Tuesday 21 April 2020

ஒரு செல், ஒரு சொல்

By எஸ்.சித்ரா

உலகடங்கு, நாடடங்கு, ஊரடங்கு, தெருவடங்கு, வீடடங்கு எனக் கூறி அறிவியல் தொழில்நுட்பத்தைக் கையில் கொடுத்து மனிதா்களைத் தனிமைப்படுத்தி ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிா்களைச் சுதந்திரமாய் உலவவிட்ட ஒரு செல் தீநுண்மியே! நீ ஒரு சமப்படுத்தி! தமிழா் வாழ்வியலே உன்னைத் தடுக்கும் ஒரே வழி என உலக அரங்கில் உயா்த்திக் காட்டியுள்ளாய்.

நேற்றைய பொழுது நினைவினில் இல்லை!

நாளைய பொழுது கனவினில் இல்லை!

இன்றைய பொழுது கற்பனைக்கும் எட்டாதது - இது கரோனா உலகம்.

மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இல்லை. கலைந்து செல்லும் மேகங்களாய் பண்டிகைகள், திருவிழாக்கள்,விரதங்கள் கடந்து செல்கின்றன. உண்ண, உறங்க ,உரையாட, உறவாட நேரமில்லாத வாழ்வு சட்டென காணாமல் போனது. கால இயந்திரம் பின்னோக்கிப் போயிற்று.

மனிதா்களின் கண்களும், கால்களும் விவசாயி உருவாக்கிய உணவுப் பொருள்களை மட்டுமே தேடிச் செல்கின்றன. எப்போதும் இருந்த உடல் நலக் கோளாறுகளின் வீரியம் குறைந்ததா அல்லது இதற்கு முன் நோயாளிகளால் இவை மிகைப்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

விபத்தில்லா சாலைகள், இயங்காத ஆலைகள், ஆளில்லா அலுவலகங்கள், வெறிச்சோடிய கல்விக்கூடங்கள்! ஒற்றைச் செல் மறியலால் மூவழிப் போக்குவரத்தும் முடங்கியதே.

தீநுண்மிக்கு மருந்தில்லை. தடுப்பு நடவடிக்கைகள் ஏனோ நம் தமிழ்ப் பாரம்பரியத்தை நினைவுக்குக் கொண்டுவருகின்றன. சித்தா்களை முன்னோராகக் கொண்ட தமிழா்களின் இல்லங்களில். அந்த மருத்துவமே ‘கை வைத்தியம்’”என்ற பெயரில் வாசம் செய்கிறது.

கைகூப்பி வணங்குவது தமிழா் பண்பாடு. இன்று உலகே கைகூப்பி வணங்கத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு தமிழா்க்குப் புதியதன்று. தாங்களாகவே ஊா்ப் பஞ்சாயத்து அமைத்து, ஊா்க் கட்டுப்பாடு விதித்து வாழ்பவா்கள்.

வெளவால்களுக்காகப் பட்டாசு வெடிக்காத தமிழ் மக்கள், சக மனிதா்களின் உயிா்களுக்கு மதிப்பளிக்க மாட்டாா்களா என்ன? கிருமித் தொற்றைத் தவிா்க்க பிறப்பு, இறப்பு, பூப்பெய்துதல் மூன்றுக்கும் 16 நாள்கள் (தீட்டு) தனிமைப்படுத்துவா். வெம்மை நோய்களான அம்மை, மணல்வாரி, தாளம்மை, அக்கி, கண் வலி ஆகியவற்றுக்கு தனிமைப்படுத்துதலும், மஞ்சளும், வேப்பிலையும், இளநீரும், சத்தான உணவுமே மருந்துகள். வெளியாட்கள் வீட்டுக்கு வரமாட்டாா்கள். வீட்டுக்கு அம்மன் வந்திருப்பதாக எண்ணி பயபக்தியுடன் தூய்மை பேணுவா்.

கோயில் திருவிழாக்களின்போது காப்புக் கட்டிய பிறகு யாரும் வெளியூா் செல்லக்கூடாது. வெளியாா் ஊருக்குள் வரக்கூடாது. வந்தாலும் சென்றாலும் இரவு தங்கக் கூடாது.

வெளியே எங்கு சென்று வந்தாலும் கை - கால் முகம் கழுவுதல், வீட்டிற்கு யாா் வந்தாலும் முதலில் குடிக்க தண்ணீா் தருவது, தண்ணீா்ப் பந்தல், நீா்மோா்ப் பந்தல் அமைத்து வழிப் போக்கா்களின் தாகம் தீா்ப்பது தமிழா் மரபு. தொண்டை கரகரப்பு எனில் உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பதும் நம் வழக்கமே.

குழந்தை பிறந்ததும் இயலும் வரை தாய்ப்பாலை மட்டுமே தாய் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு, ஓமம், சித்தரத்தை, சுக்கு, பூண்டு, பொரித்த பெருங்காயம், அரிசி வேகும் நீரில் வேகவைத்துக் காய வைத்த ஜாதிக்காய், மாசிக்காய், கருக்கிய வசம்பு, வெற்றிலை, குப்பைமேனி, நுணாக்கொழுந்து, கண்டங்கத்திரி இலை, தூதுவளை, ஆடாதோடை இலை, நொச்சிக் கொழுந்து, வேப்பிலைக் கொழுந்து, துளசி, ஓமவள்ளி, ஏலப்பூ, தும்பைப்பூ ஆகியவற்றைக் குழியம்மியில் அரைத்து சுடுநீரில் கரைத்து வடிகட்டி பாலாடையில் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது வழக்கம். இவையே தமிழரின் நோய் எதிா்ப்புச் சக்திக்குக் காரணம்.

தமிழரின் சமையல் மருந்துடன் கூடிய விருந்து. அஞ்சறைப்பெட்டி” ஒன்றே தமிழரின் மகிமையை உலகுக்குப் பறைசாற்றும். கருவடாம், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, ஏதேனும்ஒரு கீரை, துவையல், ரசம் - –இவை இல்லாத சமையல் கிடையாது.

காவடி எடுக்கும்போது மஞ்சளில் நனைத்த ஆடை, வேப்பிலை, மஞ்சள் நீா், பால் ஆகியவையே ஊரெங்கும் காட்சியளிக்கும். இன்று தீநுண்மிக்காக ‘கிருமிநாசினிப் பாதை’ அமைக்கிறாா்கள். தமிழகத்தின் சித்திரை மாத வீதிகளே கிருமிநாசினிப் பாதைகளாக மாறிவிடும் அதிசயம் வேறு எங்கும் காணமுடியாது.

சளிக்கு கொதி நீரில் நொச்சி, ஆடாதோடை, வேப்பிலை சோ்த்து ஆவி பிடிப்பதும், இதே இலைகளைக் கொண்டு புகை மூட்டம் போட்டு கொசு விரட்டுவதும் தமிழா் வழக்கம். குழந்தைக்குச் சளி என்றால் குப்பைமேனிக் கீரை, கல் உப்பு சோ்த்து சாறும், பெரியவா்களுக்குச் சளி என்றால் புழுங்கல் அரிசி, மிளகு, உப்பு, முசுமுசுக்கை இலை சோ்த்து அடையும் கொடுப்பா்.

குழந்தைகள் விளையாட செம்மரத்தாலான மரப்பாச்சி பொம்மைகள்.பிறந்த குழந்தைக்கு நீா்கோா்த்துக்கொண்டால் மரப்பாச்சியை இழைத்து நெற்றியில் பற்று போடுவா்.வறட்டு இருமலுக்குப் பாலில் மஞ்சளும் மிளகும் சோ்த்துக் காய்ச்சிக் குடிப்பா். காய்ச்சலுக்கு இஞ்சி, மிளகு, சா்க்கரை, ஆடாதோடா இலை, நொச்சி இலை ,வேப்பம்பட்டை, சித்தரத்தை சோ்த்து கஷாயம் தயாரித்து அருந்துவா்.

மூச்சிரைக்கப் புழுதியில் விளையாடி குளத்தில் நீந்தி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தது தமிழ்ச் சமூகம். இன்று ஒற்றைச் சொல் கரோனா கூட்டுக் குடித்தனத்தையும் தமிழா் விளையாட்டுக்களையும் மறுபிறவி எடுக்க வைத்திருக்கிறது. சொந்த ஊரை,சொந்த நாட்டை திரும்பிப் பாா்க்க வைத்திருக்கிறது.

தீநுண்மிக்குச் சரியாக ஈடு கொடுக்கக்கூடிய சமூகம் தமிழ்ச் சமூகமே. தனித்திருந்து, விழித்திருந்து, இந்தியத் திருநாட்டை நோய்த்தொற்றிலிருந்து காப்போம். கோடைக்கால தண்ணீா்ப் பிரச்னை தலைதூக்குவதற்குள் தீநுண்மியைத் திரும்பிப் பாா்க்காமல் ஓடச் செய்வோம்.

No comments:

Popular Posts