Monday, 23 December 2019

உலகிற்கு அச்சாணி உழவர்களே...!

உலகிற்கு அச்சாணி உழவர்களே...!

முனைவர் இரா.பழனிவேலு, பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியர், தனியார்கல்லூரி, பூண்டி.

இன்று (டிசம்பர் 23-ந்தேதி) விவசாயிகள் தினம்

வைகறையில் துயில் எழுந்து உழைப்பவர் விவசாயிகளே. இந்திய முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்தநாள் (டிசம்பர் 23-ந் தேதி) விவசாயிகளின் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர் விவசாயிகளுக்கு செய்த தொண்டினை என்றென்றும் நாம் மறக்கலாகாது.

வேளாண்மைக்கு உதவிய இயற்கையாகிய மழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய பருவம் தவறி வேளாண்மை சரிவைக் கண்டது. கிணறுகள், ஏரிகள் மூடப்பட்டன. வேளாண்மை நிலங்கள் பாலைவனமாக மாறின. வீட்டுமனை பட்டாவானது. தாழ்வான பகுதியை கொண்ட காவிரி டெல்டா மாவட்டம் குறைந்த நீரைக் கொண்டும் பருவம் தவறி வரும் ஆற்றுநீரைக் கொண்டும் கரையோரப் பகுதியில் ஆழ்துளைக்கிணறு வழியும் வேளாண்மை செய்து வருகின்றனர். குடிநீருக்கே பஞ்சம், வேளாண்மைக்கு உயிராக விளங்கிய மாடுகளை விற்றுவிட்டனர்.

உலகை வாழவைத்த உழவர்கள் வேளாண்மைக்கு இடுபொருளின்றி வாழவழியின்றி டெல்டாவில் தவிக்கின்றனர். இடைத்தரகர்களின் கொண்டாட்டம் ஒருபுறம், கடும் வறட்சி. உபகரணம் இன்றி வேளாண்மை செய்ய இயலாத அவலம். அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தின் மெத்தனப்போக்கு கண்டு கொள்ளாத அரசு, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் என வேளாண்மை உயிர் ஊசலாடி வருகிறது. .

எனவே பிள்ளைகள் தொழிலை மறந்து ஒருபுறம் கல்விச் சாலையில் அடைப்பட்டுக்கிடக்க, அதிக கூலி கொடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் தம் பிள்ளைகளை வேறு தொழில் செய்ய அறிவுறுத்துகின்றனர்.

இப்போது நவீன உலகத்திற்கு மயங்கி வேளாண் தொழிலைப் புறக்கணித்துவிட்டு மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். இதனால் கூட்டுக் குடும்பம் சிதைந்து தனித்தனிக் குடும்பங்களாகச் சிதறிவிட்டன. இதன் காரணமாக தன்மானத்தையும் சுயகவுரவத்தையும் இழந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறோம். இதிலிருந்து விடிவு காலம் கிடைக்குமா மீண்டும் பொற்காலம் திரும்புமா விவசாயிகள் சாகுபடி செய்வதற்குத் தண்ணீரும், விலைபொருள்களுக்கு நியாயமான விலையும் மட்டுமே எதிர்பார்க்கின்றனர். கடனையோ இலவசத்தையோ எதிர்பார்க்கவில்லை. எனவே, தண்ணீரும் உற்பத்தி விலை பொருள்களுக்கு உரிய நியாயமான விலையும் கிடைத்தால் விவசாயிகளுக்கு மீண்டும் பொற்காலம் திரும்பும்.

விவசாயத்தை முதுகெலும்பாய்க் கொண்ட வலிமையான பாரதம் மேலைநாடுகளைப் போல் விவசாயிகளுக்கு இலவச விதைகள், இடுபொருள் தர வேண்டும். ஊராட்சி தோறும் உழவுக் கருவிகளை ஊருக்கு ஐந்து வாகனம் அளித்து பராமரித்து இலவச உழவு செய்து கொடுக்க வேண்டும். நிலங்களை பராமரித்து மேடுபள்ளம் சரி செய்து இலவசமாய் தர வேண்டும். ஒன்றியத்துக்கு இரண்டு, மூன்று இயந்திர உழவு வண்டி போதாது. கிராமந்தோறும் இலவசமாய் வேளாண்மை உபகரணம் வழங்கி ஊராட்சி தலைவர்கள் வழி விவசாயத்தை வளர்த்திட வேண்டும்.

வேளாண்மை இடுபொருள் வழி மாசு ஏற்பட்டு நாட்டில் வியாதி பெருகியுள்ளது. நண்டு, நத்தை, ஊர்வன (மண்புழு), தவளை நன்மை செய்யும் வேளாண்மை உயிரினம் (பூச்சி) அழிந்து போய்விட்டன. காற்று மாசு அடைந்து அதிக பூதாகரமாக மாறி புதிய நோய்க்கு வழி செய்கிறது. ரசாயன உரங்களை பயன்படுத்துவதனால் தானியங்கள் நச்சு உணவாக மாறி வருகிறது. கால்நடைப் பண்ணை ஊராட்சிதோறும் ஏற்படுத்தி, இலவச காளைகளை அரசு உழவுக்குத் தர வேண்டும். ‘எருது கசாப்பு தடைச் சட்டம்’ கொண்டு வர வேண்டும். கால்நடைகளை பெருக்கி இயற்கை தொழுஉரம் பயன்படுத்த வகை செய்ய வேண்டும். ஊர்கள் தோறும் அரசு விதை பண்ணை அமைத்து தட்டுப்பாடில்லாத விதைகள் தர வேண்டும்.

இதன்வழி மண்வளம், நீர் வளம், காற்று பாதுகாக்கப்படும். பறவையினம் புலம் பெயராது இந்நிலை ஏற்பட்டால் மக்கள் விவசாயத்தை புறக்கணிக்கமாட்டார்கள். வேளாண்மைக்குரிய நீர்நிலைகளை வருடந்தோறும் முன்கூட்டிய தூர்வார வேண்டும். வேளாண்மை கல்லூரி அதிகம் கொண்டு வந்து அம்மாணவர்களை மீண்டும் வேளாண்மைக்கு உதவ அறிவுறுத்த வேண்டும். புதிய கண்டுபிடிப்புவழி, வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். குறைந்த மழை, குறைந்த ஆற்றுப்பாசனம், குறைந்த ஆழ்துளை கிணற்று நீரினை கொண்டு குறுகிய கால விளைச்சலை உற்பத்தி செய்து வேளாண்மையை வளர்த்து மீட்டெடுக்க அரசு முன் வர வேண்டும். பட்டதாரிகள் சேற்றில் கால் வைத்தால்தான் குலத்தொழில் அழிவு வராது. வேளாண்மையின் பெருமையைப் பேசும் நிலை வளரும்.

விவசாயத்துறை அதிக வேலை வாய்ப்பைத் தரும் துறையாகும். வேளாண்மையில் அரசு கண்ணும் கருத்துமாய் செயல்பட்டால் விவசாயிகள் நகர்புறம் குடிபெயரமாட்டார்கள். தனிக்குடித்தனம் பெருகாது. உறவும் உழவும் அழிந்து போகாது. கைத்தொழில் பாழ் போகாது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகாது. மேற்கூறியவையுணர்ந்து மத்திய, மாநில அரசு பிற துறைகளை விட அதிக கவனத்தை வேளாண்மையில் செலுத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். கால்நடைப்பண்ணை வைத்து உழவு செய்து, உழவை ஊக்கப்படுத்தி விவசாயக் குடும்பங்களை வாழவைத்து வேளாண்மை உற்பத்தி பெருக்கிப் பொருளாதார முன்னேற்றம் கண்டு நாடு உயர வேண்டும். உலகிற்கு உழவர்களே அச்சாணி இந்த உலகம் உழவர் உலகம் என்ற வாக்கின்வழி மீட்டெடுக்க வேண்டும்.

No comments:

Popular Posts