Saturday, 5 October 2019

மானிட இனத்தின் மொழி

ஆங்கிலத்தை கற்கும் ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை தமிழில் பேச, படிக்க, எழுத வைப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

அரசாங்க பரிவர்த்தனைகள், வங்கி மற்றும் வணிக செயல்பாடுகளில் நடைமுறை தமிழை அரசு பயன்படுத்த வேண்டும். மின்னணு வடிவ தொலைதொடர்புகள் அனைத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். இன்று ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த முடிந்த நிலை மக்களுக்கு உள்ளது. தமிழ் பயன்பாடு குறைந்து வருவதால், எதிர்காலத்தில் அதற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

செ ப்டம்பர் 27-ந்தேதி ஐ.நா பொது சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, சங்க கால தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பாடல் வரியை மேற்கோள் காட்டி பேசினார். முன்னதாக டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் அவர் உரையாற்றியபோது, ‘எல்லாம் நலமாக உள்ளது’ என்ற வாக்கியத்தை தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் கூறினார்.

சில வருடங்களுக்கு ஒருமுறை மொழி பற்றிய சர்ச்சை இந்தியாவில் வெடிக்கிறது. ஆனால் தமிழகத்திற்குள் மெதுவாக நுழைய முயலும் மோடியின் முயற்சியினால் 6.9 கோடி தமிழர்கள் (2011 இந்திய அரசு சென்சஸ் படி) ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய மக்கள் தொகையில் 5.7 சதவீதத்தினர் பேசும் மொழியாக 5-வது இடத்தில் தமிழ் உள்ளது. முதல் இடத்தில் இந்தியும் (52 கோடி மக்களினால் பேசப்படுகிறது), இரண்டாவதாக பெங்காலியும் (9 கோடி), மூன்றாவது இடத்தில் மராத்தியும் (8.3 கோடி), நான்காவது இடத்தில் தெலுங்கும் (8.11 கோடி) உள்ளன. 1961 சென்சஸில் இருந்து தமிழ் பேசக் கூடியவர்களின் எண்ணிக்கை, ஐந்தாவது இடத்தில் தொடர்கிறது.

“1961 முதல் 2011 வரையில் தமிழ் மொழியின் வளர்ச்சியும், மக்கள் தொகை வளர்ச்சியும் ஏறக்குறைய நிலையாக உள்ளன. சமஸ்கிருதத்தை போல் அல்லாமல், சங்க இலக்கியங்களின் காலம் முதல் இன்று வரை தமிழ் ஒரு உயிர் வாழும் மொழியாகும். தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் தத்துவார்த்த ரீதியாகவும், மொழியில் ரீதியாக மிகவும் நுட்பமான, கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த நூலாகும். 2,000 வருடங்களாக தமிழ் மொழி உயிர் வாழ அதன் நெகிழ்வு தன்மை மற்றும் காலத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் தன்மைகள் தான் காரணம். பல இதர மொழிகள் அழிந்து போய்விட்டன” என்கிறார் இந்திய மக்களின் மொழியியல் ஆய்வு (பி.எல்.எஸ்.ஐ.) திட்டத்தின் தலைமை ஆசிரியரான ஜி.என்.டேவி.

பி.எல்.எஸ்.ஐ. திட்டத்தில், 3,000 நபர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், 35,000 அச்சிடப்பட்ட பக்கங்கள் கொண்ட, 91 நூல்களை கொண்ட, (தமிழ் மொழிக்கும் ஒரு விரிவான தொகுப்பு உள்ளிட்ட) 50 தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.

இந்தி திணிப்பிற்கு எதிரான தமிழுணர்வு தீவிரமான அரசியலாக வெளிப்பட்டாலும், மொழி ஆய்வாளர்கள் மற்றும் மொழியில் வல்லுனர்கள் தமிழ் மொழி எதிர்கொண்டுள்ள சவால்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். முக்கியமாக அடுத்த தலைமுறை தமிழ் பேசுபவர்களுக்கு உள்ள சவால்கள் பற்றி.

“இந்த திராவிட மற்றும் இந்தியஆரிய மொழிகள் பற்றிய சர்ச்சைகள் தேவையற்றது. திராவிட மொழிகளுக்கும், இந்திய ஆரிய மொழிகளுக்கும் எந்த மோதல்களும் இல்லை. மொழிகளின் மானிடவியல் தர்க்கம், அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. வேற்றுமைகள் இருப்பது ஒற்றுமைக்கு எதிரானது அல்ல. ஒரு பகுதியில் நான் ஒரு மொழியை பேசினால், பள்ளி மற்றும் கல்லூரியில் என் சொந்த மொழி மூலம் கற்பது, அதிக பலன்களை தரும் எந்த மொழியில் பேசுவது என்பது நம்முடைய ஜனநாயக உரிமையாகும்.” என்கிறார் பேராசிரியரும் தமிழறிஞருமான கே.ரங்கன். பி.எல்.எஸ்.ஐ. திட்டத்தில் தமிழ் மொழி தொகுப்பை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். “2,000 வருட பழமையான மொழியான தமிழ் பற்றி, தமிழர்கள் பெருமை கொள்வது இயல்பு தான். பெரியார் இந்த பெருமையை இயக்கமாக மாற்றினார். திராவிட இயக்கத்தின் தந்தையான பெரியார், நாகரிக வளர்ச்சி கோட்பாடு பற்றி நம்பிக்கை கொண்டவர்” என்கிறார் டேவி.

ஆங்கில பயன்பாடு தேவைப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் வலுவான ஆதிக்கம், மக்களிடையே அதிகரித்து வரும் ஆங்கில மோகம், விற்பனை மற்றும் இதர தளங்களில் கணினி சார்ந்த தொழில்களுக்கு தேவையான தமிழ் வழி மென்பொருட்கள் ஆகியவை தமிழ் மொழி தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் ஆகும்.

“மொழி தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன. இது உலகெங்கும் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களையும் பெரிதும் பாதித்துள்ளது” என்கிறார் டேவி.

“அரசாங்க பரிவர்த்தனைகள், வங்கி மற்றும் வணிக செயல்பாடுகளில் நடைமுறை தமிழை அரசு பயன்படுத்த வேண்டும். மின்னணு வடிவ தொலைதொடர்புகள் அனைத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். இன்று ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த முடிந்த நிலை மக்களுக்கு உள்ளது. தமிழ் பயன்பாடு குறைந்து வருவதால், எதிர்காலத்தில் அதற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என்று சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி மற்றும் மொழியியல் துறையின் முன்னாள் தலைவரும், மென்தமிழ் என்ற, தமிழ் மொழியில் இயங்கும் சொல் செயலி மென்பொருளை, 2011-ல் உருவாக்கிய எம்டிஎஸ் லிங்க்சாப்ட் சொல்யுசன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான தெய்வ சுந்தரம் கூறுகிறார்.

தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள புதிய வகையான சவால்களை தெய்வ சுந்தரத்தின் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றது. “தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் வர்க மக்களால் தமிழை நன்கு பேச முடிந்தாலும், தமிழில் எழுத கற்பதற்கு சிரமப்படுகின்றனர். மாற்றாக, சிங்கப்பூரில் உள்ள தமிழ் சிறார்கள் மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையினராக அங்கு இருப்பதால் தமிழில் பேச சிரமப்படுகின்றனர். அவர்களின் வீடுகளில் ஆங்கிலம் அல்லது மலாய் சீன மொழிகள் பேசப்படுவதாலும், அவர்களின் சமூக பொருளாதார சூழல் அவ்விதமாக இருப்பதாலும் இந்த சிரமம் ஏற்படுகிறது. சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சரகம், அதன் இரு மொழி கொள்கையின் அடிப்படையில், அங்கு உள்ள தமிழ் சிறார்கள் தமிழில் பேச ஊக்கம் அளிக்க விரும்புகின்றது. ஆனால் அங்கு உள்ள கல்வி பயிற்சி நூல்கள், நவீனப்படுத்தப்படாமல், தற்காலத்திற்கு ஏற்ற வகையில் இல்லை” என்கிறார் தெய்வ சுந்தரம்.

சிறார்கள் தமிழில் பேசுவதற்கு உதவுவதற்காக ஒரு மின்னணு வடிவ நவீன தமிழ் அகராதியை வடிவமைக்க, சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சரகம் அவரை அழைத்துள்ளது. தற்காலத்து பேச்சு தமிழை போன்ற நவீன சமகால மொழியை பயன்படுத்தி, தமிழ்ஆங்கில கையடக்க அகராதி ஒன்றை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். “தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தனியார் பள்ளியிலும் பயிற்று மொழியாக தமிழ் இல்லை. ஆங்கிலத்தில் பேசுமாறு மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களிலும் இதே பிரச்சினை இருக்கிறது” என்கிறார் தெய்வ சுந்தரம்.


No comments:

Popular Posts