Saturday, 29 September 2018

பேசப் பழகணும்... பேசிப் பழகணும்...

பேசப் பழகணும்... பேசிப் பழகணும்... ஒரு மொழியைக் கற்கவும், நமது கருத்துகளை எடுத்துச் சொல்லவும் பேச வேண்டும். தேவைக்குப் பேச வேண்டும், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நாம் பேசும் பேச்சில் நோக்கம் இருக்க வேண்டும். அதைத்தான் திருவள்ளுவர்... சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் என்றார். பேசித்தான் ஆக வேண்டும் என்றால் பயனுள்ள பேச்சுத்தான் பேச வேண்டும். பயனற்ற வார்த்தைகள் எதையும் பேசக் கூடாது என்பது அதன் பொருள். சொல்வதற்கு ஏதாவது பொருள் இருந்தால் மட்டும்தான் பேச வேண்டும். ஒரு சிறந்த பேச்சாளராகத் திகழ விரும்புபவர்கள், அந்தப் பொருள் குறித்த விவாதத்தைப் பலமுறை மனதுக்குள் நடத்தி, நண்பர்களுடன் விவாதித்து, அதன் பின்னரே பேச முன்வர வேண்டும். பேசுவது இயற்கையாக வந்துவிடும். ஆனால் பேச்சாற்றல் என்பது வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை. மேடைப் பேச்சு சக்தி வாய்ந்தது. அது ஒரு கலை. பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்தவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தது, மண்ணை ஆண்டது இங்கு நடந்திருக்கிறது. ‘சகோதரர்களே, சகோதரிகளே’ என்று ஆரம்பித்து சுவாமி விவேகானந்தர் பேசியபோது அவரை உலகமே திரும்பிப் பார்த்தது. ஹிட்லர் கூட பேச்சால்தான் தனது கொடூர போர் நடவடிக்கைகளுக்கு ஜெர்மானியர்களை இசைய வைத்தார். சக்தி வாய்ந்த சிலரின் பேச்சால் வரலாற்றின் போக்கிலேயே மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரோமாபுரியின் சிறந்த பேச்சாளன் டெமஸ் தனிஸ் (கி.மு. 384- 322). அவனுக்கு ஆரம்பத்தில் திக்குவாய். பேச்சே வராதாம். ஆனால் அச்சிறுவனுக்கு சொற்பொழிவு நிகழ்த்த ஆசை. வாயில் கூழாங்கற்களைப் போட்டு பேசிப் பழகுவானாம். அப்படி நாக்கைச் சுழற்றிப் பேசி, பயிற்சி மேற்கொண்டு, ரோமாபுரியின் புகழ்மிக்க பேச்சாளர் ஆனார். ஆபிரகாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி, ஜான் எப் கென்னடி, நெல்சன் மண்டேலா போன்றவர்கள் சிறந்த பேச்சாளர் களாக சரித்திரத்தில் பதிவாகியிருக்கிறார்கள். பயிற்சிதான் அவர்களை நட்சத்திரப் பேச்சாளர்களாக உயர்த்தியது. உலக மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கும் TED அமைப்பு பேச்சாளர்கள், 18 நிமிட சொற்பொழிவு நிகழ்த்த 18 மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்களாம். உலக அரங்கில் பேச மட்டுமல்ல, உள் அரங்கில் பேசவும் பயிற்சி அவசியம். தாயிடம், ஆசிரியரிடம், நண்பரிடம் பேசும்போதும் கவனம் தேவை. நாம் பேசும் விதத்தை வைத்து அவர் களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படும் அல்லது நம்பிக்கை போய்விடும். நேர்த்தியாகப் பேசிப் பழகிய ஒரு மாணவனுக்கு உரிய மரியாதை எல்லா இடத்திலும் கிடைக்கும். அவனுக்கு வீட்டிலும், கல்விக்கூடத்திலும் ரசிகர் மன்றம் தோன்றும். அச்சம் இருந்தால், பேச்சாற்றல் இருந்தும் பேச முடியாமல் போய்விடும். Glossophobia என்று அழைக்கப்படும் இந்தக் கூச்ச சுபாவம் மாணவர்களிடம் உள்ளது. நல்ல விஷயங்களுக்கு துணிந்து இறங்கும் ஒரு துணிச்சல் மனப்பான்மையை பிள்ளைகளிடம் பெற்றோர் உரமிட்டு வளர்க்க வேண்டும். ‘வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு’ என்று அடக்கக் கூடாது. அச்சத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மேடை ஏறுங்கள். முதல் பேச்சு தடுமாற்றமாகத்தான் இருக்கும், ஆனால் சில மேடைகளைக் கண்டபிறகு பேசுவது ஒரு விளையாட்டாக மாறும். ஒருமுறை மேடையில் அற்புதமாகப் பேசிவிட்டீர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும் பேச்சு அற்புதமாக அமைந்துவிடும் என்றாகாது. மீண்டும் ஒருமுறை கச்சிதமாகப் பேச, புதியவற்றைக் கற்க வேண்டும், ஒத்திகைகளும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுமையைச் சேர்க்க வேண்டும். இன்னொருவரின் நடையைப் பின்பற்றாமல் உங்களுக்கு என்றே ஒரு தனி நடையை ஏற்படுத்துங்கள். ஒரு பெண் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், ‘யாராவது ஒரு தன்னார்வலர் வரலாம்’ என்று மேடையிலிருந்து அழைத்தார், ஒருவர் வந்தார், அவருக்கு 500 ரூபாயை பரிசாகத் தந்தார் பயிற்சியாளர். அப்போது, நாம் போயிருக்கலாமே என்று மனதில் எண்ணிய மாணவர்களைப் பார்த்து, ‘வாய்ப்பு வந்தபோது நீங்கள் அதைப் பயன்படுத்தவில்லையே, இப்படித்தான் வாழ்விலும்!’ என்றார். இந்த நூதன முறை மாணவர்களை உற்சாகப்படுத்தியது. இனி இவரின் பேச்சைக் கேட்கலாம் என்று தயாரானார்கள். சிறப்பாகப் பேச மொழிப்புலமை அவசியம். மொழிப்புலமை பெற நல்ல பல நூல்களைப் படிக்க வேண்டும். தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால்தான் தொடர்ந்து பேச முடியும். இடைவிடாமல் கற்றவர் ஆபிரகாம் லிங்கன். அவரை இரண்டு முகம் கொண்டவர் என்று குற்றஞ்சாட்டினார்கள். அதற்கு அவர், ‘‘எனக்கா இரட்டை முகம்? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, இரண்டு முகங்கள் என்றால், இந்த முகத்தையா நான் உங்களுக்குக் காட்டுவேன்?’’ (இந்த அசிங்கமான முகத்துக்குப் பதிலாக அந்த அழகிய இன்னொரு முகத்தைக் காட்டியிருப்பேன் என்ற அர்த்தத்தில்) என்றாராம், அனைவரும் சிரித்தனர். பேச்சாற்றல் உள்ளவர்கள் ராணுவத்தையே நடத்திச் செல்லலாம். ‘எதிரிகள் எல்லாத் திசையிலும் சூழ்ந்துவிட்டார்கள்’ என்று அதிகாரிகள் அச்சத்துடன் சொன்னபோது, ‘அப்படியா? ரொம்ப நல்லது. அவர்களை எந்தத் திசையில் வேண்டும் என்றாலும் நாம் தாக்கலாம்’ என்றாராம் ஹிட்லர். இன்றைய நவீன யுகத்தில், பேசிய பேச்சைத் திரும்பப்பெற முடியாது. பேசிவிட்ட பேச்சால் சிலர் வேலையை இழந்திருக்கின்றனர், சிலர் பணத்தை இழந்திருக்கின்றனர், வாழ்க்கையையே தொலைத்தவர்களும் உண்டு. எனவே, என்ன பேசுகிறோம், அதை எங்கே பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதையும் கவனித்துப் பேச வேண்டும். பிறர் மனதைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும். கேட்பவர்கள் நம்மைக் கவனிப்பதை நிறுத்திக்கொள்வதற்கு முன்னதாக நமது பேச்சை முடித்துவிட வேண்டும். பேச்சால் ஒரு சமூகத்தை இணைக்கவும் முடியும், பிரிக்கவும் முடியும். இரண்டாம் உலகப் போரின்போது சர்ச்சில் தனது வானொலிப் பேச்சால் இங்கிலாந்து மக்களை ஜெர்மனிக்கு எதிராக ஓரணியில் திரள வைத்தார். அவரது பேச்சு தேச உணர்வையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டியது. ‘‘இந்தத் தீவு நாட்டின் வரலாறு இதோடு முடிவதாக இருந்தால், குண்டடிபட்டு வீழ்ந்த நமது உடல்கள் மண்ணில் புதையும்போது அது முடியட்டும். ஜெர்மனியை எதிர்த்துப் போர் புரிவோம்!’’ என்று முழங்கினார். அதில் எழுச்சி பெற்ற இங்கிலாந்து மக்கள், ஜெர்மனி முன் மண்டியிடுவதை விட அவர்களுடன் போரிட்டு மடிவதே மேல் என்று முடிவெடுத்தனர். உங்களின் ஊக்கமான பேச்சு, தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை தட்டி யெழுப்பும், தளர்வுற்ற சமுதாயத்தை திடமாக எழுந்து நிற்கச் செய்யும். உங்களைப் பற்றிய விஷயங்களில் ஒருபோதும் பொய்த் தகவல்களைப் பகிராதீர்கள். மற்றவர்கள் ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்துவிடுவார்கள். அப்போது அவர்கள் மனதில் உங்களைப் பற்றிய மதிப்புக் குறைந்துவிடும். நம்பிக்கை என்பது படிப்படியாகக் கட்டி எழுப்பப்பட்ட கோட்டை. ஒரு பொய்யான தகவலின் மூலம் அதை நிமிடத்தில் உருக்குலைத்து விடாதீர்கள். பேச்சில் நகைச்சுவையும் கலந்திருந்தால் கேட்பவர்களைக் கவரும். இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலை ஒருவர் ‘முட்டாள்’ என்று கூறிவிட்டார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் ஒரு புயலாகக் கிளப்பினார் எதிர்க்கட்சித் தலைவர். அதற்குப் பதிலளித்த சர்ச்சில், ‘‘அவர் பிரதம மந்திரியை முட்டாள் என்று அழைத்தார் என்பதற்காக நான் அவரைச் சிறையில் அடைக்கவில்லை. அரசு ‘ரக சியத்தை’ போர்க் காலத்தில் வெளியிட்டதால்தான் சிறையில் அடைக்கப்பட்டார்’’ என்றார் குறும்பாக. பேச்சு, ஆற்றல் மிக்கது. சிறு வயதில் சாதனை படைக்க பேச்சாற்றல் உதவும். இன்று முதல், நீங்கள் பேசும் பேச்சை நீங்களே உற்றுக் கவனியுங்கள். அதில் தவறுகள் இருப்பதாக உணர்ந்தால் திருத்திக்கொள்ளுங்கள். சத்தமாகவும், தெளிவாகவும், தைரியமாகவும் பேசுங்கள். உங்களது வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் மீது அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் வளரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கட்டும்! - Dr. C. Sylendra Babu IPS

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘ஆஸ்பிரின்’ ஆபத்து!

‘ஆஸ்பிரின்’ மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்தை ஓர் ஆய்வு விவரித்துள்ளது. நல்ல உடல்நிலையில் உள்ள முதியோர்கள் ஒரு நாளைக்கு ஓர் ஆஸ்பிரின் மாத்திரையைச் சாப்பிட்டால் கடும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் பயனுள்ளதாக இருப்பது குறித்து இதற்கு முந்தைய ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நல்ல உடல்நிலையில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் எவ்வித நன்மையையும் உண்டாக்குவதில்லை என்றும், மாறாக உயிரிழப்புக்கு வித்திடும் உட்புற ரத்தப்போக்கை அவை ஏற்படுத்து வதாகவும் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், தனக்குத் தானே மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் களின் ரத்தம் கெட்டியாவதற்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மீண்டும் நோய்த்தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், மாரடைப்பு, பக்கவாதம் தங்களைத் தாக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிலர் ஆஸ்பிரின் மாத்திரைகளைச் சாப்பிடுகின்றனர்.

இது உண்மையில் நோயை வராமல் தடுப்பதற்குப் பயன்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுதொடர்பான ஆய்வுகள் மத்திய வயதுடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்டபோது, தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிடுவதால் அவர்கள் முதுமை அடையும்போது குறிப்பிடத்தக்க வகையில் உடல்நலத்துக்கு ஆபத்து அதிகரிப்பது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட, நல்ல உடல்நிலையில் உள்ள 19 ஆயிரத்து 114 பேர்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் பாதிப் பேருக்கு குறைந்த அளவிலான ஆஸ்பிரின் ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்கப்பட்டது. நல்ல உடல்நிலை கொண்டவர்களிடம் ஆஸ்பிரின் மாத்திரைகள் இதயம் சார்ந்த பிரச்சினைகளையோ அல்லது எவ்வித நன்மைகளையோ தருவதில்லை என்றும், மாறாக அவை உட்புற ரத்தப்போக்கை அதிகரிப்பதாகவும் நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் கூறுகின்றன.

‘‘இதன் மூலம், குறைந்த அளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல்நலம் சார்ந்த பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்ற உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோரின் எண்ணம் தவறானது என்பதும், அதனால் ஒரு பயனும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது’’ என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்நீல் கூறுகிறார். ‘‘நல்ல உடல்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பரிந்துரைக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்துவரும் மருத்துவர்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இந்த ஆராய்ச்சியில் புற்றுநோயின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது களநிலவரத்துக்கு மாறாக உள்ளதால் இதுகுறித்து மேலதிகத் தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துப் பயன்பாட்டைக் குறைக்கும்படிதான் நம் முன்னோர்கள் முற்காலத்திலேயே கூறியுள்ளனர்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பசுமைச் சூழலைப் பாழடிக்கும் பாலித்தீன்

பசுமைச் சூழலைப் பாழடிக்கும் பாலித்தீன் முனைவர் மா.கலாமணி இயற்கையோடு இயைந்து ஒன்றி வாழ்ந்து புகழ் பெற்றவர்கள் நம் பண்டையத் தமிழ் மக்கள். நாம் ஓடி, ஆடி விளையாடிய இடம் கட்டிடங்களாய் மாறி உள்ளன. நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பீப்பி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப் பிடித்தும், மரத்துக்கு மரம் தாவியும், தோப்புகளுக்கு நடுவில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடியதும் இன்று மருந்துக்குக் கூட இல்லை. விளையாட்டிலும் கூட இயற்கைப் பின்னிப் பிணைந்திருந்த காலம் அது. ஆனால் இப்போது அவற்றை எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அறிவியலும், தொழில் நுட்பமும் அசுர வளர்ச்சி பெற்று நம்மை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைக்கிறது. அறிவியல் வளர்ச்சியோ மனிதனின் வேலைகளை எளிமையாக்கி விட்டது. விறகு அடுப்பில் சமைத்து அன்று பறித்த காய்களையும், தோட்டங்களில் முளைத்த கீரைகளையும் உண்டு, சுத்தமான பசும் பாலையும் பருகி வந்த மக்கள் உடல், மன ஆரோக்கியத்தோடு நூறு வயது வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது ஒரு வாரத்திற்குத் தேவையான காய்களையும், பழங்களையும் வாங்கி குளிர் சாதனப்பெட்டியில் நசுக்கி அழுத்தி அடைத்து வைத்து உண்பதும், பாக்கெட் பாலை வாங்கிக் குடிப்பதும் நவநாகரிகம் என நினைக்கும் காலமாக இது மாறி விட்டது. அந்நவநாகரிக வட்டத்திற்குள் சிக்கினால் வெளியே வர முடியாது மரணம் தான் என்பது அறியாதது ஏனோ?மண்பாண்டங்களில் சமைத்து, உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்திய காலம் போய் ஒரு முறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் சந்ததியினருக்கும் ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது. காலை பல் துலக்கும் துலப்பானிலிருந்து இரவு படுக்கும் பாய் வரை அனைத்தும் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருள் தான். பிளாஸ்டிக் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. உண்மையைச் சொன்னால் அது நம் மண்ணுக்குத் தீமையை உருவாக்கும் என்பதனை மனிதர்கள் அறியாமல் எளிமை என்ற பெயரில் பிளாடிக்கை பயன்படுத்தி நம் பூமித் தாயை விரைவிலேயே முதிர்ச்சியடையச் செய்கின்றனர். ஒவ்வொருவரும் தான் கையில் எடுத்துச் செல்லும் பாலித்தீன் பைகள் ‘நமது தேசத்தின் தூக்குக் கயிறு’ என்பதனை மறந்து விடுகின்றனர் என்பது அச்சமூட்டுவதாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் பாலித்தீன் பைகளை விரும்புவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும். லேசானது, பல வண்ணங்களில் கிடைக்கிறது, விலை மிகவும் குறைவு, உடையாமல் இருக்கிறது போன்ற காரணங்களால் பாலித்தீன் பைகளை விரும்புகின்றனர்.எளிமையாகக் காட்சியளிக்கும் பாலித்தீன் இம்மண்ணில் மண்னோடு மண்ணாக மாற எவ்வளவு காலம் ஆகும் என்பதனை மக்கள் மறந்து விடுகின்றனர். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 முதல் 1000 ஆண்டுகள் ஆகும். அவசர கால இவ்வுலகில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தி விட்டுக் குப்பைத் தொட்டியில் போடக் கூட நேரமில்லாமல் காற்றில் பறக்க விட்டுச் செல்லும் இச்சமுதாய மக்கள்பின்னர் வரும் விளைவுகளை உணருவதில்லை. தம் வேளை முடிந்தால் மட்டும் போதாது நமது சந்ததியினரும் எந்தவொரு இன்னல்களும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து ‘வருமுன் காப்போம்’ என்பதனை மறந்து செயல்படுகின்றனர். பாலித்தீன் எளிதில் மக்காமல் மண்ணினுள் புதைந்து மண்ணின் வளத்தைக் குறைக்கிறது. மரங்களின் வேரைத் தடுத்து நிறுத்தி வேரின் பயணத்தை ஆழமாகச் செல்வதனைத் தடுக்கிறது. அதனால் தான் மரங்களின் வளர்ச்சி குன்றி, மழை வளம் பாதிக்கப்படுகிறது. பாலித்தீன் கழிவுகளான பைகள், பாட்டில்கள் போன்றவைகளை நீர் நிலைகளில் வீசுவதால் அவைகள் மக்காமல் துர்நாற்றம் வீசி, காற்றை மாசுபடுத்துகிறது. அக்காற்றை சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள், மூச்சடைப்பு, மூச்சுக் கோளாறு போன்ற பலவிதமான நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. மழை காலங்களில் சாக்கடையில் எரியப்படும் பாலித்தீன் பைகளால் அடைக்கப்பட்டு, நீர்த்தேக்கம் ஏற்பட வாய்ப்பளிக்கிறது. எளிதில் மக்காத பொருள் என்பதால் அதை தீயிலிட்டு எரிக்கும் போது அதிலிருந்து வரும் டயாக்சின் என்ற நச்சுக் வாயு காற்றில் கலந்து சுற்றுச் சூழலை பாதிப்படைய வைக்கிறது. தோல் நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகிறது. சிலருக்குத் தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது.பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைபாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது. மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியும் பாதிக்கிறது. ஒரு முறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பொருள்களால் தீமையே ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் வல்லுனர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப்பை, துணிப்பை போன்றவைகளை பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். தேநீர் கடைகளில் குவளைகள், பாக்கு மட்டைகளால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தலாம். தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யக் கூடியவை. கேரளாவில் மக்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடத்தில் கொட்டாமல் தவிர்த்து சேகரித்து மறுபயன்பாடு செய்யலாம். கடைக்குச் செல்லும் போது துணிப் பைகளை எடுத்துச் செல்ல பழகிக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களில் 10 சதவீதம் பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். 90 சதவீதம் பொருட்களை மீண்டும் பயன்படுத்தப்படாமலும், மக்காமலும் மனிதனுக்கும், மண்ணுக்கும், விலங்குக்கும் தீமையே ஏற்படுத்துகின்றன. வீட்டு நல்ல காரியங்களில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளில் செய்யப்படும் குவளைகள், தட்டுகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதிலாக மண்பாண்டங்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கைத் தவிர்க்கும் போது விவசாய நிலம், மணல், நீர்நிலைகள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும். தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும். பிளாஸ்டிக் இல்லாத நாடாக உருவாக்குவோம் என ஒவ்வொருவரும் தனக்கொரு உறுதி மொழியை ஏற்படுத்திக்கொண்டு நம் தமிழ் தாயை என்றும் இளமை மாறாமல் பலவகை அணிகலன்களை அணிவித்து அழகு பார்ப்போம். முற்றிலுமாக பிளாஸ்டிக்கை முடக்கப் பழகுவோம். நாளை நம் குழந்தைகள் வாழ உலகம் வேண்டும் என்பதற்காக.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காது கொடுத்துக் கேட்போம்

காது கொடுத்துக் கேட்போம் முனைவர் லதா ராஜேந்திரன், இயக்குனர், டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நாளை (செப்டம்பர் 30-ந் தேதி) உலக காதுகேளாதோர் தினம். ஒலியை உணர்வதற்கு செவி மிக அவசியம். செவியில் குறைபாடு ஏற்படும் போதே காது கேளாமை உருவாகிறது. இப்பிரச்சினையால் தவிப் போரின் எண்ணிக்கை உலக அளவில் 36 கோடியை கடந்துவிட்டது.சமூகத்தில் இவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அன்று உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு 1958-ல் உருவாக்கியது.இயல்பாக காது கேட்கும் திறன் 10 டெசிபல் முதல் 15 டெசிபல்’ வரை ஆகும். இதில் குறைபாடு ஏற்படும் போது காது கேட்க இயலாமை உருவாகிறது என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.உறவு முறைத் திருமணம் தாய் வழித் தொற்றுகளான ரூபெல்லா மேக நோய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிற தொற்று நோய்கள், பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகள், கடும் மஞ்சள் காமாலை போன்றவை பிறந்த குழந்தையின் காது நரம்பை பாதிக்கின்றன. இதனால் பிறப்பின் போதே குழந்தை காது கேளாத் தன்மையை பெறுகிறது. மூளைக் காய்ச்சல், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற தொற்று நோய்களாலும் காதில் நீர்க் கோர்த்தல், நச்சு மருந்துகளை பயன்படுத்துதல், தலை அல்லது காதுகளில் காயம் ஏற்படுதல், அதிக ஒலி உள்ள இடங்களில் பணி செய்தல், உணர்ச்சி உயிரணுக்கள் சிதைதல், மெழுகு அல்லது அயல் பொருட்கள் காது பாதையை அடைத்தல் போன்ற காரணங்களால் எந்த வயதிலும் காது கேளாத் தன்மை ஏற்படலாம்.தற்போது அறிவியல் வளர்ச்சியால் குழந்தையின் கேட்கும் திறனை முதல் நாளிலேயே கண்டறிந்து விடலாம். இதற்காக இரண்டு விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.செவித்திறனை இழந்து அவதிப்படுகிறவர்களுக்காக காதில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறிய உபகரணங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த கருவிகளைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் அதிநவீன சாதனம் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். முப்பரிமாணம் என்கிற ‘3டி பிரின்டட்’முறையில் அது வடிவமைக்கப்பட்டு உள்ளது. கேட்கும் திறன் மனித வாழ்க்கைக்கு எத்தனை முக்கியமானது என்பதை நாம் அறிவோம். ஆனால் நம்முடைய அஜாக்கிரதையான போக்கு எப்போது வேண்டுமானாலும் செவித்திறனை பாதிக்கும். எனவே, செவித்திறன் விஷயத்தில் நாம் எப்போதும் அக்கறையோடும், விழிப்போடும் இருக்க வேண்டியது அவசியம்.இதற்கு கேட்கும் திறன் இழப்பை தடுக்க வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம். ‘ஆர்.எச். நெகட்டிவ்’ குருதி முறை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கருவுற்றிருக்கும் போது தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். கூரிய பொருட்களை காதில் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயர்போனில் பாடல்கள் கேட்கும் போது இசை சத்தமாக இருந்தாலோ நீண்ட நேரம் கேட்டாலோ, காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும். சத்தமான இடங்களை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி எண்ணெய் அல்லது திரவங்களை காதில் இடக்கூடாது. கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவற்றை கடைபிடித்தால் நாம் கேட்கும் திறன் இழப்பை தடுக்க முடியும். காது கேட்கும் திறனை இழந்தால், அது நமக்கு பெரும் இழப்பாக அமையும். பிறரோடு உரையாட இயலாமல் போவதே காது கேளாமையின் முக்கிய பாதிப்பாகும். இதனால் குழந்தைகளால் பேச்சு மொழியை வளர்க்க முடியாமல் போகிறது. காது கேளாமையும், இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாக பாதிக்கிறது.எனினும் காது கேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல் தொடர்புக்கான வாய்ப்பை கொடுத்தால் அவர்களும் பிறரைப் போல செயலாற்ற முடியும். தகவல் தொடர்பு தடைபடும் போது அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.தனிமை, பிரிவு, அதிருப்தி போன்ற உணர்வுகளை உண்டாக்குகிறது. காது கேளாத பெரியவர்களில் பலர் வேலை வாய்ப்பின்றி துன்பப்படுகிறார்கள். வேலையில் இருப்போரும் பொதுவாக உழைப்பவரோடு கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.காது கேளாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் போக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம். மொழி வளர்ச்சிக்கும், பேச்சு வளர்ச்சிக்கும் உகந்த கால கட்டம் இதுவே ஆகும்.இக்கால கட்டத்தில் கண்டறிந்து தகுந்த பயிற்சி அளித்தால் சாதாரண குழந்தைகள் போல் அனைத்து அறிவு சார் திறனும் பெற்று குழந்தைகள் ஒளிர்விடுவார்கள். வீட்டில் காது கேளாத குழந்தை இருந்தால் தனித்து விடாது தினமும் பேசவேண்டும். இது அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க நன்கு உதவும்.சைகை மொழியில் அவர்களுடன் பேசுவதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். செவித்துணைக் கருவிகள் நன்முறையில் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்டறிய வேண்டும். பெற்றோருக்கு அடுத்த பங்கு ஆசிரியர்களிடம் உள்ளது. ‘வாய் வழிக் கல்வி’ முறையே காது கேளாத குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். கல்வி கற்றுக் கொடுக்கும்போது கண்டிப்போடு இருப்பதை விட அன்போடு இருப்பது மிக முக்கியம். பிற மாணவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை இவர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்துக்கேட்போம். காது கேளாதோரை நம்மோடு இணைப்போம்! நாம் அவர்களோடு இணைவோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 27 September 2018

பணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா?

பணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா? அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களின் மனோபாவத்தில் போலித்தனமான வாழ்க்கைப் புரையோடிவிட்டது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், எப்படியோ கஷ்டப்பட்டு பொறியாளர் பட்டத்தைப் பெற்று தற்போது சென்னையில், பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். சூழல் காரணமாக அவனோடு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவன் அன்றாடம் பயன்படுத்தும் படுக்கை அறையைப் பார்த்தேன். திடுக்கிட்டேன். காரணம், படுக்கை முழுவதும் அலைபேசிக்குத் தேவையான மின்ஊக்கி (சார்ஜர்), பாடல்களைக் காதில் வைத்துக் கேட்கும் கருவிக்குத் தேவையான மின்சாரக் கம்பிகள் (வயர்கள்) தொங்கிக் கொண்டிருந்தன. ஏதோ தீவிர நோய் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் படுக்கையைப் போன்றே காட்சியளித்தது. சார்ஜர், பேட்டரிகளில் இருந்து வெளியாகும் செல்களால், கதிர் வீச்சுகளால் எத்தனையோ விபரீதங்கள். உடல் நலத் தீமைகள். இது குறித்தெல்லாம் அவன் யோசித்ததாகவே தெரியவில்லை. பழையது, புதியதென்று தேவைக்கதிகமாவே தொங்கிக் கொண்டிருந்தன. அடுத்ததாக, அவன் பயன்படுத்தும் குளியலறையைப் பார்த்தேன். வகைவகையான அழகுச் சாதனப் பொருட்கள். குளிப்பதற்கு முன்னும், குளித்து முடித்தப் பிறகும் முகத்தில் போடுவதற்குத், தலை முடியிலும், கால்களிலும் போடுவதற்கு என்றெல்லாம் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிரீம்கள், செயற்கை வாசனைத் திரவியங்கள், பற்பசைகள் என்று குளியலறையே ஏதோ அழகு நிலையம் போன்று காட்சியளித்தது. அவன் வாங்கும் ஊதியத்தில் நாற்பது விழுக்காடு செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள் வாங்குவதற்காகவே செலவிடுகிறான். இந்த உண்மை அவனோடு பேசியபோதுதான் தெரிய வந்தது. பெற்றோருக்கு அவனால் மாதாமாதம் பணம் அனுப்ப முடியவில்லை. உள்ளூரில் கந்து வட்டிக்குக் கடனை வாங்கிப் பொறியியல் படிக்க வைத்த பெற்றோரின் நிலைமையோ கவலைக்கிடமாக உள்ளது. வேலை, ஊதியத்துக்காக சென்னையில் வாழ்ந்து வருகின்ற இவனால் கிராமத்துப் பெற்றோருக் குத் துளிக்கூட நன்மையில்லை. அவர்களின் நம்பிக்கை முழுவதுமாக கரைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் உண்மையான அழகுக்கான இலக்கணங்களே தெரியவில்லை. வெறும் நறுமண பூச்சுகள்தான் அழகென்கிறார்கள். இது அறியாமை. அழகென்பது புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது. பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கின்ற பலரோடு சில நிமிடங்கள் பழகிப் பாருங்கள். அப்போதுதான் அவர்களின் அழுக்கு மனங்களைப் புரிந்து கொள்ள முடியும். கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர் குறித்துத் துளியும் எண்ணாமல், அக்கறைக் காட்டாமல், உடல் முழுவதும் வாசனைத் திரவியங்களோடு அலுவலகத்திற்குச் செல்வதால் யாருக்கு என்ன நன்மை? அடுத்தவர்கள் தங்களை பெருமையோடு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பெற்றோரிடம் இவர்கள் சிறுமையோடு நடந்து கொள்கிறார்கள். நாகரிகமான உடை அணிந்து, வாசனைத் திரவியங்களோடு அலுவலகம் செல்வதில் பெருமையில்லை. பெற்றோர் கிழிந்தத்துணி அணியாமல் இருக்கிறார்களா? என்று உறுதிப்படுத்தப்படுவதும் இவர்களின் அடிப்படைக் கடமை. எதிர்காலம் குறித்துத் திட்டமிடுதலும், தேவைகளைக் குறைத்துக் கொள்வதும், சேமிப்பதும், பொருளாதாரக் குறியீடுகளை உயர்த்திக் கொள்வதுமே தற்போதைய அடிப்படைத் தேவை. ஆனால், இவைக் குறித்தெல்லாம் இளைஞர்களும், இளம்பெண்களும் துளியளவு யோசிப்பதே இல்லை. இவர்களில் பலரும் சுயநலவாதிகள். தங்களுடைய சமூக அந்தஸ்தை மட்டும் பெரியதாகக் காட்டிக் கொள்ள துடிப்பவர்கள். தவறில்லை. அதே நிலையில் தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்திச் செய்ய மறுப்பது எந்த வகையில் நியாயம்? எதிர்காலத்தில் நிச்சயம் இவர்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி தவிப்பார்கள். ஊதாரித்தனமான செலவினங்களும், பொறுப்பற்ற வாழ்க்கை முறைகளும், நுகர்வு கலாசாரமும் நாகரிகமல்ல. மாறாக, இவை இன்றைய இளைஞர்கள் பெற்றோருக்குச் செய்து வரும் மறைமுக நம்பிக்கைத் துரோகங்கள். பிரமாண்ட கட்டிடங்களில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும், ‘எது நாகரிகம்..?’ என்பது குறித்து நம் இளைஞர்களுக்கு புரிதல் குறைவு என்பதே யதார்த்தம். இந்த நிலை மாற வேண்டுமென்றால், இதுதொடர்பான பயிற்சி முறைகளும் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படவேண்டும். அப்போதுதான் பொறுப்பான இளம் சமூகம் உருவாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 September 2018

சுற்றுலா தரும் சுகம் !

சுற்றுலா தரும் சுகம் ! எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் நாளை (செப்டம்பர் 27-ந்தேதி) உலகச் சுற்றுலா தினம். ஐக்கிய நாட்டு கூட்டமைப்பின் உலகச் சுற்றுலா அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ந் தேதியை உலகச் சுற்றுலா தினமாக கொண்டாடி வருகிறது. இந்நாளில், சுற்றுலாக் குறித்த விழிப்புணர்வு மற்றும் அது எவ்வாறு சமூகம், பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது. சுற்றுலாத் துறை என்பது ஒரு நாட்டுக்கு பணத்தை அள்ளித்தரும் துறையாகும். பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் துறை. இதில், இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது (சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்). நாம் உலக அளவில் ஏழாவது இடத்தில் உள்ளோம். இந்தியாவில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் 8 சதவீதம் இத்துறை மூலம் உருவாக்கப்படுகிறது. சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்குள் பயணிக்கும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. சுமார் 34 கோடி மக்கள் ஆண்டுதோரும் தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வருகை புரிகின்றனர். அதைப்போன்று வெளிநாட்டு பயணிகள் வருகையில் தமிழ்நாடே முன்னணியில் தொடர்ந்து உள்ளது. 2017-ல் இந்தியாவுக்கு வந்த ஒரு கோடி சுற்றுலா பயணிகளில் சுமார் 48 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். 2 ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் பிரபலமான ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ், ‘உலகில் கட்டாயம் சென்று பார்க்கவேண்டிய 52 இடங்களில் தமிழ்நாடும் ஒன்று’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியாவிலிருந்து இப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது, தமிழ்நாட்டில் அதிக அளவிலுள்ள யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியக் களங்கள், புராதான கோவில்கள், அதில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் சமீப காலங்களில் அதிகரித்துவரும் மருத்துவ சுற்றுலா போன்றவையாகும். குறிப்பாக யுனெஸ்கோ நிறுவனம், தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் மரபு சின்னங்கள் உள்ளிட்ட பல இடங்களை உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கொண்ட தமிழ்நாட்டில் குறைந்த செலவில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு பெருமளவில் நோயாளிகள் வருகின்றனர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற பல பெரிய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அமைந்திருப்பது வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு வழிவகுக்கிறது. மேலும், இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாகவும், பாதுகாப்பு வசதிகள் போதுமான அளவில் இருப்பதும் இன்னொரு காரணம் ஆகும். சுற்றுலா நமது வாழ்வில் இன்றியமையாத ஒன்று. இப்பூவுலகு பல விந்தைகளையும் விசித்திரங்களையும் கொண்டது. வாழும் காலத்திற்குள், இப்பூமி பந்தில் எத்தனை இடங்களை பார்க்க முடியுமோ, அத்தனை இடங்களையும் கண்டுவிட வேண்டும். நமது வருவாயில், பயணங்களுக்கு என ஒரு குறிப்பிட்ட பகுதியினை ஒதுக்கிவிட வேண்டும். இரண்டு, மூன்றாண்டுக்கு முன்பே திட்டமிட தொடங்கிவிட வேண்டும். வெளிநாட்டு பயணங்களென்றால் மிக அதிக அளவில் திட்டமிடல் அவசியம். கடவுச் சீட்டு, அந்நாட்டுக்கான நுழைவுரிமை (விசா), பயணச்சீட்டு போன்றவற்றை உரிய காலத்தில் எடுத்துவிட வேண்டும். எந்ததெந்த ஊர்களுக்கு செல்லப்போகிறாம், எங்கு தங்கப் போகிறோம் போன்ற விவரங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும். பூமியின் வடக்கு பகுதி ஊர்களுக்கு செல்லும்போது, அப்பகுதியில் கோடைக்காலமாக இருக்கும் காலத்தில் சென்றால், சூரிய ஒளி இரவு 9 மணிவரை இருக்கும். நாம் கூடுதலான இடங்களை காணமுடியும். அதே போன்று நாம் செல்லும் ஊர்களின் தட்பவெட்ப நிலையை அறிந்துக் கொள்வதன்மூலம், சூழலுக்கு தக்க உடைகளை அணிந்துக் கொள்ள முடியும். சுற்றுலா என்பது முக்கியமான இடங்கள், அருங்காட்சியகங்கள், புராதான சின்னங்களை காண்பது மட்டுமல்ல. அங்கு வாழும் மக்களின், கலாசாரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அறிந்துக் கொள்ளுதலுமாகும். மக்களோடு, குறிப்பாக நண்பர்கள், உறவினர்களோடு உரையாடுதல் சிறந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்தம் பண்பாடு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் கட்டி திரைகடலோடியவன் தமிழன். சுற்றுலா என்பது அவனது மரபணுக்களில் புதைந்துள்ளது என்றால் மிகையாகாது. ‘ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு’ என்பது ஆங்கிலப் பழமொழி. அதுபோன்று எந்த நாட்டுக்கு செல்கிறோமோ அந்நாட்டு சிறப்பியல்பு களை ஒத்து வாழ்வது சிறந்தது. உதாரணமாக, அந்நாட்டு உணவுகளை ருசித்து மகிழவேண்டும். வெளிநாடு சென்றாலும், நம்மவர்களில் சிலர் இட்லி-தோசையை பிரிய மாட்டார்கள். நம்மவூர் உணவு விடுதிகளைத் தேடி பல மணிநேரம் பயணம் செய்து, அவற்றை (பெரும்பாலும் மாவு புளித்து, ருசியே இருக்காது) சாப்பிட்டுவிட்டு வருவார்கள். அதனை பெரிய சாதனையாகக் கூறுவார்கள். உண்மையில் அது சாதனையல்ல. சோதனை. எவ்வளவு நேரம் இதற்காக வீணடித்தோம் என்பதை கணக்கில் கொள்ளமாட்டார்கள். பொது இடங்களில் வரிசையில் நிற்பதும், பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் சிறந்த வழிமுறையாகும். ஆனால், இந்தியர்களிடமுள்ள பெருங்குறை வரிசையை மதிக்காததும், விதிகளை மீறுவதுமாகும். உலகெங்கும் மக்கள், விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி நிறுத்தத்திற்கு வந்து, முழுமையாக நின்றவுடன்தான் இருக்கையைவிட்டு எழுந்திருப்பார்கள். ஆனால், இந்தியர்கள் விமானம் தரையை தொட்டவுடன், தடதடவென்று இருக்கையைவிட்டு எழுந்துவிடுவார்கள். ஒருமுறை எனது அருகிலிருந்த மேல்நாட்டவர், ஏதோ ஆபத்து என்று பதற தொடங்கினார். அவரை சமாதனப்படுத்துவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. பொது இடங்களில் சுத்தமாக வைத்திருக்க உதவவேண்டும். நாம் செய்கிற சிறுதவறுகள் நாட்டிற்கும், நமது பண்பாட்டிற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்திவிடும். எந்த நாட்டிற்கு சொல்கிறோமோ அந்நாட்டு விதிகளை அறிந்திருக்க வேண்டும். உலக சுற்றுலா நாளாகிய இன்று, நாம் அடுத்து எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்போம். அதை விரைவில் நிறைவேற்றுவோம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இணையதளக்கடலில் பாதுகாப்புப் பயணம்

இணையதளக்கடலில் பாதுகாப்புப் பயணம் த.கதிரவன், மென்பொருள் பொறியாளர், சியாட்டில், வாஷிங்டன் மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக உணவு, உடை, மற்றும் உறைவிடத்தை கூறுவார்கள். இன்று அதனுடன் இணைய தேவையும் இணைந்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த அளவுக்கு இன்று இணையம் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. நமக்கு தேவையான எந்த தகவலையும் இணையத்தின் மூலமாக ஒரு வினாடி பொழுதில் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி இணையத்தின் மூலமாக வங்கி, மின்சாரம், வருமானவரி, பயணம் மற்றும் இதர பல சேவைகளை நம் வீட்டில் இருந்த படியே பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி இணையத்தை பயன்படுத்தும்போது நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துபவர்களை போல அதனை தீய செயல்களுக்கு (ஹேக்கிங்) பயன்படுத்துபவர்களும் உள்ளனர். அவர்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துகொள்ள நீங்கள் பின்வரும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நாம் அன்றாட வாழ்வில் இணையத்தை பேஸ்புக், இ-மெயில், வங்கி சேவை, ரெயில் முன்பதிவு மற்றும் பல சேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். சிலர் அத்தனை இணையதளங்களுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஒரு தவறான செயல். அதாவது, ஒருவர் உங்களின் ஒரு இணையதளத்தின் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டால் அவரால் உங்கள் வங்கி கணக்கு உள்பட அனைத்து கணக்குகளையும் தன் வசப்படுத்திகொள்ள முடியும். அதனால் முடிந்தவரை உங்களின் ஒவ்வொரு இணைய சேவைக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பாஸ்வேர்டு உங்கள் மனதில் பதியவேண்டுமே அன்றி டைரியிலோ அல்லது நோட்புக்கிலோ அல்ல. இப்படி ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தியதால் பல பேர் தங்களின் பணம் மற்றும் சுயதகவல்களை இழந்திருக்கின்றனர். அப்படி ஒரே பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்துபவராயின், இன்று முதல் வேலையாக உங்களின் அனைத்து இணைய கணக்கு பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிடுங்கள். யாரும் விரைவில் கண்டுபிடிக்க முடியாத, அதே நேரம் உங்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் இருக்கும்படி பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வங்கியில் இருந்து வரும் தகவலை போல உங்களுக்கு ஒரு இ-மெயில் வரும். அதில் காட்டும் ஒரு ‘லிங்’கை கிளிக் செய்தால் அது உங்கள் வங்கியின் வெப்சைட் பக்கத்தை போல (உங்கள் வங்கி வெப்சைட் அல்ல ) ஒரு வெப்சைட்டை திறக்கும். அங்கு நீங்கள் உங்கள் வங்கி முகவரி, பாஸ்வேர்டை கொடுத்தால் ஹேக்கர்கள், அதை திருடி உங்கள் கணக்கினுள் நுழைந்து விடுவார்கள். அதன் மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எளிதில் எடுத்துக்கொள்ள முடியும். எனவே, உங்களுக்கு வங்கியிலிருந்து இ-மெயில் அல்லது குறுந்தகவல் வந்தால் அது நம்பகமானதா? என்று சோதித்து பின்னரே நீங்கள் உங்கள் விவரங்களை அளிக்க வேண்டும். அந்த வெப்சைட் ‘லிங்’கை இரண்டு முறை சரிபார்த்த பின்பே உங்கள் தகவல்களை அளிக்க வேண்டும். மேலும், உங்கள் கம்ப்யூட்டரில் கட்டாயம் ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் இருப்பது மிக அவசியம். வைரஸ் என்பது இணையதளம் வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும் சாப்ட்வேர் ஆகும். இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து விவரங்களை உங்களுக்கு தெரியாமலேயே மற்றவர்களுக்கு அனுப்பி விடும். அது மட்டுமன்றி உங்கள் கம்ப்யூட்டரேயே செயலிழக்க வைத்து விடும் அளவுக்கு திறன் கொண்டது. ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் அந்த வைரசிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. அது மட்டுமன்றி நீங்கள் பயனற்ற வெப்சைட்டுகளை அணுகாமல் இருப்பதும் உங்களை வைரசிலிருந்து காப்பாற்றும். ஓ.டி.பி. எண் (ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு) பயன்பாட்டிலும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, ஆன்லைன் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரை அனுப்புவார்கள். அதாவது உங்கள் பாஸ்வேர்டை தவிர நீங்கள் இந்த ஓ.டி.பி. எண்ணையும் கூடுதலாக கொடுக்க வேண்டும். ஒருவர் உங்களது பாஸ்வேர்டை தெரிந்து கொண்டாலும், அவரால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை இந்த ஓ.டி.பி. எண் இல்லாமல் எடுக்க முடியாது. அதனால் இந்த எண்ணை நீங்கள் யாருக்கும் பகிரக் கூடாது. உங்கள் வங்கியிலிருந்து பேசுகின்றோம் உங்கள் ஓ.டி.பி. எண்ணை கொடுங்கள் என்றாலும் நீங்கள் அதை பகிரக்கூடாது. ஏனேனில் ஓ.டி.பி. என்பது உங்கள் பாஸ்வேர்டை போன்றது. இன்னும் பல மேம்பட்ட பாதுகாப்பு முறைகள் இருந்தாலும், இந்த அடிப்படை முறைகளை பின்பற்றினாலே பெரும்பாலான இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம். இணையதளம் என்பது கடல் போன்றது. அதில் பாதுகாப்போடு நீந்தினால் உங்கள் அறிவை மட்டுமன்றி உங்கள் வாழ்வையே மேம்படுத்திக்கொள்ளலாம். விழிப்போடு இருக்க தவறினால், உங்கள் வாழ்வு நடுக்கடலில் தொலைந்துபோகவும் வாய்ப்புண்டு.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 September 2018

மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?

தி இந்து வில் நான் பலமுறை உங்கள் குரலில் கேட்டுக்கொண்டது இன்று என் கனவு நிறைவேறியது என்று கூட சொல்லலாம். ஆம் நுழைவுத் தேர்வு எழுதுபவர்களான மாணவர்கள் அவர்களிடம் விவாதியுங்கள்! என்று நான் பலமுறை எடுத்துரைத்தேன் அதன் விளைவு என்று நான் இத்தலைப்பை வரபிரசாதமாகக் கருதுகிறேன். தொடர்ச்சியாக நாம் விவதிதிருக்கு வருவோம் : 1)முதலில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துபோகி தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வேண்டுகோளுக்கிணங்க மாநில பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். 2)கிராமப் புறமாணவர்கள்/மெல்லகற்கும் மாணவர்கள் என்ற நிலையை மாற்ற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். 3)நான் மலையடிவார முழு கிராமப்புற மாணவன். நான் மருத்துவ (அறிவுப் போட்டி ) நுழைவுத்தேர்வை கட்டாயம் வரவேற்கின்றேன் .நானும் மெல்லக்கற்கும் மாணவன்தான் நிச்சயமாக என் மதிப்பெண் பத்தாம் வகுப்பில் 324/500 மட்டுமே. 4)நமக்கு நன்றாகப் படிப்பவர்கள் முக்கியம் கிடையா. அறிவுத்திறமை,புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான் முக்கியம். 5)பொதுவாகவே போட்டித்தேர்வு ( COMPETITIVE EXAMS ) பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி (ACADEMIC EXAMS ) தேர்வுகளைவிட கடினம். காரணம் பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி தேர்வுகளில் வினாத்தாள் திட்ட வரைவை (BLUE PRINT ) மட்டுமே பயன்படுத்தி வினாத்தாள் தயாரிக்க வேண்டும் பாடதிற்குள்ளிருந்து வினா அமைத்து விட்டால் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துவிடுவார்கள் மற்றும் பல இன்னலுக்கு ஆளாகிவிடுவார்கள் .அவ்வளவு தாழ்வுமனபான்மை உள்ளவர்கள் மாணவர்கள். 6)மாநிலப்பாடக்கல்விமுறை மிகவும் எளிதாக உள்ளது அதவே குறைக்க சொல்கிறார்கள் சிலர் அப்புறம் எப்படி அறிவு பெற முடியும். 7)மருத்துவம் மட்டும் அல்ல அனைத்து துறைக்களுக்குமே நுழைவுதேர்வு வைக்கலாம் பொதுவாக கலை-அறிவியல் மாணவர்களைக்கூட நுழைவுத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்.அப்போதுதான் முன்புபடித்தபாடத்தை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.நான் 2010 இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன் இன்றுவரை இவ்வருட மாணவர்களின் வினாத்தாள் -பாடத்திட்டம் வரை வருடா வருடம் வினாத்தாள்களை ஆராய்ந்து வருகிறன். அதுபோல மாணவர்கள் தங்கள் படிப்படை கூர்தீட்டிகொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் போட்டித்தேர்வு,போட்டி நுழைவுத்தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர் கொள்ளலாம். 8)நுழைவுத்தேர்வால் பயிற்சிமையங்கள் அதிகரிக்கலாம் உண்மைதான். இன்று பல அரசுஉதவிபெறும்/தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தையும் நடத்துவதில்லை.இங்கே எப்படி பாருங்களேன். இது பயிற்சி மையதைக்கட்டிலும் கட்டாயம் கொடுமை தானே? 9)என்னால் மிகப்பலமுறை உங்கள் குரலில் பதிவு செய்துள்ளேன் மெட்ரிக் பள்ளிகள் ஒன்றுகூட அரசின் பருவத்தேர்வுகளை நடத்துவதில்லை என்னால் இதை ஆதாரபூர்வமாக நிருபிக்கவும் முடியும். 10)மற்றும் கையெத்து நன்றாக இருக்காது போனதால் குறைந்த மதிப்பெண் பெற்ற/பெறும் மற்றும் மெல்லக்கற்றாலும்-தெளிவாகக்கற்கும் என்னைபோன்ற மாணவர்களுக்கு மருத்துவ நுழைவு தேர்வு என்றும் வரபிரசாதமே.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெறும் மாணவனே என்னிடம் தான் ஒரு மதிப்பெண் வினா-விடைக்கு விடைகேட்பான். 10)நுழைவுதேர்வுக்கல்வி அறிவுகல்வியே!!! இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் இருவகை நுழைவுதேர்வு எழுதினால்தான் சேர்க்கை பெறவே முடியும் அதைப்பார்க்கிலும் இம்மருத்துவ நுழைவு வரவேற்கத்தக்கதே. 11)குருட்டு மனப்பாடம் பண்ணவைப்பவர்கள்/குருட்டு மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுபவர்களே இங்கே பாதிக்கபடுகிறார்கள் அறிவாளிகள் ஒருவரும் ஒருபோதும் பாதிக்கபடுவதில்லை. வெல்லட்டும் அறிவு !!!! நிகழட்டும் நுழைவுதேர்வு!!!!!! கட்டணமில்லா நுழைவுத்தேர்வு ஆலோசகர் கணேஷ்குமார் இளநிலை மாணவ மருந்தியலாளர்.தொடர்புக்கு : ganeshkumarscience@gmail.com

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்த செயல்கள் எல்லாம் உங்கள் மரணத்தை விரைவாக்குமா? என்ன சொல்கிறது எமபுராணம்?

மரணத்தை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முடிந்தவரை தங்களின் மரணத்தை தள்ளி போடவே அனைவரும் விரும்புவார்கள். சாகாவரம் விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் நம்மை மரணத்தை நோக்கி அழைத்து செல்வதும், இறந்த பின் நரகத்திற்கு கூட்டி செல்வதும் நம்முடைய பழக்கவழக்கங்களும், நாம் செய்யும் பாவங்களும்தான்.எம புராணத்தின் படி ஒருவரும் செய்யும் செயல்களே அவருக்கு எவ்வளவு சீக்கிரம் மரணம் ஏற்படக்கூடும் என்பதை நிர்ணயிக்கிறது. அதன்படி மனிதர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் எவை என்பதை எம புராணம் சொல்கிறது. இந்த பதிவில் எமனை உங்களை நோக்கி வேகமாக அழைத்து வரும் செயல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

கிரகணம்

பூமியில் அனைத்து உயிர்களும் நன்றாய் வாழ சூரிய ஒளி மிகவும் அவசியம். அதே சூரிய ஒளிதான் உங்கள் ஆயுளையும் குறைப்பதாக எம புராணம் கூறுகிறது. கிரகணத்தன்று சூரியனை ஊற்றி பார்ப்பது உங்கள் ஆயுளை குறைக்க கூடுமாம்.


கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழுதல்

அனைத்திற்கும் மேலே இருக்கும் கடவுளென்னும் அற்புத சக்தியை நம்பாதவர்கள், தர்மத்தின் படி நடக்காதவர்க்ளுக்கு மரணம் விரைவில் வரும். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது மனிதத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கு சமம். ஆனால் கடவுள் பக்தி என்ற பெயரில் மனிதத்தை அழிப்பவர்களுக்கு எக்காலத்திலும் கடவுளிடம் மன்னிப்பு கிடையாது.

மூத்தோரை அவமதித்தல்

வயதானவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட கடவுளுக்கு சமமானவர்கள். அப்படி பட்டவர்களை அவமதிப்பது உங்களுக்காக நரகத்தின் வாசலை திறந்து வைக்கும்.

தவறான பாதை

தர்மத்தின் வழி நடப்பவர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. ஆனால் தவறான பாதையில் செல்பவர்கள் நிச்சயம் மரணத்தை நினைத்து பயப்பட வேண்டும். ஏனெனில் அது அவர்களை நோக்கி விரைவாக வரும்.

தீயவர்களுடன் வாழுதல்

நம்மை சுற்றியிருப்பவர்களின் எண்ணமே நம்மிடம் பிரதிபலிக்கும். எனவே தவறான எண்ணங்களுடன் வாழ்வது எமனை நீங்களே வரவேற்பது போன்றது. பெண்கள், குழந்தைகள், மனிதநேயம் பற்றி தவறான கருத்து உள்ளவர்களுடன் வாழ்வது நீங்கள் சாவதற்கு சமமானது.

கால் மேல் கால் போட்டு அமர்வது

நீங்கள் இந்த நிலையில் அமரும்போது, இடுப்புப்பகுதி முன்னோக்கி நகர்த்தப்படுகிறது, முதுகெலும்பு வளைந்து உடலின் கீழ்ப்பகுதியில் அதிக அழுத்தம் தரப்படுகிறது. இது பல இடைநிலை நோய்களை உருவாக்கும்.

இந்த நாட்களில் உறவு வைத்தால்

கருட புராணத்தின் படி சில குறிப்பிட்ட நாட்களில் உடல்ரீதியான தொடர்புகள் வைத்து கொள்வது ஆபத்தானது. சதுர்த்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி நாட்கள் போன்ற நாட்களில் உறவு வைத்துக்கொள்வது மரணத்தை வரவேற்க கூடியதாகும்.

தவறான திசையில் தூங்குதல்

நாம் தூங்கும் முறையும், திசையும் கூட மரணத்தை விரைவில் வரவைக்கும். தெற்கு மற்றும் தென் மேற்கு திசைகளில் தலை வைத்து தூங்குவது மரணத்தை விரைவில் ஏற்படுத்தும்.

இருட்டில் தூங்குதல்

இருளாக உள்ள அறையில் எப்பொழுதும் நுழையவோ, தூங்கவோ முயலாதீர்கள். எப்பொழுதும் ஒரு சிறிய விளக்கையோ அல்லது ஜன்னலை திறந்து வைத்தோ தூங்கவும்.

உடைந்த கட்டிலில் தூங்குதல்

உடைந்த கட்டிலில் படுப்பதோ அல்லது தூங்குவதோ சாஸ்த்ரிங்களின்படி துர்சகுனமாக கருதப்படுகிறது. இப்படி உடைந்த கட்டிலில் படுப்பது விரைவில் மரணத்தை ஏற்படுத்தும்.

ஊனமுற்றவர்களை கேலி செய்வது

மற்றவர்களின் குறைகளை சுட்டி காட்டி வெளிப்புறமாகவோ அல்லது மனதிற்குள்ளோ எள்ளி நகையாடுவது அதிக பாவத்தை சேர்க்கக்கூடிய செயலாகும்.

தலைக்கு எண்ணெய் வைப்பது

தலைக்கு எண்ணெய் வைத்த பிறகு அதே எண்ணெயுடன் உடலின் மற்ற பாகங்களை தொடுவது வேதங்களின் படி அபசகுனமான ஒன்றாகும். எனவே தலைக்கு எண்ணெய் வைத்த பிறகு குளிக்கும் வரை உடலின் எந்த பாகத்தையும் தொடக்கூடாது.

அழுக்கடைந்த கைகள்

வீட்டை சுத்தப்படுத்திய பின்போ அல்லது விளையாடிய பின்போ கைகளை சுத்தம் செய்யாமல் எழுதுவதோ, படிப்பதோ அல்லது மற்றவர்களுக்கு சொல்லித்தருவதோ எம புராணத்தின் படி பெரும் பாவச்செயலாகும்.

புறம்பேசுதல்

ஒருவரை பற்றி அவர்கள் இல்லாத போது புறம் பேசுபவர்கள் மற்றும் பொய் கூறுபவர்கள், அடுத்தவரின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்கள் போன்றவர்களை மரணம் சீக்கிரம் நெருங்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காலாண்டு விடுமுறையைக் குழந்தைகளுடன் இப்படியும் கழிக்கலாமே பெற்றோர்களே!

சனி, ஞாயிறு லீவு விட்டாலே இந்தப் பசங்கள சமாளிக்கிறது கஷ்டம். காலாண்டு தேர்வு முடிந்து ஒரு வாரம் லீவாமே! ' என்று கொஞ்சம் பயத்தோடு யோசித்துக்கொண்டிருக்கும் பெற்றோரா நீங்கள், அப்படியெனில் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைதான் இது.``பள்ளி விடுமுறை என்றால் குழந்தைகள்உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிடுவார்கள். அந்த உற்சாகத்தைக் கொஞ்சமும் குறைத்துவிடாமல், அழகாகத் திட்டமிட்டால் இந்தக் காலாண்டு விடுமுறையை அர்த்தபூர்வமானதாக மாற்றிவிடலாம்" என்கிறார் சிறுவர் எழுத்தாளர் விழியன். இவர், குழந்தைகளுக்காக 15 புத்தகங்கள் எழுதியுள்ளார். `பெற்றோர் மேடை' எனும் நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் ஏற்பாடு செய்து, குழந்தை வளர்ப்புத் தொடர்பான உரையாடலை மேற்கொண்டு வருகிறார். அதில் மருத்துவம், கல்வி, இசை எனப் பலவகையான சாதனையாளர்களுடன்உரையாடச் செய்கிறார்.முதலில், குழந்தைகளை ஜாலியாக, உடல் களைத்துப்போகும் அளவுக்கு விளையாட அனுமதியுங்கள். அடுத்து, வீட்டு வேலைகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்யுங்கள். காய்கறிகளைக் கழுவித் தருவது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதில் உதவுவது என, அவர்களால் முடிகிற, ஆபத்தில்லாத வேளைகளைப் பகிர்ந்துகொடுங்கள். பள்ளிக்குச் செல்லும் நாள்களில் அதிகாலையில் அவரசமாக எழுப்புவதிலிருந்து, அடுத்த நாள் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதால், சீக்கிரமே தூங்கச் செய்வது வரை எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்திருக்கும். அதனால், அழகான விஷயங்களை அவர்கள் அனுபவிக்க வியலாமல் கடந்துபோயிருப்பர். அதனால், மொட்டை மாடி அல்லது தெருவுக்கு அழைத்துச் சென்று வானத்தைப் பார்க்க வைக்கலாம். நிலா மட்டுமல்ல, நட்சத்திரங்களைப் பார்ப்பது அதிலிருந்து சின்னதாக ஒருகதை உருவாக்குவது என்பதாகக்கூட மாற்றலாம். முதலில் அலுப்பாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அதோடு சுவை சேர்ப்பது பெற்றோரின் வேலை. தற்போது, சில ஊர்களில் மழை பெய்துகொண்டிருக்கிறது. அவ்வூர்களில் இப்படிச் செய்ய வேண்டாம்.ஆசிரியர் கேள்வி கேட்பார், மாணவர் பதில் சொல்வார் என்பதுதான் எல்லோரின் மனதில் படிந்துபோன ஒன்று. ஆனால், குழந்தைகள் ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, கேள்விக் கேட்பதைக் கூர்ந்து கவனித்திருக்கிறார்கள். இரண்டாவது, அது குறித்து மேலதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதனால், காணும் விஷயங்களில் எல்லாம் கேள்வி எழுப்பச் சொல்லுங்கள். உதாரணமாக, உங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு மரம் இருக்கிறது என்றால், அந்த மரத்தில் பெயர் என்ன, அதன் வயது என்ன, அதன் அறிவியல் பெயர் என்ன... என்று அவர்களுக்குத் தோன்கிற கேள்விகளை எழுப்பச் செய்யுங்கள். அன்றைய இரவில், அந்தக் கேள்விகளைத் தொகுத்து உரையாடுங்கள். அவற்றிற்கானபதில்களைச் சொல்ல வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. ஆனால், குழந்தைகள் ஒரு விஷயத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள உதவும்.குழந்தைடிவியில் கார்ட்டூன் சேனல்களே பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம், அந்த நிகழ்ச்சிப் பற்றிக் கேள்விகளைக் கேட்கச் செய்யுங்கள். அவர்களின் கவனம் சற்றே மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும், அந்த நிகழ்ச்சி எந்தளவுக்கு அவர்களின் மனதில் பயணித்திருக்கிறது என்பதை நீங்களும் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பழக்கம் விடுமுறை முடிந்தும்தொடரும்பட்சத்தில் அவர்கள் யோசிக்கும் விதம் முற்றிலுமாக மாறியிருக்கும். எதுவொன்றையும் மேம்போக்காகப் பார்க்கும் விதத்தில் மாற்றம் இருக்கும்.வீட்டிலுள்ள புத்தகங்களை அடுக்கச் செய்யலாம். ஒவ்வொரு புத்தகத்தின் பெயரையும் படித்து, அது எந்த வகை புத்தகமோ அதற்கு உரிய இடத்தில் வைக்கும்போது, இத்தனை வகைகளான புத்தகங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வர். சில புத்தகங்களைப்பார்த்ததும் பிடித்துப்போய் படிக்கத் தொடங்கினால், தடுக்காமல் படிக்க அனுமதியுங்கள். அப்படி ஒரு புத்தகத்தையும் படிக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற பாடம் உங்களுக்குக் கிடைக்கும்.இந்தக் காலாண்டு விடுமுறை என்பது ஒரு வாரக் காலம்தான் என்பதால், நீண்டதூரம் பயணம் செய்யும் சுற்றுலாவாக அமைத்துக்கொள்ள முடியாது. ஓரிரு நாளில் அதிகபட்சம் நான்கு நாள்களில்சென்று வரும்விதமான பயணங்களை மேற்கொள்ளலாம். வெளியூர் செல்வது சிரமம் எனும் பட்சத்தில், உங்களின் நெருக்கமான நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று ஒருநாள் தங்கலாம். அதேபோல, அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைக்கலாம். இப்படிச் செய்யும்போது, நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் குழந்தையும் நன்கு பழகி, நட்பு அடுத்த தலைமுறைக்கும் பயணிக்கும். விடுமுறை என்பது குழந்தைகளுடன் நாம்அதிக நேரம் செலவிடுவதற்கான அற்புதமான வாய்ப்பு என்று நினைக்கத்தொடங்கினால், அடுத்து எப்போது பள்ளிக்கு விடுமுறை விடப்படும் என, உங்கள் குழந்தையோடு நீங்களும் ஆவலோடு காத்திருப்பீர்கள்" என்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை! தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு?

புதிய பாடத் திட்டம், புளூ பிரிண்ட் ஒழிப்பு என அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, 11-ஆம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என அறிவித்தது, தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் முடிவு என புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ்1 பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிளஸ்1 பாடங்களை நடத்தாமல், அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பிளஸ் 2 பாடங்களை மட்டுமே நடத்தி வந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தன.பிளஸ்1 பாடங்களைப் படிக்காமல், பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு மட்டுமின்றி, அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளிலும் சாதிக்க முடியாமல் போவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்தன. அதனைத் தொடர்ந்தே, பிளஸ்1 தேர்வுதமிழகத்தில் பொதுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது.வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு, அகில இந்திய அளவில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வினை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், பிளஸ்1 மாணவர்களுக்கு 2018-19 கல்வியாண்டில் புதிய பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மனஅழுத்தம் பெறுவதாக கூறி, பிளஸ்1 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கிடப்படாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த தனியார் பள்ளிநிர்வாகத்திற்கு மட்டுமே நிம்மதி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசின் முடிவு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக கல்வியாளர் கே.மணிவண்ணன் கூறியது:பிளஸ்1 பாடத்தைத் தொடர்ந்து, பிளஸ்2 பாடங்களை படித்தால் மட்டுமே, ஒரு பாடம் தொடர்பான முழுமையான புரிதல் மாணவர்களுக்கு ஏற்படும். ஆனால், மதிப்பெண்களுக்காக மனனம் செய்யும் நடைமுறை அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவு, தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிளஸ்1 பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல், 9ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையினை அரசு பின்பற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பிளஸ்1 மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்குத் தேவையில்லை என்ற அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வி படிப்புகளில், கடைசி ஆண்டுப் படிப்பின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றால், முதல் 2 அல்லது 3 ஆண்டுகளின் படிப்புகளின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தத் தேவையில்லை என்ற நிலை உருவாகும். அதன் மூலம் உயர் கல்வியின் தரம் தாழ்ந்துவிடும். அதுபோலவே, பிளஸ்1 மதிப்பெண் தொடர்பான அரசின் அறிவிப்பும் மாணவர்களின்வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்கள் நெருக்கடிக்குள்ளாவதாக கருதினால், பாடச் சுமையை குறைத்து, தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும். மாறாக, பிளஸ்1 மதிப்பெண்களை முழுமையாக ஒதுக்க நினைப்பது சரியல்ல. இதனால், பிளஸ்1பாடங்களில் குறிப்பிட்டவற்றை மட்டும் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க தனியார் பள்ளிகள் முயற்சிக்கும். மேலும், தேர்ச்சிக்காக பொதுத் தேர்வில் முறைகேடுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார். தனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவும் முடிவு: ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியது:கடந்த ஆண்டு பிளஸ்1 பொதுத் தேர்வு 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. அதில் 3.4 சதவீத மாணவர்கள் மட்டுமே 500 மதிப்பெண்களுக்கு கூடுதலாக பெற முடிந்தது. இதனால் பல பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் விளைவு, மதிப்பெண்களுக்கு பிரபலமான மெட்ரிக் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் அதிருப்தியில் இருந்து வந்த தனியார் பள்ளிகளுக்கு, அரசின் தற்போதைய அறிவிப்பு மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்1 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வளர்ச்சி பெற முடியும். அதற்கு மாறான முடிவினால், தனியார் பள்ளிகள் மட்டுமே வழக்கம்போல் முக்கியத்துவம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.புளூ பிரிண்ட் முறையை ஒழித்ததால், மாணவர்கள் மனனம் செய்யாமல், பாடம் முழுவதிலும் கவனம் செலுத்த வேண்டியநிலை உருவாகியுள்ளது. இதற்குப் பெற்றோர் தரப்பிலும்வரவேற்பு கிடைத்தது. அதேபோல் 11ஆம் வகுப்பு பாடங்களிலிருந்தே நீட் தேர்வுக்கான வினாக்கள் அதிகம் இடம் பெறுகின்றன. தற்போது பிளஸ்1 பாடத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனில், நீட் தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதில் அர்த்தமில்லை என்றார். - ஆ. நங்கையார் மணி

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடும்பம் என்னும் அன்புச்சோலை...!

குடும்பம் என்னும் அன்புச்சோலை...! முனைவர் சவுந்தர மகாதேவன், கல்லூரி பேராசிரியர், நெல்லை புகார்க் கூடங்களாக ஏன் குடும்பங்கள் மாறிவருகின்றன? என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று எல்லோரும் ஏன் பேசத் தொடங்கிவிட்டோம்? வாழ்வு பாடாய்ப் படுத்துவதாக ஏன் நினைக்கத் தொடங்கியுள்ளோம்? சிலருக்கு இருக்கப் பிடிக்காமல் ஏன் வெறுக்கப் பிடிக்கிறது? உப்பு விற்கப்போனால் மழைபெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு உள்ளத்திலும் நூற்றுக்கணக்கான புகார்ப் பட்டியல்கள். என்ன ஆயிற்று நம் இந்தியக் குடும்பங்களுக்கு? ‘வீடு சிறையாக மாறிவிட்டது. வறட்டு கவுரவமும் தேவையில்லாப் பிடிவாதமும் எங்களை வெறுப்பில் ஆழ்த்துகின்றன’ என்கிற இளைய சமுதாயத்தின் குரல் ஒருபுறம். பொறுப்பு வெறுப்பாய் மாறி மகனை, மகளை, மனைவியைக், கணவனைத், தந்தையைக் கொலை செய்யும் அளவுகூடக் கொண்டுபோய் விடுகிறது. எதையும் விட்டுக் கொடுப்பதற்கு யாரும் தயாரில்லை. ஐவகை நிலமும் அறிந்தவன் பால்கனிச் செடியைப் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானதோ அதைப்போல் நல்ல குடும்ப அமைப்பு நம் கண் முன்சிதைந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. வீட்டுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்குப் பிரச்சினைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், வீட்டுக்குள் நுழையவே பிடிக்கவில்லை என்று இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்குள் நுழையும் குடும்பத் தலைவர்களைக் குடும்பங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவா? இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் தனிமையின் துயர் அறுக்க இணையதளங்களிலும் சமூகஊடகங்களிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பறவைகளை இந்தக் குடும்பங்கள் எப்படி ஆற்றுப்படுத்தப் போகின்றன? உருகத் துடிக்கிற பனியைப் பருகத் துடிக் கிற இளைய உதடுகள் இது குறித்து என்ன சொல்லப் போகின்றன? பொறுப்பாயிருக்கிற வரை வெறுப்பாயிருக்காது எதன்மீதும்! அந்தப் பொறுப்பை யார் யாருக்கு உணர்த்துவது? நாம் அசருகிற போதெல்லாம், ‘விடுறா இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். பிரச்சினையைத் தூக்கிப் போட்டுட்டு ஆத்தாளுக்கு பதினோறு ரூபாய் முடிஞ்சி வச்சிட்டு அடுத்தவேலை பாருடா’ என்று சொன்ன அந்த சுமைதாங்கி மனிதர்களை அன்னை இல்லங்களில் கொண்டு விட்டுவந்த இடரை இப்போது அனுபவிக்கிறோம். கால்நூற்றாண்டு உறவுகளை எல்லாம் திருமணம் என்கிற பந்தத்தின் பொருட்டு விட்டுவிலகி வந்து தன்னையே நம்பி வாழும் மனைவிக்கு மனது என்ற ஒன்று இருக்கிறது, அவள் நலன் நாடல் என் கடமை என்று கணவன் ஏன் நினைப்பதில்லை? உலகம் செலுத்தும் பேரன்பில் ஓரன்பாவது நமக்குக் கிடைக்கத் தானே செய்யும்! நாம் மட்டும் ஏன் அந்த அன்பை மற்றவர்களுக்குத் தர மறுக்கிறோம். நாடகங்களில் காட்டுமளவு வெகு கொடூரமாக இன்னும் மாறவில்லை குடும்பவாழ்வு. கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொள்கிறவர்கள் வெற்றி வந்தால் அளவுக்கதிகமாய் ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டுபோகாமலும் வெகுஇயல்பாய் இருக்கிறார்கள். என்னதான் நம் வாழ்வின் வினாடிகள் வெளியில் ஆட்டமும் ஓட்டமுமாய் கழிந்தாலும் ஆன்மா ஆனந்தமயமாவதும் அமைதியடைவதும் இல்லத்தில்தான். இல்லத்தில் உள்ளது நம் உள்ளத்தின் நிம்மதி. அந்த இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான். அலுவலகத்தில் மேலாளர் என்ன சொன்னாலும் பொறுமையுடன் யோசித்து அமைதியாய் பேசும் நாம் வீட்டில் எரிந்துவிழுகிறோம். ஒன்றுமில்லாத சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுகிறோம். வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும். சொற்களால் பிரிந்த குடும்பங்கள் ஆயிரம்! கனத்த சொற்களால் தான் நம் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதில்லை. மென்மையாக ஆனால் அழுத்தமாக நாம் சொல்லவேண்டியதைச் சொல்லலாம். மீட்டித்தான் ஆகவேண்டும் இந்த வாழ்வெனும் வீணையை, வாழ்ந்து காட்டித்தான் ஆகவேண்டும் நம்மை வெறுப்போருக்கு மத்தியிலும். தொட்டிக்குள் வாழ்ந்தாலும் சலிப்பில்லாமல் நீந்துகிற மீன்களைப் போல் நம் இயக்கம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். மூலவருக்கு முன் மனமுருகி பிரார்த்திக்கும்போது யாரேனும் மணியசைத்து அது நடக்கும் என்று குறியீடாக உணர்த்திவிடுகிற மாதிரி சுற்றிநடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றன. குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே வாழ்வின் நுட்பங்களைக் கற்றுத்தந்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று எப்படி இயங்குகிறது எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது? எப்படி முடிவெடுப்பது? வெளிஉலகத்தில் எப்படி நாம் நம்மை நிலைப்படுத்திக்கொள்வது? என்று உணர்த்தியிருந்தால் அவர்கள் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும். அப்பா அன்பு அப்போது புரியாது, அம்மா தியாகம் தான் அம்மாவாக மாறும்போதுதான் தெரியும். பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கும் அவள் சொல்லும் ஆயிரமாயிரம் கதைகளுக்கும் எதை நாம் ஒப்பீடாகச் சொல்லமுடியும்? தன் தங்கைக்குத் தலைச்சன் பிள்ளை பிறந்திருக்கிறது என்று ஆசையோடு சேனை வைக்க ஓடிவரும் அன்பு வடிவமான தாய்மாமனுக்கு ஈடாக வேறுயாரைச் சொல்ல முடியும்? உறவுகளை மதிக்கக் கற்றுத் தாருங்கள். உறவுகளின் உன்னதத்தைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். பெரியவர்களின் சொற்படி நடப்பது பாதுகாப்பானது என்று சொல்லி வளருங்கள். வெறுப்பில் இல்லை வாழ்வின் வெற்றி, நிறைவின் இருப்பில்தான் உள்ளது என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்வெனப்படுவது வலியோடும் வலிமையோடும் வாழ்ந்து காட்டுவது என்று புரிய வையுங்கள். குடும்பம் முழுமையான வாழ்தலுக்கான அன்பின் பயிற்சிக்கூடம். அதில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம், ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் மகாகவி பாரதி. அன்பைத் தவிர குடும்பத்தில் வேறில்லை.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘ஹெல்மெட்’ அணிவது சாத்தியமா?

‘ஹெல்மெட்’ அணிவது சாத்தியமா? மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்., போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு), தலைவர், வாய்ஸ் ஆப் வாய்ஸ்லஸ் அரை மணி நேரம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருக்கும் நிலையில் ஒரு வக்கீல், பொது நிர்வாகம் படித்த தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒரு குடும்பத்தினர், வாலிபர் ஒருவரை பார்த்து, ‘ஹெல்மெட் போடாம வந்தியே போலீஸ் புடிக்கலையா?’ என்று கேட்டனர். அந்த இளைஞர், ‘சந்து சந்தா புகுந்து போலீசில் மாட்டாமல் தப்பிவந்தேன்’ என்று பெருமையாக சொன்னார். இதை கேட்ட வக்கீல், ‘தப்பு தம்பி’ என்று சொன்னார். அந்த வாலிபர், ‘என் உயிர் போனா போலீசுக்கு என்ன? அவங்க ஏன் விரட்டி விரட்டி பிடிச்சு வழக்கு போடுறாங்க?’ என்று கேட்டார். உடனே வக்கீல், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நீ உயிர்வாழ உரிமை இருக்கிறது. ஆனால் இறந்துபோக உனக்கு உரிமை இல்லை. ஆகவே உன் உயிரைப் பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமையாகிறது’ என்று சொன்னார். அருகில் இருந்த பொதுநிர்வாகம் படித்த நண்பர், ‘ஒவ்வொரு இந்தியனும் இந்நாட்டுக்கு மிகமுக்கியமானவர். ஹெல்மெட் அணியாததால் இன்று இறந்துபோன இளைஞன் நாளை இந்நாட்டின் பிரதமராகக்கூட பொறுப்பேற்கும் சாத்தியம் இருந்திருக்கும். மேலும், அவ்வாறு ஒருவர் இறப்பதனால் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கும் இச்சமூகத்துக்கும் ஏற்படுகிறது. குழந்தைகளின் வளமையான எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம்தானே’ என்றார். ‘ஹெல்மெட் அணிவதை பொதுமக்கள் ஏன் தவிர்க்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது பொதுமக்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் தெரியுமா?’ என்று கேட்டு தொடர்ந்து வக்கீல் பேசினார். ‘மெதுவாகத்தானே செல்கின்றேன். எனக்கு ஹெல்மெட் தேவை இல்லை’ என்பவர் சிலர். தலை வெப்பமடைந்து வியர்வை கொட்டுகிறது, காது கேட்பதில்லை, கடிவாளப் பார்வை மட்டுமே கிடைக்கிறது, முடி உதிர்கிறது, பக்கவாட்டில் வரும் வாகனம் தெரிவதில்லை, ஒப்பனை பாழாகிறது என்பவர் வேறுசிலர். ஹெல்மெட் திருடு போகிறது, அதிகப்படியான சுமையாக தெரிகிறது என்பவரும் உண்டு. போலீசார் எப்போதும் இந்த வழக்கு போடுவதில்லை. எப்போதாவது, அதிகாரிகள் ஆணையிடும்போதும், கணக்கு காட்டவுமே வழக்கு போடுகிறார்கள். அவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதில் இருந்தே அவர்களுடைய ஈடுபாடு வெளிப்படுகிறது. போலீசார் பிடிக்கும்போது குறுக்கு வழியாக சென்று தப்பிவிடலாம். அல்லது கையூட்டு கொடுத்து தப்பிவிடலாம் என்பது போன்ற நம்பிக்கையிலும் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கிறார்கள். ஆனால் ஹெல்மெட் அணியாமல் சென்று மரணம் ஏற்பட்டாலோ, அம்மரணத்துக்குப்பின் குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தாலோ, அல்லது விபத்து ஏற்பட்டு உயிரோடு இருக்க ஏற்படும் மருத்துவச் செலவுகளை நினைத்துப் பார்த்தாலோ ஹெல்மெட்டைத் தவிர்க்கும் பொருட்டு சொல்லப்படும் காரணங்கள் அத்தனையும் மிக சொற்பமானவை. இவ்வாறு வக்கீல் பேசி முடித்தார். உடனே அடுத்த நண்பர், ‘உலகின் பல நாடுகளில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை பொதுமக்கள் 100 சதவீதம் பின்பற்றுகிறார்கள். இலங்கையில் குழந்தைகள் கூட தலையில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்க முடிவதில்லை. அப்படி சென்றால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கிறார்கள்’ என்றார். மேலும் தொடர்ந்த அவர், ‘பிற நாடுகளில் பொதுமக்கள் முழுமையாக சட்டத்தை மதித்து நடந்துகொள்கிறார்கள். ஹெல்மெட் அணியாமல் இருக்க நாம் சொல்லும் அத்தனை காரணங்களையும் அவர்களாலும் சொல்ல இயலும், இருப்பினும் அந்நாடுகளில் அனைவரும் சட்டத்தை பின்பற்றுகிறார்கள். நம் நாட்டில் மட்டும் ஏன் முடியவில்லை? மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே. ஹெல்மெட் நம் உயிருக்கு வேட்டு வைக்கும் பகையாளி அல்ல. கவசமாய் நம் உயிரை காக்கும் உறவாளி’ என்றார். உடனே வக்கீல், ‘ஹெல்மெட் நிச்சயம் பல உயிர்களை காப்பாற்றும். போலீஸ்துறை முழுமனதாக இறங்கி ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். எப்போதும் இப்பணியை செய்ய வேண்டும். இது ஒரு முக்கியமான பணி’ என்றார். அதற்கு பொது நிர்வாகம் படித்த நண்பர், ‘மோட்டார் வாகன சட்டத்தை நாம் முழுமையாக அமல்படுத்தினால், மாநிலத்தில் போலீசாரின் மதிப்பு உயரும். இதற்கென சிறப்பு போலீஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமித்தால், அவர்களைக் கொண்டு இதனைச் செய்யலாம். நிறைய நடமாடும் நீதிமன்றங்களை ஏற்படுத்தினால் அபராதம் வசூலித்து இவ்வழக்குகளை இரண்டு மணி நேரத்தில் முடித்துவிடலாம். சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்கும் அளவுக்கு பொதுமக்களை திருத்திவிட்டால், பொதுவெளியில் அவர்களுடைய சுயநல வெளிப்பாடு மிகவும் குறைந்துவிடும். சமுதாயத்தில் சுயநல வெளிப்பாடு குறைந்தால், மற்ற குற்றங்களும் குறைந்துவிடும். சாலைகளில் பொதுமக்கள் எத்தனை ஒழுங்கோடு நடந்துகொள்கிறார்களோ, அத்தனை தூரம் நம் நாட்டின் மதிப்பு உலக அளவில் கூடும்’ என்றார். உடனே வக்கீல், ‘உண்மைதான். மோட்டார் வாகன சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் நடைமுறையில் உள்ள பல சட்டங்களை அமல்படுத்தும் தேவை ஏற்படாது. பொது மக்களிடத்தில் சகிப்பு தன்மை கூடுவதால் குற்றங்கள் குறையும்தானே’ என்றார். அடுத்த நண்பர், ‘சரியாக சொன்னீர்கள். இதைச் செய்ய நமக்கு தேவை, உறுதியான அரசியல் நிலைப்பாடு. இதனைச் செய்யும்போது அரசியல் எதிர்ப்புகளையும் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டங்களையும் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சட்டப்படிதானே நடக்கிறோம். எனவே அஞ்சத் தேவையில்லை. ஆறு மாதங்களில் அரசின் மரியாதை மிக உயர்ந்து நிற்கும்’ என்றார். அப்போது வக்கீல், ‘இவ்வாறு செய்தால் கையூட்டு தலைவிரித்து ஆடும் என்பது நமக்கு முன்னே உள்ள அடுத்த மிகப்பெரிய சவால். இதற்கென அதிகப்படியான லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி 90 நாட்களில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வழிவகை செய்திட வேண்டும்’ என்றார். இப்போது பொது நிர்வாகி, ‘பொதுவாக, லஞ்சம் பெற்றவர்களையே நாம் தண்டித்துக்கொண்டு இருக்கிறோம். லஞ்சம் கொடுத்தலும், பெறுதலும் குற்றம்தான். லஞ்சம் கொடுப்பவர்களைப் பிடித்தும் தண்டிக்க வேண்டும். அதற்கேற்றவாறு சட்டத்திருத்தங்களையும் வழிமுறைகளையும் மாற்றியமைத்து நடவடிக்கை எடுத்தால், இதனை எளிதில் செய்யலாம். கையூட்டு கொடுப்பவர்கள் நூறு பேரை தண்டித்தால் கையூட்டு கொடுப்பது முற்றிலும் நின்றுவிடும்’ என்றார். உடனே இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர், ‘ரோடெல்லாம் மிக மோசமாக உள்ளது அரசு முதலில் அதை சரிசெய்யவேண்டும். எடை குறைவான ஹெல்மெட் தயாரிக்கவேண்டும். அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வாகனத்திலேயே வசதிகள் இருக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே போனார். அச்சமயத்தில் ரெயில் வந்ததால் இந்த உரையாடல் முற்றுபெற்றது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 24 September 2018

வந்தப்பின் திகைப்பது சிறப்பா?

வந்தப்பின் திகைப்பது சிறப்பா? தி.ஒய்ஸ்லின் சாமுவேல், பொறியியல் கல்லூரி மாணவர் இன்றைய உலகில் நாம் பணத்தையே பெரும் மதிப்பாய் கொண்டு அதை சம்பாதிப்பதிலேயே நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் செலவுசெய்கிறோம். பணத்துக்காக நம்மில் பெரும்பான்மையானோர் முன்பின் தெரியாதவருக்கோ தெரிந்தவருக்கோ அடிபணிந்து கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். வேறுசிலர் தாமாகவே முயன்று சுயதொழில் செய்து உழைக்கிறார்கள். அதிகமாக மதிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கூட ஒரு காலத்தில் மதிப்பீட்டை இழந்துபோனதை நாம் நன்கு அறிவோம். பணம் உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பணம் மனித வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருந்து வருகிறது.ஆனால் அந்த பணத்தை நாடி செல்லும் நாம் அதைவிட மதிப்பு மிக்க இயற்கையை அழிக்கலாகுமா? இன்றைய காலக்கட்டத்தில் பல இடங்களில் நாம் வளர்ச்சி என்னும் பெயரில் இயற்கையை அழித்து வருகின்றோம். பணத்தை செலவு செய்து இயற்கையை காப்பாற்றுவதை நாம் அறிந்து இருக்கலாம். ஆனால் அத்தகைய பணத்தையே நஷ்ட ஈடாக கொடுத்து இயற்கையின் அருட்கொடையான மரங்களையும் மலைகளையும் காவு கொடுக்கும் காலம் வந்துவிட்டது. நஷ்ட ஈடு கொடுத்து இயற்கையை அழித்தாலும், நஷ்டம் இந்த உலகில் வாழும் அனைவருக்கும் தான். நெல்லை-தென்காசி வழித்தடத்தில் நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்பட்டு கொண்டிருக்கும் மரங்களும், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்காக வெட்டப்பட இருக்கின்ற மரங்களுமே இதற்கு சான்று. இன்று நாம் வெட்டி வீழ்த்திவிட்டோம் என்று மகிழ்கின்ற மரத்தினால் பெறப்படும் பயனும், சுத்தமான காற்றும் கிடைக்காமல் போகும் போது நாம் அனைவரும் வெட்கி நாணுவோம். இன்றைய எந்திர உலகில் நிழலுக்கு கூட நிற்பதற்கு இடம் கிடையாது. இந்த உலகம் இன்னும் நம்மை விரைவாய் இயக்க முற்படுகிறதோ என்னவோ தெரியவில்லை? இயற்கையை அழிப்பது நமக்கே ஆபத்து என்பதை நாம் சிறிதும் உணராமல் வாழ்கிறோம் என்பது வேதனைக்குரிய ஒன்று. இயற்கை தந்த மரங்களை அழித்து, இப்புவியை வெப்பம் ஆக்குவதால் காலமாற்றம் உண்டாகும் என்பதை நாம் அறிந்ததில்லையோ! எப்படியென்றால் மரத்தை அழிப்பதினால் பூமி வெப்பம் அடையும். பூமி வெப்பம் அடைவதினால் சீரற்ற அளவில் மழை பெய்யும். அதாவது ஒரு சில இடங்களில் தேவைக்கு அதிகமாகவும் மற்றும் ஒரு சில இடங்களில் தேவைக்கு குறைவாகவும், வேறு சில இடங்களில் மழையே பெய்யாமலும் போகும். இது மனித இனத்துக்கு மட்டுமல்ல உயிருள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் ஆபத்தாக அமையும்.வளர்ச்சிக்காக மரங்களை வெட்டும் நாம், சுவாசிப்பதற்காக மரங்களை நடவும் வேண்டும். நம்முடைய வளர்ச்சி திட்ட பணிகளுக்காக கூடுமானபட்சம் மரங்களை வெட்டாமல் இருப்பது நல்லது. உலகில் நாம் அனைவரும் சுயநலவாதிகள் தான். அரசியல் தொடங்கி ஆன்மிகம் வரை பெரும்பான்மை மனிதர்கள் சுயநலம் பேணுபவர்கள் தான். சுயநலமாக வாழும் நாம் மரங்களை வளர்ப்பது பேணுவது போன்ற செயல்களை பொதுநலம் என்றே கருதுகிறோம். ஆனால் அது தவறு. மரங்களை காத்தலும் சுயநலத்தை பேணுவதும் ஒன்று தான். நாம் உதவி செய்ய இயலவில்லை என்றாலும் நம்முடைய சுயநலத்திற்காக பொதுநலத்தோடு மரங்களை காக்க உதவுகின்ற அனைவருக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். இந்த மண்ணின் வளத்தை அழித்து இந்த நாட்டின் செல்வத்தை சிதைப்பதினால் என்ன பயன்? நமக்கு நாமே மிகவும் பொறுமையாக கல்லறைகளை உருவாக்கிகொள்கிறோம். விதைப்பதற்கு செழிப்பான மண் இல்லாமல் விதைகள் மட்டும் முளைக்கட்டி என்ன பயன்? அண்மையில் காவிரியின் குறுக்கே உள்ள கொள்ளிடத்தின் மதகு உடைந்து தண்ணீர் வீணானது. காவிரியில் இருந்து தண்ணீர் வருவதே சிரமமாய் இருந்த போதிலும், வந்த தண்ணீரையும் சிறப்பாய் சேமித்து பயன்படுத்த முடியவில்லையே என்பது தான் என்னை போன்ற சாமானியனின் வருத்தம். காவிரியில் தண்ணீரை வரச்செய்து வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை செய்த தமிழக அரசு, நீர் வரும் முன்னே மதகுகளை சரிசெய்து இந்த சோதனையை தடுத்து இருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால், அதுவே மெச்சத்தகு சாதனையாக இருந்திருக்கும் அல்லவா! இது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து அன்று. இது நாம் நீர்நிலைகளை கவனிக்காமல் சென்றதால் நிகழ்ந்த ஒரு வேதனை. நாம் நீர் நிலைகளுக்கு சேதம் வராமல் முன் அறிந்து காத்து பேணுதல் நன்று. தவறுகள் நடப்பது இயல்பு தான். அதே சமயம் நம்மால் பல தவறை தடுக்கவும் முடியும். எனவே வரும்முன்பே ஆராய்ந்து முயற்சியினை எடுத்திருந்தால் பெரும் அளவில் நீர் வீணாகாமல் நம்மால் தடுத்து இருக்க முடியும். பணத்தின் அவசியத்தை உணர்ந்த நாம், அதைவிட அத்தியாவசியமான இயற்கையின் தேவையை உணர்ந்தவர்களாய் இருத்தல் வேண்டும். இயற்கையை காத்து வாழ வேண்டும். வரும் முன் காப்பது சிறந்ததா? அல்லது வந்த பின் திகைப்பது சிறந்ததா? ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது நம் கடமை.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உடுமலை தந்த கவிமலை

உடுமலை தந்த கவிமலை உடுமலை நாராயணகவி கவிஞர் பிரியன் நாளை (செப்டம்பர் 25-ந்தேதி) உடுமலை நாராயணகவி பிறந்த நாள். வாழும் வாழ்வு கடந்து வரலாற்றில் பெயர் பதிக்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை யாவருக்கும். அதைச் சாத்தியப்படுத்திய சாதனையாளர் வாழ்வைப் பேசினால் பேர் நமக்கும். தன்னலத்தால் தனக்காய் மட்டும் வாழாது, தன்னெழுத்தால் தரணி போற்ற வாழ்ந்தவர் கவிஞர், பாடலாசிரியர், பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி ஆவார். 1916-ம் ஆண்டு ‘கீசகவதம்’ எனும் மவுனப் படத்தில் தமிழ்த்திரை துவங்கியது. 1931-ம் ஆண்டு மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் முதல்முறையாக பேசும் படம் வெளியானது. புராணக்கதைகளும் மாயாஜாலக் கதைகளுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. கலப்புத் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே காற்றில் கலந்திருந்த சமயம் அது. அக்குறைகளை தீர்க்க, கொங்கு நாட்டின் உடுமலைப்பேட்டை பூவிளைவாடிச் சிற்றூரில் 1899-ம் ஆண்டில் பிறந்து வளர்ந்து புறப்பட்ட புயல்தான் நாராயணகவி. தனது நற்றமிழ் வார்த்தைகளாலும், மாபெரும் சிந்தனைகளாலும் தமிழ்த்திரைப்பாடல் உலகை புரட்டிப்போட்டவர். வறுமையால் பள்ளிப் படிப்பைக்கூட அவரால் தாண்ட முடியவில்லை. ஆனால் அவர்தான் பாமர மக்களை விழித்தெழச் செய்த பக்குவக் கொள்கைகள் பேசினார். தீப்பெட்டி சுமந்து சென்று விற்று வாழவேண்டிய நிலை. ஆனால் அவர்தான் ஞானத்தீயெனப் பாட்டியற்றித் திசையெங்கும் தீபங்கள் ஏற்றினார். ஊரில் ராம நாடகத்தில் இலக்குவண வேடமிட்டு வில்லேந்தினார். அவர் கரங்கள்தான் கூர் அம்பெனச் சீறி அறியாமைத் தடைகளை அறுத்தெறிந்தன. தேசிய எழுச்சியோடு கதராடைக்கடை தொடங்கி ஊர் ஊராகக் கதர்பாட்டுப் பாடி நடந்தார். அவர் கால்கள்தான் பாட்டாளிகளுக்குப் பாட்டுச் சொல்லப் பாங்கோடு முன்வந்தன. சுதந்திரக்கனல் கொண்டு தேச உணர்வுப்பாடல்கள் எழுதி மேடைகள்தோறும் முழங்கினார். அக்குரல்தான் சாமானியனின் குரலாகத் திரையிலும் கர்ஜித்தது. குடும்பச்சூழல் காரணமாக கடனாளி ஆனார். வாங்கிய கடனைத் திருப்பித்தராது ஊர் மண்ணை மிதிப்பதில்லை என்று உறுதியேற்றார். பொருளட்டினார். சொன்னபடி ஊருக்கு வெளியில் நின்று கொடுத்தோர் கடன் தீர்த்த பிறகே ஊருக்குள் நுழைந்தார். அந்த நேர்மை இதயம்தான் இசைத்தமிழை வைர வரிகளாக மக்களுக்கு வாரித்தந்தன. ஆரிய கானசபா எனும் நாடக நிறுவனத்தை நடத்திய முத்துக்குமாரசாமி கவிராயரிடமும், மதுரை சங்கரதாஸ் சுவாமிகளிடமும் கவிநுட்பங்களை கற்றார். அதைத் தன் பல்லாயிரக் கணக்கான பாட்டில் வைத்தத் தனிப்பல் கலைக்கழகம் அவர். பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கலைவாணர், கலைஞர் ஆகியோரிடம் பெரும் நட்பு கொண்டிருந்தார். அத்தொடர்பால் திராவிட இயக்கப் பற்றையும், பகுத்தறிவுப் பார்வையையும் பட்டை தீட்டி வந்து பாருக்குரைத்த பகலவனாக திகழ்ந்தார். பேருக்கு வாழ்ந்து மடியும் மண்ணில் பாருக்குப் பேர் தந்து நிலைத்த உடுமலையாரால்தான் முதன்முதலாக தமிழ்த்திரைக்கு நல்தமிழ் பாடல்கள் வாய்த்தன. சாதி, மத, மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்த சமூகத்தையும், திரைக்களத்தையும், தன் பகுத்தறிவு வரிகள் வழி முதன்முதலாக நல்திசைக்குத் திருப்பியது கவிராயரின் பாடல்களே. காக்கைக்குருவி எங்கள் சாதியெனப் பாடிய மகாகவி பாரதியின் நட்பினால் உணர்வேந்தி, ‘ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க’ எனக் காக்கைகளையும் பாடலாக்கிய பாங்கு அவருக்கே உரித் தானது. ‘சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க. சொல்லிச் சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க. குடிக்கத் தண்ணீரில்லாது பெரும் கூட்டம் தவியாத் தவிக்குது. சிறு கும்பல் மட்டும் ஆரஞ்சுப்பழ ஜூசு குடிக்குது’ எனச் சாடியது உடுமலையாரின் சமூக அறம். ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே. மங்காத தங்கமிது, மாறாத வைரமிது, விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்’ எனக் குழைந்த அவரின் வரிகளில் காதல் கொப்பளித்தது. ‘ஒண்ணுலேயிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம். இருபத்தொண்ணுலேயிருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்’ எனப் பாடி வாழ்வியல் உண்மையை போட்டு உடைத்தார். ‘காசிக்குப்போனா கருவுண்டாகுமென்ற காலம் மாறிப்போச்சு. இப்ப ஊசியைப் போட்டா உண்டாகும் என்ற உண்மை தெரிஞ்சு போச்சு’ எனச் செதுக்கிய பகுத்தறிவு அவர். ‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்! நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்’ என எம்.ஜி.ஆர். வழியாகச் சொன்ன வரிகளில் சமூகப் பொறுப்பு மிளிர்ந்தது. ‘சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு! வேறு ஜீவராசிகள் செய்யமுடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு’ எனவும், ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ எனவும் மொழிந்த அறிவியல் அவர். இப்படி, தான் வாழும் சமூகம் விழிப்புறத் தன் பேனா முனை உளியால் காகிதக்கல்லைச் செதுக்கி கலைச்சிலை வடித்தச் கவிச்சிற்பி உடுமலையார், பாமரம் உணர்வெழப் பாடிய பா மரம். எளிமையும் இலக்கியச் செழுமையும் ஒருங்கே வாய்த்த அவர் 1981-ல் மறைந்தார். போனாலும் காலச்சுழலின் கையில் சிக்காது அக்காலத்தின் கைபிடித்து காலமுள்ளவரை காலம் பேசும் பாடல்கள் வழி வாழ்ந்து வரும் காலம் அவர். ‘தன்மானமும், நேர்மையும், தன்னம்பிக்கையும், உழைப்பும் தோற்காது என்றும்’ எனும் பேருண்மையை உணர்த்திய உடுமலையார் ஒரு சாதனையாளர். எளிய, வறிய குடும்பத்தில் இருந்து வந்து பேருயரம் தொட்டுக் காட்டிய உடுமலையார் ஒரு சரித்திரம். எழுத்தால் சமூகத்தை ஏற்றம் பெறச்செய்ய இயலும், தக்க மாற்றம் செய்ய இயலுமெனும் சத்தியத்தை சாதித்துக் காட்டிய உடுமலையார் ஒரு சகாப்தம். முப்பதாண்டு காலம் தன் தனித்துவத் தங்கப்பாடல்களால் தமிழ்த்திரைக்கு அணி செய்து, உடுமலையில் மணிமண்டபம்; மார்பளவுச் சிலை; நினைவு அஞ்சல்தலை என நிலைத்திருக்கிறார் மூத்தப்பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. தமிழ் உள்ளவரை நிலைக்கும் புகழைத் தாங்கிய அவரது பாடல்கள், நாளும் சொல்லும் அவரைப் பற்றி. உடுமலை தந்த கவிமலை என்றும் மக்கள் மனதில் வாழ்வார். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 23 September 2018

மாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத வாய்ப்பு ஏற்பட்டு தானொரு இளமையிலேயே நல்ல அறிவியல் புதுமை படைக்கும், திறன் படைத்த மாணவன் என வெளி உலகுக்கு பறைசாற்றி தங்களுடைய படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.அவர்கள் படிப்பில் சாதிப்பார்கள்.புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்த நாட்டுக்காக அர்ப்பணித்து இந்த நாட்டை விட்டு செல்ல மாட்டார்கள்.இந்த நாட்டு நலம் விரும்பியாக இருப்பார்கள். மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் தேர்வும் இதேபோல பள்ளி மாணவர்களையும் மூன்று பிரிவுகளாக பிரித்து தேர்வு நடத்தி அவர்களுக்கு அறிவியல் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்கிறது. மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் என்ற நிறுவனமும் 2 வகை வழிகளில் தேர்வுகள் நடத்தி இந்திய அளவில் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சி கூடங்களுக்கு மற்றும் உலக அளவில் ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச் செல்கிறது.அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறது.இவ்வாறு செய்வதால் மருத்துவ படிப்பிற்கு நடத்தும் நுழைவுத் தேர்வுகளையும் இன்னும் எதிர்காலத்தில் வரக்கூடிய நுழைவுத் தேர்வுகளையும் மாணவர்கள் எளிதில் அணுகலாம்.அனைத்துப் பாடங்களையும் முக்கியமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது பள்ளிக்கல்வித்துறை சிரத்தையாக எடுத்து தயாரித்த அனைத்து வகுப்பு பாடங்களையும் ஒவ்வொரு எழுத்தும் கூட விடாமல் நுகர்ந்து படிக்கும்போது,விரும்பி படிக்கும் போது அனைத்து அறிவுகளும்,அடிப்படைக் கல்வியும் மிகத் திறம்பட அவர்கள் மனதில் பதிந்து அவர்கள் திறன் பெற்று மிளிர்வார்கள் மற்றும் ஒளிவார்கள்.மற்றும் அவர்கள் பல கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட பாடப் புத்தகத்தின் ஒவ்வொரு வகுப்பையும் உணர்ந்து தனது மனதில் நிறுத்துவார்கள்.எவன் ஒருவனுக்கு அனைத்து வகுப்புக்கான பாடப்புத்தகத்தின் பாடத்தின் புரிதல் திறன்பட இருக்கிறதோ அவன் தான் மேற் வகுப்புகளில் அறிவியல் சாதனை படைப்பான்.அதைவிடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு பெயரளவில்தான் நடத்துவோம் என்று அறிவிப்பு விடுகிறது அரசு இது சோம்பேறித்தனத்தை தான் காட்டுகிறது.இது மாணவர்களை சோம்பேறித்தனத்துக்கு உண்டாக்கி நீட் போன்ற பயிற்சி மையங்களை உருவாக்கி அதாவது தனியார் மையங்களுக்கு சாதகமாகத்தான் இந்த பதினொன்றாம் வகுப்பில் சாராம்சத்தை அதாவது 11ஆம் வகுப்பு தேர்வின் மற்றும் 11ம் வகுப்புப் பாடத்தின் முக்கியத்துவத்தை குறைப்பது ஆகும். இப்போக்கு மீண்டும் மீண்டும் கல்வி கேவல நிலைக்கு செல்வது ஆகும்.பதினொன்றாம் வகுப்பில் உள்ள பாடங்கள் எதிர்வரும் நீட் தேர்வு எழுதி ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தாலும் முதலாம் ஆண்டில் 11-ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள பகுதி பாடங்களை தான் அவன் படிப்பான்.அது எந்த ஒரு படிப்பாக இருக்கட்டும் இன்னும் எதிர்காலத்தில் இளங்கலை கலைப்பிரிவிற்கும்,இளங்கலை அறிவியல் பிரிவிற்கும் நிச்சயம் போட்டித் தேர்வான நுழைவுத் தேர்வு நடத்தி தான் சேர்க்கை முறை நடைபெறும்.அவ்வாறு தான் நடைபெற வேண்டும்.மெல்லக் கற்கும் மாணவன் என்பதற்கு மாணவன் காரணமல்ல அங்குள்ள சோம்பேறி ஆசிரியர்கள் தான் காரணம். நான் மெல்ல கற்கும் மாணவன் தான் நான் முன்னுக்கு வரவில்லையா? என்னால் எவருடனும் போட்டி போடும் உள்ளது.இந்த தகுதியை எனக்கு உருவாக்கிக் கொடுத்தது 9 10 11 12 ஆம் வகுப்பு பாடங்கள் தான்.இந்த நான்கு வகுப்பு பாடங்கள் அது சார்ந்த மாநில அளவிலான திறன் தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான பொதுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு வகையான திறனாய்வுத் தேர்வுகள் எழுத எனக்கு உதவி புரிந்தது இந்த வகுப்பு படங்கள்தான். அனைவருக்கும் அத்தேர்வு உதவி புரியும்.இங்கே ஒன்பதாம் வகுப்பிற்கும் பத்தாம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் பதினொன்றாம் வகுப்பிற்கும் பன்னிரண்டாம் வகுப்பு இருக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.அதை விடுத்து அறிவியல் புதிது புனையும் நோக்கில் மற்றும் தொலை நோக்குப் பார்வையில் தொலைநோக்கு ஆழ்ந்த சிந்தனையில் பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் நடைபெற்றது அதை கேள்விக்குள்ளாக்கும் நிலையில் முட்டாள்தனமான முடிவை நடப்பு பள்ளிக்கல்வித்துறை தற்போது சோடை போன பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது.இது அவமானத்திற்கு உரியது. மாற்றம் அமைக்கிறோம் என்று அமைத்து தன்னுடைய முடிவில் அரசு பின் வாங்கும் போது அது கேவல நிலையாக மாறி வருகிறது.நாம் உலகப் போட்டியாளர்கள் பார்வையில் பார்த்து உலக போட்டி போடும் அளவுக்கு அனைவரையும் உருவாக்க வேண்டும்.அதை விடுத்து இந்த சாராம்சம் அனைத்தும் தனியார் பள்ளிகள் அதாவது தற்போது இந்த ஒரு வார காலத்துக்குள் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் தனியார் முகமைகள் கொடுத்த வற்புறுத்துதலால் போடப்பட்ட அரசாணைகள் ஆகும். "மேமிகு அறிவியல் சிந்தனை கொண்ட உயர்நீதிமன்ற மேமிகு நீதி அரசர்கள் அவர்களே தயவுசெய்து உங்கள் கண்களை திருப்புங்கள் இந்த நாடு,நம் தமிழ் நாடு இந்தப் பண்பாடு நாடு இன்னும் பள்ளத்தில் போகத்தான் துடிக்கிறது.எவ்வளவோ ஆழ்ந்த முயற்சி எடுத்து உண்மையிலேயே சொல்லுங்கள் உங்கள் உணர்ச்சிகளை உணர்வுகளை தூண்டி தனிமையில் தனிமனிதனாக தனக்காக சிந்திப்பது போல் சிந்தித்து சொல்லுங்கள் உண்மையைச் சொல்லுங்கள் இப்பொழுதாவது சொல்லுங்கள் நான் வேண்டுகிறேன் உங்களின் எந்த உணர்வுகளை தொட்டு நான் வேண்டினால் நீங்கள் மனசு வைப்பீர்கள் அதைச் சொல்லுங்கள் நான் வேண்டுகிறேன்" உதயச்சந்திரன் இந்த யுகத்தின் அறிவுலக உண்மை வாதி,உணர்வு வாதி,பொதுநல சிந்தனையாளர்,கல்வியில் சீர்திருத்த உலக வல்லுநர் ஓய்வில்லாமல் உழைத்த தூக்கம் கூட இல்லாமல் உழைத்த உன்னதர். அவரை தூக்கி எங்கெங்கோ மாற்றுகிறார்கள் அவர்கள் உருவாக்கிக் கொடுத்த பாடத்தை நாம் படிக்க வேண்டும்.ஒரு கட்டத்தில் உங்களின் ஆழக்கவனிப்பு தீர்ப்புகளை கூட வருங்கால சோம்பேறி வழக்குரைஞர்கள் ஆய்வுக்குட்படுத்தாமல் தற்காலிக தன் நிலைக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கலாம்.இந்த நிலையில் தான் இன்றைய அனைத்துத் துறைகளும் உள்ளது. ஏற்கனவே நாம் பழமையை மறந்து விட்டு பாதி வாழ்நாள் வருடங்களை தொலைத்து விட்டோம் நம் வாழ்நாள் குறைந்து விட்டது. பெரியாரையும் அண்ணாவையும் அம்பேத்காரையும் நேருவையும் ஸ்டாலினையும் இன்னும் பல்லுலக பல்வேறு வகை துறை சார்ந்த வல்லுநர்களின் புத்தகங்களையும் அவர்களின் எழுத்துக்களையும் நாம் படிக்க தவறிவிட்டோம்.தற்பொழுது புத்தகங்கள் வாங்கும் போக்கு கூடியுள்ளது.ஆனால் ஆழக்கவனித்து ஊன்றி வாசிக்கும்போக்கு நிச்சயம் பின்தங்கி தான் உள்ளது. ஒவ்வொரு பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிற்கும் நூலகம் வேண்டும். அந்த வகுப்பில் இயற்பியல் பாடம் என்றால் நடப்பு பாடத்தை கற்றுக் கொடுக்கும் அதாவது நடப்பில் நடந்து கொண்டிருக்கும் உலக இயற்பியல் போக்குகளை அறிந்து கொள்ளும் மாத,வார பத்திரிக்கைகள் வேண்டும்.அந்த அளவுக்கு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் அதை விடுத்து மீண்டும் மீண்டும் மனப்பாடக் கல்வியை உட்படுத்தி மாணவர்களை சோம்பேறியாக இந்த அரசு முன்னெடுத்து வருகிறது என்பதை எந்நேரமும் இந்நேரமும் மறுக்க முடியாது. தயவுசெய்து அருள்கூர்ந்து சொல்லுகிறேன் பதினொன்றாம் வகுப்பு பாடம் இல்லாமல் ஒன்றுமே இல்லை.மூலமே இல்லாமல் ஒரு முறை எப்படி உருவாகும்.ஒன்பதாம் வகுப்பு இல்லாமல் பத்தாம் வகுப்பு இல்லை பதினொன்றாம் வகுப்பு இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு இல்லை எனவே பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மற்றும் அறிவியல் மாற்றங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் நடப்பு அறிவியல் முறைகளை அறிந்து கொள்ள இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் நீங்கள் பாருங்கள் தமிழக பாடத்திட்டத்தையும் மத்திய அரசு பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ஒருகட்டத்தில் சென்ற ஆண்டு மத்திய மனித வளத்துறை அமைச்சர் தற்போதுள்ள பாடம் இளங்கலை பிரிவினர் படிக்கும் பாடங்கள் போல் கடினமாக உள்ளது அதை நாங்கள் குறைக்க இருக்கிறோம் என்று சொன்னார்.தற்போது அது கிடப்பில் போடப்பட்டு விட்டது.காரணம் நம் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடம் உலக அளவில் பல்வேறு நாடுகள் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் அதனைப் பதிவிறக்கம் செய்து முக்கியமாக ஜப்பான் நாட்டினரும் மலேசியா நாட்டினரும் சிங்கப்பூர் நாட்டினரும் பதிவிறக்கம் செய்து படித்து வந்தனர் மற்றும் படித்துக் கொண்டு வருகின்றனர்.ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு இந்த 4 வகுப்புகளுக்கே இவ்வளவு ஆரவார கரகோஷம் வரவேற்பு என்றால் இன்னும் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு இவை அனைத்தும் நமது கைகளில் தவழ்ந்தால் மற்றும் விரைவில் தவழ இருக்கின்றது நம் பிள்ளைகளின் எவ்வளவு மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். தொடர்ந்து வேறு ஒன்றும் வேண்டாம் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாவட்ட அளவில் நடக்கும் வினாத்தாள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும் திறம்.மற்றும் அனைத்து வகை பொதுத்தேர்வு ஆணையங்களையும் மற்றும் அவர்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளையும் நம் பொதுத்தேர்வு மாநில அளவில் நடத்தப்படும் முழு ஆண்டுத் தேர்வில் வினாத்தாள்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும் மற்றும் பல்வேறு வகையான நாம் நடத்தும் நம் தேர்வுகள் துறை நடத்தும் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தும் திறனாய்வுத்தேர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் திறனாய்வுத்தேர்வுகளில் இருந்தும் மற்றும் நம் மாநில பொதுத்தேர்வு வினாத்தாள்களில் இருந்தும் கேட்கப்படும் வினாக்கள் அதிகப்படியாக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாநில தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளிலும் வெளிவருவது ஆச்சரியமாக இருந்தது,. ஆச்சரியமாக இருக்கிறது.அந்த அளவுக்கு நாம் திறனாய்வுத் தேர்விலும் மற்றும் போட்டித் தேர்வு வினாத்தாள்கள் தயார் செய்வதிலும் திறன் பெற்றுள்ளோம்.நான் உறுதியிட்டுச் சொல்கிறேன் 11ஆம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு நீர்த்துப்போகச் செய்தால் நிச்சயமாக நீட் தேர்வு தவிர இந்திய தொழில்நுட்ப கழகம் நடத்தும் தேர்வுகளில் நம் தமிழ் மாணவர்கள் இறந்து போவார்கள். அந்த அளவுக்கு மோசமாக கல்வி போய்விடும் தற்போது பல ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வீணடிக்கப்பட்டு விடும் இந்த புத்தகங்கள் கொண்டுவந்ததே தற்காலத்திற்கு ஏற்றார்போல் உருவாக்குவதற்கும் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை உருவாக்குவது மற்றும் எதிர்கொள்வது என்ற நோக்கத்திற்க்கே.எதிர்காலத்தில் அனைவரும் அனைத்து திறமைகளையும் பெற்று இருக்க வேண்டும் மற்றும் நாட்டுக்கு தேவையான குறிப்பாக நம் நாட்டுக்கு தேவையான மற்றும் உலகுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை அறிவை கூர்தீட்டி தினந்தோறும்,கூர்தீட்டி தினந்தோறும் அறிவை விரிவு செய்து அதிகமான அறிவுப் பசியை உண்டாக்கி வாழ்வில் வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த புத்தகம் பொதுத்தேர்வு இல்லாத காரணத்தாலும் குப்பையில் வீசப்படும் வினாத்தாள்கள் அதாவது மாவட்ட அளவில் மற்றும் பெயரளவில் நடத்தப்படும் தேர்வுகளால் நம் தமிழ் மாணவர்கள் வீணாய் போவார்கள்.நிச்சயம் நான் சொல்கிறேன் மீண்டும் சொல்கிறேன் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வேண்டும்.ஒரு பக்கம் மேல்நிலைக்கல்வி ஆசிரியர்கள் நாங்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று திணறுகிறார்கள் முதலில் அவர்கள் தங்கள் பாடத்தை ஒழுங்காக புரிந்து வைத்து பாடம் நடத்த அனைவரும் தகுதி பெற்றுள்ளனரா? உயிர் போகும் அளவுக்கு உழைத்து அறிவை விரிவு செய்ய வேண்டும் அந்த அளவுக்கு ஆசிரியர் இருக்கவேண்டும்.ஆனால் சென்ற வாரம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஒரு போராட்டம் நடத்தினார்கள் இன்றும் நடத்தி வருகிறார்கள் இது மாநில அளவில் நீளப் போகிறது என்றும் சொளக்கிறார்கள்.வேறு ஒன்றும் வேண்டாம் சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் அதிகமாக இருந்து நீட் தேர்வுக்கு ஒவ்வொரு ஆசிரியரும் பயிற்சி அளித்தார்கள் என்றால் நாம் தனியார் நிறுவனத்திற்கு(கொள்ளைக்கார மோசடி லாப நோக்கோடு செயல்படும்) அதிகமாக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை.அரசிடம் தனியார் நிறுவனங்கள் அதாவது முக்கியத் துறை சார்ந்த அமைச்சர்களோ அல்லது அவர்களின் பினாமிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களால் அரசுக்கு கொல்லைப்புறம் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் சாதித்து விடுகிறார்கள்.இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.இன்றும் நாமக்கல் மற்றும் பல்வேறு வகையான ஊர்களில் 1000,2000 மாணவர்களை நீட் பயிற்சி என்ற பெயரில் நாமக்கல்லில் ஊசி மருந்து ஏற்றிய கோழிகளை வளர்ப்பது போல் நம் மாணவர்களை வளர்த்து வருகிறார்கள்.எதிர்காலம் என்ன என்றே அறியாத ஒன்றுமே அறியாமல் மாநில அரசின் நடுநிலைப்பள்ளியில் அரசு ஆசிரியரின் அரவணைப்போடு உண்மையான பாடம் கற்று வருகிறான் ஒரு மாணவன் அங்கு தான்,அவன் தான் அந்த மாணவன்தான் வெற்றி பெறுவான்.தொடர்ந்து சொல்வேன் தலையில் குட்டி சொல்வேன் நாம் நம் தலையில் கொட்டாவிட்டால் வேறொரு நாட்டுக்காரன் பெட்ரோல் டீசல் என்ற பெயரில் நம்மளை தினந்தோறும் நம் பொருளாதாரத்தை தினந்தோறும் சுரண்டிக் கொண்டே இருப்பான் நிச்சயம் மீண்டும் மீண்டும் தொடரும் தொடர்ந்து எழுதுவேன்…………. | Southern Part of Proud Dravidian

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி?

விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி? கல்வி...! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. கல்வி என்ற அளவுகோலே ஒருவரின் அறிவு, ஆற்றலை நிர்ணயிக்கிறது. அந்த அறிவு, ஆற்றலே வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகிறது. காரணம், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே வேலை, அதை வைத்தே ஊதிய அளவும் மாறுபடுகிறது. இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது. ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கல்லூரியிலும், அதன் பின்பு பணிதளத்திலும் ஜொலிக்க முடியும் என்ற நிலையில், பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை வசதியாக பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகை வசூல் செய்து கல்வித்துறையில் கல்லாக்கட்டத் தொடங்கிவிட்டன. இன்னொருபுறம், தாய் மொழியிலான தமிழ் வழிக்கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் விருப்பம் ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இருப்பதால், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் முளைக்கின்றன. தமிழ் வழியிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் ஆங்கில கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புவதற்கான காரணங்களை புறந்தள்ளிவிடவும் முடியாது. இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. அதாவது, 12-ம் வகுப்புக்கு பிறகு, உயர்கல்வி படிக்க மாணவர்கள் கல்லூரிகளை நாடும்போது, அனைத்து வகை பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகளிலும் பெரும்பாலும் ஆங்கிலமே மேலோங்கி நிற்கிறது. உயர் கல்வியில் தமிழ் மங்கிப்போய் விடுவதால், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க கஷ்டப்படுகிறார்கள். இதை உணர்ந்த பெற்றோர், என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, கடன் வாங்கியாவது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்க துணிகிறார்கள். இதுதான் தனியார் பள்ளிகளின் எழுச்சிக்கும், அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும். இது தொடர்பாக, தமிழக பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் குழு ஒன்று, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது நமக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 820 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை அவர்களே சொல்லிக் கொடுப்பதாகவும் அந்த குழுவின் அறிக்கை தகவல் தருகிறது. ஆரம்ப பள்ளிகளை எடுத்துக்கொண்டால், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு ஆசிரியரே பள்ளி முழுவதையும் கவனித்துக்கொள்ளும் நிலை வந்ததற்கான காரணம், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது தான். தமிழக அரசும் இதே காரணத்தை சொல்லி, இன்றைக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த தயாராகிவிட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1,053 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டதால், 1,950 பள்ளிகளின் கதவுகளை அடைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீட்டுக்கட்டு போல ஆண்டுதோறும் சரிந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதாவது, இங்கு சேர வேண்டிய மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களும், பெற்றோரும் விரும்பும் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குவதற்கு அரசு தயங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம், தமிழகத்தில் கல்வியும் அரசியல் என்ற மாய வலைக்குள் சிக்கிக் கிடக்கிறதே! ஒருவேளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கினால், இங்குள்ள எதிர் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். ‘தமிழ் மடிந்துபோகுமே...!’ என்றெல்லாம் அவர்கள் கவலை தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள். தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க களம் அமைத்துக்கொள்வார்கள். அதை தடுத்து நிறுத்தும் செயலிலும் அவர்கள் குதித்துவிடுவார்கள். ஆனால், அவர்களின் பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தார்களா?, படிக்கிறார்களா? அல்லது படிப்பார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, முதலில் அரசியல் வலையில் சிறைபட்டு கிடக்கும் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். தாய் மொழி கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் பிரதானம் என்றாலும், உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆங்கில வழிக்கல்வி படிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்றில்லை. தமிழை பாதுகாத்து ஆங்கில அறிவையும் ஊட்ட அரசு முன்வர வேண்டும். தமிழக அரசுக்கு ஆங்கிலத்தின் அவசியம் தெரிந்தாலும், தமிழை காப்பதாக நினைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பெற்றோருக்குத்தான் பிள்ளைகளின் கல்வி பாரமாகிக் கொண்டிருக்கிறது. ‘நாம் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தது வரை செலவான தொகையை, இன்றைக்கு நம் பிள்ளைக்கு எல்.கே.ஜி.யிலேயே செலவழிக்க வேண்டியது இருக்கிறது’ என்று அவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்கவும் பணத்திற்கு என்ன செய்வது? என விடை தெரியாமல் தினமும் திகைக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்தபோது, தனியார் வங்கிகள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த வங்கிகள் எல்லாம் இன்றைக்கு மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுபோல், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, ஆங்கில வழியில் கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். அதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். அதே நேரத்தில், தாய் மொழியான தமிழ் மொழியை காட்டாய பாடமாக்கி, பாகுபாடின்றி அனைவரும் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், நம் இனத்தின் அடையாளம். ஆங்கிலம், நிகழ் காலத்தின் கட்டாயம். எனவே, தாய்த்தமிழை காத்து, ஆங்கிலத்தையும் கற்பிக்க அரசு முன்வர வேண்டும். -ஆர்.கே.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts