Tuesday, 24 September 2019

இந்திய தொலைக்காட்சியின் அறுபது வருடப் பயணம்

இந்திய தொலைக்காட்சியின் அறுபது வருடப் பயணம்

ஷோபனாரவி, தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர்.

தொ லைக்காட்சி நம் நாட்டில் முதன்முதலில் டெல்லியில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது அறுபதாவது வருட பயணத் தில் அடியெடுத்து வைக்கிறது.அகில இந்திய வானொலி தன் பொறியியல் வல்லுனர்களையும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் இதற்கென ஒதுக்கித் தந்தது. ஓர் அறை தற்காலிக ஸ்டூடியோவாயிற்று. 21 சமூகத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இப்படி ஒரு சின்ன முயற்சியாகத் தான் தொலைக்காட்சி இந்தியாவில் தொடங்கியது.

பிறகு 1965-ல் செய்தி அறிக்கையோடு கூடிய ஒரு மணி நேர ஒளிபரப்பாக மாறியது. அதுவும் டெல்லியில் மட்டும் தான். 1972-ல் மும்பைக்குத் தொலைக்காட்சி வந்தது. 1975-ல் கொல்கத்தா, சென்னை, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லக்னோ என்று பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நானும் மற்றும் பலரும் உங்களுக்கு அறிமுகமானோம். குடும்பமே தொலைக்காட்சி பெட்டிக்கெதிரே அமர்ந்து மாலை வேளைகளைக் கழித்த காலம் அது. செய்தி ஒளிபரப்பாகும் நேரத்தில் தெருவில் நடந்து போனால் செய்தி அறிவிப்பவரின் குரல் ஒவ்வொரு வீட்டைக் கடக்கும்போதும் ஓங்கியும் தாழ்ந்தும் ஒலிக்கும். எல்லா வீட்டிலும் ஒரே குரல்! சனி, ஞாயிறுகளில் மவுண்ட் ரோடு கூட வெறிச்சோடிக்கிடக்கும். அப்போது அது தான் சென்னையில் முக்கியமான சாலை. மனோகர் நாடகம் என்ன, சோ நாடகம் என்ன என்று பரபரப்பாக இருந்த சபாக்களில் கூட கூட்டம் குறையலாயிற்று.

அகில இந்திய வானொலியின் அங்கமாக இருந்த தொலைக்காட்சி 1976-ல் தனியாகப்பிரிக்கப்பட்டது. தூர்தர்ஷன் என்று பெயர் பெற்ற இது 1982-ல் தேசியத் தொலைக்காட்சியாக உருப்பெற்று வண்ண ஒளிபரப்பையும் தொடங்கியது. ஓரக்கண்ணால் மானிட்டரில் எங்களை வண்ணத்தில் பார்த்து ரசித்துக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. இன்றளவிலும் உலகத்தின் பிரதானத் தொலைக்காட்சிகளில் ஒன்றாக தூர்தர்ஷன் விளங்குவதற்குக் காரணம் அதன் வசம் இருக்கும் எண்ணிலடங்கா ஸ்டூடியோக்களும், டிரான்ஸ்மிட்டர்களும் தான். எண்பதுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியும், ராமாயணமும், மகாபாரதமும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானபோது இமயம் முதல் குமரிவரை நாடே கட்டுண்டது.

1990-களில் கேபிள் டிவி தலைதூக்கியது. பிற நாடுகளில் இருந்து சார்டிலைட் மூலம் தனியார் சேனல்கள் 1992-லிருந்து நிகழ்ச்சிகளை நம் நாட்டில் ஒளிபரப்பலாயின. தனியார் சேனல்கள் பல தோன்றின. விளம்பரங்களுக்குப் போட்டி ஏற்பட்டதால் நிகழ்ச்சிகள் ஜனரஞ்சகமாகத் தயாரிக்கப்பட்டன. ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் இப்போது நம் சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.

இந்தியாவில் தொலைக்காட்சி வந்து 60 ஆண்டுகளே ஆயிற்றென்றாலும் பிக்சர் டியூப் என்று சொல்கிறோமே அதன் முதல் வடிவம் உருவானது 1897-ல் தான். ஜெர்மனி விஞ்ஞானி ப்ரெளன் என்பவர் இதை வடிவமைத்தார். இதுவே மின்னணு தொலைக்காட்சிக்கு அடித்தளமாயிற்று.

தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் என்றாலும் கலையுலகில் அபூர்வமான திறன் கொண்டவர்களை இனம் காணும் பணியிலும் இப்போது அது அரும்பணி ஆற்றி வருகிறது. நல்ல கருத்துள்ள தொடர்கள் வருவது போல யுக்தியான சிந்தனைகளைத் தூண்டும் விதமாகவும், பழிவாங்கும் செயல்களை ஊக்குவிக்கும் வழியிலும் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அமைக்கப்படுவது வருத்தத்திற்கு உரியது. பெண்கள் பெரும்பாலும் ஆண்களுக்குச் சமமான உரிமை உள்ளவர்களாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது நம் சமுதாயம் அந்த விதத்தில் முன்னேறவேண்டும் என்பதை உணர்த்துகிறது. தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பிருந்தே நாடகக் கலையைப் பேணி வந்திருக்கும் தமிழ் மக்கள் அந்தக் கலை மூலம் சமுதாய முன்னேற்றத்துக்கு வித்திடும் வகையில் தொலைக்காட்சித் தொடர்களை அமைக்கவேண்டும். நாட்டுப்புற மக்களின் கலை வெளிப்பாடும் தொலைக்காட்சி மூலம் மக்களுக்குப் போய்ச் சேருகிறது என்பது உண்மையே.

வெளியே செல்லமுடியாத முதியோர்களும், சுவீடனைச் சேர்ந்த சிறுமி ‘க்ரெடா டுன்பெர்க்’-ஐ போல் கார்பன் சுவட்டைக் குறைக்க எண்ணி வாகனங்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பவர்களுக்கும் தொலைக்காட்சி தான் வெளியுலகத் தொடர்பும் பொழுதுபோக்கும் ஆகும்.

தொலைக்காட்சி ஓர் அருமையான கல்விச் சாதனம். நன்னன் தூர்தர்ஷனில் தமிழ் வகுப்புகள் நடத்திய போது என் ஐந்து வயது மகள் ஆடாமல் அசையாமல் அமர்ந்து உன்னிப்பாக கவனிப்பாள். இப்போது யாரேனும் அப்படித் தமிழ் வகுப்புகளைத் தொலைக்காட்சியில் நடத்தினால் தமிழ் தளர்ச்சியுறாமல் வாழும். ஆனால் அப்போது தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது என்பதால் நிகழ்ச்சிகள் எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தன. இப்போது எதைப் பார்ப்பது என்று தெரியாத நிலை இருப்பதால் நல்ல நிகழ்ச்சிகள் கூட, பல சமயங்களில் வெளியே தெரிய வராமலும், அங்கீகாரம் இல்லாமலும் போய் விடுகின்றன.

எத்தகைய நிகழ்ச்சியாக இருந்தாலும் தரம் குறையாமல் பார்த்துக் கொள்வது நன்று. சமூகத்தில் ஒரு நல்ல உத்வேகத்தை, நல்ல உணர்வுகளை ஏற்படுத்தவல்ல தொலைக்காட்சியை அந்தக் காரணங்களுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தை நம் சேனல்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகிவிடக்கூடாது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருளட்ட வேண்டும் என்பது சரிதான். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது அவ்வை வாக்கு. ஒரு தலைமுறைக்கு வேண்டுமானால் சேர்த்துவைக்கலாம். பின் வரும் தலைமுறைகளுக்கு இந்தக் காகிதப் பணமும் பொன்னும் பொருளும் ஏக்கர் கணக்கில் தோப்பும் துரவும் தேவைப்படாது. ஏறும் உலகவெப்பம் இந்த நாகரிகத்தையே அழிக்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் இன்னும் உணரவில்லை. இருபது வருடங்கள் முன்னோக்கிப் போய் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவரிக்கும் அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவேண்டியது அவர்களுடைய கடமை என்றே நினைக்கிறேன். தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்புச்சாதனம் எந்த சமூகமாற்றத்தையும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. அதைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.

No comments:

Popular Posts