Wednesday 9 October 2019

வினையாகும் விளையாட்டு

வினையாகும் விளையாட்டு

சேவியர்

கடந்த வாரம் தனது ஆறு மாதக் கைக்குழந்தையோடு வீட்டுக்கு வந்திருந்தார் உறவினர் ஒருவர். கொஞ்ச நேரத்தில் அம்மாவின் கையிலிருந்த குழந்தை அழத் தொடங்கியது. உடனே குழந்தையின் அப்பா தனது ஸ்மார்ட்போனை ஆன் பண்ணிக் குழந்தையின் கையில் கொடுத்தார். சட்டென அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்தது குழந்தை.

சமீபத்தில் இரண்டு செய்திகளைப் படித்தேன். பப்ஜி விளையாட்டில் ஆர்வமாயிருந்தான் ஒரு பதின் வயது சிறுவன். அவனைப் பெற்றோர் கண்டித்தார்கள் என்பதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு செய்தியில், தொடர்ந்து பப்ஜி விளையாடிக்கொண்டே இருந்த இளைஞனை பெற்றோர் கண்டித்தார்கள். விளைவு தனது தந்தையையே கொலை செய்து விட்டான் மகன். மழலைப் பருவத்தில் விதைக்கின்ற தவறுகள் பதின் வயதுகளில் விளையத் தொடங்குகின்றன. கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என படித்த காலங்கள் எல்லாம் பழசாகிப் போய்விட்டன. இப்போது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஸ்மார்ட்போன்கள் தான்.

ஜவுளி கடைகளில் பெற்றோர் துணி எடுத்துக்கொண்டிருக்கும்போது ஓரமாய் இருக்கைகளில் அமர்ந்து பிள்ளைகள் போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். துணி எடுக்கும் பெற்றோருக்கு தொந்தரவு இருக்கக் கூடாதாம். ரெயில் பயணங்களில் பிள்ளைகள் கைகளில் ஸ்மார்ட்போனோடு இருக்கைகளில் ஒட்டவைக்கப்பட்டிருப்பார்கள். அங்குமிங்கும் ஓடிட்டு திரியக் கூடாதாம்.

“பையன் அழுவான், கொஞ்ச நேரம் விளையாடட்டும்”. “போனை குடுக்கலேன்னா ஒரு வேலை செய்ய முடியாது.. சத்தம் போட்டுட்டே இருப்பான்”. “அவன் ரொம்ப சேட்டை, போனை குடுங்க அவன் ஏதாச்சும் பண்ணிட்டு இருக்கட்டும்” என்பன போன்ற சிந்தனைகள் தான் பிற்காலத்தில் பிள்ளைகளை ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக்குகிறது. முதலில் பிள்ளைகளை அமைதியாக உட்கார வைக்கும் சங்கிலியாய் இருக்கும் போன்கள், பின்னர் அவர்களுடைய வாழ்வின் குரல்வளையை நெரிக்கும் தூக்குக் கயிறுகளாய் மாறிவிடுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக உலக நலவாழ்வு நிறுவனம் தனது பட்டியலில் விளையாட்டு அடிமைத்தனம் என்பதையும் புதிதாகச் சேர்த்திருக்கிறது. சர்வதேச அளவில் விளையாட்டுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதே இதன் காரணம். எனவே இது விளையாட்டு சமாச்சாரமல்ல, சீரியஸ் சமாச்சாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிள்ளைகளை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

முதலில் அதை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். நமது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் குழந்தைகளோடு இருக்கும் போதாவது செல்போன்களை மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட வேண்டும். பெற்றோரின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்பதை உணரவேண்டும்.

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாய் இருக்கிறார்களா என்பதைச் சோதித்தறிய சில வழிகள் உண்டு. கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

விளையாட்டைப்பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. மற்ற விஷயங்களைப் பேசும்போது கூட விளையாட்டு நினைவாகவே இருப்பது. விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லையேல் வருந்துவது. எரிச்சல் படுவது. கோபப்படுவது. எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் தீவிரமாய்க் காட்டுவது. விளையாட ஆரம்பித்தால் நிறுத்த முடியாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்பது. இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என நீடிப்பது. முன்பு ஈடுபட்டிருந்த மற்ற செயல்களிலெல்லாம் ஆர்வம் குறைவது. அல்லது வேறெதிலும் ஆர்வமே இல்லாமல் போவது. படிப்பில் ஆர்வம் குறைவது. கவனம் செலுத்த முடியாமல் போவது. கவனச்சிதைவு ஏற்படுவதுமற்ற விஷயங்களிலுள்ள பாதிப்பு எதையுமே கருத்தில் கொள்ளாமல் விளையாட்டின் மீது மீண்டும் மீண்டும் வேட்கை கொள்வது. பிறரோடு உள்ள உறவுகள் குறைந்து குறைந்து, டிஜிட்டல் உறவு அதிகரிப்பது. மற்ற நேரங்களில் அமைதியாய் இருக்க நினைப்பது. குணாதிசயங்களில் மாறுதல்கள் நிகழ்வது. இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தை விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கிறது என்று பொருள். அந்த ஆர்வம் வளர்ந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கலாம் என்பதைப் இப்போதே புரிந்து கொள்ளுங்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர உதவுங்கள். அதற்காக உடனே ஓடிப்போய் எல்லா டிஜிட்டல் கருவிகளையும் உடைத்து விட்டு, “சுபம்” போட நினைக்காதீர்கள். அது எதிர் விளைவுகளைக் கொண்டு வரும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

எதுவும் அளவோடு இருப்பது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு விளையாட குறிப்பிட்ட நேரம் கொடுங்கள். உதாரணமாக, வார இறுதிகளில் தினம் ஒன்றோ இரண்டோ மணி நேரங்கள் கொடுக்கலாம். எவ்வளவு நேரம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் விளையாடும் நேரத்தை நாள்காட்டியில் குறித்து வைக்க வேண்டும். இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்கவே கூடாது. அதில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

கணினியையோ, விளையாட்டு கருவியையோ, மொபைலையோ விளையாட அனுமதித்தால் அது பெற்றோரின் முன்னால், பொது இடத்தில் இருக்க வேண்டும். தனியறைகளில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். டிஜிட்டல் நேரத்தைக் குறைத்து பிள்ளைகளை வேறு விளையாட்டுகளில் ஈடுபட வைக்க வேண்டும். வெளியே அழைத்துச் செல்வது. பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் ஆர்வத்தைக் குறைக்கலாம்.

வீட்டுப்பாடம், படிப்பு போன்றவற்றை முதன்மையாய் வைத்திருப்பது. அதை எல்லாம் முடித்த பின்பே விளையாட அனுமதிப்பது மிக முக்கியம். விதிமுறைகளை மீறாமல் இருக்க வேண்டியது அவசியம். மீறினால் டிஜிட்டல் டைம் குறையும் என சொல்லுங்கள். டிஜிட்டல் விளையாட்டுகளினால் நிகழ்கின்ற உடல், உளவியல் பிரச்சினைகளை பிள்ளைகளிடமும், அவர்களுடைய நண்பர்களிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவது. அதை தகவல் பகிர்தலாகவோ, ஒரு நண்பனின் அறிவுரை போலவோ சொல்வது பயனளிக்கும்.

குழந்தைகளுக்கு உடற்பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். உடல் உற்சாகமாக இருக்கும் போது டிஜிட்டல் ஆர்வம் குறையத் துவங்கும். உடலின் சோர்வும், உடலின் ஆக்சிஜன் குறைபாடும் டிஜிட்டல் ஆர்வத்தை அதிகரிக்கும். குடும்ப நேரம், நண்பர்களின் நேரம், உறவினர்களின் நேரம் இவற்றை அதிகரிக்க வேண்டும். உறவுகளைக் கட்டியெழுப்பும் போது மாற்றங்கள் உருவாகும்.

‘இந்த ஒரு கேமையும் முடிச்சுட்டு வரேன்’ போன்ற விண்ணப்பங்களை நிராகரியுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விளையாட்டை முடித்து விட்டு, அல்லது ‘சேமித்து’ விட்டு வெளிவர குழந்தைகளைப் பழக்குங்கள். ‘இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு... கேமை சேவ் பண்ணிக்கோ’ என அன்பாய் அறிவுறுத்தி அவர்களை மெல்ல மெல்ல பழக்குங்கள். தொடர் விளையாட்டுகள், நண்பர்களோடு ஆன்லைனில் இணைந்து விளையாடுவது, அடிமைத்தனத்துக்கு மிக எளிதில் கூட்டிச் செல்லும் விளையாட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வேறு விளையாட்டுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விளையாடச் சொல்லுங்கள்.டிஜிட்டல் விளையாட்டுக்கு அடிமையாகிப் போன சிறுவர்களை மீட்பது எளிதான செயல் அல்ல. ஆனால் மிகவும் தேவையான செயல். மது, போதை, புகைபோன்ற அடிமைத்தனங்களைப் போலவே வலிமையானது டிஜிட்டல் அடிமைத்தனம். ஒருவேளை உங்களால் உங்கள் குழந்தையை வெளிக்கொணர முடியவில்லையேல் உளவியலாளர்களின் ஆலோசனையை நாடுங்கள். சிறுவர் கவுன்சிலிங் பயனளிக்கும்.

ஸ்மார்ட்போன்களும், டிஜிட்டல் கருவிகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் நிச்சயம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவையே. தடுமாறாமல் இருப்போம், தலை முறையைக் காப்போம்.

No comments:

Popular Posts