Saturday, 14 September 2019

சிறுவர்களும் எதிர்கால இந்தியாவும்

சிறுவர்களும் எதிர்கால இந்தியாவும்

வி.பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி., திருச்சி.

இளம் சிறுவர்கள் என்பவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள். இவர்கள் எந்த ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கக் கூடிய மிக முக்கிய வயதுப் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்கும் கடுமையானச் சட்டங்கள் உள்ளன. ஆனால் இளம் சிறுவர்கள் ஒரு சிலரால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிரானச் சட்டங்கள் மிகக் கடுமையானவை அல்ல. ஆனால் அதற்கான காரணங்களும் மிகவும் உறுதியானவை. தனிப்பட்ட, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் சமுதாயச் சிக்கல்களுக்கு பலியாகும் பலி ஆடுகளாகத்தான் இளம் சிறுவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருந்தால் அந்தக்குழந்தைகள், பெற்றோர்களின் பாசத்திற்காக ஏங்கும் போது, பாசத்தைக் கொடுப்பது போல் பாசாங்கு செய்யும் கூட்டத்தின் கட்டுக்குள் இந்த இளம் சிறுவர்கள் தள்ளப் படுகிறார்கள். ஆண் குழந்தையாக இருந்தால்; குற்றங்கள் புரியும் கூட்டத்தில் சேர்ந்து கூடா நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பெண்குழந்தையாக இருந்தால் ஏதேனும் ஏமாற்றுக் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் சென்று வாழ்க்கையைப் பறி கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது. அது போல், தந்தை அல்லது தாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டில் நடக்கும் அடிதடி பிரச்சினைகளைப் பார்க்கும் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வன்முறைதான் ஒரே வழி என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதோ அல்லது வன்முறை என்பது ஒரு வாழ்க்கைமுறை என்ற தவறானப் புரிதலுக்கு உட்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது. அந்தக் குழந்தைகள் வன்முறை பாதையை தேர்ந்தெடுப்பதற்குப் பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன.

இதையெல்லாம் தடுப்பதற்கானக் கடமை; குடும்ப நிலையில் பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், சமூக நிலையில் நம் ஒவ்வொருவரிடமும் மற்றும் அரசு நிலையில் காவல் மற்றும் சமூக நலத் துறையிடமும் உள்ளது. குடும்ப நிலையில், பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, குறைந்த பட்சக் குடும்பங்களாக மாறிவிட்டச் சூழலில் பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்களாய் மாறிவிட்டதால் அரவணைத்து அன்பு காட்ட ஆள் இன்றி குழந்தைகள், உறவுக்காக வீட்டின் ஜன்னலோரத்தில் சமுதாயத்தைத் தேடவேண்டி வருகிறது அல்லது வீட்டு வாசலுக்கு வெளியே பாசத்தைத் தேட வேண்டியிருக்கிறது. தாத்தா, பாட்டிகளை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட்டதால் குழந்தைகள் வேறு இல்லங்களைத் தேடி அலைகின்றனர்.

சமுதாய நிலையில் வேலை வேலையென்று அன்றாடக்காட்சிகளாக அனைவரும் மாறிவிட்டதால் மற்றவர்களுக்கு நம் நேரத்தைச் செலவிட நாம் தயாராக இல்லை. எந்த வேலையும் செய்யாமல் நேரம் அதிகமாக இருப்பவர்கள் குறுக்கு வழிச் சிந்தனைகளில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு பாசத்திற்காக ஏங்கும் இளம் சிறார்களுக்கு அந்த ஏக்கத்தை தீர்ப்பது போல் ஒரு கானல் நீரைக் குடிநீராகக் காட்டி அவர்களின் குடியைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு சாவை ஏற்படுத்துகிறார்கள்.

சமூக நிலையில் இளம்சிறுவர்களின் செயல்கள் விமர்சிக்கப் படுவதோடு நின்று விடுகிறோம். அதிகபட்சம், பெரும்பாலானோர் இளைஞர்களை ஊக்குவிக்கப் புத்தகங்கள் எழுதுவதும், எழுச்சிப் பேச்சு பேசுவதும், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய அளவுக்குப் பேசுவதிலும் நம் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறோம். உண்மையான சவால் என்பது ஒற்றைப் பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், பெற்றோர்களிடம் அன்புக் கிடைக்காத குழந்தைகள், பெற்றோர்கள் ஏதாவது ஒரு கெட்டப்பழக்கத்துக்கு ஆளாகிய நிலையில் கவனிப்பின்றி வளரும் குழந்தைகள், தந்தை, தாயை அடிப்பதைப் பார்த்து வளரும் குழந்தைகள் என மேற்சொன்ன சூழல்களில் வளரும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சிறப்புக்கவனத்திற்கு ஆளாக்கபட வேண்டியவர்கள். இவர்கள் சமுதாயக் கவனத்திற்கு வருவது, ஏதாவது பெரிய தவறுகளை செய்து காவல்துறைக் கவனத்திற்கு வரும் போது தான். தமிழகக் காவல்துறை சார்பில் போலீஸ் பாய்ஸ் மற்றும் கேர்ல்ஸ் கிளப் என அமைக்கப்பட்டு இதுபோன்றக் குழந்தைகள் குற்றவாளிகளின் தவறானப் பாதைகளை பற்றி சென்று விடாதபடிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சமுதாயம் ஒரு அமைப்பாக பெரிய அளவில் அப்படிப்பட்டக் குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்கள் பாதையை சீரமைப்பது மிக முக்கியம்.

பழகிவிட்ட மற்றும் பயங்கரமான குற்றவாளிகள் இளம் சிறுவர்களை குறி வைத்து அவர்களுக்கு போதை வஸ்துகள் மற்றும் குற்றச் செயல்களால் ஏற்படும் ஒரு மாயை போதையைக் காட்டி, அதை அவர்கள் பொய் என உணர்வதற்குள், அவர்களை சட்டத்தின் மற்றும் சமுதாயப் பார்வையில் குற்றவாளிகளாக உருவாக்கி விடுகிறார்கள். ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையால் அங்கீகாரத்துக்கு ஏங்கக்கூடிய இந்த சிறுவர்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குற்றத்தில் ஈடுபடும் போது கிடைக்கும் ‘ஒரு போலி மரியாதையில்’ இருந்து அவர்கள் மீண்டு வரமுடியாத அளவிற்கு மாற்றி விடுகிறார்கள். அந்த இளம்சிறுவர்களுக்கு ஒரு மனிதனுக்கு உண்மையான மரியாதை என்பது குற்றம் செய்வதால் வருவதல்ல கடும் உழைப்பால் வருவது என்பதை உணர்த்துவது காவல் துறையின் கடமை மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்தின் பணியாகும்.

ஒரு சில சினிமாக்களில் குற்றவாளிகள் ஹீரோக்களாகக் காட்டப்படுவதும், தவறு செய்பவர்கள் எல்லா வித போலி சுகத்தையும் அனுபவிப்பது போலக் காட்டுவதும் இறம்சிறார்கள் மனதில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காவல் துறை சார்பில் குற்றத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ள சிறுவர்களை மட்டுமன்றி சிறுகுற்றங்களில் ஈடுபட்டு குற்ற வாழக்கையை ஆரம்பிக்கும் சிறுவர்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி ஒவ்வொரு இளம் சிறாருக்கும் தனிப்பட்ட திட்டவரைவு தயார் செய்து வருகிறோம். இதில் பொதுமக்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இளம்சிறுவர்களைக் குறிவைத்து அவர்களை குற்ற செயலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் சிறுமிகளை பாலியல் செயல்களில் குறிப்பாக இணையதள பாலியல் தளங்களில் அறிமுகமாக்கி சம்பாதிக்கும் குற்றங்களில் தொடங்கி, இளம்சிறுவர்களை கொலைக் கருவிகளாகப் பயன்படுத்தும் கொடூரமானக்குற்றங்களும் அரங்கேற்றப்படுகின்றன. சொல்லப்போனால், மணல் கடத்தலுக்கு வேவுபார்க்கும் வேலைகளில் கூட ஈடுபடுத்துகிறார்கள். எனவே, இளம்சிறுவர்கள் குற்றவாளிகளாக உருவாகுவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. சமூகத்தில் ஒவ்வொருவரும் எந்த அளவு எதிர்கால இந்தியா அமைதியானதாக, வளமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதாகக் கருதுகிறார்களோ அதே அளவு அவர்கள் பெற்றோர்களாகவும், காவல்துறைக்கு இளம்சிறுவர்கள் குற்றவாளிகளாக மாறுவதைத் தடுப்பதற்கு உதவுபவர்களாகவும், இளம்சிறுவர்களின் மன ஆரோக்கியத்தில் அக்கறைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் நியாயம்.

No comments:

Popular Posts