Monday, 23 December 2019

குடியுரிமை திருத்த சட்டம்: பொய் பிரசாரங்களை அறிந்திடுங்கள்

குடியுரிமை திருத்த சட்டம்: பொய் பிரசாரங்களை அறிந்திடுங்கள்

பிரகாஷ் ஜவடேகர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி

நா டு முழுக்க, குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சில அரசியல் கட்சிகளும், பிரதமர் நரேந்திரமோடியின் எதிர்ப்பாளர்களும், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, நிலைமையை மேலும் மோசமாக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே இதுதொடர்பான உண்மைகளை விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா-2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவை இரு வேறு விஷயங்கள் என்பது முதலாவது விஷயம். இந்த இரு விஷயங்களையும் குழப்பிக் கொண்ட காரணத்தால் இப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதன் மூலம், சிறுபான்மை சமுதாயத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர். இதனால் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக, முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு பறிபோய்விடும் என்றும், அவர்கள் “அன்னியர்கள்” என அறிவிக்கப்படுவார்கள் என்றும் பொய்யான அச்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அரசியலில் இதைவிட பெரிய பொய் இதுவரை உருவாக்கப்படவில்லை.

முதலில், குடியுரிமை திருத்த மசோதாவை நாம் புரிந்துகொள்வோம். பிரிவினைக்கு முந்தைய காலம் வரையில் பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்தியாவின் அங்கமாக இருந்தன. இந்தத் துணைக் கண்டத்தின் பரந்த பிராந்தியத்தின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் இருந்தது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசப் பிரிவினைக்கு மதம் தான் அடிப்படைக் காரணமாக இருந்தது. பெருமளவிலான முஸ்லிம்கள் இந்த நாடுகளுக்குச் சென்றனர். அந்த நாடுகளில் இருந்து பெருமளவிலான இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தனர். அகதிகள் இந்தியாவில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் மகாத்மா காந்தி, “ஒரே இந்தியாவானது இப்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டியது நமது கடமை” என்று அவர் கூறினார். நேரு மற்றும் சர்தார் பட்டேல் ஆகியோரும் இதேபோன்ற கருத்துகளை முன்வைத்தனர். அந்த சமயத்தில் பல லட்சம் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது.

இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்துக் கொண்டுள்ளன. எனவே அந்த நாடுகளில் மத அடிப்படையில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவில் எந்த மதமும் முன்னுரிமை பெற்றது கிடையாது, அரசியல்சாசனம் தான் முதன்மையானது. எனவே, இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், புத்த மதத்தவர் மற்றும் பார்சி அகதிகள் அனைவருக்கும் பாதுகாப்பு தருவது என்ற கொள்கையை இந்தியா எப்போதும் கடைபிடித்து வருகிறது.

2003-ம் ஆண்டில் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, இந்தக் கொள்கையை முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என அப்போது அரசு அறிவித்தது. இப்போது போராட்டங்கள் நடத்தி வரும் பல அரசியல் கட்சிகள், அப்போது வாஜ்பாய் அரசு மேற்கொண்ட முயற்சிக்கு ஆதரவு அளித்தன என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

அதன்பிறகு 2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றது. அந்த மசோதாவை, அந்த அரசு மீண்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அதன் விதிகளை ஓராண்டுக்கு நீட்டித்தது. அதே நடைமுறை 2005-ல் மீண்டும் அமல் செய்யப்பட்டு மேலும் ஓராண்டுக்கு செயல்படுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் பல கட்சிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்தன.

2003-ல் கொண்டு வரப்பட்ட சட்டம், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகள் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. இப்போதைய சட்டம் மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வெளியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், கிறிஸ்தவர்கள், சமண மதத்தவர்கள் மற்றும் பார்சிகள் பற்றி குறிப்பிடுகிறது. நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம்-2019, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி வெளியேறி வந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், கிறிஸ்தவர்கள், சமண மதத்தவர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. எனவே இது முந்தைய சட்டத்தைவிட விரிவானது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள், 2004 மற்றும் 2005-ல் எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாட்டை இப்போது எடுத்துள்ளன. இது கபட நாடகம்.

இப்போது எழுப்பப்படும் ஒரு கேள்வி என்னவென்றால், “முஸ்லிம்கள் மீது ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது?” என்பது தான். அதற்கான பதில், “முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் எதுவும் கிடையாது” என்பது தான். எதிர்காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் இருக்காது. இப்போது இந்தியக் குடிமகனாக உள்ள ஒரு இந்தியர்கூட, இதுதொடர்பாக எதிர்காலத்தில் அசவுகரியத்துக்கு ஆளாக மாட்டார். முஸ்லிம் குடிமக்களின் தேசப்பற்று குறித்து எந்த சந்தேகமும் எழுப்ப முடியாது. முஸ்லிம் குடிமக்களின் உரிமைகள் குறித்து சமரசம் எதுவும் இருக்காது.

இப்போதைய பிரச்சினை இந்திய குடிமக்கள் பற்றியதே கிடையாது. பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் முஸ்லிம் நாடுகள். எனவே, அந்த நாடுகளில் முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான துன்புறுத்தல்கள் இல்லை. இந்தச் சூழ்நிலையில், பிரதமர் எழுப்பிய ஒரு கேள்விக்கு எந்த அரசியல் கட்சியும் பதில் அளிக்கவில்லை: இந்த நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இந்திய குடிமக்களாக மாறுவதற்கு தெளிவான பாதை அமைத்துத் தர வேண்டுமா? 30 கோடி பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தெளிவான வாய்ப்பு உருவாக்க வேண்டுமா? இதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளனவா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார். அதற்கு எந்த அரசியல் கட்சியும் பதில் அளிக்கவில்லை.

உலகில் எந்த நாடும், குடியுரிமை பெறுவதற்கு எளிதான பாதை அமைத்துத் தருவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாதிரியான சட்டங்கள் உண்டு. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எப்போதும் நாடு கடத்தப்படுகின்றனர். இதுதான் உலக நடைமுறை. இதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிப்பது இல்லை. இதே கொள்கையை இந்தியா அமல்படுத்தும்போது, சிலர் அதை பிரச்சினையாக்குவது துரதிருஷ்டவசமானது. இவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை குழப்பிக் கொண்டு, மக்கள் மனதில் குழப்பத்தை விதைக்கின்றனர்.

உலகில் முன்னணி நாடுகள் அனைத்தும் குடிமக்கள் பதிவேடு வைத்திருக்கின்றன. இந்தியாவில் அது இன்னும் உருவாக்கப்படவில்லை. அதை எட்ட என்.ஆர்.சி. உதவும். 1985-ல் அசாம் ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தி கையெழுத்திட்டபோது, இதுபோன்ற என்.ஆர்.சி.யின் தேவையை அவர் ஒப்புக்கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தான் இப்போது அசாமில் என்.ஆர்.சி. உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டில் பெயர் இடம் பெறாதவர்கள், மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முழுக்கவே சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி நடந்தன என்பதால், இதில் சந்தேகம் எழுப்புவது பொருத்தமற்ற செயல். நாட்டின் பிற பகுதிகளில் என்.ஆர்.சி. அமல் செய்வதைப் பொறுத்தவரையில், அதற்கான விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இப்போதைய நிலையில் அதுகுறித்து தவறான புரிதல்களை அனுமானித்துக் கொள்வது, அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் துரதிருஷ்டவசமானது.

ஆதார் அட்டைக்கான முயற்சி தொடங்கப்பட்டபோது, தங்கள் அடையாளத்தை நிரூபிக்க ஏழை மக்கள் எப்படி ஆவணங்களைப் பெறுவார்கள் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இப்போது நிலைமை என்ன? ஏறத்தாழ இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை உள்ளது. தங்களது திறன்கள் பற்றி சந்தேகம் எழுப்புபவர்களைவிட, இந்திய மக்கள் புத்திசாலிகள் என்பது தெளிவாகியுள்ளது.

இப்போதைய நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் வந்துவிட்டது. என்.ஆர்.சி. என்பது விவாதத்துக்கான நிலையில் உள்ளது. ஆனால், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன்: 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்களில் ஒருவர் கூட என்.ஆர்.சி.யில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள், இதுபற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை. சிலர் வன்முறையை தூண்டி விடுகின்றனர். அவர்களுடைய உண்மையும் விரைவில் அம்பலத்துக்கு வரும். பிரதமர் மோடியின் வரலாற்றுப்பூர்வமான இரண்டாவது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முத்தலாக் தடைச் சட்டம், அமைதியான முறையில் அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கம் போன்ற செயல்பாடுகளால் எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. இப்போது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தன்னலம் மற்றும் எதிர்மறை அரசியலுக்கு இந்தியா இனிமேலும் இடம் கொடுக்காது.

No comments:

Popular Posts