Tuesday 25 September 2018

‘ஹெல்மெட்’ அணிவது சாத்தியமா?

‘ஹெல்மெட்’ அணிவது சாத்தியமா? மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்., போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு), தலைவர், வாய்ஸ் ஆப் வாய்ஸ்லஸ் அரை மணி நேரம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருக்கும் நிலையில் ஒரு வக்கீல், பொது நிர்வாகம் படித்த தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒரு குடும்பத்தினர், வாலிபர் ஒருவரை பார்த்து, ‘ஹெல்மெட் போடாம வந்தியே போலீஸ் புடிக்கலையா?’ என்று கேட்டனர். அந்த இளைஞர், ‘சந்து சந்தா புகுந்து போலீசில் மாட்டாமல் தப்பிவந்தேன்’ என்று பெருமையாக சொன்னார். இதை கேட்ட வக்கீல், ‘தப்பு தம்பி’ என்று சொன்னார். அந்த வாலிபர், ‘என் உயிர் போனா போலீசுக்கு என்ன? அவங்க ஏன் விரட்டி விரட்டி பிடிச்சு வழக்கு போடுறாங்க?’ என்று கேட்டார். உடனே வக்கீல், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நீ உயிர்வாழ உரிமை இருக்கிறது. ஆனால் இறந்துபோக உனக்கு உரிமை இல்லை. ஆகவே உன் உயிரைப் பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமையாகிறது’ என்று சொன்னார். அருகில் இருந்த பொதுநிர்வாகம் படித்த நண்பர், ‘ஒவ்வொரு இந்தியனும் இந்நாட்டுக்கு மிகமுக்கியமானவர். ஹெல்மெட் அணியாததால் இன்று இறந்துபோன இளைஞன் நாளை இந்நாட்டின் பிரதமராகக்கூட பொறுப்பேற்கும் சாத்தியம் இருந்திருக்கும். மேலும், அவ்வாறு ஒருவர் இறப்பதனால் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கும் இச்சமூகத்துக்கும் ஏற்படுகிறது. குழந்தைகளின் வளமையான எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம்தானே’ என்றார். ‘ஹெல்மெட் அணிவதை பொதுமக்கள் ஏன் தவிர்க்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது பொதுமக்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் தெரியுமா?’ என்று கேட்டு தொடர்ந்து வக்கீல் பேசினார். ‘மெதுவாகத்தானே செல்கின்றேன். எனக்கு ஹெல்மெட் தேவை இல்லை’ என்பவர் சிலர். தலை வெப்பமடைந்து வியர்வை கொட்டுகிறது, காது கேட்பதில்லை, கடிவாளப் பார்வை மட்டுமே கிடைக்கிறது, முடி உதிர்கிறது, பக்கவாட்டில் வரும் வாகனம் தெரிவதில்லை, ஒப்பனை பாழாகிறது என்பவர் வேறுசிலர். ஹெல்மெட் திருடு போகிறது, அதிகப்படியான சுமையாக தெரிகிறது என்பவரும் உண்டு. போலீசார் எப்போதும் இந்த வழக்கு போடுவதில்லை. எப்போதாவது, அதிகாரிகள் ஆணையிடும்போதும், கணக்கு காட்டவுமே வழக்கு போடுகிறார்கள். அவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதில் இருந்தே அவர்களுடைய ஈடுபாடு வெளிப்படுகிறது. போலீசார் பிடிக்கும்போது குறுக்கு வழியாக சென்று தப்பிவிடலாம். அல்லது கையூட்டு கொடுத்து தப்பிவிடலாம் என்பது போன்ற நம்பிக்கையிலும் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கிறார்கள். ஆனால் ஹெல்மெட் அணியாமல் சென்று மரணம் ஏற்பட்டாலோ, அம்மரணத்துக்குப்பின் குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தாலோ, அல்லது விபத்து ஏற்பட்டு உயிரோடு இருக்க ஏற்படும் மருத்துவச் செலவுகளை நினைத்துப் பார்த்தாலோ ஹெல்மெட்டைத் தவிர்க்கும் பொருட்டு சொல்லப்படும் காரணங்கள் அத்தனையும் மிக சொற்பமானவை. இவ்வாறு வக்கீல் பேசி முடித்தார். உடனே அடுத்த நண்பர், ‘உலகின் பல நாடுகளில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை பொதுமக்கள் 100 சதவீதம் பின்பற்றுகிறார்கள். இலங்கையில் குழந்தைகள் கூட தலையில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்க முடிவதில்லை. அப்படி சென்றால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கிறார்கள்’ என்றார். மேலும் தொடர்ந்த அவர், ‘பிற நாடுகளில் பொதுமக்கள் முழுமையாக சட்டத்தை மதித்து நடந்துகொள்கிறார்கள். ஹெல்மெட் அணியாமல் இருக்க நாம் சொல்லும் அத்தனை காரணங்களையும் அவர்களாலும் சொல்ல இயலும், இருப்பினும் அந்நாடுகளில் அனைவரும் சட்டத்தை பின்பற்றுகிறார்கள். நம் நாட்டில் மட்டும் ஏன் முடியவில்லை? மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே. ஹெல்மெட் நம் உயிருக்கு வேட்டு வைக்கும் பகையாளி அல்ல. கவசமாய் நம் உயிரை காக்கும் உறவாளி’ என்றார். உடனே வக்கீல், ‘ஹெல்மெட் நிச்சயம் பல உயிர்களை காப்பாற்றும். போலீஸ்துறை முழுமனதாக இறங்கி ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். எப்போதும் இப்பணியை செய்ய வேண்டும். இது ஒரு முக்கியமான பணி’ என்றார். அதற்கு பொது நிர்வாகம் படித்த நண்பர், ‘மோட்டார் வாகன சட்டத்தை நாம் முழுமையாக அமல்படுத்தினால், மாநிலத்தில் போலீசாரின் மதிப்பு உயரும். இதற்கென சிறப்பு போலீஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமித்தால், அவர்களைக் கொண்டு இதனைச் செய்யலாம். நிறைய நடமாடும் நீதிமன்றங்களை ஏற்படுத்தினால் அபராதம் வசூலித்து இவ்வழக்குகளை இரண்டு மணி நேரத்தில் முடித்துவிடலாம். சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்கும் அளவுக்கு பொதுமக்களை திருத்திவிட்டால், பொதுவெளியில் அவர்களுடைய சுயநல வெளிப்பாடு மிகவும் குறைந்துவிடும். சமுதாயத்தில் சுயநல வெளிப்பாடு குறைந்தால், மற்ற குற்றங்களும் குறைந்துவிடும். சாலைகளில் பொதுமக்கள் எத்தனை ஒழுங்கோடு நடந்துகொள்கிறார்களோ, அத்தனை தூரம் நம் நாட்டின் மதிப்பு உலக அளவில் கூடும்’ என்றார். உடனே வக்கீல், ‘உண்மைதான். மோட்டார் வாகன சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் நடைமுறையில் உள்ள பல சட்டங்களை அமல்படுத்தும் தேவை ஏற்படாது. பொது மக்களிடத்தில் சகிப்பு தன்மை கூடுவதால் குற்றங்கள் குறையும்தானே’ என்றார். அடுத்த நண்பர், ‘சரியாக சொன்னீர்கள். இதைச் செய்ய நமக்கு தேவை, உறுதியான அரசியல் நிலைப்பாடு. இதனைச் செய்யும்போது அரசியல் எதிர்ப்புகளையும் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டங்களையும் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சட்டப்படிதானே நடக்கிறோம். எனவே அஞ்சத் தேவையில்லை. ஆறு மாதங்களில் அரசின் மரியாதை மிக உயர்ந்து நிற்கும்’ என்றார். அப்போது வக்கீல், ‘இவ்வாறு செய்தால் கையூட்டு தலைவிரித்து ஆடும் என்பது நமக்கு முன்னே உள்ள அடுத்த மிகப்பெரிய சவால். இதற்கென அதிகப்படியான லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி 90 நாட்களில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வழிவகை செய்திட வேண்டும்’ என்றார். இப்போது பொது நிர்வாகி, ‘பொதுவாக, லஞ்சம் பெற்றவர்களையே நாம் தண்டித்துக்கொண்டு இருக்கிறோம். லஞ்சம் கொடுத்தலும், பெறுதலும் குற்றம்தான். லஞ்சம் கொடுப்பவர்களைப் பிடித்தும் தண்டிக்க வேண்டும். அதற்கேற்றவாறு சட்டத்திருத்தங்களையும் வழிமுறைகளையும் மாற்றியமைத்து நடவடிக்கை எடுத்தால், இதனை எளிதில் செய்யலாம். கையூட்டு கொடுப்பவர்கள் நூறு பேரை தண்டித்தால் கையூட்டு கொடுப்பது முற்றிலும் நின்றுவிடும்’ என்றார். உடனே இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர், ‘ரோடெல்லாம் மிக மோசமாக உள்ளது அரசு முதலில் அதை சரிசெய்யவேண்டும். எடை குறைவான ஹெல்மெட் தயாரிக்கவேண்டும். அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வாகனத்திலேயே வசதிகள் இருக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே போனார். அச்சமயத்தில் ரெயில் வந்ததால் இந்த உரையாடல் முற்றுபெற்றது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts