Wednesday 9 October 2019

உடல் பருமன் உயிருக்கு எமன்...!

உடல் பருமன் உயிருக்கு எமன்...!

மருத்துவர் ஆ.முருகநாதன், முன்னாள் தலைவர்,

இந்திய மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு கிளை.

எ ழுமின் விழிமின் என்பது சுவாமி விவேகானந்தரின் பிரபலமான முழக்கம். இப்போது அதில் பருமன் ஒழிமின் என்பதையும் இணைத்து முழங்க வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகிறது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது. அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

ஒருவருடைய உடல் எடை, இயல்பாக இருக்க வேண்டியதைவிட 20 சதவீதம் கூடுதலாகிவிட்டால் அவர் உடல் பருமனுடன் இருக்கிறார் என்று அர்த்தம். இந்தியர்களுக்கு மரபு வழியாகவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இடையைச் சுற்றி கொழுப்பு அதிகமாகும் வாய்ப்பு அதிகம். இடைச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ, பெண்களுக்கு 80 செ.மீ. இருக்க வேண்டும் இது தான் சரியான அளவாகும்.

முக்கியமாக அதிக சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளுதல். அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடலுக்கு அதிக வேலை தராமலும், உடற்பயிற்சி இல்லாமலும் இருப்பது. மரபு வழிக் காரணங்கள் ஹார்மோன் நிலை மாற்றங்கள் சர்க்கரைநோய் உடல் பருமனாக காரணமாகி விடுகிறது. உடல் பருமனால் முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். இருதய நோய்களை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடல் பருமனும் ஒன்று அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது. பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் சோர்வும் ஏற்படும்.

பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும். உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணும். அதிக உடல் பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.

நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்ப வேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது. குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

பருமனானவர்களின் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. குறட்டை நோய் உண்டாக வாய்ப்புள்ளது.

உடல் பருமனை தடுக்கும் முறைகள்: துரித உணவு, கொழுப்புப் பண்டங்கள், எண்ணெயினால் செய்த பலகாரங்கள், இறைச்சி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும் அல்லது விலக்கி விட வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக இனிப்பு மற்றும் கார உணவுகளை தவிர்க்கவும். வெண்ணெய், நெய், ஜாம் வகைகள், சாக்லேட், கேக்குகள், முட்டை போன்றவற்றை விலக்க வேண்டும். உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும். அது உடலில் நீரைப் பெருக்கி உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

தொலைக்காட்சி முன் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு அதை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல். ஒவ்வொருவரும் தனது உடல் எடையையும் மற்றும் இடுப்பு அளவையும் குறைந்தது மாதம் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பேக்கரி உணவுகளான சிப்ஸ் மற்றும் கேக்ஸ் போன்றவைகளை தவிர்த்தல் நல்லது.

ஒவ்வொரு உணவுப் பொருளையும் கடைகளில் வாங்கும்போது அதன் வெளிப்புறம் உள்ள அட்டையில் இந்த உணவுப்பொருளில் எவ்வளவு கலோரிகள் அடங்கியுள்ளன என்ற விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும். (எவ்வளவு கொழுப்பு உள்ளது, எவ்வளவு கார்போஹைட்ரெட் உள்ளது, எவ்வளவு சர்க்கரை உள்ளது என்ற விவரம்) அவற்றை கண்டறிந்து அதில் கொழுப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பது நல்லது.

தவறான உணவுப்பழக்கங்கள் என்பது நமது மண் சார்ந்த உணவுகளை மறந்து பிற வகை உணவுகளை உட்கொள்வதாகும்.

‘உண்டி சுருக்கல் பெண்டிர்க்கு அழகு’ என்ற மூதுரையை நாம் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம் அதாவது பெண்கள் குறைவாக உண்ண வேண்டும் என்பதாகும், ஆனால் உண்மை அதுவல்ல! உணவு சமைப்பதை பெண்கள் சுருக்கி அளவாக சமைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு அளவாக பரிமாறி எல்லோரும் உடல் பருமனின்றி நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே உண்மையாகும்.

ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை பழங்கள், காய்கறிகளைக் சிறிதளவாவது சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இரவு உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே உறங்கச் செல்வது சாலச்சிறந்ததாகும். ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இடை இடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது. வாழ்வதற்காக உண்கிறோம் உண்பதற்காக நாம் வாழவில்லை என்ற கோட்பாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் தவிர்க்க முடிகின்ற காரணங்களில் தவறான உணவுப்பழக்கம் மற்றும் குறைவான உடற்பயிற்சி இரண்டும் வருகின்றன.மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், யோகப் பயிற்சி செய்தல். அன்றாடம் உடற்பயிற்சி செய்வது உடல் பருமனை தடுப்பதற்கான மிகச்சிறந்த வழி. உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான எடை, உணவு போன்ற அம்சங்களை இணைத்துக்கொள்ளும்போது அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகம். உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் சீராக இயங்குவதற்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சியுடன், தோட்டக்கலை, வீட்டு பராமரிப்பு பணிகள், உங்கள் செல்லப்பிராணியுடன் நடைப்பயிற்சிக்கு செல்வது என அனைத்துமே உடற்பயிற்சி செய்வது போலத்தான். அதனால் எடுத்தவுடனே கடுமையான உடற்பயிற்சி முறைகளை தேர்ந்தெடுக்காமல் எளிமையான நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றிலிருந்து உங்கள் அன்றாட உடற் பயிற்சியைத் தொடங்கலாம்.

No comments:

Popular Posts