Monday, 16 September 2019

‘பாக்டீரியா விழுங்கி’ மருத்துவ சிகிச்சை

பாக்டீரியா மற்றும் ஆர்க்கீயா போன்றவற்றில் தொற்றுக்களை ஏற்படுத்தி, அவற்றினுள்ளே பல்கிப் பெருகி அவற்றைத் தாக்கும் மருத்துவ தொழில்நுட்பமே ‘நுண்ணுயிர் தின்னி’ அல்லது ‘பாக்டீரியா விழுங்கி’ (Phages) மருத்துவ சிகிச்சை ஆகும்.

நம் பாடப்புத்தகத்தில் காணும் வைரஸ் படத்தைப் போலவே இந்த நுண்ணுயிர்த்தின்னி இருக்கும். தற்போது மருந்துகளால் தீராத, மக்களை பயமுறுத்தி வரும் தொற்று நோய்களுக்கு இந்த ‘பாக்டீரியா விழுங்கி சிகிச்சை’ ஒரு விடிவெள்ளியாக இருக்கும் என நம்புகின்றனர்.

லண்டனில் 15 வயதான ஒரு பெண் ‘சிஸ்டிக் பைப்ரோசிஸ்’ (Cystic Fibrosis) என்னும் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்ட இரு நுரையீரல்களும் அவருக்கு மாற்றப்பட்டது. அப்போது அவர் வேறு ஒரு நோய் தொற்றால் (Mycobacterium Abscess) பாதிக்கப்பட்டார். இவ்வகை பாக்டீரியாக்கள் காச நோய் மற்றும் தோல் நோய் பரப்பும் பாக்டீரியா வகையை சேர்ந்ததாகும். இந்த கிருமி நுரையீரலை மிகவும் பாதிக்கக்கூடும் வகையை சேர்ந்தது. குறிப்பாக சிஸ்டிக் பைப்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மிக மோசமாக தாக்கும்.

இதனால் நுரையீரலில் சீழ் நிறைந்த பைகள் உருவாவதோடு வீக்கம் மற்றும் அதிக வலியும் நோயாளிக்குத் தரும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவரை எப்படி குணப்படுத்த, அந்த சீழ்ப்பையில் உள்ள சீழை எடுப்பது மற்றும் பாதிக்கப்பட்ட திசுக்களை வெளியேற்றுவது, அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகளை (ஆன்டிபயாடிக்ஸ்) நீண்டகாலம் தருவது போன்ற மருத்துவ முறைகள் நடைமுறையில் உள்ளன.

நுரையீரலில் இருந்து சீழை வெளியேற்றுவது என்பது கடினமான முறை. நோயாளி அதிர்ஷ்டம் நிறைந்தவராக இருப்பின் இரண்டு நுரையீரல்களையும் தானமாகப் பெற்று மாற்றிவிடலாம். இருப்பினும் ஆன்டிபயாடிக்ஸ் மூலம் குணப்படுத்துவதே சிறந்த முறை எனக் கருதப்படுகிறது.

ஆனால் வந்திருக்கும் நோய் ஆன்டிபயாடிக்கையும் எதிர்க்கக் கூடியதாக இருந்தால் என்ன செய்வது. இதுபோன்ற நிலையில் அதனுடன் மல்யுத்தம் செய்ய ‘பாக்டீரியா விழுங்கி’ தயாராக இருக்கிறது.

‘பாக்டீரியா விழுங்கி’ என்பது ஒரு வகை வைரஸ்கள் தான். வைரஸ்கள் என்றால் கெடுதல் செய்யுமே என்று எண்ணத் தோன்றும்? ஆனால் ‘பாக்டீரியா விழுங்கி’ மனித உயிர்களை கொல்லாது. குறிப்பாக அவை பிற பாக்டீரியாக்களை வேட்டையாடும்.

வளர்ந்து வரும் மருத்துவ உலகம் பல எண்ணற்ற நன்மைகளை இந்த மனித உலகுக்கு அளித்து வந்த போதிலும் சில சமயம் சில வேண்டாத பக்க விளைவுகளை உண்டாக்குகிறது என்பது நிஜமே. இதில் மிகக் குறிப்பாக பயமுறுத்தியது என்னவென்றால் ‘சூப்பர் பக்ஸ்’ (Superbugs) என்று அழைக்கப்படும் பாக்டீரியாக்கள். இவ்வகை பாக்டீரியாக்களை எந்த வகை மருந்தாலும் கட்டுப்படுத்த இயலாது. இதற்கு காரணம் இவ்வகை பாக்டீரியாக்கள் மருந்துகளிடம் இருந்து எதிர்ப்பு சக்தி பெற்று உருவானதே. மனிதனின் உடலில் அவ்வகை மருந்துகள் இருந்த சூழ்நிலையிலேயே உருவானதாலும், சில சமயம் மருந்துகள் மிக அதிகமாக நோயாளிக்கு தரப்பட்டதாலும் உருவாக்கப்பட்டன.

இதுபோன்ற நிலையில் ‘பாக்டீரியா விழுங்கி’களால் நமக்கு நன்மையே கிடைக்கும். இவை திறமைவாய்ந்த கொல்லும் சக்தி கொண்டவை. ஒவ்வொரு வகை ‘பாக்டீரியா விழுங்கி’யும் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவை வேட்டையாடுவதில் திறமை கொண்டுள்ளன.

மருத்துவர்கள் ஜேம்ஸ் சோதில் மற்றும் கிரகாம் ஹட்புல் இருவரும் இதுபற்றி அறிந்ததால் ஒரு நோயாளியை குணப்படுத்த உதவும் ‘பாக்டீரியா விழுங்கி’ எது என மனித உடலில் உள்ள லட்சக்கணக்கான பாக்டீரியாக்களில் தேட ஆரம்பித்தனர். பலவகை ‘பாக்டீரியா விழுங்கிகள்’ இருந்தன. அவற்றில் சிலவற்றை நுண்ணோக்கியால் கூட பார்க்க இயலாமல் போனது.

மருத்துவர் கிரஹாம், பல்லாண்டுகளாக அந்த அழிக்கக் கூடிய பாக்டீரியா மீது பல ஆய்வுகள் செய்து இருந்த காரணத்தால் அவரது குழுவினரால் எவ்வகை ‘பாக்டீரியா விழுங்கி’கள் அந்த நோயாளியின் நுரையீரல் தொற்று நோயை அழிக்கும் என கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அதை நோயாளியின் மீது பயன்படுத்தும் போது மிக நுண்ணிய கவனமும் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

‘பாக்டீரியா விழுங்கி’கள் தாங்கள் கொல்ல வேண்டிய பாக்டீரியா மீது தங்களது மரபணு பொருளை முழுதும் நிரப்புகிறது. பின்னர் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. பின்னர் தங்களை மேலும் மேலும் பெருக்கி, கொல்ல வேண்டிய பாக்டீரியாவை முழுவதுமாக ஆக்கிரமித்து செயல் இழக்கச்செய்கிறது.

இந்த ஆய்வின் படி அந்த சிகிச்சைமுறை பயனுள்ளதாக இருந்து நோயாளியை காப்பாற்றிய போதும் அந்தத் தொற்று நோய் முழுவதும் நீங்கவில்லை. ஆனால் அந்த நோயாளியை அபாய கட்டத்தில் இருந்து மீட்டனர். மேலும் விரைவில் அந்த நோயாளியின் தொற்று முற்றும் நீங்கும் என்பதை உறுதியும் செய்தனர்.

பாக்டீரியா விழுங்கிகளின் பயன்பாடு இதுதான் முதல் முறை அல்ல. இதுவே கடைசி முறையும் அல்ல. இந்த செய்முறை ஒரு பேசப்பட்ட தலைப்பாகி மேலும் மேலும் பல ஆராய்ச்சியாளர்களின் கவனத்தில் கொண்டு வரப்பட்டு ஈடுபாடு அதிகரித்து வருகிறது என்பது மனித இனத்துக்கு ஒரு நல்ல செய்தி.

No comments:

Popular Posts