Sunday, 15 September 2019

பிறவிக் குறைபாட்டை நீக்கலாம்

ரத்தசோகை இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரசவத்துக்கு முன்பே அதைச் சரிசெய்துவிடலாம். ஏனென்றால், இயல்பான பிரசவமோ அறுவை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் ரத்த இழப்பு இருக்கத்தான் செய்யும். ரத்தசோகை உள்ளவர்களை இது கடுமையாகப் பாதிக்கும். அதனால், ரத்தசோகையை ஆரம்பத்திலேயே கண்காணித்துச் சரிசெய்ய வேண்டும்.

தைராய்டு இருந்தால் அது குழந்தைக்கு ஹைபோதைராய்டிசமாகப் போகும். எனவே, தைராய்டைச் சரிசெய்ய வேண்டும். இதேபோல் வேறு ஏதேனும் தொற்று இருந்தால், அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான வழிவகைகளை யோசிப்போம்.

ஒரு பெண் கருவுற்ற முதல் எட்டு வாரங்களில் சிசுவின் உறுப்புகள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த நேரத்தில் தாய்க்கு ரூபெல்லா அம்மை வந்தாலோ, கதிர்வீச்சுப் பாதிப்பு வந்தாலோ, பரம்பரைக் குறைபாடுகள் ஏதேனும் இருந்தாலோ அது கருவிலிருக்கும் குழந்தை யையும் பாதிக்கும். இதேபோல் தாய்க்குத் தன்னிச்சையான மரபணுப் பிறழ்வு பிரச்சினை இருந்தால், குழந்தைக்குப் பிறவிக் கோளாறு ஏற்படக் கூடும்.

குழந்தை கருவில் இருக்கும் போதே பிரச்சினையைக் கண்டறிந்துவிட்டால் சிலவற்றைத் தடுக்கலாம். இவற்றில் முக்கியமானது, டவுன் சின்ட்ரோம் (Down syndrome). இந்தப் பாதிப்புள்ள குழந்தைகளுக்குத் தோற்றரீதியான பாதிப்புடன் மனவளர்ச்சியும் குறைந்திருக்கும். இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் அமைப்பில் பிறவிக் கோளாறுகள் காணப்படும். இவர்களால் தங்களைப் பராமரித்துக்கொள்ள முடியாது. தற்போதைய பரிசோதனை முறைகளில் வந்திருக்கும் முன்னேற்றங்களால் பரம்பரைப் பிரச்சினை சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களையும் குழந்தை கருவில் இருக்கும்போதே கண்டறிந்துவிட முடியும்

11 -14 வாரங்களில் கருவின் தலை, உடல், கை, கால்கள் ஆகியவை தோன்றியிருக்கும். அப்போது nuchal ஸ்கேன் செய்வதன்மூலம் வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியலாம். குறைபாட்டுடனேயே குழந்தை பிறக்கக்கூடும் எனும் பட்சத்தில் கர்ப்பத்தைத் தொடர்வது பற்றி தாய் முடிவெடுக்கலாம். அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் கருவியில் பிரத்யேக மென்பொருளை இணைத்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிசுவின் கழுத்தின் பின்புறம் சேரும் நிணநீர் அளவை வைத்து, அதற்குப் பிறவிக் கோளாறு உள்ளதா இல்லையா என்று கண்டுபிடிக்கிறார்கள்.

தாயின் கருப்பையில் குழந்தையின் உறுப்புகளும் முழு உருவமும் 12 வாரங்களில் உருவாகிவிடும். அதற்காக ஏதோ குழந்தை பத்து மாத வளர்ச்சியுடன் பெரிதாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். சராசரியாக 10 செ.மீ. நீளத்தில் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தையின் உடல் அமைப்பு, உள் உறுப்புகளின் வளர்ச்சி நிலை போன்றவை ஆராயப்படும். இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் பிறவிலேயே குறைபாடு இருக்கின்றனவா என்று பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் anomaly ஸ்கேன் செய்யச் சொல்கிறோம்.

சிலருக்குக் கரு சாதாரணமாக வளராமல் நஞ்சுக்கொடி மட்டும் அசாதாரணமாக வளரும். குட்டி குட்டி நீர்க்குமிழிகள் திரட்சைக்கொத்து மாதிரி கருப்பையில் வளரும். இது புற்று நோயில்லாத கட்டியாகவும் இருக்கலாம். முத்துப்பிள்ளைக் கர்ப்பம் எனப்படும் இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முழுமையான முத்துப்பிள்ளைக் கர்ப்பம். இரண்டாம் பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பம். முழுமையான முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் கருவே இருக்காது. நஞ்சு மட்டும் அசாதாரணமாக இருக்கும். பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் கரு உருவாகி இருக்கலாம். ஆனால், அது போதிய வளர்ச்சியின்றி இருக்கும்.

முத்துப்பிள்ளை கர்ப்பத்தின் அறிகுறிகள், சாதாரணக் கர்ப்பத்தின் அறிகுறிகள் போலவே இருக்கும். மாதவிடாய் தள்ளிப்போவது, வாந்தி, மயக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படும். கர்ப்பத்துக்கான சிறுநீர் பரிசோதனை யிலும் பாசிட்டிவ் என்று வர வாய்ப்புள்ளது. அதனால் ரத்தப் பரிசோதனையுடன் ஸ்கேனும் செய்ய வேண்டும்.

முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் கருப்பையின் வளர்ச்சி சாதாரணக் கர்ப்பத்தைவிட மிகப் பெரியதாக இருக்கும். சிலருக்கு இது புற்றுநோய் கட்டி மாதிரி கருப்பையைத் தாண்டி வெளியேகூடப் பரவும். அப்படியே இது புற்றுநோய் கட்டியாக இருந்தாலும், மிக லேசான புற்றுநோய்க் கட்டியாக இருக்கும். தகுந்த மருத்துவம் பார்த்தால் குணமாகிவிடும்.

முதல் மூன்று மாதங்களில் இதைப் போல எல்லாவற்றையும் பற்றி அறிவது கர்ப்பகாலப் பராமரிப்பில் அவசியம். ஒருவேளை பிரச்சினை இருக்கிறது என்று வந்துவிட்டால், அதற்கேற்ப முடிவெடுக்கலாம்.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in23

No comments:

Popular Posts