Saturday 30 June 2018

மருத்துவ மகத்துவம்

மருத்துவ மகத்துவம் டாக்டர் ஏ.முருகநாதன், முன்னாள் தலைவர், தமிழக கிளை, இந்திய மருத்துவ சங்கம் நாளை (ஜூலை 1-ந்தேதி) தேசிய மருத்துவர்கள் தினம். உலகில் வாழும் மக்கள் எல்லோரும் விரும்புவது நோயற்ற அல்லது நோய் நிவாரணம் பெற்ற வாழ்வை தான். அந்த விருப்பம் நிறைவேற்றப்படுவதற்காக இந்த உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கூட்டம் அயராது உழைத்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகத்தான கூட்டம் தான் மருத்துவர்கள் கூட்டம். தங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து, தங்கள் குடும்பத்தினருடன் பங்கு கொள்ளவேண்டிய பொன்னான நேரங்களை எல்லாம் தியாகம் செய்து, நோய்க்கான காரணிகளையும், நிவாரணிகளையும் கண்டறிய அல்லும் பகலும் அயராது உழைத்து வருபவர்கள் மருத்துவர்கள். அதற்கான உரிய அங்கீகாரத்தை உயர்ந்த வடிவில் அந்த மாமணிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உதயமானதுதான் மருத்துவர் திருநாள். உங்கள் குடும்ப மருத்துவர் தொடங்கி உலகின் முதல் நிலை மருத்துவர்கள் வரை எல்லோரும் பெருமைக்குரியவர்களே. மருத்துவத்துறையில் உள்ள சிரமங்களும் சவால்களும் தெரிந்தும் அந்தப் பணியை தேர்வு செய்வதற்குக் காரணம் வெறும் பொருளாதார நோக்கம் அன்று. தங்களுக்கு வாய்க்கப் பெற்ற அறிவுத்திறன் கொண்டு வேறு துறைகளில் இதைவிடப் பொருளட்ட முடியும் என்ற சாதாரண உண்மையை அறியாதவர்களும் அல்ல. இருந்தாலும் மருத்துவ துறையை தேர்வு செய்வதற்கு காரணம் சேவை மனப்பான்மை தான். இந்தத்துறையில் புதிருக்கு விடைகாணும் வேட்கை உள்ளவர்களின் புத்திக்கூர்மைக்கு வேலையிருக்கிறது. புதிரான ஒரு நோய் அறிகுறியின் சிறு துப்பை கையிலெடுத்து பின்னர் அதன் முழுவடிவைக் கண்டுபிடித்து அதற்கான தீர்வை நோயாளிக்கு கொடுக்கும்போது ஒரு மருத்துவர் அடையும் மகிழ்ச்சி எல்லையற்றது. அது அந்த நோயாளியின் உறவினர்கள் அடையும் மகிழ்ச்சிக்குச் சற்றும் குறைந்ததல்ல. அதுதான் இந்த மனித நேயமிக்க மகத்தான பணியின் தனிப்பெரும் சிறப்பு. அதனால்தான் இந்தத்துறையில் பெரும்பாலானவர்கள் வாய்ப்பு என்றல்லாமல், படிப்பை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்து உளப்பூர்வமாக உழைத்து தங்கள் முத்திரையைப் பதித்துச் செல்கின்றார்கள். லூயி பாஸ்டியர் என்ற மருத்துவர் திறன்குறைக்கப்பட்ட நோய்க்கிருமிகளைத் தன் உடலில் செலுத்தி தன்னையே ஆய்வுக்கான விலங்காக ஆக்கிக் கொண்டு வெறிநாய்க்கடிக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்தார் என்பதை அறியும் போது விழிகள் வியப்பால் விரிவது மட்டுமன்றி, பெருமிதத்தால் கண்ணீர் வழிகிறது. ‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்’ என்ற வள்ளுவன் வாக்கை அடியொற்றிப் பணிசெய்யும் ஆயிரமாயிரம் மருத்துவர்கள் அகிலமெங்கும் உள்ளனர். அந்த அடிப்படையில் இந்திய துணைக்கண்டத்தின் முதல் தகுதிசால் மருத்துவ வல்லுநராகத் தோன்றிய பாரதரத்னா பி.சி.ராயின் பிறந்தநாளை மருத்துவர் திருநாளாகக் கொண்டாட 1962-ம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகம் முடிவு செய்தது. அதன் பிறகு ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளும் மறைந்த நாளுமாகிய ஜூலை 1-ந்தேதி மருத்துவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பி.சி.ராய் 14 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி, அண்ணல் காந்தியடிகளின் மருத்துவர், அமெரிக்க அதிபர் கென்னடியால் வியந்து போற்றப்பட்டவர் என்று ஏராளமான புகழுக்குச் சொந்தக்காரர் ஆவார். அவரை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவர் மருத்துவத் துறையின் தூயவடிவின் எடுத்துக் காட்டு என்றே போற்ற முடியும். அவர் நினைவில் மருத்துவர் திருநாள் கொண்டாடப்படுவது பொருத்தம் தானே! ஆனால் இன்றைக்கு மக்களின் உயிர் காக்கும் உன்னத பணியை செவ்வனே செய்யும் மருத்துவர்களின் நிலைமை சற்று கவலைகொள்வதாகவே இருக்கிறது. அண்மைக் காலமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இதன் எதிரொலியாக பல மருத்துவர்கள் தங்களது மருத்துவ பணியை செய்ய முடியவில்லை. மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனளிக்காத நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உடன்வந்தவர்கள் வன்முறையைக் கையில் எடுப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அறியாத முறையில் தவறுகள் நிகழ்ந்தால் அதைச் சட்டப்படி சந்திக்க வேண்டியதுதான் ஒரு வளர்ச்சியடைந்த நாகரிகத்தின் அடையாளம். ‘வியத்தலும் இலமே, இகழ்தலும் இலமே’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts