Saturday, 30 June 2018

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே! எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றியிருப்பவர்களையும் நிம்மதியாக வைத்திருக்கும். நாம் எப்போதும் நினைவில் பதித்துக்கொள்ள வேண்டிய வாசகம்- ‘இதுவும் கடந்துபோகும்’. மகிழ்ச்சியோ துக்கமோ நம்மை நெருங்கும்போது அதற்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதைவிட அதை உள்வாங்கி, கடக்க முயற்சிக்க வேண்டும். நாம் ஒரு பொருளையோ, விஷயத்தையோ இழக்கும்போது, அதைவிடச் சிறப்பான ஒன்றை நாம் பெறப் போகிறோம் என உணர வேண்டும். பொதுவாக வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. அதாவது, நம்மால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாதவற்றை மாற்றிக் காட்டுவது. இவை இரண்டில் எதைத் தேர்ந் தெடுக்கிறோம் என்பது, நமது சூழல், நம் உள்ளுணர்வு, அது நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் அனைத்தையும் பொறுத்து அமைகிறது. இன்றைய தலைமுறை பிள்ளைகள் மிகுந்த அறிவுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்ளுதல், பல துறைகளிலும் திறமைசாலியாக இருத்தல் என அவர்கள் ஜொலிப்பதில் பெருமையே. ஆனால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலே தவறான வழியில் பாதம் பதிக்க முயலும்போது கண்டித்தால் விரைவில் விரக்தி அடை கிறார்கள், வெறுப்பை உமிழ்கிறார்கள். கல்லூரிக்குள் காலடி வைக்கும்போதே, ஓட்டு போட்டு நாட்டின் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாணவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், அவர்கள் மனமும் மூளையும் ஒரு விஷயத்தை உள்வாங்கி முடிவெடுக்கும் திறன் பெற்றுவிட்டது என்றுதானே அர்த்தம்? அப்படியிருக்க, எல்லாவற்றுக்கும் ஆத்திரப் படுவது, நச்சரிப்பது, கேட்பது கிடைக்காவிட்டால் மோசமான முடிவெடுப்பேன் என்று அச்சுறுத்துவது இவையெல்லாம் சரிதானா? உங்களுக்காக பத்து மாதங்கள் மட்டுமல்ல, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தாய், தான் காணாத உலகத்தையும் நீங்கள் காண வேண்டும் என்று தோளில் தூக்கிவைத்து அலைந்தவர் தந்தை. அத்தகைய பெற்றோர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக உங்கள் நன்மைக்காக மட்டும்தானே இருக்கும்? நம்மைப் பற்றி பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தால், அதற்காக முயற்சிக்க வேண்டியது பிள்ளையின் பொறுப்பு. ஒன்று நடக்காவிட்டால் அதுகுறித்து வருந்திக் கிடப்பதைவிட, அதனால் வேறு நன்மையும் விளைந்திருக்கலாம் என்று உணர வேண்டும். டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 10-ம் தேதி தன் பயணத்தை இங்கிலாந்து சவுத் ஹாம்ப்டன் துறை முகத்தில் தொடங்க இருந்தது. ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதில் பயணிக்க எண்ணினார். அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தைக் கட்டி 4 டிக்கெட்டுகள் வாங்கினார். அந்நிலையில் திடீரென்று அவருடைய மகனை நாய் கடித்துவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர், அவனுக்கு நோய்த் தொற்று ஏற் படக்கூடாது, எனவே கப்பலில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இது இவர்களுக்கு பேரிடியாய் அமைந்தது. அப்போது அவர் மனைவி, நீங்கள் இன்னொரு மகனுடன் டைட்டானிக் கப்பலில் சென்று வாருங்கள், நான் பிள்ளையைப் பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஆனால் கணவரோ மிகுந்த வருத்தத்துக்கு மத்தியில் மறுத்துவிட்டார். பிறகு நடந்ததை நாம் அறிவோம். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை அறிந்து உலகமே துக்கப்பட்டபோது, நாம் தப்பிவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டது மேற்கண்ட குடும்பம். ஆக, இன்றைய சந்தோஷம் அல்லது துக்கத்திலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. எதுவும் எப்படியும் மாறலாம். தோல்வியை மனதுக்கும் வெற்றியை மூளைக்கும் கொண்டு செல்லாத வரை வாழ்க்கை சீராக இருக்கும். நம் ஆழ்மனதின் எண்ணப்பதிவுகளே கனவுகளில் வெளிப்படுகின்றன என்கிறார்கள். அதை எப்படி கட்டுப்படுத்த முயலக்கூடாதோ, அதேபோல நம் வாழ்க்கைச் சூழலில் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முயலக் கூடாது. அவற்றைக் கையாளும் விதத்தையே கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த, நடக்கப் போவதாக நாம் நினைக்கிற மோசமான விஷயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால் நம்மால் நிகழ்கால இனிமைகளை ரசிக்க முடியாது. வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்ததே. நம் வாழ்வில் கெட்டதைச் சந்திக்காத வரை நம்மால் நல்லதின் அருமையை உணர முடியாது. நம் சமூகம், குடும்பம், உறவு ஆகியவை ஒரு மரம் போன்றவை. மரத்தின் வேர் நமக்குத் தெரிவதில்லை. எவ்வளவு தூரம் வேர் உறுதியாக உள்ளதோ அந்த அளவுதான் மரத்தின் பலம். அதுபோல நம் பெற்றோர்கள், உறவுகள், இறை நம்பிக்கை போன்ற ஆதாரங்கள்தான் நம்மை எந்த சூழ்நிலையிலும் வாழ பழக்கப்படுத்துகின்றன. வேரை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதன் பணியை, அதனால் நமக்கு கிடைக்கும் பலனை உணரமுடியும். நம் அழகு, அந்தஸ்து, பணம், செல்வாக்கு போன்ற கிளைகள் விரிந்து உலகை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆனால் அதற்காக மனம் போன போக்கில் போய்விட முடியாது. நம் உடலும் மனமும் எந்த அளவு நம் கட்டுப்பாட்டில் உள்ளதோ அந்த அளவே மன, உடல் ஆரோக்கியம் இருக்கும். நம்முடைய நல்ல எண்ணங்களின் மூலமே வாழ்க்கையை விசாலமாக்க முடியும். ஒரு மரத்திலிருந்து கிடைக்கும் பலன்களான பழம், விதை, காய், நிழல் என அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு நம் பங்களிப்பு அவசியம். அதேபோல வாழ்வில் வெற்றிக்கனி களைப் பறிப்பதற்கு நாமும் மூலதனங்களை இட வேண்டும். உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை போன்றவைதான் அந்த மூலதனங்கள். இவை அனைத்துக்கும் அடிப்படை, நம் எண்ண அமைப்பை சரியாகக் கட்டமைப்பது. பிறரின் வார்த்தைகளால், செயல்களால் நாம் எளிதில் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்கிறோம் என்றால் நம் எண்ணக் கட்டமைப்பு சரியாக இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் மாதிரி. அது உருகும்முன் அனுபவிக்க வேண்டும் என்பது இன்று பல இளைஞர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவர்த்தி மாதிரி. அது உருகும்முன் பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எதையும் தன்னலமற்றுச் செய்யும்போது அங்கு வெற்றிக்கு வாய்ப்பு அதிகம். இதயக் கதவுகளைத் திறந்துவையுங்கள், அதன் வழியே அன்பெனும் தென்றல் நுழைந்து உறவாட விடுங்கள், மனிதநேயம் உங்களை வழி நடத்த அனுமதியுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். எல்லாம் நன்மையாகும்! | Download

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவக் காப்பீடு: கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

திடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச் செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது. உடல்நலக் குறைவு வாட்டும்போது, அதற்கு ஆகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிக்கும். இந்நிலையில், மருத்துவக் காப்பீடு இருந்தால் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இதில் இரண்டு வகைகள் உண்டு. தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பாலிசிதாரர் ஒருவர் மட்டுமே மொத்த காப்பீட்டுத் தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, ‘பேமிலி புளோட்டர் பாலிசி’ எனப்படும் ஒரே ஒரு குடும்பக் காப்பீடு எடுக்கலாம். இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற்போல் மொத்த காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் நல்லது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால், தனிநபர் காப்பீடே சிறந்தது. மொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வு செய்யும்போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும். மருத்துவக் காப்பீட்டில் ‘கோ-பே’ மற்றும் காத்திருப்புக் காலத்தையும் கவனிக்க வேண்டும். ‘கோ-பே’ என்பது பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது. இம்முறை, காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா, கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், ‘கோ-பே’ திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம். 1 முதல் 6 ஆண்டுகள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும், உள்ளடக்கம் மற்றும் நீங்கல்களைக் கவனித்தல் அவசியம். இவை காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரங்களில் உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட நேரிடும். காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒரு வலையமைப்பில் கூட்டுச் சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரகாலங்களில் எளிதாக மருத்துவ வசதி பெறலாம். மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது. | Download

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள்!

உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோள்! ...உருவாக்கிய நம் மாணவர்கள் உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள்! தாம் உருவாக்கிய செயற்கைக்கோளுடன் ஹரிகிருஷ்ணன், கிரிபிரசாத், அமர்நாத், சுதி உள்ளங்கையில் அடங்கக்கூடிய, உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார்கள் நமது மாணவர்கள். சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியிருக்கும் அந்தச் செயற்கைக்கோள் உருவில் சிறியது என்றாலும், செயல்திறனில் பெரியது. அதுபற்றி, செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர் குழுவின் தலைவரான ஹரிகிருஷ்ணன் மற்றும் கிரிபிரசாத், அமர்நாத், சுதி ஆகியோர் கூறுவதைக் கேட்போம்... சர்வதேசப் போட்டி ‘‘நாங்கள் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் முதலாமாண்டு பயின்று வருகிறோம். எங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப, விண்ணியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். இந்நிலையில், ‘ஐடூடுல்எடு’ என்ற நிறுவனம் நடத்தும் ‘கியூப்ஸ் இன் ஸ்பேஸ்’ எனப்படும் சர்வதேசப் போட்டி பற்றி அறிந்தோம். விண்வெளியில் செலுத்தக்கூடிய செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான இப்போட்டிக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஆதரவு அளிக்கிறது. 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களே இப்போட்டியில் பங்கேற்க முடியும். நாங்கள் இப்போட்டிக்கு எங்களின் மாதிரித் திட்டத்தை அனுப்பிவைத்தோம். உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரம் திட்டங்களில், இறுதியாக நூறு திட்டங்களே அங்கீகரிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டன. அவற்றில் எங்கள் திட்டமும் ஒன்று. மிகச் சிறியது எங்கள் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் நாங்கள் அத்திட்டத்தின்படி செயற்கைக்கோளை உருவாக்கி முடித்தோம். இதன் எடை வெறும் 33.39 கிராம்தான். இதற்கு முன்பு நமது ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ மாணவர்கள் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி அதை நாசா மூலம் விண்ணில் ஏவினர். அதன் எடை 64 கிராம். ஆக, அதையும்விடச் சிறியது எங்களுடைய செயற்கைக்கோள். இது அளவில் சிறியது மட்டுமல்ல, தயாரிப்புச் செலவிலும் மிகவும் மலிவானது. ஆம், 15 ஆயிரம் ரூபாயில் நாங்கள் இதை உருவாக்கி முடித்துவிட்டோம். முப்பரிமாண அச்சிடல் முறையில் நைலானால் எங்கள் செயற்கைக்கோளை உருவாக்கியிருக்கிறோம். பிளாஸ்டிக் வகைகளில், நைலான் ஓரளவு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதால் நாங்கள் இதைப் பயன்படுத்தினோம். ஐ.ஐ.டி.யின் அங்கீகாரம் எங்களின் இந்த செயற்கைக்கோள் முயற்சிக்கு, சென்னை ஐ.ஐ.டி. ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் துறை ஆதரவாக இருந்தது. அவர்கள் எங்கள் செயற்கைக்கோளை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததுடன், இதன் எடை குறித்த அங்கீகாரச் சான்றிதழையும் வழங்கினர். இந்தச் செயற்கைக்கோளுக்கான திட்டமிடல் 2 வாரம், நிஜத்தில் உருவாக்கி முடிப்பதற்கு 3 வாரம் என மொத்தம் 5 வார காலம் ஆனது. இதில் பயன்படுத்தியுள்ள ‘சிப்’, ‘சென்சார்கள்’ போன்றவற்றை இத்தாலியில் இருந்து தருவித்திருக்கிறோம். நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக இச்செயற்கைக்கோளுக்கு ‘ஜெய்ஹிந்த்-1எஸ்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறோம். பலூன் மூலம்... ஹீலியம் வாயு பலூன் மூலம் எங்கள் செயற்கைக்கோள், வானில் விண்ணை ஒட்டிய பகுதிக்கு அனுப்பப்படும். அங்கு, புவியீர்ப்புச் சக்தி மிகவும் குறைந்த நிலையில் நைலானின் தன்மை எப்படி இருக்கிறது என்று அறிவது எங்களின் முக்கியக் குறிக்கோள். அதன்மூலம், எதிர்காலத்தில் விண்வெளியில் நைலானை பயன்படுத்த முடியுமா என்று தெரிந்துகொள்ள முடியும். மேலும், பலூன் செல்லும் வேகம், பூமிப் பரப்பில் இருந்து அதன் உயரம், அங்கு நிலவும் வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம், புறஊதாக் கதிர்களின் அடர்த்தி போன்ற வானிலை சார்ந்த விஷயங்களையும் எங்கள் செயற்கைக்கோள் தெரிவிக்கும். விண்ணிலிருந்து மண்ணுக்கு ‘சென்சார்கள்’ மூலம் மேற்கண்ட தகவல்களைக் கிரகிக்கும் இந்தச் செயற்கைக்கோள், அதில் உள்ள மைக்ரோகண்ட்ரோலர் மூலம் அவற்றைப் பதிவு செய்யும், பூமிக்கும் அனுப்பி வைக்கும். அந்தத் தகவல்கள் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ‘கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது’ என்பார்கள். அதைப் போல எங்களது செயற்கைக்கோள் சிறியது என்றாலும், இதன் ஆயுட்காலம் ஒருநாள்தான் என்றபோதும், மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கும். எங்கள் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் துறை உதவிப் பேராசிரியர் தினேஷ்குமார், இத்திட்ட முயற்சியில் வழிகாட்டி உதவினார். ராக்கெட் தயாரிப்போம் ஒரு நுண்செயற்கைக்கோளை நாங்களே உருவாக்கியது, எங்களுக்கு நம்பிக்கையையும், தெளிவையும் அளித்திருக்கிறது. அடுத்தகட்டமாக, சிறிய ரக ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட ஆவலாக இருக்கிறோம். அதற்கு உரிய அனுமதியும், பொருளாதார உதவியும் கிடைத்தால் எங்களால் அப்பணியை முன்னெடுக்க முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. எங்களைப் போன்ற விண்வெளிப் பொறியியல் மாணவர்கள் எதிர்காலத்தில் அதற்குத் துணைநிற்போம்’’ என்று உற்சாகக் குரலில் கூறி விடைகொடுத்தனர். 64 கிராம் எடையுடைய செயற்கைக்கோளை உருவாக்கிய ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ மாணவர்கள், 500 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை உருவாக்கிய திருச்சி மாணவி வில்லட் ஓவியா, தற்போது இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் என்று இந்தியாவில் இதுவரை உருவான முக்கியமான நுண்செயற்கைக்கோள்களை உருவாக்கியவர்கள் தமிழக மாணவர்கள்தான். அந்தவகையிலும் நமக்குப் பெருமைதான்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா!

பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா! பிரக்ஞானந்தா உலகின் இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றதன்மூலம் ஒட்டுமொத்த சதுரங்க உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், சென்னை வீரர் பிரக்ஞானந்தா. முகப்பேர் வேலம்மாள் மேனிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புதான் படிக்கிறார் பிரக்ஞானந்தா. ஆனால் உலகச் சிகரத்தை எட்டிவிட்டார். இத்தாலியில் நடைபெற்ற கிரெடின் ஓபன் போட்டியின்போது கிராண்ட்மாஸ்டர் பெருமையுடன் நாடு திரும்பியிருக்கிறார். பிரக்ஞானந்தா, இவருக்கு முன்பு சாதனையாளராகத் திகழ்கிற உக்ரைனின் செர்ஜி கர்ஜாகின் ஆகிய இருவர் மட்டுமே உலகிலேயே 13 வயதுக்கு முன் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்கள். சென்னையின் புதிய கிராண்ட்மாஸ்டருக்கு பல திசைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. அவற்றில் முக்கியமானது, பிரக்ஞானந்தாவின் சொந்தப் பயிற்சியாளர் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷின் பாராட்டு... ‘‘பிரக்ஞானந்தா அசாதாரண திறமை கொண்டவர். அவர் எனது மாணவர் என்பதற்காக மட்டும் நான் இதைக் கூறவில்லை. உலக சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதியும் அவருக்கு இருக்கிறது. பிரக்ஞா இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் அவரது உழைப்புதான். பயிற்சியாளர்களாகிய நாங்கள் துணையாகத்தான் இருக்கிறோம்’’ என்கிறார். பிரக்ஞானந்தாவின் வெற்றி வேட்கைக்கு இணையே இல்லை என்பது பயிற்சியாளரின் கருத்து. ‘‘ஒருநாள், உலக சாம்பியனாக வேண்டும் என்பது மட்டும் பிரக்ஞாவின் குறிக்கோள் அல்ல. மூவாயிரம் ரேட்டிங் புள்ளிகளையும் தாண்ட வேண்டும் என்பதே அவரது உச்ச லட்சியம். பாருங்கள், நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்கூட மூவாயிரம் புள்ளிகளை நெருங்கவில்லை!’’ இளவயது கிராண்ட்மாஸ்டர் என்பதில் பிரக்ஞானந்தாவுக்கும் கர்ஜாகினுக்கும் மூன்று மாதம்தான் இடைவெளி. ஆனால் உண்மையில், பிரக்ஞானந்தாவுக்கு மிக இளவயது கிராண்ட்மாஸ்டர் ஆவது குறிக்கோள் இல்லையாம். ‘‘அவர் பல நீண்டகால இலக்குகளை மனதில் வைத்திருக்கிறார். அவற்றை நோக்கி அவர் உழைக்க வேண்டும், தனது சதுரங்கத் திறனை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது எண்ணமும்’’ என்கிறார் ரமேஷ். சதுரங்க குடும்பத்தைப் போல பிரக்ஞானந்தாவின் சொந்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் மிதக்கிறது. அப்பா ரமேஷ்பாபு, அம்மா நாகலட்சுமி, அக்கா வைஷாலி (இவரும் ஒரு சதுரங்க வீராங்கனை) என்று எல்லோரது வார்த்தைகளிலும் சந்தோஷமும் பெருமிதமும் தெறிக்கிறது. ‘‘பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் எப்போதும் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை. அவன் எந்தக் கவலையும் இன்றி இயல்பாக விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை’’ என்கின்றனர். ஆனால் சாதாரணமாகவே சமர்த்துப்பிள்ளையான பிரக்ஞானந்தா, வெளியே சுற்றுவது, பொழுதுபோக்குகளில் நேரத்தைக் கழிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையாம். சதுரங்கமே உயிர்மூச்சாகக் கொண்டவராம். அதுதான் அவரது வெற்றியின் ரகசியம் என்பது புரிகிறது! | Download

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கத்தியை தீட்டாதே! புத்தியை தீட்டு!

கத்தியை தீட்டாதே! புத்தியை தீட்டு! நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறையில் எப்படி கொலைகள் நடக்கிறது? என்ற கேள்வி எழுவது நியாயமானது. சமீபத்தில் புழல் சிறையில் ரவுடி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்தது. சிறையில் உள்ளிருப்பு வாசிகளை பிரித்து குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் தனி அறைகளில் அடைக்கப்படுகிறார்கள். காலையில் எல்லா சிறைவாசிகளும் காலை கடன் கழிப்பதற்காகவும், சிற்றுண்டி சாப்பிடுவதற்கும் திறந்து விடப்படுகிறார்கள். அப்போது அவர்களை கண்காணிக்க ஒரு சில சிறை காவலர்கள் பணியில் இருப்பார்கள். அதுவும் அவர்கள் கையில் லத்தி கூட வைத்திருக்க கூடாது. அதுதான் விதி. கைதி ஒவ்வொருவரும் செய்வதை பார்ப்பது, கண்காணிப்பது முடியாத காரியம். சிறைக்கு வரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏதோ ஒருவிதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல இருப்பார்கள். அடிக்கடி கோபப்படுவார்கள். எதெற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். சிறைத்துறை குற்றவியல் ஆளுமையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறைகள் துன்புறுத்தும் இடமல்ல. சிறை இல்ல வாசிகளை நல்வழிப்படுத்தி சமுதாயத்தோடு இணைப்பதற்காக வழிவகுக்கும் உன்னத தளம். மகாத்மா காந்தி, ‘சிறைவாசிகள் அடிமைகள் அல்ல; நாட்டின் உடமைகள்’ என்றார். சிறை இல்ல வாசிகள் நடத்தப்படும் விதம் ஒரு நாட்டின் கலாசாரத்தை காட்டுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் கைதி ஒழுக்கமாக வாழ வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது, பிறருக்கும் நல்லது. இந்திய சிறைகளில் சராசரியாக மூன்று லட்சம் சிறைவாசிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறை, 134 பிற சிறைகளை சேர்த்து 20 ஆயிரம் பேர் அடைப்பில் இருக்க இடம் உள்ளது. இதில் 67 சதவீதம் விசாரணை கைதிகள். அவர்கள் மீது உள்ள வழக்கு விசாரணை எளிதில் முடியாது. பலருக்கும் ஜாமீனில் வெளியில் வருவதற்கும் வசதி இருக்காது. அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனை காலத்தைவிட அதிகமாக சிறையில் காலம் தள்ள வேண்டிய நிலமை இருக்கிறது. இதனாலும் விசாரணை கைதிகளுக்கு மனஉளைச்சல், ஆத்திரம் வருகிறது. அதன் விளைவாக சிறைக்கு உள்ளே சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. ஜெயிலில் இருக்கும் கைதிகளின் கல்விக்கு சிறைத்துறை கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். 100 சதவீதம் கல்வி அளிக்க வேண்டும் என்று அடிப்படை கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி கல்வி வரை சிறைவாசிகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறையும் தேர்வு மையமாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் தேர்வு எழுத சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்போடு செல்ல வேண்டும். அங்கு பரீட்சை எழுதி திரும்ப வேண்டும். “பக்கத்துல போலீச வெச்சிகிட்டு எப்படி ஐயா நாங்க பரீட்சை எழுத” என்ற அவர்களது கூக்குரல் நியாயமானது. அதை மனதில் கொண்டுதான் அரசிடம் போராடி மத்திய சிறை தேர்வு எழுத ஒரு மையமாக அறிவிக்க ஆணை கிடைத்தது. இப்போது சிறையில் கல்வி பயிலலாம். அங்கேயே தேர்வு வைக்கப்படும், பங்கு கொள்ளலாம். இத்தகைய வசதி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிறை தேர்வு மையங்களில் பங்குகொண்ட சிறைவாசிகள் சிறப்பாக தேர்வு பெற்றிருக்கிறார்கள். அதில் ஒரு சுவாரசியமான செய்தி உண்டு. ஒரு சிறைவாசி புழல் சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதே சமயத்தில் அவரது மகனும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். தந்தை மகனை விட அதிக மார்க் வாங்கி சாதனை படைத்தார். சிறையில் தரமான கல்வி அளிப்பதற்கு எடுத்த முயற்சியின் வெற்றி இது என்பதில் ஐயமில்லை. சிறையிலிருந்து விடுதலை பெறுபவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடாதவாறு அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் வேண்டும். பழம் குற்றவாளிகள் அதே குற்றங்களில் ஈடுபடுவது தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர்கள் சமுதாயத்தோடு இணைய வழிவகை செய்யும் நடவடிக்கையை நன்னடத்தை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், காவல் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டார் குற்றமற்ற சமுதாயம் உருவாக அடித்தளம் அமைக்க முடியும். ‘தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்’ என்ற பாடலுக்கு ஏற்ப சிறைத்துறை முயற்சி எடுத்து வருகிறது. சிறைச்சாலைகளில் பல சிறு தொழிற்சாலைகள் உள்ளன. சேலம் சிறையில் ஸ்டீல் பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. வேலூரில் காலணிகள், புழல் சிறையில் ரொட்டி தின்பண்டங்கள், கடலூரில் பாக்கு இலை தட்டுகள் என்று ஒவ்வொரு மத்திய சிறையிலும் பல பொருட்கள் சிறைவாசிகளின் கைவண்ணத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதிக நிலம் உள்ள புழல், திருச்சி, கடலூர், பாளையங்கோட்டை போன்ற சிறைகளில் காய்கறி வகைகள், கரும்பு, நெல், பழ வகைகள் பயிரிட்டு அறுவடை செய்யப்படுகிறது. சிறை பயன்பாட்டிற்கு போக மிச்சமுள்ள காய்கறி, தானிய வகைகள் வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறைவாசிகளுக்கும் இதன் மூலம் ஊதியம் கிடைக்கிறது. அவர்களது ஊதியத்தில் ஒரு பகுதி அவர் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு அளிக்கப்படுகிறது. சிறை என்பது குற்றவாளிகளை கொடுமைபடுத்தும் இடமல்ல. திருந்தி வாழ வழி வகுக்கும் பள்ளி. அதனை உறுதி செய்கிறது சிறை பணி. பல அமைப்புகள் சிறைகளில் நற்பணி செய்து சிறைவாசிகளுக்கு நிம்மதி அளிக்கிறார்கள். இதை சமுதாயம் வரவேற்கவேண்டும். விடுமுறை நாட்களிலும் சிறைவாசிகளை பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிகழ்வதற்கு காரணம் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், வேலை இல்லா திண்டாட்டம், வறுமை. அவை மட்டுமல்ல குற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பை நாம் தான் அளிக்கிறோம். ஒவ்வொருவரும் தமது நிலையில் உஷாராக இருந்தால் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பது கவிஞரின் பாடல். அதை எல்லோரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். கத்தியை தீட்டாமல், புத்தியை தீட்டினால் புது சக்தி பிறக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ மகத்துவம்

மருத்துவ மகத்துவம் டாக்டர் ஏ.முருகநாதன், முன்னாள் தலைவர், தமிழக கிளை, இந்திய மருத்துவ சங்கம் நாளை (ஜூலை 1-ந்தேதி) தேசிய மருத்துவர்கள் தினம். உலகில் வாழும் மக்கள் எல்லோரும் விரும்புவது நோயற்ற அல்லது நோய் நிவாரணம் பெற்ற வாழ்வை தான். அந்த விருப்பம் நிறைவேற்றப்படுவதற்காக இந்த உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கூட்டம் அயராது உழைத்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகத்தான கூட்டம் தான் மருத்துவர்கள் கூட்டம். தங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து, தங்கள் குடும்பத்தினருடன் பங்கு கொள்ளவேண்டிய பொன்னான நேரங்களை எல்லாம் தியாகம் செய்து, நோய்க்கான காரணிகளையும், நிவாரணிகளையும் கண்டறிய அல்லும் பகலும் அயராது உழைத்து வருபவர்கள் மருத்துவர்கள். அதற்கான உரிய அங்கீகாரத்தை உயர்ந்த வடிவில் அந்த மாமணிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உதயமானதுதான் மருத்துவர் திருநாள். உங்கள் குடும்ப மருத்துவர் தொடங்கி உலகின் முதல் நிலை மருத்துவர்கள் வரை எல்லோரும் பெருமைக்குரியவர்களே. மருத்துவத்துறையில் உள்ள சிரமங்களும் சவால்களும் தெரிந்தும் அந்தப் பணியை தேர்வு செய்வதற்குக் காரணம் வெறும் பொருளாதார நோக்கம் அன்று. தங்களுக்கு வாய்க்கப் பெற்ற அறிவுத்திறன் கொண்டு வேறு துறைகளில் இதைவிடப் பொருளட்ட முடியும் என்ற சாதாரண உண்மையை அறியாதவர்களும் அல்ல. இருந்தாலும் மருத்துவ துறையை தேர்வு செய்வதற்கு காரணம் சேவை மனப்பான்மை தான். இந்தத்துறையில் புதிருக்கு விடைகாணும் வேட்கை உள்ளவர்களின் புத்திக்கூர்மைக்கு வேலையிருக்கிறது. புதிரான ஒரு நோய் அறிகுறியின் சிறு துப்பை கையிலெடுத்து பின்னர் அதன் முழுவடிவைக் கண்டுபிடித்து அதற்கான தீர்வை நோயாளிக்கு கொடுக்கும்போது ஒரு மருத்துவர் அடையும் மகிழ்ச்சி எல்லையற்றது. அது அந்த நோயாளியின் உறவினர்கள் அடையும் மகிழ்ச்சிக்குச் சற்றும் குறைந்ததல்ல. அதுதான் இந்த மனித நேயமிக்க மகத்தான பணியின் தனிப்பெரும் சிறப்பு. அதனால்தான் இந்தத்துறையில் பெரும்பாலானவர்கள் வாய்ப்பு என்றல்லாமல், படிப்பை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்து உளப்பூர்வமாக உழைத்து தங்கள் முத்திரையைப் பதித்துச் செல்கின்றார்கள். லூயி பாஸ்டியர் என்ற மருத்துவர் திறன்குறைக்கப்பட்ட நோய்க்கிருமிகளைத் தன் உடலில் செலுத்தி தன்னையே ஆய்வுக்கான விலங்காக ஆக்கிக் கொண்டு வெறிநாய்க்கடிக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்தார் என்பதை அறியும் போது விழிகள் வியப்பால் விரிவது மட்டுமன்றி, பெருமிதத்தால் கண்ணீர் வழிகிறது. ‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்’ என்ற வள்ளுவன் வாக்கை அடியொற்றிப் பணிசெய்யும் ஆயிரமாயிரம் மருத்துவர்கள் அகிலமெங்கும் உள்ளனர். அந்த அடிப்படையில் இந்திய துணைக்கண்டத்தின் முதல் தகுதிசால் மருத்துவ வல்லுநராகத் தோன்றிய பாரதரத்னா பி.சி.ராயின் பிறந்தநாளை மருத்துவர் திருநாளாகக் கொண்டாட 1962-ம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகம் முடிவு செய்தது. அதன் பிறகு ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளும் மறைந்த நாளுமாகிய ஜூலை 1-ந்தேதி மருத்துவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பி.சி.ராய் 14 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி, அண்ணல் காந்தியடிகளின் மருத்துவர், அமெரிக்க அதிபர் கென்னடியால் வியந்து போற்றப்பட்டவர் என்று ஏராளமான புகழுக்குச் சொந்தக்காரர் ஆவார். அவரை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவர் மருத்துவத் துறையின் தூயவடிவின் எடுத்துக் காட்டு என்றே போற்ற முடியும். அவர் நினைவில் மருத்துவர் திருநாள் கொண்டாடப்படுவது பொருத்தம் தானே! ஆனால் இன்றைக்கு மக்களின் உயிர் காக்கும் உன்னத பணியை செவ்வனே செய்யும் மருத்துவர்களின் நிலைமை சற்று கவலைகொள்வதாகவே இருக்கிறது. அண்மைக் காலமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இதன் எதிரொலியாக பல மருத்துவர்கள் தங்களது மருத்துவ பணியை செய்ய முடியவில்லை. மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனளிக்காத நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உடன்வந்தவர்கள் வன்முறையைக் கையில் எடுப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அறியாத முறையில் தவறுகள் நிகழ்ந்தால் அதைச் சட்டப்படி சந்திக்க வேண்டியதுதான் ஒரு வளர்ச்சியடைந்த நாகரிகத்தின் அடையாளம். ‘வியத்தலும் இலமே, இகழ்தலும் இலமே’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 June 2018

நம் வெற்றி நம் கையில்!

நம் வெற்றி நம் கையில்! டாக்டர் பி. கிருஷ்ணகுமார் எது வெற்றி? நிறைய பணத்தை சம்பாதித்து வைத்திருப்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியா?, அல்லது அதையும் தாண்டி வேறு ஏதேனும் உள்ளதா?. உடனடி மனநிறைவிற்கும் அப்பால் மற்ற இலக்குகளை நோக்கி நமது மன நிலையை மாற்றியமைத்துக் கொள்வதே உண்மையான வளர்ச்சி மற்றும் வெற்றி. அதாவது எவ்வித கவலைகளுமின்றி இரவில் நம்மால் தூங்கச்செல்லும் நிலையே அது. பணம், குடும்பம், நேரம், அன்பு, சூழல் மற்றும் உறவுகள் என அனைத்துமே நமக்கான செல்வங்களே. இந்த அனைத்து செல்வங்களையும் அடைகின்ற நமது இலக்கே, உண்மையான வளர்ச்சி மற்றும் வெற்றி. பயத்தை ஆரத்தழுவி முன்னேறிச் செல்வதற்கான துணிவு நமக்கு நிச்சயம் வேண்டும். ஏனென்றால், தைரியமான செயல்பாடுகள் இன்றி எவ்வித வளர்ச்சியோ அல்லது வெற்றியோ நமக்கு கிடையாது. நமது இலக்குகளையும், அதை அடைவதற்கான நமது வலிமைகளையும் நமக்கு அடையாளம் காட்டக்கூடிய வழிமுறைகளைச் சொல்கிறது “நெலி காலன்” அவர்களின் “செல்ப் மேட்” என்னும் இந்தப் புத்தகம். கவனத்தில் வைக்க! நமது வாழ்க்கை மாற்றத்திற்கான பயணம் தொடங்குவதற்கு முன்னர், நாம் கவனத்தில் வைக்க வேண்டிய சில முக்கியமான கேள்விகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். உண்மையிலேயே நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை?, நமக்கான இலக்குகள் என்ன?, நமது வாழ்க்கையில் யாரால் அல்லது எதனால் நாம் ஏமாற்றமடைந்தோம்?, எது நமது செயல்களுக்கான தடை?, எதிர்காலம் குறித்த நமது மிகப்பெரிய பயம் எது?, நமக்கான மிகப்பெரிய கனவுகள் எவை? மற்றும் நாம் எதற்காக காத்திருக்கிறோம்? ஆகியவையே அந்த கேள்விகள். இவற்றிற்கான தக்க பதிலுடன் நமது செயல்களை தொடங்கும்போது, மிகச்சிறந்த வாழ்க்கை மாற்றங்களை பெறமுடியும் என்பதே இதன்மூலம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படைச்செய்தி. சொந்த செயல்பாடு! எந்தவொரு பணிக்கும் நமது தனிப்பட்ட சொந்த செயல்பாடு அவசியம். சாக்குப்போக்குகளையும், மற்றவர்கள் மீது குறை கூறுவதையும், மற்றவர்களையே முழுமையாக சார்ந்திருப்பதையும் அறவே நீக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர். யாரோ ஒருவர் நமக்கு உதவ வேண்டும் என்று காத்திருப்பதை விட, நமக்கு நாமே உதவுவதற்கான செயல்பாடுகளை துவக்க வேண்டும். மற்றவர்களை நம்பியே வாழ்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது மிகச்சிறந்த மனநிறைவான வெற்றிகளைப் பெறுகிறார்களா? என்றால், கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை. அடுத்தவர்களின் உதவியோடு வாழ்பவர்கள் நாளடைவில் ஒருவித மன அழுத்தத்திலும் சிக்கலிலும் மாட்டிக்கொள்வார்களே தவிர, ஒருபோதும் நிலையான வெற்றியையோ மகிழ்ச்சியையோ பெறமுடியாது. எந்தளவிற்கு நமது சொந்த செயல்பாடு உள்ளதோ, அந்தளவிற்கே நமக்கான பலனும் கிடைக்கும். சொந்த மதிப்பு! ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது இன்று பெரும்பாலானோரின் கனவு என்று சொல்லலாம். அந்தளவிற்கு நிறுவனங்களின் மீது அதீத ஈடுபாடு கொண்டுள்ளனர். நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் மீது வைத்துள்ள கட்டுப்பாடற்ற அன்பை கைவிடுங்கள் என்கிறார் ஆசிரியர். ஏனென்றால், நமது தனிப்பட்ட மதிப்பு மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான நம்முடைய பார்வையை இதனால் இழக்க நேரிடும். இன்றைய காலகட்டத்தில் நிறுவனப் பணிகள் என்பது நிரந்தரமற்றது. பெரும்பாலானோரால் ஒரே நிறுவனத்தில் இருபது அல்லது முப்பது ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல. மேலும், இது நீண்டகால அடிப்படையில் நமக்கு பாதுகாப்பான விஷயமும் அல்ல. அதற்காக நாம் பணியாற்றும் நிறுவனத்தை வெறுக்கவோ அல்லது பணியில் சுணக்கம் காட்டவோ தேவையில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர். நாம் செய்யவேண்டியதெல்லாம், நமது நிறுவனப் பணிகளையும் தாண்டி, தனிப்பட்ட முறையிலும் நம்மை தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும். இருக்கின்ற பணியிலேயே நமக்காக நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், நமது எதிர்கால வெற்றிக்கு மிகச்சிறந்த அடித்தளமாக அமையும் என்பதையும் சேர்த்தே மனதில் பதிய வையுங்கள். பயமும் தோல்வியும்! அவ்வப்போது ஏற்படும் இழப்புகளின் காரணமாக உருவாகும் பயமும் தோல்வியும் நமது வளர்ச்சிப் பாதையின் மிகப்பெரிய தடைக்கற்கள் என்று கூறலாம். இது எப்போதும் நம் வாழ்க்கையில் நிகழக்கூடிய ஒரு விஷயம். இது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை உணர்ந்து, அதனை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும் என்கிறார் ஆசிரியர். அடுத்ததாக அவற்றை எதிர்கொண்டு, அதிலிருந்து நமக்கான பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சில தருணங்களில் இழப்பு நமக்கு மிகச்சிறந்த திட்டங்களை வகுத்துக்கொடுக்கும். சில நேரங்களில் இழப்பு நம்மை மிகப்பெரிய தவறுகளிலிருந்து பாதுகாக்கும். சில விஷயங்களில் இழப்பு நமக்கான சிறந்த பாதைக்கான கதவுகளைத் திறக்கும். பயமும் தோல்வியும் உண்மையல்ல, அவை வெறும் உணர்வே என்பதை உணர்ந்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொண்டு, அவற்றை நமது செயல்பாடுகளுக்கான மிகச்சிறந்த நண்பர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். பண மற்றும் மன சூழல்! வளர்ச்சிக்கான நிலைபாட்டினை மன தளவில் நாம் தயார்படுத்திக் கொண்டதற்கு பிறகு நமக்கான அடுத்தப் பணி என்ன?. நிதி ரீதியிலான நமது சூழலும் மனநிலையும் என்ன? என்பதை நாம் அறிந்திருக்கவேண்டியது முக்கியம். நம்மிடம் போதுமான அளவிற்கான பணம் உள்ளதா அல்லது இன்னும் சம்பாதிக்க வேண்டுமா?, அவசியமற்ற நமது அன்றாட செலவுகளை குறைத்து, அதன்மூலம் நிதி ஆதாரங்களை மேம்படுத்த முடியுமா?, பூர்வீக நிதி ஆதாரங்கள் ஏதேனும் நம்மிடம் உள்ளதா?, நிதி சிக்கல்களை கையாளும் மனநிலையில் இருக்கிறோமா?, நம்மிடமுள்ள தனித்திறன்கள் என்னென்ன?, கிடைக்கும் வாய்ப்புகளுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் வகையில் நம்முடைய இன்றைய நிலைப்பாடு உள்ளதா?, நீண்ட தொரு செயல்பாட்டிற்கு தயாராக இருக்கிறோமா? போன்ற கேள்விகளிருந்து நமது பண மற்றும் மன சூழலை அறியமுடியும். மூன்று நிலைகள்? பணம் சம்பாதிப்பது, சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது என மூன்று நிலைகளைப்பற்றி கூறுகிறார் ஆசிரியர். இப்பொழுது நாம் சம்பாதிக்கும் பணத்தைவிட இன்னும் அதிகமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். சிறியளவில் ஒரு வியாபாரம் தொடங்குதல், வாரத்தின் சில நாட்களில் ஏதேனும் பகுதிநேர பணி என தற்போதைய உழைப்பினை விட, இன்னும் கொஞ்சம் அதிகமாக பணியாற்ற வேண்டும். இந்த அதிகப்படியான வருமானத்தை அவசர நிதிக்காக சேமிப்பது இரண்டாவது நிலைப்பாடு. இது நமது மன அமைதிக்கும், அடுத்தக்கட்ட செயலுக்கான ஊக்கமாகவும் நிச்சயம் இருக்கும். இறுதியாக சேமித்த பணத்தை தகுந்த வழிகளில் முதலீடு செய்வது. நிலம், வங்கி, பங்குகள் என நமது எதிர்காலத்திற் காக சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. மனதளவில் நமது செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டு, நமக்கான இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது, தெளிவான வளர்ச்சியும் வெற்றியும் இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது, தெளிவான வளர்ச்சியும் வெற்றியும் நம் கையில்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமா இந்தியா?

பெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமா இந்தியா? பெண்களின் நிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வறிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது பிருந்தா சீனிவாசன் உ லகிலேயே, பெண்கள் வாழ அச்சுறுத்தல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றிருப்பதாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. இப்பட்டியலில் இடம்பெற்ற நாடுகள் இடைப்பட்ட ஆண்டுகளில் தங்கள் போக்கை மாற்றியிருக்கக்கூடும்; தவறுகளிலிருந்து பாடம் கற்றிருக்கக்கூடும் என அந்நிறுவனம் கருதியது. அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் ஆய்வை நடத்தியது. இந்த முறை நாம் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு வந்திருக்கிறோம். ஒருபுறம், இது இந்தியாவுக்கே அவமானம் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன. அதேசமயம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், உலக அரங்கில் இந்தியாவை மட்டும் குற்றம்சொல்லும் வகையில் மேற்கத்திய ஊடகங்கள் நடந்துகொள்கின்றன என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி நாம் பேச வேண்டிய விஷயங்கள் இன்னமும் மீதம் இருக்கின்றன. உலக அளவில்… பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறையை மட்டும் அல்லாமல் பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்குக் கிடைக்கிற மருத்துவ உதவி, பணப் புழக்கம், பாலியல் வன்முறை, பாலியல் சாராத வன்முறை, ஆட்கடத்தல் போன்றவை அதில் முக்கியமானவை. இந்தப் பட்டியலின் மற்ற பிரிவுகளைப் பொறுத்தவரை, இந்தியா கீழேதான் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பண்பாடு – கலாச்சாரம் ஆகியவற்றின் பேரால் கற்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள், அடிமைப் பணிக்காகவும் பாலியல் தொழிலுக்காகவும் கடத்தப்படுதல் ஆகியவற்றில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2012-ல் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, உலகத்தின் பார்வையை இந்தியா மீது திருப்பியது. அதைத் தொடர்ந்து பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் சட்ட வரையறையில் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என மத்திய அரசு வாக்களித்தது. இத்தனைக்குப் பிறகும், பெண்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத்தான் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. காஷ்மீர் மாநிலம் கதுவாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஓர் உதாரணம். இது போன்ற ஆய்வறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் சரிப்பதற்காகச் செய்யப்படும் வேலை எனச் சொல்கிறவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்கத் தவறுகிறார்கள். பெண்கள் மீது அதிகரித்துவரும் வன்முறையை அரசே பதிவுசெய்திருக்கிறது என்பதுதான் அது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, 2012-ல் பெண்கள் மீதான வன்முறை 41.7%-ஆக இருந்தது. 2016-ல் அது 55.2%-ஆக உயர்ந்திருக்கிறது. அதே ஆண்டில் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான குற்றங்களில் வழக்கு பதியப்பட்டும் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. மறைக்கப்படும் குற்றங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருமளவு குறைந்துவிட்டதாகச் சட்ட மன்றத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால், இங்குதான் ரயில் நிலையம், பேருந்து நிலையம், தேவாலயம், கல்லூரி வளாகம், வீடு என எல்லா இடங்களிலும் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்; அமிலம் வீசித் தாக்கப்படுகிறார்கள்; வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால், கொலை வரை நீளும் குற்றங்கள் மட்டுமே பொதுமக்களின் கவனத்துக்கு வருகின்றன. வெளியில் தெரியாமல் எத்தனையோ குற்றங்கள் நிகழ்ந்தபடிதான் இருக்கின்றன. பொதுவாக, இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படுவதில்லை. இதில் குடும்ப வன்முறை குறித்துச் சொல்லத் தேவையில்லை. காரணம் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க அம்சங்களில் குடும்ப அமைப்பு முக்கியமானதாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. எது நடந்தாலும் பொறுத்துபோகப் பழக்கப்பட்ட பெண்கள், தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைக்கூட வாழ்க்கையின் அங்கம் என நினைத்து அவற்றுக்குப் பழகிவிடுகிறார்கள். திருமண வல்லுறவு குறித்து யாருமே வாய் திறப்பதில்லை. நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அது முடிந்துவிட வேண்டும் என்பதைத்தான் இந்தச் சமூக அமைப்பு விரும்புகிறது. யாருடைய பொறுப்பு? 2007-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016-ல் பெண்கள் மீதான வன்முறை 83% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. முன்பு இருந்ததைவிடப் பெண்கள் இப்போது துணிச்சலோடு வெளியே வந்து புகார் செய்கிறார்கள்; எதையும் பொறுத்துக்கொள்வதில்லை எனவும் இதைப் புரிந்துகொள்ளலாம். அப்படியே இருந்தாலும் பெண்கள் மீதான குற்றங்களின் சதவீதம், புறக்கணித்துச் செல்கிற அளவுக்குக் குறைவாக இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உலகமயமாக்கலும் பாலினப் பாகுபாடும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பெண்களைச் சந்தைப் பொருளாக மட்டுமே பார்க்கிற மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து எளிதில் தப்பமுடிவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறினால் என்ன செய்வது என்ற குழப்பத்தாலேயே பெரும்பாலான பெண்கள் குடும்ப வன்முறையைச் சகித்துக்கொள்கிறார்கள். அப்படியே மீறி குடும்பத்தைவிட்டு வெளியேறும் பெண்களையும் தனித்து வாழும் பெண்களையும் இந்தச் சமூகம் மதிப்புடன் நடத்துவதில்லை. பெண்கள் பின்னடைவைச் சந்திப்பதற்கும் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுவதற்கும் பொருளாதார தற்சார்பின்மை முக்கியக் காரணம். இப்படியான பின்னணியில் இருந்துதான் பெண்களின் இருப்பை நாம் உறுதிசெய்ய வேண்டும். பெண்களின் நிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் அபாய மணியாக நினைத்துச் செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’, ‘தங்க மகள் சேமிப்புத் திட்டம்’, ‘குடும்ப வன்முறை தடைச் சட்டம்’ எனத் திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாமல் அவை முழுவீச்சில் அவற்றுக்குரிய நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐபோன்: வரமா? சாபமா?

ஐபோன்: வரமா? சாபமா? சேவியர் வரலாற்றில் பல விஷயங்கள் நம்மை வியக்க வைக்கும். சில விஷயங்கள் தான் வரலாற்றையே வியக்க வைக்கும். அப்படி தொழில்நுட்ப வரலாற்றை வியக்க வைத்த ஒரு விஷயம் தான் ஐபோன்! மொபைல் புரட்சியை மிக எளிதாக ஐபோனுக்கு முன், ஐபோனுக்குப் பின் என இரண்டாகப் பிரித்து விடலாம். இன்றைய ஸ்மார்ட் போன்களில் காணப்படும் அம்சங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஐபோனின் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது. ‘இதோ ஐபோன்’ என ஸ்டீவ் ஜாப்ஸ் 2007-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அறிவித்தபோது, அந்த போன் இப்படி ஒரு டிஜிட்டல் சுனாமியை உருவாக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. 3.5 இன்ச் திரையுடன், ‘இது தொடக்கம் தான்’ எனும் பஞ்ச் டயலாக்குடன் அது அறிமுகமானது. இன்றைக்கு சுமார் 130 கோடிக்கு மேல் ஐபோன்களை விற்று உலகிலேயே மொபைல் நிறுவன சக்கரவர்த்தியாய் அமர்ந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இன்றைய தேதியில், நிறுவனத்தின் வருமானத்தில் பாதிக்கு மேல் ஐபோன் விற்பனையினால் தான் கிடைக்கிறது. 2007-ம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி ஆப்பிள் ஐபோன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது குறித்த தகவல்கள் மக்களை தூங்க விடாமல் செய்தன. ஜூன் 29-ந்தேதி ஐபோன் கடைகளுக்கு வந்தபோது மக்கள் சினிமா டிக்கெட்டுக்கு காத்திருப்பது போல காத்திருந்து வாங்கினார்கள். அந்த வார இறுதியில் மட்டும் விற்ற ஐபோன்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து எழுபதாயிரம்! சில மாதங்களிலேயே அது பத்து லட்சமாக எகிறியது. அடுத்த ஆண்டு 3ஜி சேவை அறிமுகமானது, ஐபோனின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு அது சட்டென கொண்டு சென்றது. காரணம் ‘ஆப் ஸ்டோர்’ அப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகெங்கும் உள்ள பல லட்சம் கணினி ‘ஆப் டெவலப்பர்’களுக்கு புத்துணர்ச்சி கொடுத்த நிகழ்வு அது. அது தான் மொபைலாக இருந்த ஐபோனை ஒரு குட்டி கணினியாக மாற்றியது. அதன் பின் ஆண்டுதோறும் ஐபோன் ஒரு புதிய வடிவத்தை வெளியிடுவதும், மக்கள் கால்கடுக்கக் காத்திருந்து வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ஆரம்பம் முதலே கேமராவில் பார்வையை செலுத்தி வருகின்ற ‘ஐபோன் வெர்ஷன் 4’ வந்த போது செல்பி கேமராவையும், எச்.டி. வீடியோ ரெக்கார்டிங்கையும் அறிமுகப்படுத்தியது. உலகெங்கும் செல்பி ஜுரம் பற்றிக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு அது. கேமராவின் தரத்தைப் பொறுத்தவரை ஐபோன் தான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. ஐடியூன்ஸ், சிரிய, பெரிய திரை, 3டி டச் என புதுமைகளை புகுத்துவதிலும் ஐபோன் தான் முதலிடத்தில் தொடர்கிறது. ஐபோன் வெளியாகிய முதல் ஐந்தாறு வருடங்களுக்கு ஆப்பிள் ஐபோனுக்கு போட்டியே இல்லை. அதன் பின்பு தான் சந்தையில் குறைந்த விலையில் ஐபோனுக்குப் போட்டியாய் போன்கள் களமிறங்கின. இருந்தாலும் இன்றும் ஐபோனின் வசீகரத்தைக் குறைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு பத்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய அந்த நிறுவனம் மூன்று ஐபோன்களை வெளியிட்டது. ‘ஐபோன் 8’, ‘8 எஸ்’ மற்றும் ‘ஐபோன் 10’. அதில் ‘ஐபோன் 10’ முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய அம்சங்களுடன் அறிமுகமானது. ஐபோன் வரலாற்றின் அடுத்த மிகப்பெரிய மாறுதல் இது என கருதப்படுகிறது. இதன் விலை ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் என்ற போதிலும், இதுவரை சுமார் மூன்று கோடி ‘ஐபோன் 10’ வகை போன்கள் விற்பனையாகியிருக்கின்றன. விலை அதிகமானாலும் பரவாயில்லை என உலகம் போட்டி போட்டுக்கொண்டு ஐபோனை வாங்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாதுகாப்பு, இன்னொன்று தரம். அந்த இரண்டு விஷயங்களிலும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாத நிலை தான் ஆப்பிளின் அசுர பலத்தின் காரணம். ஒரு புறம் இப்படி இருந்தாலும், மக்கள் ஐபோனுக்கு அடிமையாகி விடுகிறார்கள் எனும் எதிர்ப்பும் ஒரு புறம் எழுகிறது. அதை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனமே சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இனிமேல் நாம் எவ்வளவு நேரம் ஐபோனைப் பயன்படுத்துகிறோம், எந்த ‘ஆப்’ எவ்வளவு நேரத்தை எடுத்திருக்கிறது போன்ற தகவல்களையெல்லாம் திரையிலேயே அது காட்டப் போகிறது. நம்முடைய போன் பயன்பாட்டை, நாம் குறைக்க வேண்டுமென, போனே நம்மிடம் கூறுவது புதுமை தான் இல்லையா? வசீகரிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களுக்குப்பின்னும் நிழலாய் சில தீமைகள் ஒளிந்திருக்கும். ஐபோனும் அதற்கு விதிவிலக்கல்ல. குழந்தைகள்அதிக நேரம் ஐபோனைப் பயன்படுத்துவதால்அவர்களுக்கு மன அழுத்தம், கவனச் சிதைவு, படிப்பில் மந்தநிலை, சுறுசுறுப்பின்மை போன்றவை நேர்கின்றன என ஆப்பிள் நிறுவன முதலீட்டாளர்களே கவலை தெரிவித்திருந்தனர். தொடு திரையோடு அதிக நேரம் செலவிடும்குழந்தைகள் பென்சில் பிடித்து எழுதவே தடுமாறுவார்கள் என சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி அச்சுறுத்தியது. ஆன்லைன் விளையாட்டுக்குஅடிமையாகி தினமும் ஏராளமான குழந்தைகள்மருத்துவ மனைகளை நோக்கி படையெடுக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவோருக்கு தற்கொலைஎண்ணங்களும் அதிகம் எழுவதாக அமெரிக்க பேராசிரியர் ஜீன் ட்வெங் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. குழந்தைகளை மட்டுமல்லாமல் ஸ்மார்ட் போனைஅதிகமாய் பயன்படுத்தும் பெரியவர்களையும் அதுபாதிக்கிறது. தூங்கும் போது மொபைலை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு படுத்தால் கேன்சர், ஆண்மையிழப்பு போன்றவை ஏற்படும் என கலிபோர்னியா நலவாழ்வுத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது கவனிக்கத் தக்கது. ஸ்மார்ட்போன்களைத் தவிர்க்க முடியாத இந்தகாலகட்டத்தில் என்ன செய்யலாம் பயன்பாட்டு நேரத்தைக் குறையுங்கள். ஒருகுறிப்பிட்ட நேரம் மட்டும் பாருங்கள்.இரவில் படுக்கையறையில் போனை கொண்டுசெல்லாதீர்கள். தொலைவில் இருக்கும் அறையில்போனை வையுங்கள்.மாலை முதல் காலை வரை டேட்டாவை அணைத்து வையுங்கள். முடிந்தால் பெரும் பாலான நேரங்களில்அணைத்தே வையுங்கள். குழந்தைகளின் செயல் மாற்றத்தை கண்காணியுங்கள்.அடிக்கடி போனை எடுத்து சோதிப்பதை நிறுத்துங்கள். சமூக வலைத்தளங்கள் தேவையற்ற சேட்செயலிகளை விலக்குங்கள்.பயன்படுத்தாத அத்தனை ஆப்ஸ் களையும் அழியுங்கள். நேரம் பாக்க, அலாரம் செட் பண்ண என எல்லாத்துக்கும் மொபைலை பயன்படுத்தாதீர்கள். டிஜிட்டல் சாரா பொழுது போக்கில் கவனம் செலுத்துங்கள். நேரடியாகப் பேசி மக்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளுங்கள்.இன்று (ஜூன் 29-ந்தேதி ஐ போன் வெளியான தினம்)

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தண்ணீரை தூய்மையாக்கும் தேற்றாங் கொட்டை

தண்ணீரை தூய்மையாக்கும் தேற்றாங் கொட்டை மணி. மாறன், தமிழ்ப்பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர். நல்ல தண்ணீருக்காக நம் மக்கள் படும் அல்லல் என்பது பல இடங்களில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இருக்கின்ற நீரும் மாசுடன் திகழ்வதால் அந்நீரினைத் தூய்மைப் படுத்துவதற்குப் பல ஆயிரங்கள் செலவிட்டுக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்கிறோம். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரினை விலைகொடுத்து வாங்கி அருந்தவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இன்று பரவும் பல நோய்கள் நீரின் மூலமே பரவுவதால் இத்தகு நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அன்றைய மக்கள் ஆறுகள், குளங்கள், பொதுக் கிணறுகள் இவற்றிலிருந்தே குடிப்பதற்கு நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். அப்பொழுது நீர் அனைத்து இடத்திலுமே தூய்மையாகத்தான் இருந்தது. அன்றும் சில நீர்நிலைகளில் மாசுகள் இருக்கத்தான் செய்தன. அவற்றைப் போக்கியே மக்கள் குடிநீராகப் பயன்படுத்தினர். அந்த வகையில் கலங்கல் நீரினைத்தூய்மைப்படுத்திய பழந்தமிழர்களின் நுட்பத்தை இங்கு காண்போம். ஆற்று நீர் இயல்பாக தூய்மையாகவேதான் இருக்கும். ஓடுகின்ற நீர் மணல்களுக்கு இடையே உருண்டு, திரண்டு ஓடும்பொழுது நீரிலுள்ள கசடுகள் மணலால் உறிஞ்சப்பட்டு ஆறுகளில் கலக்கின்ற மாசுகள் நீக்கப்பட்டு நீரானது தூய்மை யடைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற உலக அளவில் நீர்வளங்களைக் காப்பது, நீர் மாசுபடுவதை களைவது, குறித்து உலக நீரியல் வல்லுநர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழகத்தின் தொன்மைத்திறன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. அது என்ன வெனில் கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும்அகரமுதலியில் இல்லம் என்பதற்கு வீடு, மனைவி, இல்வாழ்க்கை என்பதோடு தேற்றா மரம் என்ற பொருளும் கொள்ளப்பெறுகின்றது. தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும்,நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப் படுகிறது. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி விடுகிறது.இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள். ‘தேற்றாங்கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை’ எனத் தமிழ் மருத்துவர்கள் இதன் அருமையான மருத்துவப் பயன்களுக்குச் சான்றளித்துள்ளனர். வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி, நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும். கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில், தொன்றுதொட்டு நீரைத் தெளியவைக்க, சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும். நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.இன்று அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதன் சிறப்பு சங்க நூலான கலித்தொகையின் 142ஆம் பாடலில் உவமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அப்பாடல், இனைந்து நொந்து அழுதனள்: நினைந்து நீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி : எல் இரா நல்கிய கேள்வன் இவன் மன்ற! மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து. என்பதாகும். இதன்பொருள் “என்னைத் துன்புறுத்தும் காமமும் ஊராரின் பழிச்சொல்லும் என் உயிரைக் காவடியாகக் கொண்டு இருபுறமும் பாரமாகத் தொங்கி என்னை நலிவுறச் செய்கின்றன. என் உயிரும் உடலும் மெலிகின்றன. யான் இறப்பதற்கு முன் என் துன்பத்தை நீக்குவீராக” என்று கூறினாள். வருந்தி அழுதாள் பகலும் இரவும் பயனின்றிக் கழிகின்றன என்று நெடிது நினைத்து, நொந்து பெருமூச்சுவிட்டாள். அந்நிலையில் ஓர் இரவில் அவள் அருகில் அன்போடு அமர்ந்திருக்கும் ஒருவனைக் கண்டோம். அவன்தான் அவளுக்கு அன்பு செய்யும் தலைவன் போலும்! அவள் இவனது மிக்க அழகிய மார்பைத் தழுவி, தேற்றாங்கொட்டையினால் தெளிவிக்கப்பட்ட தண்ணீரைப் போலத் துன்பம் நீங்கி, நலம் பெற்றாள். யாமும் ரத்தினமும், அதன் ஒளியும் போல் இவர்கள் ஒருவரின் ஒருவர் வேறல்லர் என்று மெல்லத் தெளிந்து கொண்டோம் என்று கண்டோர்கள் கூறினர். இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள பதார்த்த குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் பிரமேகம், வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 June 2018

அச்சம் தவிர்த்தால் அகிலத்தை வெல்லலாம்

அச்சம் தவிர்த்தால் அகிலத்தை வெல்லலாம் முனைவர் மு.கலைவேந்தன் இன்றைய உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏதோ ஓர் அச்சத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அச்சமின்றி வாழும்போது தான் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள நேரும். பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை எட்ட முடியும். இயலாமை என்பதை இல்லாமல் ஆக்க முடியும். ‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்றார் பாரதி; ‘அச்சம் என்பது மடமையடா’ என்றார் கண்ணதாசன். அச்சத்தின் விளைவு நம்மை பயத்தில் ஆட்டுவிக்கத் தொடங்கும். எதற்கெடுத்தாலும் பயப்படும் சூழல் உருவாகும். பய உணர்வு பதற்றத்தை அதிகப்படுத்தும். கால்களை நடுங்கச் செய்யும். கைகளை உதறல் எடுக்கச் செய்யும். வார்த்தை உளறலாகக் கொட்டத் தொடங்கும். முகம் சிவந்து போகும். எதை செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது? என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். எனவே பயத்தை தவிர்த்து வாழ்வதே சிறந்த வாழ்வியல் நெறியாகும். ஆற்றில் இறங்குவதற்கே பயந்தால், எப்படி நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்? கீழே விழுந்து காயப்பட்டு விடுவோம் என்று பயந்தால், எப்படி மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள முடியும்? விபத்தைக் கண்டு பயந்தால் எப்படி பேருந்தை ஓட்ட முடியும்? கடலைப் பார்த்து நடுங்கினால் எப்படி கப்பலில் பயணம் செய்ய முடியும்? வானைப்பார்த்து அச்சப்பட்டால் எப்படி வானூர்தியில் பயணம் செல்ல முடியும்? எதையும் பார்த்து பயப்படுவதும், இடையூறுகளைக் கண்டு அச்சப்படுவதும் அறியாமையாகும். இன்றைக்கும் சில குழந்தைகள் கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார்கள், சிலர் எறும்பைக் கண்டு அச்சப்படுவார்கள், மரவட்டைகளைப் பார்த்து சிலர் அறுவறுப்பார்கள், எட்டுக்கால் பூச்சிகளைப் பார்த்து சிலர் அலறுவார்கள், இவையெல்லாம் தேவையற்ற அச்சங்களாகும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் பக்குவமாகச் சொல்லி அவர்களின் பயத்தைப் போக்கி வாழ வழிகாட்ட வேண்டும். சில முதியவர்கள் இயற்கை இடர்பாடுகளைக் கண்டு அச்சத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வெயிலை பார்த்து பயப்படுகிறார்கள், சிலர் மழையைக் கண்டு அஞ்சுகிறார்கள், சிலர் குளிரைக் கண்டு நடுங்குகிறார்கள், சிலர் பனியைப் பார்த்து புலம்புகிறார்கள், சிலர் காற்றைப் பார்த்து வருத்தமடைகிறார்கள். இவையெல்லாம் நிலையானவை அல்ல. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு சூழல் என்பது இயற்கையின் நியதி என்பதை உணர்ந்து பயத்தைப் போக்கி வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். வேலை கிடைக்காததால் எதிர்காலம் இருளாகப் போய்விடுமோ? என்ற பய உணர்வு இன்றைய பெரும்பாலான இளைஞர்களிடம் காணப்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது. துணிவே துணை, துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தை என்பதை உணர்ந்து இன்றைய இளைஞர்கள் சுயதொழிலில் முன்னேற்றமும் ஆர்வமும் கொள்ளுதல் வேண்டும். சில இளம்பெண்கள் கூட வாழ்வியல் இன்பத்தைப்பற்றி கவலைப்படாது தனிமையில் வாழ்வதே சிறந்த வாழ்வாகக்கருதி வாழ்கின்றனர். அவர்களுக்கு ஆண்களை கண்டாலே அச்சத்தை வரவழைத்துக்கொள்கின்றனர். திருமணம் ஆனால் குழந்தைப்பெற வேண்டுமே என்ற அச்சத்திலேயே மண வாழ்க்கையை தள்ளிப் போட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குழந்தைப் பெற்றுக்கொண்டால் தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்ற அறியாமை பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகளைப் பெற்றால் நம்மால் முறையாக வளர்க்க முடியுமா? என்ற பயவுணர்வோடு வாழ்க்கையை நடத்தி வருவதும் வேதனை அளிப்பதாக உள்ளது. அச்சத்தைப் போக்கி இல்லற வாழ்வில் ஈடுபடுவதே இளம்பெண்களின் இன்றைய முக்கியத் தேவையாகக் கருதப்படுகிறது. அச்சமும் பயமுமின்றி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சங்கடங்கள் வரும் போது சமாளிக்கும் ஆற்றலைப் பழகிக்கொள்ள வேண்டும். பகைவர்களையும் நண்பர்களாக கருதும் எண்ணத்தை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற மனிதர்கள் நம்மைக் காயப்படுத்த முயன்றாலும் பொறுத்துக்கொள்ளும் உயரிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு பயப்படக் கூடாது. தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதை இதயத்தில் எப்போதும் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு தற்கொலை போன்ற முடிவுகளை எடுப்பது கோழைத்தனம் என்பது மட்டுமல்ல; முயற்சியற்றவர்களின் கையாலாகாத் தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சரியாகச் சொல்லுதல், சரியாக செய்தல், சரியாக நடத்தல், சரியாகப் பழகுதல், சரியாகத் திட்டமிடுதல், சரியாகப் பயணித்தல் போன்றவை மட்டுமே அச்சத்தை அகற்றும், பயத்தைப் போக்கும், பதற்றத்தை விலக்கும், பகுத்தறிவை வளர்க்கும், பண்பாட்டை காக்கும், வாழ்வியல் நெறிகளாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் ‘பிளாஸ்மா’

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் ‘பிளாஸ்மா’ வெப்ப பிளாஸ்மா பேராசிரியர் சே.சகாய ஷாஜன் பொருட்கள் சாதாரணமாக மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. அவை திட நிலை, திரவ நிலை மற்றும் வாயு நிலை ஆகும். உதாரணமாக, தண்ணீரை எடுத்துக்கொண்டால் அது திரவநிலையில் உள்ளது. அதன் வெப்பநிலையை குறைத்து குளிர்விக்கும் போது திட நிலையில் உள்ள ஐஸ்கட்டியாக மாறுகிறது. தண்ணீரை சூடேற்றும்போது அது வாயுநிலையில் நீராவியாக மாறுகிறது. இவ்வாறு பொருட்கள் மூன்று நிலைகளில் காணப்படுவதையே நாம் அறிவோம். இது தவிர நான்காம் நிலை ஒன்று உள்ளது. அதை ‘பிளாஸ்மா’ நிலை என்று அழைக்கிறார்கள். அது திட, திரவ, வாயு நிலை அல்லாத ஒரு புதிய நிலை ஆகும். வாயுநிலையில் உள்ள ஒரு பொருளை அதிகமாக சூடுபடுத்தும் போது பிளாஸ்மா நிலை உருவாகிறது. ஒரு வாயுவை இரண்டு மின்முனைகளுக்கு இடையே எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதிக மின்ஆற்றலை செலுத்த வேண்டும். இப்போது அதிக அளவில் வெப்பம் உருவாகி 15 ஆயிரம் டிகிரி வெப்பநிலையை அடைகிறது. இந்த அதிக வெப்பநிலையில் வாயுவில் உள்ள மூலக்கூறுகள் அணுக்களாகவும் மற்றும் எலக்ட்ரான்களாகவும் பிரிகின்றன. அப்போது உருவாகும் கலவை பாகு போன்ற தன்மை கொண்ட திரவம் போல் காணப்படுகிறது. இக்கலவை வாயுக்களை போல் அல்லாமல், மின்சாரத்தை கடத்துகிறது. அதே நேரம் காந்தத்தன்மையும் கொண்டது. இது ஒரு புதிய நிலை ஆகும். இதையே பொருட்களின் நான்காம் நிலை என்னும் ‘பிளாஸ்மா’ என்ற பெயரால் அழைக்கிறோம். இயற்கையில் பிளாஸ்மா உள்ளதா? என்ற கேள்வி எழலாம். வானில் தோன்றும் மின்னல் இயற்கையில் காணப்படும் பிளாஸ்மா ஆகும். பூமியைச் சுற்றி காணப்படும் அயனி மண்டலமும் பிளாஸ்மா ஆகும். சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் வெளியேற்றும் ஒளியினால் அண்டவெளியில் உள்ள வாயுக்கள் வெப்பமடைந்து பிளாஸ்மா நிலையை அடைகின்றன. இதனால் அண்டவெளி எப்போதும் பிளாஸ்மா நிலையிலேயே உள்ளது. இத்தகைய பிளாஸ்மாவை சோதனை சாலைகளில் எவ்வாறு உருவாக்க முடியும்? என்பதை பார்க்கலாம். பொதுவாக பிளாஸ்மா என்பது குளிர் பிளாஸ்மா, வெப்ப பிளாஸ்மா என இரு வகையாக அறியப்படுகிறது. வெப்ப பிளாஸ்மாவை உருவாக்கும் முறையை அறிந்து கொள்வோம். வாயுக்களை அதிகமாக சூடுபடுத்தும்போது அயனிகளும் எலக்ட்ரான்களும் உருவாகின்றன. இவைகளுக்கு இடையேயான வெப்ப வித்தியாசம் மிக குறைவாக இருக்கும். அதனால் வெப்பநிலை 15 ஆயிரம் டிகிரி வரை உயர்கிறது. இதனையே வெப்ப பிளாஸ்மா என்று அழைக்கிறோம். மாறாக குறைந்த வெப்ப ஆற்றலைக் கொண்டு பிளாஸ்மாவை உருவாக்கும்போது அயனிகளுக்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையே உள்ள வெப்ப வித்தியாசம் அதிகமாகிறது. எலக்ட்ரான்கள் அதிக வெப்பத்துடனும், அயனிகள் குறைந்த வெப்பத்துடனும் இருக்கும். அதனால் அத்தகைய பிளாஸ்மா குறைந்த வெப்பத்துடன் காணப்படுகிறது. இவை குளிர் பிளாஸ்மா என்று அழைக்கப்படுகிறது. அண்டவெளி இயற்கையாக காணப்படும் குளிர் பிளாஸ்மாவுக்கான எடுத்துக் காட்டாகும். வெப்ப பிளாஸ்மாக்கள் உலோக ஆக்ஸைடுகள், கார்பைடுகள், நைட்ரைடுகள் மற்றும் நானோ துகள்கள் உருவாக்கவும் மேற்பூச்சுகளிலும் பயன்படுகின்றன. பிளாஸ்மாக்கள் மனித இனத்திற்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதனை சற்று விரிவாக பார்க்கலாம். மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை எவ்வாறு அழிப்பது என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். இத்தகைய நச்சுக் கழிவுகள் தற்சமயம் அதிக வெப்பத்தை செலுத்தி எரிக்கப்படுகின்றன. அவ்வாறு எரிக்கப்படும் போது வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், சுற்றுப்புறத்திற்கும் மனிதர்களுக்கும் கெடுதல் உண்டாக்குகின்றன. மருத்துவமனை கழிவுகளை எரிப்பதற்கு வெப்ப பிளாஸ்மா பயன்படுகின்றது. இந்த முறையில் நச்சு வாயுக்கள் வெளியேறுவதில்லை. எனவே இது பாதுகாப்பான தொழில்நுட்ப முறையாகும். நுண்ணுயிர் கிருமிகளால் பல்வேறு பாதிப்புகள் உருவாவதை நாம் அறிவோம். இத்தகைய நுண்ணுயிர்களை அழிக்கும் பணியில் குளிர் பிளாஸ்மாக்கள் பயன்படுகின்றன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் புண்களுக்கு போடும் கட்டுகள் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பிளாஸ்மா உதவுகிறது. பிளாஸ்மா கதிர்களால் நுண்ணுயிர்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. விவசாயத் துறையிலும் குளிர் பிளாஸ்மாவை பயன்படுத்த முடியும். விதைகள் அதிக அளவில் முளைப்பதற்கும், பூச்சிகளால் தாக்கப்படாமல் பாதுகாப்பதற்கும் குளிர் பிளாஸ்மாவின் கதிர்வீச்சு பயன்படுகின்றது. மற்ற கதிர்வீச்சுக்களைபோல விதைகளின் தன்மையை இது மாற்றுவதில்லை. அதோடு விதைகள் அதிக நீரை உறிஞ்சுவதற்கும் இது உதவுகின்றது. இதனால் அதிக அளவில் விதைகள் முளைக்கின்றன. பிளாஸ்மா கதிர் வீச்சின் மூலம் எளிதில் கெட்டுப் போகும் உணவுப் பொருட்களை அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். பிளாஸ்மா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் போன்ற சத்துகள் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கும். இதே போல, குடிநீரை சுத்தப்படுத்துவதற்கும் பிளாஸ்மாவை பயன்படுத்த முடியும். பிளாஸ்மா டார்ச் என்ற கருவியின் மூலம் ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. இது வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய பிளாஸ்மா டார்ச்சுகள் இன்னும் சிறிது காலத்தில் நமது நாட்டிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். பிளாஸ்மா ஆராய்ச்சி மையம் இந்தியாவில் மத்திய அரசின் உதவியுடன் குஜராத்திலுள்ள காந்தி நகரில் இயங்கி வருகின்றது. பிளாஸ்மா தொழில்நுட்பத்தை அதிக அளவில் செயல்படுத்துவதற்கான வழிகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஊக்கப்படுத்தி வருகிறது. பிளாஸ்மா தொழில்நுட்பம் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதனை நிறுவுவதற்கு ஏற்படும் செலவுகளும் பிளாஸ்மா துறை அதிக அளவில் விரிவடையாததற்கு ஒரு காரணமாகும். வரும் காலங்களில் இந்தியாவிலும் பிளாஸ்மாவின் பயன்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 June 2018

திருநங்கைகளின் சமூகநிலையை உயர்த்துவோம்

திருநங்கைகளின் சமூகநிலையை உயர்த்துவோம். முதுமுனைவர் தர்மராஜா, திருநங்கை பாதுகாப்பு மாற்று மசோதாவை எழுதியவர் ஆண், பெண் என்னும் இரு பாலினங்கள் மட்டுமே மனிதர்கள் எனச் சமூகம் நெடுநாள் கருதிவந்தது. திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தை மனிதர்களுள் ஒரு பகுதியாகவே எண்ணிப் பார்க்காமல் புறக்கணித்துவந்தனர். இதனை இருபாலின ஆதிக்கம் என்பார்கள். உலகமொழிகளுள் ஒரு மொழியின் இருபாலின ஆதிக்கத்தைத் தெரிந்துகொள்ள அதன் படர்க்கை ஒருமைப்பெயர்களைப் பார்த்தால் போதும். ஆங்கிலத்திலும் சரி இன்னபிற மொழிகளிலும் சரி, அனைத்து மொழிகளும் இருபாலின ஆதிக்கத்தோடே இருக்கின்றன (அவன்/ அவள்). ஆனால் இந்த இருபாலின ஆதிக்கத்தை உடைத்து நொறுக்கிய மொழியாகத் தமிழ் மொழி (அவன், அவள், அவர்) திகழ்கிறது. ஒருவன் என ஆணையும், ஒருத்தி எனப் பெண்ணையும் குறிப்பதைப்போல ஒருவர் என இருபாலினத்துக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்திக்கொள்ளத் தமிழ் இலக்கணம் இசைவளிக்கிறது. சிவபெருமான் ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தநாரீசுவரனாக வடிவெடுத்தபோது, அவன் என்பதா? அவள் என்பதா? எனக் குழம்புவதாகவும் நல்லவேளையாக அவர் என்னும் சொல் தமிழில் மட்டும் விளங்குவதால் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குமரகுருபரர் என்னும் புலவர் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் என்னும் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டபோது அர்ச்சுனன் பிருகன்னளை என்னும் திருநங்கை வடிவம் தாங்கி விராடதேசத்திற்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் ஏனைய நாடுகள் புறக்கணித்தாலும் நம் நாட்டில் திருநங்கை என்னும் மூன்றாம் பாலினம் நம் முன்னோரால் புறக்கணிக்கப்படவில்லை. நாம்தான் நம் முன்னோரைப் பின்பற்றித் திருநங்கையருக்கு உரிய மதிப்பை வழங்கத் தவறிவிட்டோம். இப்போது ஏற்பட்டுள்ள சமூகவிழிப்புணர்வு திருநங்கைகளை மதித்து அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகை காண வாய்ப்பளித்து வருவது ஒரு மகிழ்வான செய்தி எனலாம். திருச்சி சிவாவாலும், மத்திய அரசாலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருநங்கை பாதுகாப்பு மசோதாக்களுக்கு மாற்றாக, தமிழக திருநங்கைகள் முன்வைத்த திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா-2016 திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தையும், பாலியல் விருப்பு சுதந்திரத்தையும், திருமணம் செய்யும் உரிமையையும், இடஒதுக்கீட்டையும் கேட்டு முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதாக்கள் போதிய புரிதலின்றி கிடப்பில் போடப்பட்டு ஒரு பிற்போக்கு மசோதா முன்னிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட அரசின் புரிதலல்ல, மாறாக இந்த நிராகரிப்பு பிற்போக்கு சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே. ஆண், பெண் என்ற இருபாலின ஆதிக்கத்திலேயே வாழக் கற்றுக் கொடுக்கப்பட்ட இந்த சமூகம் புதிய பாலினங்களையோ, பாலியல் விருப்புகளையோ, உடலமைப்புகளையோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வடமாநிலங்களில் திருநங்கைகள் கடவுளுக்கு நிகரானவர்களாக மதிக்கப்பட்டாலும், அவர்களுக்குச் சமூக, சட்ட அங்கீகாரங்கள் தமிழகத்தில் கிடைத்த அளவு வேறெங்கும் கிடைக்கவில்லை. இந்த மத்திய அரசின் மசோதாவில் திருநங்கைகளை அலிகள் என்று கொச்சையாக அழைப்பது சமூக இழிவின் சட்ட வெளிப்பாடன்றி வேறென்ன? அது மட்டுமன்றி இந்த மசோதா இட ஒதுக்கீட்டை, சட்டரீதியான திருமணத்தையும் திருநங்கைகளின் பண்பாட்டையும் வாழ்வாதாரத்தையும் மறுக்கிறது. இப்படிப்பட்ட மசோதாவிற்கு எதிராக திருநங்கைகள் ஜனநாயகரீதியில் போராட்டங்களை நடத்தினாலும் இதர பிரிவினரின் பங்கேற்பும் கலந்துரையாடல்களும் அவர்கள் வெற்றிபெற அவசியம். பாலியல் விருப்பு என்பது சமூகக் கட்டுப்பாடு சார்ந்ததல்ல. அது அவரவர் விருப்பு சார்ந்தது என்பதை மனித சமூகம் ஒத்துக்கொள்ள தொடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், இந்திய தண்டனைச் சட்டம் 377 மற்றும் அதன்மீதான இந்திய நீதிமன்றங்களின் பார்வை என்பது பாலியல் விருப்புச் சுதந்திரத்தின் கதவை இறுக்கிப் பூட்டுகிறது. அரசைவிட, நீதிமன்றங்களைவிட, அரசியல்வாதிகளைவிட, மதங்களைவிட மக்களே மகத்தான சக்திகள் என்பதை உலகிற்கு சொன்ன சமூகம் தமிழ்ச் சமூகம். எனவே மாற்றுப்பாலினங்களோ, ஒரே பாலியல் விருப்புகளோ பாவமுமல்ல, கடவுளின் சாபமுமல்ல. மாறாக இவ்விருப்பங்கள் இயற்கையானவை மட்டுமல்ல, காலங்காலமாக நம் சமூகத்தில் இருந்து வருபவைகளே. இப்படிப்பட்ட விருப்பங்களை சமூக அவலங்களாகச் சித்தரிப்பது இயற்கைக்கு எதிரானது. உங்கள் குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ இருக்கலாம். அவர்கள் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களின் பாலியல் ஈர்ப்பு யாரை நோக்கியும் இருக்கலாம். அவர்களையும், அவர்களின் ஈர்ப்பையும், உணர்வுகளையும் காயப்படுத்தி விடாதீர்கள். அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள். மாற்றுப்பாலினத்தவரின் அங்கீகாரத்திற்கான சமூகப்போராட்டத்திலும், சட்டப்போராட்டத்திலும் நீங்களும் ஈடுபடுங்கள். அதற்கு முன்னோட்டமாக இந்த மசோதாவை பற்றிய கலந்துரையாடல்களில் பங்கு பெறுங்கள், திருநங்கைகளோடு அவர்களின் போராட்டத்தில் உடன் நில்லுங்கள். நினைவில் வையுங்கள். அன்பென்பது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல, அது வரம்புகளற்றது. திருநங்கைகளும் மனிதர்களே. அவர்கள் நம் குடும்பத்திலும் இருக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஊரெல்லாம் மணக்கும் தேர்மாலை

ஊரெல்லாம் மணக்கும் தேர்மாலை கவிஞர் செங்கதிர்வேலவன், திருச்செந்தூர் மகிழ்ச்சியின் அடையாளம் மலர்கள். அவைகளின் வண்ணங்கள் வானவில் அழகு. அதன் வாசனை நேசத்தின் பிரதிபலிப்பு. மனிதன் முதல் கடவுள் வரை மலர்களை விரும்புகின்றனர். காதலர்களுக்கு ரோஜாவும், மணமானவர்களுக்கு மல்லிகையும் பிடித்தமான மலர்கள். இந்த மலர்களின் சங்கமமான ஊர் தோவாளை. இவ்வூர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை அழகு கொஞ்ச அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் மலர் முழுக்கு திருவிழா வேறு எங்கும் காண முடியாத சிறப்புமிக்க விழா ஆகும். அன்று காலை பக்தர்களின் பால்குட ஊர்வலம், இரவு தோகை மயில் மீது அமர்ந்த முருகனுக்கு வாசனை மலர்களால் அபிஷேகம் நடைபெறும். நூற்றுக்கும் மேற்பட்ட கூடைகளில் எடுத்துவரும் மலர்களை முருகனுக்கு காணிக்கையாக்கி மகிழ்வார்கள். முருகன் திருமுகம் வரை சிறுகுன்றாக மலர்கள் குவிந்து வேலவன் புன்னகை திருமுகத்தை தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். தோவாளை ஊரில் உள்ள தென்னை மரங்கள், மலர் தோட்டங்கள், வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இங்கு முத்தாரம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில், சுடலைமாட சுவாமி கோவில், செக்கர் கிரி முருகன் கோவில் உள்பட 30-க்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களின் வழிபாட்டுக்கு பூத்தோட்டம் அமைத்து மலர்கள் பெற மக்கள் முற்பட்டதன் விளைவாக இவ்வூரில் மலர் சந்தை அமையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இப்பகுதியில் விளையும் மலர்கள் வாசனை மிகுந்து காணப்பட்டதால் அவைகளை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டது. இங்கு தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் மலர்களை வாங்க வருகின்றனர். மலர் சந்தை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தோவாளை மலர் சந்தை வியாபாரத்தில் சாதனை புரிய தொடங்கிவிட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் மலர் சந்தையில் தற்போது தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வணிகம் நடந்து வருகிறது. தோவாளையில் காலை கதிரவன் உதிக்கும் முன்பே மலர் சந்தை களை கட்ட தொடங்கிவிடும். சாதி, மத பேதமின்றி அனைத்து வீடுகளிலும் மலர் சரம், மலர் மாலை கட்டும் பணி நடைபெறும். இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் எளிதாக வருவாய் ஈட்டி வருகின்றனர். தற்போது மலர்களின் விலையை நிர்ணயம் செய்யும் வியாபார தலைமையிடமாக தோவாளை மாறிவிட்டது.

திருமணம், சடங்கு, திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் பொதுமக்கள் மலர்களை வாங்க கூடும் ஊர் தோவாளை தான். திருமணமான மாலைகள், திருவிழா மலர் தட்டிகள், தேர்மாலைகள் செய்வதில் தோவாளை தொழிலாளர்கள் அபார ஆற்றல் படைத்தவர்கள். இங்கு கட்டப்படும் தேர் மாலைகளை திருவிழா காலங்களில் மட்டுமே காண முடியும். மலர் சந்தை அருகில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில், சுடலை ஆண்டவர் கோவில் திருவிழாக்களுக்கு அதிக அளவில் தேர்மாலைகள் கட்டப்படும். விலை மதிப்புமிக்க தேர்மாலைகள் கலை வடிவத்தில் இதயத்தை திருடும். அவைகளுக்கு புதிய வஸ்திரம் அணிவித்து கட்டிய கலைஞர்களுக்கு கணையாளி அணிவித்து கவுரவிப்பார்கள். தோவாளை தேர்மாலைக்கு தற்போது ஆர்டர்கள் குவிய தொடங்கிவிட்டன.

கேரளாவில் நடைபெறும் கோவில் திருவிழா மற்றும் திருமண விழாவுக்கும் தேர்மாலை வாங்கி செல்கின்றனர். தேர்மாலை 4 அடி முதல் 15 அடி விட்டம் கொண்ட மூங்கில் தட்டிகள் மீது கட்டப்படுகின்றன. இம்மாலைக்கு ஆரணி மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். இந்த மலர்கள் 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் என்பதால் அதற்கு முதலிடம் வழங்கப்படுகிறது. மேலும், ரோஜா, மல்லிகை, முல்லை மலர்களை கொண்டும் தேர்மாலை கட்டப்படுகிறது. அவை ஒருநாள் மட்டுமே வாடாமல் இருக்கும். தேர்மாலைக்கு 15 கிலோ முதல் 150 கிலோ வரை மலர்களை பயன்படுத்துகின்றனர். ஒருவர் தலைமையில் 10 பேர் ஒருநாள் முழுவதும் வேலை செய்தால் தான் தேர்மாலை செய்யும் பணி முழுமை பெறும். இம்மாலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை மதிப்பு உடையதாக கட்டப்படுகின்றது.

தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகை காலங்களில் தான் அதிகமாக வணிகம் நடைபெறும். இப்பண்டிகையையொட்டி 10 நாட்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கேரள வியாபாரிகள் மலர்களை போட்டிப் போட்டு வாங்கி செல்வார்கள். அப்போது தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை வியாபாரம் நடைபெறும். ஓணத்துக்கு முந்தைய நாள் ஒரே நாளில் ரூ.30 கோடி வரை வியாபாரம் நடக்கும். கேரளாவுக்கு வாங்கி செல்லப்படும் மலர்கள் அத்தப்பூ கோலம் போட பயன்படுத்தப்படும். கிரேந்தி, ரோஜா மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். வளர்பிறை முகூர்த்த நாட்களிலும் தோவாளை மலர் சந்தையில் வணிகம் அதிகமாக நடைபெறும். அன்று அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை வணிகம் நடக்கும். தோவாளை மலர் சந்தை மதுரைக்கு அடுத்து பெரிய மலர் சந்தையாக திகழ்கிறது. இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் விளையும் மலர் தான் அதிகமாக கொண்டுவரப்படுகிறது. இவ்வூரை சேர்ந்த மாடசாமி பண்டாரம் என்பவர் மலர் தட்டி அலங்காரம் செய்வதில் புகழ் பெற்றவர். இவரது திறமையை பாராட்டி மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. மணக்கும் தோவாளைக்கு தேர்மாலை பெரும் புகழ்சேர்த்துள்ளது. தேர்வீதி வலம் வருவதால் தேர்மாலையின் மணம் ஊரெங்கும் மணக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 June 2018

கண்ணீரால் கவுரவிக்கப்பட்ட ஆசிரியர்!

கண்ணீரால் கவுரவிக்கப்பட்ட ஆசிரியர்! இரா. நாகராஜன் வகுப்பறையின் தரையில் அமர்ந்து மாணவிகளோடு மத்திய உணவு... அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என எல்லாவற்றிலும், கடந்த சில நாட்களாக ‘பகவான்... பகவான்’ என்ற நான்கு எழுத்து, ஒளி ஒலியாக பவனி வந்துகொண்டிருக்கிறது. யார் இந்த பகவான்? பாடத்தில் பிடிப்பு... ஆசிரியர் மீது பிரியம் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களில், ஒருவர்தான் கோவிந்த் பகவான். பள்ளிப்பட்டு அருகே உள்ள பொம்மராஜ்பேட்டை கிராமத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த இவர், அரசுப் பள்ளியிலும் அரசுக் கல்லூரியிலும் பயின்றவர். வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2014-ம் ஆண்டு ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலோருக்கு ஆங்கிலப் பாடம் ஒரு கசப்பு மருந்தாகத்தான் இருந்து வருகிறது. இந்நிலையில், வெளியகரம் அரசுப் பள்ளியில், ஆசிரியர் பகவான் தன்னுடைய கற்பிக்கும் திறனாலும் அரவணைப்பான அணுகுமுறையாலும் ஆங்கிலப் பாடத்தைத் தித்திப்பாக மாற்றித் தந்தார். அதன் விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியகரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதன் வெளிப்பாடாக, மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களில் ஒருவரானார், ஆங்கில ஆசிரியர் பகவான். போகாதீங்க சார்... இந்நிலையில், பணி நிரவல் கலந்தாய்வில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் பகவான். இதை விரும்பாத வெளியகரம் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி விடுவிப்பு உத்தரவு பெற வெளியகரம் அரசுப் பள்ளிக்கு வந்தார் பகவான். அவர் மீது மாணவ-மாணவிகள் வைத்திருந்த அதீத பாசம் அப்போது கிளர்ந்தெழுந்தது. ‘சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்’ என மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பாசப் போராட்டத்தில் சிக்கித் திணறிய பகவான், கண்ணீர் மல்க பள்ளியிலிருந்து விடைபெற்றுச் சென்றார். இந்தப் பாசப் போராட்டக் காட்சிகள் ஊடகங்கள் மூலம் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டன. அதன் விளைவு, பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்னைச் செதுக்கிய ஆசிரியர் இந்தப் பாசப் போராட்டம் குறித்து, பகவான் என்ன சொல்கிறார்? “எனக்கு ஆரம்பக் கல்வியைக் கற்பித்த ஆசிரியர்களில் ஒருவர் என் 4-ம் வகுப்பு ஆசிரியர் உமாபதி. அவர் மாணவர்களிடம் காட்டிய அன்பும் அவருடைய கற்பித்தல் முறையும் என்னையும் ஒரு ஆசிரியனாக உருமாற்றியது. அதைத் தொடர்ந்து, வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அரவிந்த், என் கற்பித்தல் பணிக்கு முன்னுதாரணமாக விளங்கிவருகிறார். நான் மாணவ-மாணவிகளை நண்பராக... அவர்களின் குடும்ப உறுப்பினராக அணுகிவருகிறேன். குறிப்பாக, நன்றாகப் படிக்கும் மாணவனைவிட, சுமாராகப் படிக்கும் மாணவனிடம் உள்ள நல்ல விஷயங்களை, சக மாணவர்களின் கைதட்டல்களால் அங்கீகரித்து வருகிறேன். மாணவர்களிடம் ஒருபோதும் கண்டிப்பு காட்டுவதில்லை. அன்பைத்தான் காட்டி வருகிறேன்” என்கிறார் பகவான். தேவை கற்பனைத் திறன் கற்பித்தல் பணி தோல்வியுறும் போதுதான் கண்டிப்பு தேவைப்படும். மாணவர்களின் கேள்விகளுக்கும் சுயசிந்தனைக்கும் ஈடுகொடுக்க முடியாத ஆசிரியர்கள்தாம் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தி கட்டுப்படுத்த முயல்கிறார்கள். கற்பித்தல் பணியில் கண்டிப்பு தேவை இல்லை என்ற தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறார் இவர். “சுவராசியமான உரையாடல்கள், கதைகள், கவிதை, ஜோக் போன்றவற்றை மாணவர்களிடம் பகிர்ந்து, வகுப்பறையை மாற்றிவருகிறேன். மாணவர்கள் சார்ந்தும் என்னைச் சார்ந்தும் வெளி உலக நிகழ்வுகள் சார்ந்தும் தொடர்ந்து உரையாடுவது என்னுடைய வழக்கம். குழந்தைகளின் ஆளுமை மேம்பாட்டுக்கு உதவும், அவர்களுடைய பாடத்தோடு தொடர்புடைய குறும்படங்கள், வீடியோ காட்சிகளை வாரம் ஒரு முறை திரையிட்டு, அது குறித்து விவாதம் நடத்திவருகிறேன். இப்படி, மாணவர்களின் ஐம்புலன்களையும் சென்றடையும் வகையில் என் கற்பித்தல் பணி தொடர்கிறது என் கற்பித்தல் பணிக்கு மாணவ-மாணவிகள் கண்ணீரால் அங்கீகாரம் அளித்துள்ளனர். மாணவர்கள் எனக்கு அளித்த இந்த அங்கீகாரம், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கானது” என்கிறார். டி.சி. வாங்குவோம்! ஆசிரியர் பகவான் குறித்து, வெளியகரம் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்? “பகவான் சார் எங்களுக்கு ஆசிரியராக மட்டுமல்ல, நண்பராக இருந்து வருகிறார். அவர் பாடம் நடத்தினால், கடினமான பாடம்கூட ஈஸியாக இருக்கும். பகவான் சார் பாடம் நடத்தினால், போர் அடிக்காது. காரணம் அவர், பாடத்தைக் கதையாகச் சொல்வார்; பாடலாகப் பாடுவார்... இப்படி அவர் சூப்பராகப் பாடம் நடத்துவார். பகவான் சார் எங்கள் பள்ளியில் இருந்தால்தான் 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் நாங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். அவர் வெளியகரம் பள்ளியைவிட்டுச் சென்றால், நாங்களும் டி.சி. வாங்கிக்கிட்டு, அவர் செல்லும் பள்ளிக்குச் செல்வோம்” இப்படி பகவான் மீது அன்பை பொழிகிறார்கள் மாணவர்கள். தனியார் பள்ளிகளில்தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலோரின் பார்வையை அரசுப் பள்ளிகள் பக்கம் திருப்பியிருக்கிறார் ஆசிரியர் பகவான்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மறைந்து வரும் மாபெரும் மருத்துவம்

மறைந்து வரும் மாபெரும் மருத்துவம் எழுத்தாளர் காயத்ரி மது ஒரு சிறந்த மருத்துவம் என்பது நோயை முழுதாகக் கண்டறிந்து மீண்டும், நோய் வராமல் தடுப்பதே ஆகும். பக்க விளைவுகள் இல்லாமல் மீண்டும், மீண்டும் மருத்துவமனைக்கு வராத படி ஒரு நோயாளிக்குச் சிகிச்சை அளித்து, நோயை முழுதாகக் குணப்படுத்தி ஆயுள், ஆரோக்கியம் தருவதே சிறந்த மருத்துவ முறை என்கிறார் சுஸ்ருதர். நம் மருத்துவ உலகின் தந்தை. வேத காலத்தில் வாழ்ந்து கிட்டத்தட்ட 1100-க்கு மேல் நோய் வகைகள், 700 வகையான மூலிகை மருந்துகள், 600-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டறிந்தவர். ஆனால் அவர் கண்டுபிடித்த பல அரிய வகை மூலிகைகள், மருத்துவ முறைகள் மறைந்து, மறக்கப்பட்டு வருகிறது. வழிவழியாக அந்த மருத்துவ முறை நம் பாரம்பரியமான பாட்டி வைத்தியம் மூலமும் வழக்கத்தில் இருந்தது. நம் முன்னோர்கள் காலத்தில் தீராத நோய், உயிர்க்கொல்லி நோய் என்று எதுவும் அதிகம் இல்லை. இன்றும் எண்பது, தொண்ணூறு என்று வயது தாண்டிய முதியவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ப்பில் ஒரு பாட்டியின் கை வைத்தியம் என்பது இன்றியமையாதது. சளி, அஜீர்ணம், குடல் புண், மலச்சிக்கல், சருமநோய், வாயுத் தொல்லை, குழந்தை வளர்ப்பு, பிரசவம், வலிப்பு என்று பாட்டி சொல்லாத வைத்தியம் இல்லை. மாரடைப்புக்கு கூட முதலில் ஒரு உப்புக் கல்லை வாயில் அடக்கிக் கொண்டால் மருத்துவரிடம் போகும் வரை தாங்க முடியும் என்றதும் பாட்டிதான். வாழ்க்கை முறை மாறி, சின்ன வலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத மனநிலை, எதற்கெடுத்தாலும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று போய்விட்டு கடைசியில் ஒன்றுமில்லை என்று கூறுவதற்குள் நமக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், பண விரயம். இதை வீட்டுப் பாட்டி ஒன்றுமில்லை, ஒரு சிட்டிகை ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்னு, தண்ணீர் குடி என்று சொல்லி தீர்த்துவிடுவாள். பண்டைய காலத்தில் சித்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதி வைத்த வைத்திய முறைகள், மூலிகை மருந்துகள் அதிகம் நம் கைக்கு கிடைக்கவில்லை. அப்படியே நம் பொறுப்பில்லாத்தனத்தால், அக்கறையின்மையினால் அழிந்து போய்விட்டன. நம் பண்டைய மருத்துவமுறையை பின்பற்றி, வேம்பு, மஞ்சள், திருவாச்சி, துளசி, வில்வம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிறது. அதை நாம் வாங்கி, அமெரிக்காவிலிருந்து வந்தது, லண்டன் தயாரிப்பு என்று பெருமையாகப் பயன்படுத்துகிறோம். சமீபத்தில் கூட ஒரு வடநாட்டவர், ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தன் உறவினர்களை கடைசி முறை சந்திப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அங்கு ஒரு உறவினர் அறிவுரையின் மூலம், சரி சாப்பிட்டு பார்க்கலாம் என்று பஞ்சகாவ்யம் (பசுவின் கோமியத்திலிருந்து தயாரிப்பது) என்ற ஒரு ஆயுர்வேத மருந்து சாப்பிட அதிசயமான முறையில் நோய் குணமாகி உள்ளது. அவர் இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார் என்ற செய்தி வெளியானது. பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் நம் சித்தர்கள் உருவாக்கிய மருத்துவ முறை. அன்பும் அக்கறையும், பிரியமுமாய் நோயிலிருந்து மனிதன் நிரந்தரமாக மீண்டு வந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது. ஆரம்பத்திலேயே சின்ன கை வைத்தியமாகச் செய்து கொண்டால் பெரிய வியாதிகள் இல்லாமல் காக்க முடியும். அதைத்தான் வரும்முன் காப்போம் என்கிறது பாட்டி வைத்தியம். நாம் இந்த உலகிற்கு ஒரு பயணம் வந்திருக்கிறோம். இதன் அழகுகளை ரசித்து, ஆரோக்கியமாய் வாழ்ந்து நம் இடம் வந்ததும் இறங்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நம் உடல் மீது அக்கறையும், கரிசனமும் கொண்டு பராமரித்தால் இறுதி வரை நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். மறைந்து வரும் மாபெரும் அற்புத மருத்துவ முறையை நாம்தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அனைத்து வகையான மருத்துவமுறைகளின் தாயகம் நம் தமிழகம் என்பதை மறக்காமல் இருந்தாலே அனைத்தும் சாத்தியம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வித் துறைக்கு தேவையான தரமாற்றங்கள்

கல்வித் துறைக்கு தேவையான தரமாற்றங்கள் முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்ப நமது கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். உயர் கல்வித்துறையில் 4 விதமான பிரச்சினைகள் உள்ளன. தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமான அளவுக்கு பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அந்த கல்லூரிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இதனால் வேலையின்மை அல்லது படித்த படிப்புக்கு தொடர்பில்லாத துறையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. ஒரு காலத்தில் இருந்ததைப் போல இப்போது மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பு படிக்க வெறிப்பிடித்து அலைவதில்லை. இது வரவேற்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இத்தனை கல்லூரிகள் தேவையில்லை. 300 கல்லூரிகளை மூடிவிடலாம். ஆனால் அது சுலபமல்ல. இதில் ஒரு மாற்றம் செய்ய வேண்டுமென்றால், மாணவர்களின் செயல்திறனை வளர்க்க கூடிய அளவு பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் அவர்களே தொழிலை கற்றுக்கொள்ள வசதியாக அமையும். கல்லூரிகளை இழுத்து மூடுவதற்கு பதிலாக அங்கு மாணவர்களின் திறமையை வளர்க்கும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அடுத்தது, கலைக்கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம். போன்ற பட்டப்படிப்புகள் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. மாணவர்களின் அறிவை வளர்க்கும் விதத்தில், வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு தகுந்தாற்போல் அந்தப் படிப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவனுக்கு சமூகத்துக்கோ அல்லது சமூக வளர்ச்சிக்கோ உதவும் விதத்தில் திறமை இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் கல்லூரி படிப்பால் எந்த பயனும் இல்லை. மூன்றாவதாக, உயர் கல்வித்துறையில் தலைமைத்துவம் மிகுந்த துணை வேந்தர், கல்லூரி முதல்வர்களை பணியில் அமர்த்த வேண்டும். அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகவும், சிறந்த வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும். தற்போது கல்லூரி முதல்வர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். பணம் கொடுத்து பல்கலைக்கழக துணை வேந்தராக வந்துவிடுகிறார்கள். இந்த நிலையில் பல்கலைக் கழகத்தில் என்ன புதுமையை சாதிக்க முடியும்? எப்படி வழி நடத்திச் செல்ல முடியும்? மாணவர்களை சமுதாயத்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றவும், உயர்கல்வித் துறையை சிறப்பாக வழிநடத்தி செல்லவும் வேண்டுமென்றால் நல்ல தலைமைப் பண்புள்ளவர்களை உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். உயர் கல்வித்துறை வளர வேண்டும். தரமாக இருக்க வேண்டும் என்றால், அதைச் சார்ந்த பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இருக்க வேண்டும். இன்று அவ்வாறு இல்லை. இது வெளிப்படையான உண்மை. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி கல்வித்துறையில் வேண்டிய அளவு கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எந்தப்பாடம் படித்தாலும், அந்தப் பாடத்தின் அடிப்படை அறிவை வளர்க்கும் வகையில் கற்பிக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கேற்ப பாடப்புத்தகங்கள் தயார்படுத்தப்பட வேண்டும். அந்தப் பாடத்தை படித்து விட்டாலே எந்த போட்டித் தேர்வையும் எழுதக்கூடிய திறமையை வளர்க்க வேண்டும். பள்ளிக் கல்வியை படித்து முடித்துவிட்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு (கோச்சிங் சென்டர்) சென்றால் அர்த்தமில்லை. இந்தியாவில் 32 வகையான போட்டித் தேர்வுகள் உள்ளன. ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் கோச்சிங் சென்டருக்கு போவது கேவலமான விஷயம். பள்ளிக் கல்வித்துறை அதற்கான அடிப்படை கல்வியை கற்றுக்கொடுத்தால் மாணவர்களால் எந்த போட்டித் தேர்வையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். ஆசிரியர்கள் படிப்பு இன்று தரம் தாழ்ந்த நிலையில் உள்ளது. ஆசிரியர்களுக்கு தொடர்ந்து 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு ஏற்ப கற்பிக்கும் திறனை வளர்க்க வேண்டும். இதில் பல்கலைக் கழகங்களுக்கு பெரும்பங்கு உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, பாரதிதாசன், பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும், பொருளியல், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இருக்கின்றன. அந்தத் துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் அவர்கள் பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைத்து வரச் செய்து சம்பந்தப்பட்ட துறைகளில் பயிற்சி கொடுத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். இதற்கு அரசும் பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வோடு செயல்பட வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர், துறைத் தலைவர்கள், சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். நமது கல்வித்துறையை வளர்ப்பதில், ஆசிரியர்களை வளர்ப்பதில் பல்கலைக்கழகங் களுக்கு பெரிய சமூகப் பொறுப்பு உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வெளித்தோற்றத்துக்கு பொறுப்பு காட்டாமல், சமூகத்தில் நாங்கள் ஒருங்கிணைந்த, இன்றியமையாத அங்கம் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். உயர் கல்வித்துறை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தாமாகவே முன்வந்து பள்ளியில் படிக்கும் பின்தங்கிய, ஏழை மாணவர்களுக்கு சமூக மனப்பான்மையுடன் உதவி செய்ய முன்வர வேண்டும். உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில், வணிகத்தில், அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களுக்கேற்ற வகையில் நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சென்ற காலத்திற்கேற்றவாறு மாணவர்களுக்கு இருக்கும் பாடத்திட்டத்தை நாளைய உலகத்திற்கேற்றவாறு மாற்றி கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 25 June 2018

அவசர காலத்துக்கு எங்கு, எப்படி சேமிப்பது?

அவசர காலத்துக்கு எங்கு, எப்படி சேமிப்பது? கே. வெங்கடசுப்ரமணியன் எதிர்கால தேவைகளுக்கு சேமிப்பது போல அவசர கால தேவைகளுக்கு சேமிப்பதும் முக்கியம். இல்லை எனில் இதர தேவைகளுக்காக சேமிக்கப்பட்ட தொகை அவசர கால தேவையால் செலவு செய்யப்பட வேண்டி இருக்கும். வேலை இழப்பு, மருத்துவ செலவுகள், இயற்கை பேரிடர் போன்ற காரணங்களுக்காக முன்கூட்டியே சேமிப்பது அவசியமாகும். பொதுவாக மூன்று முதல் ஆறு மாத தேவைகள் அவசர கால நிதியாக ஒதுக்கிவைப்பது நல்லது. உங்களுடைய மாத தவணைகள், அடிப்படை செலவுகள், குழந்தைகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு ஒதுக்கி வைப்பது அவசியம். தவிர, மாதாந்திர முதலீடுகளுக்கு (எஸ்ஐபி, பிக்சட் டெபாசிட் மற்றும் ஆர்டி உள்ளிட்டவை) தேவையான தொகையையும் ஒதுக்கி வைப்பது நல்லது. லிக்விட் பண்ட் லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்ட்களில் அவசர கால நிதியை முதலீடு செய்யலாம். சேமிப்பு கணக்கு மற்றும் எப்டியை விட அதிக வருமானத்தை இந்த பண்ட்கள் வழங்கி இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 8 % வருமானத்தை கொடுத்திருக்கின்றன. ஆதித்யா பிர்லா சன் லைப், எஸ்பிஐ, யூடிஐ மற்றும் டிஎஸ்பி பிளாக்ராக் ஆகிய மியூச்சுவல் பண்ட்களில் உள்ள லிக்விட் பண்ட்களில் உடனடியாக பணத்தை எடுக்கும் வசதி இருக்கிறது. ஒரு நாளில் ரூ.50,000 அல்லது முதலீட்டில் 90 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகையை எடுக்க முடியும். ஒரிரு நிமிடங்களில் உங்கள் வங்கி கணக்கில் இந்த தொகை சேர்ந்து விடும். வார விடுமுறை நாட்கள் மற்றும் வழக்கமான விடுமுறை நாட்களில் கூட இந்த பண்ட்களில் இருக்கும் தொகையை உடனடியாக எடுக்க முடியும். ஒரு வேளை 50,000 ரூபாய் போதாது என கருதினால் அவசர கால தொகையை பல நிறுவனங்களின் லிக்விட் பண்ட்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் தேவைப்படும் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். ஒரு வேளை மொத்த தொகையையும் நீங்கள் எடுக்க விரும்பினால் ஒரு வேலை நாள் மட்டும் காத்திருந்தால் போதும். இந்த பண்ட்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யும் பட்சத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். 20 சதவீத வரி (பணவீக்க சரிகட்டலுக்கு பிறகு) செலுத்த வேண்டும். குறுகிய காலத்தில் முதலீட்டை எடுப்பதாக இருந்தால் உங்கள் வருமான வரி பிரிவை அடிப்படையாக வைத்து வரி செலுத்த வேண்டும். நீங்கள் எஸ்ஐபி முறையிலும் லிக்விட் பண்ட்களில் முதலீடு செய்து அவசர கால நிதியை உருவாக்கலாம். குறுகிய கால எப்டி அவசர கால நிதியை வங்கிகள் வழங்கும் குறுகிய கால பிக்ஸட் டெபாசிட்களிலும் (எப்டி) முதலீடு செய்யலாம். ஏழு நாட்களில் இருந்து டெபாசிட் தொடங்குகிறது. உங்களது தேவைக்கு ஏற்ப காலத்தை முடிவு செய்துகொள்ளலாம். ஓர் ஆண்டுக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 4.25 சதவீதம் முதல் 6.6 சதவீதம் வரை வங்கிகள் வட்டி வழங்குகின்றன. ஆனால் பொது விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் உங்களுடைய தொகையை எடுக்க முடியாது. அதேபோல முதிர்வு காலத்துக்கு முன்பு டெபாசிட்களை எடுக்க வேண்டும் என நினைத்தால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த அபராதம் வட்டிக்கு மட்டும்தான், அவசரகாலத்துக்கு வட்டியில் இருந்து சிறு தொகை குறைவதினால் பெரிய பாதிப்பு இருக்காது. இருந்தாலும் இந்த வகை டெபாசிட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. சேமிப்பு கணக்கு ஸ்வீப் வசதி இருக்கும் சேமிப்பு கணக்குகளை பரிசீலனை செய்யலாம். பெரும்பாலான வங்கிகள் 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரையே சேமிப்பு கணக்குக்கு வட்டி வழங்குகின்றன. சில வங்கிகள் மட்டுமே 6% முதல் ஏழு சதவீதம் வழங்குகின்றன. ஸ்வீப் வசதி இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்லும் பட்சத்தில் பிக்ஸட் டெபாசிட்டுக்கு உரிய வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு கணக்கு மற்றும் குறுகிய கால டெபாசிட்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. ரொக்கம் மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அவசரகால தேவைகள் மற்றும் போக்குவரத்து, உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு கொஞ்சம் ரொக்கப்பணம் வைத்திருப்பது நல்லது. அவசர தேவைக்காக திட்டமிட்டிருக்கும் தொகையில் 5% முதல் 10 சதவீதம் வரை ரொக்கமாக வைத்திருப்பது நல்லது. அதிக தொகையை ரொக்கமாக வைத்திருப்பது தேவையற்றது. ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையில் வைத்திருக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts