Monday 16 September 2019

தலைவரா? மேலாளரா?

தலைவரா? மேலாளரா?

நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மனதில் பல்வேறு எண்ணங்கள் உருவாகின்றன. குறிப்பாக- நிறுவனத்தில் தங்களின் நிலை (Status) குறித்து அவ்வப்போது அவர்களே முடிவு செய்துகொள்கிறார்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டு (Comparison) தனது நிலையை நிலைநாட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

ஒரு நிறுவனத்தில் “மேலாண்மை” (Manage ment) மற்றும் “தலைமை” (Leadership) ஆகிய இரண்டும் சக்தி வாய்ந்தவைகளாக நமக்குத் தோன்றுகின்றன. மேலாண்மைப் பணிகளாக - திட்டமிடல் (Planning), அமைப்பை உருவாக்குதல் (Organising), பணியாளர் தேர்ந்தெடுத்தல் (Staffing), வழிகாட்டல் (Directing), கட்டுப்படுத்துதல் (Controlling) என ஐந்து முக்கிய பணிகளை மேலாண்மை வல்லுநர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்தப் பணிகளில் ஒன்றான, வழிகாட்டலின் உட்பிரிவாகத்தான் “தலைமைத்துவம்” எனப்படும் “லீடர்ஷிப்” அமைந்துள்ளது என்பது மேலாண்மை வல்லுநர்களின் கருத்தாகும்.

ஆனால், “தற்போதுள்ள சூழலில் மேலாளர் பணியும், தலைமைத்துவப் பணியும் வேறுபட்டவை” என சமீபத்திய ஆய்வின்மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தங்களது அதிகாரம் (Authority), பொறுப்புகள் (Responsibilities) மற்றும் பதிலுரைக்கும் மனப்பாங்கு (Accountability) ஆகியவற்றை தெளிவாகத் தெரிந்த தலைவர்களால் மட்டுமே சிறப்பாக செயல்பட இயலும். அது குறித்த தகவல்களை இந்த வாரம் காண்போம்.

மேலாளரின் அதிகாரங்கள்

தாங்கள் வகிக்கும் பதவியின் மூலம் அதிகாரம் படைத்தவர்களாக மேலாளர்கள் காணப்படுவார்கள். “பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று மேலாளர் கட்டளையிடுகிறாரோ, அந்தக் கட்டளையை அப்படியே ஏற்று செயல்பட வேண்டியது பணியாளர்களின் கடமை என மேலாளர்கள் கருதுகிறார்கள். நிர்வாகம் வழங்கும் பணிகளை நேரம், மற்றும் நிதி ஆகியவற்றை நிர்வகித்துக்கொண்டே பணியாற்ற வேண்டிய சூழலில் மேலாளர் இருக்கிறார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜான் கோட்டர் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற உளவியல் அறிஞர் டாக்டர்.டேனியல் கோல்மேன் போன்றவர்கள், “ஒரு அமைப்பின் வளர்ச்சியில் தலைமைத்துவம் எவ்வளவு முக்கியமானது?” என்பதை ஆய்வுசெய்து இதை கண்டறிந்திருக்கிறார்கள்.

“செலவை குறைப்பதற்கு ஒரு நிறுவனத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டால், திறன்வாய்ந்த தலைமையை உருவாக்கவே முதலீடு செய்ய வேண்டும்” என்பது ஆய்வாளர் ஜிம் ஹேமர்லிங் கருத்தாகும்.

தலைவர்கள்... சாதனைகள்

“தலைவர்”(Leader) என்பவர் மேலாளரைவிட அதிக பணிகளில் ஈடுபட வேண்டும். தலைவர்கள் நிறுவனங்களில் நல்ல மாற்றத்தை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளை செய்துமுடிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு, தன்னை பின்தொடரும் பணியாளர்களை சரியான பாதையில் வழிநடத்துவதும் இவர்களது கடமையாகும். இன்னும் சில முக்கியமான கடமைகள் தலைவர்களுக்கு உண்டு. அவற்றுள் சில:

 தலைவர்கள், தங்கள் பணியாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் தேவைக்கு ஏற்ப நிறுவனங்களில் முடிவுகளை உருவாக்குவார்கள்.

 தாங்கள் மேற்கொண்ட செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்? என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.

 அதிகமான இடர்களை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அதேவேளையில், நிறுவன விதிமுறைகளை மாற்றி, தங்கள் நிறுவனத்தின் குறிக்கோளை நிறைவேற்ற முன்வருவார்கள்.

 முரண்பாடுகள் ஏற்படும்போது அந்த முரண்பாடுகளை நிறுவனத்திற்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, அதன்மூலம் நிறுவனத்திற்கு நன்மை கிடைக்க வழிவகை செய்வார்கள். ஆனால், மேலாளர்கள் முரண்பாடுகள் வந்தவுடன் அவற்றை தவிர்க்கவே விரும்புவார்கள்.

 குறைகள் ஏற்படும்போது தலைவர்கள் அதனை தாங்கள் செய்த தவறாகவே கருதிக்கொள்வார்கள். ஆனால், தவறு ஏற்படும்போது மேலாளர்கள் மற்றவர்களை குறைசொல்வதற்கு சிலநேரங்களில் தயார்நிலையில் இருப்பார்கள்.

 எது சரியானது? என்று முடிவுசெய்து தலைவர்கள் பணியாளர்களை வழிநடத்துவார்கள். ஆனால், “எப்போதும் சரியாகவே இருக்க வேண்டும்” என்று நினைத்து மேலாளர்கள் செயலாற்றுவார்கள்.

 நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை பணியாளர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க சரியான தகவல்தொடர்பை உருவாக்க வேண்டும். குறிப்பாக - நாள்தோறும் நிறுவனத்தில் உருவாகும் பிரச்சினைகள், மாற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவற்றை தொடர்ந்து தெரிவிக்க வேண்டும்.

சமீபத்தில் “ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூவ்” வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில்- “50 சதவீத பணி வழங்குபவர்கள் உலக அளவிலான தகவல் தொடர்புக்கு பல்வேறு விதமான சமூக ஊடகங்களையே பயன்படுத்துகிறார்கள். தினமும் குறைந்தபட்சமாக 3 மணி நேரம் தகவல் தொடர்புக்காக அவர்கள் செலவழிக்கிறார்கள்” என்ற ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரு தலைவர், பணியாளர்களிடம் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே “சிறந்தத் தலைவர்” என்ற அங்கீகாரத்தை பணியாளர்களிடமிருந்து பெற முடியும்.

 பணியாளர்களிடம் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருங்கள்.

“எங்கள் தலைவர் வெளிப்படைத்தன்மை கொண்டவர்” என்றும், “எளிதில் அணுகக்கூடியவர்” என்றும் பணியாளர்கள் நம்பும்போது தலைவரின் பணி எளிதாகிறது.

 பதில் சொல்லும் மனப்பான்மை மற்றும் வெளிப்படைத்தன்மை தேவை.

நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது எவையெல்லாம் செயல்படுவதற்கு தயார்நிலையில் இருக்கின்றன? எவையெல்லாம் பணிக்கு உதவாமல் இருக்கின்றன? என்பதை எளிதில் இனங்கண்டுகொள்ளும் தன்மை கொண்டவராகத் தலைவர்கள் திகழ வேண்டும்.

“இதற்கு நான் பொறுப்பு அல்ல. அவர்தான் இந்த வேலையைச் செய்ய வேண்டும்” என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மனப்பான்மைக் கொண்டவர்களாக இருந்தால், அது நிறுவனத்திற்கு அழகல்ல.

“நிறுவனத்தில் என்ன நிகழ்ந்தாலும் அதற்கு நானே பொறுப்பு” என்று பதில் சொல்லும் மனப்பான்மைகொண்ட தலைவர்களால் மட்டுமே நிறுவனத்தின் புகழையும், பெருமையையும் கட்டிக்காக்க இயலும்.

ஒரு திரைக்கு பின்னால் நின்று பணியாளர்களை இயக்கும் வல்லமைகொண்ட தலைவர்கள், தங்களை முன்னிலைப்படுத்த விரும்புவதில்லை. யார்மீதும் பழிபோடவும் முன்வருவதில்லை. நிறுவனத்தின் பண்பாடு, செயல்முறைகள், மேலாண்மை ஆகிய அனைத்தும் சரியான நிலையில் இருக்கிறதா? என்பதை பதிலளிக்கும் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து செயல்படுவார்கள்.

ஒரு நிறுவனத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது தலைவர்கள் அந்த மாற்றத்திற்கான வடிவத்தை மிகத்தெளிவாக நிர்ணயித்து, அதற்கு ஏற்ப கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கி நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் பணிபுரிய வேண்டும். அப்போதுதான், பணியாளர்கள் முழு ஆர்வத்தோடு செயல்படுவார்கள். தலைவர்களையும் முழுமையாக நம்புவார்கள். நிறுவனமும் முழுமையான வளர்ச்சியைப் பெறும்.

No comments:

Popular Posts