Thursday, 27 September 2018

பணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா?

பணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா? அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களின் மனோபாவத்தில் போலித்தனமான வாழ்க்கைப் புரையோடிவிட்டது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், எப்படியோ கஷ்டப்பட்டு பொறியாளர் பட்டத்தைப் பெற்று தற்போது சென்னையில், பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். சூழல் காரணமாக அவனோடு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவன் அன்றாடம் பயன்படுத்தும் படுக்கை அறையைப் பார்த்தேன். திடுக்கிட்டேன். காரணம், படுக்கை முழுவதும் அலைபேசிக்குத் தேவையான மின்ஊக்கி (சார்ஜர்), பாடல்களைக் காதில் வைத்துக் கேட்கும் கருவிக்குத் தேவையான மின்சாரக் கம்பிகள் (வயர்கள்) தொங்கிக் கொண்டிருந்தன. ஏதோ தீவிர நோய் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் படுக்கையைப் போன்றே காட்சியளித்தது. சார்ஜர், பேட்டரிகளில் இருந்து வெளியாகும் செல்களால், கதிர் வீச்சுகளால் எத்தனையோ விபரீதங்கள். உடல் நலத் தீமைகள். இது குறித்தெல்லாம் அவன் யோசித்ததாகவே தெரியவில்லை. பழையது, புதியதென்று தேவைக்கதிகமாவே தொங்கிக் கொண்டிருந்தன. அடுத்ததாக, அவன் பயன்படுத்தும் குளியலறையைப் பார்த்தேன். வகைவகையான அழகுச் சாதனப் பொருட்கள். குளிப்பதற்கு முன்னும், குளித்து முடித்தப் பிறகும் முகத்தில் போடுவதற்குத், தலை முடியிலும், கால்களிலும் போடுவதற்கு என்றெல்லாம் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிரீம்கள், செயற்கை வாசனைத் திரவியங்கள், பற்பசைகள் என்று குளியலறையே ஏதோ அழகு நிலையம் போன்று காட்சியளித்தது. அவன் வாங்கும் ஊதியத்தில் நாற்பது விழுக்காடு செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள் வாங்குவதற்காகவே செலவிடுகிறான். இந்த உண்மை அவனோடு பேசியபோதுதான் தெரிய வந்தது. பெற்றோருக்கு அவனால் மாதாமாதம் பணம் அனுப்ப முடியவில்லை. உள்ளூரில் கந்து வட்டிக்குக் கடனை வாங்கிப் பொறியியல் படிக்க வைத்த பெற்றோரின் நிலைமையோ கவலைக்கிடமாக உள்ளது. வேலை, ஊதியத்துக்காக சென்னையில் வாழ்ந்து வருகின்ற இவனால் கிராமத்துப் பெற்றோருக் குத் துளிக்கூட நன்மையில்லை. அவர்களின் நம்பிக்கை முழுவதுமாக கரைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் உண்மையான அழகுக்கான இலக்கணங்களே தெரியவில்லை. வெறும் நறுமண பூச்சுகள்தான் அழகென்கிறார்கள். இது அறியாமை. அழகென்பது புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது. பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கின்ற பலரோடு சில நிமிடங்கள் பழகிப் பாருங்கள். அப்போதுதான் அவர்களின் அழுக்கு மனங்களைப் புரிந்து கொள்ள முடியும். கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர் குறித்துத் துளியும் எண்ணாமல், அக்கறைக் காட்டாமல், உடல் முழுவதும் வாசனைத் திரவியங்களோடு அலுவலகத்திற்குச் செல்வதால் யாருக்கு என்ன நன்மை? அடுத்தவர்கள் தங்களை பெருமையோடு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பெற்றோரிடம் இவர்கள் சிறுமையோடு நடந்து கொள்கிறார்கள். நாகரிகமான உடை அணிந்து, வாசனைத் திரவியங்களோடு அலுவலகம் செல்வதில் பெருமையில்லை. பெற்றோர் கிழிந்தத்துணி அணியாமல் இருக்கிறார்களா? என்று உறுதிப்படுத்தப்படுவதும் இவர்களின் அடிப்படைக் கடமை. எதிர்காலம் குறித்துத் திட்டமிடுதலும், தேவைகளைக் குறைத்துக் கொள்வதும், சேமிப்பதும், பொருளாதாரக் குறியீடுகளை உயர்த்திக் கொள்வதுமே தற்போதைய அடிப்படைத் தேவை. ஆனால், இவைக் குறித்தெல்லாம் இளைஞர்களும், இளம்பெண்களும் துளியளவு யோசிப்பதே இல்லை. இவர்களில் பலரும் சுயநலவாதிகள். தங்களுடைய சமூக அந்தஸ்தை மட்டும் பெரியதாகக் காட்டிக் கொள்ள துடிப்பவர்கள். தவறில்லை. அதே நிலையில் தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்திச் செய்ய மறுப்பது எந்த வகையில் நியாயம்? எதிர்காலத்தில் நிச்சயம் இவர்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி தவிப்பார்கள். ஊதாரித்தனமான செலவினங்களும், பொறுப்பற்ற வாழ்க்கை முறைகளும், நுகர்வு கலாசாரமும் நாகரிகமல்ல. மாறாக, இவை இன்றைய இளைஞர்கள் பெற்றோருக்குச் செய்து வரும் மறைமுக நம்பிக்கைத் துரோகங்கள். பிரமாண்ட கட்டிடங்களில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும், ‘எது நாகரிகம்..?’ என்பது குறித்து நம் இளைஞர்களுக்கு புரிதல் குறைவு என்பதே யதார்த்தம். இந்த நிலை மாற வேண்டுமென்றால், இதுதொடர்பான பயிற்சி முறைகளும் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படவேண்டும். அப்போதுதான் பொறுப்பான இளம் சமூகம் உருவாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts