Friday, 29 June 2018

நம் வெற்றி நம் கையில்!

நம் வெற்றி நம் கையில்! டாக்டர் பி. கிருஷ்ணகுமார் எது வெற்றி? நிறைய பணத்தை சம்பாதித்து வைத்திருப்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியா?, அல்லது அதையும் தாண்டி வேறு ஏதேனும் உள்ளதா?. உடனடி மனநிறைவிற்கும் அப்பால் மற்ற இலக்குகளை நோக்கி நமது மன நிலையை மாற்றியமைத்துக் கொள்வதே உண்மையான வளர்ச்சி மற்றும் வெற்றி. அதாவது எவ்வித கவலைகளுமின்றி இரவில் நம்மால் தூங்கச்செல்லும் நிலையே அது. பணம், குடும்பம், நேரம், அன்பு, சூழல் மற்றும் உறவுகள் என அனைத்துமே நமக்கான செல்வங்களே. இந்த அனைத்து செல்வங்களையும் அடைகின்ற நமது இலக்கே, உண்மையான வளர்ச்சி மற்றும் வெற்றி. பயத்தை ஆரத்தழுவி முன்னேறிச் செல்வதற்கான துணிவு நமக்கு நிச்சயம் வேண்டும். ஏனென்றால், தைரியமான செயல்பாடுகள் இன்றி எவ்வித வளர்ச்சியோ அல்லது வெற்றியோ நமக்கு கிடையாது. நமது இலக்குகளையும், அதை அடைவதற்கான நமது வலிமைகளையும் நமக்கு அடையாளம் காட்டக்கூடிய வழிமுறைகளைச் சொல்கிறது “நெலி காலன்” அவர்களின் “செல்ப் மேட்” என்னும் இந்தப் புத்தகம். கவனத்தில் வைக்க! நமது வாழ்க்கை மாற்றத்திற்கான பயணம் தொடங்குவதற்கு முன்னர், நாம் கவனத்தில் வைக்க வேண்டிய சில முக்கியமான கேள்விகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். உண்மையிலேயே நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை?, நமக்கான இலக்குகள் என்ன?, நமது வாழ்க்கையில் யாரால் அல்லது எதனால் நாம் ஏமாற்றமடைந்தோம்?, எது நமது செயல்களுக்கான தடை?, எதிர்காலம் குறித்த நமது மிகப்பெரிய பயம் எது?, நமக்கான மிகப்பெரிய கனவுகள் எவை? மற்றும் நாம் எதற்காக காத்திருக்கிறோம்? ஆகியவையே அந்த கேள்விகள். இவற்றிற்கான தக்க பதிலுடன் நமது செயல்களை தொடங்கும்போது, மிகச்சிறந்த வாழ்க்கை மாற்றங்களை பெறமுடியும் என்பதே இதன்மூலம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படைச்செய்தி. சொந்த செயல்பாடு! எந்தவொரு பணிக்கும் நமது தனிப்பட்ட சொந்த செயல்பாடு அவசியம். சாக்குப்போக்குகளையும், மற்றவர்கள் மீது குறை கூறுவதையும், மற்றவர்களையே முழுமையாக சார்ந்திருப்பதையும் அறவே நீக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர். யாரோ ஒருவர் நமக்கு உதவ வேண்டும் என்று காத்திருப்பதை விட, நமக்கு நாமே உதவுவதற்கான செயல்பாடுகளை துவக்க வேண்டும். மற்றவர்களை நம்பியே வாழ்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது மிகச்சிறந்த மனநிறைவான வெற்றிகளைப் பெறுகிறார்களா? என்றால், கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை. அடுத்தவர்களின் உதவியோடு வாழ்பவர்கள் நாளடைவில் ஒருவித மன அழுத்தத்திலும் சிக்கலிலும் மாட்டிக்கொள்வார்களே தவிர, ஒருபோதும் நிலையான வெற்றியையோ மகிழ்ச்சியையோ பெறமுடியாது. எந்தளவிற்கு நமது சொந்த செயல்பாடு உள்ளதோ, அந்தளவிற்கே நமக்கான பலனும் கிடைக்கும். சொந்த மதிப்பு! ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது இன்று பெரும்பாலானோரின் கனவு என்று சொல்லலாம். அந்தளவிற்கு நிறுவனங்களின் மீது அதீத ஈடுபாடு கொண்டுள்ளனர். நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் மீது வைத்துள்ள கட்டுப்பாடற்ற அன்பை கைவிடுங்கள் என்கிறார் ஆசிரியர். ஏனென்றால், நமது தனிப்பட்ட மதிப்பு மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான நம்முடைய பார்வையை இதனால் இழக்க நேரிடும். இன்றைய காலகட்டத்தில் நிறுவனப் பணிகள் என்பது நிரந்தரமற்றது. பெரும்பாலானோரால் ஒரே நிறுவனத்தில் இருபது அல்லது முப்பது ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல. மேலும், இது நீண்டகால அடிப்படையில் நமக்கு பாதுகாப்பான விஷயமும் அல்ல. அதற்காக நாம் பணியாற்றும் நிறுவனத்தை வெறுக்கவோ அல்லது பணியில் சுணக்கம் காட்டவோ தேவையில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர். நாம் செய்யவேண்டியதெல்லாம், நமது நிறுவனப் பணிகளையும் தாண்டி, தனிப்பட்ட முறையிலும் நம்மை தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும். இருக்கின்ற பணியிலேயே நமக்காக நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், நமது எதிர்கால வெற்றிக்கு மிகச்சிறந்த அடித்தளமாக அமையும் என்பதையும் சேர்த்தே மனதில் பதிய வையுங்கள். பயமும் தோல்வியும்! அவ்வப்போது ஏற்படும் இழப்புகளின் காரணமாக உருவாகும் பயமும் தோல்வியும் நமது வளர்ச்சிப் பாதையின் மிகப்பெரிய தடைக்கற்கள் என்று கூறலாம். இது எப்போதும் நம் வாழ்க்கையில் நிகழக்கூடிய ஒரு விஷயம். இது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை உணர்ந்து, அதனை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும் என்கிறார் ஆசிரியர். அடுத்ததாக அவற்றை எதிர்கொண்டு, அதிலிருந்து நமக்கான பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சில தருணங்களில் இழப்பு நமக்கு மிகச்சிறந்த திட்டங்களை வகுத்துக்கொடுக்கும். சில நேரங்களில் இழப்பு நம்மை மிகப்பெரிய தவறுகளிலிருந்து பாதுகாக்கும். சில விஷயங்களில் இழப்பு நமக்கான சிறந்த பாதைக்கான கதவுகளைத் திறக்கும். பயமும் தோல்வியும் உண்மையல்ல, அவை வெறும் உணர்வே என்பதை உணர்ந்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொண்டு, அவற்றை நமது செயல்பாடுகளுக்கான மிகச்சிறந்த நண்பர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். பண மற்றும் மன சூழல்! வளர்ச்சிக்கான நிலைபாட்டினை மன தளவில் நாம் தயார்படுத்திக் கொண்டதற்கு பிறகு நமக்கான அடுத்தப் பணி என்ன?. நிதி ரீதியிலான நமது சூழலும் மனநிலையும் என்ன? என்பதை நாம் அறிந்திருக்கவேண்டியது முக்கியம். நம்மிடம் போதுமான அளவிற்கான பணம் உள்ளதா அல்லது இன்னும் சம்பாதிக்க வேண்டுமா?, அவசியமற்ற நமது அன்றாட செலவுகளை குறைத்து, அதன்மூலம் நிதி ஆதாரங்களை மேம்படுத்த முடியுமா?, பூர்வீக நிதி ஆதாரங்கள் ஏதேனும் நம்மிடம் உள்ளதா?, நிதி சிக்கல்களை கையாளும் மனநிலையில் இருக்கிறோமா?, நம்மிடமுள்ள தனித்திறன்கள் என்னென்ன?, கிடைக்கும் வாய்ப்புகளுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் வகையில் நம்முடைய இன்றைய நிலைப்பாடு உள்ளதா?, நீண்ட தொரு செயல்பாட்டிற்கு தயாராக இருக்கிறோமா? போன்ற கேள்விகளிருந்து நமது பண மற்றும் மன சூழலை அறியமுடியும். மூன்று நிலைகள்? பணம் சம்பாதிப்பது, சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது என மூன்று நிலைகளைப்பற்றி கூறுகிறார் ஆசிரியர். இப்பொழுது நாம் சம்பாதிக்கும் பணத்தைவிட இன்னும் அதிகமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். சிறியளவில் ஒரு வியாபாரம் தொடங்குதல், வாரத்தின் சில நாட்களில் ஏதேனும் பகுதிநேர பணி என தற்போதைய உழைப்பினை விட, இன்னும் கொஞ்சம் அதிகமாக பணியாற்ற வேண்டும். இந்த அதிகப்படியான வருமானத்தை அவசர நிதிக்காக சேமிப்பது இரண்டாவது நிலைப்பாடு. இது நமது மன அமைதிக்கும், அடுத்தக்கட்ட செயலுக்கான ஊக்கமாகவும் நிச்சயம் இருக்கும். இறுதியாக சேமித்த பணத்தை தகுந்த வழிகளில் முதலீடு செய்வது. நிலம், வங்கி, பங்குகள் என நமது எதிர்காலத்திற் காக சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. மனதளவில் நமது செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டு, நமக்கான இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது, தெளிவான வளர்ச்சியும் வெற்றியும் இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது, தெளிவான வளர்ச்சியும் வெற்றியும் நம் கையில்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts