Tuesday 24 September 2019

வில்லன் ஆகிறதா வெங்காயம்?

வில்லன் ஆகிறதா வெங்காயம்?

டாக்டர் சோம வள்ளியப்பன்.

த ங்கத்தின் விலை அல்ல. உணவுப்பொருட்களின் விலை உயர்வுகளே, ஆளும்கட்சிகளை தேர்தல்களில் தோற்கடித்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

ஆனால், அதுதான் உண்மை.

1980-ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை தீர்மானித்ததில் வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பெரிய பங்கு உண்டு. 1998-ம் ஆண்டு டெல்லி மற்றும் ராஜஸ்தான் தேர்தல்களில் வெங்காயத்தின் விலை உயர்வு, ஆளும் கட்சியினர் தோற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வெங்காயம். உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி, தினசரி பயன்படுத்தும் இந்தப்பொருள் உபயோகத்துக்கு வந்து ஏழாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.

சமையலறைகளில் இருந்து குறிப்பாக, இந்திய அடுப்படிகளில் இருந்து வெங்காயத்தை விலக்கவே முடியாது. இத்தனைக்கும் அதில் இருப்பது, 89 சதவீதம் நீர். 9 சதவீதம் கார்போஹைடிரேட் மற்றும் வெறும் 1 சதவீதம் புரதச் சத்துதான். ஆனாலும், அதன் வாசனை, சுவை மற்றும் சில மருத்துவ குணங்களுக்காக அது காலங்காலமாக விரும்பப்படுகிறது.

அப்படிப்பட்ட வெங்காயத்தின் விலை கடந்த மே மாதத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற வெங்காயத்தின் விலை இப்போது ரூ.2 ஆயிரம் உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரமாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.75 முதல் 80 வரை விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 77-ஆக உள்ளது. இது நான்கு ஆண்டுகளில் இல்லாத உயர்வு.

இந்த விலை உயர்வுக்கு காரணம், போதிய அளவு வெங்காயம் சந்தைகளில் கிடைக்காதது தான்.

இத்தனைக்கும் இந்தியாதான் சீனாவிற்கு அடுத்தபடி உலகில் அதிக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடு. ஆண்டுக்கு சுமார் 2.36 கோடி டன்கள் வெங்காயம் உற்பத்தியாகிறது. இது நம் தேவைக்கு சற்று அதிகமான உற்பத்திதான். அதனால், ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் டன்கள் வரை வங்காளதேஷம், மலேசியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

இருந்தும் ஏன் பற்றாக்குறை? மராட்டியம், கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்தான், நாட்டில் கிடைக்கும் வெங்காயத்தில் 90 சதவீதம் விளைகிறது. அதிலும் குறிப்பாக மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே மொத்த உற்பத்தியில் சரிபாதி விளைகிறது. தமிழகத்தில் அதிகம் விளைவது, சின்ன வெங்காயம் தான்.

மராட்டியம், கர்நாடகா உள்பட சில இடங்களில் கடந்த வருட வறட்சி, இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக வந்தது மற்றும் காரிப் பருவ அறுவடையின் போது மிகப்பெரிய அளவு மழை எனும் காரணங்களால் உற்பத்தி கணிசமாக குறைந்துபோனது.

வெங்காயம் ஆண்டுக்கு மூன்று போகம். அதனால் ஆண்டு முழுவதும் ஒரே போல சீராக வெங்காயம் கிடைக்கும். அதில் ஈரத்தன்மை நிற்க வேண்டும். அழுகிவிடக் கூடாது. அதனால், கேண்டா சவுள் எனும் ஈரப்பதம் மற்றும் தூசு இல்லாத இடத்தில் தான் சேமித்து வைக்க முடியும். இல்லாவிட்டால் முளைவிட்டுவிடும்.

அப்படிப்பட்ட பெரும்பாலான வெங்காய சேமிப்புக் கிடங்குகள் மராட்டியத்தில்தான் இருக்கின்றன. அங்கே கொட்டித் தீர்த்த மழையால் கையிருப்புகளை பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது பற்றாக் குறைக்கான மற்றொரு காரணம்.

கடுமையாக உயரும் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதைக் குறைக்க, டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 850 அமெரிக்க டாலர் விலை இருந்தால் தான் ஏற்றுமதி செய்யலாம் என்ற கட்டுப்பாடு; நடப்பில் இருந்த ஏற்றுமதிக்கான 10 சதவீத ஊக்கத்தொகை நிறுத்தம்; எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 2 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய டெண்டர்; பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தைகளில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு; வியாபாரிகள் அதிகபட்சம் எவ்வளவு ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் யோசனை போன்ற சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் மட்டுமே தொடர்ந்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தப் போதுமா என்று தெரியவில்லை.

2010 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இப்படி வெங்காய விலை ஏற்றம் வந்திருக்கிறது. அப்போதும் கிலோ ரூ.80-ஐ தொட்டிருக் கிறது. இரண்டு முறை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்து சமாளித்திருக்கிறார்கள். இப்போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள எதிர்ப்பு கிளம்பியதால் அதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விளைந்தது தான் சந்தைக்கு வந்துகொண்டிருக்கிறது. அது போதவில்லை. அடுத்த காரிப் பருவ அறுவடை சந்தைக்கு வர அக்டோபர் இறுதியாகிவிடும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி சரக்கு வந்து சேர, நவம்பர் ஆகிவிடும். அதுவும் 2 ஆயிரம் டன்கள்தான். ஆக, இப்போதைக்கு பற்றாக்குறை தொடரும் நிலை.

இதுதவிர, எதிர்வரும் பண்டிகைகள் காலத்தில் உணவுப்பொருட்களின் நுகர்வுடன் வெங்காயத்தின் தேவையும் அதிகமாகலாம். நிலைமை காரணமாக நுகர்வோரும், வியாபாரிகளும் கூடுதலாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வார்கள். அதனால் பற்றாக்குறையும், விலையும் மேலும் அதிகரிக்கும் ஆபத்திருக்கிறது.

விலை உயர்வு குறித்து பேசிய, உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ‘இது தற்காலிகம் தான். அரசிடம் போதிய அளவு ஸ்டாக் இருக்கிறது. அரசு 56 ஆயிரம் டன் கொள்முதல் செய்து வைத்திருக்கிறோம். பிரச்சினை இல்லை என்கிறார். இப்படிப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைச் சமாளிக்க, மத்திய அரசு, மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளைப் போல, பிற மாநில அரசுகளும் ‘பிரைஸ் ஸ்டபிளைசேஷன் பண்ட்’ என்று ஒரு நிதி உருவாக்கி வைத்துக்கொண்டு, குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கவேண்டும்’ என்கிறார்.

டெல்லியில் நேபெட், என்.சி.சி.எப். மற்றும் மதர் டைரி போன்ற அரசின் கடைகள் மூலம், அரசு அதன் கிடங்குகளில் இருந்து கிலோ ரூ.23 /24 விலைகளில் விற்பனை செய்கிறது. எல்லா விலை ஏற்றங்களிலும் இரு சாரார் தாக்கம் பெறுவர். ஒன்று உற்பத்தியாளர், இரண்டாவது வாங்குபவர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு டிசம்பர் 2018-ல் இதே வெங்காயத்தின் மொத்த விலை கிலோ, வெறும் ரூ.1 மட்டுமே. அப்போது வெங்காயம் உற்பத்தி செய்தவர்கள் நஷ்டத்துக்கு உள்ளானார்கள். அதனால், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு 10 சதவீத ஊக்கத்தொகையை அறிவித்தது. அதைத்தான் இப்போது ஜூன் மாதத்துக்கு பின் நிறுத்தியிருக்கிறது.

உற்பத்தி குறைந்திருக்கும் காலத்தில் விலை உயர்வுதானே விளைவித்தவருக்கு கிடைக்கும் இழப்பீடு. இப்படி ஏற்றுமதியை தடை செய்வது மற்றும், இறக்குமதி செய்து விலையைக் குறைப்பது ஆகியவற்றால் எங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

இன்னும் ஒரு மாதகாலத்தில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெங்காய விலை பெரிய பிரச்சினையாக உருவாகாமல் போகலாம். ஆனால், அரியானாவிலும் மராட்டியத்திலும் நடக்கவிருக்கும் சட்டசபை பொதுத்தேர்தலை அப்படி சுலபமாக புறந்தள்ளிவிட முடியாது. காரணம் அங்கு உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள், நுகர்வோரும் இருக்கி றார்கள்.

No comments:

Popular Posts