Tuesday, 26 June 2018

மறைந்து வரும் மாபெரும் மருத்துவம்

மறைந்து வரும் மாபெரும் மருத்துவம் எழுத்தாளர் காயத்ரி மது ஒரு சிறந்த மருத்துவம் என்பது நோயை முழுதாகக் கண்டறிந்து மீண்டும், நோய் வராமல் தடுப்பதே ஆகும். பக்க விளைவுகள் இல்லாமல் மீண்டும், மீண்டும் மருத்துவமனைக்கு வராத படி ஒரு நோயாளிக்குச் சிகிச்சை அளித்து, நோயை முழுதாகக் குணப்படுத்தி ஆயுள், ஆரோக்கியம் தருவதே சிறந்த மருத்துவ முறை என்கிறார் சுஸ்ருதர். நம் மருத்துவ உலகின் தந்தை. வேத காலத்தில் வாழ்ந்து கிட்டத்தட்ட 1100-க்கு மேல் நோய் வகைகள், 700 வகையான மூலிகை மருந்துகள், 600-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டறிந்தவர். ஆனால் அவர் கண்டுபிடித்த பல அரிய வகை மூலிகைகள், மருத்துவ முறைகள் மறைந்து, மறக்கப்பட்டு வருகிறது. வழிவழியாக அந்த மருத்துவ முறை நம் பாரம்பரியமான பாட்டி வைத்தியம் மூலமும் வழக்கத்தில் இருந்தது. நம் முன்னோர்கள் காலத்தில் தீராத நோய், உயிர்க்கொல்லி நோய் என்று எதுவும் அதிகம் இல்லை. இன்றும் எண்பது, தொண்ணூறு என்று வயது தாண்டிய முதியவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ப்பில் ஒரு பாட்டியின் கை வைத்தியம் என்பது இன்றியமையாதது. சளி, அஜீர்ணம், குடல் புண், மலச்சிக்கல், சருமநோய், வாயுத் தொல்லை, குழந்தை வளர்ப்பு, பிரசவம், வலிப்பு என்று பாட்டி சொல்லாத வைத்தியம் இல்லை. மாரடைப்புக்கு கூட முதலில் ஒரு உப்புக் கல்லை வாயில் அடக்கிக் கொண்டால் மருத்துவரிடம் போகும் வரை தாங்க முடியும் என்றதும் பாட்டிதான். வாழ்க்கை முறை மாறி, சின்ன வலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத மனநிலை, எதற்கெடுத்தாலும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று போய்விட்டு கடைசியில் ஒன்றுமில்லை என்று கூறுவதற்குள் நமக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், பண விரயம். இதை வீட்டுப் பாட்டி ஒன்றுமில்லை, ஒரு சிட்டிகை ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்னு, தண்ணீர் குடி என்று சொல்லி தீர்த்துவிடுவாள். பண்டைய காலத்தில் சித்தர்கள் ஓலைச் சுவடியில் எழுதி வைத்த வைத்திய முறைகள், மூலிகை மருந்துகள் அதிகம் நம் கைக்கு கிடைக்கவில்லை. அப்படியே நம் பொறுப்பில்லாத்தனத்தால், அக்கறையின்மையினால் அழிந்து போய்விட்டன. நம் பண்டைய மருத்துவமுறையை பின்பற்றி, வேம்பு, மஞ்சள், திருவாச்சி, துளசி, வில்வம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிறது. அதை நாம் வாங்கி, அமெரிக்காவிலிருந்து வந்தது, லண்டன் தயாரிப்பு என்று பெருமையாகப் பயன்படுத்துகிறோம். சமீபத்தில் கூட ஒரு வடநாட்டவர், ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தன் உறவினர்களை கடைசி முறை சந்திப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அங்கு ஒரு உறவினர் அறிவுரையின் மூலம், சரி சாப்பிட்டு பார்க்கலாம் என்று பஞ்சகாவ்யம் (பசுவின் கோமியத்திலிருந்து தயாரிப்பது) என்ற ஒரு ஆயுர்வேத மருந்து சாப்பிட அதிசயமான முறையில் நோய் குணமாகி உள்ளது. அவர் இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார் என்ற செய்தி வெளியானது. பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் நம் சித்தர்கள் உருவாக்கிய மருத்துவ முறை. அன்பும் அக்கறையும், பிரியமுமாய் நோயிலிருந்து மனிதன் நிரந்தரமாக மீண்டு வந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது. ஆரம்பத்திலேயே சின்ன கை வைத்தியமாகச் செய்து கொண்டால் பெரிய வியாதிகள் இல்லாமல் காக்க முடியும். அதைத்தான் வரும்முன் காப்போம் என்கிறது பாட்டி வைத்தியம். நாம் இந்த உலகிற்கு ஒரு பயணம் வந்திருக்கிறோம். இதன் அழகுகளை ரசித்து, ஆரோக்கியமாய் வாழ்ந்து நம் இடம் வந்ததும் இறங்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நம் உடல் மீது அக்கறையும், கரிசனமும் கொண்டு பராமரித்தால் இறுதி வரை நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். மறைந்து வரும் மாபெரும் அற்புத மருத்துவ முறையை நாம்தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அனைத்து வகையான மருத்துவமுறைகளின் தாயகம் நம் தமிழகம் என்பதை மறக்காமல் இருந்தாலே அனைத்தும் சாத்தியம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts