Saturday 11 January 2020

போலீஸ் அதிகாரி வில்சனின் கொலை உணர்த்துவது என்ன?

போலீஸ் அதிகாரி வில்சனின் கொலை உணர்த்துவது என்ன?  |.கண்ணப்பன், ஐ.பி.எஸ். காவல்துறை முன்னாள் தலைவர், சென்னை. | புத்தாண்டின் தொடக்கத்தில் காவல்துறையினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிகழ்ந்துள்ளது. களியக்காவிளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் (வயது 55) என்பவரை சமூக விரோத கும்பல் ஒன்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் வாள் கொண்டு வெட்டியும் நடத்திய கோரக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பணியிலிருந்த போலீஸ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொலையாளிகள் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டன. அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த பொதுமக்கள் ‘கொலையாளிகளை போலீசார் ஏன் திருப்பிச் சுடவில்லை?' என்ற ஆதங்கத்தை அதிக அளவில் வெளிப்படுத்துவதையும் காணமுடிகிறது.

தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை முறைப்படி செய்து கொண்டிருக்கும் போலீசாரை சமூக விரோத கும்பல் பயங்கர ஆயுதங்கள் கொண்டு திடீர் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிக்குச் சென்ற ஆல்வின் சுதன் (26) என்ற போலீஸ் அதிகாரியை வன்முறை கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் மாநில அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய குற்றவாளிகள் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் உயிரிழந்தனர். மற்ற குற்றவாளிகள் மீதான வழக்கு ஏழு ஆண்டுகளாகியும் முடிவு பெறாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி உணர்த்துவது என்ன? சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரியைக் கொலை செய்த வழக்கையும் நீர்த்துப் போகச் செய்யமுடியும் என்பதுதானே!

ஆல்வின் சுதன் கொலை வழக்கை நினைவுபடுத்துகிறது திருநெல்வேலி மாவட்டத்தில் 2010-ம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு போலீஸ் அதிகாரி கொலை வழக்கு. கடையம் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அவரது பணி நிமித்தமாக அம்பையிலிருந்து கடையத்திற்கு மோட்டார் சைக்கிளிலில் சென்றுகொண்டிருந்த பொழுது கூலிப்படையினரின் கொடூர வெடிகுண்டு தாக்குதலுக்குப் பலியான சம்பவம் காவல்துறையினரை நிலைகுலையவைத்த சம்பவங்களில் ஒன்று. இத்தகைய கொடூர கொலைச் சம்பவம் நடந்து முடிந்து பத்து ஆண்டுகளாகியும் இந்த வழக்கிலும் நீதிமன்ற விசாரணை முடிவு பெறாமல் நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மற்றொரு கொலை நிகழ்வு போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலை ஆகும். 1997-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்தைச் சரி செய்து கொண்டிருந்த காவலர் செல்வராஜை சமூக விரோதிகள் சிலர் கொலை செய்தனர். அதன் தொடர்ச்சிதான் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள். இதில் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்கள் அடைந்தனர். காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான நீதிமன்ற விசாரணை 2002-ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்கப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

செல்வராஜ், வெற்றிவேல், ஆல்வின் சுதன், வில்சன் என கடந்த இருபது ஆண்டுகளில் கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் காவல்துறை உள்ளது. இம்மாதிரியான முக்கியத்துவம் வாய்ந்த கொலை வழக்குகளில் ஒட்டுமொத்த காவல்துறையும், உளவுத்துறையும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துவிடுகின்றனர். ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் நீதிமன்ற விசாரணை பத்து ஆண்டுகள் கடந்தும் முடிவு பெறாமல் இருந்து வருகிறது. இம்மாதிரியான சூழல் பெரும்பாலும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இம்மாதிரியான கொலை வழக்குகள் அனைத்தையும் விரைவு நீதிமன்றங்களால் மிகக் குறுகிய காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஒவ்வொரு இழப்பும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுகிறது. சில சமயங்களில் அந்த பாடத்தை அந்த நிமிடத்திலேயே மறந்துவிடுவதும் உண்டு. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிக்குச் சென்ற ஆல்வின் சுதன் துப்பாக்கியை எடுத்துச் சென்றிருந்தால் அவர் உயிர் இழந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என்ற கருத்து காவல்துறையில் அப்பொழுது பரவலாக எதிரொலித்தது. கேரள எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள களியக்காவிளை மார்க்கெட் ரோட்டிலுள்ள சோதனைச் சாவடி பணிக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கி கொண்டு சென்றிருந்தால் அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றிருப்பார் என்பதும் போலீசார் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.

சோதனைச் சாவடிகளிலும் மற்ற இடங்களிலும் போலீசார் வாகனச் சோதனை நடத்துவதைச் சமூக விரோதிகள் மட்டுமின்றி சட்டத்தை மதித்து வாழும் பொதுமக்களில் பலரும் விரும்புவதில்லை. ஏதாவது ஒரு வகையில் வாகன ஓட்டுனர்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்காகவே வாகனச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் சில சமயங்களில் சோதனைச் சாவடி போலீசார் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர் எனவும் போலீசார் மீது குற்றச்சாட்டுகள் பரவலாகச் சுமத்தப்படுகின்றன. அந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று முற்றிலுமாகப் புறக்கணித்துவிடவும் முடியாது.

பலனை எதிர்பார்த்து சோதனைச் சாவடி பணிக்குச் செல்ல போலீசார் பலர் ஆசைப்படுவதும் உண்டு. அதுவே சில சமயங்களில் போலீசாரிடையே மனக்கசப்பை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. அதேசமயம் சோதனைச் சாவடி பணிக்குச் செல்லும் போலீசார் சில சமயங்களில் அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிடுவதும் உண்டு. அதன் காரணமாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்து காவல்துறை நிர்வாகத்திற்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்திய சம்பவங்களும் உண்டு.

வாகனச் சோதனை மட்டுமின்றி ரோந்து பணி, பாதுகாப்பு பணி, குற்றத்தடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்குப் பணியிடைப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படும் நடைமுறை காவல்துறை நிர்வாகத்தில் இடம் பெற்றிருந்தாலும் திட்டமிட்டப்படி அனைத்து போலீசாருக்கும் முழுமையான பணியிடைப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்க இயலாத நிலையில் காவல்துறை பயணித்து வருகிறது. இதன் காரணமாக பணியின் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் சில சமயங்களில் போலீசாருக்குத் தெரியாததினால் அவர்களது செயல்பாடுகள் அசம்பாவித சூழல்களுக்கு வழி வகுத்துவிடுகின்றன.

No comments:

Popular Posts