Tuesday 26 June 2018

கல்வித் துறைக்கு தேவையான தரமாற்றங்கள்

கல்வித் துறைக்கு தேவையான தரமாற்றங்கள் முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்ப நமது கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். உயர் கல்வித்துறையில் 4 விதமான பிரச்சினைகள் உள்ளன. தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமான அளவுக்கு பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அந்த கல்லூரிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இதனால் வேலையின்மை அல்லது படித்த படிப்புக்கு தொடர்பில்லாத துறையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. ஒரு காலத்தில் இருந்ததைப் போல இப்போது மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பு படிக்க வெறிப்பிடித்து அலைவதில்லை. இது வரவேற்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இத்தனை கல்லூரிகள் தேவையில்லை. 300 கல்லூரிகளை மூடிவிடலாம். ஆனால் அது சுலபமல்ல. இதில் ஒரு மாற்றம் செய்ய வேண்டுமென்றால், மாணவர்களின் செயல்திறனை வளர்க்க கூடிய அளவு பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் அவர்களே தொழிலை கற்றுக்கொள்ள வசதியாக அமையும். கல்லூரிகளை இழுத்து மூடுவதற்கு பதிலாக அங்கு மாணவர்களின் திறமையை வளர்க்கும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அடுத்தது, கலைக்கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம். போன்ற பட்டப்படிப்புகள் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. மாணவர்களின் அறிவை வளர்க்கும் விதத்தில், வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு தகுந்தாற்போல் அந்தப் படிப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவனுக்கு சமூகத்துக்கோ அல்லது சமூக வளர்ச்சிக்கோ உதவும் விதத்தில் திறமை இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் கல்லூரி படிப்பால் எந்த பயனும் இல்லை. மூன்றாவதாக, உயர் கல்வித்துறையில் தலைமைத்துவம் மிகுந்த துணை வேந்தர், கல்லூரி முதல்வர்களை பணியில் அமர்த்த வேண்டும். அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகவும், சிறந்த வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும். தற்போது கல்லூரி முதல்வர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். பணம் கொடுத்து பல்கலைக்கழக துணை வேந்தராக வந்துவிடுகிறார்கள். இந்த நிலையில் பல்கலைக் கழகத்தில் என்ன புதுமையை சாதிக்க முடியும்? எப்படி வழி நடத்திச் செல்ல முடியும்? மாணவர்களை சமுதாயத்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றவும், உயர்கல்வித் துறையை சிறப்பாக வழிநடத்தி செல்லவும் வேண்டுமென்றால் நல்ல தலைமைப் பண்புள்ளவர்களை உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். உயர் கல்வித்துறை வளர வேண்டும். தரமாக இருக்க வேண்டும் என்றால், அதைச் சார்ந்த பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இருக்க வேண்டும். இன்று அவ்வாறு இல்லை. இது வெளிப்படையான உண்மை. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி கல்வித்துறையில் வேண்டிய அளவு கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எந்தப்பாடம் படித்தாலும், அந்தப் பாடத்தின் அடிப்படை அறிவை வளர்க்கும் வகையில் கற்பிக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கேற்ப பாடப்புத்தகங்கள் தயார்படுத்தப்பட வேண்டும். அந்தப் பாடத்தை படித்து விட்டாலே எந்த போட்டித் தேர்வையும் எழுதக்கூடிய திறமையை வளர்க்க வேண்டும். பள்ளிக் கல்வியை படித்து முடித்துவிட்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு (கோச்சிங் சென்டர்) சென்றால் அர்த்தமில்லை. இந்தியாவில் 32 வகையான போட்டித் தேர்வுகள் உள்ளன. ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் கோச்சிங் சென்டருக்கு போவது கேவலமான விஷயம். பள்ளிக் கல்வித்துறை அதற்கான அடிப்படை கல்வியை கற்றுக்கொடுத்தால் மாணவர்களால் எந்த போட்டித் தேர்வையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். ஆசிரியர்கள் படிப்பு இன்று தரம் தாழ்ந்த நிலையில் உள்ளது. ஆசிரியர்களுக்கு தொடர்ந்து 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு ஏற்ப கற்பிக்கும் திறனை வளர்க்க வேண்டும். இதில் பல்கலைக் கழகங்களுக்கு பெரும்பங்கு உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, பாரதிதாசன், பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும், பொருளியல், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இருக்கின்றன. அந்தத் துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் அவர்கள் பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைத்து வரச் செய்து சம்பந்தப்பட்ட துறைகளில் பயிற்சி கொடுத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். இதற்கு அரசும் பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வோடு செயல்பட வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர், துறைத் தலைவர்கள், சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். நமது கல்வித்துறையை வளர்ப்பதில், ஆசிரியர்களை வளர்ப்பதில் பல்கலைக்கழகங் களுக்கு பெரிய சமூகப் பொறுப்பு உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வெளித்தோற்றத்துக்கு பொறுப்பு காட்டாமல், சமூகத்தில் நாங்கள் ஒருங்கிணைந்த, இன்றியமையாத அங்கம் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். உயர் கல்வித்துறை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தாமாகவே முன்வந்து பள்ளியில் படிக்கும் பின்தங்கிய, ஏழை மாணவர்களுக்கு சமூக மனப்பான்மையுடன் உதவி செய்ய முன்வர வேண்டும். உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில், வணிகத்தில், அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களுக்கேற்ற வகையில் நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சென்ற காலத்திற்கேற்றவாறு மாணவர்களுக்கு இருக்கும் பாடத்திட்டத்தை நாளைய உலகத்திற்கேற்றவாறு மாற்றி கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts