Saturday 11 January 2020

தியாக தீபம் திருப்பூர் குமரன்

தியாக தீபம் திருப்பூர் குமரன் | குமரி அனந்தன் | இன்று(ஜனவரி 11-ந் தேதி) திருப்பூர் குமரன் நினைவு தினம். அடி தாங்கி கொடி காத்த தீரன். 28 வயதில் அமரரான திருப்பூர் குமரன். அவருடைய இயற்பெயர் குமாரசாமி. 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். பிறந்த தேதி தெரியாது. எளிய அந்தக் குடும்பத்தில், பிள்ளைகள் பிறந்த நாளை குறிக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. தந்தை நாச்சிமுத்து. தாயார் கருப்பாயி. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சொந்த ஊர். குமாரசாமிக்கு வயது பத்தொன்பது ஆனது. பதினான்கு வயது ராமாயி மனைவி ஆனார். நெசவுத் தொழிலைவிட அதிக வருவாய் தரும் தொழிலைத் தேடி திருப்பூருக்கு வந்தார்கள். அங்கு விவசாயிகளிடம் பஞ்சு வாங்கும்போதும், வியாபாரிக்கு விற்கும் போதும் எடையைக் கண்காணிக்கும் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார்.

குமாரசாமிக்கு காந்தியடிகளுடைய சித்தாந்தம் மிகவும் பிடித்திருந்தது. காங்கிரசில் சேர்ந்தார். கதர் அணிந்தார். அன்னியத்துணி மறியல், மதுக்கடை மறியல் என்று திருப்பூர் கிளர்ச்சி கொண்டது. இம்மறியல்களில் குமார சாமியும் கலந்துகொண்டார்.

காந்தி-இர்வின் ஒப்பந்தம் வட்டமேசை மாநாட்டிற்கு வழி வகுத்தது. ஏப்ரல் மாதம் 18-ந் தேதி 1931-ம் ஆண்டு பதவி முடிந்து இர்வின்பிரபு இங்கிலாந்து சென்று விட்டார். அடுத்து வந்த வெல்லிங்டன் பிரபு காங்கிரசை அடக்கு முறையில் அழித்தொழித்துவிடுவது என்று வெறித்தனமாகச் செயல்பட்டார்.

வட்டமேசை மாநாட்டிலிருந்து திரும்பிய காந்தியடிகள் வெல்லிங்டனை சந்திக்க விரும்பி மூன்று முறை கடிதம் எழுதினார். ஆணவத்தின் உச்சியில் நின்ற வெல்லிங்டன் அன்பின் திருவுருவான காந்திமகானை அலட்சியப்படுத்தினார். காந்தியடிகள் போராட்டத்தை அறிவித்தார். காந்தியைக் கைது செய்தது அரசு.

திருப்பூர் தேசபந்து வாலிபர் சங்கம் வழக்கம்போல் வீறுகொண்டு எழுந்தது. காங்கிரஸ் அடக்குமுறையை எதிர்த்தது. போர்க்குரல் எழுப்பியது. காங்கிரசையே சட்ட விரோதமானது என்று அறிவித்தார் வெல்லிங்டன்.

தந்தையை 6 மாதத்திற்கு முன்பு இழந்திருந்த குமரன் போராட்டத்தில் குதிக்கத் தயாரானார். மனைவி ஊரில் இல்லை. தாயார் கதறி அழுதார். போராட்டத்திற்குப் பெயர் கொடுத்தார் குமரன். தலைமை ஏற்க வேண்டிய செல்வந்தர் ஈஸ்வரமூர்த்தியைப் பெற்றோரும் உற்றாரும் தடுத்துவிட்டனர். 9 தொண்டர்களை மங்களவிலாசுக்கு அழைத்து வந்த பி.ஏ. சுந்தரம் நிலையைப் புரிந்துகொண்டார். தொண்டர்கள் சுந்தரத்தை தலைமை ஏற்கச் சொன்னார்கள்.

ஒன்பது பேரையும் அணிவகுத்து நிறுத்தினார் சுந்தரம். கையில் கதர்க்கொடி பிடித்து காந்தி மகானை மனதில் நிறுத்தி பாரததேவியின் கோவிலுக்குப் புறப்படும் பக்தனைப் போல் வீறுநடை போட்டார் குமரன்.

‘வந்தேமாதரம்' என்ற முழக்கம் வானை எட்டியது. ஊரார் திரண்டு வாழ்த்து கூறினர். காவல் நிலையம் வந்தது. முப்பது காவலர்களும் இரண்டு அதிகாரிகளும் பாய்ந்து வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் மகமது. அவரே காவல்படைக்கு அங்கு தலைவர். தேசபக்தர்களைத் தேடிப்பிடித்து உதைப்பது அவருக்கு உகந்த செயல்.

முழக்கமிட்டு வந்தவர்களைப் பார்த்து கலைந்து செல்லுங்கள் என்றார்.

வீரப்படை தொடர்ந்தது.

முழக்கமிட்டு நடந்தது.

மகமதுவும் மற்ற காவலர்களும் குமரன் மீது வெறி கொண்டு பாய்ந்தனர். தடி கொண்டு தாக்கினர். இடது காதுக்கு மேலே விழுந்த அடியில் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டது. உடைந்த இடத்தை நோக்கியே அந்த உன்மத்தர்கள் மேலும் மேலும் அடித்தனர்.

தேங்காய் சிதறுவதுபோல் மண்டை ஓடு சிதறி இரண்டரை அங்குல நீளமும், ஒன்றரை அங்குல அகலமும் கொண்ட ஒரு துண்டு குத்திட்டு நின்றது.

‘‘வந்தேமாதரம்! வந்தேமாதரம்!’’ என்று சொன்ன குமரனின் வாய் ரத்தத்தால் நிறைந்தது. உயர்த்திப் பிடித்த கொடியோடு தரையில் வீழ்ந்தார். தாய்நாட்டுத் துரோகிகளாகிய காவலர்கள் கொடியைப் பிடுங்க முயன்றனர். ‘‘கொடியைப் போடுடா’’ என்று கூறிக்கொண்டே தாக்கிய கொடியவர்களின் அடியையும் தாங்கிக் கொண்டு கொடி அவர்கள் கையில் போகாவண்ணம் இறுக்கிப் பிடித்தார், குமரன். ஆத்திரமுற்ற கயமைக் காவலன் ஒருவன் குத்திட்டு நின்ற மண்டை ஓட்டின் மீது ஓங்கி அடித்தான். அடியால் அழுத்தப்பட்ட அந்த ஓடு, மூளையில் பாய்ந்து பதிந்தது. செயலிழந்தது மூளை.

வந்தேமாதரம் என்ற சொல் இழந்தது வாய். நிற்க பலம் இழந்தன கால்கள். மண்ணில் வீழ்ந்தான் மாவீரன். கொடியவர் கூட்டமோ குமரனின் உடலை மிதித்தது. கொடியை மிதித்தது. ரத்தச் சேற்றில் அந்தக் கொடிநாற்று அழுந்திக் கிடந்தது.

டாக்டர் கோபாலமேனனும், டாக்டர் ரங்கநாதனும் பதைப்புடனும் கொதிப்புடனும் ஓடிவந்தனர். குமரனைப் பார்த்தனர். அவர்களுக்குப் புரிந்துவிட்டது. எதுவும் சொல்ல வில்லை. ராமன் நாயரின் முறிந்த எலும்பு இருதயத்தைத் தாக்கவில்லை. சுந்தரத்திற்கு மட்டுமே நினைவிருந்தது. குமரனை அவர் திரும்பிப் பார்த்தார். உண்மை நிலை தெரிந்தால் சுந்தரம் உயிருக்கும் ஆபத்து என்பதால் குமரனைப்பற்றி எதுவும் சொல்லவில்லை டாக்டர்கள்.

தாய்நாட்டிற்குத் தனயனைத் தத்துக் கொடுத்த சுந்தரத்தின் தாய் ஓடிவந்தார். அந்த நிலையிலும் ‘‘மகனே! நாட்டுக்கு ஆற்றவேண்டிய கடமையை நன்றாகச் செய்தாய். காந்தி மகான் என்மீது வைத்த நம்பிக்கை வீண் போக வில்லை மகனே! நான் இப்போது சிறந்த தேசபக்தன் சுந்தரத்தின் தாய்...’’ என்றார். புறநானூற்றுத் தாயின் மரபு வழி வந்த அந்த மங்கையர் திலகம்.

சுந்தரத்தின் கண்கள் குமரனைப் பார்த்தன. ஆபத்தை உணர்ந்த டாக்டர்கள் தூக்க ஊசி போட்டனர் சுந்தரத்திற்கு. அதிகாலை கண்விழித்த சுந்தரம் ‘‘இன்னும் குமரனை ஏன் இங்கே கிடத்தி இருக்கிறீர்கள்!’’ என்று கேட்டார்.

குமரன் ஏதோ முணுமுணுப்பதுபோல் வாய் அசைந்தது.

‘‘வேறு ஒரு அறைக்குக் கொண்டு போகிறோம்" என்று சுந்தரத்திற்கு சமாதானம் சொல்லிக்கொண்டே மயக்க ஊசியைப் போட்டார்கள். ஆம் சுந்தரத்தைக் காப்பாற்ற முடியுமா என்பதே டாக்டர்களுடைய முயற்சியாக இருந்தது. ஏனெனில் குமரனின் நிலை அவர்களுக்குத் தெரிந்து விட்டது. சற்றுநேரத்தில் அந்த வீரத்திருமகனின் உயிர் பிரிந்துவிட்டது. தேச விடுதலை வேள்விக்கு தன்னை அர்ப்பணித்து விட்ட தியாகி குமரனின் உடலை பலர் அறிய எடுத்துச் சென்றால் மக்கள் கொதித்து எழுந்துவிடுவார்கள் என்பதைத் தெரிந்த அதிகாரிகள் ஓசைப்படாமல் காரியத்தை முடிக்க விரும்பினர்.

1932 ஜனவரி மாதம் 11-ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது. ஆனால் பிணப் பரிசோதனை நண்பகல் 1 மணி வரை நடந்தது. உறவினரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

துப்பட்டியால் தூளிகட்டி அதில் குமரனைக் கிடத்தி மூங்கில் கழியைக் குறுக்கே செருகித் தூக்கிக்கொண்டு இருவர் நடந்தனர் இடுகாட்டை நோக்கி.

புதைக்கப்பட்டது இருபத்தெட்டே வயதான இளைஞன் குமரனின் சடலம். ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது குமரன் தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.

No comments:

Popular Posts