Tuesday, 24 December 2019

மக்கள் போற்றும் மக்கள் திலகம்

மக்கள் போற்றும் மக்கள் திலகம்

சைதை சா.துரைசாமி - பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் ஒரு திரைப்பட நடிகராக அல்லது முதல்-அமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. தாய்க்கு மகனாக, தங்கைக்கு அண்ணனாக, உழைக்கும் மக்களின் தோழனாக, ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டும் சக்தியாக, சுருக்கமாக சொல்வது என்றால் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எம்.ஜி.ஆரை மக்கள் கருதினார்கள். அதனால்தான், அவர் மரணம் வரையிலும் தோல்வி காணாத முதல்-அமைச்சராக இருந்தார்.

திரைப்படங்களில் அவர் மக்களுக்கு எப்படிப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தாரோ, அவற்றை எல்லாம் முதல்-அமைச்சராக வந்து நிறைவேற்றிக் காட்டினார். எம்.ஜி.ஆர். நிறைவேற்றிய மகத்தான ஒருசில திட்டங்களை மட்டும் இன்றைய தினத்தில் எடுத்துரைக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் ஒட்டுமொத்த சாதனைகளையும் சொல்லி முடிப்பதற்கு நாலைந்து புத்தகங்களே தேவைப்படும்.

பேசுவது வாய் வார்த்தையல்ல என்பதுபோன்று, பெண்களுக்காக மகத்தான பல திட்டங்களைத் தீட்டினார். இரவுநேரத்தில் பெண்கள் பாதுகாப்புடன் வீடு திரும்பவேண்டும் என்பதற்காக முதன்முதலாக, மகளிர் காவல் படையை உருவாக்கி, பாதுகாப்பு வழங்கியவர் எம்.ஜி.ஆர்.தான். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகளுக்கு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் வேலைகளில் முன்னுரிமை வழங்கினார். எம்.ஜி.ஆர். கருணையால் ஒரே நாளில் 12 ஆயிரம் பெண்கள் அரசுப் பணியாளர் ஆகும் வாய்ப்பை பெற்றார்கள். பெண்ணுக்கு உரிய மதிப்பு தரவேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆலய அறங்காவலர் குழுக்களிலும் ஒரு பெண்ணையும் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார். பெண்களின் துயரமான விறகு அடுப்பு கொடுமையை தீர்ப்பதற்கு புகையில்லா அடுப்பு என எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டதும் எம்.ஜி.ஆர். தான்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த நேரத்தில், தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரம் ரேஷன் கடைகள் மட்டுமே தனியார் மூலம் இயங்கிவந்தன. பெரும்பாலும் பகுதி நேரமே இயங்கிவந்த ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குச் சேரவேண்டிய பொருட்கள், வெளிச்சந்தையில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அதனால், நேரடியாக அரசு மூலமாக 22 ஆயிரம் முழுநேர நியாயவிலைக் கடைகளைத் திறந்து சாதனை படைத்தார் எம்.ஜி.ஆர்.

அதனால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்ததுடன் ரேஷன் கடைகளில் முழு நேரமும் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் அட்டை வழங்கப்பட்டு, அனைவருக்கும் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டன. ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேட்டை தடுப்பதற்காக, ரேஷன் கடையில் புகார் புத்தகம் வைக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்து மக்கள் குறைதீர்த்த முதல் தலைவரும் எம்.ஜி.ஆர்.தான்.

கரிகாலன், பென்னிகுவிக் வரிசையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர். ஆம், ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து தமிழ்நாடு எல்லை வரை நீண்ட நெடிய கால்வாய் வெட்டி புரட்சிகரமான தெலுங்கு - கங்கை திட்டத்தை நிறைவேற்றிக் காட்டினார் எம்.ஜி.ஆர். அதேபோன்று பாலாற்றில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டமும் கோவை மாநகரின் தேவையைப் பூர்த்திசெய்யும் சிறுவாணி குடிநீர்த் திட்டப் பணிகளும் எம்.ஜி.ஆர். கொண்டுவந்தவை தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும், தனி விமானம் வாங்கி செயற்கை மழை பொழியவைத்ததும் எம்.ஜி.ஆரின் மறுக்கமுடியாத சாதனைகள்.

பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் பள்ளியில் பயின்றுவந்த மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் 200 நாட்களுக்கு வழங்கப்பட்டது. இளமையிலே பசியின் கொடுமையை நன்குணர்ந்த எம்.ஜி.ஆர். ஆண்டு முழுவதும் பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் சத்து நிறைந்த 28 வகையான உணவுகள் வழங்கும் வகையில் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். பள்ளியில் பயிலாத 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தினால் இன்று கிட்டத்தட்ட 1 கோடி பேர் பயன் அடைகிறார்கள் என்பது வரலாற்று சாதனையாகும்.

இதுதவிர, மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடப்புத்தகம், இலவச பல்பொடி போன்றவைகளும் எம்.ஜி.ஆரால் கொடுக்கப்பட்டன. கல்வி சீர்திருத்தமாக பிளஸ்-2 பாடத்திட்டம், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு, தனியாருக்கு பொறியியல் கல்லூரிகள் போன்றவற்றைக் கொண்டுவந்ததும் எம்.ஜி.ஆர். தான். அவரது கல்வி புரட்சியினால்தான் இன்று உலகமெங்கும் தமிழர்கள் ஐ.டி. துறையில் பெரும் புரட்சி செய்துவருகிறார்கள்.

தமிழகத்தில் 49 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவீதம் என்று உயர்த்தி பெரும் புரட்சி செய்தவர் எம்.ஜி.ஆர்.தான். சுப்ரீம் கோர்ட்டில் 50 சதவீதத்திற்குள் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டாலும், சட்டப்படி 68 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தமிழகத்தை தனி பாதையில் கொண்டுசென்றார். அது மட்டுமின்றி, அரசு மானியம், அரசு நிதிபெறும் பல்கலைக்கழகம், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துமே 68 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்கும் தன்னிறைவுத் திட்டத்தைக் கொண்டுவந்து சாதனை படைத்தார் எம்.ஜி.ஆர். குடிநீர் வசதி, சிறு பாலங்கள், பள்ளி கட்டிடங்கள், ஊரக மருந்தகங்கள், இணைப்புச்சாலை வசதிகள், தாய்-சேய் நல விடுதிகள், மயானத்துக்கு பாதை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டன. மூன்றே ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் தன்னிறைவுத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. ஆம், ஊரகச் சாலைகள் திட்டம் மூலம் சுமார் 6,300 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைக்கப்பட்டன. குடிசைகளுக்கு ஒரு விளக்குத் திட்டமும் பின்னர் இருவிளக்கு திட்டமும் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிமுகப்படுத்தியதும் எம்.ஜி.ஆர்.தான்.

தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு யாரும் செய்யமுடியாத அரிய முயற்சியை எம்.ஜி.ஆர். மேற்கொண்டார். ஆம், மதுவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதற்காக புரட்சிகரமான ஓர் அவசரச் சட்டம் கொண்டுவந்தார். மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறை, இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தார்.

சட்டம் இதுபோன்று கடுமையாக இருந்தால்தான் மக்களை குடியின் அசுரபிடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று எம்.ஜி.ஆர். உறுதியுடன் நம்பினார். ஆனால், எம்.ஜி.ஆர். சட்டத்துக்கு அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. ‘குடிப்பது என்ன கொலைக்குற்றமா?, கொடூர பாவமா?’ என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அந்த சட்டத்தை மனவேதனையுடன் திரும்பப்பெற்றார் எம்.ஜி.ஆர்.

குடியினால் ஏற்படும் கொடூரங்களை தீர்க்கதரிசனமாக அறிந்து எம்.ஜி.ஆர். கொண்டுவந்த அவசர சட்டத்துக்கு, அன்றைய எதிர்க் கட்சிகள் ஆதரவு கொடுத்திருந்தால் இன்று தமிழகம் இந்தியாவிலே முதன்மை மாநிலமாகவும், உலகத்திற்கே முன்னோடி மாநிலமாகவும் இருந்திருக்கும். மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சட்டத்தை அத்தனை கட்சிகளும் எதிர்த்த காரணத்தால்தான் தமிழகத்தில் சாதுவாக நுழைந்த மது, இன்று அரக்கனாக உருமாறி ஆண்களையும், பெண்களையும் ஆட்டுவிக்கிறது. இனி, தமிழகத்தில் மதுவை ஒழிக்கவேண்டும் என்றால், மீண்டும் எம்.ஜி.ஆர். பிறந்துவந்தால் மட்டுமே முடியும் என்பதுதான் வேதனையான உண்மை.

No comments:

Popular Posts