Saturday, 7 September 2019

உலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2

சந்திரயான்-2, சந்திரயான்-2, சந்திரயான்-2....

ஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.

எந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.

பிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்?

விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.

அமெரிக்கா மட்டும்தானா?

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.

அதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்?

நமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.

சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா? அந்த கணத்தில் இருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து என உலக நாடுகள், விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அத்தனை நாடுகளின் பார்வையும் சந்திரயான்-2 மீது பதிந்து விட்டது.

அதன் ஒவ்வொரு அசைவையும் அந்த நாடுகள் எல்லாம் கண்காணிக்கத்தொடங்கின.

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதே ஒரு சாதனை.

பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதும் சாதனை.

நிலவை நோக்கிய சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தை ஆகஸ்டு 14-ந்தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கி வைத்தது சாதனை.

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் ஆகஸ்டு 20-ந்தேதி சந்திரயான்-2 நுழைந்தது சாதனை.

இந்த சாதனைகளைத் தொடர்ந்து புரிந்த மகத்தான சாதனைதான், சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 2-ந்தேதி பிரிந்த செயல்.

சந்திரயான்-2 என பேசி வந்தவர்கள் திடீரென ஆர்பிட்டர் என்கிறார்கள், லேண்டர் என்கிறார்கள், ரோவர் என்கிறார்கள் ஒன்றுமே புரியவில்லையே என்று சாமானியர்கள் நினைக்கக்கூடும். இப்படி நினைத்தால் அதில் தப்பே இல்லை.

எப்படி மனிதர்களான நாம் கண், காது, மூக்கு, வாய், கை, கால் என உறுப்புகளுடன் பிறந்திருக்கிறோமோ அதே போன்றுதான் இந்த சந்திரயான்-2 விண்கலமும் 3 முக்கிய கலன்களை கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று, ஆர்பிட்டர். இதுதான் சுற்றுவட்டக்கலன். இதுதான் நிலவை ஓராண்டு காலம் சுற்றக்கூடிய கலன். ஆங்கிலத்தில் இது ஆர்பிட்டர். இதன் எடை 2,379 கிலோ. இதுதான் பெங்களூரு அருகே பைலாலுவில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடியது.

இரண்டாவது கலன்தான் லேண்டர். இதன் எடை 1,471 கிலோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பெயரைத்தான் இந்த லேண்டருக்கு விக்ரம் என சூட்டி இருக்கிறார்கள். இது ஒரு சந்திர நாள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு சந்திர நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். இதுவும் இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

மூன்றாவது கலன்தான் ரோவர். இதன் எடை 27 கிலோ. இதற்கு பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டது. பிரக்யான் என்றால் சமஸ்கிருதத்தில் ஞானம் அல்லது அறிவு என பொருள். இது 6 சக்கரங்களைக் கொண்ட ரோபோ வாகனம். ரோவரைப் பொறுத்தமட்டில் அது விக்ரம் லேண்டருடன் மட்டுமே தகவல் தொடர்பு பரிமாற முடியும்.

தென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரின் ‘சாப்ட் லேண்டிங்’ தான் மிகப்பெரும் சவாலான பணி ஆகும்.

அப்படி என்ன பெரிய சவால் என மனித மனங்கள் கேட்பது இயல்பு.

பூமியைப் போன்று நிலவில் காற்று மண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை தரை இறக்க பாராசூட்டைப் பயன்படுத்த முடியாது. எரிபொருளைப் பயன்படுத்தி, சம நிலையில் மெல்ல மெல்ல தரை இறங்கச்செய்வதுதான் ஒரே வழி.

லேண்டர்தான் தனது சொந்த ராக்கெட் என்ஜினைக் கொண்டு, அதன் வேகத்தை சீராக குறைத்துக்கொள்ளும்.

நிலவின் தென் துருவத்தின் மேற்பகுதியை நெருங்க நெருங்க லேண்டரும் நகர்வது இயல்பான நிகழ்வு.

நிலவின் தென் துருவப்பகுதியில் லேண்டர் தரை இறங்கும் தருணத்தில், அதன் ராக்கெட் என்ஜின் தனது நகர்வை நிறுத்துவதும், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்துவதும்தான் சவாலோ சவால். இதைத்தான் விண்வெளி விஞ்ஞானிகள் ‘சாப்ட் லேண்டிங்’ என்று சொல்கிறார்கள்.

இந்த லேண்டருக்குள்தான் பிரக்யான் என்னும் ரோவர் ரோபோவும் அடக்கம். ரோபோவால் நிலவின் மேற்பரப்பில் அரை கி.மீ. தொலைவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முடியும்.

மொத்தத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் 14 கருவிகள் உள்ளடக்கம். அவற்றில் 13, இந்தியாவினுடையது. எஞ்சிய ஒன்று, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு உரியது.

உலகின் பார்வையை சந்திரயான்-2 எப்படியெல்லாம் ஈர்த்திருக்கிறது என்பதற்கு, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்களே, அப்படித்தான் நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவர், “இந்த சந்திரயான்-2 திட்டம் ஒரு அருமையான பணி. அனைவரையும் உற்சாகத்தில் வைத்த திட்டம். என்னை இருக்கையின் விளிம்பில் தள்ளிய திட்டம்” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.

“இது உண்மையிலேயே இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அறிவியல், தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து விண்வெளி பயண நாடுகளும் முன்னேறுவதற்கு உதவக்கூடியதாகும். நிலவுக்கான எங்கள் ஆய்வு மற்றும் நிலவில் மனிதனின் நிரந்தர இருப்பை ஏற்படுத்த இன்னும் சொல்வதானால் நிலவின் மனிதனை இருக்கச்செய்வதற்கும்கூட உதவும்”.

வெறும் ரூ.978 கோடியில், ஹாலிவுட் வெற்றிப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்-ஐ விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் தீட்டி செயல்படுத்தியதைக் கண்டு நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர் வியக்கிறார்.

“இதில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும். மலிவான செலவில் விண்வெளி திட்டங்களை தீட்ட இயலும். இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். இது மனித குலத்தின் அறிவு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்” என்கிறார் இவர்.

இந்த நம்பிக்கை ஜெயிக்கும்.

நன்னம்பிக்கை தோற்றதாய் சரித்திரம் இல்லை.

No comments:

Popular Posts