Saturday 30 June 2018

கத்தியை தீட்டாதே! புத்தியை தீட்டு!

கத்தியை தீட்டாதே! புத்தியை தீட்டு! நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறையில் எப்படி கொலைகள் நடக்கிறது? என்ற கேள்வி எழுவது நியாயமானது. சமீபத்தில் புழல் சிறையில் ரவுடி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்தது. சிறையில் உள்ளிருப்பு வாசிகளை பிரித்து குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் தனி அறைகளில் அடைக்கப்படுகிறார்கள். காலையில் எல்லா சிறைவாசிகளும் காலை கடன் கழிப்பதற்காகவும், சிற்றுண்டி சாப்பிடுவதற்கும் திறந்து விடப்படுகிறார்கள். அப்போது அவர்களை கண்காணிக்க ஒரு சில சிறை காவலர்கள் பணியில் இருப்பார்கள். அதுவும் அவர்கள் கையில் லத்தி கூட வைத்திருக்க கூடாது. அதுதான் விதி. கைதி ஒவ்வொருவரும் செய்வதை பார்ப்பது, கண்காணிப்பது முடியாத காரியம். சிறைக்கு வரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏதோ ஒருவிதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல இருப்பார்கள். அடிக்கடி கோபப்படுவார்கள். எதெற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். சிறைத்துறை குற்றவியல் ஆளுமையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறைகள் துன்புறுத்தும் இடமல்ல. சிறை இல்ல வாசிகளை நல்வழிப்படுத்தி சமுதாயத்தோடு இணைப்பதற்காக வழிவகுக்கும் உன்னத தளம். மகாத்மா காந்தி, ‘சிறைவாசிகள் அடிமைகள் அல்ல; நாட்டின் உடமைகள்’ என்றார். சிறை இல்ல வாசிகள் நடத்தப்படும் விதம் ஒரு நாட்டின் கலாசாரத்தை காட்டுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் கைதி ஒழுக்கமாக வாழ வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது, பிறருக்கும் நல்லது. இந்திய சிறைகளில் சராசரியாக மூன்று லட்சம் சிறைவாசிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறை, 134 பிற சிறைகளை சேர்த்து 20 ஆயிரம் பேர் அடைப்பில் இருக்க இடம் உள்ளது. இதில் 67 சதவீதம் விசாரணை கைதிகள். அவர்கள் மீது உள்ள வழக்கு விசாரணை எளிதில் முடியாது. பலருக்கும் ஜாமீனில் வெளியில் வருவதற்கும் வசதி இருக்காது. அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனை காலத்தைவிட அதிகமாக சிறையில் காலம் தள்ள வேண்டிய நிலமை இருக்கிறது. இதனாலும் விசாரணை கைதிகளுக்கு மனஉளைச்சல், ஆத்திரம் வருகிறது. அதன் விளைவாக சிறைக்கு உள்ளே சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. ஜெயிலில் இருக்கும் கைதிகளின் கல்விக்கு சிறைத்துறை கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். 100 சதவீதம் கல்வி அளிக்க வேண்டும் என்று அடிப்படை கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி கல்வி வரை சிறைவாசிகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறையும் தேர்வு மையமாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் தேர்வு எழுத சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்போடு செல்ல வேண்டும். அங்கு பரீட்சை எழுதி திரும்ப வேண்டும். “பக்கத்துல போலீச வெச்சிகிட்டு எப்படி ஐயா நாங்க பரீட்சை எழுத” என்ற அவர்களது கூக்குரல் நியாயமானது. அதை மனதில் கொண்டுதான் அரசிடம் போராடி மத்திய சிறை தேர்வு எழுத ஒரு மையமாக அறிவிக்க ஆணை கிடைத்தது. இப்போது சிறையில் கல்வி பயிலலாம். அங்கேயே தேர்வு வைக்கப்படும், பங்கு கொள்ளலாம். இத்தகைய வசதி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிறை தேர்வு மையங்களில் பங்குகொண்ட சிறைவாசிகள் சிறப்பாக தேர்வு பெற்றிருக்கிறார்கள். அதில் ஒரு சுவாரசியமான செய்தி உண்டு. ஒரு சிறைவாசி புழல் சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதே சமயத்தில் அவரது மகனும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். தந்தை மகனை விட அதிக மார்க் வாங்கி சாதனை படைத்தார். சிறையில் தரமான கல்வி அளிப்பதற்கு எடுத்த முயற்சியின் வெற்றி இது என்பதில் ஐயமில்லை. சிறையிலிருந்து விடுதலை பெறுபவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடாதவாறு அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் வேண்டும். பழம் குற்றவாளிகள் அதே குற்றங்களில் ஈடுபடுவது தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர்கள் சமுதாயத்தோடு இணைய வழிவகை செய்யும் நடவடிக்கையை நன்னடத்தை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், காவல் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டார் குற்றமற்ற சமுதாயம் உருவாக அடித்தளம் அமைக்க முடியும். ‘தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்’ என்ற பாடலுக்கு ஏற்ப சிறைத்துறை முயற்சி எடுத்து வருகிறது. சிறைச்சாலைகளில் பல சிறு தொழிற்சாலைகள் உள்ளன. சேலம் சிறையில் ஸ்டீல் பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. வேலூரில் காலணிகள், புழல் சிறையில் ரொட்டி தின்பண்டங்கள், கடலூரில் பாக்கு இலை தட்டுகள் என்று ஒவ்வொரு மத்திய சிறையிலும் பல பொருட்கள் சிறைவாசிகளின் கைவண்ணத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதிக நிலம் உள்ள புழல், திருச்சி, கடலூர், பாளையங்கோட்டை போன்ற சிறைகளில் காய்கறி வகைகள், கரும்பு, நெல், பழ வகைகள் பயிரிட்டு அறுவடை செய்யப்படுகிறது. சிறை பயன்பாட்டிற்கு போக மிச்சமுள்ள காய்கறி, தானிய வகைகள் வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறைவாசிகளுக்கும் இதன் மூலம் ஊதியம் கிடைக்கிறது. அவர்களது ஊதியத்தில் ஒரு பகுதி அவர் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு அளிக்கப்படுகிறது. சிறை என்பது குற்றவாளிகளை கொடுமைபடுத்தும் இடமல்ல. திருந்தி வாழ வழி வகுக்கும் பள்ளி. அதனை உறுதி செய்கிறது சிறை பணி. பல அமைப்புகள் சிறைகளில் நற்பணி செய்து சிறைவாசிகளுக்கு நிம்மதி அளிக்கிறார்கள். இதை சமுதாயம் வரவேற்கவேண்டும். விடுமுறை நாட்களிலும் சிறைவாசிகளை பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிகழ்வதற்கு காரணம் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், வேலை இல்லா திண்டாட்டம், வறுமை. அவை மட்டுமல்ல குற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பை நாம் தான் அளிக்கிறோம். ஒவ்வொருவரும் தமது நிலையில் உஷாராக இருந்தால் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பது கவிஞரின் பாடல். அதை எல்லோரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். கத்தியை தீட்டாமல், புத்தியை தீட்டினால் புது சக்தி பிறக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts