Monday 25 June 2018

அவசர காலத்துக்கு எங்கு, எப்படி சேமிப்பது?

அவசர காலத்துக்கு எங்கு, எப்படி சேமிப்பது? கே. வெங்கடசுப்ரமணியன் எதிர்கால தேவைகளுக்கு சேமிப்பது போல அவசர கால தேவைகளுக்கு சேமிப்பதும் முக்கியம். இல்லை எனில் இதர தேவைகளுக்காக சேமிக்கப்பட்ட தொகை அவசர கால தேவையால் செலவு செய்யப்பட வேண்டி இருக்கும். வேலை இழப்பு, மருத்துவ செலவுகள், இயற்கை பேரிடர் போன்ற காரணங்களுக்காக முன்கூட்டியே சேமிப்பது அவசியமாகும். பொதுவாக மூன்று முதல் ஆறு மாத தேவைகள் அவசர கால நிதியாக ஒதுக்கிவைப்பது நல்லது. உங்களுடைய மாத தவணைகள், அடிப்படை செலவுகள், குழந்தைகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு ஒதுக்கி வைப்பது அவசியம். தவிர, மாதாந்திர முதலீடுகளுக்கு (எஸ்ஐபி, பிக்சட் டெபாசிட் மற்றும் ஆர்டி உள்ளிட்டவை) தேவையான தொகையையும் ஒதுக்கி வைப்பது நல்லது. லிக்விட் பண்ட் லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்ட்களில் அவசர கால நிதியை முதலீடு செய்யலாம். சேமிப்பு கணக்கு மற்றும் எப்டியை விட அதிக வருமானத்தை இந்த பண்ட்கள் வழங்கி இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 8 % வருமானத்தை கொடுத்திருக்கின்றன. ஆதித்யா பிர்லா சன் லைப், எஸ்பிஐ, யூடிஐ மற்றும் டிஎஸ்பி பிளாக்ராக் ஆகிய மியூச்சுவல் பண்ட்களில் உள்ள லிக்விட் பண்ட்களில் உடனடியாக பணத்தை எடுக்கும் வசதி இருக்கிறது. ஒரு நாளில் ரூ.50,000 அல்லது முதலீட்டில் 90 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகையை எடுக்க முடியும். ஒரிரு நிமிடங்களில் உங்கள் வங்கி கணக்கில் இந்த தொகை சேர்ந்து விடும். வார விடுமுறை நாட்கள் மற்றும் வழக்கமான விடுமுறை நாட்களில் கூட இந்த பண்ட்களில் இருக்கும் தொகையை உடனடியாக எடுக்க முடியும். ஒரு வேளை 50,000 ரூபாய் போதாது என கருதினால் அவசர கால தொகையை பல நிறுவனங்களின் லிக்விட் பண்ட்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் தேவைப்படும் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். ஒரு வேளை மொத்த தொகையையும் நீங்கள் எடுக்க விரும்பினால் ஒரு வேலை நாள் மட்டும் காத்திருந்தால் போதும். இந்த பண்ட்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யும் பட்சத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். 20 சதவீத வரி (பணவீக்க சரிகட்டலுக்கு பிறகு) செலுத்த வேண்டும். குறுகிய காலத்தில் முதலீட்டை எடுப்பதாக இருந்தால் உங்கள் வருமான வரி பிரிவை அடிப்படையாக வைத்து வரி செலுத்த வேண்டும். நீங்கள் எஸ்ஐபி முறையிலும் லிக்விட் பண்ட்களில் முதலீடு செய்து அவசர கால நிதியை உருவாக்கலாம். குறுகிய கால எப்டி அவசர கால நிதியை வங்கிகள் வழங்கும் குறுகிய கால பிக்ஸட் டெபாசிட்களிலும் (எப்டி) முதலீடு செய்யலாம். ஏழு நாட்களில் இருந்து டெபாசிட் தொடங்குகிறது. உங்களது தேவைக்கு ஏற்ப காலத்தை முடிவு செய்துகொள்ளலாம். ஓர் ஆண்டுக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 4.25 சதவீதம் முதல் 6.6 சதவீதம் வரை வங்கிகள் வட்டி வழங்குகின்றன. ஆனால் பொது விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் உங்களுடைய தொகையை எடுக்க முடியாது. அதேபோல முதிர்வு காலத்துக்கு முன்பு டெபாசிட்களை எடுக்க வேண்டும் என நினைத்தால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த அபராதம் வட்டிக்கு மட்டும்தான், அவசரகாலத்துக்கு வட்டியில் இருந்து சிறு தொகை குறைவதினால் பெரிய பாதிப்பு இருக்காது. இருந்தாலும் இந்த வகை டெபாசிட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. சேமிப்பு கணக்கு ஸ்வீப் வசதி இருக்கும் சேமிப்பு கணக்குகளை பரிசீலனை செய்யலாம். பெரும்பாலான வங்கிகள் 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரையே சேமிப்பு கணக்குக்கு வட்டி வழங்குகின்றன. சில வங்கிகள் மட்டுமே 6% முதல் ஏழு சதவீதம் வழங்குகின்றன. ஸ்வீப் வசதி இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்லும் பட்சத்தில் பிக்ஸட் டெபாசிட்டுக்கு உரிய வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு கணக்கு மற்றும் குறுகிய கால டெபாசிட்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. ரொக்கம் மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அவசரகால தேவைகள் மற்றும் போக்குவரத்து, உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு கொஞ்சம் ரொக்கப்பணம் வைத்திருப்பது நல்லது. அவசர தேவைக்காக திட்டமிட்டிருக்கும் தொகையில் 5% முதல் 10 சதவீதம் வரை ரொக்கமாக வைத்திருப்பது நல்லது. அதிக தொகையை ரொக்கமாக வைத்திருப்பது தேவையற்றது. ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையில் வைத்திருக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts