Monday, 24 September 2018

வந்தப்பின் திகைப்பது சிறப்பா?

வந்தப்பின் திகைப்பது சிறப்பா? தி.ஒய்ஸ்லின் சாமுவேல், பொறியியல் கல்லூரி மாணவர் இன்றைய உலகில் நாம் பணத்தையே பெரும் மதிப்பாய் கொண்டு அதை சம்பாதிப்பதிலேயே நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் செலவுசெய்கிறோம். பணத்துக்காக நம்மில் பெரும்பான்மையானோர் முன்பின் தெரியாதவருக்கோ தெரிந்தவருக்கோ அடிபணிந்து கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். வேறுசிலர் தாமாகவே முயன்று சுயதொழில் செய்து உழைக்கிறார்கள். அதிகமாக மதிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கூட ஒரு காலத்தில் மதிப்பீட்டை இழந்துபோனதை நாம் நன்கு அறிவோம். பணம் உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பணம் மனித வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருந்து வருகிறது.ஆனால் அந்த பணத்தை நாடி செல்லும் நாம் அதைவிட மதிப்பு மிக்க இயற்கையை அழிக்கலாகுமா? இன்றைய காலக்கட்டத்தில் பல இடங்களில் நாம் வளர்ச்சி என்னும் பெயரில் இயற்கையை அழித்து வருகின்றோம். பணத்தை செலவு செய்து இயற்கையை காப்பாற்றுவதை நாம் அறிந்து இருக்கலாம். ஆனால் அத்தகைய பணத்தையே நஷ்ட ஈடாக கொடுத்து இயற்கையின் அருட்கொடையான மரங்களையும் மலைகளையும் காவு கொடுக்கும் காலம் வந்துவிட்டது. நஷ்ட ஈடு கொடுத்து இயற்கையை அழித்தாலும், நஷ்டம் இந்த உலகில் வாழும் அனைவருக்கும் தான். நெல்லை-தென்காசி வழித்தடத்தில் நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்பட்டு கொண்டிருக்கும் மரங்களும், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்காக வெட்டப்பட இருக்கின்ற மரங்களுமே இதற்கு சான்று. இன்று நாம் வெட்டி வீழ்த்திவிட்டோம் என்று மகிழ்கின்ற மரத்தினால் பெறப்படும் பயனும், சுத்தமான காற்றும் கிடைக்காமல் போகும் போது நாம் அனைவரும் வெட்கி நாணுவோம். இன்றைய எந்திர உலகில் நிழலுக்கு கூட நிற்பதற்கு இடம் கிடையாது. இந்த உலகம் இன்னும் நம்மை விரைவாய் இயக்க முற்படுகிறதோ என்னவோ தெரியவில்லை? இயற்கையை அழிப்பது நமக்கே ஆபத்து என்பதை நாம் சிறிதும் உணராமல் வாழ்கிறோம் என்பது வேதனைக்குரிய ஒன்று. இயற்கை தந்த மரங்களை அழித்து, இப்புவியை வெப்பம் ஆக்குவதால் காலமாற்றம் உண்டாகும் என்பதை நாம் அறிந்ததில்லையோ! எப்படியென்றால் மரத்தை அழிப்பதினால் பூமி வெப்பம் அடையும். பூமி வெப்பம் அடைவதினால் சீரற்ற அளவில் மழை பெய்யும். அதாவது ஒரு சில இடங்களில் தேவைக்கு அதிகமாகவும் மற்றும் ஒரு சில இடங்களில் தேவைக்கு குறைவாகவும், வேறு சில இடங்களில் மழையே பெய்யாமலும் போகும். இது மனித இனத்துக்கு மட்டுமல்ல உயிருள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் ஆபத்தாக அமையும்.வளர்ச்சிக்காக மரங்களை வெட்டும் நாம், சுவாசிப்பதற்காக மரங்களை நடவும் வேண்டும். நம்முடைய வளர்ச்சி திட்ட பணிகளுக்காக கூடுமானபட்சம் மரங்களை வெட்டாமல் இருப்பது நல்லது. உலகில் நாம் அனைவரும் சுயநலவாதிகள் தான். அரசியல் தொடங்கி ஆன்மிகம் வரை பெரும்பான்மை மனிதர்கள் சுயநலம் பேணுபவர்கள் தான். சுயநலமாக வாழும் நாம் மரங்களை வளர்ப்பது பேணுவது போன்ற செயல்களை பொதுநலம் என்றே கருதுகிறோம். ஆனால் அது தவறு. மரங்களை காத்தலும் சுயநலத்தை பேணுவதும் ஒன்று தான். நாம் உதவி செய்ய இயலவில்லை என்றாலும் நம்முடைய சுயநலத்திற்காக பொதுநலத்தோடு மரங்களை காக்க உதவுகின்ற அனைவருக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். இந்த மண்ணின் வளத்தை அழித்து இந்த நாட்டின் செல்வத்தை சிதைப்பதினால் என்ன பயன்? நமக்கு நாமே மிகவும் பொறுமையாக கல்லறைகளை உருவாக்கிகொள்கிறோம். விதைப்பதற்கு செழிப்பான மண் இல்லாமல் விதைகள் மட்டும் முளைக்கட்டி என்ன பயன்? அண்மையில் காவிரியின் குறுக்கே உள்ள கொள்ளிடத்தின் மதகு உடைந்து தண்ணீர் வீணானது. காவிரியில் இருந்து தண்ணீர் வருவதே சிரமமாய் இருந்த போதிலும், வந்த தண்ணீரையும் சிறப்பாய் சேமித்து பயன்படுத்த முடியவில்லையே என்பது தான் என்னை போன்ற சாமானியனின் வருத்தம். காவிரியில் தண்ணீரை வரச்செய்து வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை செய்த தமிழக அரசு, நீர் வரும் முன்னே மதகுகளை சரிசெய்து இந்த சோதனையை தடுத்து இருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால், அதுவே மெச்சத்தகு சாதனையாக இருந்திருக்கும் அல்லவா! இது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து அன்று. இது நாம் நீர்நிலைகளை கவனிக்காமல் சென்றதால் நிகழ்ந்த ஒரு வேதனை. நாம் நீர் நிலைகளுக்கு சேதம் வராமல் முன் அறிந்து காத்து பேணுதல் நன்று. தவறுகள் நடப்பது இயல்பு தான். அதே சமயம் நம்மால் பல தவறை தடுக்கவும் முடியும். எனவே வரும்முன்பே ஆராய்ந்து முயற்சியினை எடுத்திருந்தால் பெரும் அளவில் நீர் வீணாகாமல் நம்மால் தடுத்து இருக்க முடியும். பணத்தின் அவசியத்தை உணர்ந்த நாம், அதைவிட அத்தியாவசியமான இயற்கையின் தேவையை உணர்ந்தவர்களாய் இருத்தல் வேண்டும். இயற்கையை காத்து வாழ வேண்டும். வரும் முன் காப்பது சிறந்ததா? அல்லது வந்த பின் திகைப்பது சிறந்ததா? ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது நம் கடமை.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts