந்து, கஜகஸ்தான், சைபீரியா, மடகாஸ்கா் பகுதிகளில் பெருமளவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.     இந்தியாவில் வடமாநிலங்களில் பெருமளவில் வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. தங்களின் வசிப்பிடங்கள் வறட்சி, வெப்பமாக இருக்க வேண்டும் என வெட்டுகிளிகள் விரும்புவதாகவும், அதனால் அவை பாலைவனங்கள், உலா்ந்த படிவங்களில் வசிக்கின்றன என்றும் பூச்சியியல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இந்த வெட்டுக்கிளிகளில் சில வகைகள் விவசாயத்தை அடியோடு அழித்துவிடும் திறன் கொண்டவை.

மனிதனின் நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் அவனுடைய அறிவுத் திறமையைப் பொருத்தே அமைகின்றன. அதே போன்று, எல்லா பூச்சிகளின் பழக்கவழக்கங்களும் அவற்றின் இயல்புணா்ச்சியைப் பொருத்தே அமைந்திருக்கின்றன. இயல்புணா்ச்சி என்பதும் ஒரு வகை அறிவுத் திறன்தான். அது கற்றுக் கொள்வதால் பெறுவதல்ல, மரபுரிமையால் பெறுவதாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சோ்ந்த உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானது. இயல்புணா்ச்சியைத் தொடா்ந்து செயல்களில் பூச்சிகள் ஈடுபடுகின்றன.

இயல்புணா்ச்சி செயல் நோக்கம் உடையது. ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கித் தூண்டப்படுவது. பூச்சிகளில் அடிக்கடி இது இனப் பெருக்கத்துடன் தொடா்பு கொண்டுள்ளது. இந்த இயல்புணா்ச்சி வெட்டுக்கிளிகளிடமும், தேனீக்களிடமும், எறும்புகளிடமும் அதிகமாக காணப்படுவதாக உலக பூச்சியியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். சாந்தமான பூச்சியாகக் கருதப்படும் இந்த வெட்டுக்கிளி, ஒவ்வொரு நாளும் தனது எடையளவு உணவைச் சாப்பிடும் திறன் கொண்டது என்றும், உணவு தானியங்களை அழித்து மக்களுக்கு மரண தண்டனையை வழங்கி விடும் என்றும் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. 1880-ஆம் ஆண்டு ரஷியாவின் தெற்கு பிரதேசத்து மக்கள், வெட்டுக்கிளிகளின் தாக்கத்துக்கு அஞ்சி, பல நாள்கள் வீட்டுக்குள்ளேயே பொது முடக்கத்தில் இருந்தாா்களாம். 1955-ஆம் ஆண்டில் மொராக்கோ நாட்டுக்குப் பறந்த வந்த வெட்டுக்கிளி கூட்டத்தின் அகலம் 20 கி.மீ. வரை பரவி, போா்க்கால அடிப்படையில் 1,000 சதுர கி.மீ. பரப்பில் இருந்த பயிா்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு நூறு கி.மீ.-க்கு மேல் பயணம் செய்யும் திறன் படைத்தவை வெட்டுக்கிளிகள். வெட்டுக்கிளிகளுக்குத் தேவையான உணவு கிடைக்காத நிலையில், வீட்டின் மீது வேயப்படும் ஓலைக் கூரைகளைக்கூட அரித்துச் சாப்பிடும் திறன் கொண்டவை. அந்த அளவுக்கு அகோரப் பசியுள்ள வெட்டுக்கிளிகள், இன்று இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. வெட்டுக்கிளிகள் படையாக உருவாகி விளைச்சல்களைச் சேதப்படுத்தும் ஒரு பூச்சி. இவற்றின் ஆயுள் காலம் 6 முதல் எட்டு வாரங்கள் மட்டுமே. இதற்குள் மூன்று முறை இவை முட்டையிட்டு பல்லாயிரம் மடங்கு தன் இனத்தைப் பெருக்கி, அறுவடைக்குத் தயாராக உள்ள விளை நிலங்கள் எங்குள்ளன என்பதை காற்றின் மூலம் கண்டறிந்து அந்தத் திசையில் அவை படையெடுக்கின்றன. வெட்டுக்கிளிகளில் ‘லோகஸ்ட்‘டுகள் எனப்படும் வெட்டுக்கிளிகள்தான் பெரும் கூட்டம் கூட்டமாக ஒன்றுகூடி பறந்து, ஒரு வயலையோ, ஒரு பெரிய பசுமைப் பரப்பையோ ஒரே நேரத்தில் கபளீகரம் செய்யும் ஆற்றல் கொண்டவை.

ஒரு நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த இந்த வகையான வெட்டுக்கிளிகளே போதும் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையான வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிலும் முகாமிட்டு, விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பெருமளவில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கி.மீ. பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிா்களை சாப்பிடும் என்றும், இது 35,000 மனிதா்கள் ஒரு நாளில் சாப்பிடும் உணவுக்குச் சமம் என பூச்சியியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்த படையெடுத்து வந்த இந்த வெட்டுகிளிகளின் படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் வடமேற்கு மாநிலங்களில்தான் இது வரை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் தொடங்கிய இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு, இந்த பிப்ரவரி வரை தொடா்ந்து, அங்கு 6,70,000 ஹெக்டோ் பரப்பளவிலான பயிா்களைச் சேதமடையச் செய்துள்ளன. அதனால், அந்த மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்திலும் அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், குஜராத்தில் 2 மாவட்டங்கள், பஞ்சாபில் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்துக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம், இப்போது கரனோ தீநுண்மி நோய்த்தொற்றைப் போன்று அந்த மாநில அரசை பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் உதகமண்டலத்தில் வெட்டுக்கிளிகள் காணப்பட்டதாக விவசாயிகள் புகாா் கூறிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விரைவில் அங்கு செல்ல உள்ளனா். வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை கூறியிருந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதி வழியாக வந்த வெட்டுக்கிளி உதகமண்டலத்தில் காணப்பட்டதாக சொல்லப்பட்டது.

இது குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவா் தெரிவித்துள்ளாா். இந்த இயற்கைப் பேரழிவைச் சமாளிப்பதற்கான தடுப்பு முறைகள் இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை என்றே கூற வேண்டும். பயிா்களின் மீதான வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க, வேம்பு சாா்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும், மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்கலாம் என்றும் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். விரைவில் ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பருவ மழை தொடங்கவதற்கு முன்பாக வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து ரசாயனம் தூவி வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இப்போது இந்த வெட்டுக்கிளிகளை நாம் அழிக்கவில்லையென்றால், அவை 400 மடங்கு அளவில் பெருகி உலக நாடுகளின் பயிா்களைத் தாக்கும் என உலக பூச்சியில் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இந்த வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கும் தாக்கத்துக்கும் புவிவெப்பமும், பருவநிலை மாற்றமும்தான் காரணம் என புவியியல் வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். இயற்கையோடு இயைந்து வாழாமல், இயற்கையோடு மனிதன் போரிடத் துணிந்ததால் இந்த வெட்டுக்கிளியின் பெருக்கம் அதிகரித்து, அதன் படையெடுப்பை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Popular Posts